Advertisement

பேரன்பு பிரவாகம் -11

அத்தியாயம் -11(1)

யாராக இருப்பாள் மிருணாளினி? ஏதேனும் தூரத்து உறவாக இருக்க கூடுமோ? ஸ்வேதா அண்ணியின் உறவோ? மலருக்கு தெரிந்த பெண்ணா? பலவிதமாக சிந்தித்தும் விஷ்ணுவால் அவள் யாரென கண்டு பிடிக்க முடியவில்லை. நடு இரவு தாண்டி உறங்கி அதிகாலையில் விழித்து நன்றாக விடிவதற்காக காத்திருந்தவன் அவளுக்கு அழைத்து விட்டான்.

உறக்கம் கலையாத குரலில், “குட் மார்னிங் டாக்டர்” என்றாள் மிருணா.

பதில் வணக்கம் சொன்னவன், குழந்தையை அவளது தாயிடம் ஒப்படைத்து விட்டாளா வேறு தொந்தரவுகள் இல்லையே என கேட்டறிந்து கொண்டான்.

பதில் சொன்னவள், “இவ்ளோ காலைல கூப்பிட்டிருக்கீங்க, நிஜமாவே தூக்கம் போய்டுச்சா என்ன?” எனக் கேட்டாள்.

 “தூக்கம்தான் போச்சு, என் வேலையையாவது ஒழுங்கா செய்ய விடுறீங்களா? எனக் கேட்டான்.

ம் என இழுத்தவள் மனது வைத்தவளாக, “ஓகே, இன்னொரு க்ளூ தர்றேன் கண்டுபிடிங்க. என்னை என் தாத்தாவோட ஒரே பொண்ணும் அந்த பொண்ணோட பையனும் தாத்தா மனைவியோட தங்கையோட பேரன் குடும்பத்துல உறவா ஆக்க பார்த்தாங்க. இப்பவும் தெரியலைன்னா எட்டு மணிக்கு ஜிம் க்கு வாங்க. சொல்றேன்” என சொல்லி வைத்து விட்டாள்.

பல முறை அவள் சொன்னதை மனதில் ஓட்டிப் பார்த்த பின்னர்தான் பிரவாகனின் தங்கையோ என்ற சந்தேகம் எழுந்தது. தெளிவு பெற வேண்டி அவனது அம்மவுக்கு அழைத்தான். தேவகியின் கைப்பேசி சைலன்ட்டில் இருந்ததால் அவரால் அந்த நேரம் இவனது அழைப்பை ஏற்க முடியாமல் போனது.

அவளாக இருக்காது, அவளிடமே கேட்டு விடுகிறேன் என நினைத்தவன் தயாராகி அப்பார்ட்மெண்ட் உள்ளேயே இருக்கும் ஜிம் சென்றான். முன்னரே வந்திருந்தவள் உடற்பயிற்சி முடித்து வியர்வை வழிய இவனை நோக்கி வந்தாள்.

உடற்பயிற்சி கூடத்தில் வைத்து என்ன பேசுவது என நினைத்தவன் வெளியில் காத்திருப்பதாக சைகையில் சொல்லி செல்ல, அவளும் வெளியில் வந்தாள்.

அப்போதுதான் மகனின் தவறிய கைப்பேசி அழைப்பை கண்ட தேவகி அவனுக்கு அழைத்தார்.

அம்மாவிடம் பேசியவன், “அப்பா அவர் அக்கா பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ண பார்த்தாரே… அந்த பொண்ணு பேர் என்னம்மா? எங்க இருக்கு அந்த பொண்ணு?” எனக் கேட்டான்.

அவனுக்கு பின்னால் நின்றிருந்த மிருணாவுக்கு அப்போதுதான் தனது பெயர் படிப்பு என எந்த விவரமும் இவனுக்கு தெரியவில்லை என்பது தெரிந்தது.

“இப்போ ஏன் டா அதை கேட்குற?” எனக் கேட்டார் தேவகி.

“எதுக்கு கேட்பாங்க? தெரிஞ்சுக்கத்தான், சொல்லும்மா” என அவசர படுத்தினான்.

“அந்த பொண்ணு சென்னைல இருக்கு. அது பேர்… நல்ல பேருடா… தொண்டை குழில நிக்குது டக்குன்னு வர மாட்டேங்குது… பேரு…”

“என்னம்மா நீ, ஒரு பேர் ஞாபகம் வச்சுக்க மாட்டியா?” எரிச்சலாக கேட்டவன், “மிருணாளினியா?” என உள்ளே போன குரலில் கேட்டான்.

தேவகி ஆமாம் என்பதற்குள், “டவுட் வேணாம் டாக்டர், நான்தான் அது” என்றாள் மிருணா.

திரும்பிய விஷ்ணு அதிர்வோடு மிருணாவை பார்த்துக் கொண்டே, அம்மாவிடம் பின்னர் பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்தான்.

“என் போட்டோவை யாரும் காட்டலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“நான் பார்க்க விருப்ப படல” என்றவன் தனக்குள் பரவிய ஏமாற்றத்தை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

மெலிதாக சிரித்தவள், “ஸோ… மிருணாவை பிடிக்குதா இல்லையாங்கிற கேள்வியே உங்ககிட்ட யாரும் கேட்கலை. அன்பு ஹாஸ்பிடல் ஓனர் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமான்னு மட்டும்தான் கேட்ருக்காங்க, அப்படித்தானே?” எனக் கேட்டாள்.

“அப்படியும் இல்லை, ப்யூர் மெரைட்டல் பிஸ்னஸ் (அப்பட்டமான திருமண வியாபாரம்) பேசினாங்க”

“என் தவறில்லை அதுன்னு உங்களுக்கு தெரியாதில்ல? இப்ப தெரிஞ்சுக்கோங்க. என்ன காரணம் சொல்லி என்னை நீங்க வேணாம்னு சொன்னீங்களோ அதுக்காகவே உங்களை ரொம்ப பிடிச்சது” என நேரடியாக அவள் சொல்ல, தன்னை மீறி உள்ளத்தில் பெருகும் உற்சாகத்தை வெளியில் காட்டாமல் மறைக்க திணறினான்.

“ஏதாவது பேசுங்க டாக்டர்” என்றாள்.

“உங்களை இப்படி இங்க மீட் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. மேரேஜ் ப்ரொபோஸலை நான் மறுத்திட்டு வந்தது உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி. எனக்கு டைம் ஆகிடுச்சு, வர்றேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தான்.

மிருணாவுக்கு மனம் வலித்ததுதான், ஆனால் அவனை தொடர்ந்து செல்ல முற்படாமல் அவளது வீடு இருக்கும் பிளாக் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வீடு வந்த விஷ்ணுவுக்கு உற்சாகமெல்லாம் வடிந்திருக்க இரவில் சரியாக உறங்காமல் போனதின் சோர்வை இப்போதுதான் உணர முடிந்தது.

அவசர அழைப்பு வந்து நேற்றைக்கும் முந்தைய இரவில் மருத்துவமனை சென்றதால் நேற்று வீட்டில்தான் ஓய்வாக இருந்தான். இன்று மருத்துவமனை புறப்பட நேரமாகி விட்டதை உணர்ந்தவன் காலை உணவை கடமையாக கொறித்தான்.

மிருணாவின் முகம் மனதை விட்டு மறைய மறுத்தது. இன்னும் கொஞ்சம் விளக்கமாக தன் மனநிலை பற்றி கூறி நல்ல விதமாக சொல்லி வந்திருக்கலாமோ என தோன்றியது.

அபார்ட்மென்ட் வாயிலுக்கு வந்தவன் கேப் புக் செய்ய எதுவும் புக் ஆகவில்லை. இங்கு வரும் வழியில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் இரு சக்கர வாகனகங்கள் மட்டுமே செல்ல முடிகிறது என விவரம் சொன்னார் செக்யூரிட்டி.

எப்படி செல்வது என விஷ்ணு யோசிக்க, “ரெண்டு மணி நேரத்துல கிளியர் பண்ணிடுவாங்களாம் சார், அவசரம்னா டூ வீலர்ல போற யார் கூடவாவது லிஃப்ட் கேட்டு போய்டுங்க. வழியில எங்கேருந்தாவது கேப் புக் பண்ணிக்கோங்க” என்றார் செக்யூரிடி.

விஷ்ணுவும் சரிதான் யாராவது வருகிறார்களா பார்ப்போம் என காத்திருக்க ராயல் என்ஃபீல்டில் வந்தாள் மிருணா. ஆச்சர்யமாக பார்த்தவன் இப்போது இவளிடம் எப்படி உதவி கேட்பது என நினைத்து அமைதியாக நிற்க வண்டியை அவனது பக்கமாக நிறுத்தி விட்டாள் அவள்.

“வாங்க டாக்டர், நான் ட்ராப் பண்றேன். பொக்லைன் வச்சு தண்ணிய அள்ளி ஊத்திட்டு இருக்காங்களாம். நாளைக்குள்ள சரி பண்ணிடுவாங்களாங்கிறதே டவுட்தான்” என்றாள்.

அவள் பேச்சில் சிரித்தவன், “கேட்டதுக்கு தேங்க்ஸ், உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என சொல்லி அவளது உதவியை மறுத்தான்.

“நேத்து நீங்க ஃபீஸ் வாங்காததுக்கு பதில் ஹெல்ப்னு வச்சுக்கோங்க. நமக்குள்ள ஒண்ணுமே இல்லைனு ஆனதுக்கு அப்பறம் எந்த கடனும் நாம வச்சுக்க வேணாமே” என கிண்டலாக சொன்னாள்.

அவன் அப்போதும் தயங்கிய படி நிற்க, “ஓஓ…” என சொல்லி ஹெல்மெட் கழட்டியவள், “நீங்களே ஓட்டுங்க, நான் பின்னால உட்காருறேன்” என்றாள்.

“சேச்ச… பொண்ணுங்க பின்னால உட்கார்ந்து வரக்கூடாதுன்னு நினைக்கிறவன் இல்லை நான்”

“கூட வந்தா வேற எதுவும் நினைப்பேன்னு நினைக்குறீங்களா?”

“இப்படி இன்டைரக்டா கேட்டா?”

“சரி டைரக்ட்டாவே கேட்கவா?”

ஏதேனும் அவள் கேட்டு தான் ஏதாவது சொல்லி இன்னும் அவளது மனம் உடைக்கும் தைரியம் இல்லாத காரணத்தால், “டைம் ஆகிடுச்சு, உங்க கூடவே வர்றேன்” என்றான்.

மேடு பள்ளங்களில் பயமின்றி வண்டியை செலுத்தியவளை, “செமங்க, சூப்பரா ஓட்டுறீங்க” என்றான்.

“உங்களை அப்படியொண்ணும் ஓட்டலைங்களே டாக்டர்”

“ஹ ஹ… நல்லாவும் பேசுறீங்க. ஆனா வரிக்கு வரி டாக்டர் சொல்லாதீங்க. என் பேர் தெரியும்தானே?”

“உங்களை மாதிரி இல்லை நான், எல்லா விவரமும் தெரியும். மிருணாளினிங்கிற பேருக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?”

“நான் ஒண்ணு சொன்னா நீங்க வேற கேட்குறீங்க. மிருணாளினி நல்ல பேர், அர்த்தம் என்னன்னு இப்ப சொல்றேன்” என்றவன் கைப்பேசி எடுத்து ஆராய்ந்து விட்டு, “மஹாலட்சுமி, தாமரை இப்படி அர்த்தம் இருக்கு” என சொல்லி உடனே அமைதியானான்.

“பேர் பொருத்தம் பார்த்தீங்களா? பேர்லேருந்து இப்ப மீட் பண்ணிகிறதுன்னு எல்லாமே கோ இன்சிடெண்ட்தான்னு உங்களுக்கு தோணுதா?”

“வேற வழில போறீங்க” என்றான்.

“எந்த வழில போனா என்ன… போக வேண்டிய இடம் வந்தா உங்களுக்கு சரிதானே?”

“வேணாம், இங்கேயே இறக்கி விடுங்க. கேப் புக் செய்துக்குறேன், என்னால உங்களுக்கு லேட் ஆகிடும்”

“அது என்னோட கவலை, முடிஞ்சா நீங்களே புல்லட்லேருந்து குதிச்சிடுங்க” என்றவள் வண்டியின் வேகத்தை அதிக படுத்தினாள்.

“அதி வேகம் உயிர் குடிக்கும்!”

“மனசுல உள்ளதை சொல்லாம விட்டா கூட அப்படித்தான்” என்றவள் வேகத்தை மிதமாக்கினாள்.

“என்னை பத்தின டீடெயில்ஸ் சொல்லிருப்பாங்க, போட்டோ பார்த்திருப்பீங்க. அவ்ளோதானே? ஜஸ்ட் மூவ் ஆன் மிருணாளினி”

“ஆசை பட்டதை அடைய முடிஞ்ச அளவுக்கு கடுமையா முயற்சி செய்யணும்னு நினைக்கிறவ நான்”

“ஒரே ஒருத்தரோட ஆசையால மட்டும் ரெண்டு பேர் லைஃப்ல இணைய முடியாது” என அவன் சொல்ல, அதற்கு பின் அவள் எதுவும் பேசவில்லை.

மருத்துவமனை வந்ததும் வண்டியை நிறுத்தியவள், “இந்த மிருணாளினி வேணாமா?” எனக் கேட்டாள்.

 இறங்கிக் கொண்டவன், “மிருணாளினிய வேணாம்னு சொல்லலை, கண்ணு முன்னாடி இப்ப நிக்கிற பொண்ண வியப்பா மரியாதையா பார்க்கிறேன். அந்த பொண்ணுக்கு பின்னால இருக்கிற எனக்கு பிடிக்காத சில விஷயங்களைதான் நான் வேணாம்னு சொல்றேன். உங்களோட இலவச இணைப்பா ஏதேதோ கொடுத்து என் சுய அடையாளத்தையும் தன்மானத்தையும் விலையா கேட்டா என்ன சொல்லணும் நான்? சரின்னு சொன்னா உங்களுக்கு ஓகேவா?” எனக் கேட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement