Advertisement

அத்தியாயம் 04

 

                      ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயா

                                காலை எட்டு மணி ஆகி இருக்க மாணவர்களின் வருகை தொடங்கி இருந்தது அங்கே. ஆசிரியர்கள் சிலர் வந்துவிட்டிருக்க, அந்த காலை நேரத்தில் பயிற்சி தொடங்கி இருந்தது. இடுப்புவரை சுவர் எழுப்பப்பட்டு தடுக்கப்பட்டிருந்த சின்ன சின்ன குடில்களில் மாணவர்கள் அவர்கள் பயிற்சியை மேற்கொண்டிருக்க, அங்கிருந்து சற்றே தள்ளி அமைந்திருந்தது அலுவலக அறை.

                            அந்த அறையின் வாசலில் வருபவர்கள் அமர, சில இருக்கைகள் போடப்பட்டு இருக்க, கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அங்கு காத்திருந்தார் ஆதி நாராயணன். காலை ஜாக்கிங் வந்தவர் தன் பரிவாரங்கள் அத்தனையும் ஒதுக்கி எப்படியோ உடன் வந்தவர்களை கழட்டிவிட்டு விட்டு இங்கு வந்து சேர்ந்திருந்தார்.

                            அங்கிருந்த ஆசிரியர்கள் மரியாதையுடன் வந்து நிற்க, அவர்களை அனுப்பி விட்டவர் அங்கேயே அமர்ந்துவிட்டார். அங்கிருந்த பணியாளர்கள் காபி கொடுத்திருக்க, அதை குடித்துவிட்டு வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தார் அவர். இவர் வந்த தகவலை தன் உதவியாளர் மூலம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த ஸ்ரீகன்யா வீட்டிலிருந்து கிளம்பி இருக்கவே இல்லை.

                        காலை தன் வழக்கமான நேரத்திற்கு கிளம்பி விட்டிருந்தவள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அலைபேசி ஒலிக்கவும் அதை எடுத்து பேசி இருந்தாள். எதிர்முனையில் இருந்து வந்த தகவலில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே சோபாவில் அமர்ந்து தன் மொபைலை பார்க்க ஆரம்பித்திருந்தாள் அவள்.

                       அன்னம் வெளியே வந்தவர், இவள் இன்னும் கிளம்பாமல் இருப்பதை பார்த்துஎன்ன பாப்பா, ஸ்கூலுக்கு போகலையா. இங்கேயே உட்கார்ந்திட்டஎன்று கேட்க

                        ஏன் உனக்கு தெரியாதா என்பதுபோல் பார்த்தாள் அவள். அவள் பார்வையை சளைக்காமல் சந்தித்தவர்யார் வந்திருந்தா என்ன பாப்பா, அதுக்கு நீ உன் பள்ளிக்கூடத்துக்கு போகாம இருப்பியா. நீ இன்னைக்கு போகாம விட்டா அவர் நாளைக்கும் அங்க வந்து நிற்க போறாரு. அவர் இருக்காருன்னு நீ போகாம இருக்க முடியுமா?” என்று கேட்க

                   “அவருக்கு நாளைக்கு வர ஐடியா இல்லேன்னாலும் நீங்களே சொல்லிகொடுப்பீங்க அன்னம்மா. உங்க ஐயா மேல அவ்வளவு விசுவாசம் என்ன?? சரி, அது போகட்டும் அவர் வந்திருக்காருன்னு நான் சொல்லவே இல்லையே உங்ககிட்ட உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்தது?? என்று கிடுக்கி பிடிக்க

                  “ஹான்…. என்ன பாப்பா நீ பேசும்போது நான் கூடத்தான இருந்தேன்என்று சமாளிக்க, உன்னை நான் நம்பவில்லை என்று பார்வையிலேயே காட்டினாள் அவள். அவள் நம்பமாட்டாள் என்று தெரிந்தே சொல்லியிருந்தவரோஎப்படி தெரிஞ்சா என்ன பாப்பா, வந்து உனக்காக உட்கார்ந்திட்டு இருக்காரு இல்ல. போய் என்னன்னு ஒரு வார்த்தை கேளு.” என்று மேலும் கூற

              அவரை முறைத்தவள்எல்லாரும் சேர்ந்து திட்டம் போடறீங்களா. இதுல மாரிண்ணாவும் கூட்டா?” என்று கத்தியவள்மாரிண்ணாஎன்று சத்தமாக கூப்பிட, வாசலில் நின்றிருந்தவர் அடித்து பிடித்து ஓடி வந்தார்வந்தவர்  “என்ன பாப்பா, என்ன ஆச்சு. ஏன் கூப்பிட்டிங்கஎன்று பதட்டமாக கேட்க

 

                  அவரையே கூர்ந்து பார்த்தவள் அமைதியாக இருக்க, அன்னம்மா சைகையில் அவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் இவளுக்கு பின்னால் நின்று. அவரை திரும்பி முறைத்தவள் மாரியிடம்அவர் ஸ்கூலுக்கு வந்திருக்கற விஷயம் உங்களுக்கு தெரியுமா??” என்று கேட்க

                 “ஐயா!! காலையில எனக்குதான் போன் பண்ணாங்க பாப்பா. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன், ஆனா ஐயா கேட்கவே இல்ல. உங்ககிட்ட ஏதோ முக்கியமா பேசணும் நான் வந்தே தீருவேன் ன்னு நிற்கிறாரு. நான் என்ன பண்ணட்டும் பாப்பாஎன்று அவர் பாவமாக கேட்க

                   “சோ உங்களுக்கும் தெரியும். பார்த்துக்கறேன், அத்தனை பேருக்கும் பதில் சொல்றேன். வண்டியை எடுங்கஎன்று வார்த்தைகளை மென்று தின்றவள், அன்னம்மாவை நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டே அங்கிருந்து நகர்ந்தாள். அந்த பார்வையே சொன்னது அவள் செய்யபோவதை.

 

                   எப்போதும் அமைதியை மட்டுமே கையில் எடுக்கும் அவளுக்கு என்றாவது ஒருநாள் தான் கோபமே வரும்.ஆனால் அப்படி கோபப்பட்டால் எதிரில் நிற்பவரால் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசி விடமுடியாது, அந்த அளவுக்கு இருக்கும் அவள் வார்த்தைகள். இப்போதும் அவள் மிகுந்த கோபத்தில் இருப்பது அவள் பார்வையிலேயே தெரிய வயிற்றில் புளியை கரைத்தது அன்னமாவுக்கு.

               அவர் நினைத்தது சரியே என்பதுபோல் தான் அமைந்தன ஸ்ரீகன்யாவின் அடுத்தடுத்த செயல்கள். காரில் ஏறிய நொடி முதல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தவள், பள்ளியை அடைந்ததும் இறங்கி விறுவிறு வென்று நடந்துவிட்டாள்.

 

                     வரவேற்பில் அமர்ந்திருந்த ஆதிநாராயணனை கண்டாலும், அவரை திரும்பிக்கூட பார்க்காமல் அப்படி ஒரு அலட்சியத்தை நடையில் காட்டி அவரை தாண்டி சென்றவள் நேரே சென்று தன் இருக்கையில் அமர்ந்துவிட்டாள். அந்த அறையின் வாயிலுக்கு மேல் இவள் இருக்கைக்கு எதிரில் இருப்பது போல் மாற்றப்பட்டிருந்தது அவள் அன்னையின் புகைப்படம்.

 

                   அதில் சிரித்துக் கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனியை மனதில் நிறைத்துக் கொண்டவள், வெளியே இருப்பவரை பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள். சற்று நேரத்தில் அங்கு அவளின் உதவிக்காக இருக்கும் காவ்யா அவளின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவள் தன் பங்குக்கு ஆதி நாராயணன் வருகையை தெரிவிக்க, அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் சாவதானமாகஎன்னவாம்என்று கேட்க

 

                  “எதுவுமே சொல்லல மேம். உங்களை தான் பார்க்கணும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காருஎன்று அவள் கூறவும், தலையை தட்டிக் கொண்டவள் அவரை அழைத்து வருமாறு தலையசைக்க, அவள் வெளியே சென்ற சில நிமிடங்களில் உள்ளே நுழைந்தார் ஆதி நாராயணன்.

 

              கையில் ஏதோ பைலை வைத்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, உள்ளே வந்தவர் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவர் அமரவும் கையிலிருந்த பைலை முன்னிருந்த டேபிளில் வைத்தவள் அவரையே பார்க்க அதுவே சொன்னது அவளாக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள் என்பதை.

 

                  ஆதிநாராயணனுக்கு அவளின் இந்த செயல்கள் வலித்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தவர்எப்படி இருக்க ஸ்ரீமாஎன்று கேட்க

 

               “இதை கேட்கத்தான் இவ்ளோ தூரம் வந்திங்களா!!” என்று ஆச்சர்யத்தை குரலில் காட்டியவள்நல்ல இருந்தேன்.உங்களை பார்க்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி வரைக்கும்என்றாள் கடுமையான குரலில். நாராயணன் அதற்கே கலங்கி போனார், மகளின் வார்த்தைகள் சூட்டுகோலாய் வலி கொடுக்க வந்த வேலையை மனதில் கொண்டு அமைதியானார்.

 

                          அவர் அமைதியாக இருக்கவும்என்ன விஷயமா என்னை பார்க்க வந்திங்க, சீக்கிரம் சொல்லிட்டு கிளம்புங்கஎன்றதும் தன் கையிலிருந்த மொபைலை ஆன் செய்து அவள் முன் நீட்டினார் அவர். அதில் யாரோ ஒருவன் சிரித்து கொண்டிருக்க,புரியாமல் அவரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

 

                          அவள் பார்வையில்ராஜன் குரூப் ஆப் கம்பெனிஸ் ராஜவேலுவோட பையன், பேர் தீரஜ். எனக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம்தான். பையனும் நல்ல பையன். உன்னை அவங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க விருப்பப்படறாங்க. நீ சொல்றதை பொறுத்து அவங்ககிட்ட மேலே பேசலாம்ன்னு இருக்கேன்.” என்றதும்

 

               சத்தமாக சிரித்தவள்மருமகளா ஆக்கிக்கவாநான் என்ன ஷோவ்பிஸ்ஆ அவங்க நினைச்சதும் வாங்கி வீட்ல வைக்க. அதோட என் கல்யாண விஷயமா உங்ககிட்ட ஏன் பேசணும் அவங்க.” என்று கேட்க

 

                       ” ஸ்ரீமா. நீ என் பொண்ணு, உன் கல்யாண விஷயத்தை என்கிட்டே பேசாம வேற யார்கிட்ட பேசுவாங்க. அதனாலதான் என்கிட்டே கேட்டாங்க. நான் உன்கிட்ட பேசிட்டு சொல்றேன் ன்னு சொல்லி இருக்கேன்என்று பொறுமையாக கூற

 

                   ” ஓஹ் பொண்ணு. ஆனா பாருங்க, நான் ஸ்ரீரஞ்சனியோட பொண்ணு மட்டும்தான். மாண்புமிகு அமைச்சர் ஆதி நாராயணனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்னை சேர்ந்தவங்க அத்தனை பேருக்கும் இந்த விஷயம் நல்லா தெரியும், அப்படி இருக்கப்போ எந்த முகத்தை வச்சிட்டு இதெல்லாம் பண்றிங்க.”

 

                ” என் கல்யாண விஷயத்தை பேசுற அளவுக்கு நீங்க எனக்கு யாருமே இல்ல. எனக்கு மாப்பிளை பார்க்கிற வேலையையும் நான் உங்ககிட்ட கொடுக்கல, இனி இப்படி ஏதாவது பேசிட்டு என்முன்னாடி வந்து நிற்காதிங்க.”

 

                 ” என் வாழ்க்கையை முடிவு பண்ற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல. சோ இந்த வேலையை இதோட விட்டுடுங்க.அதான் உங்க பதவிக்கு நல்லது. இல்லையா ஒரு பிரஸ் மீட் அரேஞ்ச் பண்ணி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு ஊருக்கே சொல்லிடுவேன்.”

 

             “உங்களுக்கு நல்லா தெரியும் என்னைப்பத்தி. தேவையில்லாம என்னை சீண்டி பார்க்காதீங்க, நான் அப்பாவி ஸ்ரீரஞ்சனி கிடையாது, உங்க குடும்பம் என்ன பண்ணாலும் அமைதியா போறதுக்கு. இதுதான் கடைசி, என் விஷயத்துல நீங்க தலையிடறது.” என்று அவரை விரல் நீட்டி மிரட்டியவள் கத்தவோ, முறைக்கவோ எதுவுமே செய்யவில்லை.

 

                  ஆனால் அவளின் தொணி எதிரில் நிற்பவருக்கு நிச்சயம் பயம் கொடுத்தது.அத்தனை அழுத்தம்,பிடிவாதம் அந்த குரலில். அவள் குரலே அவள் சொன்னதை அப்படியே செய்வாள் என்பதை உரைக்க, அதற்குமேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை அந்த பெரிய மனிதருக்கு. அப்படியே அமர்ந்திருந்தவர் சில நொடிகளுக்கு பிறகு எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட, தன் மீதே அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு.

                                      அவர் அப்படி கிளம்பி போவதை பார்க்கவே முடியாமல் அவள் மனசாட்சியே அவளை கொள்ள கண்களில் கண்ணீர் நிறைந்தது அவளுக்கு. மேலும் அவரின் தளர்ந்த தோற்றம் வேறு மனதை வருத்தஎன்ன வயசாகிடுச்சு இந்த மனுஷருக்கு, இப்படி தளர்ந்து போய்ட்டாரு. என்ன பண்றாங்க இந்த வேதாம்மா.” என்று மனதில் கேட்டுக் கொண்டவளுக்கு அதற்குமேல் அவர்களை பற்றி யோசிக்க முடியவில்லை.

 

                  “வேண்டாம் மனமே. உனக்கு அவர்கள் எப்போதும் வேண்டாம்என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் முயன்று மனதை தன் வேளைகளில் செலுத்த தொடங்கினாள்.

                                 சற்றுநேரம் கழித்து காவ்யா உள்ளே வந்தவள் அன்று மாலை அவள் செல்ல வேண்டிய அவள் தோழியின் திருமண வரவேற்பை பற்றி அவளுக்கு நினைவுபடுத்த, நேரத்தை பார்த்தவள் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்.

 

               அன்று காலை நேர வகுப்புகள் முடியவும், அங்கிருந்த ஆசிரியர்களிடம் பார்த்துக்கொள்ள சொன்னவள் அங்கிருந்து கிளம்பினாள்.வழியில் அவள் வழக்கமாக நகை வாங்கும் கடைக்கு சென்றவள் தன் தோழிக்கு திருமணப்பரிசாக என்ன வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டே அந்த கடையை சுற்றிவர, அந்தநேரம் தான் அவள் தீரஜின் கண்ணில்பட்டது.

 

                  அந்த கடை அவர்களுக்கு சொந்தமானதாக இருக்க, எப்போதும் கடைக்கு வராதவன் இன்று தந்தையின் வற்புறுத்தலால் வந்திருக்க எதேச்சையாக அவன் கண்ணில்பட்டாள் அவள். அவள் அழகில் பிரமித்துப்போய் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு நிலைக்கு மேல் சுயநிலை அடைந்து அங்கிருந்து அவளை நோக்கி நகர்ந்தான்.

 

                           அவன் வந்த நேரம் வளையல் பிரிவில் நின்றிருந்தவள் அழகான மரகத கற்கள் பதித்த வளையலை தன் தோழிக்காக தேர்ந்தெடுத்திருக்க, அதை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அப்படி நிற்பதை பார்த்துக் கொண்டே வந்தவன்வாவ், லூக்கிங் பியூட்டிபுல் மை ஏஞ்செல்என்றுவிட

 

               திரும்பி பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். ஆனால் அவள் அதிர்ச்சி எல்லாம் ஒருநொடி தான். அடுத்த நொடி அவன் தன்னைமை ஏஞ்செல்என்றது நினைவுக்கு வர, அவனை கடுமையாக பார்த்தவள்யார் நீங்க.” என்று கேட்க

 

                     அவனோஹேய் என்னை தெரியலையா, நிஜமாவா ஏஞ்சல்என்று அப்போதும் அவளை கடுப்பேற்ற

 

                “லுக். என்னோட பேர் ஏஞ்சல் இல்ல. கால் மீ ஸ்ரீகன்யா, அதோட நீங்க யாரு? உங்களை ஏன் எனக்கு தெரிஞ்சி இருக்கணும்என்று கேட்க

 

            “ஹேய் கூல்.. நான் தீரஜ், ராஜன் குரூப் எங்களோடது. அதோட இந்த கடையும் என்னோடது தான்.” என்று தன்னை அவன் அறிமுகப்படுத்திக் கொள்ள, அப்போதுதான் காலையில் மொபைலில் பார்த்த அவன் நிழற்படம் நினைவு வந்தது அவளுக்கு.

 

               “எல்லாம் இவராலஎன்று தந்தையை திட்டிக்கொண்டே அவனிடம்லுக் தீரஜ். நான் இங்க பர்சேஸ்காக வந்து இருக்கேன். இது உங்க கடைதான் ஆனா எனக்கு உங்க உதவி தேவையில்லை. சோ ப்ளீஸ்என்றுவிட, முகம் தொங்கிப்போக அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

                       அந்த வளையல்களை பில் போட்டு வாங்கி கொண்டவள் அவனை திரும்பியும் பாராமல் சென்றுவிட, தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவனால். அவன் வீட்டில் அவனுக்கு பார்த்திருக்கும் பெண் என்று அவள் படத்தை காட்டி இருக்க, அவளை கண்டதும் எதிர்பார்ப்புடன் தான் அவள் அருகில் சென்றான் அவன். ஆனால் அவள் அவனை கண்டுகொள்ளாதது கடுப்பாக, “எங்கே போய்ட போறா. என் வீட்டுக்கு தானே வரணும்என்று ஏளனமாக எண்ணமிட்டுக் கொண்டவன் இதழ்களில் ஒரு அலட்சிய புன்னகை தோன்றியது.

                    ஆனால் அவளோ அந்த கடையை விட்டு வெளியே வந்தவுடன் அவனை பற்றிய நினைவுகளை ஒதுக்கிவிட்டவள் அதற்குமேல் அவனைப்பற்றி யோசிக்கவே இல்லை. வீட்டிற்கு வந்து அன்னம் கொடுத்த உணவை உண்டுவிட்டு நேராக சென்று தன் அறையில் விழுந்தவள் மாலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

                          மாலை அவளின் கல்லூரித்தோழி கிருத்திகாவின் வரவேற்பு இருக்க, அதற்கு நீலநிறபட்டில் தயாரானவள், அதற்கு ஏற்ற அணிமணிகளோடு கிட்டத்தட்ட ஏழு மணி அளவில் அந்த மண்டபத்தை அடைந்திருந்தாள். இவள் மண்டபத்தை அடைந்த அதே நேரம் ஷ்யாமின் காரும் அந்த வளாகத்தில் நுழைய, யாரென்பது போல் ஒரு பார்வைதான் அப்போதும் அவளிடம்.

 

            ஆனால் இந்த முறை அவனை கண்ட நொடி, நேற்று அவனை கோவிலில் பார்த்தது நினைவுவர ஒரு புன்னகையை அவனை நோக்கி செலுத்தியவள் உள்ளே செல்ல, ஷ்யாமும் அவளுடன்  இணைந்துகொண்டான். இருவரும் ஒன்றாக உள்ளே நுழைய இவர்களை பார்த்த நொடி மணப்பெண்ணின் அண்ணன் கேசவ் ஓடி வந்தான் இவர்களை நோக்கி

 

                         இவர்கள் ஜோடியாக உள்ளே நுழைந்ததை அங்கிருந்த பல கண்கள் குறுகுறுப்பாக பார்க்க, அதற்குமேல் தாமதிக்காமல் அங்கிருந்து விலகிவிட்டாள் அவள். கேசவ் அவளை பார்த்துவாம்மாஎன்று கூப்பிட, அவனுக்கும் தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டாள். உள்ளே சென்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டவள் யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல் மேடையை வேடிக்கை பார்க்க, இவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவர்களோ இதை எதிர்பார்க்கவில்லை போலும்.

 

                      கேசவ் ஷ்யாமை பிடித்துக் கொண்டவன்என்னடா நீ ஸ்ரீமா கூட வர்ற. எனக்கு தெரியாம எதுவும் நடக்குதா ??” என்று அவனை வயிற்றில் இடிக்க அவனோ அலறியவன்அடேய் !! ஏண்டா நீ வேற. அந்த பொண்ணை நேத்து கோவில்ல பார்த்தேன். அம்மாவும்,அண்ணியும் பேசிட்டு இருந்தாங்க.அதான் என்னைப்பார்த்து சிரிச்சிட்டு போறா.வேற எதுவுமில்லை. நீயே கதை திரிச்சிடாத ராசா.” என்று கூற

 

               அப்போதும் ஷ்யாமை சந்தேகமாகவே கேசவ் பார்க்கபோய் வேலைய பாருடாஎன்று அவனை துரத்திவிட்டவன் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டான். இவர்கள் வந்ததுமுதல் ஜோடியாக உள்ளே நுழைந்ததுவரை அவர்களை குரோதமாக முறைத்துக் கொண்டிருந்தான் தீரஜ்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                  

 

        

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement