Advertisement

ஆறு மாதங்களுக்கு பிறகு….

ஷ்யாம் கிருஷ்ணாவின் வீட்டில் அனைவரும் கூடி இருக்க, அந்த காலைவேளையில் ஆதிநாராயணனும், வேதவதியும் தங்கள் மகளின் வீட்டிற்கு வந்திருந்தனர்.. ஸ்ரீதர் கோகுலுடன் அமர்ந்திருக்க கோகுலின் கையில் அவளின் செல்ல மகள் ஆராத்யா.. ஸ்ரீதர் அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க, அவன் கைகளில் தாவ முயன்று கொண்டிருந்தாள் அவள்.

அவளை கைகளில் வாங்கி, கொஞ்சிக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, தூரத்தில் நின்று அவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.. வசு அவள் தோளில் தட்டியவள் “இங்க முழுக்க ஈரமா இருக்கு பாரு அனு. இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்ரீ பங்க்ஷன் இருக்கு. இப்படி ஈரம் பண்ணாத. வாயை மூடிடு” என்று அவளிடம் கூற, அவள் முறைத்தவள் “அண்ணி… ” என்று பல்லை கடிக்க

“சைட் அடிச்சது தப்பில்ல. நான் கண்டுபிடிச்சது தான் தப்பா… என்ன அனு ” என்று அவள் மேலும் சீண்ட, அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள் தன் சின்ன அண்ணியிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

தேவகி நேரம் ஆகிவிட்டது என்று கூறவும், வேதாவும், பத்மினியும் கன்யாவை அழைத்து வந்து அங்கு இருந்த மனையில் அமர்த்தி வைக்க, நல்ல நேரம் வந்து விடவும், நலங்கு வைத்து விடுமாறு தேவகி கூற , பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் கன்யா..

ஆம்.. அவள் இப்போது ஐந்து மாத கர்ப்பிணி… மகள் கருவுற்ற செய்தி கேட்டு பூரித்து போய் இருந்த ஆதி நாராயணன் அவளை தரையில் விடாமல் தாங்கினார் என்றால், அவள் கணவனோ அவளை கண்களில் வைத்து காத்துக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த ஆறுமாதங்கள் எப்படி சென்றது என்று கேட்டால் சத்தியமாக தெரியாது கன்யாவுக்கு… அவனில் தொடங்கி அவனிலேயே முடியும் அவளின் பொழுதுகள் அழகாகவே கரைந்து கொண்டிருந்தன அவன் அருகாமையில்.

வாழ்வின் மீது அவளுக்கு இருந்த தேவையற்ற பயங்களை போக்கி இருந்தவன், வாழ்வை அணுஅணுவாக ரசித்து அவளையும் ரசிக்க வைத்து என்று அவளை பூரணமாக்கி கொண்டிருந்தான்.

இன்று ஐந்தாம் மாதம் வளையடுக்க அவள் வீட்டில் இருந்து வந்திருக்க, காலையில் சைட்டில் ஏதோ பிரச்சனை என்று யாரையும் விடாமல் தானே கிளம்பி சென்றிருந்தான். உரிய நேரத்திற்கு வந்து விடுவேன் என்று கூறிவிட்டு சென்றிருக்க, இதோ அவளை மனையில் அமர்த்தியும் வந்து சேரவில்லை.

பாட்டி நல்ல நேரத்தில் தொடங்கி விட வேண்டும் என்று கட்டளையாக கூறி அவளை இழுத்து வர வைத்திருக்க அவர் மீதும் கோபம் தான் அவளுக்கு. இந்த ஆறு மாதங்களில் அவர்களுடன் நன்றாகவே நெருங்கி இருக்க, அவரிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் கோபத்தில் சிரித்துக் கொண்டாலும், வேதவதியை வைத்து தொடங்க சொன்னவர், அவர்கள் நலங்கிட்டு முடிக்கவும், அடுத்து மருந்து கொடுக்க சொல்ல, திரும்பி பாட்டியை முறைத்தாள் அவள். அவள் பார்வையை உணர்ந்தவர் ” சொன்னா கேட்டுக்கணும் ஸ்ரீமா.. அடம் பண்ணக்கூடாது” என்று மிரட்ட, அப்போதும் பார்வையை மாற்றவே இல்லை அவள்.

பத்மினி தான் “அத்தை அவதான் இத்தனை ஆசையா இருக்கால்ல.. நீங்க சந்தனம் வச்சு விடுங்க..” என்று அவரை அழைத்து வர, தேவகிக்கு கண்கள் கலங்கி போனது. கலங்கிய கண்களுடன் அவளுக்கு அவர் நலங்கிட்டு முடிக்க, கண்ணீருடன் அவரை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

“சும்மா முறைச்சிட்டே இருக்காத.. என் பேரன் மாதிரி சிரிச்ச முகமா கொள்ளு பேரனை பெத்துக் கொடு..” என்று அவளை வம்பிழுக்க, அவள் முறைப்பு அதிகமானதுதான் மிச்சம். நலங்கு முடிந்து எழப் போனவளிடம் தேவகி பாட்டு பாடுமாறு கூற, அதற்கும் முறைத்துதான் பார்த்தாள் அவள்..

“இந்தா.. சும்மா முறைச்சிட்டே நிற்கக்கூடாது… நீ பாடுறது உன் பிள்ளைக்கு கேட்கும். அவன் கேட்கணும்ன்னா பாடு.. இல்லென்னா விடு… எதுக்கெடுத்தாலும் முறைப்பு. பிள்ளை உன்னை மாதிரியே முறைக்க போகுது பாரு..” என்று அவர் பதில் கொடுக்க,

பிள்ளைக்கு கேட்கும் என்றதில் இளகியவள் தேவகியை முறைத்து கொண்டே பாட தொடங்க, தேவகி தன் பேத்தியை எண்ணி சிரித்துக் கொண்டார். இந்த வீட்டில் அவருடன் தான் மிகவும் நெருக்கம் அவள். ஷ்யாம் இல்லாத நேரங்கள் மொத்தமும் பெரும்பாலும் அவருடன் தான் கழியும்.

அவர் அவர் எண்ணத்தில் மூழ்கி இருக்க, அங்கே கன்யா தன் குரலை சரிசெய்து பாடத் தொடங்கி இருந்தாள்.

விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

என்று தொடங்கும்போதே ஷ்யாம் வீட்டினுள் நுழைந்துவிட, அவனை முறைத்தவள்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்

என்று அழுத்தமான குரலில் பாடலை தொடர, ஷ்யாம் அவளை கெஞ்சலாக பார்த்ததை கண்டு கொள்ளாமல்

நீலமேகம் போலே
இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில்
வந்து குடியிருப்பான்

கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்

பக்கத்து வீட்டுப்
பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி
வம்புக் கிழுப்பான்

எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது
இதுதான்டி முகாரி ராகம் என்பான்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்

வெண்ணை பானை
மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும்
கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே
சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம்
தாங்க ஒண்ணாது

சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன்னு சொல்லி விட்டால்
ஐயா அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்

என்று பாடி முடித்தவள் மனையிலிருந்து எழுந்து கொள்ள பார்க்க, தேவகி மீண்டும் அவளை அதட்டி அமர வைத்தவர் ஷ்யாமை அவளுக்கு சந்தனம் வைத்துவிட சொல்ல, கொதித்து கொண்டிருக்கும் தன் நிலவை சந்தனத்தால் குளிர வைக்க முடிவு செய்து விட்டவன் போல், கைநிறைய சந்தனத்தை குழைத்து அழுத்தமாக அவள் கன்னங்களில் தடவியவன், தன் சட்டை பாக்கெட்டிலிருந்து இரு வளையல்களை எடுத்து அவள் கைகளில் மாட்டிவிட, அந்த தங்க வளையலில் மரகத கற்கள் அழகாக மினினுமினுக்க அதைவிட அதிகமாக ஜொலித்தாள் அவள்.

ஒருவழியாக அனைத்தும் முடிந்து அவள் ஓய்வுக்காக அவள் அறைக்குள் நுழைய, அவளுக்கு பாலை கையில் எடுத்துக் கொண்டு அவள் பின்னால் நுழைந்தான் அவன்.அவனை பார்த்தவள் கோபமாக வெளியேறப் போக அவளை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் அவள் இருகன்னங்களிலும் முத்தமிட்டு அவள் இதழ்களையும் கொள்ளையிட்டு முடித்து நிமிர, சிவந்து அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் முகத்தில் இருந்த சந்தனம் அவன் முகத்திற்கு இடம் மாறி இருக்க, அவனை பார்த்து சிரித்து விட்டவள் கையை உயர்த்தி அவன் கன்னத்தை துடைத்து விட “கோபம் போச்சா..” என்று கேட்க,

“எங்கே கோபப்பட விடறீங்க நீங்க..” என்று அவள் அலுத்து கொள்ள, சிரிப்புடன் அவள் அருகில் அமர்ந்து அவளை தன்மேல் சாய்த்துக் கொண்டான் அவன். இன்று அவளின் மொத்தமுமாய் அவன். அவனின் அடையாளமாய் அவள்.

காதல் காற்றைப்போல தன்னை நிறைத்து கொண்டது அங்கே……

Advertisement