Advertisement

அத்தியாயம் -10(2)

நண்பனுடன் பேசி விட்டு வந்த மிருணா, “அச்சோ திரும்ப அழறாளே டாக்டர், வேற எதுவும் டெஸ்ட் பண்ணனுமா? ஹாஸ்பிடல் போற மாதிரி இருக்குமா? உங்க ஹாஸ்பிடலேருந்து ஆம்புலன்ஸ் வரவச்சா நாம போய்டலாமா?” என விசாரணை செய்தாள்.

“என்ன அம்மாங்க நீங்க? கவனமா பார்த்துக்க தெரியாதா குழந்தைய?” சீற்றமாக கேட்டான் விஷ்ணு.

“என்னாச்சு டாக்டர், பாப்பாக்கு என்ன?” பதறினாள் மிருணா.

“இதென்ன கொலுசோட இன்னொன்னு போட்ருக்கீங்களே?”

“அதுவா…” அப்போதுதான் குழந்தையின் காலை கவனித்தவள், “பேர் தெரியலையே டாக்டர், வேணும்னா இவ அப்பாகிட்ட கேட்டு சொல்லட்டுமா?” எனக் கேட்டாள்.

முறைத்த விஷ்ணு, “இத ஸேஃபா ரிமூவ் பண்ணனும் உடனே. கழட்ட முடியாத படி டைட்டாவும் நெளிஞ்சு போயும் இருக்கு. இதுதான் குழந்தையை ஹர்ட் பண்ணுது. ஏற்கனவே காயம் ஆகியிருக்கு பாருங்க” என சொல்லி அதனை அகற்றுவதற்காக செயல் பட துவங்கினான்.

மென்மையான துணி கொண்டு குழந்தையின் காலுக்கு சேதம் வராமல் பாதுகாப்பு செய்து கொண்டவன் டூல்ஸ் பாக்ஸில் இருந்த வெட்டிடுக்கி (cutting plier) கொண்டு நுணுக்கமாக அந்த மெல்லிய தண்டையை நறுக்கி காலிலிருந்து நீக்கினான். பின் கொலுசையும் கழட்டி விட்டான்.

அந்த தண்டையில் பிசிறு இருந்திருக்க அதுதான் குழந்தையின் காலில் காயம் ஏற்படுத்தியிருந்தது. காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டவன் அடுத்த காலில் இருந்த கொலுசையும் தண்டையையும் அகற்றி அனைத்தையும் மிருணாவின் கையில் கொடுத்தான்.

சோர்ந்திருந்த குழந்தையை பார்த்தவன், “எப்போ லாஸ்ட்டா ஃபீட் பண்ணுனீங்க பேபிக்கு? ரொம்ப லெதார்ஜிக்கா இருக்கு பேபி” என்றான்.

“அது க்ரட்ச்ல பன்னெண்டு மணி போல செராலாக் கொடுத்தாங்களாம். சரியா சாப்பிடலைன்னு சொன்னாங்க டாக்டர். வழில நான் தண்ணீ பால்னு கொடுக்க ட்ரை பண்ணினேன், எதுவும் குடிக்கல” என்றாள் மிருணா.

“டயப்பர் எப்ப போட்டது? ஹெவியா இருக்கு” என்றான்.

“டைம்லாம் தெரியலை டாக்டர், அதுவும் க்ரட்ச்ல போட்டதாதான் இருக்கணும்”

வேறு பக்கமாக திரும்பி பெரிய மூச்சை வெளியேற்றியவன், “இப்படி ஒரு அம்மாவை இதான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றேன். சரியா சாப்பாடு கொடுக்கலை, டயப்பர் சேஞ்ச் பண்ணனும்னு கவனம் இல்ல. இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி ம்மா? குழந்தை வளர்ப்புங்கிறது விளையாட்டு இல்ல. பேபி மேல பாசம் இருந்தா மட்டும் போதுமா? ஒழுங்கா கவனிக்க வேண்டாமா?” எனக் கேட்டான்.

“ஆமாம் டாக்டர், கண்டிப்பா குழந்தையோட பேரெண்ட்ஸ்கிட்ட சொல்லிடுறேன்” என்றாள் மிருணா.

“வாட்?”

“என் ஃபிரெண்ட்டோட பேபி” என்றவள் சுருக்கமாக விவரம் சொன்னாள்.

“ஓ சாரி, நீங்கதான் அம்மான்னு நினைச்சிட்டேன். வந்த உடனே சொல்றதுக்கு என்ன?”

“பாப்பா பத்தின கவலைல உங்ககிட்ட என்ன சொன்னேன்னே தெரியலை” என்றவளுக்கு தன்னை யாரென சுத்தமாக அவனுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது விளங்கியது.

“அது… நானாவது கேட்ருக்கணும். உங்களை குழந்தையோட பார்க்கவும்… ரியலி சாரி” என்றான்.

“இட்ஸ் ஓகே டாக்டர், பை த வே ஆம் அன்மேரிட்” என்றாள்.

“ஓகே, குழந்தைக்கு ஏதாவது சாப்பிட கொடுக்கணும் இப்போ” என்றான்.

“பேபி திங்ஸ் இருக்க பேக் இருக்கு. நான் சாய்கிட்ட கேட்டு என்ன கொடுக்கணும்னு…”

“டைம் இல்ல மேடம். பேகை ஓபன் பண்ணுங்க” என்றான்.

குழந்தைக்கு தேவையான உணவு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் ஆடைகள், டயப்பர் என எல்லாம் இருந்தது.

“ஃபர்ஸ்ட் டயபர் சேஞ்ச் பண்ணுங்க” என்றான்.

தலையாட்டிக் கொண்டவள் வேகமாக பேகிலிருந்து டயபர் வெளியே எடுத்து வைத்துக்கொண்டு கைப்பேசி எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.

“என்னங்க செய்றீங்க?” என எரிச்சலாக கேட்டான்.

“டயபர் எப்படி மாத்துறதுன்னு வீடியோ பார்த்திட்டேன்னா கரெக்ட்டா சேஞ்ச் செஞ்சிடுவேன் டாக்டர்”

“ஒரு குழந்தைக்கு டயபர் சேஞ்ச் பண்ண தெரியாதா? உங்களுக்கு மேரேஜ் ஆகாட்டாலும் உங்க சொந்தத்துல எந்த குழந்தைக்கும் சேஞ்ச் பண்ணினது பார்த்தது இல்லியா?” கேட்டுக் கொண்டே அவனே குழந்தையின் டயப்பரை அவிழ்த்து விட்டு ஈர டிஸ்யூ கொண்டு சுத்தம் செய்தான்.

அவளுக்கு சங்கடமாகி போக, “நிஜமா எனக்கு தெரியாது டாக்டர், உங்களுக்கு நிறைய சிரமம்” என்றாள்.

புன்னகை மட்டும் செய்தவன், “அவசரத்துக்கு டிஸ்யூ யூஸ் பண்றேன், தண்ணில வாஷ் பண்றதுதான் நல்லதுன்னு குழந்தையோட அம்மாகிட்ட சொல்லுங்க” என சொல்லிக் கொண்டே குழந்தைக்கு புதிய டயபரை லாவகமாக மாற்றி விட்டான்.

“என் அக்காவுக்கு மூணு பசங்க இருக்காங்க, ஆனா இதெல்லாம் நான் பார்த்தது இல்லை, கொஞ்ச மட்டும்தான் செஞ்சிருக்கேன். தெரிஞ்சுக்காம போனதுக்காக இப்போ ஃபீல் பண்றேன்” என்றாள்.

“அம்மா ஆனா எல்லா பெண்களுக்கும் எல்லாமே தெரிய வந்திடும். அதுக்காக ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை” சொல்லிக் கொண்டே எழுந்து சென்றவன் கைகளை சுத்தம் செய்து கொண்டு வந்தான்.

பையிலிருந்த மற்ற பொருட்களை கடை பரப்பி வைத்தவள் சோர்வாக சிணுங்கிய ஹாசினியை மடியில் எடுத்து வைத்து அணைவாக பிடித்துக்கொண்டாள்.

குழந்தையின் ஃபீடிங் பாட்டிலை பார்த்தவன், “இது எப்போ கலந்த பால்?” எனக் கேட்டான்.

“அது…” என்றவளின் பார்வையில் கண்டனமாக பார்த்தவன் இட வலமாக தலையசைத்து அதிருப்தியை வெளிப் படுத்தினான்.

“நான் ஜீரோ, ப்ளீஸ் நீங்களே ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்” என்றாள்.

“இதுவும் எவ்ளோ சுத்தமா இருக்குனு தெரியலை. பேபியோட கால்ல இருக்க காயத்தால ஃபீவர் வர்ற வாய்ப்பு கூட இருக்கு. எதுக்கும் ஒரு முறை பாட்டிலை ஸ்டெரலைஸ் பண்ணிட்டு பால் ரெடி செய்யலாம்” என்றான்.

“பாப்பா பாவம் டாக்டர், பசிக்கும்ல டாக்டர், எவ்ளோ நேரம் பசி தாங்குவா? வேற சொலூஷன் இல்லயா?” குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டாள்.

ஒன்றும் சொல்லாமல் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு சமையலறை சென்றவன் சில நிமிடங்களில் ரசம் சாதம் ஒரு கிண்ணத்திலும் வெந்நீர் ஒரு டம்ளரில் ஸ்பூன் போட்டும் எடுத்து வந்தான்.

“நல்ல குழைவா இருக்கு, ஊட்டி விடுங்க. பாட்டில் ஸ்டெரலைஸ் ஆகிட்டிருக்கு” என்றான்.

மிருணாவும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஊட்டலாம் என நினைக்க, அவளால் ஒரு கையால் மட்டும் குழந்தையை பிடித்துக்கொள்ள முடியவில்லை, அவளுக்கு தெரியவில்லை.

விஷ்ணுவுக்கு சிரிப்பு வந்து விட்டது. அவனே குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டான்.

உணவுக் கிண்ணத்தை மிருணாவின் கையில் வைத்துக்கொள்ள செய்தவன், கைகளால் சொடக்குகள் போட்டு குழந்தையின் கவனத்தை ஈர்த்தான்.

வாயை குவித்து நாக்கை மேலண்ணத்தில் மோதி ‘டொக் டொக்’ ‘உல்லுலுலூ…’ என்றெல்லாம் சத்தம் செய்து கொண்டே முதலில் சிறிதளவு தண்ணீர் புகட்டியவன் பின் ஒரு ஸ்பூன் உணவினை குழந்தைக்கு ஊட்டினான்.

முதல் வாய் உணவை மட்டும் சாப்பிட்ட குழந்தை அடுத்த இரண்டு வாய் உணவையும் சாப்பிட மாட்டேன் என்பது போல் உதடுகள் பிதுக்கி உணவை வெளியே தள்ளியது. வாயை சுத்தம் செய்து விட்டவன் குடிக்க தண்ணீர் கொடுத்தான்.

“பேபிக்கு ரசம் பிடிக்காதா? வேற என்ன பிடிக்கும்? மழைய வேடிக்கை பார்ப்பீங்களா?” என கேட்டுக் கொண்டே பால்கனி தூக்கி சென்றான். உணவுக் கிண்ணம் மற்றும் தண்ணீருடன் அவனை வால் பிடித்துக்கொண்டு சென்றாள் மிருணா.

குழந்தைக்கு சமீபத்தில்தான் மொட்டை போட்டு காது குத்தியிருந்தார்கள். பொம்மை போல அத்தனை அழகு, அழுத முகத்தில் இப்போது தெரியும் சிரிப்பு கடவுளை உணர வைப்பது போல மிருணாளிக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்த குழந்தையை தூக்கி வைத்திருந்தவனோ ஆழ் மனதை வெகுவாக பாதித்தான்.

அவன் குழந்தையை கையாளும் விதம் பார்க்க பார்க்க திகட்டவில்லை.

மனதிற்கு பிடித்ததால் வசீகரமாக தெரிகிறானா அல்லது நிஜமாகவே அப்படித்தானோ. குழந்தையை கொஞ்சி கொஞ்சி குறையாத சிரிப்போடு உணவூட்டும் அந்த அழகு காட்சி அவளது மனதில் பொக்கிஷமாக பதிந்து போனது.

ரசனை மிகுந்தவர் படித்த பொருள் பொதிந்த எளிய கவிதை போல, சோகமான தனிமையில் மனம் விரும்பும் இனிய பாடல் போல, தொலை தூர பயணம் முடித்த பறவைக்கு நிம்மதி தரும் சொந்த கூட்டை போல அந்த காட்சி அவளை உணர வைத்தது.

தங்களுக்கும் குழந்தை பிறந்தால் இப்படித்தான் பார்த்துக் கொள்வானோ என நினைத்தவள் சட்டென அதிர்ந்து போனாள்.

தன் நினைப்பை மீண்டும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டவளுக்கு இனிமையாக, இதமாக, அப்படி நடக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.

கம்பிகள் வழியே கையை வெளியே நீட்டி மழை நீரில் விளையாடினாள் ஹாசினி. சிரமமே இல்லாமல் குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்து விட்டான் விஷ்ணு.

“ஆச்சுங்க, அந்த கிண்ணத்தை எல்லாம் வச்சிட்டு வந்து குழந்தைய பிடிங்க” என்றதும்தான் சுயநினைவுக்கு வந்தாள்.

பாட்டில் கொண்டு வந்து கொடுத்தவன் எப்படி பால் தயாரிக்க வேண்டும் என ஒரு முறை விளக்கி, “நான் இங்கதான் இருப்பேன், ஃபீவர் வந்தா கூப்பிடுங்க” என்றான்.

தலையாட்டிக் கொண்டவள் சாய்’யின் கைப்பேசி அழைப்புக்கு பதில் சொல்லிய பின், “ஃபீஸ் டாக்டர்?” எனக் கேட்டாள்.

உதவி இயக்குனர்களின் சிரமங்கள் பற்றி ஓரளவு தெரியும், குழந்தையின் அப்பாவும் இப்போதுதான் முன்னேற்ற பாதையில் அடி வைத்திருக்கிறான். அவனுக்கு கட்டணம் கேட்கவெல்லாம் மனம் வரவில்லை.

“இருக்கட்டும் ங்க, வேண்டாம்” என்றான்.

வற்புறுத்தி கொடுக்கவும் அவளுக்கு தோன்றவில்லை. அப்படி கட்டணம் கொடுத்தால் அந்நியமாகிப் போவான் என தோன்ற, “தேங்க்ஸ் டாக்டர்” என மட்டும் சொன்னாள்.

வாயில் நோக்கி செல்லப் போனவள் நின்று, “நிஜமாவே என்னை உங்களுக்கு தெரியலையா?” எனக் கேட்டாள்.

“முந்தாநாள் ஹாஸ்பிடல்ல பார்த்தது நல்லா நினைவிருக்கே” என்றான்.

“ப்ச், அதில்ல, அதுக்கு முன்ன என்னை பார்த்திருக்கீங்க” என்றாள்.

அன்பு மருத்துவமனையின் ஓனரின் தங்கை இத்தனை பணிவான, அன்பான, தன் கனவினை நோக்கி பயணிக்கும் பெண்ணாக அவனது கற்பனையில் இருக்கவில்லை. ஆதலால் தனக்கு வரனாக வந்த பிரவாகனின் தங்கை இவள் என்ற எண்ணம் துளியும் அவனுக்கு ஏற்படவில்லை.

“இதென்ன புதிர்? அதுக்கு முன்ன நாம எப்ப மீட் பண்ணியிருக்கோம்?” எனக் கேட்டான்.

“நாம மீட் பண்ணிக்கிட்டது இல்லை. ஆனா நமக்கு நம்மள தெரியும், நீங்க இப்போ மறந்துட்டீங்க. நினைவு படுத்தி பாருங்க” என்றாள்.

“இந்த விளையாட்டு எதுக்காக? ஃபீஸ் வேணாம்னு நான் சொன்னதுக்காக இன்னிக்கு நைட் என் தூக்கத்தை கொலாப்ஸ் பண்ணனுமா?”

“இது நல்லாருக்கே, தூக்கம் போகுமா? இப்படி ஒருத்தர் நினைப்புல தூக்கத்தை தொலைக்கிறதுன்னா என்னன்னு நீங்களும் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுங்க டாக்டர்” என்றாள்.

“ரொம்ப கன்ஃப்யூஸ் பண்றீங்க. க்ளூவாவது கொடுங்க” என்றான்.

“என் பேர் மிருணாளிணி, நானும் கோயம்பத்தூர்தான்” என்றாள்.

விஷ்ணுவுக்கு அவளது பெயர் தெரியாது, போட்டோ பார்த்தது இல்லை என்பதெல்லாம் மிருணாவுக்கு தெரியாதே.

நான் படித்த பள்ளியில் படித்தவளோ என யோசித்தவனுக்கு இவளது முக ஜாடையில் யாரும் நினைவுக்கு வர மறுத்தார்கள்.

குழம்பிய அவனது முகத்தை ரசித்து பார்த்தவள், “ட்வெண்டி ஃபோர் ஹவர்ஸ்க்குள்ள உங்களுக்கு நினைவு வரலைனா நானே சொல்றேன். ஆனா அப்படி நினைவு வரலைன்னு சொல்லி என் ஹார்ட்டை உடைக்காம கொஞ்சம் கஷ்ட பட்டாவது என்னை ஞாபகத்துக்கு கொண்டு வாங்க” என்றாள்.

இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைப்பும் பொய் கோவமுமாக அவளை பார்த்தான்.

“பை சொல்லு பாப்பா” என குழந்தையிடம் சொல்லி, அவளது கையை பிடித்து அவனுக்கு டாட்டா காட்டியவள், “ஸீ யூ சூன்” என சொல்லி சென்று விட்டாள்.

“மிருணாளினி…” அவளது பெயரை மென்மையாக உச்சரித்தவன், “மிருணா… ம்ஹூம்… மிரு…” என ரசனையாக சொல்லிப் பார்த்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement