Advertisement

அத்தியாயம் -11(3)

என்ன என்பது போல அவன் பார்க்க, “கஷ்ட படுத்த இல்லைனா வேற என்னத்துக்கு என்னை கல்யாணம் செய்யணும்? லவ்னா யாராவது இப்படி மிரட்டி சம்மதிக்க வைப்பாங்களா? அட்லீஸ்ட் ப்ரீத் பண்ண டைம் கொடுத்து மனசை புரிய வைக்கிற அளவுக்கு கூட யோசனை இல்லாத உன்னை கல்யாணம் செஞ்சு என்னத்த வாழ போறேன் நான்? ப்ளீஸ் என்னை விட்ரு, எம்மேல எந்த கோவம் இருந்தாலும் மன்னிச்சிடு…” தன்மானம் தடுத்தாலும் கைகளை கூப்பினாள்.

கூப்பியிருந்த அவளது கரங்களை பற்றிக் கொண்டவன், “உம்மேல கோவமே இல்லை. நீ அழுதா பார்க்க முடியலை, என்னை ஏன் வேணாம்னு சொல்ற மலர்? என்ன குறை என்கிட்ட? என் லவ் நிஜம். எப்படி உன்னை சம்மதிக்க வைக்கன்னு தெரியலை. நீ சொல்ற மாதிரி டைம் கொடுக்கிறது, புரிய வைக்கிறது எல்லாம் எனக்கு தெரியலை. அதனாலதான் இப்படிலாம்… என்னை புரியுதா உனக்கு?” எனக் கேட்டான்.

வேகமாக எழுந்த மலர் அவனை பிடித்து தள்ளி விட்டு, “எதுக்காக இதுன்னு தெரியலை. என்ன காரணமா இருந்தாலும் என்னை கல்யாணம் செய்றதால உனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நீ மிரட்டின எதையும் யார்கிட்டேயும் நான் சொல்லலை. நான் கிளம்பறேன்” என்றாள்.

கோவமான பிரவாகன் வெளியில் உள்ள சிவப்பு விளக்கை ஒளிர செய்யும் பட்டனை அழுத்த, உடனே தமன் உள்ளே வந்து நின்றான்.

“எக்ஸ்ப்ளைன் டு ஹெர்” என உத்தரவிட்டான்.

திருமண தேதி, நடைபெறும் மண்டபம் என சொன்ன தமன், “உங்க கல்யாண புடவை, நகை எல்லாமே புதுசா ரொம்ப யுனிக்கா இருக்கிறது போல வடிவமைக்க பெஸ்ட் டிசைனர்ஸ் நாளைக்கு வர்றாங்க மேடம். எல்லாமே உங்களுக்கு புடிச்ச மாதிரி செய்யணும்ங்கிறதுதான் சாரோட ஆசை” என்றான்.

கண்ணீர் பள பளக்க பிரவாகனை கொலை வெறியோடு நோக்கியவள், “பிடிக்காதவளை கட்டிக்கிட்டு என்னத்த வாழ்ந்து கிழிக்க போற?” எனக் கேட்டாள்.

“பார்க்கத்தானே போற” என்றான்.

“இது ஏன்னாவது சொல்லித் தொலைக்க கூடாதா?”

“ஒய் நாட்?” தோள்களை குலுக்கியவன், “மலர் மேல தீராத காதல் எனக்கு. சீக்கிரமா அவளை என் லைஃப்ல கொண்டு வரணும்ங்கிற அளவு கடந்த ஆசைதான் இதுக்கு காரணம்” என்றான்.

எரிச்சலை அடக்கிக் கொண்டு ஏளனமாக சிரித்தவள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, “தமன் அந்த ஜுசை இப்போ கொடுங்க” என்றாள்.

அறையின் இன்னொரு பக்கம் இருந்த பழ சாறை எடுத்து வந்து நீட்டினான் தமன். வாங்கி முழுவதையும் குடித்து முடித்தவள் பிரவாகனை நோக்கி, “டிஸ்யூ ப்ளீஸ்…” எனக் கேட்டாள்.

தமன் விழிக்க சின்ன சிரிப்போடு டிஸ்யூ எடுத்து அவளிடம் நீட்டினான் பிரவாகன். உதடுகளை ஒற்றி எடுத்தவள், “டஸ்ட் பின் எங்க? ஓ உங்க பக்கம் இருக்கா?” என கேட்டுக் கொண்டே பயன்படுத்திய டிஸ்யூவை அவனை நோக்கியே நீட்டினாள்.

தமன் கலவரமாக தன் முதலாளியை பார்க்க அவனோ, ‘நீ நடத்து நடத்து’ என மனதில் நினைத்துக்கொண்டே ஆகச்சிறந்த காதலன் நான் எனும் பாவத்தில் அந்த டிஸ்யூவை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டான்.

தெளிவாக அவனால் கார்னர் செய்யப் பட்டு விட்டதை உணர்ந்தாள். அப்படி அடங்கி விடுபவள் இல்லை நான் என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

 நான்கு பக்கமும் கல் சுவரால் அடை பட்டுக் கிடக்கும் போது தப்பிக்கும் மார்க்கம் இல்லை என்றால் கல் சுவரில் தலையை கொண்டு மோதுவது முட்டாள்தனம். மோதி மோதி சாவதை காட்டிலும் கையில் கிடைக்கும் வஸ்துக்களை திரட்டி சுவரை குடையும் ஆயுதம் தயாரிப்பது சாலச் சிறந்தது.

என்ன காரணத்துக்காகவோ என்னை அவன் எல்லைக்குள் நுழைய அனுமதி அளிக்கிறான். பிடிக்க வில்லை என்றாலும் அதற்காக வருந்துவதை விட அதை எப்படி பயன் படுத்திக் கொள்வது என சிந்திப்பதுதான் புத்திசாலிக்கு அழகு.

மேசை மீதிருந்த ராஜினாமா கடிதத்தை நிதானமாக கிழித்து அலட்சியமாக தரையில் சிதற விட்டவள், “என் ஆசை எல்லாத்தையும் நிறைவேத்துவீங்கதானே?” என வில்லங்கமான தொனியில் கேட்டாள்.

“அஃப்கோர்ஸ் மலர், என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்டான் பிரவா.

“பெருசா ஒண்ணுமில்ல, ஃப்ரீ பிளாக் ட்ரஸ்ட்ல மெம்பர் ஆகணும்” என்றாள்.

ஆ என தமன் வாய் பிளக்க, புருவங்கள் உயர்த்தி வியந்தான் பிரவா.

“வேணுங்கிறதை கேட்டுட்டேன், நடத்தி தாங்க” என்றாள்.

“வெல்! ட்ரஸ்ட்ல மெம்பர் ஆக சில கிரைட்டீரியாஸ் இருக்கு மலர், உன் வயசுக்கு எப்படி…” விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவனின் முகத்திற்கு நேரே ஒற்றைக் கையை காட்டி பேச விடாமல் செய்தாள்.

“என்னை கல்யாணம் செய்துக்க எவ்ளோ க்ரிமினல் வேலை செய்ய ரெடியா இருக்கீங்க? இது முடியாத காரியமா? நிஜமாவே முடியாதா? நீங்க உருகி உருகி லவ் பண்ற பொண்ணு கேட்டும் முடியாதுங்கிற வார்த்தை உங்க வாயிலேர்ந்து வருமா?” நக்கலாக கேட்டாள்.

நெற்றியை தேய்த்து உச்சந்தலையில் கை வைத்து ஆட்டி பதற்றத்தை தணித்துக் கொண்டவன், “லாயர்கிட்ட கேட்டுட்டு உடனே சொலூஷன் சொல்லு தமன்” என கட்டளையிட்டான்.

பெரிய மூச்சை விட்டு தன்னை நிலைப் படுத்திக் கொண்ட தமன் கைப்பேசியும் கையுமாக அறையுடன் இணைந்திருந்த இன்னோரு அறைக்கு சென்றான்.

இருக்கையில் தளர்வாக அமர்ந்திருந்த பிரவாகன் தன் முன்னால் கன்னச் சதைகள் இறுகிப் போயிருக்க கோவத்தை அடக்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்திருப்பவளை விட்டு பார்வையை அகற்றவில்லை.

எதிரெதிர் குணங்கள் கொண்ட இருவரது மனங்களிலும் பல்வேறு திட்டங்களும் அதை எப்படி செயலாக்குவது என்ற யோசனைகளும் ஓடிக் கொண்டிருந்தன.

பத்து நிமிடங்களாக அந்த அறையில் நிலவிய அமைதியை உடைந்த வண்ணம் அங்கு வந்தான் தமன்.

மலர், பிரவா இருவரும் ஒரு சேர அவனை பார்க்க, “நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்…” என ஆரம்பித்தான் தமன்.

“ஸ்டாப் தமன், எனக்கு எந்த லெக்சரும் வேணாம். இவ கேட்டது நடக்குமா நடக்காதா?” எனக் கேட்டான் பிரவா.

“மெம்பர் ஆக முடியாதாம் சார்”

“தென்?”

“ட்ரஸ்ட் ஆரம்பிச்சதிலிருந்து ட்ரஸ்ட்டீ உங்க ஃபேமிலி மெம்பர்தான் இருக்காங்க சார். உங்க ஃபேமிலி மெம்பர்ங்கிற தகுதி போதும் அதுக்கு. இப்போ நீங்கதானே சார் ட்ரஸ்ட்டீ… மேடம் உங்க வைஃப் ஆகிட்டாங்கன்னா லீகல் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு இவங்களே ட்ரஸ்டீ ஆகிடலாம்” என்றான்.

“ஆனா… நான்…” பிரவா சொல்லிக் கொண்டிருக்க,

“தேவையில்லாத தலைவலி உங்களுக்கு எதுக்கு? அந்த தலைவலிய நானே எடுத்துக்கிறேன். கல்யாண வேலைல இத தள்ளி போடாம இதுக்கான வேலையை பார்க்க சொல்லி உங்க பி ஏ, லாயர் எல்லாருக்கும் ஆர்டர் போடுங்க” என பிரவாகனுக்கு உத்தரவு போட்டாள் மலர்.

அவள் கொடுக்கும் நெருக்கடியில் பாதிப்பில்லாதது போல காட்டிக் கொள்ள தொண்டையை கணைத்து மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து பருகிய பிரவா, “உனக்கென்ன ஃப்ரீ பிளாக்ல சர்வீஸ் நல்லா நடக்கணும் அவ்ளோதானே? ஒன் இயர் டைம் கொடு… நானே சரி செய்றேன்” என்றான்.

“அப்ப அதுக்கப்புறம் நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றாள் மலர்.

லேசாக வாயை பிளந்து கீழ்த் தாடையை இட வலமாக அசைத்தவன் தமனை பார்த்து, “லாயர்கிட்ட கேட்டு என்ன செய்யணுமோ செஞ்சிடு” என்றான்.

“மேடம் ட்ரஸ்ட்டீ ஆகிட்டாங்கன்னா ஃப்ரீ பிளாக் பொறுத்த வரை அவங்க எடுக்கிறதுதான் முடிவு சார், மெம்பெர்ஸ் அக்செப்ட் பண்ற எந்த விஷயம் ஆனாலும் மேடமோட ஒப்புதல் கண்டிப்பா வேணும். நல்லா யோசிச்சிட்டீங்களா?” எனக் கேட்ட தமன் என்னென்ன சிக்கல் வரக்கூடும் என்பதை மலரின் முன்னிலையில் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்தான்.

அறக்கட்டளை தொடர்பாக தன்னிடம் வரும் கோப்புகளில் கையெழுத்து இடும் வேலை மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் பிரவாகனுக்கு தமன் சொல்ல வரும் விஷயம் புரியாமல் இல்லை.

மலரை பார்த்துக் கொண்டே, “என் வைஃப் எனக்கும் மேல இருந்தா பெருமைதானே தமன்? ப்ரொஸீட் தமன்” என்றான் பிரவா.

எழுந்து கொண்ட மலர் அவனிடம் முறையாக விடை பெறாமல் திரும்பி நடந்தாள்.

 தமனை கடக்கும் போது நின்றவள், “கொள்ளிக் கட்டைய எடுத்து சொறிஞ்சிகிட்ட குரங்கை பார்த்திருக்கீங்களா மிஸ்டர் தமன்?” எனக் கேட்டாள்.

விழி பிதுங்கிய தமன் இல்லை என மறுப்பாக தலையசைக்க, “எனக்கும் பின்னால உட்கார்ந்திருக்கு, பார்த்துக்கோங்க” என சொல்லி வெளியேறினாள்.

தனக்கு எதுவும் திட்டு விழுமோ என்ற பயத்துடன் பிரவாவை பார்த்தான் தமன்.

அலட்சியமாக சிரித்துக் கொண்டிருந்த பிரவாகன், “என் பொண்டாட்டிக்கு இவ்ளோ திமிராவது இருக்கணும். இருக்கட்டும், இருக்கட்டும்…” என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement