Advertisement

அத்தியாயம் 08

ஷியாம் கிருஷ்ணா தன் அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயாவின் வாசலில் இருந்தான். வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது. எப்படி அவளை எதிர்கொள்வது? என்ன கேட்பாள்? என்று யோசனையாக இருக்க காரிலேயே அமர்ந்துவிட்டான்.

சில நிமிடங்களுக்கு பிறகு என்னவானாலும் பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்தவனாக காரை விட்டு இறங்கியவன் அந்த பள்ளியினுள் நுழைய, பசுமையான மரங்கள் சுற்றிலும் அரணாக இருக்க, நடுவில் சிறிய சிறிய குடில்கள் அந்த கால குருகுலத்தை நினைவுபடுத்தியது.

அந்த இடத்தின் ஒருபக்கத்தில் அந்த குடில்களுக்கு எதிர்புறம் ஒரு கட்டிடம் இருக்க, அதன் உள்ளே சென்றால் சில நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. அதற்கு எதிரில் ஒரு அறை இருக்க, நிச்சயம் அவளின் அறையாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் அந்த அலுவலகத்திற்குள் நுழைய, அந்த அறையின் பக்கவாட்டில் இருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.

இவனை கண்டவள் அருகில் வந்து “சொல்லுங்க சார், யாரை பார்க்கணும்” என்று கேட்க, அந்த நேரம் இவனுக்கு பின்னால் வந்து நின்றார் மாரி. அவரின் பாப்பாவை காணாததால், அவளை அழைக்க உள்ளே வந்தவர் ஷ்யாமை பார்த்ததும் புன்னகைக்க, அந்த பெண் காவ்யாவும் தெரிந்தவரோ ? என்பதுபோல் பார்க்க, ஷியாம் மாரியிடம் “மாரின்னா நான் கன்யாவை பார்க்கணும். உள்ளே இருக்காங்களா, கொஞ்சம் அவசரமா அவங்ககிட்ட பேசணும்” என்று எதுவும் தெரியாதவன் போல பேசவும் மாரி காவ்யாவை பார்க்க அவள் ஸ்ரீகன்யா உள்ளே இருப்பதாக தான் கண்ணை காட்டினாள்.

அதோடு அவனை அங்கே உட்கார சொல்லியவள் உள்ளே சென்று பார்க்க,அங்கே அவள் கண்டது மேசையில் தலையை சாய்த்து கவிழ்ந்து படுத்திருந்த ஸ்ரீகன்யாவை தான்.பதட்டமாக அவள் அருகில் சென்றவள் “மேம் மேம்” என்று அழைக்க

ஸ்ரீகன்யா நிமிர்ந்து பார்க்கவும் தான் உயிரே வந்தது அவளுக்கு. என்னவானதோ என்று ஒரு நிமிடம் பயந்து போயிருந்தாள் அவள். ஸ்ரீகன்யா என்ன என்பதுபோல் அவளை பார்க்க “என்னாச்சு மேம். என்ன பண்ணுது” என்று அவள் கேட்கவும்

“நத்திங் காவ்யா. லேசா தலைவலி அவ்ளோதான்” என்றவள் அதற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருந்தாள். “சொல்லு என்ன விஷயம்” என்று அவளே கேட்க

“மேம் வெளிய ஒருத்தர் வந்திருக்காரு. உங்களுக்கு தெரியும் போல, உங்களை பார்க்கணும் ன்னு வெயிட் பண்றாரு” என்று மொட்டையாக கூற

“என்ன சொல்றே காவ்யா. ஒருத்தர்ன்னா யாரு பேரில்லையா அவருக்கு.” என்று கேட்க

“அவர் எதுவுமே பேசல மேம் என்கிட்டே. மாரி அண்ணாவும் உங்களை கேட்க சொல்லவும் சட்டுன்னு உள்ள வந்துட்டேன் மேம்” என்று உளறிக் கொட்ட

அப்போதுகூட ஷ்யாமாக இருக்கும் என்று நினைக்கவில்லை அவள். யாரோ தெரிந்தவர் என்று நினைத்தவள் மாரி வேறு இவளை அனுப்பி இருக்கவும் அந்த இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு “வரச்சொல்லு” என்று அவளை அனுப்பினாள்.

அவள் வெளியேறிய அடுத்த சில நொடிகளில் ஷியாம் உள்ளேவர, கோபமாக ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அவன் பின்னால் காவ்யா உள்ளே நுழையவும் கண்களில் அனலை தேக்கி அவனை முறைக்க, அவனோ அவளை கண்டுகொள்ளாமல் “காவ்யா ப்ளீஸ், ஒரு பத்து நிமிஷம் வெளியே இருங்க. நான் உங்க மேம் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று கூற

வார்த்தையில் இருந்த மரியாதை தொனியில் இல்லை. அந்த குரல் ஆணையாகவே ஒலித்தது.  அதை உணர்ந்து கொண்டாலும் அவள் அனுமதிக்காக ஸ்ரீகன்யாவை பார்க்க அவள் தலையசைக்கவும் தான் அங்கிருந்து வெளியேறினாள் காவ்யா.

அவள் கண்களால் அனுமதி பெற்றதை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வெளியேறி கதவை மூடவும் தான் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். நன்றாக அமர்நதுவிட்டே அவன் ஸ்ரீகன்யாவை பார்க்க, அசையாத பார்வையால் அவனை கூர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

அவள் பார்வையை உணர்ந்தவனாக “கன்யா ப்ளீஸ். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நான். முடியாதுன்னு சொல்லாத. கண்டிப்பா பேசணும்” என்று கூற

அவன் தொனியே அவன் பேசாமல் போகமாட்டான் என்பதை உணர்த்த, கைகளை கட்டிக் கொண்டவள் “சொல்லுங்க, என்ன பேசணும்” என்று கேட்க

“கன்யா ப்ளீஸ். இப்படி ரியாக்ட் பண்ணாத, நிஜமா உன்னோட இந்த முகமூடியை என்னால பார்க்க முடியல. என்கிட்டே இப்படி இருக்காத” என்று அவன் ஏதோ உரிமைப்பட்டவன் போல் பேச

“ஷியாம் ப்ளீஸ். என்ன பேசணுமோ அதை மட்டும் பேசுங்க.”

“நான் ஏற்கனவே பேசிட்டேன் கன்யா. ஆனா உன்னை பேச விடாம அப்படி நானே பேசிட்டு போனை கட் பண்ணது தப்புன்னு தோணுச்சு. அதான் உன்னை பார்த்திட்டு போலாம் ன்னு வந்தேன், பரவால்ல நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாம தெளிவாத்தான் இருக்க” என்று கூற

“என்ன பண்ண சொல்றிங்க ஷியாம். யாரோ எதுவோ தேவையில்லாததை பேசினா அதுக்காக நான் வருத்தப்படணுமா, தேவையில்லையே.” என்று தெளிவாக பேச

“ஏன் வருத்தப்படணும் கன்யா. நீ வருத்தப்படற அளவுக்கு நான் ஒன்னும் பேசலையே. வேணும்ன்னா என்மேல கோபப்படலாம். ரெண்டு திட்டு கூட திட்டிடலாம்” என்று கூறியவனிடம்

“தப்பு பண்றிங்க ஷியாம். உங்க மேல கோபப்பட நான் யாரு.” என்று கேட்டவள் அவன் ஏதோ கூற வரவும், அவனை கைஉயர்த்தி தடுத்துவிட்டு “அதைவிட முக்கியம் நீங்க எனக்கு யாருமே இல்ல. உங்ககிட்ட கோபப்படற அளவுக்கு நமக்குள்ள எந்த உறவும் இல்ல.இஸ் தட் க்ளியர்? ” என்று கேள்வியாக முடிக்க

அவளை பார்த்தவன் “நிச்சயமா அப்படி சொல்லிட முடியாது. ஓகே அதைப்பத்தி இன்னொருநாள் பேசுவோம். இப்போ விஷயத்துக்கு வருவோம். சொல்லு என்ன பிரச்சனை என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல” என்று அவன் நேரடியாகவே கேட்க

எள்ளலாக சிரித்தவள் ” மொதல்ல நான் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும். யார் நீங்க? ஒரு ரெண்டு டைம் பார்த்திருப்போமா? ஒரே ஒரு முறை உங்ககிட்ட பேசி இருக்கேன்.அதுவும் கேசவ் அண்ணா பிரெண்ட் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக. ஆனா இதையே வச்சிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டுட்டு இருக்கீங்க நீங்க. என்ன தெரியும் உங்களுக்கு என்னைப்பத்தி? எந்த அடிப்படையில என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறீங்க.” என்று  அவள் கேட்க

” எனக்கு எல்லாமே தெரியும் கன்யா. உன்னை பத்தின அத்தனை விஷயங்களும் தெரியும் எனக்கு” என்று அவன் அமைதியாக கூற

ஒரு நொடி அதிர்ந்து போனாலும், ஊருக்கே தெரியும் இவனுக்கு எப்படி தெரியாம இருக்கும் என்று கேட்டுக்கொண்டவள் “சோ, என்ன பரிதாபமா? வாழ்க்கை கொடுக்கலாம் ன்னு முடிவு பண்ணிட்டிங்களா” என்று நக்கலாகவே  கேட்க

“நீ என்னை காயப்படுத்தணும்ன்னு பேசிட்டு இருக்க கன்யா. ஆனா ஒருவிஷயம் யோசிச்சியா, உன்னைப்பார்த்து பரிதாபப்பட என்ன இருக்கு.ஏன் உன்மேல நான் பரிதாபப்படணும்?” என்று கேட்க அவளிடம் பதிலில்லை.

“நிஜமா சொல்லணும்ன்னா உன்னை பார்த்து பிரமிச்சு போயிருக்கேன் கன்யா. எத்தனை போராட்டம் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிட்டு உன் கேரியர்ல ஜெயிச்சு இருக்க. இன்னிக்கு உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்க. உன் அம்மா உன்கூட இருந்ததெல்லாம் ஓகே, ஆனா நீ தப்பிப்போக நெறைய வாய்ப்புகள் இருந்திருக்கு கன்யா.”

“ஆனா எதையுமே தேடிப்போகாம, எதுலயும் உன்னை இழக்காம நீ நீயாவே நிற்கிற பாரு. அந்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு. இன்னிக்கு நினைச்சாலும் உன் அப்பாவோட போய் நிற்க உன்னால முடியும் ஆனா அதை செய்யாம நான் ரஞ்சனியோட பொண்ணுன்னு நிற்கிற உன் திமிர் எனக்கு பிடிச்சிருக்கு. இந்த திமிர் பிடிச்ச பொண்ணோட என் லைப் சுவாரஸ்யமா போகும்ன்னு என் உள்மனசு சொல்லுது.”

“நான் உன் பின்னாடி வரதுக்கு இதெல்லாம் தான் ரீசன்ஸ். மத்தபடி நீ சொன்ன மாதிரி பரிதாபமும் இல்ல, மந்திரி பொண்ணு நல்ல சொத்து தேறும் ன்னு கணக்கும் இல்ல. ஷியாம் அப்படிப்பட்டவனும் கிடையாது. பரிதாபத்துக்காக வாழ்க்கை கொடுக்கிற அளவுக்கு ஷியாம் நல்லவன் இல்ல கன்யா” என்று கூற

இவனை அவ்வளவு எளிதில் தன்னால் எதிர்கொள்ள முடியாது என்று புரிந்து போனது பெண்ணுக்கு. அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவள் “முடிச்சிட்டிங்களா ஷியாம். நீங்க சொல்ற அத்தனை விஷயமும் சரியாய் கூட இருக்கலாம்.”

“ஆனா இதுக்காகவெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது இல்லையா. அதோட எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவும் இல்ல” என்று அவள் கூறும்போதே “நானும் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கோ ன்னு உன்கிட்ட கேட்கல கன்யா” என்று இடைமறித்தவன்  “எனக்கு தேவை கன்யா மட்டும்தான்.

ஆனா  அதுக்காக அறுபது வயசானாலும் சரி காத்திருக்கிறேன்னு வசனம் எல்லாம் பேசமாட்டேன். சீக்கிரமா ஒத்துக்கோ.” என்று அவன் கூற, அவன் பேச்சில் லேசாக புன்னகை கூட வரப் பார்த்தது அவளுக்கு.

அடக்கி கொண்டவள் “நீங்க நல்ல பிசினஸ் மேன் தான் ஷியாம். யார்கிட்ட எப்படி பேசணும்ன்னு நல்லாவே தெரியுது உங்களுக்கு. ஆனா புரிஞ்சிக்கோங்க, நான் இதுக்கு தயாரா இல்ல. நீங்க இப்போ பேசுற பல விஷயங்கள் பின்னாடி உங்களுக்கே பிடிக்காம போகலாம்.’

“அதோட உங்க கல்யாணம் வேணும்ன்னா நீங்க முடிவு பண்ணலாம். ஆனா என் வாழ்க்கையை நான்தான் முடிவு பண்ணனும் இல்லையா. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்லை, அப்புறம் எங்கே நான் உங்களைப்பத்தி யோசிக்கிறது.

“உங்க நேரத்தை வீணடிக்காதிங்க. அதோட நீங்க இப்படி அடிக்கடி என்னை சந்திக்கவும் வராதீங்க. இந்த மீடியா கண்ணுல பட்டுட்டோம்ன்னா, நான் ஏதோ உங்களை வளைச்சு போட்டுட்டேன் ன்னு தான் எழுதுவாங்க. என் பேர் மட்டுமில்லாமல் என் அம்மா வரைக்கும் இதுல இழுத்து பேசுவாங்க. எனக்கு அதுல எல்லாம் விருப்பமே இல்ல.”

“இந்த ஸ்கூல் என் அம்மா ஆரம்பிச்சது, இதை விட்டு போகக்கூடாது ன்னு தான் பிடிவாதமா இங்க உக்காந்திட்டு இருக்கேன் ஷ்யாம். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி ஸ்ரீகன்யா தைரியமான பொண்ணெல்லாம் கிடையாது. நிறைய பயப்படுவேன், எல்லாத்துக்கும் பயப்படணும். இந்த சமூகம் எனக்கு அதைத்தான் சொல்லி கொடுத்திருக்கு.”

“உங்க பணத்துக்கும்,உங்க குடும்பத்தோட பேருக்கும்  நீங்களே என்னை தேடி வந்தாலும் என்னை தான் பேசுவாங்க. ஸ்ரீரஞ்சனியோட பொண்ணுன்னு ஈஸியா சொல்லிடுவாங்க, அது வேண்டாம். என்னால என் அம்மாவை பத்தி யாரும் பேசினா நிச்சயமா என்னால அதை ஏத்துக்க முடியாது.

“இதெல்லாம் எனக்கு ஒத்து வராது ஷியாம்.இந்த அளவுக்கு கூட உங்ககிட்ட பொறுமையா ஏன் பேசிட்டு இருக்கேன்னா நீங்க கேசவ் அண்ணாவோட பிரெண்ட் அதுக்காகத்தான்.அதோட சில நிமிஷங்கள் பேசி இருந்தாலும் உங்க நட்பு பிடிச்சிருந்தது எனக்கு. எங்கேயுமே ஒரு அபஸ்வரம் தட்டல, ஆனா இப்போ நீங்க மொத்தமா உடைச்சிட்டீங்க ஷ்யாம். என்னை விட்டுடுங்க, நமக்குள்ள இதெல்லாம் செட் ஆகாது.

எனக்கு குடும்பம்ன்னா என்னன்னே தெரியாது, நான் இதுக்கெல்லாம் சரியா வரமாட்டேன் ஷ்யாம். இனி என்னை தேடி வராதீங்க.போனும் பண்ண வேண்டாம் ப்ளீஸ், என்னை என் போக்குல விட்டுடுங்க ப்ளீஸ்” என்றவள் அத்துடன் பேச்சு முடிந்தது என்பதுபோல் எழுந்துகொண்டாள்.

ஷ்யாம் எதுவுமே பேசாமல் உடன் எழுந்தவன் அவள் முன்னால் இரண்டடி எடுத்து வைக்கவும் சட்டென அவள் வலது கையை பிடித்துக் கொண்டான். அவள் சட்டென எழுந்த கோபத்தோடு உக்கிரமாக அவனை நோக்கி திரும்ப “ப்ளீஸ் கன்யா, என் கையை தட்டிவிட்டோ, என்னை தடுத்தோ எதுவுமே பேசிடாத. நிச்சயமா நீ கேவலமா பார்க்கிறத என்னால தாங்க முடியாது. அதோட என் நோக்கமும் அது இல்ல” என்றவன் அவள் கண்களை பார்க்க , அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்து புன்னகையோடு “தேங்க்ஸ் கன்யா” என்றவன் அவள் கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டு தங்கள் முகத்துக்கு நேராக உயர்த்தியவன் “நிச்சயமா நீ சொன்னது எல்லாமே நியாயமான விஷயங்கள் தான் கன்யா. ஆனா இதெல்லாம் இது எல்லாமே நீ என் மனைவின்னு சொல்ற ஒத்த வார்த்தையிலே அடிபட்டுடும். உனக்கான அடையாளம் யாரும் இல்ல கன்யா. எப்பவுமே கன்யா தான் அடையாளம் அவளுக்கு.”

“அதோட என்ன சொன்ன ஒத்துவர மாட்டியா, நீயே முடிவு பண்ணிடுவியா. என்னோட வாழ்ந்து பாரு,  நான் உன்னோட அத்தனை கேள்விகளுக்கும் பதிலா இருப்பேன்.நிச்சயமா என்னால முடியும் கன்யா. உன்னை தேடி வராத ன்னு சொல்லிட்ட ஓகே. ஆனா நீ கல்யாணம் ன்னு முடிவு பண்ணும்போது என்னை மட்டும்தான் கன்யா தேடணும். உன் முன்னாடி இந்த ஷியாம் மட்டும்தான் தோணுவான். ஐ ப்ராமிஸ்” என்றவன் அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் நெற்றியில் மென்மையாக தன் இதழை பதித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

Advertisement