Advertisement

அத்தியாயம் -11(2)

அவன் பேச்சை ரசித்து பார்த்து மென்னகை சிந்தியவள், “கண்டிப்பா இல்லை, இப்படியே இருங்க. மாறிடாதீங்க” என்றாள்.

விடை பெறும் விதமாக அவன் தலையசைத்தான்.

 “எதை நான் மிஸ் பண்றேன்னு நினைக்கும் போது… ரியலி பெயின்ஃபுல் விஷ்ணு. ஏன்… என் பின்னால இருக்க எதுவும் வேணாம், நீ நீயா மட்டும் வர்றியான்னு ஏன் கேட்க மாட்டேங்குறீங்க?” அவளை மீறி கேட்டவளின் கண்கள் கலங்கியிருந்தன.

விஷ்ணுவின் மனமும் கலங்கிப் போனது. பதில் பேசாமல் கைகளை இறுக்கிக் கொண்டான்.

ஹெல்மெட் கழட்டி முழங்கை கொண்டு கண்களை துடைத்துக் கொண்டு பளீரென சிரித்தவள், “நான் கொஞ்சம் பைத்தியக்காரிதான், எதையும் அவ்ளோதான் போன்னு விடறது என் குணம் இல்லை. இப்போ இருக்க பொறப்புல நினைச்சத வாழ்ந்து பார்க்கிறத விட்டுட்டு எதுக்காக காத்திருக்கணும்? உங்க விஷயத்துல இன்னும் எனக்கு சான்ஸ் இருக்குன்னுதான் நினைக்கிறேன். ட்ரை செய்றதா முடிவு பண்ணிட்டேன். உங்க கண்ணுல வெறுப்ப பார்க்கிற வரை டார்ச்சர் செய்ய போறேன்” என்றாள்.

“வேணாம், ரெண்டு பேருக்குமே கஷ்டம்”

குறும்பாக சிரித்தவள், “அப்போ சான்ஸ் இருக்குன்னு நீங்களே கன்ஃபார்ம் பண்றதா வச்சிக்கிறேன். பை விஷ்ணு” என சொல்லி சென்று விட்டாள்.

மிருணாளினி விஷ்ணுவை அழைத்து சென்றது மற்றும் மருத்துவமனை வாயிலில் நின்று கண்கள் கலங்க பேசியது என்ற செய்திகள் எல்லாம் பிரவாகனை உடனடியாக போய் சேர்ந்தன.

மலருக்கு உடல்நிலை நன்றாகி விட்டது. ஒரு வாரம் முடிய ஏன் காத்திருக்க வேண்டும் என நினைத்தவள் நான்கே நாட்களில் இராஜினாமா கடிதத்தோடு மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டாள்.

ஸ்கூட்டரை பார்க்கிங்கில் விட்டு விட்டு இலவச பிரிவு நோக்கி இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்.

“உங்களை அழைச்சிட்டு போக வந்திருக்கேன் மேடம், எம் டி சார் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க மேடம்” பேட்டரி காருடன் நின்றான் ஒருவன்.

“ரொம்ப நல்லது, என் வேலை சீக்கிரம் முடியும். வெயிலுக்கு முன்னாடி வீடு போய்டலாம்” என்றவள் நடந்தே வருவதாக சொன்னாள்.

“நீங்க நடந்தா என் வேலைக்கு வெடியாகிப் போகும்ங்க மேடம்” என்றான் அவன்.

“இங்க பக்கத்துல இருக்குது எண்ட்ரன்ஸ், அதுக்கு பேட்டரி காரா?”

“இல்லைங்க மேடம், உங்களை ஸ்பெஷல் வழியில விட சொல்லியிருக்காங்க” என்றவனிடம் மேலும் தர்க்கம் செய்ய விரும்பாமல் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

சிறப்பு வழி வந்ததுமே தமன் காத்திருந்தான். எரிச்சலடைந்து கொண்டே இறங்கியவள் தமனை தாண்டிக் கொண்டு நடக்க, அவள் பின்னே வேகமாக ஓடி வந்தவன், “இனிமே எப்பவும் இந்த வழில நீங்க வரலாம்னு சார் சொல்ல சொன்னாங்க” என்றான்.

“ம்ம்… உங்க சார்கிட்டயே பேசிக்கிறேன்” என மட்டும் சொன்னாள்.

பிரவாகன் அறைக்கு வெளியில் பலர் காத்திருக்க, மலர் செல்ல கதவை திறந்து விட்டான் தமன்.

மலர் உள்ளே நுழையவுமே, இருக்கையிலிருந்து நிமிர்ந்தமர்ந்த பிரவாகன் ஆர்ப்பாட்டமாக, “ஹேப்பி மார்னிங் மலர்!” என்றான்.

ஈ என வெறுப்பாக சிரித்தவள், “இனிமே எப்பவும் எனக்கு ஹேப்பி மார்னிங்தான் சார்” என்றாள்.

அவன் அமரும் படி சொன்ன பின்னரே அமர்ந்தவள் கைப்பை திறந்து கடிதத்தை எடுத்து கொடுத்தாள். பிரித்துப் பார்த்து சில நொடிகள் பார்வையிட்டவன், “குட் டெஸிஸன், இனிமே இங்க நீ எம்ப்ளாயி இல்லை. அதுவும் அந்த ஃப்ரீ பிளாக்ல போய்” என்றான்.

சலிப்பும் எரிச்சலுமாக பார்த்த மலர், “ஒரு வாரம் கழிச்சு வந்து என் முடிவை சொல்ல சொன்னீங்க, அதுக்காக வந்தேன். என் முடிவுல இப்பவும் மாற்றம் இல்லை. நான் இங்கேருந்து ரிலீவ் ஆகிக்கிறேன்” என்றாள்.

“நீ என்னை விட ஃபாஸ்ட்தான், மூணு நாள் டைம் மிச்சம் ஆகிடுச்சு”

“நான் கிளம்பலாமா சார்? மிச்ச விஷயங்கள் ஹெச் ஆர் ல பேசிக்கிறேன்”

“வெயிட் வெயிட், என்ன அவசரம்?” என்றவன் டாட்டூவை காட்டினான்.

கண்களை விரித்துக் கொண்டு பார்த்தவள், “எவ்ளோ தைரியம் இருந்தா என் பெர்மிஸன் இல்லாம இப்படி… உன்னை…” பற்களை நெறித்து அவன் கழுத்தை நெறிப்பது போல் கைகளை வைத்தாள்.

“என்ன தமன் இது? என் லவ் எவ்ளோ டீப்னு தெரிஞ்சுக்குவா பார்த்தா வயலன்ட்டா பிஹேவ் பண்றா? கூலா ஏதாவது குடிக்க அரேஞ் பண்ணு” என்றவன் அவளது முகத்தை பார்த்துக் கொண்டே தன் தோளில் இருந்த அவளது முகத்தை வருடிக் கொடுத்தான்.

அவளுக்கு உடம்பெல்லாம் எரிவது போலிருக்க, “நீ எந்த லெவலுக்கும் போவன்னு தெரிஞ்சதுதான்? கொதிக்கிற எண்ணெய எடுத்து ஊத்தி உன் ஷோல்டரை உரு தெரியாம செய்றேனா இல்லயா பாரு” என கத்தினாள்.

அவன் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருக்க குளிர்ச்சியாக ஏதோ பழ ரசம் வந்தது. கையில் எடுத்த தமன் பவ்யமாக அவளிடம் நீட்ட, “மேனர்ஸோட நடந்துக்கணும்னு நினைக்கிறேன். தள்ளிப் போகலைனா உங்க மூஞ்சில எடுத்து ஊத்திடுவேன்” என்றாள்.

தமன் பாவமாக பிரவாகனை பார்க்க, உதடுகளில் நெளிந்த புன்னகையோடு ‘தள்ளிப் போ’ என கண்களால் சொல்லி தமனை அவளிடமிருந்து காப்பாற்றினான்.

“நீ பண்ற லூஸுத்தனத்தையெல்லாம் பார்த்து ஏமாந்து போற அளவுக்கு என் மண்டைல களி மண்ணு உற்பத்தி ஆகிட்டு இல்லை. நான் வர்றேன், உயிர் போற அளவுக்கு ஆபத்துன்னாலும் இங்க மட்டும் வந்திட மாட்டேன்” என சொல்லி வேகமாக எழுந்து நின்றாள்.

“தமன்…” என அழுத்தமாக அவன் அழைக்க, “சார்…” பவ்யமாக சொன்னான் தமன்.

“என் சகலை எங்க இருக்கான்?” என பிரவா கேட்க, நகராமல் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள் மலர்.

அகிலாவின் கணவன் விமல் சென்னையில் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை சொன்னான் தமன்.

“அங்க மட்டுமில்லை எங்கேயும் அவனை வேலை பார்க்க முடியாத படி செய்ய முடியுமா?” என மலரை அர்த்தமாக பார்த்துக் கொண்டே கேட்டான் பிரவா.

“முடியாம என்னங்க சார்? கோட் ஆஃப் கான்டக்ட்ஸ் (code of conducts – நடத்தை நெறிமுறைகள்) ல எதையாவது மீறினதா டிஸிப்பிளனரி ஆக்ஷன்ல பிளாக் லிஸ்ட் பண்ணி டெர்மினிட் செய்திட்டா எங்கேயும் வேலை கிடைக்காதுங்க சார்” என்றான் தமன்.

திட்டுகிட்ட மலர் பிரவாகனிடமிருந்த பார்வையை தமனிடம் வைத்தாள். தலை குனிந்து கொண்டவன், “சார் சொல்றதுக்கு சரின்னு சொல்லிட்டா இப்படிலாம் நடக்காதுங்க மேடம்” என்றான்.

“ச்சீ… வெக்கமா இல்லை உங்களுக்கெல்லாம்?” சீறினாள் மலர்.

“ரியாக்ஷனை குறை மலர், இன்னும் இருக்கு” என்ற பிரவா, “தமன்… என் மச்சானுக்கு நீட் எக்ஸாம் எப்போ வருது?” எனக் கேட்டான்.

தேதி சொன்ன தமன், “போன முறை பாஸ் ஆகல, இந்த முறை எழுத முடியாமலே போகலாம்” என்றான்.

ஆங்காரத்தோடு மேசையில் ஓங்கி தட்டியவள், “மனசாட்சிங்கிறதே கிடையாதா உனக்கு?” எனக் கேட்டாள்.

“மனசாட்சி… ப்ச்… அது இருக்கான்னு தெரியலை மலர், ஆனா மனசு பூரா நீதான் இருக்க. நீ கிடைக்கணும்னா என்ன வேணா செய்வேன்… பிகாஸ்… ஐ லவ் யூ ஸோ மச்” என்றான்.

“நீ இப்படி மிரட்டுறேன்னு உன் அம்மா அக்காட்ட எல்லாம் சொல்வேன். மீடியாக்கு இன்டர்வியூ கொடுப்பேன்” என்றாள்.

“நீ செய்வேன்னு எனக்கு தெரியாதா? எதுவும் என்னை தடுத்து நிறுத்த முடியாது. டெஸ்ட் பண்ணி பார்க்கிறதுன்னா பார்” என்றவனை கேவலமாக பார்த்தவள், தொய்ந்து அமர்ந்து விட்டாள்.

எதையும் செய்யும் வல்லமை படைத்தவன் என்ற உண்மை பயப்படுத்த, பொங்கிய அழுகையை அடக்கிக் கொண்டாள்.

“என் மாமனார் கால்நடை மருத்துவர் இருக்காரே… நல்லா இருக்காரா தமன்?” எனக் கேட்டான் பிரவாகன்.

“இப்போ நல்லா இருக்கார் சார், காட்டு விலங்குகளை இல்லீகலா கடத்தி விக்கிறவங்களுக்கு அந்த அனிமல்ஸை பிரசர்வ் செய்ய ஹெல்ப் பண்ணின குற்றத்துக்காக அரெஸ்ட் ஆனதுக்கப்புறம் எப்படி இருப்பார்னு தெரியலை சார்” என்றான்.

மேசையில் இருந்த ஏதோ கோப்புகளை எடுத்து பிரவாகன் மீது வீசியெறிந்து, “அப்படி என்னடா என்னைத்தான் உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? நீ செய்றதுக்கு பேர் லவ்வாடா?” எனக் கேட்டு ஒரு கையால் தலையை பிடித்துக்கொண்டவள் அழுதே விட்டாள்.

தமன் அவளை பாவமாக பார்க்க, இறுக்கமடைந்த பிரவாகன் அவனை வெளியே போக சொல்லி பார்வையால் உத்தரவிட்டான்.

 தமன் வெளியேறியதும் எழுந்து அவளருகில் வந்து நின்ற பிரவாகன், “நாம மட்டும் இருக்கும் போது எவ்ளோ கேவலமா வேணும்னாலும் திட்டு, தேர்ட் பெர்சன் முன்னால இதென்ன அடா புடாங்கிற? மத்தவங்க முன்னாடி எனக்கு மரியாதை முக்கியம் மலர்?” என்றான்.

அவள் அழுகை கூடிக் கொண்டே போக தொடர்ந்து பேசினான். “ஏன் இப்படி கஷ்ட படணும்? எனக்கு தேவை நீ என் வைஃப் ஆகணும், அவ்ளோதான். பிராமிஸ்… உன்னை கஷ்ட படுத்த கல்யாணம் செய்ய நினைக்கல…” பேசிக் கொண்டிருந்தவனை கோவமாக பார்த்து தடை செய்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement