Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 29

கன்யாவின் வீடு விசேஷத்திற்கு தயாராகி நிற்க, வீடு முழுவதும் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்கபட்டு இருந்தது. ஆதிநாராயணன் நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தார். ஷ்யாமின் வீட்டினர் கிளம்பி விட்டதாக தகவல் கொடுத்திருக்க, அனைத்து ஏற்பாடுகளையும் ஒருமுறை மீண்டும் பார்வையிட்டுக் கொண்டவர் திருப்தியாக தலையசைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

சொந்தங்கள் என்று யாரையும் அழைக்கவே இல்லை அவர். கன்யாவின் மனதை புண்படுத்துவது போல் யாரேனும் எதுவும் பேசிவிட்டால் தன்னால் தாங்க முடியாது என்று நினைத்தவர் யாருக்கும் அழைக்கவே இல்லை.

கன்யா அவள் அறையில் இருக்க, வேதா சமையல் அறையிலிருந்து வெளிப்பட்டார். அவரை பார்க்கவும் சிரித்த ஆதிநாராயணன் “மாப்பிள்ளை வீட்ல கிளம்பிட்டாங்களாம் வேதா… கன்யா தயாராகிட்டாளா ?” என்று கேட்க

வேதா சிரித்துக் கொண்டே “அவ தயாரா தான் இருக்கா… நீங்க கொஞ்சம் அமைதியா உட்காருங்க ஒரு இடத்துல.. உங்களுக்கு தான் தலைகால் புரியல…” என்று கூற

ஆதி நாராயணனும் சிரித்துவிட்டு ” அது…. சந்தோஷத்துல ஒன்னும் புரியல வேதா… எல்லாம் சரியா இருக்குல்ல” என்று மீண்டும் ஒருமுறை கேட்க

வேதா அவரை போலியாக முறைத்து ” உங்களுக்கு வயசாகிடுச்சு பெரியவரே…. அதான் செஞ்ச வேலை கூட மறந்து போகுது. எல்லா வேலையும் ஏற்கனவே முடிச்சிட்டிங்க. போய் வாசல்ல நில்லுங்க… மாப்பிள்ளை வந்தா பொண்ணுக்கு அப்பாவா வரவேற்று உட்கார வைங்க… அதுபோதும் ” என்று நக்கலாக அவர் கூறிவிட, அசடு வழிந்து கொண்டே நின்றார் அமைச்சர்.

ஒரே மகளின் நிச்சய விழா… வீட்டளவில் என்றாலும் முழுவதுமாக அவரே எடுத்து செய்வது.. அவரின் அத்தனை வருட போராட்டத்திற்கு மகள் கொடுத்த அங்கீகாரம் அவரை தந்தையாக ஏற்றுக் கொண்டது. அதுவும் அவள் திருமண விஷயத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டிருக்க, மனிதரை கையில் பிடிக்க முடியவில்லை.

அவர் இந்த நிச்சயத்தையே அத்தனை பிரம்மாண்டமாக தான் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கன்யா மறுத்துவிட்டதால் தான் வீட்டளவில் மட்டும் ஏற்பாடு செய்திருந்தார். அதுவும் ஷ்யாம் திருமணத்தை ஜமாய்த்து விடலாம் என்று உறுதி அளித்து இருக்க, அதன் பொருட்டே சற்று சமாதானம் ஆனார் அவர்.

வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு “வேதா” என்று அழைத்துக் கொண்டே அவர் வெளியே நடக்க, அவர் வாசலை நெருங்கும் நேரம் வேதாவும் வந்து அவருடன் இனைந்து கொண்டார். மூன்று கார்களில் ஷ்யாமின் வீட்டினர் வந்து சேர்ந்திருக்க, முதல் இரண்டு கார்களில் இருந்து ஷ்யாமின் குடும்பத்தினர் அனைவரும் இறங்க, மூன்றாவது காரில் இருந்து ராகவன்- தேவி தம்பதியும், அனுபமா வும் இறங்கினர்.

அனுவின் கண்கள் வேகமாக ஒருமுறை சுழன்று மீண்டும் தன் நிலையை அடைந்துவிட, தன் செயலுக்காக தன்னையே நொந்து கொண்டு அமைதியாக அங்கே நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள் அவள். ஆதி நாராயணனும்- வேதவதியும் அவர்களை வரவேற்று அமர வைக்க, ஸ்ரீதர் அப்போதுதான் அறையிலிருந்து வெளியில் வந்தான்.

கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கின் உதவியால் மெதுவாக நடந்து வந்தவன் அனைவரையும் “வாங்க” என்று வரவேற்க, ஷ்யாம் சற்றே நகர்ந்து தன்னருகில் அவனை அமர்த்திக் கொண்டான். தேவகி அவனிடம்

“இப்போ எப்படி இருக்கு ஸ்ரீதர்.. உடம்பு பரவால்லையா…” என்று விசாரிக்க

அவரை பார்த்து புன்னகைத்தவன் “இப்போ பரவால்ல பாட்டி.. கால்தான் நடக்கும் போது கொஞ்சம் வலிக்கும்…மத்தபடி ஓகேதான் பாட்டி” என்று மரியாதையாக பதில் கூற

“என்னவோ… திருஷ்டி கழிஞ்ச மாதிரி நினைச்சுக்கோ… எல்லாம் சரி ஆகிடும்… உன் அக்கா கல்யாணத்துக்கு எல்லா வேலையும் நீயே செய்வ பாரு…”

“கண்டிப்பா பாட்டி..” என்று புன்னகைத்தான் அவன்.

பாலகிருஷ்ணன் ” என்ன யங் மேன்.. எப்படி போகுது உன் பிசினஸ் எல்லாம்.. ” என்று சிரிப்புடன் கேட்க

“நல்லாவே போயிட்டு இருக்கு அங்கிள்.. ஆபிஸ் போகல மத்தபடி எல்லாம் போன்லேயே ஓரளவுக்கு மேனேஜ் பண்ணிட்டு இருக்கேன்” என்று உரைக்க

“தட்ஸ் குட் ஸ்ரீதர்… ஆக்சிடன்ட் ஆனதும் அப்படியே உட்காராம அடுத்து என்னன்னு யோசிக்கிற பார்த்தியா, அதுதான் உனக்கான மெடிசின். கண்டிப்பா சீக்கிரமே குணமாகிடுவ. உன் ஆபிஸ் உன்னை இழுத்துட்டு போய்டும் பாரு” என்று அவனிடம் கூற

“சீரியஸ்லி அங்கிள்.. செம போரிங் வீட்லயே இருக்கறது.. ஆபிஸ் போகணும்..” என்று அவன் பதில் கூற, பத்மினி ” இவர் பேச்சை கேட்காதா ஸ்ரீதர்… உன்னை இப்படியே தூக்கிட்டு போய் ஆபிஸ்ல உட்கார வச்சிடுவார் இவர்… முதல்ல உடம்பு குணமாகட்டும்” என்று கணவரை முரைத்துக் கொண்டே கூற, ஸ்ரீதர் சிரித்துவிட்டான்.

ஷ்யாமும் சிரித்துக் கொண்டு இருக்க, வேதா இதற்குள் அனைவருக்கும் காஃபி கொடுத்து முடித்திருந்தார். தேவகி தான் அவரிடம் “கன்யா எங்கே வேதா..” என்று கேட்க,

“அவ மேல ரூம்ல இருக்காமா.. நான் கூட்டிட்டு வரேன் வரேன்” என்றவர் எழுந்து கொள்ள, தேவகியோ “அட நீ இரு… அனு நீ போ.. உன் அண்ணியை கூட்டிட்டு வா” என்று அவளை அனுப்பி வைக்க, வேதவதி அமர்ந்து கொண்டார்.

குடும்பம் மொத்தமும் அனுவை பார்க்க, அவளோ அமைதியாக எழுந்தவள் மாடிப் படிகளை நோக்கி நடந்தாள். ராகவன் ஸ்ரீதரை பார்க்க, அவனும் எவ்வளவு நேரம்தான் நடிப்பான். அவனின் பார்வை முழுவதும் நடந்து செல்லும் தன் காதலின் மீது தான். அவன் அங்கு வந்து அமர்ந்தது முதல் ஒரு முறை கூட அவனை பார்க்க அவள் முயற்சிக்கவே இல்லை.

அவனும் அனைவரும் இருப்பதால் நல்ல பிள்ளையாக அமர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, இப்போது அவள் எழுந்து செல்லவும் பார்வையை அவளிடம் திருப்பி இருந்தான். ஷ்யாம் அவன் அருகில் அமர்ந்திருந்தவன் அவன் தொடையில் லேசாக தட்ட, அவனை திரும்பி பார்த்தவன் பார்வையை திருப்பிக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டான்.

ராகவனுக்கு இருவர் நிலையம் புரிந்தாலும் என்னவென்றே சொல்லாதவர்களிடம் என்னவென்று கேட்பார் அவர்… மகளும் இதுவரை எதுவுமே கூறி இருக்கவில்லை… ஆனால் இருவரின் முகபாவமே எதுவோ சரியில்லை என்று உணர்த்த, இதில் மனைவி வேறு அவ்வபோது கண்ணீர் விட ஆரம்பித்து இருந்தார். இவர்களின் நிலையை நினைத்து தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான் ராகவனுக்கு.

ஆனால் இப்போது ஸ்ரீதரின் முகத்தை பார்த்தவருக்கு நிச்சயம் அவன்மீது ஒரு நம்பிக்கை வர, எல்லாம் சரியாகும் என்று அவருக்கு அவரே சொல்லிக் கொண்டு அமைதியானார் அவர்.

அணு கன்யாவின் அறைக்கு சென்றவள் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைய, கட்டிலில் அமர்ந்து இருந்தாள் அவள். அனுவை பார்க்கவும் அவள் புன்னைகைக்க, பதிலுக்கு புன்னகைத்த அனு ” ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி… அண்ணா உங்களுக்காக வெயிட்டிங்.. நாம போகலாமா??” என்று தலையசைத்து வினவ, கன்யா சிரித்துக் கொண்டே தலையசைத்தவள் அவளுடன் நடந்தாள்.

எந்த பிரத்யேக அலங்காரமும் இல்லை கன்யாவிடம்.. ஒரு அழகான கரும்பச்சை நிற பட்டு, அதற்கேற்ற நகைகள்.. மெல்லிய ஒப்பனை.. அவ்வளவே. ஆனால் அதற்கே ஜொலித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் மனதின் மகிழ்வு அவள் முகத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த புன்னகையில் தெரிய, அவளையே கண் எடுக்காமல் பார்த்து வைத்த ஷ்யாமின் புன்னகையில் அவளின் முகம் மேலும் சிவந்து அவளை இன்னும் அழகாக காட்டியது.

அவள் கீழே இறங்கி வரவும், எழுந்து அவள் அருகில் வந்த பத்மினி அவளை கைபிடித்து தன் அருகில் அமர்த்திக் கொள்ள, அமைதியாக அமர்ந்து விட்டாள். ஷ்யாமின் பார்வையில் மெல்லிய பதட்டம் உள்ளுக்குள் ஊடுருவ அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் வரவே இல்லை பெண்ணுக்கு.

ஷ்யாமுக்கும், கன்யாவுக்கும் அந்த நொடிகள் இதமான அமைதியில் கழிய, பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.அடுத்த சில நிமிடங்களில் பத்மினி தான் எடுத்து வந்த புடவையை கன்யாவிடம் கொடுத்தவர் மாற்றிக் கொண்டு வரும்படி கூற, அனுவும், வசுவும் அவளுடன் உடன் நடந்தனர்.

வசு மாடியேற வேண்டாம் என்று கீழே இருந்த ஸ்ரீதரின் அறையில் கன்யாவை உடைமாற்றிக் கொள்ளுமாறு வேதா கூறிவிட, ஸ்ரீதரின் அறைக்குள் நுழைந்தனர் பெண்கள். கன்யாவும், வசுவும் ஏதோ பேசிக் கொண்டு இருக்க, அனு அந்த அறைக்குள் நுழைந்தது முதல் அமைதியாகி விட்டாள். பேச்சே இல்லை அவளிடம்.

கன்யா வசுவிடம் அவளை கண்காட்ட, வசு “அனு ” என்று அழைக்கவும், திடுக்கிட்டவளாக திரும்பி பார்த்தாள் அனு. “சொல்லுங்க அண்ணி” என்று வசுவை பார்க்க, வசு கன்யாவை பார்த்தவள்

“ஸ்ரீ புடவையை கட்டி முடிச்சுட்டா.. நீ என்ன வேடிக்கை பார்த்திட்டு நிற்கிற..” என்று கேட்க

“அது.. அது.. ஒண்ணுமில்ல அண்ணி. சும்மா இந்த ரூமை பார்த்திட்டு இருந்தேன்” என்று அவள் சமாளிக்க

‘அதுசரி.. கண்ணுமுன்னாடி உட்கார்ந்திட்டு இருந்தான்.. அவனை பார்க்காம ரூமை பார்க்கிறாளாம்” என்று வசு முணுமுணுப்பாக கூற, கன்யாவுக்கு தெளிவாகவே கேட்டது. நிச்சயம் அனுவுக்கும் கேட்டுதான் இருக்கும். ஆனால் அவளோ காது கேளாதவள் போல் கன்யாவிடம் “போகலாமா அண்ணி” என்று கேட்க

“கொழுப்பை பார்த்தியா… இவளை பத்தி யாருமே எதுவுமே கேட்க கூடாது, பேசக்கூடாது… மேடம் நம்ம யாருக்கும் பதில் சொல்ல மாட்டாங்க.. ” என்று வசு கோபத்தில் சொல்லிவிட, அது சரியாக தாக்கியது அனுவை.
ஏனோ தன் உறவுகளிடம் இருந்து தள்ளி நின்றுவிட்டது போல் ஒரு உணர்வு அவளுக்கே இருக்க, இப்போது வசுவும் இப்படி கூறவும் முணுக்கென்று கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்துவிட்டது.

இது எல்லாம் தானே இழுத்துக் கொண்டது என்று தோன்றிவிட, யாரையும் குற்றம் சொல்லும் மனா நிலையம் அவளுக்கு இல்லை. எனவே அமைதியாக விழுங்கி கொண்டவள் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு “போகலாம் அண்ணி ” என்று கன்யாவிடம் மீண்டும் கூற

கன்யா அவளை நெருங்கி தன்னோடு அணைத்து கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிய அவளின் அணைப்பை ஏற்றுக் கொண்டவள் தன்னை தேற்றிக் கொண்டாள். சில நிமிடங்களில் அவளிடம் இருந்து அவள் தானாகவே விலகிவிட

வசு அவள் முழங்கையை மேலாக பற்றி இழுத்தவள் “எதுக்காக இப்படி அழணும் அனு.. உனக்கு புரியுதா நீ என்ன செய்ற ன்னு… உன் அம்மா முகத்தை பார்த்தியா… எதுக்கு இப்படி நீயும் அழுது மத்தவங்களை அழ வைக்கணும்… வாயை திறந்து ஏதாவது பேசினா தானே எங்களுக்கும் தெரியும்.” என்று அடிக்குரலில் அவளை கடிந்து கொள்ள, அப்போதும் அனு வாயை திறக்கவே இல்லை.

கன்யா தான் வசுவை சமாதானம் செய்து கட்டிலில் உட்கார வைத்தவள் அனுவை முகம் கழுவி வர சொன்னாள். அனு லேசாக முகத்தை கழுவி விட்டு வரவும் பத்மினி வந்துவிட்டார் இவர்களை தேடி.

Advertisement