நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. ஆமை வேகத்திலும், முயல் வேகத்திலும் அவரவர் மனநிலை பொறுத்து நாட்கள் நகர, அதோ இதோ என்று மேலும் ஐந்து மாதங்கள் முடிந்து இருந்தது.
அச்சுதனின் நகை மாளிகை கட்டிடப் பணி கூட ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்க, அனிதாவிற்கும் ஐந்தாவது மாதம் தொடங்கியிருக்க, அனைத்துமே எல்லாம் நல்லவிதமாய் நகர்ந்தாலும் அச்சுதன் அர்ச்சனா விசயத்தில் எவ்வித மாற்றமும் இல்லாது அப்படியே தான் இருந்தது.
தனுஜாவின் மறைவிற்கு பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து கார்மேகம் திரும்பவும் மகளிடம் கேட்டார் “நான் பேசி பார்க்கவா?” என்று.
“ஒரு பொண்ணோட சாவ நமக்கு சாதகமா மாத்திக்கனுமா டாடி..?” என்று அர்ச்சனா கேட்ட கேள்வியில் அவர் என்ன பதில் சொல்ல முடியும்.
ஆனால் ரோஜாவோ “அர்ச்சு நாங்க அன்னிக்கே சொன்னோம் தனுஜா விசயமும் உன்னோடதையும் கனக்ட் பண்ணாத அப்படின்னு. அப்படி பார்த்தா தனுஜா இருக்கும்போதே நீ உன்னோட விருப்பத்தை சொல்லிட்ட…” என,
“ம்மா அவரும் தான் அப்படியொரு எண்ணமில்லைன்னு சொல்லிட்டார் தானே ம்மா…” என்று அர்ச்சனா பேச,
“அது அப்போ டி. அப்போ அச்சுதன் மறுப்பு சொல்றதுக்கு கூட ஒரு காரணம் இருந்தது. ஆனா இப்போ..” என்று கேட்க,
“அதுதான் ம்மா.. அதே தான்.. அப்போ தனுஜா இருந்ததுனால அவர் மறுத்து பேசினதை ஏத்துக்கிட்டோம் தானே. இப்போ தனுஜா இல்லைன்னதும் திரும்ப அப்ரோச் பண்றாங்கன்னு நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்களா? அதுவுமில்லாம, அவருக்கு என்னை நிஜமாவே பிடிச்சு இருந்திருந்தா, அவர் எப்பவோ மனசு விட்டு அவர் சம்மதம் சொல்லிருப்பார் ம்மா..” என,
“அப்போ இதுக்கு என்ன தான் டி முடிவு?” என்று ஆற்றாமையாய் கேட்டார் ரோஜா.
“தெரியலை.. அவரோட மனசு மாறும்னு இன்னும் கூட எனக்கு கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம். ஐ நீட் சம் டைம் ம்மா..” என்றிட, பெற்றவர்களுக்கு என்ன சொல்ல முடியும்.
“எஸ் டாடி கண்டிப்பா.. எல்லார் கதையும் ஒரேமாதிரி இருக்காது. ஒருவேளை அச்சத்தான், வேற பொண்ண கல்யாணம் பண்றார்னு கூட வைங்க, அதையும் நான் மானசார ஏத்துக்குவேன்.. லெட்ஸ் சி டாடி..” என்றவள், அவளின் அறைக்கு வந்துவிட,
அங்கே அச்சுதன் வீட்டிலோ, பெண்கள் மாநாடு நடந்துகொண்டு இருந்தது.
“அக்கா இப்போவும் இவன் வேணாம் சொல்றதுக்கு காரணமே இல்லை. இதோ டாக்டரே ஹி இஸ் ஆல்ரைட் அப்படின்னு எல்லா சர்ட்பிகேட்டும் கொடுத்திருக்கார். முன்னைவிட நல்லாவே இருக்கான் இப்போ. தனுஜா விஷயம் உறுத்தலா இருந்தது. இப்போ அதுவுமில்லை. இன்னும் என்னதான் வேணுமாம் அச்சுதனுக்கு?” என்று சுமிதா பேச,
“அவன் வந்ததும் நீங்களே எல்லாம் கேளுங்கம்மா. வளர்த்த அம்மாக்கள் தானே. சின்னதுல இருந்து அவன் சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு சொல்லி சொல்லி ரெண்டு பேரும் வளர்த்தீங்க. இப்போ எங்க வந்து நின்னிருக்கோம் பார்த்தியா?” என்று நீலவேணி பேச,
பாமினியோ “அதுக்கில்லக்கா, அனிதாக்கு அஞ்சுமாசம் நடக்குது. ஏழாவது மாசம் வளைகாப்பு செய்யலாம் அப்படின்னா, ஆடி மாசமா வருது. நம்மதான் ஆடியில எந்த விசேசமும் செய்ய மாட்டோமே. அதுனால இந்த மாசமே ஒரு நல்ல நாள் பார்த்து வளைகாப்பு வச்சிட்டா நல்லது இல்லையா. சம்பந்தி வீட்ல இத்தனை அமைதியா போறாங்க அப்படின்னா, அனிதாவை இங்க கட்டி குடுத்ததுனால தானே..” என்று பேச,
“வரட்டும்.. ஒரு முடிவு செய்வோம்…” என்றவர் சொன்னதபோலவே மகன் வரவுமே அனிதா வளைகாப்பு விசயத்தை முதலில் ஆரம்பிக்க,
“நல்ல விஷயம் தானேம்மா. சீக்கிரமே நாள் பார்த்தா தானே, அழைப்பு எல்லாம் வைக்க முடியும்?” என்று கேட்க,
“இல்ல வீட்டளவுல சிம்பிளா வைக்கலாம்னு சித்தி சொல்றா…” என்றார்.
“ஏன்? எதுக்கு? நம்பெருமாள் குடும்பத்துல இந்த தலைமுறைக்கு நடக்கிற முதல் வளைகாப்பு. அதெல்லாம் கிரேன்டா பண்ணனும்…” என்று சொல்ல,
“பவஸ்ரீ விசேசத்துலையே, உன்னை கேட்காதவங்க இல்லை. இப்போ சொல்லவே வேண்டாம். பொண்ணு பார்க்கலையா? தம்பி பொண்டாட்டிக்கு வளை போடுறீங்க? அச்சுதனுக்கு எப்போ கல்யாணம்? நீங்க இப்படி அமைதியா இருக்கிறது பார்த்தா ஊர்ல பேசுறது எல்லாம் நிஜம் தான் போல அப்படின்னு ஆயிரம் கேள்விகள் வரும். அதான் எதுக்கு வேண்டாம்னு வீட்லயே நெருங்கின சொந்தம் மட்டும் கூப்பிட்டு, நிகழ்ச்சி பண்ணிக்கலாம்னு…” என்று இழுக்க,
“ம்மா எதுக்கு எதை முடிச்சு போடுறீங்க?” என்றான் அத்தனை நேரமிருந்த உற்சாகம் மாறி.
“நீயும் அப்படித்தானே பண்ணிட்டு இருக்க அச்சுதா…” என்று வந்தார் அவனின் சித்தப்பா தாமோதரன். கூட மற்றவர்களும் வர, அச்சுதனுக்கு புரிந்துபோனது அனைவரும் பேசி வைத்துக்கொண்டு எல்லாம் செய்கிறார்கள் என்று.
முந்தய தினம் தான் அர்ச்சனாவிடம் கிளி பிள்ளைக்கு சொல்வது போல சொல்லியிருந்தான். அவனுக்குமே அவளது காத்திருப்பு மனதிற்கு ஒருமாதிரி சங்கடத்தை கொடுக்க,
“உனக்கே இது சரின்னு படுதா அர்ச்சனா?” என்றான் சைட் சென்றவன், டென்ட்டினுள் வந்து.
“ஏன்? என்னாச்சு? எதுவும் வொர்க் தப்பா பண்றாங்களா?” என்று அர்ச்சனா கேட்க,
“ம்ம்ச்.. நான் உன்னை சொன்னேன்..” என்றவன் அவளின் முன்னே இருக்கையில் அமர்ந்து, அவளது முகத்தை நேரே பார்த்து “நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்…” என்று சொல்ல,
அர்ச்சனாவின் இதழ்களில் தானாக வந்து ஒரு மென்னகை ஒட்டிக்கொண்டு “என்ன கேட்கணும்?” என்றாள்.
“இப்படி சிரிக்காத நீ…” என,
“ஏன் நீங்க டிஸ்டர்ப் ஆகுறீங்களா?” என்று அவளும் விடாது கேட்க,
“சோ வாட். ஓப்பன் ஸ்டேட்மென்ட்டே குடுத்துட்டேனே. நான் உங்களைத்தான் பாக்குறேன் அப்படின்னு. இதுல இதெல்லாம் சின்ன விஷயம் அச்சத்தான்…” என்றவள்,
“சரி என்ன விஷயம்? என்ன நான் கேட்கணும்?” என்று அவளும் அவனைப் போலவே தீவிரமான முக பாவனை வைக்க,
‘என்ன சொன்னாலும் கேட்கிறாளா இவ?’ என்று அச்சுதன் மனது அயர்வாய் உணர்ந்தது.
‘இதுக்கே டயர்ட் ஆனா எப்படி?!’ என்று அர்ச்சனா எண்ணியவள் “சொல்லுங்க அச்சத்தான்..” என்று ஊக்க,
“என்னை மறந்துடு அர்ச்சனா…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ம்ம்ம்…” என்று உதடு பிதுக்கியவள், அழகாய் காற்றில் பறக்கும் கேசத்தை ஒதுக்கி “கஷ்டமான விஷயம் செய்ய சொல்றீங்களே…” என்று கேட்க,
“முயற்சி பண்ணா முடியாதது எதுவுமே இல்லை…” என்று அவனும் பேச,
“எஸ் அதான் நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்…” என்றாள் இரு கைகளையும் விரித்து.
‘ஐயோ..!’ என்று கண்களை மூடித் திறந்தவன் “எனக்கு நிஜமா இப்போ கல்யாணத்துல எல்லாம் விருப்பமே இல்லை அர்ச்சனா. தனுஜா விசயம்னு இல்லை. கல்யாணம்னு நினைச்சாலே எனக்கு அந்த கோர சம்பவம் தான் நினைப்புக்கு வருது…” என்று அவனது வலியை முகத்தினில் காட்டி பேச,
“அதிலிருந்து மீண்டு வாங்களேன் அச்சத்தான்…“ என்றாள் அவளும் அவனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாய்.
“என்ன முயற்சி செஞ்சும் அதுமட்டும் முடியலை. இங்க பாரு அர்ச்சனா, உன்னோட காதல் எனக்கு புரியுதா இல்லையான்னு கூட எனக்கு தெரியலை. நீ இப்படி காத்திருக்கிறதே எனக்கு ஒருமாதிரி ஸ்ட்ரெஸ் கொடுக்குது. எல்லாரும் எப்போன்னாலும் இதை பேசுவாங்கன்னு மனசு அடிச்சிட்டே இருக்கு…” என்று சொல்ல,
“என்மேல லவ் அப்படின்னு இல்லை, ம்ம்ம் சின்னதா ஒரு அபிப்ராயம் இல்லைன்னாலும் கூட ஓகே தான் விடுங்க. ஆனா எப்போன்னாலும் யார்னாலும் கேட்பாங்கன்னு ஏன் நினைக்கிறீங்க அச்சத்தான். அதுக்கும் மீறி நான் உங்க பதிலுக்கு எல்லாம் வெய்ட் பண்ணிட்டு இருக்கல…” என,
“ஓ!” என்று பல்லைக் கடித்தவன், அங்கிருந்த மேஜையை ஒரு குத்து குத்தி “எத்தனை அமைதியா சொன்னாலும் உனக்கு புரியாதா?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்ப,
“ஒருவேளை உங்களுக்கு வேற யார்கூடவும் கல்யாணம் ஆகி, நீங்க ஹேப்பியா இருக்கிறதை பார்த்தா எனக்கு புரியலாம்..” என்று இவளும் பேச,
“ஏய்.. ஏய்.. அமெரிக்கா போய் படிச்சியா இல்லை விடிய விடிய படமா பார்த்துட்டு வந்தியா. எல்லாம் சினிமா டயலாக்கா பேசிட்டு இருக்க நீ. கல்யாணமே எனக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேன்..” என்று கோபத்தில் எகிறி குதிக்க,
“யப்பா..!” என்று காதை மூடிக்கொண்டவள்,
“கல்யாணம் பிடிக்கலைன்னா போங்க. அதுக்கு ஏன் என்கிட்டே வந்து சத்தம் போடுறீங்க?” என்று கேட்க, உள்ளே அவளுக்கும் கொஞ்சம் அவனது கோபம் கண்டு பயமாய் தான் இருந்தது.
கோபத்தில் பேசியிருக்கிறான் தான். ஆனால் இன்றோ அவனது முகத்தினில் ஒருவித அசாத்திய நிமிர்வு தெரிந்தது. இதுமட்டும் தான் என் முடிவு என்று சொல்லாமல் அவனது கண்கள் சொல்லிக்கொண்டு இருக்க, அர்ச்சனாவோ வார்த்தைகளில் விளையாடிக்கொண்டு இருக்க,
“நீதானே என்னை விரும்புறன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்க…” என்று அவளின் முகத்திற்கு முன்னே கையை நீட்டி பேச,
“ஷ்..! மெல்ல.. வெளிய இருந்து யாரும் வந்துடப் போறாங்க..“ என்றிட,
“இங்க பாரு இதுதான் என்னோட முடிவு. சோ எனக்காக வெய்ட் பண்றது எல்லாம் வேஸ்ட்…” என்றவன் கிளம்பிவிட, இன்றோ பெரியவர்கள் பேச வந்திருக்க, அவனுக்கு நிஜமா இந்த விஷயம் எண்ணி எண்ணி அலுப்பாய் இருந்தது.
எத்தனை முறை சொல்வது இவர்களிடம்..
“என்ன சித்தப்பா?” என்றவன் சோர்வாய் கேட்க,
“வளைகாப்பு விஷயம் பேசணும் இல்லையா?” என்று சுரேந்திரன் ஆரம்பிக்க,
“அதுக்கென்ன சித்தப்பா, நல்லவிதமா செய்யலாம்.. கிரேண்டாவே பண்ணலாம்…” என்றவன் அனிதாவிடம் “உனக்கு எதுவும் ஐடியாஸ் இருக்கா அனிதா…” என்று கேட்க, அவளோ பிரகாஷ் முகம் பார்க்க,
“அவனை ஏன் ம்மா பாக்குற?” என்றார் பாமினி.
“ம்மா அனிக்கு, ஒப்பன் கார்டன்ல மேடை போட்டு, நல்லா செய்யனும்னு ஆசை…“ என்று சொல்ல,
“அதுக்கென்னப்பா, நம்ம வீடு சுத்தியே இத்தனை பெரிய இடமிருக்கு.. தீம் செட்டர்ஸ் இருக்காங்க. சொல்லிட்டா எல்லாம் ப்ளான் பண்ணிக்கப் போறாங்க..” என்று சுரேந்திரனும் பேச, மேற்கொண்டு சிறிது நேரம் வளைகாப்பு பற்றி பேசியவர்கள்,
“உனக்கு அடுத்து கல்யாணம் வைக்கணும் அச்சுதா…” என்று சொல்ல,
“சாரி சித்தப்பா.. நேத்தே அர்ச்சனாக்கிட்ட தெளிவா பேசிட்டேன். கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இப்போ இல்லைன்னு..” என்றவன் “என்னை தப்பா நினைக்காத அனிதா…” என்றும் சொல்ல,
“உன்னை யாரு அர்ச்சனாவை கல்யாணம் பண்ண சொன்னது?” என்று கேட்டார் தாமோதரன்.
அச்சுதன் திடுக்கிட்டு பார்க்க, நீலவேணியோ “அதானே நல்லா சொல்லுங்க. அர்ச்சனாவை விட்டா வேற பொண்ணே இல்லியா? பொண்ணு தேடுவோம்.. கண்டிப்பா அமையாம போகாது…” என்று பேச, அனிதா இதனை எல்லாம் ஒரு பார்வையாளராய் தான் பார்த்து இருந்தாள்.
அவளுக்குத் தெரியும் முன்னமே இப்படித்தான் பேசப் போகிறார்கள் என்று.
“ம்ம்ச்..” என்று சலித்தவன் “கொஞ்ச நாள் போகட்டும்…” என்று சொல்ல,
“இன்னும் எத்தனை வருஷம்?” என்றார் சுரேந்திரன்.
“சித்தப்பா…!” என்று பல்லைக் கடிக்க,
“உங்கப்பா இருந்திருந்தா உன்னை இப்படியே விட்டிருப்பாரா அச்சுதா? எங்களுக்கும் உன்மேல கொஞ்சம் உரிமை எல்லாம் இருக்கு. உனக்கு இன்னும் நாலு மாசம் டைம். அர்ச்சனாவே அப்படின்னாலும் எங்களுக்கு சந்தோசம். இல்லையா வேற பொண்ணு பார்க்கிறதுன்னாலும் சரிதான்..” என்ற தாமோதரன்
“அண்ணி, எங்க அண்ணன் இல்லை. எங்க அண்ணன் ஒருத்தரால மட்டும் தான் இன்னிக்கு நாங்க இந்தளவுக்கு முன்னேறி இருக்கோம். அவர் இல்லைங்கிறப்போ, அவரோட கடமை பொறுப்பு எல்லாம் எங்களுக்கு சொந்தம். நாங்க செஞ்சுதான் ஆகணும். இல்லை அப்படி அச்சுதன் எதுக்கும் கட்டுப்பட்டு வரலை அப்படின்னா, எல்லாத்தையும் பிரிச்சிடலாம் அண்ணி. அவங்கவங்க வாழ்கையை பார்த்துக்கலாம்…” என்றிட,
“சித்தப்பா என்ன பேசுறீங்க நீங்க?” என்று அச்சுதன் பேச,
“எங்க பேச்சுக்கு மதிப்பில்லை அப்படின்னா வேற நாங்களும் என்ன செய்ய முடியும்?” என்றார் சுரேந்திரன்.
இந்த வார்த்தைகள் அச்சுதனை வெகுவாய் தாக்கியது. நம்பெருமாள் குடும்பம் உடைவதா?
அதுவும் அச்சுதனாலா?!
நினைத்துப் பார்க்கவே அவனுக்கு முடியவில்லை.
வாழ்வில் யாரும் ஒரே நிலையில் தேங்கி நிற்க முடியாது. வாழ்வின் ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கத்தான் வேண்டும். அப்படி யாரேனும் நின்றுவிட எண்ணினால், ஒன்று அவரது ஓட்டம் கட்டாயமாக்கப் படும். இல்லையோ யாரேனும் ஒருவரால், தள்ளிவிடப் பட்டு எழுந்து ஓடு என்று சொல்ல வைக்கும்.
அச்சுதனுக்கோ கட்டாயமாக்கப்பட்டு இருந்தது இப்போது.
அவன் வாழ்வில் அடுத்த கட்டும் செல்வது என்பது இன்னும் நான்கு மாதத்தில் அவன் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்க, “நகை கடை வேலைகள் எல்லாம் முடியட்டும் யோசிக்கிறேன்…” என்றுவிட்டான்.
ஆனால் மனதினுள்ளே எதோ ஒரு சிறு கோபம் அர்ச்சனா மீது கனன்று கொண்டே இருந்தது. எல்லாம் இவளால். இவளின் பிடிவாதத்தால். அர்ச்சனா மட்டும் மனதை மாற்றி இருந்தால், இன்று இந்த நேரம் இந்த பேச்சே வந்திருக்காது என்று நினைத்து நினைத்து பல்லைக் கடித்தவனுக்கு, அந்த கோபம் மனதினில் தேங்கி நின்றது.
வரும் வாரம் வியாழக் கிழமை வளைகாப்பு என்று தினம் குறிக்க, இரு வீட்டு ஆட்களும் அழைப்பு வைக்கவென்றும், ஷாப்பிங் செல்லவென்றும் அலைந்து கொண்டு இருக்க, அர்ச்சனாவோ “ம்மா எனக்கு சேலை சிம்பிளா இருந்தா போதும்…” என்று சொல்ல,
“அதான் உன்னோட சித்தி வர்றாளே.. அவளோட ஷாப்பிங் போய் நீயே உனக்கு வேண்டியதை எடுத்துக்கோ..” என்று ரோஜா சொல்ல,
“சித்தி கூட ஷாப்பிங்கா ம்மா.. ஏன் ம்மா என்னை கோர்த்து விடுற.. கடைக்கு போனா ஒருநாள் ஆனாலும் வெளிய வரமாட்டாங்க. அங்க அவங்களோட வெளிய போயே நான் ஷாப்பிங் வெறுத்துட்டேன்…” என்று பேச,
“நீயும் அவளும் தானே ரொம்ப க்ளோஸ்.. அவக்கிட்ட நீயே சொல்லிக்கோ…” என்றுவிட்டார் ரோஜா.
ரோஜாவின் தங்கை முல்லை வீட்டில் இருந்து தானே அர்ச்சனா அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தது. அர்ச்சனா இங்கே வரும்போதே முல்லையும் குடும்பத்துடன் வர எண்ணினார். ஆனால் விசா அப்போது கிடைக்கவில்லை. அடுத்தடுத்து முயன்றுகொண்டே இருக்க இப்போது சரியாய் அனிதாவின் வளைகாப்பு நேரத்தில் வருகிறார்.
அதையும் மீறி ரோஜா பேசி பேசியே அவரை வரவழைத்து இருந்தார்.
“நீ வந்து பேசு டி முல்லை. இந்த அர்ச்சனா பிடிவாதமா இருக்கா? அந்த பையன் இவளை திரும்பிக் கூட பார்க்கிறது இல்லை. ஆனாலும் காதல் கத்திரிக்காய்னு பேசிட்டு இருக்கா.. நீயும் உன் வீட்டுக்காரரும் பேசினா கண்டிப்பா அவ கேட்பா…” என்று சொல்லியிருக்க,
“இத்தனை நடந்திருக்கு, இந்த அர்ச்சு என்கிட்டே ஒண்ணுமே சொல்லலைக்கா…” என்று முல்லை வருந்த,
“இப்போவும் நீ தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. இங்க வந்தப்புறம் பேசு…” என்றிருந்தார்.
முல்லையின் வரவு யாருக்கு சாதகம் என்று தெரியவில்லை.