Advertisement

அத்தியாயம் 05

அந்த திருமண வரவேற்பில் அமைதியாக யாருடனும் அளவுக்கதிகமாக பேசாமல், அதே சமயம் அவளை நெருங்கி பேசுபவர்களிடம் இன்முகமாக ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் அமர்ந்திருந்தவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஷியாம்.

நண்பர்களுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் அரட்டையில் இருந்தாலும் பார்வை மட்டும் அடிக்கடி அவளை தொட்டு மீண்டது. அவளோ இவனை கவனிக்காமல் நேராக பார்த்து அமர்ந்திருக்க, அந்த நேரம் தான் அவளை சூழ்ந்தனர் அவளின் தோழிகள்.

அத்தனையும் கல்லூரி கால நட்புகள் என்றாலும் அலைபேசியின் வழியே தொடர்ந்து கொண்டிருந்தது. இவளை பார்க்கவும் அனைவரும் வட்டமாக அமர்ந்துவிட அங்கே கச்சேரி களைக்கட்டி கொண்டிருந்தது. ஒருத்தி மேடையில் நின்றிருப்பவளின் வீர தீர சாகசங்களை எடுத்துவிட, அப்படி ஒரு சிரிப்பு அந்த பெண்களின் முகத்தில்.

ஸ்ரீகன்யாவும் சற்று விரிந்த புன்னகையுடன் அவர்களுடன் அளவளாவ, திடீரென்று பரபரப்பானது அந்த இடம். வெள்ளைவேட்டிகள் சில அந்த மண்டபத்தை நிறைக்க, அவர்களுக்கு அடுத்ததாக காவல்துறையும் அங்கு நிறைய அவர்களுக்கு பின்னால் வேதவதியுடன் வந்து கொண்டிருந்தார் ஆதி நாராயணன்,அவருடன் அவரின் மகன் ஸ்ரீதர்.

அமர்ந்திருந்த ஸ்ரீகன்யா இவர்களை பார்த்தவுடன் உடல் விரைத்து பார்வையை விலக்கி கொள்ள, ஏனோ அன்னையின் முகம் நினைவுக்கு வந்தது அவளுக்கு. அவருக்கு இதுபோன்ற எந்த நிகழ்வுக்கும் கொடுத்து வைத்ததே இல்லை. அவளுக்கு தெரிந்து குடும்பம் என்ற ஒன்று அவர்கள் வாழ்வில் கிடையவே கிடையாது. எங்கு சென்றாலும் ஸ்ரீரஞ்சனியும், கன்யாவும் தான். அதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரீரஞ்சனி வெளியில் செல்வதையே நிறுத்திக் கொள்ள, ஸ்ரீகன்யா எங்கு செல்வதாக இருந்தாலும் மாரியின் துணையோடு தனியாக தான் சென்று வருவாள்.

இப்போது இவர்களை குடும்பமாக பார்க்கவும், தன் நிலை நினைவுவர அதற்காக தன்னையே நொந்து கொண்டவள் அங்கிருந்து எழுந்துவிட்டாள். இதற்குள் அவர்கள் முதல் வரிசையில் இவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வலதுபுறம் அமர்ந்திருக்க, இவர்களை திரும்பியும் பார்க்காமல் மேடையேறினாள் அவள்.

அவளின் பின்னால் அவள் தோழிகளும் நடக்க, அந்த பெண்கள் கூட்டம் மேடையை நோக்கி நகர்ந்தது. மேடையில் மணப்பெண்ணிடம் தன் பரிசை கொடுத்தவள், ஓரிரு வார்த்தைகளுடன் முடித்து இறங்க பார்க்க, கிருத்திகா இவளை அருகில் நிறுத்திக் கொண்டவள் புகைப்படத்திற்கு நிற்கவைத்து விட்டாள். அதில் மேலும் சில நொடிகள் கழிய தோழிகள் அனைவரும் மேடையை விட்டு இறங்கிவிட, அப்போதும் கிருத்திகா அவளை விடாமல் தன்னுடன் நிற்கவைத்துக் கொண்டாள்.

அவளின் கூட நின்றிருந்த உறவுப்பெண் ஏதோ வேலையாக சற்று நகர்ந்திருக்க, இவளும் வேறு வழியின்றி அவளுடன் நின்றிருந்தாள். அப்போதுதான் கவனித்தாள் இவள் தந்தைக்கு அருகில் அமர்ந்திருந்த தீரஜ்ஜை. அவன் பார்வை இப்போதும் அவளை நோக்கியே இருக்க, தீவிரமாக ஆதி நாராயணனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அவன்.

அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த வேதவதியின் பார்வை வாஞ்சையாக கன்யாவின் மீது படர, அவருக்கு அடுத்து அமர்ந்திருந்தவனோ பரம வைரியை பார்ப்பது போல் அவளை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான்.அவன் பார்வையை உணர்ந்தவளுக்கு அத்தனை கோபம்வர, மேலும் தான் சொல்லியும் தீரஜ்ஜிடம் மீண்டும் பேசிக் கொண்டிருக்கும் நாராயணனும் பார்வையில்பட வெறியே கிளம்பியது உள்ளுக்குள்.

இருக்குமிடம் உணர்ந்து தன்னை அடக்கி கொண்டவள் கிருத்திகாவிடம் ” நான் கிளம்புறேன் கிருத்தி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. என்னை கட்டாயப்படுத்தாத” என்றுவிட்டு கீழிறங்க முற்பட, கிருத்திகா தன் அண்ணனை அழைத்தவள் ஆவலுடன் அவனை அனுப்பி வைத்தாள்.

இவள் கீழே இறங்கவும் கேசவ் இவளை பிடித்துக் கொண்டவன் அவளை வலுக்கட்டாயமாக சாப்பிட அழைத்து செல்ல, அவள் மறுப்பு அவனிடம் எடுபடவே இல்லை. பஃபே முறையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவள் உணவை எடுத்துக் கொண்டு ஓரிடத்தில் அமரும்வரை அவளுடன் கூடவே இருந்தான் கேசவ்.

அந்த நேரம் தான் அவர்களை தேடி வந்தான் ஷியாம் கிருஷ்ணா. அவன் தோழர்களில் சிலர் கிளம்புவதாக சொல்ல கேஷவ்வை தேடி வந்திருந்தான் அவன். அவன் கன்யாவுடன் இருப்பதை கண்டவன் மூளை அவனை விலக சொல்ல,மனமோ அவளிருக்கும் இடத்திற்கு செல்ல சொல்ல இரண்டுக்கும் இடையில் போராடியவன் கடைசியில் மனம் சொன்னபடி அவர்களை நெருங்கி இருந்தான்.

இவன் கேசவ்வின் தோளில் கையை வைக்க, அவன் திரும்பி பார்க்கவும் அவனை தேடி அங்கு வந்திருந்தார் அவனின் பெரியப்பா. அவர் கேசவ்வை ஏதோ வ்வேலையாக அழைக்க, அவனோ ஷ்யாமிடம் என்னவென்று கூட கேட்காமல் ” இவ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் கூடவே இருடா.” என்றவன் அவன் எதுவோ சொல்லவர அவனை பேசவிடாமல் ” ப்ளீஸ் ஷ்யாம் கொஞ்சம் அவ கூட இரு, நான் இப்போ வந்திடுறேன்.” என்றவன் கன்யாவிடம் ” சாப்பிட்டு முடிக்காம இங்கிருந்து எழுந்த பார்த்துக்கோ ” என்று மிரட்டிவிட்டு செல்ல அவளிடம் ஒரு விரிந்த புன்னகை.

அவன் சென்றதும் ஷ்யாமிடம் திரும்பி புன்னகைத்தவள் “உங்களுக்கு வேலை ஏதும் இருந்தா பாருங்க. நான் பார்த்துக்கறேன்.கேசவ் அண்ணாக்கு நான் இன்னும் ஸ்கூல் பொண்ணுன்னு நினைப்பு ” என்று கூற

பதிலுக்கு புன்னகைத்தவன் ” என்ன பெரிய வேலை இங்க… சும்மா அப்படியே பேசிட்டுதான் இருந்தோம்.இப்போ உங்களோட பேசிட்டு இருக்கேனே.” என்று இலகுவாக அவன் கூற

ஏனோ அது அதிகப்படியாக தோன்றவில்லை அவளுக்கு. அருகில் இருந்த நாற்காலியை அவனுக்கு காட்டியவள் அவன் அமரவும் “நீங்க சாப்பிடலையா??” என்று கேட்க, அவனுக்கும் அப்போதுதான் உணவு ஞாபகம் வரவும் ” சாப்பிடணும். வெயிட் பண்ணுங்க வந்துடறேன்” என்றவன் எழுந்து சென்று அவனுக்கும் ஒரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வந்தான்.

உணவை வைத்துக் கொண்டு அவன் அவளுக்கு எதிரில் அமர, கேசவ்வின் தோழன் என்பதால் பெரிதாக எந்த எச்சரிக்கையும் இல்லை அவளிடம். எதிரில் இருப்பவன் மீது ஒரு சதவீதம் நம்பிக்கை குறைவு என்றாலும் தன்னை அவனோடு தனித்து விட்டிருக்கமாட்டான் என்பது திண்ணம். கேசவ்விடம் இருந்த நம்பிக்கையால் அவன் தோழனோடு நட்பாக ஆரம்பித்தாள் அவள்.

அப்போதும் சிலரின் பார்வை அவர்களை தொடர, பெரிதாக கண்டுகொள்ளவில்லை அவள்.மேலும் உள்ளே அவள் பார்த்த தீரஜ்ஜின் முகம் நினைவு வர யாரையும் கண்டுகொள்ளவே இல்லை அவள்.

ஷியாம் இயல்பாக இருப்பதுபோல் இருந்தாலும் அவள் பார்வை சுழன்றதையும், பின் அதில் தொனித்த லட்சியத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.மேலும் அவள் குறித்த விஷயங்கள் ஏற்கனவே அவனை அடைந்திருக்க அவன் பார்வையும் வந்ததுமுதல் அவளையே தொடர்ந்ததால் அவளின் அலைப்புறுதல்களை கண்டு கொண்டிருந்தான் அவன்.

இப்போதும் கேசவ் உடனிருக்க சொன்னதும் அவன் மறுக்காமல் அமர்ந்து கொள்ள காரணம் எதிரில் இருப்பவள் கன்யா என்பதால் மட்டுமே. அவள் முகம் கல்போல இருந்தாலும் ஏனோ அவள் சரியில்லை என்று ஏற்கனவே அவனுக்கு தோன்றியிருக்க, கேசவ் உடன் இருந்ததால் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது கேசவ் அவளை அவனுடன் இருத்தியிருக்க, அவளை இயல்பாக்கவே முயற்சித்தான் அவன்.

“அப்புறம் கன்யா, இன்னிக்கு பார்த்தவுடனே கண்டுபிடிச்சிட்டீங்க எப்படி? ” என்று ஆரம்பிக்க

“நேத்து தானே உங்களை பார்த்தேன் அப்புறம் எப்படி மறந்திருப்பேன்” என்று கேட்க

“ஓஹ்,கரெக்ட் தான்.எங்கே என் பெயரையும் சொல்லிடுங்க பார்ப்போம், நீங்க மறக்கல ன்னு நானும் கன்பார்ம் பண்ணிக்கறேன் ” என்றுவிட

திருதிருவென முழித்தாள் அவள். பின்னே அவன் பெயரை மறந்துவிட்டதால் தானே மொட்டையாக வாங்க போங்க என்று பேசிக் கொண்டிருந்தாள் இவ்வளவு நேரம். இப்போது அவன் அதை கண்டுகொள்ளவும் அவள் முழிக்க “அட பரவாயில்ல கன்யா மேடம். நான் ஆளையே மறந்திருப்பீங்க ன்னு நெனச்சேன். பேர்தானே பரவால்ல விடுங்க”  என்று சிரிக்க

” நிச்சயமா என்னால பத்மினி அம்மாவை மறக்க முடியாது. அவ்ளோ ஸ்வீட் ஆ பேசினாங்க, அப்புறம் உங்க அண்ணி ஐ திங்க், வசு சிஸ்டர். அவங்களும் ரொம்ப இயல்பா இருந்தாங்க.அவங்களோட வந்த உங்களை எப்படி மறப்பேன்? ஆனா நான் உங்ககிட்ட பேசவே இல்லையா அதான் உங்க பேர் சட்டுன்னு ஞாபகம் வரல” என்று கூறவும்

“ம்ம் பத்மியை தெரியுது.அண்ணியை தெரியுது.உன் நிலைமை மோசம்டா.” என்று தன்னைத்தானே அவன் கூறிக் கொள்ள, “சரி ஓகே. உங்க பேரை மறந்தது தப்புதான். இப்போ சொல்லுங்க உங்க பேரை” என்று என்று கேட்க

“அதான் மறந்துட்டிங்களே கன்யா மேடம், விடுங்க பரவால்ல”

“இப்போ என்னை நீங்க என் பேரை மறக்கவே இல்லையா, அது எனக்கு புரியணுமா” என்று கன்யா கேட்க,

“ஹப்பா புரிஞ்சிடுச்சா.” என்று அவன் சிரிக்கவும் கடுப்பானவள் அவனை முறைக்க

“சரி விடுங்க கன்யா மேடம். நீங்க என்னை மறக்காம இருந்ததே பெரிய விஷயம்” என்று அவன் கூற,அவன் வார்த்தைகளில் உள்ளே ஏதோ உறுத்தினாலும் “சரி ஓகே சொல்லவேண்டாம்.நான் கேசவ் அண்ணாகிட்ட கேட்டுக்கறேன்” என்று அவள் முடித்துவிட

“அதெப்படி சரியா இருக்கும்? மறந்தது நீங்க அப்போ நீங்களே தானே கண்டுபிடிக்கணும். கேசவ்வ ஏன் உள்ள கொண்டு வரீங்க ” என்றதும்,அவள் புருவத்தை உயர்த்தி ” எப்படி கண்டுபிடிக்க” என்று அவனையே கேட்க, அந்த நேரம் அவன் நண்பன் சற்று தொலைவிலிருந்து “ஷ்யாம் ” என்று அழைத்துக்கொண்டு அருகில்வர, சட்டென திரும்பி பார்த்துவிட்டான் அவனும்.

பிறகே நினைவு வந்தவனாக அவளை திரும்பி பார்க்க சிரிப்பை அடக்கியவள் “ஷியாம்” என்று விட்டு மீண்டும் அடக்கமுடியாமல் சிரிக்க, அவளை முறைத்தவன் நண்பன் அருகில் வந்துவிடவும் அவனிடம் திரும்பினான்.

வந்தவன் ஷ்யாமை அணைத்து விடுவித்த பிறகே கன்யாவை கவனித்தான். ஷ்யாமை பார்த்து புருவம் உயர்த்தியவன் ஏதோ பேசப்போக ஷியாம் அதற்குள்  “இவங்க கன்யா, கேசவ்வோட சிஸ்டர்.” என்று அவளை அறிமுகப்படுத்த, அவன் “நான் கேக்கவே இல்லையே” என்பதுபோல் நக்கலாக ஷ்யாமை பார்க்க

ஷியாம் அவன் காலை கன்யா அறியாமல் மிதிக்க, ஷ்யாமை கண்டுகொள்ளாதவன் அவளிடம் “நீங்க சிங்கர் ஸ்ரீகன்யா தானே” என்று அவளிடம் கேட்க

அவள் ஆமோதிப்பாக தலையசைக்கவும், அவளிடம் “ஐ ஆம் தர்ஷன். ஷியாம் பிரெண்ட், உங்களோட ரசிகன் மேம்” என்று அவனே அறிமுகப்படுத்திக்கொள்ள, ஸ்ரீகன்யா ஷ்யாமை பார்த்தவள் புன்னகைத்துக்கொண்டே “ஹாய் தர்ஷன்” என்று சில வார்த்தைகளுடன் முடித்துக் கொண்டு ஷ்யாமை பார்க்க,அவன் பார்க்கவும் “நான் கிளம்புறேன் ஷ்யாம். பார்க்கலாம்” என்றுவிட

ஷ்யாமுக்கு என்ன தோன்றியதோ “பார்க்கலாமா ? நிச்சயம் ” என்று கேட்க,”கண்டிப்பா ஷ்யாம்” என்று அழுத்தி சொன்னவள் “நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா மறக்க மாட்டேன்.” என்றும் சேர்த்து சொல்ல

“இன்னமே முழுசா உங்களுக்கு ஞாபகம் வரல ஸ்ரீகன்யா மேடம். அதோட என் பேரும் பாதிதான் சொல்லி இருக்கீங்க. தேடுங்க” என்று முடிக்க

“என்ன சொல்றிங்க, என்ன முழுசா ஞாபகம் வரல.” என்றவள் சற்று நேர யோசனைக்கு பிறகு “உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியுமா ” என்று கேட்க, ஆம் என்று தலையசைத்தவன் உடனே “ஆனா உங்களுக்கும் என்னை தெரியும் யோசிங்க” என்றுவிட

அதற்குள் மாரி அவளைத் தேடி வந்துவிட்டார். அவர் வருவதை பார்த்துவிட்டவன் “உங்க டிரைவர் வந்துட்டாருன்னு நெனைக்கிறேன்.” என்று அவளுக்கு பின்னால் கண்காட்ட அங்கு மாரி வந்து கொண்டிருந்தார். மாரி வரவும் அவரிடம் ஷ்யாமை அறிமுகப்படுத்தியவள் ஷ்யாமிடம் “இது மாரிண்ணா.” என்று அறிமுகப்படுத்த அவரை டிரைவர் என்றதற்காக தான் இது என்று புரிந்தது அவனுக்கு.

புரிந்த விஷயம் அவனுக்கு புன்னகையை கொடுக்க ” ஹாய் மாரீண்ணா.” என்று அவரிடம் நட்புக்கரம் நீட்டியவன் “பத்திரமா கூட்டிட்டு போங்க உங்க மேடத்தை” என்று கூற, புன்னகையுடன் மாரி தலையசைக்கவும் ஸ்ரீகன்யாவும் இருவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட, தர்ஷனோ என்னடா நடக்குது இங்க என்ற ரேஞ்சில் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷியாம் பேசுவதே ஒருவரிடம் இத்தனை நேரம் பேசுவதே பெரிய விஷயம் என்றால் அவனின் இந்த விரிந்த புன்னகை மற்றும் இலகுவான பேச்சுக்கள் எல்லாம் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. ஷியாம் அவனை பார்த்தவன் அவன் தலையில் தட்டி அவனை உடன் அழைத்து செல்ல, தூரத்தில் நின்ற தீரஜ்ஜும் அவன் கண்ணில்பட்டான்.

ஸ்ரீகன்யா உள்ளே நுழையும்போதே அவளை பார்த்திருந்த தீரஜ், அவள் அருகில் வந்தவனை கண்டதும் வெந்துதான் போனான். இருவருமே ஒரே தொழிலில் இருக்க, இவன் தந்தை காலத்தில் இருந்தே பழக்கம்தான். ஆனால் ஏனோ அவனின் நேர்மைக்கும்,இவனின் நரித்தனத்திற்கும் எப்போதும் ஒத்துபோனதே கிடையாது.

இவன் தந்தையும் அவனை எப்போதும் ஆஹா ஓஹோவென்று புகழ, அதனாலேயே அவனை வெறுத்திருந்தான் தீரஜ். சற்றுமுன்னர் தான் ஆதி நாராயணனிடம் பேசியிருக்க அவர் மகள் மறுத்துவிட்டதாக மட்டும் அவனிடம் கூறியிருந்தார். இப்போது அதையும்,இதையும் யோசித்தவன் ஸ்ரீகன்யாவோடு ஷ்யாமை பார்க்கவும் அவன்தான் ஏதோ குழப்புவதாக முடிவு செய்து கொண்டான்.

அவனுக்கு ஷ்யாமை கொன்றுபோடும் அளவுக்கு ஆத்திரம் வர முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்,அந்த கோபத்தை விழிகளில் தேக்கி ஷ்யாமை பார்த்திருந்தான். நேற்று தான் இவர்கள் நிறுவன ஆர்டரை வேறு ஷியாம் ரத்து செய்திருக்க அத்தனையும் திட்டமிட்டதாகவே தோன்றியது அவனுக்கு.

ஸ்ரீகன்யாவின் முகம் கண்முன் தோன்ற, “அப்படி என்னடி திமிர் உனக்கு, இந்த தீரஜ்ஜ ரிஜெக்ட் பண்ற அளவுக்கு. நீ நிச்சயம் வருத்தப்படுவ ஸ்ரீகன்யா ” என்று சொல்லிக்கொண்டான் மனதோடு.

ஷ்யாமிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்ட ஸ்ரீகன்யாவை சரியாக வாயில் அருகில் பிடித்திருந்தார் வேதவதி. அவள் கையை பிடித்துக் கொண்டவர் மாரியை பார்க்க அவர் விலகி சென்றதும் “நீ உன் அப்பாகிட்ட என்ன பேசினேன்னு நான் கேட்க மாட்டேன் ஸ்ரீமா. ஆனா நீ பேசினது சரியான்னு நீயே யோசி. அதோட நீ அவர் பொண்ணு இல்லன்னு சொல்லிக்கிட்டாலும் அவர் உன் அப்பாங்கிறது மாறிடாது”

“ஏன் உன் அம்மாவே கூட, உன் விஷயத்துல அவரை எதுவும் சொன்னது கிடையாது. நீ இப்படி பேசியதையும் நிச்சயம் அக்கா விரும்பமாட்டாங்க.அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ.” என்றவர் அவள் கண்களை பார்க்க அவரை மேற்கொண்டு பார்க்கமுடியாமல் தலையை குனிந்து கொண்டாள் அவள்.

அவளை வாஞ்சையாக பார்த்தவர் ” என்னை பொறுத்தவரைக்கும் நீ ஒரு முரட்டு குழந்தைதான். உனக்கு என்ன வேணும்ன்னு உனக்கே தெரியாது. இப்போ தீரஜ் வேண்டாம்ன்னு மட்டும் தெளிவா புரியுது. இதுக்குமேல இந்த விஷயமா உன்கிட்ட யாரும் பேசமாட்டாங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கூறி அவள் கையை விடுவிக்க, சுற்றிலும் பார்த்தவள் ஸ்ரீதர் எங்கும் தென்படாமல் போகவும் அவரை அமைதியாக அணைத்துக் கொண்டாள்.

அதே வேகத்தில் அவரை விட்டு விலகியவள் எதுவுமே பேசாமல் காரில் ஏறி அமர்ந்துவிட, வேதவதி கண்ணை கட்டவும் காரை எடுத்தார் மாரி. காரில் எறியவளின் கண்களில் கண்ணீர் முத்துகள் திரண்டு இருக்க,விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தன அவை.

Advertisement