Advertisement

பூ (1)
நிரஞ்சனா குளித்துவிட்டு வெளியே வர “நிரஞ்சனா இங்கவாம்மா!” என்று சோபனா குரல் கொடுக்க வேகமாக வந்தவள் “என்ன அத்தை?”
“இந்தா காஃபிய கொண்டு போய் கிருஷ்ணாவுக்கு கொடு!” என்று நீட்ட
“நானா..! இல்ல அத்தை நீங்க போய் கொடுத்துருங்க ப்ளீஸ் அத்தை!” என அவசரமாக மறுத்து கூற
“ப்ச் நிரும்மா எனக்கு வேலை இருக்கு மாமா எந்திருச்சிட்டாருன்னா அவருக்கு கஞ்சி கொடுக்கணும் எந்திரிச்சதும் கேப்பாரு அதுவுமில்லாம மேல ஏறி இறங்க முடியாதுடாம்மா நேத்து அலைஞ்சு திரிஞ்சதுல கால் வலிக்கிது அதான் சொல்றேன் நீ போய் கொடுத்துரு!” என்று கூற
“அத்தை… என தயங்கிவளை கூர்ந்து பார்த்தவர் “அவன் உன்ன ஏதாவது சொன்னானா!” என்று கேட்க
“அய்யோ இல்ல அத்தை அவரு எதுவும் சொல்லல கொஞ்சம் பயமா இருக்கு?” என்று நடுங்கும் குரலில் கூற
“அவன பாத்து பயப்படுற ஒரே ஆள் நீ தான் அவனுக்கெல்லாம் சூதுவாதே தெரியாது வெகுளியா இருப்பான் கோபம்னா என்ன விலைன்னு கேட்பான்!” என்று மகனை பற்றிய இல்லாத பெருமைகளை அளந்துவிட
“அவருக்கா சூதுவாது தெரியாது விட்டா என்ன பண்ணுவான்னு எனக்கு தானே தெரியும்? பாவம் மகனோட குணத்தை பத்தி கொஞ்சம் கூட தெரியாது போல இப்டி அப்பாவியா இருக்காங்களே!” என நினைத்தவள் “இவங்களும் என்ன பண்ணுவாங்க பாவம், இப்டி வீட்டுல இருக்குற எல்லாரையும் ஏமாத்தி நல்ல பைய்யன்னு நம்ப வச்சிட்டு இருக்கான் நெடுமாடு” என மொத்த கோபத்தையும் அவன் மேல் திருப்பி மனதில் வசைபாடி கொண்டிருந்தாள்
“என்னம்மா என்ன யோசனை காஃபி ஆறிட போகுது சீக்கிரம் கொண்டுபோய் கொடு ஆறிடுச்சு குடிக்க முடியலன்னு கூட சொல்ல  தெரியாது மனசுக்குள்ளயே வச்சுப்பான்!” என்று மகனுக்காக சோபனா உருக
அதற்கு மேல் அவனின் இல்லாத பெருமைகளை கேட்க மனமில்லாமல் “கொடுங்க அத்தை!” என வாங்கி செல்ல அடுத்த நொடி மகனுக்கு அழைப்பு விடுத்தார் சோபா 
“டேய் நிரஞ்சனா வந்துட்டு இருக்கா நீ சொன்ன மாதிரி அனுப்பி வச்சுட்டேன் ரொம்ப திட்டிடாதடா பாவம் அழுதுற போறா ஒரு நாள் தான் ஆகிருக்கு உன்னோட கோபத்தை அவகிட்ட காட்டாதடா!” என்று தகவல் அளிக்க
“அதெல்லாம் நா பாத்துகிறேன் ம்மா நீங்க வைங்க அவ வந்துர போறா” என்று அழைப்பை துண்டித்தான் வம்சி 
சற்று முன் நிரஞ்சனா குளிக்க சென்றதும் தாயிடம் வந்தவன் “அம்மா உங்ககிட்ட ஒன்னு சொல்லுவேன் மறுக்காம செய்யணும்! செய்வீங்களா?”  என்று சோபினாவின் முந்தானையை அளந்து கொண்டே கேட்க
“பீடிகை போடுறத விட்டுட்டு என்னனு வந்த விஷயத்தை சொல்லு” என மகனின் புறம் திரும்பாமலே ஃபில்டரில் காஃபி பவுடரை கலந்தபடி கேட்டார் சோபனா 
“உங்க மருமக என்ன பாத்தாலே பயந்து ஓடுறாம்மா ஒரு நிமிஷம் கூட நின்னு பேசமாட்டிங்கிறா ஆனா உங்ககிட்ட மட்டும் மணி கண்ணக்கா பேசிட்டு இருக்கா நா அவகிட்ட பேசணும்” என்று அழுத்தமாக கூற
“அதுக்கு நா என்ன பண்ண முடியும் உன்னோட சாமர்த்தியம் பொண்டாட்டிய எப்டி பேச வைக்கணும்னு நீ தான் தெரிஞ்சுகனும்! குதிரையை இழுத்துட்டு வந்து தண்ணி காட்டதா முடியும் குடிக்க வைக்க முடியுமா?” என்று கூற
“அம்மா சந்தடி சாக்குல என்ன குதிரைன்னு சொல்லுறிங்க பரவாயில்ல மன்னிச்சு விட்டுடுறேன்” என்றவன் “அவகிட்ட பேசனுமா ஏதாவது பண்ணுங்க கண்ணுலயே சிக்க மாட்டிங்கிறா!” என்று பாவமாய் கூற
மகனின் முகத்தை பார்த்தவருக்கு சிரிப்பு வர “என்ன பாத்தா உங்களுக்கு சிரிப்பு வருதா?” 
“பின்ன என்னடா அவ பேசலனா நீ போய் பேசு அவ பொண்ணு அதுவும் இல்லாம இந்த வீட்டுக்கு புதுசு பேசுறதுக்கு கொஞ்சம் கூச்சபடுறா நீ போய் பேசு உனக்கு என்ன கூச்சம் வேண்டியது கிடக்கு இங்க பாருடா மகனே பொண்டாடிக்கிட்ட ஈகோ பாத்தா வாழ்க்கை நல்லா இருக்காது பாத்துக்கோ எதுனாலும் நீ முதல பேசு நீ பேச பேச அவளும் நார்மல் ஆகிருவா!” என்று தீவிரமாக கூற
“அம்மா அவள பேச வைக்கிறதுக்கு ஐடியா கேட்டா நீங்க சண்டை போட்டு ஒருமசமா பிரிஞ்சு இருக்குறவங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதரி பண்றிங்க நானா பேச மாட்டிங்கிறேன்” என்றதும் சிரித்தவர் “நீ போ நா அவகிட்ட காஃபிய கொடுத்து விடுறேன், அப்றம் அவகிட்ட பேசுறதும்! பேசாம ரெண்டுபேரும் ஒருத்தருகொருத்தர் பாத்துகிட்டு இருக்குறதும்! உங்க பாடு எனக்கு வேலை இருக்கு நீ போ குளிக்காம கொள்ளாம அடுபடிக்கு வந்துகிட்டு” என்று விரட்ட 
“தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே” என்று சோபனாவை தூக்கி தட்டாமலை சுற்றி விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்
மாடி படிகளில் ஏறும் போதே இதயம் படபடத்தது “கடவுளே சிக்கவே கூடாதுன்னு இருந்தா இப்டி எல்லாத்தையும் ஆப்போசிட்டா பண்றயே உனக்கே நியாயமா இருக்கா? இப்டி கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குறயே அப்பவே என்னென்னமோ பேசுனா இப்போ என்ன பேச போறானோ பேச மட்டும் தான் செய்வானா இல்ல..” என எண்ணங்கள் ஓடி கொண்டிருக்கும் போதே அறை வந்து விட்டது 
வெளியே இருந்து “எப்டி கூப்பிடுறது என்னங்க! மாமா! ச்சே பின்ன எல்லார் மாதிரியும் வம்சி! ஊஹும் அத்தை கூட சொன்னாங்களே கிருஷ்ணா அப்டி கூப்பிடலாமா? இல்ல கிருஷ்! உவேக் நல்லாவே இல்ல பின்ன எப்டி?” என சிந்தித்தவள் “சார்ன்னு கூப்பிடு போதும் அந்த நெட்ட கொக்குக்கு” என முடிவெடுத்தவள் “சார்” என்று அழைக்க பதில் ஏதும் இல்லை உள்ளே சென்றவள் காஃபியை டேபிள் மேல் வைத்துவிட்டு அறையை பார்வையால் அலசினாள்
கண்ணன் குழல் ஊத ராதை கண்ணனின் தோளில் கைவைத்தபடி கண்களை மூடி ரசிப்பது போன்ற படம் தஞ்சாவூர் ஓவிய பாணியில் தத்ரூபமாக வரைந்து மாட்டப்பட்டிருந்தது சுவரஸ்யமாய் அதை ரசித்தவள் கலை வண்ணத்துடன் இன்னும் சில படங்களை கண்டு “பரவாயில்ல என்னமோ நினைச்சோம் ஆளு வேற மாதிரி இருக்காரு பெயிண்டிங்க்ள செம்ம இன்ரஸ்ட் போல” என எண்ணமிட்டவாறே திரைசிலை கண்களை கூசாத அதேசமயம் அமைதியான சூழலை உண்டாக்குவது போன்ற சுவர் பூச்சு என அறையை ஆராய்ந்து கொண்டிருந்தவளுக்கு திடீரென முதுகை உச்சியாய் துளைப்பது போல உணர்வு வர திரும்பி பார்த்தவளின் மூச்சு நின்று போன உணர்வு கால்கள் பசையிட்டு ஒட்டியது போல நகர மறுத்து சண்டித்தனம் செய்ய ஐம்புலன்களும் அடங்கியது போனது, விழிகள் விரிய கண்களை உருட்டினாள் “இன்னே வரைக்கும் இவரும் உள்ள தான் இருந்தாரா முன்னாடி பாத்தோம் பின்னாடி திருப்பி பாக்க மறந்துட்டோமே!” என நொந்து கொள்ள
சத்தமில்லாமல் கதவை சாத்திவிட்டு அத்தனை நேரம் அவள் செய்கையை ஒரு கையை மார்பின் குறுக்கே கட்டி மறு கையை உதட்டில் வைத்து குறுஞ்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தவன் அவள் விழித்து நோக்கியத்தில் அதே குறுஞ்சிரிப்புடன் அருகில் வர இதயம் தொண்டையில் வந்து நின்றது “அச்சச்சோ கீழ கழண்டு விழுந்துற போகுது” என பதட்டத்துடன் கூற புரியாமல் நிரஞ்சனா விழிக்க  
“பின்ன இப்டி கண்ண உருட்டி உருட்டி பாத்தா கீழ விழுந்தூராதா அங்க இருந்து பாக்கும் போது எங்க விழுந்துருமோன்னு பயந்துட்டேன்” என்று இயம்ப
சட்டென தலையை தாழ்த்தி கொண்டாள் “அதானே பாத்தேன் என்னடா இன்னும் நத்தை கூட்டுக்குள்ள போகலையென்னு!” என்றவன் “நிமிந்து பாரு சனா!” என்று கூற
அவள் நிமிர்ந்து பார்த்தால் தானே அகபட்ட எலியை போல மனதில் உதறல் எடுக்க தவித்து கொண்டிருந்தாள் அவள் நிலையை  உணர்ந்தும் “உன்ன தான் சொல்றேன் நிமிந்து பாக்குறியா இல்லையா?” என்றான் சற்று கண்டிப்பான குரலில்
நிமிர்ந்து பார்த்தவள் “காஃபி ஆறிட போகுது முதல குடிச்சிருங்க!” என்று எடுத்து நீட்ட 
“ம் ஆறி போனா போகுது வேற காபி குடிச்சிக்கிறேன் உன்கிட்ட பேசணும் வந்து உக்காரு” என்று அதிகாரமாய் கூற
அசையாமல் நின்றுகொண்டிருந்தாள் “உன்ன தான் சொல்றேன் காது கேக்கேலையா? இல்ல இவன் என்ன சொல்றது நாமா என்ன கேக்குறதுன்னு இருக்கியா?” என கண்டன குரலில் கூற சட்டென துளிர்த்து கொண்டிருந்த கண்ணீர் உடைப்பெடுத்தது 
“மூச் சத்தம் வர கூடாது எனக்கு அழுகுறது பிடிக்காது அதுவும் தொட்டா சிணுங்கி மாதிரி இம்ன்றத்துக்குள்ள அழுகுற பொண்ணுங்கள பாத்தாலே பிடிக்காது உன்ன இப்போ என்ன சொல்லிட்டேன்னு குடம் குடமா தண்ணி வடிக்கிற உக்காருன்னு சொன்னது ஒரு குத்தமா?” என்றவன் “நீ என்ன ரொம்ப பேச வைக்கிற சனா!” என கோபம் கொள்ள
“நா ஒன்னும் அழுகல கண்ணு வேர்குது அவ்ளோ தான்” என்றாள் வீராப்பாக “ம் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்ற!” என சிரித்தவன்
“வந்து உக்காரு பேசி முடிக்கிற வரைக்கும் சத்தம் வெளிய வர கூடாது கேக்குற கேள்விக்கு டான்டான்னு பதில் வரணும் என்ன சரியா?” என்றதும் வேகமாக தலையை ஆட்டினாள்
கட்டிலில் அமர்ந்தவன் அவள் அமர்வதற்கு அருகில் இருந்த சேரை இழுத்து போட தயக்கத்துடன் அமர்ந்தாள் அவன் நடந்து கொள்ளும் விதம் அவனுக்கே சற்று அதிகபடியானது என்று தான் தோன்றியது விட்டு பிடிக்கலாம் என்று பார்த்தால் நழுவி கொண்டே செல்கிறாளே திருமணத்திற்கு முன்பு தான் படிப்பு தேர்வு என்று பேசவில்லை இப்போது திருமணம் முடிந்தும் பேசவில்லை என்றால், பேசவில்லை என்பதை விட அவனை கண்டதும் ஒடுகிறாளே அப்டியே விடுவதா? அவள் மனதில் உள்ளதை அறிய வேண்டும்  என நினைத்தவன் 
குரலை சீர்படுத்தி கொண்டு பேச தொடங்கினான் “என்ன பாத்தா பூதம் மாதிரி தெரியிதா?” என்று சாதரணமாக கேட்க
வேகமாக இல்லை என தலையாட்டினாள் “பின்ன! என்ன பிடிக்கலையா?” என்றதும் இதற்கு என்ன சொல்வது என நிரஞ்சனா யோசிக்க
“உன்ன தான் கேட்டேன் வாய திறந்து பதில் சொல்லணும் உனக்கு பேச தெரியும் தானே ஊமை மாதிரி தலையை ஆட்டிட்டு இருக்க கூடாது!” என்று அதட்ட
சட்டென “பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்!” என்று வேகமாக பதில் வர அவள் பதிலில் பட்டும் படமால் இதழ் விரித்தவன் “ம் அப்றம் எதுக்கு என்ன பாத்ததும் ஓடுற கல்யாணம் பேசுரத்துக்கு முன்னாடி வாய் கிழிய வக்கணையா பேசுனா இப்போ என்ன ஆச்சு!” என்று அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டே கேட்க
தலைகுனிந்தபடி கம்மிய குரலில் “நா எப்பவும் போல தான் இருக்கேன் உங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சா அதுக்கு நா பொறுப்பு கிடையாது!”
“ம் நல்லாவே பேசுற ஆனா தெளிவா பேசிட்டா இன்னும் நல்லா இருக்கும் சொல்லு என்ன பிரச்சனை எதையும் வெளிப்படையா சொன்னாதானே தெரியும் அந்த பக்கம் இருக்குறது பூதமா இல்ல புலியான்னு!, நானும் கல்யாணம் முடிஞ்சத்திலிருந்து பாக்குறேன் உன்னோட முகமே சரியில்ல எதையோ கேக்கணும்னு நினைக்கிற பிறகு யோசனையாவே இருக்க உன்னோட மனசுல இருக்குறத சொல்றதுக்கு எதுக்கு தயக்கம்! மத்தவங்க கிட்ட கேக்க தயக்கமா இருந்தா என்கிட்ட கேட்கலாமே நா உன்னோட புருஷன் தான பின்ன ஏ இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்னடா விஷயம்” என்று கரிசனம் நிறைந்த குரலில் கேட்க
“ம் ரொம்ப தான் கரிசனம் பொங்குது” என மனதில் அலட்டி கொண்டவள் “எப்டி கேக்குறது ஒருவேளை அந்த பொண்ணு சொல்றது பொய்யா இருந்து இவர்கிட்ட அந்த பொண்ணு அப்டி சொன்னான்னு சொன்னா இவரு மனசு கஷ்டப்படுமே, உங்களுக்கு நா ரெண்டாம் தாரம்னு அந்த வார்தைய சொல்லவே எனக்கு பிடிக்கல அப்டி இருக்குறப்போ இவரு மேல சந்தேகப்படுற மாதிரி தானே நினைப்பாரு கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகிருக்கு அதுக்குள்ள சந்தேகம், அதுவும் யாரோ ஒரு பொண்ணோட பேச்ச கேட்டு! பிரெண்டுன்னா நல்லது தானே பண்ணனும் கெடுக்க கூடாதே” என எண்ண ஓட்டத்தை தடை செய்தவள் “ச்சீ என்ன இது சந்தேகம் அது இதுன்னு என்ன வார்த்தை இது” என தலையை உலுப்பி கொள்ள
அவளை விச்சித்திரமாக நோக்கியவன் “என்ன ஆச்சு?” 
“இல்ல ஒன்னுமில்ல” என்றவள் “இல்ல நேத்து நீங்க போன் பேசிட்டு இருந்தப்போ ஒரு பொண்ணு வந்திருந்தா உங்க பிரெண்ட்ன்னு கூட சொன்னா..!” என்று தயங்க
 
“ம் மேல” என ஊக்கியவனின் புருவ மத்தியில் முடிச்சு விழ”அந்த பொண்ணு பேர் நந்தினி உங்கள நல்லா தெரியும்னு சொன்னா!” என்று அவன் முகத்தை பார்க்க
யோசனையும் திகைப்புமாக இருந்த முகத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென மாற்றிக்கொண்டு உணர்ச்சியற்ற கல் போல இறுகி போய் இருந்த முகத்தை கண்டு திடுக்கிட்டு போனாள் சற்று முன் இருந்த முகமா இது என்று பறையாய் இருக்கிய முகத்தில் இருந்து ஒன்றையும் கண்டு கொள்ள முடியவில்லை 
“கிட்ட தட்ட என்னோட வயசு தான் இருக்கும் நீங்க போன் பேசிட்டு இருக்கிங்கன்னு சொல்லிட்டு, அதுவரைக்கும் உக்காருன்னு சொன்னேன் வேணான்னு அவசர அவசரமா மறுத்துட்டு வேலைக்கு நேரமாச்சுன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க” என்று அவள் கூறிய ஒரு பகுதியை விட்டுவிட்டு கடைசி பகுதியை ஒப்பித்தவள் வம்சியின் முகத்தை கவனத்துடன் சிறு மாற்றமேனும் ஏற்படுகிறத என ஆராயும் பார்வை பார்க்க
“ஓ இது தான் விஷயமா?” என்றான் விட்டேரியாக “சரி நா போய் குளிச்சிட்டு வறேன் கிளம்பி ரெடியா இரு என்ன?” என்றவன் “இது தானே வேற எதுவும் இல்லயே?” என கேட்க
‘வேற எதுவும் இல்லன்னா அந்த பொண்ணு சொன்னது ச்சே அந்த மாதிரி இருக்காது என்ன மடத்தனமான எண்ணம்’ என தனக்கு தானே குட்டி கொண்டவள்
“வேற எதுவும் இல்ல ஏ வேற ஏதாவது இருக்கா என்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறீங்களா?” என போட்டு வாங்கும் எண்ணத்தோடு கேட்க
“ஒன்னுமில்ல! ஆனா ஒன்னு மட்டும் சொல்ல நினைக்கிறேன்” என்றவன் “தலைக்கு குளிச்சிருக்கியா ம் ரொம்ப அழகா இருக்க!” என்றதும் கன்ன கதுப்புகளில் சூடேறி செம்மை படர தலையை தாழ்த்தி கொண்டாள் நிரஞ்சனா “ஆனா என்ன பண்றது ஒரு வாரம் முழுசா இன்னும் ஆறு நாள் நா பிரம்மச்சாரி விரதம் இருக்கணும் பந்தி வச்சுட்டு வேடிக்கை பாக்க வைக்கிறாங்களே என்ன பண்ண!, அவங்க நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து தானே ஆகணும், கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளாம கொண்டு போக போகுது” என நெடிய மூச்சை இழுத்து விட்டவன் 
“நீ ரொம்ப அழகா வெட்கப்படுற சனா இன்னும் கொஞ்ச நேரம் உன்ன பாத்துட்டே இருந்தேன் என்ன என்னாலயே கன்ட்ரோல் பண்ண முடியாது ஆனா ஒன்னே ஒன்னு மட்டும்” என்றவன் அவள் பட்டு கன்னத்தில் இதழ் பதித்து வேகமாக திருப்பி செல்ல
அவன் முத்ததில் நாணம் உண்டாக பெண்மையின் அங்கங்கள் சிலிர்த்தன மெல்லிய குருநகையோடு “வசி” என்றழைக்க டவல் எடுத்து கொண்டு குளியலறை உள்ளே செல்லவிருந்தவன் “என்ன!” என பார்த்தான்
“ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்களையே பாவம்!” என்று உதட்டை பிதுக்கி காட்ட 
மென்கை புரிந்தவன்”அடி சினுப்பாகோழி வாய் ரொம்ப நீழுது போடி போய் ரெடியாகிட்டு வா உனக்கு ஒன்னு கொடுக்கணும்னு இருக்கேன் நேத்து மாதிரி டிமிக்கி குடுத்துட்டு இருந்த எங்க இருந்தாலும் சரி அலேக்க தூக்கிட்டு வந்துருவேன்” என்றவன் ஓர் எட்டு முன்னே வைக்க ஏதாவது செய்து விடுவானோ என்றெண்ணியவள் வேகமாக அறையை விட்டு வெறியேறினாள் 
தனபதி கோபால் இருவரும் அன்றைய செய்தித்தாளை புரட்டி கொண்டிருக்க நாணத்துடன் தனியே சிரித்தபடி இறங்கி வருபவளை கண்டு “அம்மா நிரஞ்சனா அத்தைகிட்ட சொல்லி கஞ்சி கொண்டுவர சொல்லும்மா!” என்று கூற
எதையும் கேக்காது தன் போக்கில் அறைக்கு சென்றாள் மனதில் உண்டான சிலிர்ப்பில் ‘அப்பப்பா என்ன மாதிரியான உணர்வு’ என தலையை சிலுப்பி கொண்டவள் ‘அப்பா கூட சொல்லிருக்காரே முத முதல்ல உன்ன கையில வாங்குனப்ப அதுல அன்பு பாசம் கடமை பொறுப்பு கட்டுப்பாடுன்னு எல்லாமே இருந்ததுன்னு, என்று அவர் கூறிய அனைத்தையும் அவளும் உணர்ந்திருந்தாள் ‘ஆனால் இன்று இவன் ஸ்பரிசம் இவன் தொடுதல்’ என கன்னத்தை தொட்டு பார்த்தவளுக்கு செவி மடல்களில் சூடேறிவதை உணர முடிந்தது 
மனதில் இருந்த கோபம் குழப்பம் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் பாலைவன மணலில் ஊற்றிய நீர் போல தடம் இல்லாமல் போய் விட்டது, தன் போக்கில் கண்களை தடவினாள் அப்போது கூட உணரவில்லை பதைப்பதைப்பில் விட்டால் போதுமென தப்பித்தோம் பிழைத்தோம் போல் அல்லவா ஓடி வந்தாள் ‘இப்டி சிரிச்சா பொறமையில இல்லாது பொல்லாததை தான் சொல்லுவாங்க’ என்றவளுக்கு திக்கென்றானது 
‘ஒருவேளை ஒருதலை காதலா இருக்குமோ? அவன அடைய முடியலன்ற கோபத்துல அந்த மாதிரி சொல்லிருப்பாளோ? ஏ இந்த நிலையில யோசிக்கல பிரெண்டுன்னு சொன்னா ஆனா கூப்ட்டப்போ வேலைக்கு நேரம் ஆச்சுன்னு பொய்யா ஒரு சாக்கு சொல்லிட்டு போவாளா அதுவும் அவசர அவசரமா! அப்படித்தான் இருக்கும் இல்லைன்னா மாப்பிள்ளைக்கு இது செகண்ட் மேரேஜ்ன்னு முன்னாடியே அப்பா சொல்லிருப்பாரே முதல ஒத்துட்டு இருந்திருப்பாரா அவ சொன்னது நிச்சயம் உண்மையே இல்ல என்னோட வசி எனக்கு மட்டுமே சொந்தமான வசி’ என மனம் குதுகலத்தில் கொண்டாட 
“என்ன பொண்ணுமா நீ தலைய துவட்டாம இப்டி வந்து உகாந்திருக்கயே சளி பிடிச்சிருச்சுன்னா என்ன பண்றது!” என கொண்டையிட்டிருந்த துண்டை வைத்து துடைத்து விட்டார் பல்லவி 
“இருக்கட்டும் பெரியம்மா நா பாத்துகிறேன் கொடுங்க வெளிய லேசா வெயில் அடிக்கிது அதுல உலர்த்துன சீக்கிரம் காஞ்சிறும்!” 
“சரி போ நல்லா துவட்டு சரியா!” என்று கூற சரியென தலை ஆட்டிவிட்டு வெளிய வந்தவளை தனபதி அழைத்தார்
“என்ன மாமா என்ன வேணும்!” என்றதும் “மருமகளே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நா சொன்னது உனக்கு கேக்கலையா?” என திகைப்புடன் கேட்க
‘அய்யோ என்ன சொல்லிருப்பாரு இத கூட கவனிக்காம… எல்லா அவனால தான்!’ என நொந்தவள் ‘கேக்கலைன்னு சொன்னா அவரு வார்த்தைக்கு மதிப்பில்லைன்னு நினைச்சுருவாறோ… அம்மா சொன்னாங்களே மதிப்போட நடந்துக்கணும்னு உண்மைய சொன்னா மரியாதை தெரியாத பொண்ணுன்னு சொல்றதும் இல்லாம அப்பா அம்மாவுக்கு தானே கெட்டப்பேரு வரும் என்ன வளத்து வச்சுருக்காங்கன்னு கடவுளே காப்பாத்து முருகா’ என மனதில் புலம்பி கொண்டிருக்க
“என்ன மருமகளே கேட்டதுக்கு பதில் காணோம்” என்றவரை “இப்போ என்ன தெரியணும் அவளுக்கு கேட்டுச்சா இல்லையான்னு தானே! அவளுக்கு கேட்டுருக்காது நீங்கன்னு இல்ல அந்த நேரத்துல அவ புருஷன தவிர வேற யார் கூப்பிட்டு இருந்தாலும் கேட்டுருக்காது” என்று சோபா அவளுக்கு துணை வர
கோபமோ என சோபினாவின் முகத்தை பார்த்தாள் அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை தன்னை கேலி செய்கிறார் என ஊகித்தவள் “போங்க அத்தை!” என செல்ல சிணுங்களுடன் நகர
“எதுனாலும் என்கிட்ட கேளுங்க சத்தம் கொடுத்தா வரபோறேன் பாவம் நீங்க கேட்டதும் என்ன சொல்லறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தா பயந்துட்டா போல” என லேசாக சிடுசிடுப்பை காட்டியவர் “சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பி இருங்க கோவிலுக்கு போகணும்!” என்று அடுக்களை சென்றுவிட்டார் 

Advertisement