Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 32

ஷ்யாமிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து கீழே வந்துவிட்ட கன்யா, அதன்பின் மாடியின் பக்கம் திரும்பவே இல்லை. பாட்டியுடன் அமர்ந்து கொண்டவள் வசுவின் மகளோடு ஐக்கியமாகி விட்டாள். வசு குழந்தையை அவள் மடியில் கிடத்திவிட்டு சென்றிருக்க, தன் திராட்சை கண்களை மெதுவாக சுழற்றிக் கொண்டு கையை காலை அசைத்துக் கொண்டிருந்தது அந்த சிட்டு.

தேவகி அவளை பார்த்து கொண்டு அமர்ந்திருக்க, சமையல் அறையில் இருந்து இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் பத்மினி. வசு புன்னகைத்துவிட்டு “உங்க சின்ன மருமக, மிரண்டு போகாம பார்த்துக்க தான என் மகளை கொடுத்திட்டு வந்திருக்கேன். அதெல்லாம் அவ உங்க மருமகளை பார்த்துக்குவா அத்தை..” என்று சிரிப்பாக கூற

“உன் மக…. அந்த குட்டி என் மருமகளை பார்த்துப்பாளா… நீ பாரு.. என்ன சொகுசா அவ மடில படுத்துட்டு இருக்கா பாரு…”என்றவர் “நல்ல வேலை தான் செஞ்ச.. இப்போதான் அந்த பொண்ணு முகம் கொஞ்சம் தெளிவா இருக்கு.. அவளுக்கும் புது இடம் இல்லையா?? கொஞ்ச கொஞ்சமாக ஒட்டிக்குவா..” என்று பத்மினி சொல்லி முடிக்க, வசு அவரை புரிந்தவளாக சிரித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து ஷ்யாம் கீழே இறங்கி வர,வந்தவன் தன் பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான். மனைவியின் மடியில் இருந்த அண்ணன் மகளை பார்த்து கைகளை அவன் சொடுக்கி காட்ட, என்ன புரிந்ததோ முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

பாட்டியும், பேரனும் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க, கன்யாவுக்கு தான் அங்கு அமர்ந்திருப்பது கடினமாக இருந்தது. அவளால் ஷ்யாமின் முகத்தை ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை. அறையில் நடந்த நிகழ்வுகள் நினைவு வர சிவந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

அவளின் நிலை புரிந்தவளாக அந்த குட்டி அழுது ஊரை கூட்ட, வசு அவளை கையில் வாங்கியவள் தன் அறைக்கு தூக்கி சென்று விட்டாள். அவள் சென்றுவிட, அதற்கு மேல் அங்கு நிற்காமல் கன்யா அவள் அத்தையுடன் சமையல் அறையில் சென்று நின்றுவிட்டாள். பத்மினி இரவு உணவுக்காக தயார் செய்து கொண்டிருக்க, அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் கன்யா.

பத்மினி திடீரென “உனக்கு சமைக்க தெரியுமா…” என்று கேட்டுவிட, அவள் முழியே அவருக்கு பதில் சொல்லிவிட்டது. ஆனால் கன்யா தயங்கி கொண்டு நிற்க பத்மினி அவராகவே “அதனால என்னடா.. பொறுமையா கத்துக்கோ.. நான் எதுக்கு இருக்கேன்.. நான் சொல்லி தரேன் உனக்கு..” என்று கூறிவிட, வேகமாக மண்டையை ஆட்டிக் கொண்டாள் அவள்.

அவர் சமைத்துக் கொண்டே அந்த வீட்டின் வழக்கங்களை அவள் மிரளாதவாறு அவளுக்கு பொறுமையாக சொல்லி கொண்டிருக்க, அதே வேகத்தில் சமையலையும் முடித்து விட்டிருந்தார். இரவு உணவு நேரம் சற்று இதமான மனநிலையுடன் கழிய, அனுவை எல்லாம் மாலையே வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தார் பத்மினி.

வீட்டு ஆட்களை தவிர யாரும் இல்லை அங்கே. உணவு முடித்து ஆண்கள் அவரவர் அறைக்கு சென்றுவிட, பத்மினி அவளையும் அவள் அறைக்கு அனுப்பிவிட்டு அதன்பிறகே தான் நகர்ந்தார். கால்கள் தடுமாற அவள் அறைக்குள் நுழைய ஷ்யாம் அறையில் இல்லை.

எங்கே போயிருப்பான் ? என்று யோசித்துக் கொண்டே அவள் மெதுவாக உள்ளே நுழைய, அந்த அறையில் ஒரு பகுதியில் இருந்த ஸ்லைடிங் டோரை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன், அவளை தாண்டி சென்று கதவை தாளிட்டுவிட்டு திரும்பி அவளை நெருங்கினான்.

அவன் அருகில் வருவதை உணர்ந்தவள் அசையாமல் நிற்க, வந்தவன் அவளை தோளோடு அணைத்து கொண்டு, அந்த மற்றொரு கதவின் வழியாக வெளியே அழைத்து சென்றான். அந்த கதவுக்கு மறுபுறம் திறந்த வெளியாக இருக்க, முழுவதும் பூச்செடிகள் நிறைந்து இருந்தது அந்த இடத்தில்.

அந்த மாடியின் ஒரு பக்கம் ஒரு ஊஞ்சல் ஒன்று அமைந்திருந்தது. அவளை அழைத்து சென்று அதில் அமர்ந்து கொண்டவன் அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டான். கன்யாவுக்கு அந்த சூழல் மிகவும் பிடித்து போக, தானாகவே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

அவள் செய்கை ஆச்சரியமாக இருக்க, அவளை லேசாக குனிந்து பார்த்தான் அவன். அவள் கண்கள் கலங்கி இருக்க, “ஹேய் என்னடா.. என்னாச்சு” என்று அவன் பதற, மறுப்பாக தலையசைத்தவள் அவனை பார்த்து புன்னகைக்கவும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்னடி.. அழற, சிரிக்கிற… என்ன ஆச்சு..” என்று மீண்டும் அவன் கேட்க

“ரெண்டுமே உங்களால தான். நீங்க தான் காரணம்..”

“அதுசரி… சரி மேடம்.. எதுக்கு அழுதிங்க..”

“சிரிக்கவும் தான் செஞ்சேன்…” என்றவள் மீண்டும் சிரிக்க

அணைப்பை இறுக்கியவன் “கன்யா என்னடா..” என்று அவள் முகத்திற்கு நெருக்கமாக

“நிஜமா ஒண்ணுமே இல்ல… கொஞ்சம் அழுமூஞ்சியா ஆகிட்டேன்..உங்களாலதான்…ஆனா சந்தோஷமா இருக்கேன்…” என்று அவள் சிரிக்க, அவள் தலையில் முத்தமிட்டவன் “பிடிச்சிருக்கா..” என்று வினவ

தன் ஆட்காட்டி விரலை லேசாக அளந்து காட்டி “கொஞ்சமே கொஞ்சம்…” என்று அளவு வைக்க

“ஓஹ்… கொஞ்சமா தான் பிடிச்சிருக்கா…” என்றவன் “நிஜமாவா கன்யா” என்று கேட்க

வீம்புக்காகவே “ம்ம்ம் … ஆமா … கொஞ்சமே கொஞ்சம்” என்று அவள் கூறிவிட

“சரி வா… ரொம்ப பிடிக்க வைக்கிறேன்..” என்றவன் அவளை கைகளில் தூக்கி கொள்ள “ஐயோ..” என்று அலறியவள் அவன் கழுத்தை கட்டி கொள்ள, அவளை தூக்கி வந்தவன் அந்த முறையோடு இணைந்திருந்த மற்றொரு அறைக்குள் அவளை தூக்கி செல்ல, என்ன செய்கிறான் என்றுதான் பார்த்திருந்தாள் அவள்.

அந்த அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும் ஷ்யாமின் படங்கள் நிறைந்திருக்க, அழகாக சிரித்து கொண்டிருந்தான் அவன். அங்கிருந்த சோஃபாவில் அவளை தொப்பென்று போட்டு விட்டவன் அவள் முன்னால் எழுந்து நிற்க, அவனை முறைத்துக் கொண்டே எழுந்தவள் அப்போதுதான் கவனித்தாள் அந்த அறையின் மற்றொரு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கிட்டாரை.

அதற்கு கீழே பீடம் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு மேசையில் ஒரு அழகான வீணை அமைதியாக வீற்றிருந்தது. அவள் எழுந்து சென்றவள் அந்த வீணையை ஆசையாக வருடி, லேசாக ஸ்ருதி மீட்ட கண்கள் கலங்கி போனது அவளுக்கு…

அதற்குள் அவள் காதுக்கருகில் “இப்போ எவ்ளோ பிடிக்குது..” என்றவன் குரல் இசையாக மீட்ட, அவனை திரும்பி பார்த்து சிரித்தவள் “ம்ஹூம்..” என்று சிரிப்புடன் தலையசைக்க, கடுப்பானவன் “போடி…” என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியில் செல்ல, அவனை வேகமாக நெருங்கியவள் அவனை பின்னிருந்து அணைத்து கொண்டு அவன் கழுத்தை கட்டி கொள்ள, அதிர்ந்தவனாக அப்படியே நின்றான் அவன்.

அவன் உயரத்திற்கு கால்விரல்களை தரையில் அழுத்தி எட்டியவள் “இப்போவும் கொஞ்சம் தான்…” என்று விட, ஒரே சுழற்றில் அவளை தன் முன்னால் கொண்டு வந்தவன் “இட்ஸ் ஓகே…. நான் பிடிக்க வைக்கிறேன்…” என்று கூறி அவளுக்கு நெருக்கமாக, இதை எதிர்பார்க்காதவள் சட்டென்று பின்னடைய, சிரிப்புடன் அவளை நெருங்கி கொண்டிருந்தான் அவன்.

பின்னால் நடந்து கொண்டிருந்தவள், கட்டிலில் கால்கள் தட்டி அப்படியே விழுந்து விட, புன்னகையுடன் அவளை பார்த்து நின்றவன்,அவளை நெருங்க அவன் பார்வையை உணர்ந்தவளுக்கு அப்போதுதான் அன்று என்ன நாள் என்பது நினைவுக்கு வர சட்டென மூச்சுக்காற்று வெப்பமானதை போல ஒரு உணர்வு. அந்த வெப்பம் உடல் முழுவதும் பரவ, உள்ளம் சிலிர்த்து சிணுங்கி கொண்டிருந்தது.

அவள் விழுந்து வைத்ததில் புடவை விலகி, அவள் இடையும், அதற்கு மேலும் கூட அவன் கண்ணுக்கு விருந்தாகி கொண்டிருக்க, அவன் பார்வையில் அவள் எழுந்து அமர முற்பட, அவளை அப்படியே சாய்த்தவன் அவளுக்கு நெருக்கமாகி தன்னை கொண்டு அவளை மூடிக் கொள்ள மூச்சு முட்டியது பெண்ணுக்கு. அவள் கீழ்த்தாடையில் முத்தமிட்டவன் “இப்போவும் பிடிக்கலையா…” என்று கேட்க

சிரித்து விட்டவள் “உங்களுக்கு தெரியாதா??” என்று அவன் கண்களை பார்த்து கேட்க

“எனக்கு என் குட்டிப்பொண்ணு சொல்லணும்…” என்றான் அவன்.

“என்ன சொல்லணும்…”

“உனக்கு என்ன தோணினாலும், அப்படியே சொல்லு…”

“அப்போ ஓகே.. ஆமா.. எனக்கு பிடிக்கவே இல்ல…. என் தனிமையை நீங்க நிறைக்கிறது பிடிக்கவே இல்ல… இப்படி என்னை தாங்குறதும் பிடிக்கல… என்னோட அத்தனை சந்தோஷங்களும் உங்களை மையமாக்கி உங்களையே சுத்தி வர்றது பிடிக்கல… யாருமே வேண்டாம் ன்னு நின்னவளை இப்படி உறவுகளால மொத்தமா கட்டி வைக்கிறது பிடிக்கல.. இந்த ஷ்யாமோட காதல் மேல கோபமா வருது…..

“என்னை விலக விடாம இறுக்கி பிடிக்கிற ஷ்யாமை பிடிக்கவே இல்ல. ஷ்யாம் இல்லாம கன்யாவை யோசிக்கவே முடியல, அதுவும் பிடிக்கல… கட்டாயமே படுத்தாம என்னை கட்டுப்படுத்தி உங்களுக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கீங்க… கன்யாவை மொத்தமா தனக்குள்ள எடுத்துக்கிட்ட இந்த ஷியாம் கிருஷ்ணாவ எனக்கு பிடிக்காது…… பிடிக்கவே பிடிக்காது..” என்றவள் கண்சிமிட்டி சிரிக்க. அவள் சிரிக்கும் இதழ்களை தனதாக்கி கொண்டவன் அதற்குமேல் அவளை பேசவே விடவில்லை.

அன்றைய அந்த யாமப் பொழுதில் மீட்டியது மொத்தமும் அவன் விரல்கள் தான். அவன் கைகளில் சிணுங்கல்களும், சிருங்காரங்களுமாக அவள் கரைந்து கொண்டிருக்க, அவன் மூச்சின் வெப்பத்தில் குளிர் காய்ந்து கொண்டு அவனை போர்வையாக்கி தன்னை மறைத்து கொண்டு அவனுள் முழுவதுமாக மறைந்து கொண்டாள் அவள்.

நிறைவான புன்னகையுடன் அவன் களைத்து விலக, அருகில் சோர்ந்து கிடந்தவளையும் தன் மேல் இழுத்துக் கொண்டான் அவன். அவன் கழுத்துக்கு மேல் பார்க்காத அவள் கண்களின் மேல் முத்தமிட்டவன், அவள் முகம் பார்க்கும் வகையில் திரும்பி படுத்துக் கொண்டு “நிறைய பேசின… இப்போ சத்தமே வரலையே கன்யாம்மா…”என்று அவள் முதுகில் வருட கூச்சத்தில் துள்ளியவள் அவன் நெஞ்சில் அடித்து வைக்க

அவள் கைகளை பிடித்துக் கொண்டவன் “நீ ரொம்ப அமைதின்னு நெனச்சு ஏமாந்துட்டேனே… நீ என்னடா ன்னா பர்ஸ்ட் நைட் முடிஞ்ச உடனே புருஷனை அடிக்கிற…சரியான ரௌடிய தான் கட்டி இருக்கேன் போல..” என்று அவளை வம்பிழுக்க

“ஆமா… ரௌடி தான்.. உங்களை.. என்றவள் மீண்டும் அடிக்க, “கன்யா.. கைவலிக்கும் டா.. நீ என்னை அடிக்கணும்ன்னா கையாள தான் அடிக்கணும்ன்னு அவசியமே இல்ல. இந்த அழகான லிப்சை அப்படியே என்கிட்டே கொண்டுவந்து…” என்று அவன் முடிக்கும் முன்னமே இன்னும் இரண்டு அடி வைத்தாள் அவள்.
அவள் கைகளை பிடித்து தன்னை சுற்றி போட்டுக் கொண்டவன் அவளை இறுக்கி கொண்டு “இப்போ எப்படிடி அடிப்ப..” என்று கேட்டுக் கொண்டே அவள் முகத்தை நோக்கி குனிய, அவனுக்கு முகத்தை காட்டாமல் திருப்பிக் கொண்டாள் அவள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு கடித்து வைத்தவன், “எனக்கு எங்கேன்னாலும் ஓகே தான்டா கன்யாம்மா..” என்று பெரிய மனதோடு சொல்ல, “பிராட்.. பிராட்..”என்று அவனை திட்டியவள், திடீரென “அங்க இருந்த கிட்டார் யாரோடது..” என்று கேட்க

“ப்பா… எவ்ளோ சீக்கிரமா கேட்டுட்ட…” என்று அதிசயித்தவன் அவள் முறைக்கவும் “என்னோடது தான்டி” என்று கூற

“நிஜமாவா… உங்களுக்கு தெரியுமா…. ” என்று ஆவலாக கேட்க, ஆமோதிப்பாக தலையசைத்தான் அவன். சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் “கன்யாவுக்கு ஒரு பாட்டு பாடிக் கொடுங்க…” என்று கொஞ்சலாக கேட்க

“இப்போவா..” என்று கேட்டவன் அவள் பார்வையில் தெரிந்த ஆர்வத்தில் சென்று கிட்டாரை எடுத்து வந்து கட்டிலில் அமர, ஒரு காலை கீழே விட்டு ஒரு காலை மடித்து கட்டிலின் ஒரு பக்கம் அமர்ந்தவன் அவளை நோக்கி திரும்பி அவளை பார்த்து கண்சிமிட்டி கிட்டரில் ஸ்ருதி சேர்க்க, இரண்டு கைகளையும் கன்னத்தில் ஊன்றி அவனை ஆர்வமாக பார்த்திருந்தாள் அவள்.
ஊரே அவள் குரலை கேட்க காத்திருக்க, அந்த கவிக்குயில் தன்னவனின் குரலில் மயங்க நேரம் பார்த்து குழந்தையென, பதுமையென அமர்ந்திருக்க, எதிரில் அமர்ந்திருந்தவனோ அவளின் இந்த பூரிப்பில் மயங்கியவனாக அவளை அதிசயமாக தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

தன்னையறியாமல் அவள் அவன்மீதான காதலை அவனிடம் ஒவ்வொரு செயலிலும் கூறிக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக அவளில் தொலைந்து கொண்டிருந்தான் அவன். அவள் கண்கள் அவனை கள்ளுண்டவனாக மாற்றிக் கொண்டிருக்க அந்த போதையுடனே

கள்ளுர பார்க்கும்
பார்வை உள்ளுர பாயுமே…
துள்ளாமல் துள்ளும்
உள்ளம் சல்லாபமே….
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே…
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே…

முந்தானை மூடும்
ராணி செல்வாக்கிலே என்
காதல் கண்கள் போகும்
பல்லாக்கிலே… தேனோடை
ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே …
பொன் மேனி கேளாய் ராணி!!!

என்று முடித்தவன் வலது கையில் கிட்டாரை ஏந்திக் கொண்டு கைகளை விரிக்க, வேகமாக அவனை அணைத்து கொண்டவள் அவன் காதில் “இப்போ இன்னுமே பிடிக்கல….இந்த ஷ்யாமை..” என்றுவிட, அத்தனை சத்தமாக சிரித்தான் அவன். அவன் சத்தத்தில் பயந்தவளாக அவன் வாயை மூடியவள், அவன் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி அவனை சிறை செய்து கொண்டாள். அவனும் விருப்பத்துடனே அவளிடம் அகப்பட்டதுதான் முரண் அங்கே.

காதலில் முரண் ஏது… முரண்களின் மொத்த வடிவமே அல்லவா அது….

Advertisement