Advertisement

பேரன்பு பிரவாகம் -10

அத்தியாயம் -10(1)

சென்னையில் முதல் நாளிரவில் நல்ல மழை. விடியற்காலையில் மழை விட்டிருந்தாலும் வானம் தெளிவாக காணப் படவில்லை. இன்றும் நல்ல மழை இருக்கும் என வானிலை அறிக்கையில் சொல்லப் பட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.

செட் போடப்பட்டு நடக்க வேண்டிய ஷூட்டிங் மழையின் காரணமாக ரத்தாகியிருக்க மிருணாளினி வீட்டில்தான் இருந்தாள். காந்திமதி அக்கா கூட அவரது அக்கா மகளுக்கு திருமணம் என சொல்லி இரு தினங்களுக்கு முன்பே நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

சமையலில் அரிச்சுவடி கூட அறியாதவள் காலை உணவை ஆர்டர் செய்துதான் சாப்பிட்டாள். ஏதோ வேற்று மொழி படம் பார்த்துக் கொண்டே நேரத்தை தள்ளிக் கொண்டிருக்க அவளது நண்பன் சாய் அழைத்தான்.

இவள் வேலை செய்யும் இயக்குனரிடம்தான் அவனும் உதவி இயக்குனராக இருந்தான். இப்போது முதல் படத்தை இயக்க தயாராகி விட்டான். இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது.

தற்சமயம் லொகேஷன் பார்ப்பதற்காக கோத்தகிரி சென்றிருந்தான். அவனது காதல் மனைவி ரூபா கைக்குழந்தை இருந்தாலும் கணவனுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவாக இருக்க வேண்டும் என வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

பத்து மாத குழந்தை ஹாசினியை க்ரட்ச்சில் விட்டு விட்டு வேலைக்கு செல்வாள் ரூபா. இன்றும் அப்படி குழந்தையை விட்டு விட்டு அலுவலகம் வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவளது அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தகவல் சொன்னார் அவளது அப்பா. அவர்கள் இருப்பது வேலூர். அவளது அண்ணன் பெங்களூருவில் வசிக்கிறான்.

அவனும் புறப்பட்டு வருவதாக சொன்னான். ஆனால் அவன் வந்து சேர மாலையாகி விடும், வயதான பெற்றோருக்கு இப்போது தன் துணை தேவை என்பதாலும் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு மருத்துவமனையில் அலைய முடியாது என்பதாலும் கணவனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டு அவள் மட்டும் புறப்பட்டிருந்தாள்.

அண்ணன் வந்து விட்டால் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு இரவுக்குள் சென்னை திரும்பி விடலாம் என்றெண்ணியிருந்தாள் ரூபா.

அவள் வேலூர் சென்றது அவள் அப்பாவுக்கு பெரிய உதவியாகி விட்டது. அவளது அம்மாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் மதியத்திற்கு மேல் அறுவை சிகிச்சை செய்வது என ஏற்பாடாகியிருந்தது.

சோதனையாக அவளது குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கிறது என க்ரட்ச்சிலிருந்து அழைப்பு வந்திருந்தது.

ரூபாவுக்கு அழுகையாக வந்தது. கணவனுக்கு அழைத்து இந்த நேரம் பார்த்து என்னை தனியாக விட்டு சென்று விட்டாய் என திட்டி தீர்த்து விட்டாள். அவனாலும் உடனடியாக வர முடியாதே.

“லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது அவ்ளோ பெரிய கொலை குத்தம்னுதானே நம்ம கூட இருந்து ஹாசினியை பார்த்துக்க சொல்லி கேட்டப்போ முடியாதுன்னாங்க உன் பேரெண்ட்ஸ். அவங்களுக்காக பாப்பாவை விட்டுட்டு நீ போனதுதான் தப்பு. அதான் உன் அப்பா இருக்கார்தானே? நீ உடனே சென்னை கிளம்பு. என் பொண்ணு என்ன கஷ்ட படுறாளோ?” அவனும் பதிலுக்கு திட்ட ஆரம்பித்து விட்டான்.

எரிச்சலடைந்த ரூபா அழைப்பை துண்டித்து விட்டு அடுத்து என்ன செய்ய என யோசித்தாள். அவளது தந்தைக்கு நிறைய உடல் உபாதைகள், காதும் சரியாக கேட்காது.

இங்கிருந்து சென்று விட்டால் இவளது மனசாட்சியே இவளை மன்னிக்காது. ஆனாலும் குழந்தையையும் அப்படியே விட முடியாதே. க்ரட்ச்சுக்கு தொடர்பு கொண்டவள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்ட முடியுமா என விசாரித்தாள்.

“இங்க நல்ல மழை மேடம், ரெண்டு கேர் டேக்கர்ஸ் வர முடியலைன்னு லீவ் போட்டுட்டாங்க. பாப்பாக்கு வயிறு வலியா இருக்கும்னு சிரப் கொடுத்திருக்கோம். பாப்பா இப்போ தூங்கிடுச்சு, சரியா சாப்பிட கூட இல்லை. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்து அழைச்சிட்டு போய்டுங்க மேடம்” என சொன்னாள் நிர்வாகிப் பெண்.

சாய்க்கும் மகளை பற்றிய நினைவுதான். கோவத்தில் கத்தி விட்டாலும் மனைவியின் நிலையும் புரிய அவனும் க்ரட்ச்சுக்கு அழைத்து பேசினான். ரூபாவிடம் சொல்லப் பட்டதே அவனுக்கும் சொல்ல பட்டது. உடனே தனது தோழி மிருணாளிணிக்கு அழைத்து விவரம் சொல்லி உதவி கேட்டான்.

“விட்ட மழை திரும்ப பிடிச்சிடுச்சு சாய், எப்படி போய் அழைச்சிட்டு வருவேன்? அதை விட பேபி எல்லாம் ஹேண்டில் பண்ண தெரியாதே டா” என்றாள் மிருணா.

“ஈவ்னிங் வரை மேனேஜ் பண்ணுடி, பாப்பாக்கு என்னன்னு தெரியலை, பீடியாட்ரிஷியன் யார்கிட்டயாவது காட்டனும் அவளை. குழந்தை வேணாம் வேணாம்னு சொல்லிட்டு பிளானிங் இல்லாம பெத்துக்கிட்டு கஷ்டபடுத்துறேன் டி என் பொண்ணை” கலங்கி விட்டான் சாய்.

“ஏய் ச்சீ… மூஞ்ச பாரு. நான் எப்படியாவது பாப்பாவை அழைச்சிட்டு வந்திடுறேன். நீ வந்தப்புறம் உன் மூஞ்சியில பட் பட்னு சாத்துவா உன் பொண்ணு. க்ரட்ச் போனதும் சொல்றேன், வைடா போனை” என சொல்லி வைத்து விட்டாள்.

நல்ல கன மழை. நிற்பதற்கான அறிகுறியே இல்லை. அவளிடம் கார் இல்லை. அவசரத்திற்கு தேவைப் படும் வைத்துக்கொள் என பிரவாகன் கூறியும் மறுத்து விட்டாள்.

ராயல் என்ஃபீல்டுதான் அவளது வாகனம். அதுதான் வேண்டும் என அடம் செய்து பிரவாகனை சம்மதிக்க வைத்தது எல்லாம் தனிக் கதை. மழையாக இருந்தாலும் அவளது மனநிலை பொறுத்து ரெயின் கோட் போட்டுக் கொண்டோ அல்லது நனைந்து கொண்டோதான் பயணம் செய்வாள்.

இருக்கும் ஒரு வாழ்க்கையை மனதிற்கு பிடித்தது போல வாழ்ந்து விட வேண்டும் என்ற கொள்கை கொண்டவள்.

இப்போது குழந்தையை அழைத்து வர தனது வாகனம் உதவாது என புரிய கேப் புக் செய்தாள். மழையின் காரணமாக அதுவும் அத்தனை எளிதில் புக் ஆகவில்லை. ஒரு வழியாக ஒரு கேப் புக் ஆக இவள் தயாராகி கீழே சென்று காத்திருந்தாள்.

தாமதமாக வந்த கேப் டிரைவர் மழையால் சுற்றிக் கொண்டு வந்ததாக சொன்னான். எப்போதும் மிருணாவை கண்காணிக்கவென இருப்பவன் இவள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதாக பிரவாகனுக்கு தகவல் தந்து விட்டு அவனது இருப்பிடத்திற்கு சென்று விட்டான்.

க்ரட்ச் சென்று உறங்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு மீண்டும் அதே கேப்’பில் பயணப் பட்டாள். சிறிது நேரத்தில் விழித்துக் கொண்ட குழந்தை சிணுங்கலில் தொடங்கி பெரிதாக அழ ஆரம்பித்து விட்டது.

தட்டிக் கொடுத்து பார்த்தாள், சிப்பர் மூலம் தண்ணீர் கொடுத்து பார்த்தாள், பீடிங் பாட்டிலில் இருந்த பாலை புகட்டி பார்த்தாள். எதையும் அருந்த மறுத்த குழந்தையின் வீல் வீலென்ற அலறலில் என்ன செய்வதென புரியாமல் பயந்து போய் விட்டாள்.

பயந்து போன டிரைவரும், “குழந்தைக்கு என்ன மேடம்? பசிக்குதோ என்னவோ? சீக்கிரம் வீட்ல விட்டிடுறேன் மேடம். கொஞ்சம் சமாதான படுத்துங்க, ரொம்ப அழுது அது வேற பிரச்சனை ஆகிட போகுது” என்றான்.

என்னவென தெரிந்தால்தானே அவளும் பார்ப்பாள். வழியிலிருக்கும் ஏதாவது மருத்துவமனை செல்லும் படி கெஞ்சலாக கூறினாள்.

“அழுத உடனே ஹாஸ்பிடல் போகணுமா மேடம்?”

“எப்படி அழறான்னு பார்க்குறீங்கதானே ண்ணா? வீட்டுக்கு போய் என்ன செய்வேன் நான்?”

 “கரெக்ட்தான் மேடம், எப்படி மழை பெய்யுதுன்னு பார்க்குறீங்கதானே? ரூட் எதுவும் சரியில்லை, எங்க பள்ளம் இருக்குன்னு ஒண்ணும் தெரியாம குத்து மதிப்பா டிரைவ் பண்ணிட்டு இருக்கேன். உங்க வீட்ல விட்டிடுறேன், அங்க பக்கத்துல எங்கேயாவது அழைச்சிட்டு போங்க” என்றான் கேப் டிரைவர்.

“ஐயையோ அண்ணா, அவ்ளோ நேரம் எல்லாம் பாப்பாவை அழ வச்சிட்டு இருக்க முடியாது. ப்ளீஸ், கூட பணம் தர்றேன், எப்படியாவது ஹாஸ்பிடல் போங்க” என்றாள் மிருணா.

பணத்திற்காக இல்லை என்றாலும் அவனுக்குமே குழந்தையின் அழுகையை பொறுக்க முடியவில்லை. சரி என ஒப்புக் கொண்டவன் அரை மணி நேரமாக முயன்றும் ஒன்றும் முடியவில்லை.

“இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே சுத்திகிட்டு இருந்தா மழை தண்ணில கார் மிதக்க ஆரம்பிச்சிடும் மேடம். ஸேஃபா உங்க அபார்ட்மெண்ட்ல விட்டிடுறேன், பெரியவங்க யார்கிட்டயாவது கேட்டு கைவைத்தியம் பண்ணி பாருங்க. இந்த குளிர் ஒத்துக்காம அது வேற குழந்தைக்கு எதுவும் ஆகிட போகுது” என டிரைவர் சொல்ல அபார்ட்மெண்ட்டிற்கே போக சொல்லி விட்டாள்.

குழந்தை அழுது அழுது சக்தியெல்லாம் வடிந்து தேம்ப ஆரம்பித்திருந்தது, பின் திடீரென வீறிட்டு அழுதது. அழுகை ஹீனமாகிக் கொண்டிருக்க இவள் மனதில் திகில் பரவத் தொடங்கியது.

“கடவுளே பாப்பாக்கு எதுவும் ஆகிட கூடாது, ப்ளீஸ் ஏதாவது வழி காட்டேன்” வாய் விட்டு வேண்டிக் கொண்டவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அபார்ட்மெண்ட் வாயிலில் இறக்கி விட்டு கிளம்பியது கார். வீட்டுக்கு தனியே செல்லவே அவளுக்கு அத்தனை பயமாக இருந்தது. செக்யூரிட்டி அலுவலகம் சென்று விவரம் சொன்னாள்.

 செகரெட்டரியிடம் கேட்டு பார்க்கலாமா என சொல்லிக் கொண்டிருந்தவர் நினைவு வந்தவராக, “அட நம்ம அபார்ட்மெண்ட்லேயே குழந்தை டாக்டர் ஒருத்தர் இருக்கார். ரீசண்டா குடி வந்திருக்கிறார். ஆனா இப்போ வீட்ல இருப்பாரா தெரியலை” என்றார்.

மிருணாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. கைப்பேசி எண் இருக்கிறதா என கேட்டு வாங்கிக் கொண்டவள் உடனே அழைத்து விட்டாள். அழைப்பை ஏற்ற மருத்துவரும் வீட்டில்தான் இருப்பதாக சொல்லி எந்த பிளாக், வீட்டு எண் என்ன என விவரங்கள் பகிர்ந்தான்.

குழந்தையின் பேகை முதுகில் மாட்டிக் கொண்டு குழந்தையை மார்போடு அணைத்து பிடித்த படி மருத்துவரின் வீட்டுக்கு விரைந்து விட்டாள்.

அழைப்பு மணி அழுத்தியதும் கதவை திறந்த விஷ்ணுவை பார்த்து விட்டு மிருணாவுக்கு மூச்சடைப்பு ஏற்பாடாமல் போனது ஆச்சர்யம்தான். சில நிமிடங்கள் பார்த்தவர்களை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்பவன் இல்லை என்றாலும் நேற்றைக்கும் முந்தைய தினம் மருத்துவமனையில் பார்த்திருந்த இவளை விஷ்ணுவுக்கு நன்றாக நினைவிருந்தது.

அவளது அன்றைய தின பேச்சும் இவனை கண்டதும் அப்படி திகைத்து பார்த்த பார்வையும் அவளை அவனது நினைவில் அழுத்தமாக தங்க செய்திருந்தது.

பின்னர் கூட சளைக்காமல் ஓடி ஆடி வேலை செய்வதை அவ்வப்போது கவனித்துதான் இருந்தான். தங்களுடைய கனவுகளை அடைகிறோமோ இல்லையோ அதனை நோக்கி பயணிப்பதே வெற்றிதான் என நினைப்பவனது பார்வையில் அந்த பெண் உதவி இயக்குனர் உயர்ந்து தெரிந்தாள்.

இன்று கையில் குழந்தையுடன் கண்டதும் ஏமாற்றமாக உணர்ந்தவன் நொடியில் சுதாரிப்புக்கு வந்து அவளை உள்ளே அழைத்து அமர வைத்தான்.

“க்ரட்ச்ல காலையிலேயே விட்டாச்சு டாக்டர், விடாம அழுதிட்டே இருந்தாளாம் பாப்பா, வயித்து வலின்னு நினைச்சு சிரப் கொடுத்ததும் தூங்கிட்டா. நான் போனப்போ தூங்கிட்டுதான் இருந்தா, வழில திரும்பவும் அழுகை, அழுது அழுது டயர்ட் ஆகிட்டா, என்னன்னு தெரியலை டாக்டர்” என அவள் விவரங்கள் சொல்ல குழந்தையை வாங்கி சோஃபாவில் படுக்க வைத்து ஆராய ஆரம்பித்தான் விஷ்ணு.

அவளது கைப்பேசி ஒலிக்க ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தவன் அவளை கண்டனமாக பார்த்தான்.

கைப்பேசியை கையில் எடுத்துக் கொண்டவள், “சாரி டாக்டர், பாப்பாவோட அப்பா கூப்பிடுறான். அவனும் பயந்து போயிட்டான். நான் பேசிட்டு வந்திடுறேன்” என சொல்லி தள்ளி சென்றாள்.

குழந்தைக்கு எதுவும் உடல் நலக் குறைவு இருப்பதாக விஷ்ணுவுக்கும் தோன்றவில்லை. ஆனால் குழந்தை எதற்கோ சிரம பட்டுக் கொண்டிருப்பது புரிந்தது.

குழந்தையின் காலில் கொலுசும் அதனுடன் மெல்லிய தண்டை ஒன்றும் அணிவிக்க பட்டிருந்தது. இடது காலில் இருந்த தண்டை வளைந்து போய் குழந்தையின் காலை அழுத்திக் கொண்டிருந்தது. காயம் வேறு தென்பட்டது. அங்கு விஷ்ணு கை வைக்க பெருத்த குரலில் மீண்டும் அலறத் தொடங்கியது குழந்தை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement