Advertisement

பெண்ணியம் பேசாதடி – 15

தாய்மையைப் போற்றாத கவி உண்டோ,

வார்த்தைக் கோர்க்க முடியவில்லை உன் எழுத்தாளனுக்கு,

தேடித்திண்டாடி தவிக்கிறேன் உன் பெண்ணியம் போற்ற,

கரம் கொடுடி பேரிளம் பெண்ணே நான் கரை சேர.

அழகான பச்சைப் பட்டுத்தி மிதமான நகைகள் அணிந்து உறவுகள் சூழ அழகாக நடந்து முடிந்தது வளைகாப்பு. இரு ஆண்களும் ஒற்றைக் காலில் நின்று சாதித்து விட்டனர். அதற்குள் அவர்களுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது பாவம்.

என்ன செய்யக் காஞ்சனையின் வார்ப்பு அப்படி. மூர்த்திக்குக் கோவில் கட்ட தந்தையும் மகனும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது தனிக் கதை.இருக்காதா பின்னே முப்பது வருடங்களுக்கு மேல் அல்லவா குப்பைக் கொட்டி இருக்கிறார்.

சரி விழாவை பார்ப்போம்.

அனைத்தும் முடிந்து உறவுகளைப் பந்தியில் அமர வைத்து வாய் நிறைய வாழ்த்தியவர்களை வயிறு முட்ட உண்ண வைத்தனர் தந்தையும் மகனும். அவர்களை நோக்கி மூர்த்திப் பதட்டமாக வந்தார் “மாப்பிள்ள இங்க வாங்க” என்று அவரைத் தனியாக அழைக்க வளவன் ரமேஷிடம் தனது பொறுப்பைக் கொடுத்து விட்டு தந்தையோடு வந்தான்.

“என்ன ஆச்சு தாத்தா” அவரது பதட்டத்தைப் பார்த்து அவன் கேட்க.

“என்னத்த சொல்ல காஞ்சனை ஒரே அழுகை ரூமுக்கு போயிட்டா இன்னும் சாப்பிட கூட இல்ல கதவத் திறக்க மாட்டேங்கறா”

“ஏன் ? என்ன ஆச்சு மாமா?”

“நம்பத் திருவாரூர் அக்கா இருக்குல்ல.அது எதோ சொல்லி இருக்கும் போல” நிறுத்தியவர் சங்கடமாக இருவரையும் பார்க்க என்ன விதமான பேச்சுக்கள் நடந்திருக்கும் என்பதை அறியாதவர்களா என்ன.

“விடுங்க மாமா இதெல்லாம் சகஜம் தான் இப்போய்ச் சண்டை கட்ட முடியாது. இந்த மாதிரி பேச்சுக்களைச் சிரிச்சிகிட்டே கடக்குறதுதான் நல்லது. அவளைப் பாக்குறேன் நீங்க வந்தவங்களைக் கவனிங்க”

“கண்ணா நீயும் பாரு அம்மா வருவா போ” மகனது கலங்கிய முகத்தைப் பார்த்து அவனுக்கு ஆறுதல் கூறியவர். ரமேஷிடம் கண் காட்டி விட்டு சென்றார்.அவனும் தனது வேலைக்குள் வளவனை இழுத்துக் கொண்டான்.

********

“காஞ்சனை… காஞ்சனை…” வாமனன் அறைக் கதவு முன் தட்டி கொண்டு இருக்கப் பேரிளம் பெண்ணிடமிருந்து பதிலே இல்லை.பொறுமை இழந்து “காஞ்சனை!………..” சற்று உரக்க வாமனன் அழைக்கக் கதவை திறந்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.

அவளது செயலில் பதறியவர் “என்னடி இது குப்புற படுத்து இருக்க முதல ஒழுங்காப் படுடி வயிறு அழுத்தும்”

“முடியாது போங்க”

“அடி வாங்கப் போற காஞ்சனை நீ .சொன்னப் பேச்சு கேளு” அவரது கோப குரலில் சிறு பிள்ளை நேராக எழுந்து உட்காந்தாள்.

“எதுக்கு இப்போ அழுகை”

“எல்லாம் உங்களாலத்தான் போங்க பேசாதீங்க. ப டிச்சுப் படிச்சுச் சொன்னேன் இந்த வயசுல குழந்தையான்னுப் பரிகாசம் பண்ணுவாங்கன்னுக் கேட்டீங்களா நீங்க…. இப்போ பாருங்க போங்க”

“யாரு என்ன சொன்னா என்ன, அவுங்களுக்காக வாழ்றியா நீ. பேசுறவுங்க பேசிகிட்டு தான் இருப்பாங்க. அது நீ நல்லா இருந்தாலும் சரி ,இல்லாட்டியும் சரி. எதுலடா குத்தம் பாக்கலாம், குறை பேசலாமுன்னு இருப்பாங்க அதுக்காகப் பார்த்துப் பார்த்து வாழணுமா என்ன”

எழுத்தாளரின் சிந்தனை அப்படித் தான் நான் என் வாழ்கை என் ரசனை மனதுக்குத் தோன்றியதே சிறப்பாக ஹ்ம்ம்!…

“உங்கள மாதிரி என்னால இருக்க முடியாது”

“சரி இருக்காத  இப்போ என்ன பண்ணலாம் பேசுனவுங்க கிட்டப் போய்ச் சண்டை போட்டு உன்ன புரிய வைக்கப் போறியா என்ன?”

“இல்ல” குரல் உள்ளே போக ஒரு பெருமூச்சிட்டவர் “நான் ஒரு சுயநலவாதிடி உன் நெனப்புல நான், என் மகன், என் மகள் மட்டும் தான் இருக்கணும் உன் உலகம் எங்களைச் சுத்தி மட்டுமே, உங்க அப்பா கூட அடுத்தது தான்.அவ அப்படி பேசிட்டா இவ இப்படி பேசிட்டானு அழுது வடிஞ்ச நான் மனுசனா இருக்க மாட்டேன் வாடி சாப்பிட”

“என்ன ரொம்ப மிரட்டுறீங்க சாப்பிட வர மாட்டேன் வேணுனாக் கொண்டு வந்து ஊட்டி விடுங்க”

“அலும்பு பண்ணாதடி இப்போ வேல இருக்கு முடியாது. மரியாதையா சாப்பிட்டு தூங்கு நைட் ஊட்டி விடுறேன்”

“ஒன்னும் வேணாம் போங்க” இவர்கள் வழக்காட கையில் தட்டுடன் அங்கு வந்து சேர்ந்தான் வளவன். சற்று தயங்கி உள்ளே வந்தவனை வாமனன் புன்னகைக்க அவனது செயலை கண்டு நெகிழ்ந்து போனாள் காஞ்சனை.

வந்தவன் எதுவும் பேசாமல் அவளுக்கு ஊட்டிவிட அவ்வுணவு அமிர்தமாய்க் காஞ்சனைக்கு.இடையில் வாமனனை மிதப்பாக ஒரு பார்வை வேறு ‘நீங்க செய்யாட்டி என்ன என் மகன் இருக்கான்’ என்பது போல.

அதற்கு அவர் ஓர் கள்ளச் சிரிப்புடன் விடை பெற்றார். அவரது சிரிப்பிற்கு அர்த்தம் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் எழுத்தாளரின் பேரிளம் பெண். (அவரைப் போல் ஊட்டிவிட முடியுமா என்று எண்ணி இருப்பாரோ இருந்தாலும் இருக்கும் கள்ளன்)

கொண்டு வந்த உணவை ஊட்டி முடித்தவன் “தூங்கும்மா எதையும் யோசிக்காத” தலையைத் தடவி வாஞ்சையாகச் சொல்ல கண்கள் கலங்கியது.அவள் கலக்கம் கண்டு அவன் கண்ணில் நீர் வடிய

“என்னடா நீ.சாரி…… சாரி…….. அம்மா அழலைப் பாரு வளவா” சிறு பிள்ளை போல் இருவரும் கொஞ்சி ஒருவருக்கொருவர் சமாதானம் செய்தனர்

“ஹ்ம்ம்….” என்றவன் “சரி நீ படு நான் அப்புறம் வரேன்”

சரி என்பது தலையை ஆட்டியவள் தனக்குக் கிடைத்த சொர்க்கத்தை எண்ணியபடியே தூங்கிப் போனாள்.கனவில் கூடக் கிட்டாத வரம். பித்துருக்களின் புண்ணியமோ என்னவோ வருடங்கள் சென்றாலும்  வசந்தமான வாழ்க்கை.

**********************

குழந்தை பிறப்புக்கு இன்னும் ஒரு வாரம் என்ற நிலையில் மூன்று ஆண்களுமே பதட்டமாக இருந்தனர். யாரை தேற்றுவது என்று ரமேஷ் முழி பிதுங்கிப் போனான்.சரி தனது அன்னையை அழைக்கலாம் என்றால் காஞ்சனை மறுத்துவிட்டாள்.

என்ன செய்வது அதிலும் வாமனனை விட வளவன் தான் மிகவும் பயந்து போயிருந்தான். இதுவரை அவன் கையாலாத சூழ்நிலை அதுவும் காஞ்சனையின் வயிற்றைப் பார்த்து அலறி விட்டான் “அப்பா என்ன இப்புடி இருக்கு அம்மாக்கு வலிக்காத அவங்களால நடக்கவே முடியல ரொம்பப் பயமா இருக்கு”.

அலுவலகம் செல்லாமல் தனது தந்தையையும் செல்ல விடாமல் கேள்வி கேட்டு அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டு இருந்தான். அவ்வப்போது காஞ்சனையின் மகன் என்று நிரூபித்தான்.

மூர்த்திக்கு அவனது அன்பை எண்ணி அத்தனை பெருமை அதை வாய்விட்டு வாமனனிடம் சொன்னார் “மாப்பிள்ள வளவன் நல்லா வருவான் .அவன் குணத்துக்கு எப்புடி பொண்ணு அமையுது பாருங்க ராணியாட்டம் வருவா” என்றவரை சிரிப்புடன் பார்த்தார் வாமணன்.

வாமனனுக்குப் பயம் இருந்தாலும் தனது மகன் துடிக்கும் துடிப்பை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.அந்த துடிப்புக்கு மூல காரணமே அவன் தன் மீது வைத்திருக்கும் பாசம் என்பதை அறியாதவரா என்ன.

அவர்கள் மூவரும் பயந்த நாளும் வந்தது அன்று காலையில் இருந்தே உடல் நிலையில் மாற்றத்தைக் கண்ட காஞ்சனை வாமனனை அழைத்து விடயத்தைச் சொல்ல.சிறிதும் தாமதியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

வளவன் வந்தால் மருத்துவமனை இரண்டாகப் போக வாய்ப்புகள் இருப்பதால், அவனை ரமேஷிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.நேரம் ஆக ஆக வலி எடுக்க வாமணன் கையை நொறுக்கினால் காஞ்சனை மறந்தும் கத்தவில்லை கண்ணில் இருந்து நீர் மட்டுமே வழிய வலியைப் பல்லைக் கடித்துப் பொறுத்து கொண்டாள்.

தலையைத் தடவி ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றிக் கொண்டு இருந்தார் எழுத்தாளர்.மருத்துவர் வர அடுத்தடுத்துக் காரியங்கள் துரிதமாக நடக்கச் சுமார் அரை மணி நேரம் போராடி பெற்றால் சமத்துப் பெண்ணை.

எழுத்தாளரின் காதலுக்குச் சாட்சியாக இதோ ஓர் பூச்செண்டு.தனது பெண் பிள்ளையை ஆசை பொங்க வாங்கித் தன் கன்னம் கொண்டு கன்னம் வருடி நெற்றியில் முத்தமிட்டு ‘கண்ணம்மா’ என்று அழைத்தார் வாமனன்.

கவிக்கே வார்த்தைகள் பஞ்சமோ என்பது போல வார்த்தைகளுற்று மகளின் அழகில் திளைத்தார் எழுத்தாளர். “என் அழகிடி கண்ணம்மா” பெண் பிள்ளையைக் கையில் ஏந்திய நொடி பாரதியின் வரி மின்னலாக மனதில்

சின்னஞ் சிறுகிளியே, — கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலிதீர்த்தே — உலகில்

ஏற்றம் புரியவந்தாய்!

பிள்ளைக் கனியமுதே, — கண்ணம்மா!

பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே — என் முன்னே

ஆடிவருந் தேனே!

ஓடி வருகையிலே, — கண்ணம்மா!

உள்ளங் குளிரு தடீ;

ஆடித்திரிதல் கண்டால் — உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ.

உச்சி தனை முகந்தால் — கருவம்

ஓங்கி வளரு தடீ;

மெச்சி யுனையூரார் — புகழ்ந்தால்

மேனி சிலிர்க்கு தடீ.

கன்னத்தில் முத்தமிட்டால் — உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ;

உன்னைத் தழுவிடிலோ, — கண்ணம்மா!

உன்மத்த மாகு தடீ.

சற்றுன் முகஞ் சிவந்தால் — மனது

சஞ்சல மாகு தடீ;

நெற்றி சுருங்கக் கண்டால் — எனக்கு

நெஞ்சம் பதைக்குத் தடீ.

உன்கண்ணில் நீர்வழிந்தால் — என்னெஞ்சில்

உதிரங் கொட்டு தடீ;

என்கண்ணில் பாவையன்றோ? — கண்ணம்மா!

என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே, — கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடு வாய்;

முல்லைச் சிரிப்பாலே — எனது

மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

இன்பக் கதைக ளெல்லாம் — உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ?

அன்பு தருவதிலே — உனைநேர்

ஆகுமொர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே — உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ?

சீர்பெற்று வாழ்வதற்கே — உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ?

“ப்பா…” என்ன வரிகள் இது மெய் சிலிர்த்துப் போனார் எழுத்தாளர். எத்தனை கவிஞர்கள் முளைத்தாலும்,எத்தனை எழுத்தாளர் வளர்ந்தாலும் முடியுமா என் பாரதிக்கு ஈடாக.தமிழனுக்கே உள்ள திமிர் தலைத் தூக்கியது.

மூர்த்தியும் கைகள் நடுங்க அந்தப் பொன் வண்டின் கன்னம் தீண்டினார்.ஏனோ மதுவின் நினைவு வந்தது சில எண்ணங்களை மறக்க முடியாது.வாமனனுக்கும் அதே எண்ணம் தான் சில நொடிகள் மட்டுமே பின்பு நடப்புக்கு திரும்பி விட்டார்.

மகளைச் செவிலியிடம் கொடுத்துவிட்டு வளவனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னார்.அதன்பின் தனது தேவதையைத் தேடிச் செல்ல.நல்ல மயக்கத்தில் பேரிளம் பெண் சுக பிரசவம் என்பதால் உடனே அறைக்கு மாற்றி விட்டார்கள்.

தனது தேவதையின் வலியை உணர்ந்தவர் மெல்ல நெருங்கி நெற்றி முடி கோதி பிள்ளைப் முத்தமிட.மயக்கத்தில் இருந்த மாதுக்கு மன்னவனின் வாசம் நாசி தீண்ட அவரது சட்டையைப் பற்றி இழுத்து வன் முத்தமிட்டாள் எழுத்தாளரின் பரிசுக்கு நன்றியாம்.

கள்ளச்சி நெற்றி முட்டி எழுத்தாளர் பிதற்ற.கண்கள் சொருகி கண்ணில் நீர் வழிய பேரிளம் பெண். காதல் ஓவியமோ அக்காட்சி.அவர்கள் இங்குக் காதல் கவி பாட வெளியில் வளவன் செவிலியிடம் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தான்.

“ஏய்!!!! என்ன என்ன பண்ணுவ?” என்று எகிறியவனை ரமேஷ் தடுக்கத் தடுக்கத் தன் முன்னிருக்கும் பெண்ணைத் தாண்டி பின்னால் ஒளிந்து இருக்கும் பெண்ணிடம் சென்றான். “ஏய்!!!!! வெளியில வாடி” என்று அழைத்துக் கொண்டு இருந்தான்.அவனது ‘டி’ என்ற விழிப்பில் இன்னும் பயந்து போனாள் அரிவை பெண்.

அடுத்த வரலாறோ…………….

Advertisement