Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 26

அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்றிருந்தாள் கன்யா. அவளின் உடை முழுவதும் ஸ்ரீதரின் ரத்தம் ஆங்காங்கே தெறித்து இருக்க, எதுவுமே பாதிக்கவில்லை அவளை.

அவளின் நினைவு முழுவதும் உள்ளே படுத்திருப்பவனையே சுற்றி வந்தது. எத்தனை மகிழ்ச்சியாக ஆரம்பித்த காலை பொழுது இப்படியா முடிய வேண்டும்?? என்று எண்ணிக் கொண்டு கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றிருந்தாள் அவள்.

அவளின் அன்றைய காலைப்பொழுது தொடங்கியதே ஷ்யாமின் அழைப்போடு தான். நேற்று இரவே வெகுநேரம் இவர்கள் பேசிவிட்டு தான் உறங்க சென்றிருக்க, காலை மீண்டும் அழைத்தவன் “உன்னை பார்க்கணும் கன்யா” என்று கூறவும், “ஸ்கூலுக்கு வாங்க ஷ்யாம்..” என்று அழைத்திருந்தாள் அவள்.

ஆனால் சைட்டில் முக்கியமான வேலை இருப்பதாகவும் இன்று நகரவே முடியாது என்றும் கூறியவன் “கல்யாணமே பேசிட்டாங்க… மேடம் இப்போதான் மனசு வந்து பெர்மிஷன் கொடுத்தீங்க… ஆனா பாரு, அப்போவும் என் விதி இப்படி சதி பண்ணுதே” என்று புலம்பித் தள்ளி இருக்க, இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களால் கன்யாவும் ஒரு இலகுவான மனநிலையிலேயே இருந்தவள் அவனிடம் பேசிவிட்டு, பள்ளிக்கு கிளம்பி இருந்தாள்.

வசுமதியை பிடித்து அவன் வேலை நடக்கும் இடத்தை தெரிந்து கொண்டவள், பள்ளி நேரம் முடிந்ததும் மாரியுடன் கிளம்பி இருந்தாள். அவன் வேலை நடந்து கொண்டிருந்த சைட் கோவளம் கடற்கரை பகுதியில் அமைந்திருக்க, ஒரு பெரிய ரிசார்டிற்கான கட்டுமானம் அது.

அவள் சென்னையின் போக்குவரத்தில் மிதந்து, தவழ்ந்து கடந்து சென்று கொண்டிருந்த நேரம், இவர்கள் வண்டிக்கு முன்னால் சென்ற லாரி சாலையின் மறுபுறம் இருந்து திடிரென வந்து விழுந்த காரின் மீது மோதி நிற்க, மாரி வண்டியை முழுவதுமாக ஒடித்து திருப்பி மறுபுறம் வளைத்து நிறுத்தி இருந்தார். ஷ்யாமின் நினைவுகளில் இருந்தவளுக்கு அந்த கார் வந்தது தெரியவே இல்லை.

மாரி வண்டியை அத்தனை வேகமாக திருப்பவும் தான் சுற்றுப்புறம் கண்ணில்பட, அவள் சுதாரிப்பதற்குள் அவள் நெற்றி முன்னால் இருந்த சீட்டில் மோதி, திரும்பவும் இருக்கையில் வந்து விழுந்து இருந்தாள். மாரி அவளை திரும்பி பார்த்தவர் “பாப்பா… ஒண்ணுமில்லையே.. அடி எதுவும் படலையே.. ” என்று பதற, பெரிதாக அவளுக்கு காயம் ஏதுமில்லை.

அவளை சோதித்த மாரி வண்டியை விட்டு இறங்கி விபத்து நடந்த இடத்திற்கு ஓட, கன்யாவும் அவர் பின்னால் ஓடி இருந்தாள். யாரோ என்று பதைத்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஸ்ரீதரை எதிர்பார்க்கவே இல்லை. அந்த காரை வைத்தே மாரி கண்டு கொண்டவர் ஓட்டமாக ஓடி கார் கதவை திறந்து அவனை வெளியே இழுக்க முற்பட, கன்யா அவன் தலையை நெஞ்சோடு தாங்கி கொண்டவள் “ஸ்ரீ.. ஸ்ரீ…” என்று கத்திக் கொண்டிருக்க அசைவே இல்லை அவனிடம்.

நெற்றியில் ஏதோ கீறி ரத்தம் வழிந்து கொண்டிருக்க, கால் உள்ளே நன்றாக மாட்டி இருந்தது. மாரி போராடி அவனை வெளியில் கொண்டு வந்தவர், அவனை தங்கள் காரில் ஏற்றி வண்டியை எடுக்க, கன்யா அவனை தன் மடியில் தாங்கி பிடித்துக் கொண்டாள்.

கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் நிற்கவே இல்லை அவளுக்கு. அன்று காலையில் அவளுடன் அமர்ந்து உணவு உண்டு, தந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பியவன்… இதோ மாலை வேளையில் ரத்தம் சொட்ட சொட்ட காயங்களோடு அவள் மடியில் மயக்கத்தில் இருந்தால், என்ன செய்ய முடியும் அவளால்.

உடல் முழுவதும் காயங்களோடு அவனை பார்க்கவே முடியவில்லை தமக்கையால். அவன் வேண்டாம் என்று நினைத்தவள் இல்லையே. அவனுக்கு தான் வேண்டாம் என்று புரிந்தபோது ஒதுங்கி கொண்டவள் தானே. இன்று தம்பியின் நிலையை பார்த்ததும் வாய் “ஸ்ரீ… ஸ்ரீ ….” என்று விடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தது.

இதோ மருத்துவமனையில் சேர்த்து அரைமணி நேரம் கழிந்திருக்க, கண்மூடி நின்றவள் தான். கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டிருக்க, எண்ணம் முழுவதும் உள்ளிருப்பவன் மீது தான். இன்னும் யாருக்கும் தெரிவிக்ககூட தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள் அவள்.

ஆனால் மாரி, ஆதிநாராயணனிடம் தெரிவித்து விட்டிருக்க, அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவமனையில் இருந்தார் அவர். அவருடன் ஷ்யாமின் தங்கை அனுபமாவும் கண்ணீருடன் வர, அவர் வந்து நின்றது மகளின் அருகில் தான்.”ஸ்ரீமா…” என்று அவர் அழைக்க

“அப்பா…. ” என்று அவர் தோளில் புதைந்து கொண்டு கதறியவளுக்கு மொத்த தைரியமும் மீள்வது போல் இருந்தது. அவள் அழுதுகொண்டே இருக்க, ஆதிநாராயணன் அவளை சமாளித்து அமரவைத்து, மாரியிடம் நடந்தது என்ன என்று முழுவதுமாக தெரிந்து கொண்டார்.

அவருக்குமே மகனின் நிலை கவலை கொடுத்தாலும், மகளையும், மனைவியையும் கருத்தில் கொண்டு கண்ணீரை அடக்கி கொண்டவர் எப்படி எப்படி?? என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார். வேதவதிக்கும் அவரே அழைத்து விஷயத்தை சற்று மழுப்பலாக தெரிவித்து இருக்க, அவர் வந்து கொண்டிருந்தார்.

மாரியிடம் மருத்துவமனை நிலவரத்தை கவனித்துக் கொள்ளுமாறு கூறியவர், கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அவர் நேராக சென்று நின்றது மகன் விபத்துக்குள்ளான இடத்தில் தான். எப்படி நடந்தது இது? என்று அவர் மூளை கணக்கிட்டு கொண்டே இருக்க, கண்கள் அப்பளமாக நொறுங்கி இருந்த அவன் கார்மீதே இருந்தது.

அவன் கடைசி பிறந்த நாள் அன்று அந்த கார் தான் வேண்டுமென்று அடம்பிடித்தவனுக்காக, வெளிநாட்டிலிருந்து இறக்கி இருந்தார் அந்த காரை. இதுவரை அந்த காரை அவனை தவிர யாருமே எடுக்க விட்டதில்லை அவன். இன்று சாலையின் ஓரமாக அந்த கார் ஒதுக்கி தள்ளப்பட்டிருக்க, அவனோ சுயநினைவே இல்லாமல் கிடந்தான் மருத்துவமனையில்.

அவர் தன் யோசனைகளில் மூழ்கியவராக வெகுநேரம் அங்கேயே நின்றுவிட்டு, தன் அலைபேசியில் இருந்து யாருக்கோ அழைத்தவர் “தாஸ்” என்று அழைத்து ஏதோ பேசிவிட்டு அணைப்பை துண்டிக்க, ஷ்யாம் வந்து நின்றான் அவர் அருகில். விஷயம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டவன் வழியில் இவர் காரை பார்க்கவும் வண்டியை நிறுத்தி அருகில் வந்திருந்தான்.

லேசான தலையசைப்பை அவனுக்கு கொடுத்தவர் அமைதியாகவே இருக்க, “என்ன நடந்தது அங்கிள் ?” என்று அவன் கேட்கவும்,

“இனிமேதான் தெரிஞ்சிக்கணும் ஷ்யாம்… கண்டிப்பா தெரியணும்..” என்று கண்கள் சிவக்க கூறியவரின் கைகளை பிடித்துக் கொண்டவன் “நீங்க ஹாஸ்பிடல் போங்க அங்கிள்… இது என்னன்னு நான் பார்க்கிறேன்… இன்னிக்கே முடிக்கிறேன்..” என்றவன் அவர் கண்களை பார்க்க, கண்கள் கலங்கியது அந்த தந்தைக்கு.

அவரை அணைத்துக் கொண்டவன் “இப்போ நீங்க அங்கே இருக்கணும் அங்கிள்…. அவன் கூட இருங்க… கிளம்புங்க” என்று அனுப்பி வைத்துவிட்டவன் அடுத்து ஆடியதெல்லாம் ருத்ர தாண்டவம் தான்.

தனக்கிருந்த செல்வாக்கால் காவல்துறையை தாராளமாகவே பயன்படுத்திக் கொண்டவன் அந்த வாகனங்களின் ஓட்டுனர்களை தன் ஆட்கள் மூலம் அடித்து துவைத்திருக்க, இருவரும் இருவேறு தகவல்களை கொடுத்திருந்தனர் அவனுக்கு.

அந்த கண்டெயினரின் டிரைவர் ஆதிநாராயணனின் அமைச்சரவை சகாக்களில் ஒருவரை கைகாட்ட, அந்த டேங்கர் லாரியின் டிரைவர் தீரஜ்ஜை கைகாட்டினான். ஆனால் அவன் கேட்காத தகவலாக தீராஜ்ஜின் திட்டத்தை விளக்கி விட்டான் ஷ்யாமிடம்.

ஆம்… தீரஜ் திட்டம் போட்டது என்னவோ கன்யாவை தூக்கத் தான். அவள் செயல்களை இரண்டு நாட்களாக கண்காணித்து கொண்டிருந்தவன் இன்று அவள் தனியே மாரியுடன் கிளம்பவும் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து, அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த கையாளுக்கு அழைத்து விவரம் சொல்ல, அவர்களும் சரியான திட்டத்துடன் தான் அவளுக்கு முன்னரும், பின்னருமாக கட்டம் கட்ட தொடங்கினர்.

ஆனால் அவர்களே எதிர்பார்க்காமல் நடந்தது அந்த விபத்து. ஸ்ரீதர் என்பவனை பற்றி எதுவுமே தெரியாது அவர்களுக்கு. அவர்களின் வேலையே ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்தாக இருக்க, அதற்காக தான் உள்ளே நுழைந்திருந்தனர் அவர்கள். இப்போது மாட்டிக் கொள்ளவும், ஷ்யாமின் சிகிச்சையில் தானாகவே அனைத்தையும் உளறிக் கொட்டி இருந்தான் அந்த டிரைவர்.

கேட்ட ஷ்யாமுக்கு இன்னுமின்னும் ஆத்திரம் மிகுதியாக, கைகளை இறுக்கமாக மூடி தொடையில் குத்திக் கொண்டவன் அவர்கள் இருவரையும் அங்கேயே விட்டு கிளம்பி இருந்தான். தாஸ் இதற்குள் ஷ்யாமை வந்து சந்தித்து இருக்க, அவனை துணைக்கு வைத்துக் கொண்டவன் தனக்கு இது போன்ற திரைமறைவு வேலைகளை செய்து தரும் தேவாவையும் உடன் அழைத்துக் கொண்டான்.

அன்று அந்த மாலை தொடங்கும் வேளையில், ராஜனின் கட்டுமான பொருட்கள் இறக்கி வைக்கும் கிடங்கு முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது அடையாளம் தெரியாத நபர்களால். அத்துடன் முடியாமல் அன்று இரவே அவரின் நகைக்கடையும் மின்சார கசிவினால் தீப்பிடித்து எரிய தொடங்கி இருந்தது.

அவர் சுதாரிக்கும் முன்பாக அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டே இருக்க, சில அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மகனை கொடூரமாக தாக்கிவிட்டு அவனின் மொபைலையும், அவனது காரையும் பறித்துக் கொண்டு அவனை அரைகுறை உயிரோடு விட்டு சென்றிருந்தனர்.

அந்த பொதுப்பணித்துறை அமைச்சரின் மகனோ நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த ரெய்டில் இரண்டு பெண்களுடன் கையும் களவுமாக பிடிபட்டு அன்றைய செய்திகளில் இடம் பிடித்து இருந்தான். அங்கு செய்தி சேகரித்தவர்களை தாக்க முற்பட்டவன் போலீசிடமிருந்து விலகி தன் காரை எடுத்துக் கொண்டு முழுபோதையில் கிளம்பி இருக்க, சரியாக ஸ்ரீதரை தூக்கி வீசிய அதே போன்ற ஒரு கண்டெய்னர் லாரி அவனையும் தூக்கி இருந்தது.

அந்த பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும், மகனின் செயலுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்று ஆதி நாராயணனுக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலர் கொடி பிடிக்க, அவருக்கு எதிராக சில மாதர் சங்கங்களும் களத்தில் குதித்து இருந்தன.

ஷ்யாம் தன் அண்ணன் கோகுலிடம் பேசி இருக்க, அவன் அவனுக்கு தெரிந்த ஆட்கள் மூலம் அந்த கட்சியின் மேலிடத்திற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

இவர்களின் இந்த தொடர் நடவடிக்கைகளால் அரண்டு போயிருந்தார் அந்த பொதுப்பணித்துறை அமைச்சர். மகனை சட்டமன்ற உறுப்பினராக்க ஆசைப்பட்டு அவர் செய்த செயல், அவரின் பதவியையே பறித்துவிடும் போல் இருந்தது.

அடுத்த ஆறு மாதத்தில் வரவிருந்த, சட்டமன்ற தேர்தலில் அவர் மகனை நிறுத்துவிட வேண்டும் என்று அவர் தலையால் தண்ணீர் குடித்து வேலை பார்த்து கொண்டிருக்க, கட்சி தலைமைக்கு நெருக்கமான சிலரோ ஸ்ரீதருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர் அவரிடம். அவன் தந்தையுடனே எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பதால் கட்சியிலும் நல்ல பெயர் இருந்தது அவனுக்கு.

ஆதி நாராயணன் பெயரை முன்னிறுத்தி அவன் செய்து வரும் நல்ல விஷயங்கள் அவனுக்கு மக்களிடம் நற்பெயரை பெற்று தந்திருந்தது. இதோடு ஆதி நாராயணனின் மகன் என்பதும் சேர்ந்து கொள்ள தேர்தலில் நிறுத்தினால் நிச்சயம் வென்றுவிடுவான் என்று தலைமை அவன் மீது நம்பிக்கை வைத்திருக்க, இந்த விஷயம் ஆதி நாராயணனுக்கே தெரிந்திருக்க வில்லை இன்னும்.

ஆனால் அதற்குள் மோப்பம் பிடித்துவிட்ட அந்த அமைச்சர் கட்சி தலைமையிடம் கேள்வி கேட்க, அவரின் அனுபவத்தை கூட கணக்கில் கொள்ளாமல் அவர் மகனின் வண்டவாளங்களை சொல்லி நிராகரித்து விட்டது கட்சி மேலிடம்.

அவர்கள் ஸ்ரீதரை வேறு முன்னுதாரணமாக காட்டி அவர் வெறியை கிளறிவிட, இதற்கெல்லாம் காரணமானவனை தூக்கி இருந்தார் அவர். ஆனால் அவர் ஆதி நாராயணனின் குணத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தன் திட்டத்தை தீட்டி இருக்க, நிச்சயம் ஷ்யாம் இதில் சம்பந்தப்படுவான் என்று நினைக்கவே இல்லை.

அவர் எண்ணமெல்லாம் ஆதி நாராயணனின் நல்ல பெயரை முடக்குவதிலும், அவரை ஒடுக்கி ஒரே இடத்தில அமர வைப்பதிலும் தான் இருந்தது. ஸ்ரீதரை தூக்கினால் மனிதர் தளர்ந்து போவார் என்று அவர் சரியாகவே கணக்கிட, அவர் கணக்கு தவறு என்று மண்டையில் அடித்திருந்தான் ஷ்யாம்.

ஸ்ரீதர் மருத்துவமனையில் சேர்ந்த ஒரே நாளில் இவர்களின் வாழ்வையே தலைகீழாக மாற்றி இருந்தவன், அவனுக்கே போதும் என்று தோன்றியதும் தான் நிறுத்தினான்.
——————————————-

Advertisement