Advertisement

பேரன்பு பிரவாகம் -1

அத்தியாயம் -1(1)

கோவையில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் மீட்டிங் ஹாலில் இருந்தான் பிரவாகன். இருபத்தொன்பது வயது என்றாலும் அமைதியும் ஆளுமையுமாக அந்த கூட்டத்தின் தலைமையாக கம்பீரமாக அமர்ந்திருந்தான்.

அவனும் சில முக்கியமான நிர்வாகிகளும் மேடையில் இருக்க கீழே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

ஜே சி ஐ அங்கீகாரம் பெற தயாராகிக் கொண்டிருக்கிறது மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அந்த மருத்துவமனை. அதற்காக ஒரு குழு அமெரிக்காவிலிருந்து இங்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளும். அவர்கள் சொல்லும் விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடை பிடித்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். இந்தியாவில் அத்தகைய அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறைவே.

இன்னும் ஒரு வருடத்தில் ஆய்வு நடைபெற இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னரே அதற்கான பயிற்சிகள் வேலைகள் என அனைத்தும் ஆரம்பமாகி விட்டன. அதை பற்றி கலந்தாலோசிக்க நடைபெறும் கூட்டம் இது.

எண்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கும் அந்த கேம்பஸ் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். மருத்துவக் கல்லூரியுடன் இயங்கும் அந்த மருத்துவமனையை எம் பி ஏ படித்திருக்கும் பிரவாகன் மிகவும் திறம்பட நடத்துகிறான்.

வளாகத்தின் முன் பக்கத்தில் இரு பெரிய கட்டிடங்கள் காணப் பட்டன. இரண்டுமே ஏழு மாடிக் கட்டிடங்கள். இவையிரண்டும் பணம் செலுத்தி மருத்துவம் பார்ப்பவர்களுக்கானது.

இதன் இடப்பக்க பக்கவாட்டு பகுதி வழியே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இடப்பக்கமாக இன்னொரு வழி பிரியும். அங்கே சற்று தூரம் நடந்து சென்றால் ஐந்து மாடிக் கட்டிடத்தில் இலவச மருத்துவம் பார்ப்பவர்களுக்காக ஒரு தனி மருத்துவமனை உள்ளது.

பிரதான கட்டிடத்தின் வலப் பக்கமாக சென்றால் பல் மருத்துவமனை தனியாக இருந்தது. இன்னும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அங்கு வேலை செய்யும் செவிலியர்களுக்கான இலவச தங்கும் விடுதி. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நர்சிங், பார்மஸி, பிஸியோதெரபி கல்லூரிகள்.

வளாகத்தின் உள்ளேயே இரண்டு கோயில்கள், உணவகம், நூலகம், மிகப்பெரிய ஆடிட்டோரியம், குழந்தைகளுக்கான பார்க், சூப்பர் மார்க்கெட் என அனைத்து வசதிகளும் இருந்தன.

 மருத்துவமனையின் எதிர் புறத்தில் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் அதில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் என இருந்தன.

பல வருடங்களாக இயங்கி வரும் பெரிய நிறுவனம் அது. இப்போது பிரவாகன்தான் அனைத்தையும் பார்க்கிறான். திறமையான நிர்வாகிகள் இருக்க அவர்கள் அனைவரும் இவனுக்கு கீழ் படிந்து செயல்பட வேண்டும்.

இவன் பொறுப்பேற்ற போது இருபத்தினான்கு வயது, சிறியவன் என்பதாலோ என்னவோ சரியாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். சிறியவன் என்றாலும் கடுமை நிறைந்தவன் தயவு தாட்சண்யம் இல்லாதவன் தன் குறியை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டான் என வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டினான்.

அவனை கண்டால் காண்பவர்களை ‘என்ன குறை கண்டு பிடிச்சு திட்டுவானோ?’ என பயந்து அவனது பார்வையில் பட்டு விடாத வண்ணம் ஒளிந்து கொள்ள செய்தான். யாரையாவது அவன் அழைத்தால் அவர்கள் மனதில் ‘ஐயோ கூப்பிட்ருக்கானே என்ன கேட்பானோ, என்ன திட்டுவானோ?’ என்ற தட தடப்பை உருவாக்கியிருந்தான்.

இந்த ஜே சி ஐ உரிமம் பெற இங்குள்ள ஊழியர்களை தயார் படுத்தவென சிறப்புக் குழு அமைக்க பட்டிருந்தது. அதன் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் தோல் நோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பத்மநாதன். பிரவாகனின் தந்தையின் நண்பரும் கூட. கடந்த ஆலோசனை கூட்டத்தில் சொல்லப் பட்ட குறைகளை கலைந்து வேறு என்ன வகையான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன என அவர் எடுத்து கூற பிரவாகன் அமைதியாக இருந்தான்.

அவர் பேசி முடிக்கவும் வேறு யாருக்கும் ஏதேனும் யோசனைகள் இருக்கின்றனவா என கேட்க, சிலர் சில கருத்துக்களை முன் வைத்தனர். சரியாக தோன்றுபவை குறித்து பரிசீலனை செய்வதாக சொன்னான். இன்னும் சில நிமிடங்கள் இது சம்பந்தமாக ஆலோசனை நடந்து பின் அவ்வளவுதான் இனி பேச எதுவுமில்லை என்பதாக கைக்கடிகாரத்தை பார்த்தான் பிரவாகன்.

“எனக்கு சில விஷயங்கள் சொல்லணும்” என ஒரு பெண் குரல் ஒலிக்க யாரென பார்த்தான்.

சுடிதார் அணிந்திருந்தவள் மை தீட்டிய விழிகளும் உயர்த்தி போடப் பட்ட போனி டெயிலுமாக பார்க்க சிறு பெண்ணாக தெரிந்தாள். அவளை புதிதாக பார்த்தது போல இல்லையென்றாலும் யாரென சட்டென அவனால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை. என்னவோ அவளை ‘அதிகப் பிரசங்கி’ என முடிவு கட்டி விட்டான்.

அவன் பார்வை பத்மநாதனிடம் செல்ல அவனது காதோரம் குனிந்தவர், “நம்ம ஹாஸ்பிடல் டாக்டர்தான். ஃப்ரீ பிளாக் டியூட்டி டாக்டர் அன்புமலர். டீச்சிங் டீம்ல இருக்காங்க” என தகவல் தந்தார்.

“ஏன் அங்கிள்? இன்ஸ்பெக்ஷன் ஃப்ரீ பிளாக்ல நடக்க போறது இல்லையே. அங்க உள்ள டாக்டர் இந்த டீமுக்கு அவசியம்தானா?” என அனைவருக்கும் காதில் விழும் விதமாகவே கேட்டான்.

அவன் கேட்ட விதத்தில் சிலர் அன்பு மலரை கிண்டலாக பார்ப்பது போலிருக்க மனதில் பிரவாகனை வறுத்தெடுத்தாலும் வெளியில் காட்டாமல் அமைதியாக இருந்தவள் பத்மநாதனை பார்த்தாள்.

“இன்ஸ்பெக்ஷனுக்கு எல்லாரையும் தயார் படுத்தினாலும் ஹவுஸ்கீப்பீங்ல உள்ளவங்கள ரெடி செய்றது பெரிய சவாலான விஷயமா இருக்கு. வேஸ்ட் மேனேஜ்மெண்ட், பாத்ரூம்ல பேஷண்ட் ஸேஃப்டி பத்தியெல்லாம் அவங்களுக்கு தெரிய வேண்டியது அவசியம் இல்லயா பிரவா?” எனக் கேட்டார் பத்மநாதன்.

அதற்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம் என்பது போல கண்களை சுருக்கிக் கொண்டு கேள்வியாக அவரை பார்த்தான்.

“அவங்களுக்கான டீச்சிங் டீமை இவங்கதான் மேனேஜ் செய்றாங்க பிரவா” என்றார் பத்மநாதன்.

“ஏன் இங்க… ஏற்கனவே இருக்க உங்க டீம்ல வேற டாக்டர்ஸ் இல்லியா?” எனக் கேட்டவன் பார்வை அங்கிருந்தவர்களை சுற்றி வந்து தாரிகாவின் மீது பதிந்தது.

ஜே சி ஐ குழுவினர் தரப் பரிசோதனைக்காக கடை நிலை ஊழியர்கள் வரை அவர்களது செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வை அறிய வேண்டி கேள்விகள் கேட்பார்கள். அடிப்படையான விஷயங்களை மட்டும் அனைவருக்கும் ஒரே வகுப்பாக எடுத்து விடுவது என முன்னரே தீர்மானம் செய்ததுதான்.

 வகுப்புகளை பொறுப்பேற்று நடத்துவது தாரிகாதான்.

பிரவாகன் எதுவும் கேட்கும் முன்னர் அவளே வாய் திறந்தாள். “கிளாஸ் கன்டெண்ட் எல்லாம் ரெடி செய்தது நான்தான். நான் இங்கிலிஷ்ல ரெடி செய்திருக்கேன். பத்மநாதன் சார் தமிழ்ல சொன்னாதான் ஹவுஸ்கீப்பிங் பெர்சன்ஸ்க்கு புரிய வைக்க முடியும்னு சொல்லிட்டார்” என்றாள்.

எழுந்த எரிச்சலை அப்படியே முகத்தில் காட்டிய பிரவாகன், “ஹவுஸ்கீப்பிங்ஸ் எஜுகேஷனல் க்வாலிஃபிகேஷன் தெரியுமா டாக்டர் உங்களுக்கு?” எனக் கேட்டான்.

அவள் அமைதி காக்க, “பத்மா அங்கிள் சொல்றது சரிதானே?” என மீண்டும் கேட்டான்.

“வேற ஸ்டேட் டாக்டர்ஸ் நர்சஸ் கூட இங்க ஒர்க் பண்றாங்க, தமிழ் அவங்களுக்கு புரியாது” என்றாள் தாரிகா.

“ஒண்ணு செய்வோம், தமிழ் இங்கிலிஷ் ரெண்டுலேயுமே கிளாசஸ் அரேஞ் செய்யலாம்” என யோசனை சொன்னான்.

“இதுக்காக கிட்டத்தட்ட ஒன் மன்த் உழைச்சிருக்கேன். திரும்ப தமிழ்ல ரெடி செய்ய என்கிட்ட நேரம் இல்லை. ஆல்ரெடி கிளாஸஸ் போய்கிட்டிருக்கு. மூணு செஷன் முடிஞ்சிடுச்சு” என்றாள் தாரிகா.

பிரவாகன் இப்போது பத்மநாதனைபார்க்க, “பொம்மை மாதிரி உட்கார்ந்து எழுந்திரிச்சு வர்றாங்க ஹவுஸ்கீப்பர்ஸ். வேற சில டெக்ஸியன்ஸுக்கும் அதே நிலைதான்” என்றார்.

இன்னும் சிலரும் அந்த குறையை ஆம் என ஆமோதித்தனர். சம்பந்த பட்டவர்களும் தங்களுக்கு புரியவில்லை என்றனர்.

தான் சிறப்பாக செயல்படுவதாக ஆங்கிலத்தில் கூறினாள் தாரிகா.

“ஒரு கிளாஸ்லேயே எல்லாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. மாதம் ஒரு முறையாவது ரீபிட் செய்திட்டே இருந்தாதான் இன்ஸ்பெக்ஷன் அப்போ எல்லாரும் க்ளாரிடியோட இருப்பாங்க. ஸோ தமிழ்லேயும் ரெடி பண்ணுங்க, ஜே சி ஐ அக்ரிடியேஷன் வாங்குற வரை இங்க யார்கிட்டேர்ந்தும் நேரமில்லை ஒர்க் லோட் அதிகம் அப்படிங்கிற வார்த்தைகள் எதையும் கேட்க விரும்பல நான்” என்ற பிரவாகனை கொஞ்சம் கோவமாக பார்த்தாள் தாரிகா.

“என்ன டாக்டர் தாரிகா… ஏதாவது சொல்லுங்க” என்றான்.

“சாரி சார், எனக்கு தமிழ்னா கஷ்டம்” என்றாள் தாரிகா.

“தாய்மொழி தமிழ்தானே உங்களுக்கு?” இடக்காக கேட்டான்.

“டெர்ம்ஸ் எல்லாம் தமிழ்ல வராது எனக்கு. வேற யார்கிட்டயாவது பொறுப்பு கொடுங்க” என நிர்தாட்சண்யமாக மறுத்தாள். அனைவரும் ஆச்சர்யமாக கூட அவளை பார்த்தனர்.

மருத்துவக் கல்லூரியின் பிரின்ஸிபல் சிதம்பரத்தின் தம்பி மகள்தான் தாரிகா. அவரது முதல் மகன் குகன் பிரவாகனின் அக்கா கீர்த்தியின் கணவன். காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரான தாரிகாவை பிரவாகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என சிதம்பரம் ஆசை பட்டுக் கொண்டிருக்கிறார்.

தாரிகா கொஞ்சம் முன்கோபி, உறவுமுறை என்ற வகையில் பிரவாகனிடம் நன்றாக கொஞ்சம் உரிமையோடு பேசுவாள். அந்த உரிமையில் இன்றும் தன் கோவத்தை வெளிப் படுத்தினாள்.

ஆனால் தன் காரியம் என வந்து விட்டால் பிரவாகன் உறவு முறைக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பவன் கிடையாது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

“பேஷண்ட்ஸ்கிட்ட எந்த மொழில பேசுறீங்க தாரிகா? அவங்க பேசுறதாவது உங்களுக்கு புரியுமா?” ஏளனமாக கேட்டான் பிரவாகன்.

அந்த மீட்டிங் ஹாலில் வெறும் மருத்துவர்கள் மட்டுமில்லை. செவிலியர்கள், வார்டு செகரேட்டரி, ஃபார்மசிஸ்ட், ஃபிசியோதெரபிஸ்ட், ஆய்வக பணியாளர்கள், எக்ஸ் ரே, ஸ்கேன் டெக்னீஷியன்கள், சுகாதார பணியாளர்கள் என அனைத்து பிரிவிலிருந்தும் இருந்தார்கள்.

தாரிகாவுக்கு அவமானமாக இருக்க, “அதுவும் கிளாஸ் எடுக்கிறதும் ஒண்ணு இல்ல சார். எனக்கு லேட் ஆகிடுச்சு, நான் கிளம்பலாமா?” எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement