Advertisement

“பொண்டாட்டியா… யாரு… அதெல்லாம் சொல்லாதீங்க… ரொம்ப கேவலமா பீல் பண்ண வச்சிட்டீங்க என்னை… பொண்டாட்டியாம்.. பொண்டாட்டி.. என்னை ஒரு மனுஷியா கூட நினைச்சதில்ல நீங்க… அதுதான் உண்மை…”

“நான் வேணும்ன்னாலும் உங்க விருப்பம்தான்.. பின்னாடியே சுத்தி, என்னென்னவோ செஞ்சு ஒத்துக்க வைப்பிங்க.. அப்புறம் நான் வேண்டாம்ன்னாலும் அதையும் நீங்களே முடிவு செய்விங்க… அப்போ நான் எதுக்கு… நான் யாரு உங்களுக்கு.. பொம்மையா நான்…” என்று கோபமாக கேட்டு, கண்களை துடைத்துக் கொண்டவள்

“எனக்கு நீங்க வேண்டாம்… என்ன நடந்தாலும் சரி, எனக்கு நீங்க வேண்டாம். என்னால வாழ்க்கை முழுக்க இப்படி இருக்க முடியாது.. நான் தனியாவே இருந்தாலும் சரி, நானாகவே இருக்கேன்.. இது போதும்..”

“நீங்க என்னை தலையில தூக்கி ஆடவும் வேண்டாம், அப்புறம் ஒரேடியா தூக்கி தூர வீசவும் வேண்டாம்.. என்னால முடியாது…” என்று அவள் கண்ணீர் விட, அமைதியாக அவள் அழுவதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

அவள் அழுகையை நிறுத்தவும் ” சரி ஓகே.. ஸ்ரீதர் வேண்டாம்.. நல்ல முடிவு தான்.. அதுக்கு ஏன் இவ்ளோ அழணும்… விடு பார்த்துக்கலாம்..” என்று இலகுவாக அவன் கூற, மீண்டும் கண்ணீர் உடைப்பெடுத்தது அவள் கண்களில். “இவன் முன்னால் அழகூடாது’ என்று கூறிக் கொண்டவள் கண்ணீரை காட்டாமல் நிற்க

அவள் கைகள் இன்னும் அவன் பிடியில்தான் இருந்தது. அவள் கையை மேலும் அழுத்தியவன் “சரி சொல்லு… நான் வேண்டாம் ன்னு முடிவு பண்ணியாச்சு.. அடுத்து என்ன..”

“என்ன… என்ன அடுத்து ” என்று அவள் புரியாமல் கேட்க

“நீ என்னை விட்டுட்டு போய்டுவ… நான் என்ன செய்றது.. அதையும் நீயே சொல்லிடு…”

“என்ன.. என்ன செய்விங்க நீங்க… மிரட்டறீங்களா…” என்றவள் கோபமாக அவனை பார்க்க

“என்ன மிரட்டினாங்க உன்னை… நீதான் என்னை மிரட்டிட்டு இருக்க இப்போதைக்கு… ரெண்டு வீட்லயும் நான் என்ன பதில் சொல்றது. உனக்கு நான் வேண்டாம்ல.. நீயே சொல்லு அவங்ககிட்ட… உன் அப்பாகிட்ட பேசு.. எனக்கு ஸ்ரீதர் வேண்டாம்ன்னு சொல்லு. அடுத்து மினிஸ்டர் க்கு போன் போடு” என்று அவளை மிரட்டிக் கொண்டு தான் அமர்ந்திருந்தான் அவன்.

“என்ன.. நான்… நான் ஏன் சொல்லணும்.. நீங்க தானே என்னை வேண்டாம் ன்னு சொன்னிங்க.. நீங்களே சொல்லிக்கோங்க… உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லிக்கோங்க…” என்று அவள் கத்த

“நான் எனக்கு தோணினதை உன்கிட்ட மட்டும் தான் சொல்ல முடியும்… எல்லார்கிட்டயும் நான் நினைச்சதை பேச முடியாது. உன்கிட்ட மட்டும்தான் அது முடியும்… ஆனா அதுவும் தப்பு ன்னு இப்போ புரியுது” என்றுவிட

“என்ன.. என்ன தப்பு பண்ணிட்டீங்க நீங்க.. நாந்தான் தப்பு… அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே…”

“என்ன சொன்னேன்… என்னடி சொன்னேன் உங்கிட்ட.. நீ தப்பு ன்னு இதுவரைக்கும் எங்கேயும் நான் சொன்னதே கிடையாது.
“அன்னிக்கு உன்னை வேண்டாம்ன்னு சொன்னதுக்கு கூட ஒரு வகையில நீதான் காரணம். எங்கே கன்யா மேல இருக்க வெறுப்புல உன்னை கஷ்டப்படுத்தி விடுவேனோ ன்னு தான் யோசிச்சேன். நீ அழறதை பார்க்க வேண்டாம் ன்னு நினைச்சேன்.”

“ஏன் உனக்கு தெரியாதா என் கோபம்?? இதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட கோபப்பட்டதே இல்லையா… எத்தனை முறை நீ தப்பு ன்னு சொல்லி இருக்கேன். இல்லை எத்தனை முறை நீ வேண்டாம் ன்னு சொல்லி இருக்கேன்.”

“சரி.. அதையும் விட்டுடு.. இதுவரைக்கும் எத்தனை முறை உன்கிட்ட சண்டை போட்டு பேசாம உன்னை அப்படியே விட்டுட்டு போயிருக்கேன். அந்த அளவுக்கு கூட யோசிக்கமாட்டியா…”

“கிட்டத்தட்ட ஒரு வருஷமா உனக்கு என்னை தெரியும்.. என் கேரக்டர் என்னன்னு உனக்கு தெரியாது. அன்னிக்கு நீ சொன்ன வார்த்தையை யோசிச்சு பாரு.. கோபம் இருந்தா என்ன வேணாலும் பேசலாமா… அதே வார்த்தையை நான் சொல்லி இருந்தா…”

“உன்னை போன்னு சொன்னதுக்கே இத்தனை கோபம், இவ்ளோ அழுகை.. அப்போ நான் எங்கே போய் சொல்றது. கிட்டத்தட்ட என்னை பொம்பளைக்கு அலையுறேன் ன்னு சொல்லிட்டா நான் காதலிச்ச பொண்ணு…”

“அதுவும் என்னை பத்தி நல்ல தெரிஞ்சும் அப்படி ஒரு வார்த்தை… உனக்கு தெரியாதா என்னை” என்று அவன் வேகமாக கேட்க, தலையை குனிந்து கொண்டு நின்றாள் அவள்.

“இவ்ளோ நேரம் வேகமா கேள்வி கேட்டல்ல.. பதில் இப்போ அதே வேகத்துல வரணும்.. வாயை திற” என்று அவன் கத்த

“என்னை நீங்க போக சொன்னது தான் இது அத்தனைக்கும் காரணம்… நான் அப்படி பேசியதும் உங்களாலதான். நீங்க தான் என்னை பேச வச்சீங்க..”

“உங்களை முழுசா பார்க்கிற வரைக்கும் என் உயிர் என்கிட்டே இல்ல.. அப்படி என்ன கோபம்… அத்தனை கோபத்தையும் வண்டியில தான் காட்டணுமா… ஏன் உங்களுக்கு என்னை தெரியாதா..??? அப்புறம் ஏன் அப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க”

“லூசா நீ… வண்டியில வேகமா போனேன் தான்… ஆனா அடுத்தவன் மேல மோதுற அளவுக்கு வேகம் இல்ல.. அது ப்ரீ பிளான்ட் அட்டெம்ப்ட்… நான் ஸ்லொவா போனாலும் தூக்கி இருப்பானுங்க..” என்று அவன் கூறிவிடவும், அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் அவள்.

அவள் பார்வையில் தலையை கோதிக் கொண்டவன், அவள் கைகளை அழுத்தி “இப்படி பார்க்காத அனு.. அதுதான் எதுவும் நடக்கலையே..இதுக்குதான் உன்கிட்ட எதுவுமே சொல்லல நான்…” என்று கூற, மீண்டும் கண்ணீர் தான் அவளிடம்.

அவள் கையை பிடித்து இருந்தவன் “ஹேய் கட்டி பிடிக்கணும் ன்னா கூட என்னால முடியாது இப்போ… இப்படி அழுது வைக்காத…” என்று சலித்து கொள்ள

கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள் அவள். அவன் அவளையே பார்க்கவும் “நான் கிளம்பனும்… அம்மா தேடுவாங்க.. ” என்று கூறி நேரத்தை பார்க்க

“எனக்கு பதில் சொல்லிட்டு கிளம்பு…”

“என்ன பதில் சொல்லணும்..” என்று மீண்டும் அவள் முறைக்க

“திரும்ப முதல்ல இருந்து பேசணும்ன்னா எனக்கு ஒண்ணுமில்ல.. பேசுவோம்” என்று அவன் சாய்ந்து அமர

“நான் முடிவு பண்ண எதுவும் இல்ல.. என்ன ஆனாலும் உங்க முடிவுக்கு தான் என்னை வளைக்க போறீங்க… உங்களுக்கு என்ன தோணுதோ செஞ்சுக்கோங்க..” என்று விட்டேற்றியாக அவள் சொல்லிவிட்டு நகர பார்க்க

அவள் கைகளை விடாமல் அழுந்த பற்றியவன், அவளை தன் உயரத்திற்கு இழுக்க, அவன் இழுத்ததில் நிற்க முடியாமல் அவன் மீது விழுந்தவள், அப்படியே மண்டியிட்டுவிட அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.

அவள் இறுக்கமாகவே இருக்க, அவள் முகம் பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவள் தோள்களின் மீது தன் கைகளை வைத்துக் கொண்டு “என் முடிவு தான்… ஆனா நம்ம வாழ்க்கைக்காக.. இந்த ஒருமுறை மட்டும் பொறுத்துக்கோ… இனி எப்பவும் நீ என்ன நினைக்கிறியோ அதுதான்… அதுக்கு நான் பொறுப்பு” என்று கூற

அவனை நம்பாமல் அவள் முறைக்க “நம்புடி என்னை.. நான் பாவம் இல்ல..” என்றவன் அவள் கண்களில் முத்தமிட, ஏனோ அழுகை தான் வந்தது அவளுக்கு. அவள் அழுவதை தாங்காமல் அவளை நெஞ்சோடு அவன் அணைத்து கொள்ள அவன் நெஞ்சில் அழுத்தமாக புதைந்து கொண்டவள் சத்தமாகவே அழுது விட்டாள்.

ஸ்ரீதருக்கும் தன் தவறுகள் முழுமையாக புரிந்து இருக்க, இனி அவளை அழ விடுவது இல்லை என்று தனக்குதானே சொல்லிக் கொண்டான் அவன்.
ஒரு வழியாக அவள் அழுகை சற்று குறையவும், அவளை அணைத்தவாறே அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ” சாரி அனுமா… சாரிடி..” என்று அவள் காதில் மெல்லிய குரலில் கூற, நிமிரவே இல்லை அவள்.

“ஹேய் அனுமா.. மாமாவை மன்னிக்க கூடாதா..” என்றவன் மீண்டும் அவள் காதுகளில் முத்தமிட, இன்னும் இன்னும் அழுந்திக் கொண்டாள் அவன் நெஞ்சென்ற மஞ்சத்தில்.

இதுதான் அவளின் ஸ்ரீ.. அவள் விரும்பியவன்… இத்தனை நாள் அவனை சுற்றி போட்டுக் கொண்டிருந்த வேலிகளை எல்லாம் உடைத்துக் கொண்டு அவன் தன்னிடம் வந்து விட்டதாகவே தோன்றியது அவளுக்கு. அவனின் ஒற்றை சமாதானத்தில் இப்படி விழுகிறோமே என்று தோன்றிய போதும் கூட, அவனை விட எதுவுமே பெரிதாக தோன்றவில்லை அவளுக்கு…

சில மணித்துளிகளுக்கு முன்னர்கூட வேண்டாம் என்று உரக்க கத்திக் கொண்டிருந்த மனம், இதோ அவன் அருகாமையில் அமைதியாக சுருண்டு இருந்தது. இந்த அமைதி அவனால் மட்டுமே சாத்தியம் என்பது அவளுக்கு புரிந்திருக்க, அவனை தன்னால் விட்டுவிட முடியாது என்பதும் திண்ணம்தான் அவளுக்கு.

அவளின் இறுகிய அணைப்பு அவள் நிலையை உணர்த்த, தன் அணைப்பிலேயே அவளுக்கு ஆறுதல் வழங்கி கொண்டிருந்தவனும் முற்றாக சுயம் இழந்து தான் இருந்தான் அவள் காதலில். தன் வாழ்வு தன் கைகளுக்குள் அடங்கி இருந்ததாக தான் தோன்றியது அந்த நொடி அவனுக்கு. இனி விட்டுவிடவே மாட்டேன் என்று தன் முத்தங்கள் வழியாக சத்தியம் செய்து கொண்டிருந்தான் அவன்.

Advertisement