Advertisement

அத்தியாயம் 27

ஸ்ரீதர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டிருக்க, மூன்று நாட்கள் கடந்திருந்தது. வேதா கன்யாவுடன் இருப்பதால் அவனையும் கன்யாவின் வீட்டிற்கே அழைத்து செல்வதாக அவர் கூற, ஆதி நாராயணனும், கன்யாவும் உடனடியாக அவன் முகத்தை தான் பார்த்தனர்.

இப்போது அவனிடம் மாற்றம் இருந்தாலும் கூட அவள் வீட்டில் இருப்பதை எல்லாம் ஒத்துக் கொள்வானா? என்று ஆதிநாராயணன் நினைக்க, ராஜாவோட கிரீடம் இறங்கிடாது ?? என்று நக்கலான பார்வை கன்யாவிடம். நிச்சயம் அவன் வரமாட்டான் என்ற நினைப்புடன் அவள் அவனையே பார்க்க, அவனோ மறுப்பே தெரிவிக்கவில்லை.

வேதா கூட அவனை எப்படியும் சமாளித்து அழைத்து சென்றிட வேண்டும் என்று தயாராக இருக்க, அவனோ யாருக்குமே வேலை கொடுக்காமல் அவனே சரி என தலையசைத்து விட்டான். கன்யாவுக்கு அதிர்ச்சி கூடவே ஆச்சரியமும் தான். டேய் கொஞ்ச கொஞ்சமா திருந்துடா, இப்படி ஒரேடியா திருந்திட்டா எனக்கு அட்டாக் வந்திடும் போல!! என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் அவள்.

ஆதி நாராயணன் எதுவும் சொல்லாமல் இருந்தாலும் அவருக்கு நிரம்ப மகிழ்ச்சிதான், மகனின் ஒப்புதலில். இதில் அதிகம் யோசிக்காதது வேதவதிதான். மகன் எப்போது மலையேறுவானோ என்று ஒரு பயம் இருந்து கொண்டே இருக்க, அவன் தலையசைத்த நிமிடம் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு அவனை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.

கன்யாவின் வீட்டில் கீழே இருந்த ஒரு அறையில் ஸ்ரீதர் தங்கி கொள்ள, வேதாவின் கவனிப்பில் தான் அவன். வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை அவன் செய்ய துவங்கி இருக்க, ஆதி நாராயணனின் வேலைகளும் சற்றே குறைந்து இருந்தது.

இதற்கு இடையில் ஆதிநாராயணனும், பாலகிருஷ்ணனும் ஷ்யாம்- கன்யாவின் திருமணம் பற்றி பேசி முடித்திருக்க, நிச்சயத்தை வீட்டோடு முடித்துக் கொண்டு இரண்டு மாதங்கள் கழித்து வரும் முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசி முடிக்கப்பட்டது பெரியவர்களால். ஸ்ரீதர் எழுந்து நடக்கவே இந்த இடைவெளி என்று அனைவர்க்கும் புரிந்தே இருந்தது.

இந்த இடைவெளி ஷ்யாம்- கன்யாவின் விருப்பமாக இருக்க, பெரியவர்களால் மறுப்பு சொல்லவும் முடியாமல் போனது. விஷயம் ஸ்ரீதரிடம் வந்தபோது சற்றே உணர்ச்சி வசப்பட்டாலும், உடனே சரியாகிக் கொண்டான் அவன். ஷ்யாமுக்கு அழைத்து “ஏன் மாமா இப்படி?? எப்படியும் கல்யாணத்துக்கு வரப்போறேன், எதுக்கு தள்ளி வைக்கணும்??” என்று அவன் கேட்க

“இது கன்யாவோட விருப்பம் ஸ்ரீ, உனக்கு சரியானதும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு அவ தான் சொன்னது..” என்று விட்டான் ஷ்யாம். ஸ்ரீதருக்கு தன் தவறுகளின் அளவு கூடிக் கொண்டே போகிறதோ என்று ஒரு எண்ணம். அவள் ஒவ்வொரு விஷயத்திலும் அவனை யோசித்து முடிவெடுக்க, ஆனால் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் ?? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான் அவன்.

ஆனால் அந்த யோசனையின் விளைவு தான் கன்யாவிடம் அன்று மாலை அவன் போதும் போதும் என்று வாங்கி கட்டிக் கொண்டது. மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வருபவள் அவன் அறைக்கு வந்து அவனை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்க, அன்றும் அதே போல் தான் அவள் அந்த அறையில் நுழைந்தது.

ஸ்ரீதரை பார்த்துவிட்டு அவள் நகர முற்பட “எனக்காக எதுக்கு கல்யாணத்தை தள்ளி வைக்கணும்?” என்று அவன் ஆரம்பிக்க

புரியாதது போல் பார்த்தாள் கன்யா. “என்ன பார்க்கிற?? நீதான கல்யாணத்தை இரண்டு மாதம் தள்ளி வைக்க சொன்ன?? என்று அவன் கேட்க

“ஆமா.. அதுக்கென்ன இப்போ “

“அதுதான் ஏன் ?? எனக்காக நீ ஏன் உன் கல்யாணத்தை தள்ளி வைக்கணும்” என்று வேகமாக ஸ்ரீதர் கேட்டுவிட

சிரித்தவள் “என்ன சொன்ன உனக்காகவா? நான் ஏன் உனக்காக கல்யாணத்தை தள்ளி வைக்கணும். நீ யார் எனக்கு??” என்று அவள் கேட்டபோது கூட, அலட்சியமாக தான் இருந்தான் அவன்.

அவளோ அந்த அலட்சியத்தில் கடுப்பானவளாக “உனக்காக என் கல்யாணத்தையே தள்ளி போடற அளவுக்கு நமக்குள்ள எதுவுமே இல்ல. நீ இப்படி இருக்கும்போது என் கல்யாண வேலையும் சேர்த்து வேதாம்மா வால பார்க்க முடியாது. எனக்கு அவங்க முழு சந்தோஷமா என் கல்யாணத்துல கலந்துக்கணும். அதுக்காக மட்டும்தான் இந்த இடைவெளி.

“மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல.அதான் அன்னிக்கு தெளிவா பேசிட்டோமே. அதுக்கு பிறகும் நீ ஏன் உன்னையே குழப்பிக்கிற ஸ்ரீதர்.” என்று கேட்டவள் அங்கு நிற்காது நகர்ந்துவிட்டாள். கதவருகில் ஒரு நிமிடம் நின்றவள் “ஷ்யாம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. அடுத்த மாசம் அவங்களோட நிச்சயம்… அதுக்காகவும் தான் இந்த இரண்டு மாதம்” என்று அவன் கண்களை பார்த்து கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பேசியவள் நிம்மதியாக கிளம்பிவிட, ஸ்ரீதருக்கு தான் நிம்மதி தொலைந்து போனது அந்த நொடி முதல். அனுவின் மீது இந்த நிமிடம் வரை கோபம் இருப்பது உண்மைதான். அன்று மருத்துவமனையிலும் கூட அவளை காயப்படுத்த அனுப்பி வைத்து அவன் தான். ஆனால் அவளை தவிர வேறெதையும் நினைக்க முடியாமல் அவன் தனிமை பொழுதுகள் அவனை இம்சித்துக் கொண்டிருந்தன.

தன் நிலை அப்படி இருக்க, அவளால் மட்டும் எப்படி இது முடியும்? என்று அவன் யோசித்தது ஒரு நிமிடம் தான். அனுவின் கண்ணீர் நினைவுக்கு வர நிச்சயம் அவளால் முடியாது என்று தோன்றிவிட, அன்று மருத்துவமனையில் நடந்ததை அசைபோட ஆரம்பித்தது அவன் மனது.

அன்று அவனுக்கு விபத்து நடந்து முடிந்த இரண்டாம் நாள் அவனை சந்திக்க வந்திருந்தாள் அனு. ஸ்ரீதரும் அப்போது தெளிவாகவே இருக்க, வேதாவுடன் பேசிக்கொண்டு தான் இருந்தான் அந்த நேரம். அப்போதுதான் அனு உள்ளே நுழைந்தது.

வேதா அவளை பற்றி தன் கணவர் மூலம் ஏற்கனவே அறிந்து இருந்ததால் மகிழ்ச்சியாகவே அவளை வரவேற்றார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறிவிட ஸ்ரீதரை நெருங்கியவள் அவன் அருகில் சென்று நிற்க, தன் கையை உயர்த்தி அவன் நெற்றியை தொட முயன்றாள்.

ஸ்ரீதர் தன் வலது கையை உயர்த்தியவர் தன் நெற்றியின் மீது வைத்து அவளை தடுத்தவன் “வேண்டாம் அனு…” என்று விட்டிருந்தான். அனு கண்கள் கலங்க அவன் முகம் பார்க்கவும் “ப்ளீஸ் அனு… ஏற்கனவே நிறைய பாவத்தை போதும் போதும்ன்னு சேர்த்து வச்சிருக்கேன். நீ இந்த கண்ணீருக்கான விளையும் என் பேர்ல எழுதிடாத…” என்று கூறும்போதே அனு “ஸ்ரீ ” என்று அவனை தடுக்க முயல

“ப்ளீஸ் அனு… நாம பேச வேண்டியதெல்லாம் பேசிட்டோம்ன்னு நினைக்கிறன். எனக்கு அடிபட்டதால எல்லாம் மாறனும் ன்னு எதுவும் இல்லையே. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்… நான் உன்னை ஏமாத்தினது அப்படியே இருக்கட்டும்… என்னால இதெல்லாம் சரிபண்ண முடியும்ன்னு தோணவே இல்லை எனக்கு…”

“இன்னிக்கு கன்யாவோட என் பிரச்சனை சரி ஆகிடுச்சுன்னு தான் உன்னை தேடி வந்தேன். நாளைக்கே அவளோட மறுபடியும் எதுவும் பிரச்சனைன்னா உன்னைத்தான் காயப்படுத்துவேன். இது என்னோட பிறவிக்குணம் போல…

“உனக்குதான் என்னை பத்தின புரிதல் நிறைய இருக்கே. நான் எப்படி பட்டவன் ன்னு நீ தெளிவா இருக்க, எப்பவும் அப்படியே இரு. என்னை திரும்பவும் நெருங்க ட்ரை பண்ணாத…’ என்று கூறிவிட

“ஸ்ரீ அது நான் கோபத்துல பேசினது….. உங்களை கஷ்டப்படுத்த தான் அந்த நேர கோபத்துல.. உங்களுக்கு புரியலையா ஸ்ரீ.” என்று அப்போதும் அவள் எடுத்துக் கூற முயற்சிக்க

“போதும் அனு… என்னை காயப்படுத்தணும்ன்னு நினைச்சு இருந்தா நீ என்ன வேணாலும் பண்ணி இருக்கலாம். ஆனா என்னை பத்தி நல்லா தெரிஞ்ச நீயே என்னை அத்தனை கேவலமா பேசி இருக்க வேண்டாம். என்னால உன்னோட வார்த்தைகளை மறக்கவே முடியல…. அன்னிக்கு அந்த ஆக்சிடன்ட் கூட என்னை பாதிக்கவே இல்ல, அப்பவும் உன்னோட வார்த்தைகள் தான் கேட்டுட்டே இருந்தது எனக்குள்ள.”

“ஸ்ரீ நான் சொல்றதை….” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கும்போதே அவளை தடுத்துவிட்டவன் “ப்ளீஸ் அனு… என்னை புரிஞ்சிக்கோ… நமக்குள்ள இது சரியா வராது, எனக்கு எப்பவும் என் அப்பாவை போல இருக்க வேண்டாம் அனு.

“அதுக்கான வாய்ப்பை கூட நான் எடுத்துக்க தயாரா இல்ல. உன் மனசுல ஏதோ ஒரு இடத்துல என்மேல அந்த எண்ணம் இருக்கு. மே பீ நானே கூட காரணமா இருக்கலாம். அன்னிக்கு உன்கிட்ட நான் பேசின விதத்தால நீ அப்படி நினைச்சு இருக்கலாம். எல்லாமே ஓகே தான். ஆனா அப்படி ஒரு எண்ணத்தோட நாம சேர்ந்து வாழ முடியாது. காலத்துக்கும் உறுத்திட்டே தான் இருக்கும்….

“நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. இதை முடிச்சிப்போம் அதோட இனி என்னை பார்க்க வராத. என் வீட்ல நான் பேசிக்கிறேன்… நீயும் உன்னை பார்த்துக்கோ… ” என்றுவிட, கண்ணீரே இல்லை அனுவிடம்.

“எப்பவும் நமக்கான விஷயங்களை நீங்கதான் முடிவு பண்றிங்க ஸ்ரீ. இந்த நிமிஷம் வரைக்கும் அதுதான் நடக்குது. இப்போ இந்த முடிவும் கூட உங்களோடது தான். உங்களுக்கு இதுதான் வேணும்ன்னா அதுவே நடக்கட்டும் ஸ்ரீ. இனி உங்க கண்முன்னாடி வரமாட்டேன் நான்.” என்றவள் கண்ணீருடன் தான் கிளம்பி போயிருந்தாள்.

பேசிவிட்டானே ஒழிய அவன் முகத்திலும் நிம்மதி இல்லை, அவள் கண்ணீர் நினைவில் நின்று நிந்தித்தாலும் கூட தன் மனதை இறுக்கி கொண்டான் அவன். அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கே புரியாதபோது அவளுக்கு எங்கே புரியவைப்பது என்று நினைத்துக் கொண்டவன் அமைதியை கையிலெடுத்துக் கொண்டான்.

இடையில் கன்யா ஒருமுறை அனுவை பற்றி பேசியபோதும் அவளிடமும் முகத்தில் அடித்தார் போல் பதில் கூறி இருக்க, அதன் வெளிப்பாடு தான் அவளின் இன்றைய பேச்சுக்கள். அனுவின் மீதான அவனின் அதீத காதலே அவளை காயப்படுத்தி விடுவோமே என்ற பயமே அவனை விலக சொல்ல, அதன் பொருட்டே அவளை அதிகம் காயப்படுத்தி விட்டோம் என்பதை அவன் உணரவே இல்லை.

இப்போதும் அவளுக்கு திருமணம் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் மனம் முரண்டு பிடிக்க, இதயம் முழுவதும் வலி தான். இதை தன்னால் தாங்க முடியாது என்று முடிவு செய்தவனாக அவளுக்கு கைபேசியில் அழைத்துவிட, அழைப்பை நிராகரிக்கவில்லை அவள். சில நொடிகளில் அழைப்பை ஏற்றவள் “ஹலோ” என்றிருக்க, அவனுக்கு தான் பேச்சே வரவில்லை.

அவள் மீண்டும் “ஹலோ” என்று கூறியவள் “என்ன பேசணுமோ சீக்கிரம் பேசி முடிங்க…” என்று சேர்த்து சொல்ல

“அனு உன்னை பார்க்கணும் நான்…” என்று தயங்கிய கூற

“முடியாது ஸ்ரீதர்… எனக்கு நேரமில்லை..” என்றவள் அழைப்பை துண்டித்தே விட்டாள். அவன் மீண்டும் அழைத்தும் எடுக்கவே இல்லை அவள். திரும்ப திரும்ப அவன் முயற்சித்துக் கொண்டே இருக்க, அழைப்பை ஏற்றவள் ” ஸ்ரீதர்… உங்களுக்கு என்னதான் வேணும்..” என்று கத்திவிட

“எனக்கு உன்னை பார்க்கணும் அனு. என்னால வரமுடியாது. நீ கிளம்பி வா..” என்று அதிகாரமாக கூற

கொதித்து விட்டாள் அவள். “என்னை நீங்க வச்ச ஆளா… இந்த அதிகாரமெல்லாம் இனி நடக்காது ஸ்ரீதர்…. பெட்டர் எனக்கு திரும்ப கூப்பிடாதிங்க” என்றவள் அழைப்பை துண்டிக்க போக, அவன் வாயில் சனிதான் அமர்ந்திருந்தார் போல அன்று.

“ஏன் அமெரிக்கா மாப்பிளை போன் பண்ணுவானா??” என்றுவிட

“அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை… எனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ண எங்களோட பேரன்ட்ஸ் முடிவு பண்ணி இருக்காங்க… நான் சம்மதிச்சு இருக்கேன்… அவன் எனக்கு போன் பண்றதுல என்ன தப்பு” என்று கேட்டவள் “அதோட அவன் நிச்சயமா என்னை பாதில விட்டுட்டு போகமாட்டான் ஸ்ரீதர். என்னை கடையில விற்கிற பொருள் மாதிரி ட்ரீட் பண்ணமாட்டான். எனக்கு அது போதும். நீங்க என்னை கேள்வி கேட்காதீங்க” என்று காரமாக திருப்பி கொடுத்தவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

இங்கு ஸ்ரீதரோ அவள் பேச்சில் கடுப்பானவன், பேசிட்டு இருக்கும்போதே கட் பண்ணுவாளா ? என்று மீண்டும் அழைக்க, அழைப்பை எடுத்தவளோ “ஹேய் என்ன பிரச்சனை உங்களுக்கு…. எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றிங்க..” என்று கத்திவிட

“டார்ச்சர் பண்றேனா… நானா.. நீதாண்டி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க… இங்கேபார்… நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ…மரியாதையா அந்த அமெரிக்கா காரனை நீயே துரத்திடு. இல்லைன்னா நான் தூக்குவேன் அவனை. உன் அப்பன் எத்தனை பேரை கொண்டு வந்தாலும் நீ சரின்னு சொல்லக்கூடாது. என்னைமீறி எதுவும் நீ செய்ய போறதில்ல…

என்ன சொன்ன எல்லாமே என் முடிவா.. இப்போ இதுவும் என் முடிவு தான்… ஒழுங்கா கிளம்பி நீ வீட்டுக்கு வர. ” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு காத்திருக்க, அவள் எட்டிக்கூட பார்க்கவில்லை அவனை

Advertisement