Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 30

அன்று காலை கன்யா எப்போதும் போலவே பள்ளிக்கு தயாராகி கீழே இறங்க, வேதா அவளை கோபத்துடன் பார்த்தார். நிச்சயம் முடிந்து இருப்பதால் சில நாட்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று அவர் நேற்றே கூறி இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலையே அவள் பள்ளிக்கு தயாராகி வந்தால் அவரும் தான் என்ன செய்வார்.

அவர் மகளை முறைத்து கொண்டே நிற்க அவர் பார்வையை கண்டவள் “வேதாம்மா இன்னிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு உடனே வீட்டுக்கு வந்துடறேன்..” என்று கொஞ்சலாக கூற

“உனக்கு என்னிக்கு தான் வேலை இல்லாம இருக்கு. சொன்ன பேச்சை கேட்கறதே இல்லை ஸ்ரீமா” என்று அவர் அலுத்துக் கொள்ள

அவரின் கோபம் புரிந்தவளாக அவர் அருகில் அமர்ந்தவள் “அச்சோ வேதம்மா… இந்த ஸ்ரீ பையன் ஏன் இப்படி இருக்கான்? ஏன் இப்படி இருக்கான் ன்னு புலம்பிட்டு இருந்திங்கல. அதுக்கு தான் இன்னிக்கு போறேன். அவனையும் கூட்டிட்டு போறேன். ” என்று கூறி விட்டாள்.

“அவனை எந்த நேரத்துல பெத்தேனோ?? இப்படி என்னை படுத்தி வைக்கிறான்…. நேத்து அந்த பொண்ணு முகத்தை பார்த்தியா ஸ்ரீமா… எவ்ளோ வேதனை அவ முகத்துல…. ஆனா இவனை பாரு கல்லு மாதிரி அப்படியே உக்காந்திட்டு இருக்கான்…”

“இவன் தான் அவகிட்ட ஏதோ வம்பிழுத்து இருக்கான் ஸ்ரீ.. நீ இவனுக்கு ஏத்துட்டு அந்த பொண்ணுகிட்ட போய் நிற்காத… இவனை எல்லாம் நம்பவே முடியாது.. நாளைக்கே திரும்பவும் எதையாவது இழுத்து வைப்பான்…”

“அந்த பொண்ணு பார்க்கவும் நல்ல பொண்ணா இருக்காளே.. ஏதோ புத்தி வந்துடுச்சு போல என் மகனுக்கு ன்னு நினைச்சிட்டேன்… ஆனா அவன் அசடுன்னு நிரூபிச்சிட்டே இருக்கான்… அவளை இவன் என்ன பேச்சு பேசி இருந்தா முதல் நாள் அப்படி அழுதவ, அடுத்து அவனை பார்க்காம கூட இருந்திருப்பா… “

“அப்படி என்ன கொழுப்பு இவனுக்கு.. எல்லாம் உன் அப்பா கொடுக்கற இடம்… நீ அவன் கூட போகாத… நான் சொல்றதை கேளு” என்று அவர் முடிவாக கூறிவிட

கன்யாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு. வேதாவுக்கு பின்னால் நின்று அவரை முறைத்து கொண்டிருந்த ஸ்ரீதரை பார்க்க பார்க்க அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு வர, பொங்கி சிரித்தாள் அவள். வேதா அவள் சிரிப்பதை கேள்வியாக பார்த்தவர் பின்னால் திரும்பி பார்க்க, அங்கு நின்றிருந்த மகனை கண்டு கொள்ளவே இல்லை அவர்.

அவன் முறைத்துக் கொண்டே வந்து அவர் முன்னால் அமர்ந்தவன் அவரையே பார்க்க, “என்னடா பார்வை வேண்டி கிடக்கு.. எங்கே கிளம்பிட்ட” என்று கேட்க

“உங்களுக்கு தெரியவே தெரியாது.. அதெப்படிமா பெத்த புள்ளைய தவிர மத்த எல்லாருக்கும் சப்போர்ட் பண்றிங்க.. என்னை தவிர எல்லாரும் நல்லவங்க… அப்படித்தான.” என்று கடுப்பாக அவன் கேட்க

“ம்ஹும்… நான் பெத்ததோட லட்சணம் எனக்கு தெரியாது…” என்று நொடித்துக் கொண்டார் அவர்.

“ஒழுங்கா அந்த பொண்ணை பார்த்துக்க முடியும்ன்னா, இப்போ கிளம்பு.. இல்லை கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி தான் அவளை அழ வச்சு வேடிக்கை பார்க்கணும்ன்னு நினைச்சிட்டு இருந்தா நீ போகவே போகாத.. அவ எங்கேயோ நல்லா இருக்கட்டும்…”

ஸ்ரீதர் “நல்ல அம்மா எனக்கு…. மா.. நான் என்ன வில்லனா… எனக்கு மட்டும் ஆசையா அவளை அழ வைக்க.. அவ பேசினா, பதிலுக்கு நல்லா வாங்கிக்கிட்டா.. என் வாயை பத்தி தெரியும்ல.. பேசிட்டேன்.. அதுக்காக எப்பவும் அப்படியே செய்வேனா… யோசிக்கவே மாட்டிங்களா அம்மா… என்று அவன் கோபமாக கேட்க

“இதோ இந்த கோபத்தை தான் சொல்றேன் நான்… என்கிட்டேயே இத்த்னையா பேசுற நீ.. அவகிட்ட பேச மாட்டன்னு என்ன நிச்சயம். உன் கோபம் தான் உனக்கு முதல் எதிரி.. ஆளுக்குமுன்ன எல்லாரையும் அடிச்சு சாய்ச்சிடும் அது…”

“நாளைக்கு அவளை கல்யாணம் பண்ணிட்டும் நீ இதையே செஞ்ச, நானே அவளை கூட்டிட்டு தனிக்குடித்தனம் ன்னு கெளம்பிடுவேன்…பார்த்துக்க” என்று வர எச்சரிக்கையாக கூற

சிரித்துவிட்டவன் ” ஹாஹா… நான்தான் வாய் பேசுறேன்.. உங்க புருஷன் என்ன செஞ்சாரு. அவர் தனியா இருந்தா பரவால்லையா…”

“நீ என்ன பண்ணாலும் உனக்கு சப்போர்ட் பன்றாரு இல்ல. அவரும் சேர்ந்து உன்கூட திரியட்டும்..” என்று கோபமாகவே அவர் கூற, கன்யா புன்னகையுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இறுதியாக “அம்மா… ஏதோ அந்த நேர கோபம் அவளை கஷ்டப்படுத்திட்டேன்.. எப்பவும் இதையே செய்ய மாட்டேன்மா.. புரிஞ்சிக்கோங்க… நானே அவளை சரி பண்றேன்.. அதோட இனி இப்படி நடக்கவும் மாட்டேன். வேணும்ன்னா உங்ககிட்ட ப்ராமிஸ் பண்ணவா..” என்று கேட்க, அதில்தான் சற்று கரைந்தார் வேதா.

இருவரையும் புன்னகையோடு அவர் வழியனுப்பி வைக்க, ஒரு வழியாக இருவரும் மாரியுடன் இசைப்பள்ளியை வந்து அடைந்தனர்.அந்த ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயா வினுள் முதல் முறை நுழைகிறான் ஸ்ரீதர். ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனுள். கன்யா அவன் அருகில் நடந்துவர, கையில் வைத்திருந்த ஸ்டிக்கின் உதவியுடன் நிதானமாக என்றாலும் தடுமாறாமல் நடந்து வந்தான் ஸ்ரீதர்.

கன்யா அவனை அவளின் அறையில் அமர வைத்துவிட்டு, வகுப்புகளுக்கு சென்று விட்டு வருவதாக சொல்லி சென்று விட்டாள். இதுவரை அனுவை எங்கே சந்திப்பது ? என்ன சொல்லி வைத்திருக்கிறாள் அவளிடம் என்று எதுவுமே சொல்லவில்லை அவனிடம். காலையில் கிளம்ப சொன்னவள் அவனை அழைத்து வந்து இங்கே அமர்த்திவிட்டு அவள் பாட்டுக்கு சென்றிருந்தாள்.

கையில் தன் மொபைலை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் அடுத்த பத்து நிமிடங்களில் அதில் மூழ்கி போக, சில நிமிடங்கள் கழித்து அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அனுபமா… இவன் அமர்ந்திருந்தது அந்த அறையின் கதவுக்கு வலதுபுறம் என்பதால் வெளியில் இருந்து நுழைந்தவளுக்கு அவன் அமர்ந்திருப்பது முதலில் கண்ணில் படவில்லை.

உள்ளே நுழைந்து இயல்பாக அந்த மேசையின் முன்னால் இருந்த சேரில் அமரப் போனவள் அப்போதுதான் அங்கே ஸ்ரீதர் அமர்ந்திருப்பதை கண்டுவிட, கோபமாக எழுந்து கொண்டாள் அவள். ஸ்ரீதர் அவள் உள்ளே நுழைந்தது முதல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கோபமாக கதவை நோக்கி திரும்பவும், தன் கால் காயத்தை மறந்தவனாக எழுந்து வேகமாக அவளை நெருங்கியவன் அவள் கையை பிடித்துவிட, அவன் கையை கோபமாக உதறியவள் அடுத்த அடியை எடுத்து வைக்க, ஸ்ரீதர் தடுமாறி கீழே விழுந்து கொண்டிருந்தான்.

அந்த நாற்காலி எழுப்பிய சத்தத்தில் திரும்பி பார்த்தவளுக்கு அப்போதுதான் அவன் காலில் இருந்த காயம் நினைவுக்கு வர, வேகமாக அவனை நெருங்கியவள் அவனை விழாமல் தாங்கி பிடித்து அதே நாற்காலியில் அமர வைத்தாள். உண்மையில் இருவருமே எதிர்பாராத கணங்கள் அவை.

கீழே விழுந்து மீண்டும் காயமாகி இருந்தால் என்பதே அனுவின் மனதில் ஓடிக் கொண்டிருக்க, அவனுக்கோ பட்ட வலியும், வேதனையும் மறந்திருந்தது போலும். விட்டாள் சென்றுவிடுவாள் என்பது மட்டுமே ஒரே எண்ணமாக இருக்க, எதை பற்றியும் யோசிக்காமல் அவள் கையை பிடித்திருந்தான் அவன்.

இப்போது நாற்காலியில் அமர்ந்து கொண்ட பின்பும் கூட, அவள் கையை விடவே இல்லை அவன்.. அவன் முகத்தை பார்க்காமல் அவள் திரும்பி நின்றிருக்க, அவளின் வலது கை அவன் பிடியில் இருந்தது. கையை விடுவிக்க அவள் எடுத்த முயற்சிகள் வீணாக, தனக்குள் இருகியவளாக அசையாமல் நின்றாள் அவள்.

அவளின் கையை பிடித்திருந்தவன் லேசாக அவளின் உள்ளங்கையை தன் இடது கையால் வருடிக் கொடுத்து தன் இதழ்களை அந்த உள்ளங்கையில் பதிக்கப்போக, கையை இழுத்துக் கொள்ள முயன்றவள், இப்போது அவனை நேராக திரும்பி முறைக்க, அவளின் இடையை இரண்டு கைகளாலும் அழுத்தமாக பற்றியவன் அந்த மேசையில் சாய்த்தவாறு அவளை நிற்க வைத்து தன் கால்களை நீட்டி அமர்ந்து அவளை சிறை செய்து கொண்டான்.

அவனின் இந்த செயலை எதிர்பார்க்காமல் அவள் திகைத்து நின்றுவிட, அவள் முகத்தை பார்த்தவன் “இப்போ சொல்லு… என்ன உன் பிரச்சனை?? எதுக்கு என்னை முறைச்சிட்டே இருக்க??” என்று எதுவும் தெரியாதவன் போல் அவன் கேட்க

இறுக்கமாகவே நின்று கொண்டிருந்தாளே தவிர, வாயை திறக்கவே இல்லை. அவள் பதில் சொல்லமாட்டாள் என்பது புரிந்துவிட, கண்களை மூடி திறந்தவன் அவளின் இருகைகளையும் தன் கையில் எடுத்துக் கொண்டு “அனு நடந்த விஷயங்கள் எல்லாத்துக்கும் நான் மட்டும்தான் பொறுப்பு… தெரியும் எனக்கு… யார்கிட்டேயோ இருந்த கோபம் எப்படியோ திரும்பி உன்னை காயப்படுத்திட்டேன்… என் முட்டாள் தனத்தால எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்கேன் அனு… ஆனா என்னால உன்னை விட முடியாது.. என்ன ஆனாலும் உன்னை விடமாட்டேன்…. நீ சொல்லு நான் இப்போ என்ன செய்யட்டும்..” என்று அவள் கண்களை பார்த்து கேட்டு விட்டான் அவன்.

அவனை கோபமாக முறைத்தவள் “என்கிட்டே ஏன் கேட்கிறீங்க… இதுவரைக்கும் எல்லாம் என்னை கேட்டுதான் முடிவு பண்ணிங்களா…” என்று விட

“தப்புதான்… அதுக்குதான் இனி என் பொண்டாட்டியை கேட்காம எதுவும் முடிவெடுக்கக்கூடாது ன்னு முடிவு பண்ணிட்டேன். நீ சொல்லு இப்போ..”

Advertisement