Advertisement

அத்தியாயம் -12(2)

“அண்ணா ப்ளீஸ், நான் யாரோ ஒருத்தரை விரும்பல. நீங்களா பார்த்து சொன்னதாலதான் அவர் மேல இன்ட்ரெஸ்ட் வந்தது. அவர் கேரக்டர் பிடிச்சதால அவரையும் பிடிச்சிடுச்சு. என்னை விடு, நான் பார்த்துக்கிறேன்” விஷ்ணுவின் மனவோட்டம் புரிந்தவள் கெஞ்சலாக சொன்னாள்.

“என்னத்த பார்ப்ப? பிடிச்சதை நடத்திக் கொடுக்க நான் இருக்கும் போது… ஆஃப்டர் ஆல் அவன் நோ சொல்றான்னு அழுவியா நீ? அவன் அப்பனுக்கு இன்னும் கொஞ்சம் ஆசை காட்டினா மிருணா கழுத்துல தாலி கட்டலைனா செத்து போயிடுவேன்னு விஷ்ணுகிட்ட அந்தாள் மிரட்டுவார். நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன். சில்லி மேட்டர்… அதுக்கு போய்…” பிரவா பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்தாள் மிருணா.

விஷ்ணு முகம் ஜிவு ஜிவு என இருந்தது. சங்கடமாக அவனை பார்த்தவள், “சாரி விஷ்ணு, அண்ணா புரியாம… நான் அப்படி இல்லை…” பேசத் திணறினாள்.

“ஜஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ! (என்னை விட்டு தள்ளியே இரு)” கடினமாக சொன்னவன் சற்று தள்ளிப் போய் நின்று கேப் புக் செய்ய ஆரம்பித்தான்.

ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடம். சட்டென ஒருவன் விஷ்ணுவின் கைப்பேசியை பறித்துக் கொண்டு மிருணா நின்றிருந்த திசையில் ஓடி வந்து அவளை கடந்து அடுத்து வந்த சின்ன சந்துக்குள் புகுந்து விட்டான். விஷ்ணு சுதாரிப்பதற்குள் அவனை துரத்திக் கொண்டு ஓடினாள் மிருணா.

அந்த சந்துக்குள் விஷ்ணு நுழைந்த போது கைப்பேசியை பறித்தவன் மிருணாவின் அழுத்தமான பிடிக்குள் இருந்தான். வேகமாக அவர்களிடம் வந்த விஷ்ணு, மிருணாவை தள்ளிப் போக செய்து அவனை தான் பிடித்துக் கொண்டான்.

மீசை அரும்ப ஆரம்பித்திருந்த சின்ன பையன். கண்கள் கலங்கிப் போய் இருவரின் முகங்களையும் ஏறிட்டு பார்க்க முடியாமல் அவமானத்தில் தலை குனிந்த வண்ணம் தொண்டைக் குழியில் அடக்கிய அழுகையோடு நின்றிருந்தான்.

“ரெண்டு போடுங்க விஷ்ணு, ஸ்கூல் படிக்கிற பையன் மாதிரி இருக்கான், செய்ற வேலைய பாருங்க” என்றாள் மிருணா.

தன் பிடியின் இறுக்கத்தை குறைத்த விஷ்ணு, “முதல் தடவ செய்றியா?” எனக் கேட்டான்.

நிமிர்ந்து பாராமல் ஆம் என தலையாட்டியவன், “விட்ருங்க…” என நடுங்கும் குரலில் சொன்னான்.

“படிக்காம என்ன தம்பி இதெல்லாம்?”

“வேற வழி தெரியல ண்ணா. ரெண்டு நாளா வீட்ல யாரும் சாப்பிடல, இப்படி செய்யணும்னு நினைக்கல, திடீர்னு தோணிச்சு… போலீஸ்ல புடிச்சு கொடுத்திடாதீங்க ண்ணா, விட்ருங்க ண்ணா” என கெஞ்சினான்.

அவன் கையை விட்டு விட்ட விஷ்ணு வாலெட் எடுத்து பணம் கொடுத்து, தன் கைப்பேசி எண் பகிர்ந்து, பின்னர் அழைக்கும் படி சொல்லி அனுப்பி வைத்தான்.

“நல்லா ஏமாத்தலாம் போல உங்களை” என்றாள் மிருணா.

“அவன் கண்ல பொய் தெரியலை மிருணாளினி, எவ்ளோ அவமானமா ஃபீல் செஞ்சான்னு பார்க்கலையா நீ?”

“இப்படி மாட்டுறவங்க இப்போல்லாம் இப்படித்தான் நடிக்கிறதா கேள்வி படுறேன். சினிமால ஒரிஜினல் போலவே நடிக்கிறது இல்லை? அப்படி உண்மையா இருந்தா கூட கன்ஃபார்ம் பண்ணிட்டுதானே ஹெல்ப் பண்ணனும்?”

“என்ன இப்போ அவன் நடிச்சான்னு சொல்றியா? என் மனசு அப்படி சொல்லலை, குடும்பமே ரெண்டு நாளா சாப்பிடலைன்னு ஒருத்தன் சொல்றான், கன்ஃபார்ம் பண்ண இப்ப எங்க இருக்கு டைம்? அதை விட இன்னும் அது அவனை ஹர்ட் பண்ணாதா? வெயிட் பண்ணு, எனக்கு நேரம் கிடைச்சதும் உண்மையான்னு ஊர்ஜிதம் செஞ்சதுக்கு அப்புறமா சாப்பிடுன்னு சொல்லிட்டு இப்ப அப்படியே போக சொல்றியா? உன் பார்வையில் நான் ஏமாளியாவே இருந்திட்டு போறேன். ஒண்ணும் பண்ணாம போனா நைட் கண்ண மூடும் போது இவன் அழுத முகமும் பசின்னு சொன்னதும்தான் ஞாபகம் வரும்” என்றான்.

மிருணா ஒன்றும் சொல்லாமலிருக்க, “அசால்ட்டா இருக்காத, கத்தி மாதிரி ஏதாவது வச்சிருந்தா என்ன செஞ்சிருப்ப? போன் விட உன் பாதுகாப்பு முக்கியம்” என்றான்.

அவள் சரி என மேலும் கீழும் தலையாட்டினாள். அவன் நடக்க ஆரம்பிக்க அவளும் அவனுடன் நடந்தாள். அவளது புல்லட் நிறுத்தியிருக்கும் இடம் கடந்து வந்தவன் கேப் புக் செய்தான்.

அவனருகில் அவளும் நின்றிருக்க, “கிளம்பு, நான் போய்க்குவேன்” என்றான்.

“அவ்ளோதானா?”

“உன் அண்ணன் பேசினதை கேட்டதானே? அவர்கிட்ட சொல்லு, முடிஞ்சா அவர் தங்கை ஆசை பட்டதை நடத்தி வைக்கட்டும்” என்றான்.

“என் அண்ணா பத்தி நாம பேசிக்க வேணாம். எனக்கு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“உன் அண்ணா கட்டுற கயிறுக்குள்ள உன்னோட சேர்ந்து என்னால அடங்கி இருக்க முடியாது” என்றான்.

கேப் அருகில் வந்து விட்டதாக தெரிய வர, “வர்றேன், கிளம்பு நீ” என்றான்.

பதில் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த மிருணாவை பரிதவிப்பாக பார்த்தான் விஷ்ணு.

“எவனோ ஒருத்தன் கண்ல தெரியற உண்மைய கண்டுபிடிப்பீங்க, அவன் அழுகை உங்களை டிஸ்டர்ப் செய்யும். அவன் விஷயத்துல மத்தவங்க சொல்றது பத்தின கவலை இல்லாம மனசு சொல்ற படி கேட்டு நடப்பீங்க. ஏன் விஷ்ணு… என் கண்ல உண்மை தெரியலையா? என் அழுகை பாதிக்காதா உங்களை? உங்க மனசு சொல்றதை கேட்காம என்னை பத்தி தெரிஞ்சும் என் பேக்கிரவுண்ட் அலசி ஆராய்வீங்களா?”

பதில் சொல்ல இயலாமல் பாவமாக பார்த்தான் விஷ்ணு.

“அண்ணா கட்டின கயித்துக்குள்ள உங்களை யார் இருக்க சொன்னது? முடிஞ்சா உன் அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுன்னு சவால் விடுறீங்களே… நம்ம விஷயத்துல அண்ணா தலையீடு செய்யாம உங்களால பார்த்துக்க முடியாதா?”

 “கிளம்புன்னு சொன்னேன் மிருணாளினி” என்றான்.

“எனக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்குங்க. இனிமே உங்க வழில வர மாட்டேன்” என அவள் சொல்ல, கேப் வந்து விட்டது.

விஷ்ணு ஏறி அமர்ந்து கொள்ள, “கிளம்பலாமா சார் நாம?” எனக் கேட்டான் டிரைவர்.

“இருங்க” என்றவன் அவளை பார்த்து, “நீ முதல்ல வண்டிய எடு” என்றான்.

“இதுதான் லாஸ்ட் மீட்டிங்னும் போது உங்க அக்கறை சிரிப்பை வரவைக்குது” முறைத்துக் கொண்டே சொன்னாள்.

“லாஸ்ட் மீட்டிங்காவே இருக்கட்டும். அப்படியே விட்டுட்டு போக முடியாது, ப்ளீஸ்… லாஸ்ட் வேண்டுகோள்… கிளம்பு…” என்றான்.

சரி என தலையாட்டி சிரித்துக்கொண்டே கலங்கிய கண்களை சிமிட்டாமல், “என் பைத்தியக்காரத் தனத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, அண்ட் திஸ் இஸ் த லிமிட். இதுக்கு மேல உங்களை ஃபோர்ஸ் பண்ண விரும்பல, பை” என்றாள்.

அத்தனை எளிதாக அவளுக்கு விடை கொடுத்து விட முடியவில்லை. அவளது முகத்தை இனி காணப் போவதில்லை என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் கனத்த மனதோடு உயிரில்லாத குரலில், “பை…” என்றான்.

 “அண்ணாகிட்ட சொல்லி கட்டாயப் படுத்தி எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். மூஞ்சிய உர்ருன்னு வச்சுகிட்டு பை சொல்லாதீங்க, சிரிங்க. ஃபர்ஸ்ட் டைம் உங்களை நேர்ல பார்த்த அன்னிக்கு இருந்தது போல இருங்க. திரும்ப என்னை எப்பவாவது நினைச்சா இப்படி கஷ்ட படாம, எங்கேயாவது சந்தோஷமா இருப்பேன்னு நம்பி குட்’டா ஃபீல் பண்ணுங்க. லெட் அஸ் பார்ட் வேஸ் வித் அ ஜென்டில் ஸ்மைல்(let us part ways with a gentle smile – மென்மையான புன்னகையுடனே பிரிந்து செல்வோம்)” என்றாள்.

மனதை திடப் படுத்தி சிரிப்புடன் குட் பை சொன்னான். தலையை சரித்து சிரித்தவள் புல்லட் இருந்த இடத்தை தாண்டி நடக்க ஆரம்பித்தாள்.

இந்த மன நிலையில் வண்டி ஓட்டி செல்ல முடியும் என அவளுக்கு தோன்றவில்லை. நடை பாதை மேடையில் அமர்ந்து வானத்தை பார்த்துக் கொண்டே அழுகையை உள் இழுத்தாள்.

‘விடு மிருணா, கூல் டவுன், ஃபோகஸ் ஆன் யுவர் ட்ரீம்’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

கேப் புறப்படும் ஓசை கேட்டும் மன வலிமையோடு அந்த பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.

“ரொம்ப அழுத்தம் மிரு நீ!” என்ற விஷ்ணுவின் குரலில் திடுக்கிட்டு போய் பார்க்க, விஷ்ணுவேதான் மூச்சிரைக்க நின்றிருந்தான். கார் அவளது பார்வைக்கே தென்படவில்லை.

“என்ன?” முகத்தை சின்னதாக்கிக் கொண்டு கேட்டாள்.

“உன் பிறந்த வீட்டு வசதியெல்லாம் என்னால கொடுக்க முடியாது, ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு ஹேப்பியா வச்சுக்க முடியும். முக்கியமா உன் அண்ணன் இழுப்புக்கு போக முடியாது, அதிகமா பிரஷர் கொடுத்தார்னா உனக்கு மட்டும்தான் அண்ணனா இருக்கலாம், எனக்கு மச்சானா இருக்க முடியாது”

மிருணா ஏதோ சொல்ல போக, “ஐ மீன் என் வைஃபோட அண்ணனா இருந்தாலும் மச்சானா ஏத்துக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்” என்றான்.

முகம் மலர எழுந்து கொண்டவள், “இதுக்கு நிறைய நாள் ஆகும்னு நினைச்சேன், இவ்ளோ சீக்கிரம் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றாள்.

“பொண்ணு பார்க்க போய் சில மணி நேரத்துல முடிவு எடுக்கிறது இல்லயா?”

“முடிவு எடுத்திட்டீங்களா?”

“விவரம் வந்ததுக்கு அப்புறம் முகமூடி போட்டுக்கிட்டுதான் எல்லாரோடேயும் பழக முடியுது மிரு, அம்மான்னா கூட நம்ம சொல்றது அவங்கள பாதிக்குமோன்னு நினைச்சு அவங்ககிட்ட கூட ஈஸியா எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டேன். நான் நானா பொய் இல்லாம இருக்க எனக்கே எனக்குன்னு யாராவது வேணும். என்னை நம்புற பொண்ணா இருக்கணும், உன்கிட்ட உண்மையை ஃபீல் பண்றேன் மிரு. எனக்கும் உன்னை மிஸ் பண்ண விருப்பம் இல்லை” என அவன் சொல்ல அவனை நோக்கி வலது கையை நீட்டி சிரித்தாள்.

அவளது கையை பிடித்துக்கொண்டவன், “என்கிட்ட உன் அண்ணா தலையீடு அதிகம் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த விஷயத்துல என்னை நீ காம்ப்ரமைஸ் பண்ணிக்க சொல்லக்கூடாது” என்றான்.

சரி என தலையசைத்த மிருணா, “அண்ணாகிட்ட நான் பேசுறேன், நீங்க ரெண்டு பேரும் நல்ல ரிலேஷன்ஷிப்ல இருந்தாதானே எனக்கு முழு சந்தோஷம்?” எனக் கேட்டாள்.

“ஒத்து வரலைன்னாதானே அவர் உறவு எனக்கு வேணாம்னு சொல்றேன்? மத்தபடி என் அப்பா குணம் பிடிக்காட்டாலும் அனுசரிச்சு போற மாதிரி உனக்காக உன் அண்ணனையும் ஓரளவு பொறுத்து போவேன்” என சொல்லிக் கொண்டே அவள் கையிலிருந்த புல்லட்டின் சாவியை அவளின் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டான்.

தள்ளி நின்ற வாகனத்தில் அமர்ந்து ஸ்ட்ராட் செய்தவன், “ஏறு மிரு” என்றான்.

தயக்கமாக அவனை பார்த்தவள், “கல்யாணம் எப்போங்கிறது உங்க இஷ்டம், ஆனா குழந்தை…” என இழுத்தாள்.

வாய் விட்டு சிரித்தவன், “ம்ம்… குழந்தை…” என்றான்.

“ரெண்டு வருஷம் டைம் வேணும், அதுக்குள்ள மூவி பண்ணிடுவேன்” என்றாள்.

“ம்ம்… கல்யாணம் என் இஷ்டம்தானே? மூணு வருஷம் கழிச்சு கூட பண்ணிக்கலாம், குழந்தை கூட ரெண்டு வருஷத்துல இல்லாம கல்யாணத்துக்கு அப்புறமாவே…” என்றான்.

ஆ என வாய் விரித்து பின் அவனை செல்லக் கண்டனத்தோடு பார்த்து, “கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்துக்கு அப்புறமான்னு சொன்னேன்” என்றாள்.

கீழுதட்டை மடக்கி குறும்பாக சிரித்தவன், “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் மிரு. ரொம்ப நாள் வெயிட் பண்ண முடியும்னு தோணலை” என்றான்.

சம்மதம் என்கிற முகபாவனையோடு அவன் பின்னால் ஏறிக் கொண்டவள் அவனது தோளை இறுக பற்றிக் கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement