Advertisement

அத்தியாயம் -1(2)

“உங்க இஷ்டத்துக்கு கிளம்ப இது ஒண்ணும் ஃபேமிலி ஃபங்ஷன் இல்லை டாக்டர். ஸ்டே ஹியர்” கடினமாக பிரவாகன் சொல்ல, அதுவரை வேடிக்கை பார்த்திருந்த பத்மநாதன், “அமைதி பிரவா” என்றார்.

“உங்களுக்கு இந்த இஸ்யூ… இவங்க முடியாதுன்னு சொல்றது முன்னாடியே தெரியுமா அங்கிள்?” எனக் கேட்டான்.

“ஆமாம் பிரவா. அதுக்காகத்தான் டாக்டர் மலரை டீமுக்குள்ள கொண்டு வந்தேன். அவங்க ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுத்துக்கிட்டாங்க. தாரிகாவை கம்பெல் செய்ய வேணாம். சின்ன தவறு ஏற்பட்டாலும் அக்ரிடியேஷன் கிடைக்காம போய்டும்” என எச்சரிக்கையாகவே சொன்னார்.

பிரவாகனும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. சரி என்பது போல அவரை பார்த்து தலையசைத்தவன் இப்போது அன்புமலரை பார்த்தான்.

இந்த வருடம்தான் எம் பி பி எஸ் முடித்து விட்டு பணியில் சேர்ந்தவள், சில மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த அன்று இவளை சந்தித்ததாக அவனுக்கு நினைவு வந்தது.

குரலை செருமிக் கொண்டவன், “எஸ் அன்புமலர், என்ன சொல்ல வந்தீங்க நீங்க?” எனக் கேட்டான்.

“ஃப்ரீ பிளாக்ஸ்ல இருக்க பேஷண்ட்ஸ் பார்க்க ஏதாவது ரெஃபரல் இருந்தா ஸ்பெஷலிஸ்ட் யாரும் நேர்ல போகாம பேஷண்ட்ஷை அவங்க ஓபி க்கு வரழைக்கிறாங்க” என மலர் பேச ஆரம்பிக்க, “இத பத்தி டிஸ்கஸ் பண்ண இது சரியான நேரம் இல்லை” என அவளை தடை செய்ய பார்த்தான் பிரவாகன்.

“ஆனா சார் இது சம்பந்தமா பேச உங்களை மீட் பண்ண ட்ரை பண்றேன். பிஸின்னே சொல்றாங்க, டூ மினிட்ஸ் கொடுங்க சார், சொல்லிடுறேன்” என விடாப் பிடியாக கேட்டவளை ஆச்சர்யமாக பார்த்தனர் அங்கிருந்தோர்.

“ஃப்ரீ பிளாக் சூப்பரிடெண்டண்ட்கிட்ட சொல்லுங்க. அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்கிறேன்” என அவளது பேச்சை கத்திரிக்கத்தான் பார்த்தான்.

“சொல்லி பிரயோஜனம் இல்லை, அதனாலதான் உங்களை மீட் பண்ண முயற்சி செய்தேன். இன்னிக்கு இந்த சான்ஸ் விட்டா திரும்ப உங்களை மீட் பண்ணவே முடியாது. ப்ளீஸ் சார்…”

தன் முன்னால் இருந்த சிறிய மைக்கை நெருங்கி, “மீட்டிங் முடிஞ்சுது, கிளம்பலாம் எல்லாரும்” என பிரவாகன் கட்டளையாக சொல்ல கூடியிருந்தோர் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

இன்னும் மலர் மட்டும் அங்கேயே நின்றிருக்க, பத்மநாதனை பார்த்த பிரவாகன், “உங்க டீம்ல புதுசா ஜாயின் பண்ணியிருக்க இந்த மேடம்க்கு பிராப்பர் சேனல் வழியாதான் என்னை அப்ரோச் செய்யனும்னு சொல்லிக் கொடுங்க அங்கிள்” என்றான்.

“இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறதுக்கு முன்னாடியே ஸ்ரீ சேதுராமர் ஐயாவால ஆரம்பிக்க பட்டது அன்பு வைத்திய சாலை. அன்னிக்கு சேவை ஒண்ணு மட்டுமே பிரதானமா இருந்தது. போக போக மருத்துவத்தையும் பிஸ்னஸ் பண்ண ஆரம்பிச்சு இன்னிக்கு இந்தியால பெரிய ஸ்தாபனமா மாறியிருக்கு. ஆனாலும் இது ஆரம்பிக்க பட்ட நோக்கம் எளிய மக்களுக்கு ஃப்ரீ மெடிக்கல் சர்வீஸ் கொடுக்கணும்கிறதுதான்” அதிக சத்தம் இல்லாமல் அழுத்தமான குரலில் சொன்னாள் மலர்.

“நீங்க இன்னும் போகலையா?” அவனது பார்வை பேச்சு இரண்டிலுமே இகழ்ச்சி நிறைந்திருந்தது.

“ரொம்ப சிக் பேஷண்ட்ஸ ஓபி க்கு வெளில மணிக்கணக்கா வெயிட் பன்றாங்க. நைட் டைம் எமர்ஜென்ஸி கேஸ் வந்தா பெய்ட் பிளாக்ஸ்ல இருக்க ஸ்பெஷலிஸ்ட் ஹெல்ப் வேணும்னு பி ஜி டாக்டர் கூப்பிட்டா நேரத்துக்கு வர மாட்டேங்குறாங்க. எல்லாம் ஃப்ரீன்னு சொல்லிட்டு சில அத்தியாவசிய மெடிசின்ஸ் இல்லைனு சொல்லி வெளில வாங்கிட்டு வர சொல்றாங்க. வசதி இல்லாமதானே அங்க வர்றாங்க, நேத்து நைட் லிஃப்ட் பாதி வழியில நின்னு போய்டுச்சு. உள்ள பேஷண்ட். லிஃப்ட் ஆபரேட்டர் பெய்ட் பிளாக்குக்கு கூப்பிட்டுக்கிட்டாங்க. இது போல இன்னும் இன்னும் எவ்வளவோ குறைகள் அங்க. அங்க உள்ள வார்ட்ஸ் வந்து பாருங்க, பெட் ஷீட்ஸ் கண்டிஷன் பார்த்தாலே அங்க உள்ள நிலை புரியும். அந்த பேஷண்ட்ஸ் வச்சுத்தான் மெடிக்கல் காலேஜ் ரன் பண்ணிட்டு இருக்கீங்க, நம்மள நம்பித்தான் அவங்க வர்றாங்க”

“வில் யூ ஸ்டாப்?” பிரவாகன் போட்ட சத்தத்தில் மலர் பேசுவதை நிறுத்தியிருந்தாலும் பயம் இல்லாமல் அவனை உற்று பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் இல்லை நான் நடத்தறது, ஓவர் சர்வீஸ் பண்ண மடமும் வச்சு நடத்தல. என்கிட்ட பேசுற லிமிட்ஸ் தாண்டி யார் பேசினாலும் சும்மா விட மாட்டேன். நீ சின்ன பொண்ணு, உனக்கு என்னை பத்தி தெரியலை இந்த ரெண்டு காரணங்களுக்காகவும் உன்னை சும்மா விடுறேன். உனக்கு கொடுக்கிற வேலைய மட்டும் பார்” என்ற பிரவாகன் வாயிலை நோக்கி கை காண்பித்தான்.

மலரின் உதடுகள் துடிக்க கன்னச் சதைகள் இறுகிப் போயிருந்தன.

சங்கடமாக அவர்களை வேடிக்கை பார்த்திருந்த பத்மநாதன், அந்த சூழலின் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு, “நீ கிளம்பு மலர், அப்புறமா என்னை வந்து பார்” என சமாதானமாக சொன்னார்.

“ஃப்ரீ பிளாக் சூப்பரிண்ட்டெண்ட்… அதான் டாக்டர் ஏகாம்பரம், சாரோட சித்தப்பா தர்மேந்திரன் சொல்றதைதான் கேட்டு நடப்பார். தர்மேந்திரன் சார் இந்த குறைகளை இவர் கவனத்துக்கு கொண்டு வரவே மாட்டார். ஏன்னா…”

“ஹவ் டேர் யூ டாக் இல் அபௌட் மை சித்தப்பா!” என இரைந்து கொண்டே எழுந்தான் பிரவாகன்.

அவனது கோவத்தில் மனதில் பயம் பிறந்தாலும் உள்ளத்தின் தட தடப்பை வெளியில் காட்டாமல் கால்களை தரையில் அழுந்த ஊன்றி அவ்விடம் நகராமல் இன்னுமே அழுத்தமாக நின்றாள் மலர்.

பிரவாகனுக்கு நிஜமாகவே அவளது அந்த நிமிர்வில் வியப்பு மேலிட்டது. தாடையை தடவிக் கொண்டு ஆராய்ச்சியாக அவளை பார்த்தான். அவளின் பயமும் அதை மறைக்கும் விதமும் புரிந்து கொண்டு துச்சமாக அவளை பார்த்தான்.

நிலைமை விபரீதம் ஆகி விடுமோ என பயந்து போன பத்மநாதன் மலரின் அருகில் சென்று அவளது கையை பிடித்து வெளியில் அழைத்து சென்று விட்டார்.

“கோவக்காரனுக்கு கோவம் அதிகமானா என்ன செய்றோம்னு அவனுக்கே தெரியாம போய்டும். சர்வீஸ் மைண்ட் வச்சுகிட்டு அவன் இந்த ஹாஸ்பிடல் காலேஜ் எல்லாம் நடத்தல. இன்னொரு முறை அவன்கிட்ட இப்படி பேசாத, நீ போ” என்றார்.

“சர்வீஸ் பண்ண வேணாம் சார், அந்த பேஷண்ட் வச்சுத்தான் இவர் காலேஜ் ஸ்டூடன்டஸ் மெடிசின் படிக்கிறாங்க. எத்தனை கோடி லாபம் பார்க்கிறார், அதிலேர்ந்து ஒரு பகுதி அவங்க வெல்ஃபேருக்கு தாராளமா செலவு செய்யலாம்தானே? இவர் அங்க வரவே மாட்டேங்குறார், அவர் சித்தப்பா ரொம்ப மோசமா நிர்வாகம் செய்றார். நீங்களாவது சொல்லக்கூடாதா?” எனக் கேட்டாள்.

‘அடடா என்ன இந்த பெண் இவ்வளவு பிடிவாதம் செய்கிறாள்?’ என பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னால் பிரவாகன் வருவதை அவனது காலடி ஓசை மூலம் உணர்ந்து, “அப்புறம் பேசலாம் நாம, நீ போம்மா” என அவசர படுத்தினார்.

அவனது வருகைக்காக காத்திருப்பது போல மலர் அங்கேயே நிற்க, பத்மநாதன் கலக்கமடைந்து பார்க்க, சுவாரஷ்ய பார்வையை அவள் மீது வீசிக் கொண்டே உதடுகளில் ஏளன சிரிப்போடு அவர்களை கடந்து சென்றான் பிரவாகன்.

பத்மநாதன் “வேண்டாம், போகாதே” என சொல்வதையும் பொருள் செய்யாமல் வேகமாக பிரவாகனை பின் தொடர்ந்து போனவள் அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.

‘அட தைரியம்தான்…’ மனதில் சொல்லிக் கொண்டவன் வேண்டுமென்றே வேக நடை போட கொஞ்சமும் சளைக்காமல் அவனுக்கு ஈடு கொடுத்து நடந்தவள், “உங்க கொள்ளு தாத்தா எந்த நோக்கத்துக்காக இதை ஆரம்பிச்சாரோ அந்த நோக்கத்தை நிறைவேத்தற கடமை உங்களுக்கும் இருக்கு. நோயோடு போராடுற உயிர்களை அலட்சியம் செய்யாதீங்க. பெரிய பாவம் அது” என்றாள்.

நடையின் வேகத்தை குறைத்து விட்டு அவளை அலட்சியமாக பார்த்து, “பாவம் புண்ணியம் எல்லாம் எனக்கு கிடையாது. எனக்கு அட்வைஸ் சொல்ற ஆள் இந்த உலகத்துல இன்னும் பொறக்கல. அளவுக்கு மீறி பேசிக்கிட்டே கால் தடுக்கி விழுந்திடாத” என்றவன் அங்குள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்க்கும் விதமாக கிடந்த வோஸ் குழாயை தாண்டி சென்றான்.

அதை கவனிக்காமல் சட்டென தடுமாற இருந்தவள் பிடிமானத்திற்காக காற்றில் துழாவ அவன் கோட் கையில் மாட்டிக் கொண்டது. அவளோடு சேர்ந்து அவனும் விழுந்து விடும் அபாயம் இருப்பதால் அவளது ஒற்றைக் கையை பிடித்து நிறுத்தியவன், “உனக்கு இங்க வேலை வேணாம்னா வேற ஹாஸ்பிடல் போ” என கோவமாக சொல்லி முன்னே நடந்தான்.

அதற்கு மேல் அவளால் அந்த வழியில் செல்ல முடியவில்லை. அது அவன் மட்டும் வந்து போய் செல்வதற்கான பிரத்யேக வழி. யாரேனும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் என்றால் கூட அவ்வழியை உபயோகிக்க முடியாது. அவர்களுக்கென வேறொரு தனி சிறப்பு வழி உண்டு.

இரு காவலர்கள் எப்போதும் அங்கு இருப்பார்கள். மலர் சோர்ந்து போனவளாக அங்கு நிற்க காவலர்கள் அங்கிருந்து செல்லும் படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

‘சேவையாம் சேவை… எமோஷனல் ஃபூல்ஸ்! இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கூட இதே மன நிலையோட இருப்பாளா இவ?’ மலரை பற்றி குறைவாக மதிப்பிட்டவன் அவனது காரில் ஏறிக் கொண்டான்.

வருமான வரி சம்பந்தமாக இருக்கும் ஒரு பிரச்சனையை சரி செய்ய மந்திரி ஒருவரை காண வேண்டும். அவன் இடம் சொல்ல கார் வேகமாக அங்கிருந்து புறப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement