Advertisement

அத்தியாயம் 06

தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்க கொண்டு விட்டதை வெறித்திருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அன்று அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்ரீகன்யாவை பார்த்ததுதான், அதன்பிறகு இவன் கண்களில் படவே இல்லை அவள். இவனும் அவளை காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு வாரம் கடந்திருந்தது.

ஆனால் அவன் மனம் மட்டும் அவனை கேளாமல் சில கிலோமீட்டர்கள் பயணித்து அவளிடமே சென்று நின்றது.அன்று அவள் சென்ற பிறகும் கூட, தர்ஷனும்,அவன் மற்ற நண்பர்களும் அவனை விடாமல் வம்பு செய்ய ஒரு வார்த்தை கூட சொன்னானில்லை அவன்.

ஆனால் இதுபோன்ற பேச்சுகளை முளையிலேயே கிள்ளி எறிபவன் இன்று அமைதியாக இருந்ததும், அவர்களை ஒரு அனுமானத்திற்கு வரவே வைத்தது. தன் நண்பனுக்காக மகிழ்ந்தவர்கள் அவன் கேட்காமலே அவனை வாழ்த்தியும் சென்றனர்.

ஷ்யாமிற்கு அனைத்தும் புரிந்தாலும், சட்டென ஒரு முடிவுக்கு வர முடியவில்லை அவனால். இது இந்த கன்யாவின் மீதான அவன் உணர்வுகளுக்கு ஆயுள் என்ன என்பதை அவனால் வரையறுக்க முடியவில்லை. ஏதோ இரண்டுமுறை ஏற்கனவே பார்த்திருந்தான், அவள் குரலை கேட்டிருக்கிறான் அவ்வளவே இந்த வரவேற்புக்கு வருவதற்கு முன்னால் அவர்களுக்கிடையே ஆன உறவு.

இத்தனைக்கும் பெரிதாக பேசியதும் இல்லை. ஏன் அவன் முகமே அவளுக்கு நினைவு இல்லையே. அப்படியிருக்க இன்று அவளை கண்டதும் தன் முகத்தில் தோன்றிய புன்னகையும்,அவளையே தொடர்ந்து கொண்டிருந்த தன் செயல்களும் இப்போது எண்ணி பார்க்கையில் லேசாக சிரிப்பு கூட வந்தது.

அவள் அந்த மேடையை விட்டு இறங்கும் சமயம் தானாகவே அவன் கால்கள் அவளை நெருங்கியது தான். ஆனால் அதற்குள்ளாகவே கேசவ் அவளை வழிமறித்திருக்க அவன் பார்த்துக் கொள்வான் என்று எட்டி நின்றுவிட்டான். ஆனால் கேசவ் அவளுடன் சற்றுநேரம் இருக்க சொல்லவும், உள்ளூர அவன் மகிழ்ந்ததென்னவோ நிஜம்.

அதோடு கூட அப்படியெல்லாம் அவனிடம் போகிற போக்கில் எதையும் சொல்லிவிட முடியாது, அவனும் காதில் கூட வாங்குபவன் இல்லை. அவன் நினைத்தால் மட்டுமே அவன் செயல்கள். இன்று இவன் பார்வைகள் கேசவ்விற்கு புரிந்திருக்க வேண்டும் அதனை கொண்டே அப்படி சொல்லி இருப்பான் என்பது நிச்சயமாக தெரிந்தது அவனுக்கு.

இப்போது தன் அறையில் படுத்திருந்தவன் கண்முன்னால் அவள் கண்களும், அந்த புன்னகை முகமும் தோன்றி மறைய “இது என்னடா இது” என்று தான் தோன்றியது அவனுக்கு. அவனும் பெண் நன்றாக இருக்கிறாள் அதனால் இப்படி தோன்றுகிறதோ என்று எண்ணமிட நிச்சயம் இல்லை என்றது அவன் மனது.

அவன் பார்க்காத அழகிகளா ?? படிப்பு,வேலை என்று பாதி நேரம் வெளிநாட்டு வாசம் தான் அவனுக்கு. அப்படியிருக்க அவன் பணத்திற்கும்,திறமைக்கும் அவனிடம் விழுந்து பழகியவர்களே அதிகம். அப்படிப்பட்ட நேரங்களில் கூட அவர்கள் கண்களை தாண்டி அவன் பார்வை சென்றதே கிடையாது.

இதுவரை யாரும் அவளை போல் ஈர்த்ததும் கிடையாது. இது காதல்தான் என்ற முடிவ்வுக்கு வர முடியவில்லை அவனால். இருபத்தொன்பது வயதில் இருக்கும் அவனுக்கு காதல் என்பதெல்லாம் சுத்த முட்டாள்தனமாக தோன்ற, இதற்கு என்னதான் வடிகால் என்ற நிலைக்கு வந்திருந்தான்.

இறுதியில் இப்போதைக்கு அவளை பிடித்திருக்கிறது, மேற்கொண்டு வாழ்க்கையின் பிடியில். அதன் விருப்பத்திற்கு செல்வோம். இவள்தான் என்று எழுதி இருந்தால் யாரால் மற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டவன் மனது நிச்சயம் அவள்தான் என்று அவனுக்கு அடித்து சொல்ல அவள் நினைவுகளுடன் உறங்கிப் போனான் அவன்.

அடுத்தநாள் காலை அனைவருக்கும் இனிதாகவே விடிய, ஷியாம் வழக்கம் போல் தன்  காலைநேர வேலைகளை முடித்தவன் டைனிங் டேபிளில் அமர, அங்கு அவனுடன் வந்து அமர்ந்தாள் அவனின் சித்திப்பெண் அனுபமா. பத்மினியின் தங்கை சங்கரியின் மகள், ஷ்யாமின் செல்லத்தங்கை. ஷ்யாம் வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லாது போக அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசான அவளுக்கு அங்கு ஏகபோக உரிமையும்,பாசமும் இருந்தது.

இப்போது அவளுக்கு தன் அண்ணனை பார்க்க வேண்டி இருக்க, அதன் பொருட்டே இந்த காலை விஜயம். அவன் அலுவலகம் செல்வதற்குள் அவனை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஓடி வந்திருந்தாள் அவள்.அவளை கண்ட ஷ்யாம்  “ஹேய் அனும்மா என்னடா காலையிலேயே விசிட், என்ன காலேஜ் கட் அடிச்சிட்டியா.” என்று கண்டிப்பாக கேட்க

“நான் ஏன் கட் அடிக்க போறேன்.என் அண்ணன் என்னை ட்ராப் பண்ணுவான்.” என்று அவள் கெத்தாக கூற

அவளின் கூற்றில் புன்னகைத்தவன் ” எனக்கு நேரமாச்சு. நீ சீக்கிரம் சாப்பிட்டா கூட்டிட்டு போவேன்.இல்லன்னா உன் அண்ணன் வரமாட்டான்” என்று கூற

அவள் கையிலிருந்த வார இதழை அவன் முன்னால் நீட்டினாள் அவள். ” இதுக்கு பதில் சொன்னாதான் உன் கூட வருவேன் நான். என்னோட பெவரேட் சிங்கர் இவங்க, இவங்களுக்கு அவார்ட் கொடுத்து இருக்க. ஆனா என்னை கூட்டிட்டு போகல ஷ்யாம் அண்ணா.” என்று அவனை கேள்வி கேட்க

அவள் கையில் இருந்த இதழில் அட்டைப்படத்தில் கையில் விருதுடன் நின்றுக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா, அவளுக்கு அருகில் சற்றே பின்னால் அவளை பார்த்தபடி ஷ்யாம் நின்றிருந்தான். அந்த பென்சக்தி அமைப்பின் கீழ் இயங்கும் வார இதழ் அது. அவர்களின் பத்திரிக்கை விற்பனைக்காக அவளை பேட்டி எடுத்து இருந்தவர்கள், கூடவே இவனையும் தலைப்பு செய்தி ஆக்கி இருந்தனர் அவர்கள்.

ஏற்கனவே அந்த நிகழ்ச்சியின் பதிவுகள் வலைத்தளங்களில் இருக்க, இன்று அவளை பேட்டி காணவும் அந்த படத்தை வைரலாக்கி இருந்தனர். அந்த படத்தில் இருந்த கன்யா அப்படி ஒரு புன்னகையுடன் நின்றிருக்க நிச்சயம் அழகாக வந்திருந்தது அந்த நிழற்படம்.

இப்போது அதை பார்த்தவன் அவள் கையில் இருந்து அதை வாங்க முற்பட அதேநேரம், அவன் அண்ணி அவனுக்கு பின்னால் இருந்து அந்த வார இதழை பிடுங்கி இருந்தார். அட்டைப்படத்தை பார்த்தவர் ஒரு சிறிய விசில் சத்தத்தோடு இதழை திறந்து பார்க்க, அதில் ஒரு பக்கத்தில் அவளின் பேட்டி வெளியாகி இருந்தது.

அங்கேயும் ஆகாய வண்ண பட்டு புடவையில் கையில் வீணையுடன் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். வசுமதி அதை பார்த்தவள் சந்தேகமாக ஷ்யாமை பார்க்க அவனோ கண்டுகொள்ளவே இல்லை. அவனை நக்கலாக பார்த்தவள் “அத்தை ” என்று சத்தமாக அழைக்க அடுத்தநொடி அங்கே ஆஜராகி இருந்தார் பத்மினி. ஷ்யாமை பார்த்துகொண்டே “அத்தை அன்னிக்கு கோவில்ல பார்த்தோம் இல்ல, ஸ்ரீகன்யா. இங்க பாருங்க அவங்களோட பேட்டி வந்திருக்கு இந்த புக் ல” என்றவள் அந்த இதழை அவரிடம் நீட்டிவிட

இப்போது  உள்ளுக்குள் லேசாக திணறினான் ஷ்யாம், அவன் அன்னை ஏதும் கேட்டுவிடுவாரோ என்று அவன் யோசிக்க, சரியே என்பதுபோல் புத்தகத்தை ஆவலாக பார்த்தவர் “ஷ்யாம், உனக்கு ஸ்ரீகன்யாவை முன்னாடியே தெரியுமா ?? அப்போ ஏன் அன்னிக்கு என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அப்பாவியாக கேட்க

“ம்மா… அன்னிக்கு அந்த ப்ரோக்ராம்ல பார்த்ததுதான். உங்ககிட்ட சொல்லிட்டுதானே போனேன். அன்னிக்கு கோவில்ல அவளுக்கு என்னை அடையாளமே தெரியல. இதுல உங்ககிட்ட என்ன சொல்றதுமா.” என்று கேட்டவன், அவன் அன்னை மேலும் ஏதும் கேட்கும் முன் அங்கிருந்து எழுந்துவிட்டான்.

அவன் அண்ணி அவனை சந்தேகமாக பார்க்க, அனுபமாவோ அவள் அண்ணியின் பார்வையை புரிந்தும் புரியாமல் நோட்டம் வீட்டுக் கொண்டு நின்றிருந்தாள்.அவளுக்கும் அண்ணனின் இந்த தடுமாற்றம்,சமாளிப்பு லேசாக புரிந்ததோ என்னவோ. பெண் அப்படியே நின்றிருக்க, ஷ்யாம் அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன் “காலேஜ் போற ஐடியாவே இல்லையா?” என்றதும் சோபாவில் இருந்த தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டவள் அவனுடன் நடந்தாள்.

வசுமதியோ  “பையன் சிக்கிட்டான் போலயே” என்று தனக்குள் பேசிகொண்டவள் சிரிப்புடன் நிற்க, பத்மினியும் செல்லும் மகனை சிறு சந்தேகத்துடன் தான் பார்த்தார்.

இங்கு ஸ்ரீகன்யாவோ அவள் பள்ளியின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தவள் தன் முன்னால் இருந்த அந்த வார இதழை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் அந்த நிகழ்ச்சியின் கோப்புகளை இணையத்தில் தேடி பார்த்து எடுத்தவள் ஷ்யாம் கிருஷ்ணா யாரென அறிந்திருக்க, அன்று அந்த வரவேற்பில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

அவள் மனமே இப்படியும் ஒருத்தி இருப்பாளா என்று காறி துப்பியது அவளை. ஒருவன் பக்கத்தில் நின்று விருது கொடுத்து இருக்க, அவனை யாரென்றே தெரியவில்லை தனக்கு. என்ன நினைத்திருப்பான் என்னைப்பற்றி கடவுளே. எனக்குதான் எப்படி அருகில் நிற்பவனின் முகம் கூட மறந்து போகும் என்று தலையிலேயே அடித்துக் கொண்டவளுக்கு அன்று அவன் பேசியவை நினைவில் வர தன்னையறியாமல் ஒரு புன்னகை வந்தது அவளிடம்.

அதுவரை திமிர் பிடித்தவள் என்று முடிவு கட்டாமல் இயல்பாக பேசினானே அதுவே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டவள், அன்று நடந்த விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருக்க, அவன் உயரத்திற்கு அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதமும்,அவனின் அக்கறையும் சற்று அதிகப்படியாகவே தோன்ற ஏதோ உறுத்த தொடங்கியது அவளை.

இணையத்தின் உதவியால் அவன் வரலாறே அவள் கையில் இருக்க, அவர்களின் குடும்பத்தையும், தொழிலையும் அறிந்து கொண்டவளுக்கு நிச்சயம் பெரிய ஆள்தான் என்று தோன்றியது. அன்று பேசிய விதத்திலும் அவனிடம் வெளிப்பட்ட கண்ணியம் நினைவுக்குவர, கேசவ் அண்ணாவின் தங்கை என்று நினைத்திருப்பான்.

நான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிந்திருந்தால் நிச்சயம் பார்வை மாறியிருக்கும் என்று நினைத்துக் கொண்டவளுக்கு விரக்தியாக ஒரு புன்னகை தோன்ற, அதற்குமேல் அவள் யோசிக்கவில்லை. அவன் என்ன நினைத்து பேசினாலும் இது உனக்கு நல்லதில்லை என்று மனம் எடுத்து உரைக்க, தான்  யாரென்று அவனுக்கு தெரியவே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டவள் மனமோ

இதற்குமேல் அவனை சந்தித்தால் தானே. அப்படியிருக்க ஏன் இந்த வீண் யோசனைகள் என்று நினைத்துக் கொண்டு அந்த புத்தகத்தை எடுத்து டிராயரில் போட்டவள் தன் வேளைகளில் ஆழ்ந்துவிட்டாள். நிச்சயம் அதற்குமேல் அவனை பற்றி அவள் யோசிக்கவே இல்லை. அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை அவள்.

ஆனால் அடுத்தநாளே கண்முன் வந்து நிற்க போகிறான் என்று பாவம் அவள் அறியவில்லை.            ஷியாம் தங்கையை கல்லூரியில் இறக்கிவிட்டவன் தன் அலுவலகத்திற்குள் நுழைந்து, தன் அறையின் இருக்கையில் அமர்ந்தவன் முதல் வேலையாக அந்த வார இதழின் மின்னணுப்பதிவை இணையத்தில் தேடி எடுத்து நோட்டம் விட, அந்த அட்டைப்படம் அவன் கண்முன் விரிந்தது. தன் அலைபேசியில் அந்த படத்தை பெரிதுபடுத்தி பார்த்தவன் தன்னை நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.

அவள் இதழ் விரிந்த புன்னகையுடன் நின்று கொண்டிருக்க, பின்னால் நின்றிருந்தவன் அவளையே கண் எடுக்காமல் தான் பார்த்திருக்கவேண்டும். இல்லையெனில் அப்படி ஒரு படத்திற்கு வாய்ப்பே இல்லை. அவளை ரசிக்கும் பார்வைதான் ஷ்யாமிடம். இத்தனைக்கும் அன்று அந்த மேடையில்தான் அவளை முதலில் பார்த்திருந்தான் அவன்.

அப்படி இருக்க யாரையும் திரும்பி பார்க்காதவன், முதல்முறை பார்த்த ஒருத்தியை அப்படி பார்த்துக் கொண்டிருக்க அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம் தான். முதல் சந்திப்பிலேயே அவள் தன்னை ஈர்த்திருக்கிறாள் என்று அவன் நியாய மனம் ஒத்துக் கொள்ள,”அடப்போடா அவளுக்கு உன் மூஞ்சியே ஞாபகம் இல்ல” என்றது மற்றொரு மனது.

இப்போது இந்த படத்தை பார்த்திருப்பாளா?? நான் யாரென்று தெரிந்ததும் அவள் முகத்தில் என்ன உணர்ச்சிகள் தோன்றி இருக்கும் என்று யோசித்தவனுக்கு அந்த கணமே அவளை காணும் வேட்கை எழ, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் “பொறு ஷ்யாம், பொறுமையாக இரு ” என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்.

அலுவலக வேலைகள் வேறு வரிசைகட்டி நிற்கவும் அன்று அதற்குமேல் கன்யாவை அப்ற்றி எண்ணமிடக்கூடாது என்று முடிவு செய்து வேலையில் ஆழ்ந்தவன் மனமோ மீண்டும் அவளிடமே சென்று நின்றது. ஏதோ செய்கிறாள் இவள் என்ற எண்ணம் நெஞ்சம் முழுதும் நிறைந்திருக்க, அந்த எண்ணம் ஏனோ பிடித்தே இருந்தது அவனுக்கு.

தன்னை விடாமல் இம்சிக்கும் அவளை நினைத்து புன்னகையுடன் அவன் தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்க, அவள் தான் என்று இந்த சிலமணி நேரங்களில் முடிவெடுத்திருந்தான் கிட்டத்தட்ட.

அவன் குடும்பம்,பாரம்பரியம், அவன் தந்தை எதுவுமே அந்த நொடி நினைவுக்கு வராமல் போக ஸ்ரீகன்யா மட்டுமே அவன் எண்ணத்தில் இருக்க, அவளைத்தவிர மற்றவை அனைத்தும் பின்னுக்கு போனது. இவன் இங்கு தன்னைத்தானே அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுத்து தெளிந்து கொள்ளும் வேளையில் அங்கே ஒருவர் தன் மகனுக்கான பெண்ணை கிட்டத்தட்ட முடிவு செய்து முடித்திருந்தார்.

தன் தொழில்துறை நண்பர் ஒருவருடன் பேசி முடித்த பாலகிருஷ்ணன், புன்னகையுடன் அலைபேசியை அணைத்துவிட்டு நிமிர்ந்து அமர அவரின் முன் இருந்த இதழில் சிரித்துக் கொண்டிருந்தனர் ஸ்ரீகன்யாவும் அவரது மகனும்.

Advertisement