Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 25

ராஜன் அனுவின் தந்தையை சந்தித்து வந்து மேலும் இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருக்க, அன்று காலை ராகவன் அவருக்கு அழைத்தவர் நாசுக்காக மகளுக்கு இதில் விருப்பமில்லை என்று கூறி பொதுவான பேச்சுகளோடு முடித்துக் கொண்டார். அவரிடம் சிரித்துக் கொண்டே பேசிவிட்டாலும் இருந்த கடைசி வாய்ப்பும் கைநழுவியதில் சோகமாக அமர்ந்துவிட்டார் ராஜவேல்.

அந்த நேரம் தீரஜ் வந்தவன் தன் தந்தையை பார்த்துவிட்டு என்னவென்று விவரம் கேட்க, அவனிடம் அவர் நடந்ததை முழுதாக கூறவும், பொறுமையாக கேட்டுக் கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே எழுந்து சென்றுவிட்டான்.

அவனின் அந்த அமைதி ராஜனை யோசிக்க வைத்தாலும், அவர் இருந்த மனநிலையில் அவனை பெரிதாக கவனிக்கவில்லை அவர். ஆனால் மகனோ பெரிய சதித்திட்டம் தீட்டுவதாக நினைத்து சேர கூடாதவர்களுடன் சேர்ந்து பெரிதாக திட்டம் போட்டு அதை செயல்படுத்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் என்பது அப்போது அவருக்கு தெரியவே இல்லை.
————————————

இத்தனை நாட்கள் அனுவின் நினைவுகளோடு போரடிக்க கொண்டிருந்த ஸ்ரீதருக்கு இந்த இரண்டு நாட்களாக தாங்க முடியாத வேதனைதான். அதுவும் எந்த தடையும் இனி இல்லை என்ற நிலை வந்துவிடவும், எப்படியும் தன் தவறை சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் இரண்டு நாட்களாக அனுவின் கல்லூரி வாசலில் தவமிருக்க, கண்ணிலேயே படவில்லை அவள்.

முதல் நாள் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததில் அடுத்தநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருக்க, அதற்கு அடுத்த நாளும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகவும் முதல் வகுப்பு முடியும் வேளையில் கல்லூரியிலிருந்து கிளம்பி விட்டிருந்தாள் அனு.

இவன் அவளை தேடி வந்த இரண்டு நாட்களும் அவள் இவ்வாறாக அவன் கண்ணில் படாமல் போயிருக்க, இன்று எப்படியும் அவளை சந்தித்து விடுவது என்று முடிவு செய்தவனாக காத்திருந்தான் அவன். இவன் அவளுக்காக காத்திருக்க, அவளோ வழக்கம் போல் முகத்தை மூடிக் கொண்டவள் தன் வண்டியில் கல்லூரியிலிருந்து வர, அவள் நினைத்ததை போல் இல்லாமல் அவள் கண்ணில்பட்ட அடுத்தநொடியே அவள்தான் என்று கண்டு கொண்டிருந்தான் அவன்.

இவ ஏன் வண்டியில வர்றா?? வீடு பக்கமாகவா இருக்கு ? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவள் பறந்திருந்தாள் தன் வண்டியில். திட்டிக் கொண்டே அவன் அவளை பின்தொடர, அவளோ அவனை கவனிக்காமல் லாவகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள். காரிலிருந்து பார்த்தவனுக்கு தான் ஏன் இவ்ளோ வேகமா போறா இவ ? என்று அச்சமாக இருந்தது.

உண்மையில் வேகமாக தான் சென்று கொண்டிருந்தாள் அவள். கல்லூரியிலிருந்து கிளம்பும்போதே அவனை பார்த்திருந்தவள், இத்தனை நாள் காத்திருப்பு தந்த கோபத்தில் அவனை கண்டுகொள்ளாமல் கிளம்பி இருக்க அவன் பின்தொடரவும், அவனை நிச்சயம் எதிர்கொள்ள முடியாது என்று நினைத்து தான் ஓடிக் கொண்டிருந்தாள் கிட்டத்தட்ட.

இவர்கள் சென்று கொண்டிருந்தது வேறு தேசிய நெடுஞ்சாலையாக இருக்க, அவளின் வேகம் பதற வைத்து பின்னால் வந்தவனை. அதற்குமேல் அவளை விட முடியாது என்று நினைத்தவன் வேகத்தை கூட்டி, அதே வேகத்தில் அவளை முந்தி சென்று அவளுக்கு முன்னால் தன் வண்டியை நிறுத்த, அந்த நொடி அதிர்ச்சியில் வண்டியை விடப் பார்த்தவள், சட்டென சுதாரித்து வண்டியை இறுகப் பற்றியவள் லேசாக வளைத்து அவனின் வலதுபுறமாக சென்றுவிட பார்த்தாள்.

ஆனால் அதற்குள் கார் கதவை திறந்து இறங்கி இருந்தவன், அவள் வண்டியை கையால் தடுத்து எஞ்சினை அவள் அனுமதி இல்லாமலே அணைத்து, சாவியை கையில் எடுத்துக் கொண்டான். அவளின் தடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போக சாவியை எடுத்துக் கொண்டவனை முறைத்தவள் சுற்றிலும் பார்க்க வேகமாக முந்திச்செல்லும் வாகனங்களை தவிர யாருமே இல்லை அந்த சாலையில்.

இவன் அவளை சற்றே சாலையை விட்டு ஒதுக்கியே அவளை முந்தியிருக்க, சற்றே ஓரமாகத் தான் இருந்தனர் இருவரும். அனு கோபம் குறையாமல் அவனை முறைத்தவள் கையை கட்டிக் கொண்டு தன் வண்டியிலேயே அமர்ந்துவிட, எதிரில் நின்றவனும் அதிசயமாக அவளை முறைத்து கொண்டு தான் நின்றிருந்தான்.

ஒரு கையால் வண்டியை பிடித்துக் கொண்டு அவளை இழுத்து கார் அருகில் நிறுத்தியவன், அந்த வண்டியை காலால் உதைத்து கீழே தள்ளிவிட்டான். அதே கோபத்தோடு அவளை நெருங்கியவன் கையை ஓங்கிவிட, அசையவே இல்லை அவள். அப்படியே அமைதியாக அவள் நிற்க “யாரை கேட்டு வண்டி எடுத்த நீ ” என்று அவன் முறைப்பாகவே கேட்க

ம்ஹும்… பதிலே இல்லை அவளிடம்… அவளின் அமைதியில் கடுப்பானவன், அவள் கண்களிலிருந்து அந்த கண்ணாடியை கழட்டி விட அப்போதும் மௌனம் தான். அடுத்ததாக அவள் துப்பட்டாவை விலக்கியவன் அவள் முகத்தை பார்க்க உணர்வுகள் மரத்து போனது போல கல் போன்ற முகம்தான் அவன் கண்டது.

அவள் அழுத்தத்தில் தன்னையே நொந்து கொண்டவன் “அனு வாயை திறந்து பேசு…. உனக்கெதுக்கு வண்டி… உன் காலேஜ் பக்கத்துல இருக்க நினைப்பா உனக்கு…. அதுவும் அத்தனை வேகம் எதுக்காக??? என்னை பழிவாங்கவா?? ” என்று அவன் வார்த்தையை விட அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் அவள்.

“பழி வாங்குறேனா??? உங்களை நான் பழி வாங்கணும் ன்னா நீங்க எனக்கு ஏதோ ஒரு வகையில தெரிஞ்சவரா இருக்கணும்.. ஆமா நீங்க யாரு?? எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்???” என்று அவள் கேள்வி கேட்க

“எந்த சம்பந்தமும் இல்லையா அனு… உனக்கு தோணுதா..” என்று மெல்லிய குரலில் அவன் கேட்க

“ஓஹ்….. ஒரு ஆறுமாசம் என்கூட சுத்தி இருக்கீங்களே அந்த சம்பந்தத்துல தேடி வந்திங்களா?? ஆனா பாருங்க…. எனக்கு ஞாபகமே இல்ல, உங்களை ஞாபகப்படுத்திக்கவும் விரும்பல நான்.”
“அதோட மினிஸ்டர் பையனா இருந்தா இப்படி ரோட்ல போற பொண்ண வழிமறைச்சு கேள்வி கேட்கலாம்ன்னு அர்த்தம் இல்ல.. என்னை கேள்வி கேட்க நீங்க யாரு??”

“நான் வண்டியில போறது என்னோட விருப்பம்… நான் என்ன பண்ணனும், பண்ணக்கூடாது, எங்கே போகணும், போகக்கூடாது, என்ன வேகத்துல போகணும் இதையெல்லாம் நீங்க முடிவு பண்ணாதீங்க…”

“அப்படியே வேகமா போய் ஒருவேளை உயிரே போனா….” என்று சொல்ல வந்தவளின் வாயை கைகளால் அவன் மூடிவிட, சிலிர்த்தவளாக அவன் கையை தட்டி விட்டவள் அவன் கழுத்து சட்டையை கொத்தாக கைகளில் பற்றிவிட்டாள் அந்த நட்ட நடுரோட்டில்.

“நடிக்காதடா..” என்று கத்தியவள் ” நடிக்காத… நீ நடிச்சு நடிச்சு என்னை நாசம் பண்ணின வரைக்கும் போதும். இப்போ எதுவுமே இல்ல என்கிட்டே… இந்த உயிர் மட்டும்தான் மீதி இருக்கு. அதுவும் வேணும்னா கூட சொல்லு முழுசா போய்டறேன். ஆனா இப்படி அக்கறை இருக்கவன் மாதிரி நடிச்சு என் வாழ்க்கையை நாசமாக்க பார்க்காத.”

“ஹேய் இன்னும் என்ன வேணும் உனக்கு.. அதான் எல்லாமே முடிஞ்சு போச்சே… நீயும் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்ட, நானும் உன்கிட்ட கெஞ்சிட்டு நிக்கலையே… எப்பவும்போல இப்பவும் நீ சொன்னதுக்கு தலையாட்டிட்டு தான் வந்துட்டேனே… அப்புறம் என்ன?? எதுக்கு என்பின்னாடி வர்ற?” என்று கத்தியவள்

“இன்னும் என்ன செய்யலாம்ன்னு பார்க்கிற?? நான் இப்படி இருக்கறதுக்கு கூட பிடிக்கலையா உனக்கு.” என்றவள் அவனை மொத்தமாக காயப்படுத்தி விடும் வெறியில் இருந்தாளோ என்னவோ “ஓஹ்…. எல்லாமே செஞ்சிருந்தாலும் இன்னும் நமக்குள்ள ஒரே விஷயம் பெண்டிங் இருக்குல… அதுக்குதான் இப்போ இந்த ட்ராமாவா ” என்று கேட்டவள் அவன் முழிக்கவும்

“சும்மா சொல்லக்கூடாது நல்லாவே நடிக்கிறிங்க… சரி நானே சொல்றேன், இதுவரைக்கும் நீ நினைச்ச நேரத்துல, நினைக்கிற இடத்துல தொடவும், கட்டிக்கவும், ஏன் அதுக்கும் மேலயும் கூட அனுமதிச்சு இருக்கேனே… அதுவும் பத்தலையா உனக்கு, மொத்தமா இவளை தொடாம விட்டுட்டோமே ன்னு கஷ்டமா இருக்கா. அதை தீர்த்துக்க…” என்று அவள் முடிப்பதற்குள் தன் சட்டையை பிடித்திருந்த அவள் கைகளை உதறியவன் அவளை ஓங்கி ஒரு அறைவிட அவன் காரின் மேல் பொத்தென விழுந்தாள் அவள்.

வாங்கிய அடியின் தாக்கம் அவள் முகத்தில் தெரிய, கைகள் தானாக கன்னத்தை பற்றிக் கொண்டது. அவளை முறைத்தவன் நிதானமாக “என்ன.. என்னை பார்த்தா உன் உடம்புக்கு அலையுறவன் மாதிரி தெரியுதா.?? நிச்சயமா சொல்லு… உன்கிட்ட நான் நடந்த விதத்துக்கு இதுதான் அர்த்தம்ன்னு உனக்கு தோணுதா… நான் வேற எதையுமே உனக்கு புரிய வைக்கலயா..” என்று வேதனையோடு கேட்டவன்

“எப்படிடி மனசாட்சியே இல்லாம இப்படி பேச முடியுது உன்னால. என்ன பேசுறோம்ன்னு யோசிக்கவே மாட்டியா?? உன்னையே நீ அசிங்கப்படுத்திப்பியா.. என்ன சொன்ன அனுமதி கொடுத்தியா… என்னை நீ உணரவே இல்லையா அனு. ” என்று கேட்டவன் கண்களில் நிறைந்திருந்தது மொத்தமும் நிராசை மட்டுமே.

“எப்போ நான் உனக்கு என்னை புரிய வைக்கவே இல்லையோ, அதுக்குமேல எதை பேசினாலும் வேஸ்ட் தான். ஆமா உன்னை வேண்டாம் ன்னு சொன்னேன்தான். அப்போகூட நம்புனேண்டி, என் அணு என்னை புரிஞ்சிப்பான்னு. ஆனா அது எத்தனை பெரிய தப்புன்னு புரிய வச்சிட்ட.

“முடிஞ்சுது முடிஞ்சதாவே இருக்கட்டும்… நான் இப்போ உன்னை தேடி வந்தது கூட என்னோட தப்புதான். நீ சொன்ன எண்ணத்துல தான் தேடி வந்தேன். அப்படியே வச்சிக்கோ, அதனால என்கிட்டே இருந்து விலகியே இரு, எப்பவும் என்னை நெருங்க நினைச்சிடாத, உன்ன அப்யூஸ் பண்ணிடுவேன் நான்.

“ஏன்னா நான் அப்படிப்பட்ட ஒருத்தன் தான், நான் செஞ்சது எல்லாமே நீ சொன்னியே அதுக்காக மட்டும்தான்.” என்றவன் அவள் வண்டியை எடுத்து நேராக நிறுத்தி சாவியை அதில் பொருத்திவிட்டு, தன் கையிலிருந்த அவளின் கூலர்ஸை அவளின் முகத்தில் விட்டெறிய அது சரியாக அவளின் நடுநெற்றியில் பட்டு கீழே விழுந்து உடைந்தது.

அவளை கண்டுகொள்ளாமல் தன் காரில் ஏறி கிளம்பியவன், அவளை திரும்பியும் பார்க்காமல் உச்சகட்ட வேகத்தில் காரை செலுத்த, அவன் செல்லும் வேகத்தில் குளிரெடுத்தது மங்கைக்கு. அவன் அடித்த இடம் வேறு பெரிதாக வீக்கம் கண்டு இருக்க, நெற்றி பொட்டிலும் வலி உயிர் போனது. ஆனால் இது அனைத்தையும் விட வலி கொடுத்தன அவனின் வார்த்தைகள்.

அவள் சொன்னபோது பெரிதாக தெரியாத வார்த்தைகள் அவன் வாயால் கேட்கும்போது ஐயோ என்று ஆனது. என் ஸ்ரீ அப்படிப்பட்டவரா? என்று அவளுக்கு அவளே துடித்துக் கொண்டிருந்தவள் சாலை என்றும் பாராமல் அழுது கொண்டே நிற்க, அவளுக்கு பின்னால் வந்து நின்றது அமைச்சர் ஆதி நாராயணனின் கார்.

இங்கு அவளை அடித்துவிட்டு கிளம்பியவனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை. என்ன வார்த்தை பேசிவிட்டாள் அவள் என்று கொதித்துக் கொண்டு வந்தது அவனுக்கு. அத்தனை கோபத்தையும் அவன் சாலையில் காண்பித்துக் கொண்டிருக்க, மனது ஆறவே இல்லை.

தன் தந்தையின் வாழ்வை பற்றி அறிந்தவன் என்பதால் சாதாரணமாக கூட பெண்களிடம் பேசமாட்டான் அவன். அதுவும் அவன் அன்னையின் வளர்ப்பு யாரையும் தவறாக பார்க்க விட்டதே இல்லை அவனை. அந்த வயதிலேயே தன் தந்தை செய்தது போல் எந்த காரியத்தையும் செய்து விட கூடாது என்று அத்தனை தெளிவாக இருந்தவன் அவன்.

அவன் பழகும் சமூகத்திலும், அவனின் தொழில் துறையிலும் பெண்களுக்கா பஞ்சம். அதுவும் வெற்றிகரமான தொழில் அதிபன் அவன். கோடிக்கணக்கான சொத்துகளுக்கு ஒரே வாரிசு, மந்திரியின் மகன் வேறு .. ஆனால் இதையெல்லாம் விட அவனின் அழகிலும், அவனின் குணத்திலும் மையல் கொண்டு அவனை தானாகவே நெருங்கிய பெண்களை கூட அவன் ஏறிட்டு பார்த்ததில்லை.

தன் தாய் பார்த்துக் கொள்வார் தன் வாழ்வை என்று திடமான மனதுடன் இருந்தவன் வழுக்கிய ஒரே இடம் அனுதான். அவளை தன் வாழ்வாக தான் பார்த்திருந்தான் அவன். தந்தையின் செயல்களால் பெரிதும் காயப்பட்டிருந்தவன் ஆறுதல் தேடிய ஒரே இடம் அவள் தான். அதுவும் அவள் சொன்னதுபோல, அவளை நாடியவனும் இல்லை அவன்.

அவனின் அந்த லேசான அணைப்பிலும் கூட அத்தனை முறை அவளின் முகம் பார்ப்பான். அவன் அவளிடம் பெரிதாக எதிர்பார்ப்பதே அவளாக கொடுக்கும் அந்த லேசான அணைப்பும், அவளின் நெற்றி முத்தமும் தான். அதற்குமேல் அவன் கேட்டாலும் அவளால் உறுதியாக மறுத்திருக்க முடியாது என்றாலும் அவளை எப்போதுமே அந்த இக்கட்டில் நிறுத்த மாட்டான் அவன்.

அத்தனை கண்ணியமானவனை அவள் வார்த்தைகளால் கொன்று போட்டிருக்க, தந்தை கொடுத்ததாக அவன் எண்ணியிருந்த வலியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்குமளவிற்கு அவனுக்கு வலிக்க வைத்திருந்தாள் அவன் காதலி.

தன் மன வேதனையில் முழுதாக உழன்று கொண்டிருந்தவன், பக்கவாட்டில் வந்த திருப்பத்தை கவனிக்காமல் விட, வேகமாக அந்த திருப்பத்தில் இருந்து வந்த அந்த பெரிய கண்டெய்னர் லாரி அவன் காரை பக்கவாட்டில் இடித்து அந்த நெடுஞ்சாலையின் மறுபுறம் தள்ளிவிட, அங்கு எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு டேங்கர் லாரியால் தூக்கி வீசப்பட்ட கார் சில அடிகள் தள்ளி தரையில் விழுந்திருந்தது.

முதல் வாகனத்தில் இடிபடும்போதே அவன் மயக்கத்திற்கு சென்றிருக்க, அவனை தூக்கி வீசியதெல்லாம் தெரியவே இல்லை அவனுக்கு. ஆழ்ந்த ஒரு உறக்கநிலை தான். அனைத்துமே முடிந்தது என்பதை போல்.

Advertisement