Advertisement

இரவுவரை அவர்களை தவிக்கவிட்டவன் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் தான் லேசாக விழித்து பார்த்திருந்தான். மருத்துவர்களும் அவன் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று கூறிவிட்டிருக்க, உண்மையில் அப்போதுதான் உயிர் வந்தது அவனின் சொந்தங்களுக்கு.

மாலையிலிருந்து அவனுக்காக அவர்கள் பட்ட வேதனைக்கு பரிசாக உயிருடன் மீண்டு வந்திருந்தான் அவனும். ஆனால் உடலின் காயங்கள் பெரிதும் வலி கொடுக்க, அவனின் பெரும்பாலான நேரங்கள் உறக்கத்தில் தான் கழிந்தது. காலில் எலும்பு முறிந்து இருந்ததால், நடப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் என்று சொல்லி இருக்க, அன்னையாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை வேதாவால்.

ஒரு நிமிடம் சேர்ந்தார் போல் ஒரு இடத்தில தேங்காதவன் அவன், ஓடிக் கொண்டே இருப்பான். அவனின் பள்ளி, கல்லூரி காலத்திலும் சரி. இப்போதும் சரி அனைத்திலுமே வேகம்தான். அவர்களின் கடைக்குட்டி… கன்யா அவர்களை அறவே ஒதுக்கியபோது கூட முழுதாக அவர்களை அரவணைத்த அவர்களின் செல்லக்குழந்தை அவன். அவன் எழுந்து நடக்கவே இரண்டு மாதங்கள் ஆகும் என்றால் எப்படி??

இரவில் அவன் கையை பிடித்துக் கொண்டு வெகுநேரம் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தார் வேதவதி. கன்யா எத்தனை முயன்றும் அவரை மீட்கவே முடியவில்லை அவளால். ஆதி நாராயணன் அவன் அருகில் கூட வந்திருக்கவில்லை இதுவரை. அவர் மகனை அந்த நிலையில் பார்க்க தாங்கவே முடியவில்லை அவருக்கு.

ஒரு நிலைக்கு மேல் கன்யா வேதவதியை கட்டாயப்படுத்தி உறங்க வைத்துவிட்டு, ஆதி நாராயணனை அவருக்கு துணையாக இருத்தி தான் ஸ்ரீதருடன் இருந்தாள்.

அனு ஆதி நாராயணன் வந்த போது அவருடன் வந்தவள் அவளும் அங்கேயே தான் இருந்தாள். ஆனால், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் தானாகவே ஒதுங்கி அமர்ந்து கொண்டவள் கண்ணீர் விட்டு கொண்டே இருக்க, அழுதழுதே ஓய்ந்து போயிருந்தாள் அவள். அவள் தந்தையை கண்டவுடன் அழுகை அதிகமாக தன்னால் தான் என்று தன்னையே வருத்திக் கொண்டவளை பார்க்கவே முடியவில்லை அவர்களால்.

ராகவன் ஒருவழியாக மகளை சமாளித்தவர் இரவுவரை அவர்களுடன் இருக்க, ஆதி நாராயணனே அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். அவர் முகத்தை பாவமாக பார்த்த அனுவிடம், அவள் தலையில் கைவைத்து “புரிஞ்சிக்கோடா.. கட்சிக்காரங்க, மீடியா ன்னு நிறைய இருக்கு.. நீ எங்க வீட்டு பொண்ணு.. தேவையில்லாம எதுலயும் உன்பேர் வர வேண்டாம்டா. அதான் அவனுக்கு ஒண்ணுமில்ல ன்னு சொல்லிட்டாங்களே. மாமா பார்த்துக்கறேன் அவனை. நீ அப்புறம் வந்து பாரு” என்று அவளுக்கு எப்படியோ புரிய வைத்து அவளை அங்கிருந்து கிளப்பி விட்டிருந்தார் அவர்.
கன்யா ஸ்ரீதரின் அருகில் அமர்ந்திருந்தவளுக்கு மாலையிலிருந்து நடந்த அனைத்து விஷயங்களும் மூளையில் ஓடிக் கொண்டிருக்க, அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவன் விழிகளில் லேசான அசைவு தெரியவும், சட்டென எழுந்து அவன் அருகில் நின்றவள் “ஸ்ரீ.. ஸ்ரீ..” என்று அழைக்க மெல்ல கண்களை திறந்து பார்த்தவன் நிச்சயம் கன்யாவை அங்கே எதிர்பார்க்கவில்லை.

அவள் அவன் முகத்தையே பார்த்து நிற்க, அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் பார்வையை உணர்ந்தவள் “அம்மாவை கூப்பிடவா….” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவன் அமைதியாகவே இருக்க “எங்கேயும் வலிக்குதா…டாக்டரை கூப்பிடவா” என்று மீண்டும் கேட்க, அவளை பார்த்து லேசாக சிரித்தவன் கண்களை மூடி திறந்தான்.

அவனின் அந்த சிரிப்பே போதுமானதாக இருந்தது போல கன்யாவுக்கு. அவள் அமைதியாக அவனை பார்த்திருக்க அவனோ “எதுக்கு அப்படி பார்க்கிற… ” என்றவன் அவளை பதில் வேண்டும் என்பதுபோல் பார்க்க, அவள் பதிலே பேசவில்லை.

அவள் அமைதியாகவே இருக்க “பேசமாட்டியா… ” என்றவன் “நீதான ஹாஸ்பிடல்ல சேர்த்த..” என்றும் கேட்க, வெறும் வெற்று பார்வைதான் கன்யாவிடம்.

அவள் அமைதியை உணர்ந்தவன் “சாரி எல்லாம் சொல்லமாட்டேன்.. முடிஞ்சா நீயே மன்னிச்சிக்கோ..” என்று கூறி கண்களை மூடிக்கொள்ள, அதற்கே வியர்த்து விட்டிருந்தது அவனுக்கு. அவன் கண்களை மூடவும் அவன் நெற்றியில் குனிந்து முத்தமிட்டவள் அவனை பார்க்க, மெதுவாக கண்களை திறந்து பார்த்தவன் “என்கிட்டே பேசமாட்ட… ஆனா இதெல்லாம் செய்வியா.. இதுக்கெல்லாம் என்கிட்டே பெர்மிஷன் கேட்கணும்…” என்று கூறவும், அவனை முறைத்துவிட்டு

“உனக்கு வாயில அடிபட்டிருக்கனும்….” என்று நக்கலாக கூறியவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட, “தேங்க்ஸ்” என்று புன்னகைத்தவன் கண்களை மூடிக் கொண்டான். அவன் பேச்சில் அவளுக்கும் புன்னகை வர, புன்னகை உறைந்த முகத்துடனே அவளும் கண்களை மூடிக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை ஷ்யாம் அவனின் அன்னை மற்றும் பாட்டியுடன் மருத்துவமனைக்கு வந்துவிட, பத்மினி அவர்களுக்கு உணவை எடுத்து வந்திருந்தவர் அத்தனை பேரையும் சாப்பிட வைத்திருந்தார். ஷ்யாம் ஆதி நாராயணனுடன் ஒதுங்கி கொண்டவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறி முடிக்க, நன்றியுடன் அவன் கைகளை பிடித்துக் கொண்டார் அவர்.

அன்று மாலை வேளையில் ஸ்ரீதருக்கு முழுதாக நினைவு திரும்பிவிட, அதன் பின்னர் சீரான முன்னேற்றம் தான் அவன் உடல்நிலையில். வேதாவின் பொழுதுகள் முழுவதுமாக மகனுடன் கழிய, கன்யா அவரை கவனித்துக் கொண்டாள். வீட்டில் இருந்த திருவேங்கடத்தை வேலையாட்கள் கவனித்து கொள்ள, ஆதி நாராயணன் மகனின் அலுவலகம், கட்சி வேலைகள் என்று அத்தனையும் பார்த்துக் கொண்டு சுற்றி வந்தார்.

ஷ்யாம் அவ்வபோது அவருக்கு உதவ, இப்போதெல்லாம் மிகவும் நெருக்கமாகி இருந்தனர் இருவரும். ஷ்யாமிடம் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது பேசிவிடும் அளவுக்கு இருவரும் நெருங்கி விட்டிருக்க, அவனுக்கும் அவரின் நட்பு பிடித்து போயிருந்தது.

அவருடன் பழக ஆரம்பித்த இந்த நாட்களில், அவரின் மீதான அவனின் எண்ணங்கள் பெரும்பாலும் மாறி விட்டிருக்க, ஒரு நல்ல உறவு அங்கே அழகாக பூத்திருந்தது. அவ்வபோது பாலகிருஷ்ணனும், கோகுலும் கூட ஸ்ரீதரை வந்து பார்த்துவிட்டு செல்ல, ஷ்யாம் தினமுமே வருவான் தன் மச்சானை காண. ஆதி நாராயணன் ஸ்ரீதரிடம் ஷ்யாம் செய்த விஷயங்களை அவன் தெளிவானவுடன் கூறி இருக்க, ஏற்கனவே ஷ்யாமை பிடிக்கும் என்றாலும் இந்த மருத்துவமனை நாட்களில் அவனை “மாமா” என்று அழைத்து அவனுடன் சேர்ந்து கன்யாவை வம்பிழுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது அவர்களின் உறவு.

ஸ்ரீதர் இப்போதெல்லாம் வேண்டுமென்றே வம்பிழுப்பது தான் கன்யாவை. அவளும் முறைத்தாலும் எதுவும் பேசமாட்டாள். ஷ்யாம் உடனிருக்கும் வேளைகளில் அவனின் வாயும் சற்று அதிகமாகவே நீளும். ஸ்ரீதர் ஷ்யாமுடன் நெருக்கமாக இருப்பது பிடித்திருந்தாலும் பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டாள் அவள்.

அனைத்துமே நன்றாக நடப்பதுபோல் இருந்தாலும் ஸ்ரீதரின் முகம் அடிக்கடி ஏதோ யோசனையில் சுருங்கி பின் இயல்பாக மாறுவதையும் கன்யா உணர்ந்தே இருந்தாள். அதுவும் முதல்நாள் அத்தனை அழுது கொண்டிருந்த அனு ஸ்ரீதர் நினைவு திரும்பியவுடன் ஒரே முறை வந்து பார்த்து சென்றது தான். அதன்பிறகு அவள் வரவே இல்லை.

அவள் வந்த நேரத்தில் கன்யா வீடு வரை சென்றிருக்க, வேதா மட்டுமே ஸ்ரீதருடன் இருந்தார். இவர்கள் விஷயத்தை கணவர் மூலமாக அறிந்திருந்தவர் அனுவை வரவேற்று அமரவைக்க, இயல்பான பேச்சுவார்த்தைகள் தான் இருவரிடமும்.

வேதா அந்த அறையில் இருந்தவரை ஸ்ரீதர் அவளிடம் பெரிதாக எதுவும் பேசி இருக்கவில்லை. அவர்களுக்கு தனிமை கொடுப்பதாக நினைத்து அந்த மருத்துவமனையின் தோட்டத்தில் உலாவி விட்டு வருவதாக கூறி அவர் சென்றுவிட, அந்த நேரத்தில் இருவரும் தனியாக பேசிக் கொண்டதுதான்.

அதன்பின்பு அனுபமா யாரின் கண்ணிலும் படவே இல்லை. அவள் வீட்டை விட்டு வெளியில் வருவதே அரிதாகி இருக்க, கல்லூரிக்கும் சென்றிருக்கவில்லை கடைசி ஒருவாரமாக. ஆனால் ஸ்ரீதர் எதையுமே காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க, கன்யா இங்கு மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தாள்..

அவளுக்கு அனுவின் மேல் முழுதாக நம்பிக்கை இருக்க, அவள் சந்தேகமெல்லாம் ஸ்ரீயிடம் தான். இவன் என்ன செய்து வைத்திருக்கிறானோ? என்பதே அவள் கவலையாக இருந்தது.

Advertisement