Advertisement

பேரன்பு பிரவாகம் -12

அத்தியாயம் -12(1)

மருத்துவமனை செல்ல தயாராகி அபார்ட்மெண்ட் வாயில் வரை வந்த விஷ்ணு கேப் புக் செய்ய கைப்பேசி எடுக்க சர் என அவன் பக்கத்தில் வந்து புல்லட்டை நிறுத்திய மிருணாளினி, “போன் பாக்கெட்ல வச்சிட்டு ஏறுங்க விஷ்ணு” என்றாள்.

“உங்களை இம்ப்ரெஸ் செய்யவெல்லாம் இல்லை. ஜஸ்ட் அ ஹெல்ப், அந்த வழியாதான் போறேன்” என சொல்லி மறுப்பதற்காக வாய் திறக்க போனவனை வண்டியில் ஏறிக் கொள்ள செய்து விட்டாள்.

“தினம் இப்படி லிஃப்ட் கொடுக்கிறதா இருக்கீங்களா மிருணாளினி?”

“நான் ரெடிதான், உங்களுக்கு ஓகேவா?”

“திரும்ப திரும்ப சொல்றேன், இது வேணாமே விட்ரலாமே?”

“ஏதாவது கோவமா பேசி திட்டிடுங்க, நானும் கோச்சுக்கிட்டு போயிடுறேன்”

“தப்பு செய்யாதவங்கள எப்படி திட்ட முடியும்?”

“அப்ப திட்டாதீங்க”

சலிப்பாக சாலையை பார்த்தவன் அமைதியாகி போனான்.

“எனக்கு சான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சதும் அதை ஒழுங்கா யூஸ் பண்ணனுமா இல்லயா?” எனக் கேட்டாள்.

“என்ன… நிஜமாவே தினமும் லிஃப்ட் தர்றதா முடிவு பண்ணிட்டீங்களா?”

“ஏன்… ஈவ்னிங் கூட ஹாஸ்பிடல் டு அபார்ட்மெண்ட் அழைச்சிட்டு வரலாமே” என்றாள்.

விஷ்ணுவுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“நல்ல அசிஸ்டென்ட் டைரெக்ட்டர்னு நினைச்சேன், நினைச்ச நேரம் வருவீங்களா? என் டியூட்டி கூட முன்ன பின்ன ஆகலாம் மிருணாளினி, ரிஸ்க் எடுக்காதீங்க” என்றான்.

“ஒன் மன்த் இன்டோர் ஷூட்டிங்தான். செட்ல நான் இல்லைனு கூட எங்க டைரக்டருக்கு தெரிய போறதில்லை. சமாளிக்க பசங்க இருக்காங்க. வீட்ல கோச்சுக்கிட்டு அப்படியே வந்து ரெண்டு நாள் ஓட்டல்ல ஸ்டே பண்ணி, அப்புறம் உங்க ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்தது, தினம் கேப்ல போயிட்டு வர்றது, அப்பப்ப ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் யாரோட கார்லயாவது வர்றது, சந்தனான்னு ஒரு நார்த் இண்டியன் டியூட்டி டாக்டர் உங்ககிட்ட வழிய வந்து சிரிச்சு பேசுறதுன்னு ஆல் டீடெயில்ஸ் ஐ க்நொ” சிரிப்பு வரும் தோரணையில் கூறினாள்.

விஷ்ணு திகைத்திருக்க, “நினைச்சேன்னா உங்க டியூட்டி சார்ட் எனக்கு வாட்ஸ் ஆப்ல வந்திடும். டைமிங்ஸ் முன்ன பின்ன ஆனா கூட எப்ப கிளம்புறீங்கன்னு இன்ஃபர்மேஷன் கொடுக்க ஆள் கரெக்ட் பண்றது ஒண்ணும் அவ்ளோ பெரிய வேலை இல்லை. யூ ஆர் அண்டர் மை சர்வைலன்ஸ், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுன்னு டயலாக் கூட பேசலாம் நான்” என்றாள்.

திகைப்பு நீங்கி சத்தமாக சிரித்தவன், “இப்படி ஒரு பொண்ணை இதுவரை நான் பார்த்ததே இல்லை. யூ ஆர் சான்ஸ்லெஸ்!” என்றான்.

“ஏன் பாய்ஸ்தான் இப்படிலாம் பண்ணி பொண்ணுங்கள இம்ப்ரெஸ் பண்ணனுமா? நாங்களும் செய்யலாம்தானே” எனக் கேட்டாள்.

கல கல என அவள் பேசியதில் அத்தனை புத்துணர்ச்சியாக உணர்ந்தான்.

“அப்படி இம்ப்ரெஸ் பண்ணி நம்மை ஒருத்தருக்கு பிடிக்க வச்சா லைஃப் முழுக்க இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருந்தாதான் அந்த பிடித்தத்தை நிலைச்சு நிக்க வைக்க முடியும். ஸோ எதுவும் நான் இம்ப்ரெஸ் பண்ணல. இப்படி கிடைக்கிற சான்ஸ் மட்டும் யூஸ் பண்ணிக்கிறேன்” என்றாள்.

“ஒரு விஷயம் வேணும்னா கடுமையா போராடணும் மிருணாளினி, ட்ரை பண்றதை விடக்கூடாது” என முதல் நாள் அவள் சொல்லியதை வைத்து கிண்டல் செய்தான்.

“யா யா… ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன். அதுக்காக பொய்யா என்னால எதையும் செய்ய முடியாது. நான் நானா இருந்துதான் ட்ரை பண்ணுவேன்”

 மருத்துவமனை வாசலில் இறக்கி விட்டவள், “நான் சொன்னதை நம்பி ஈவ்னிங் காத்திட்டு இருக்காதீங்க. ஸ்பாட்ல இருக்கிறது எனக்காக, டைரக்டரை ஏமாத்தினா என்னை நானே ஏமாத்திகிட்ட மாதிரி. இந்த மாசம் சென்னைலதான் இருப்பேன். இப்போதைக்கு மார்னிங் நானே உங்களை இங்க ட்ராப் பண்றேன்” என்றாள்.

“எதுக்கு சிரமம்?”

“உங்களுக்காக தனியா வண்டிக்கு பெட்ரோல் போட போறதில்லை. மாமா பையன், நல்ல பையன், ஹார்ம்லெஸ் பையன் வேற… நிஜமா உங்களுக்கு இது பிடிக்கலைனா…” உங்கள் இஷ்டம் என்பது போல தோள்களை குலுக்கினாள்.

அவன் பதில் சொல்லாமல் சிரிக்க, “கேட்ச் யூ டுமாரோ” என கண்கள் ஒளிர சொல்லி சென்றாள்.

“சாட்டர் பாக்ஸ்!” (உரையாடல் பெட்டி ) செல்லமாக அவளை சொன்னவன் முகம் நிறைந்த சிரிப்போடு மருத்துவமனைக்குள் சென்றான்.

அடுத்தடுத்த நாட்களும் அவளது புல்லட் சவாரிதான் விஷ்ணுவுக்கு. அவளை ஒருமையில் அழைத்து பேசிப் பழகும் அளவுக்கு முன்னேறியிருந்தான். வழியில் நிறைய பேசினார்கள். ஈரப்பை தாண்டி பிடித்தம் எனும் அளவுக்கு வந்திருந்தது.

அன்று புல்லட்டில் சென்று கொண்டிருக்கையில், “என்னை மீட் பண்ணினது, நான் உங்ககிட்ட அழுதது இதையெல்லாம் யார்கிட்டேயும் சொன்னீங்களா?” எனக் கேட்டாள்.

“இல்லையே, ஏன் கேட்குற?” என அவன் கேட்டதற்கு அவளும் ஒன்றுமில்லை என்றாள்.

“என்னன்னு தெளிவா சொன்னாதானே எனக்கு புரியும்”

“நேத்து நைட் என் அண்ணா கேட்டார். வேணாம்னு சொன்னவன்கிட்ட என்ன பேச்சு, எதுக்கு அவனை உன் வண்டியில ஏத்திக்கிட்டு சுத்துறன்னு எல்லாம் கண்டிச்சார். எப்படி தெரியும்னு கேட்டதுக்கு எனக்கு தேவையில்லாததுன்னு சொல்லிட்டார்” என உன்மையை சொன்னாள்.

“உடனே நான் சொன்னதா நினைச்சுக்கிட்டீயா? எம்மேல உனக்கு ரொம்ப நல்ல அபிப்ராயம்”

“அச்சோ தப்பா இல்லைங்க. சாதாரணமா அத்தைகிட்ட சொல்லி அவங்க மாமாகிட்ட சொல்லி அப்படி விஷயம் லீக் ஆகியிருக்குமோன்னு கேட்டேன்”

நெற்றி சுருக்கி யோசித்தவன், பின்னால் திரும்பி பார்த்து விட்டு, “நம்ம பின்னால ரெட் கலர் ஹெல்மெட் போட்டுக்கிட்டு பஜாஜ்ல ஒருத்தன் வர்றான், நேத்து கூட ஹாஸ்பிடல்ல என்னை நீ டிராப் பண்ணும் போது பார்த்தேன்” என்றான்.

வாகனத்தின் கண்ணாடி வழி கண்டவள், “என்ன மீன் பண்றீங்க?” எனக் கேட்டாள்.

“இங்கேயே வண்டிய ஸ்டாப் பண்ணு, தெளிவா தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன்” என்றான்.

அவளும் வண்டியை நிறுத்தி விட, ஐம்பதடி தொலைவில் இருந்த இளநீர் கடைக்கு சென்றவன் இரண்டு இளநீர் வாங்கிக் கொண்டு வந்தான்.

அவளிடம் ஒரு இளநீரை கொடுத்தவன் “கன்ஃபார்ம் பண்ணிட்டேன்” என்றான்.

“என்ன?” எனக் கேட்டாள்.

“உன் அண்ணன் உன்னை சுதந்திரமா விட்ருக்கார்னு நினைக்கிறியா? கண்ணுக்கு தெரியாத ரோப் கட்டித்தான் விட்ருக்கார், கயிரோட இன்னொரு முனை அவர் கைல இருக்கு. யூ ஆர் அண்டர் ஹிஸ் சர்வைலன்ஸ் (நீ அவரது கண்காணிப்பில் இருக்கிறாய்)” என்றவன் இளநீரை பருக ஆரம்பித்தான்.

மிருணாளினி கவனித்து பார்க்க அந்த பைக் காரன் சற்று தூரமாக நின்றிருந்தான். அண்ணன் செய்யக் கூடியவன்தானே, ஆனாலும் இத்தனை நாட்கள் இப்படி யாரும் தன்னை தொடர்ந்து வந்ததாக அவள் உணரவே இல்லை.

குடித்து முடித்த இளநீரை கோவமாக தூக்கி ஏறியப் போனவளை தடுத்தவன், “கொசு ப்ரீட் பண்ணும்” என சொல்லி மீண்டும் இளநீர் கடையில் கொடுத்து வந்தான்.

அந்த பைக் காரன் கைப்பேசியில் யாரிடமோ பேச அண்ணனிடம்தான் ஏதோ பேசுகிறான் என ஊகித்தவள் அவனை நோக்கி விரைந்தாள்.

“உன் அண்ணன்கிட்ட கேட்குறதை விட்டுட்டு அவன்கிட்ட எதுக்கு போற?” கேட்டுக் கொண்டே விஷ்ணுவும் அவளின் பின்னால் ஓடினான்.

திகைத்துப் போன அந்த பைக் காரன் அதி வேகமாக பைக்கை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

கோவத்தில் மேல் மூச்சு வாங்க இவள் நின்றிருக்க, “இதென்ன அசட்டு துணிச்சல் மிருணாளினி? ஒரு வேளை உன் அண்ணனோட ஆளா இல்லாம போனா வீண் பிரச்சனை ஆகாதா?” எனக் கேட்டான்.

“அதான் அண்ணன் ஆளுன்னு தெரிஞ்சிடுச்சே. எவ்ளோ நாளா இப்படி நடக்குதுன்னு தெரியலை. அவ்ளோ முட்டாளா நான்?” எனக் கேட்டாள்.

“நேத்தும் இன்னிக்கும் ஒரே பைக்ல வந்ததால… அதையும் நான் கவனிச்சதால டவுட் வந்தது. வேற வேற ஆளுங்க சந்தேகம் வராத படி வேற வேற வெஹிக்கில்ஸ்ல கூட வந்திருக்கலாம்” என்றான்.

“எங்கேயாவது ஷூட்டிங்க்கு பெர்மிஸன் கிடைக்காதப்போ நான் ட்ரை பண்ணினா உடனே கிடைச்சிருக்கு. என் டைரக்டர் என்னை லக்கி சார்ம்னு சொல்லுவார். ஷூட்டிங் ஸ்பாட்ல யாராவது ரவுடிஸ் பிராப்லம் செய்தா நான் அங்க இருந்தா உடனே போலீஸ் வந்திடும், இல்லைனா அந்த ஏரியால செல்வாக்கான ஆளுங்க யாராவது வந்து க்ளியர் பண்ணி விடுவாங்க. எல்லாத்துக்கும் பின்னால என் அண்ணா இருந்திருப்பாரோன்னு இப்ப டவுட் ஆகுது” என்றாள்.

“டவுட்தானே மிருணாளினி? ஒரு வேளை இல்லாம கூட இருக்கலாம்”

“என் அண்ணா பத்தி தெரியாது உங்களுக்கு?”

“ஏன் தெரியாம? சரி, அப்படியே இருந்தாலும் உனக்கு நல்லதுதானே செய்றார்?”

“என்ன நல்லது? என் பிராப்லம் எல்லாத்தையும் அவர் சார்ட் அவுட் செய்றார், என் சந்தோஷத்தை கூட அவர் அனுபவிச்சுக்குவாரா? என் லைஃப் நான்தான் வாழணும், அவர் இல்லை”

“புரியுது மிருணாளினி, உன் லைஃப் பிளான் உன் அண்ணனோட கைல இருக்கு” என விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்க, மிருணாவின் கைப்பேசிக்கு பிரவாகனிடமிருந்து அழைப்பு வந்தது.

கோவத்தோடு அழைப்பை ஏற்றவள், “அண்ணா திஸ் இஸ் டூ மச்…” என சத்தம் போட்டாள்.

“ஷட் அப் யூ இடியட்! வேணாம்னு சொல்லிட்டு போனவன் கூட எதுக்கு சுத்திகிட்டு இருக்கன்னு நைட் கேட்டதுக்கு இப்போ வரை ஒழுங்கா ஆன்சர் பண்ணலை. இன்னிக்கும் அவன் கூட சுத்துற, என்ன மிருணா இது?” என பிரவாகனும் கோவப்பட்டான்.

“எவ்ளோ நாளா என்னை வேவு பார்த்திட்டு இருக்க ண்ணா?”

“நான்சென்ஸ்! உன் ஸேஃப்டிக்கு அது. பேச்ச மாத்தாத. விஷ்ணு கூட எதுக்கு சுத்துற?”

அருகில் நின்றிருந்த விஷ்ணுவுக்கும் பிரவாகனின் கத்தல் காதில் விழுந்தது. அண்ணனாக கோவப்படுகிறான், நியாயம்தானே என எண்ணி மிருணாவின் பதில் என்ன என பார்த்திருந்தான்.

“அவரை எனக்கு பிடிச்சிருக்கு” என்றாள் மிருணா.

இப்படியா முகத்தில் அறைவது போல சொல்வாள் என திகைத்த விஷ்ணுவுக்கு அடுத்த சில நொடிகளில் புன்னகை அரும்பியது.

“ஓ… பிடிச்சிருக்கா அவனை? அப்போ நீ என்ன செய்திருக்கணும்? என்கிட்ட சொல்லியிருக்கணும். அத விட்டுட்டு ரோட்ல நின்னு அவன்கிட்ட அழுவியா? என் தங்கை யாருகிட்டேயும் அழுவாளா? அப்புறம் வழிய போய் அவன் பின்னால சுத்துவியா? நீ யாருங்கிறத மறந்திடாத” என சீறினான் பிரவா.

“நான் ஒண்ணும் சுத்தல, ஜஸ்ட் அவரை ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்றேன். வேற எங்க சுத்தினதை நீ பார்த்த. அவரை பிடிச்சிருந்தா ஃபர்ஸ்ட் உன்கிட்ட சொல்லணுமா? என்ன பண்ணியிருப்ப ண்ணா?”

“அவன் முடியாதுன்னு சொன்னதை ஈஸியா எடுத்துக்கிட்டன்னு அம்மா சொன்னாங்க. உன் விருப்பம் தெரிஞ்சிருந்தா இந்நேரம் அவன் கூட உன் கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கும்” என்றான் பிரவா.

விஷ்ணுவின் முகம் இறுகி கடினமடைய, “பிளா பிளா பண்றதை நிறுத்து ண்ணா” என்றாள்.

“வாட் பிளா பிளா? இப்ப சொல்லு, அவனைத்தான் மேரேஜ் செய்துக்கணுமா உனக்கு? டெல் மீ மிருணா…”

விஷ்ணுவின் தாடை இறுகியிருக்க மிருணாவை அழுத்தமாக பார்த்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement