Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 24

அந்த நட்சத்திர விடுதியின் மீட்டிங் ஏரியாவில், கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார் ராஜவேல். அவரின் மகனுக்காக அவர் கன்யாவை பெண் கேட்டிருக்க, அதை பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறி ஏற்கனவே மறுத்திருந்தார் ஆதி நாராயணன். அதையும் ராஜன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டிருந்தார்.

என்ன பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணா?? இவளுக்கு என் பையன பிடிக்கலையா? என்று ஏளனமாக எண்ணமிட்டு கொண்டவர் அதை வெளியில் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது அசோசியேஷன் மீட்டிங்கில் கலந்து கொண்டவர் காதில் விழுந்த விஷயங்கள் நிச்சயம் அவருக்கு உவப்பானதாக இல்லை.

ஏற்கனவே அந்த ஷ்யாம் இவர்களின் தொழிலை முடக்கி இருக்க, அவனை காரணமாக கொண்டே அவனின் நட்பு நிறுவனங்களும் புறக்கணித்திருந்தனர் ராஜன் குரூப்ஸை. தொழிலில் பலத்த அடி அவருக்கு. ஆனால் அப்போதும் கூட தன் தவறை உணராதவர் தன் நிலைக்கு ஷ்யாம் தான் காரணம் என்று உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தாலும் அவனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

பணத்திலும் சரி, தொழில் முறையிலும் சரி அவனுக்கு அருகில் கூட நிற்க முடியாது அவரால். எந்த வகையில் அவனை எதிர்த்தாலும் இழப்பு என்னவோ அவருக்குதான். அதுவும் அவன் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவன் தந்தையை போல் பாவம் பார்க்கமாட்டான் என்பதும் புரிந்தே இருக்க, அடங்கித்தான் இருந்தார் அவர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ஷ்யாமின் பேட்டியை பார்த்தவருக்கு, அப்போதும் ஏளனம் தான் தோன்றியது. அவர் ஷியாம்- ஸ்ரீகன்யா வின் உறவை பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று பார்த்த அவரின் நண்பர் ஆதி நாராயணனுக்கும் தொழில்முறையில் சற்றே நெருக்கமானவராக இருக்க ஸ்ரீகன்யாவின் சொத்து விவரங்களை பற்றி பேச்சு வாக்கில் நண்பரிடம் தெரிவித்தவர் பெருமூச்சு விட்டு கொண்டார்.

தீரஜ்ஜை கன்யாவிற்கு பேச சொல்லி யோசனை சொன்னதும் இவராகவே இருக்க, அப்போது சொல்லாத அவளின் சொத்து விவரங்களை இப்போது அவள் கைநழுவிய பின் நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவள் அன்னை விட்டு சென்ற சொத்துகளே அவளுக்கு பெருமளவில் இருக்க, ஆதி நாராயணனும் அவளுக்காக சேர்த்து வைத்திருக்க அவளின் சொத்து விவரங்களை கேட்டவருக்கு பொறுக்கவே முடியவில்லை.

ஏற்கனவே ஒருவரையும் ஷ்யாம் மதிக்கமாட்டான், இதில் மந்திரி வீட்டு மருமகன், மனைவியின் மூலம் வரும் சொத்துகள் என்று அவன் கை ஓங்கி கொண்டே செல்வதை ஜீரணிக்கவே முடியவில்லை அந்த பெரிய மனிதரால்.

ஆனால் அவருக்கு தெரியவே இல்லை. கையில் பணமே இல்லாத ஒரு நிலை வந்தால் கூட ஷ்யாம் இதே ஆளுமையுடன் தான் இருப்பான் என்று. சிலருக்கெல்லாம் சில விஷயங்கள் தானாகவே அமைந்துவிடும். ஷ்யாம் அப்படிப்பட்ட ஒருவன் தான். அவனின் அந்த ஆளுமையும், யாரையும் பார்வையிலேயே அடக்கி வைக்கும் குணமும் அவனுடன் உடன் பிறந்தவை.

ஒரு சில விஷயங்களில் பாலகிருஷ்ணனோ, கோகுலோ கூட அவன் முன்னால் நிற்கமுடியாது. அவர்கள் தொழிளிலும் கூட பல சமயங்களில் அவன் எடுப்பது தான் இறுதி முடிவு. பெரும்பாலும் அவன் முடிவுகள் தவறுவதே இல்லை என்பதால் கோகுல் பல சமயங்களில் தம்பியின் போக்குக்கு விட்டுவிடுவான். அப்படிதான் ராஜனின் ஒப்பந்தம் பறிபோனதும்.

இதுவரை கன்யாவை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளாத ராஜனுக்கும் இப்போது அவளின் சொத்துகள் கண்களை உறுத்த நிம்மதி இழந்து இருந்தார் மனிதர். அந்த நிலையில்லாத மனிதருக்கு உடனடியாக சில விபரீத யோசனைகள் தொடங்க, தனக்குள் சிரித்துக் கொண்டவர் உடனடியாக தன் கைபேசியில் யாரையோ அழைத்து பேசிவிட்டு சற்று நிம்மதியுடன் வீட்டுக்கு கிளம்பினார்.

—————————

அன்றைய கல்லூரி வகுப்புகள் முடிந்து அனைவரும் கிளம்ப தொடங்க, அனுபமா தன் வகுப்பறையை விட்டு வெளியேறியவள் அங்கு பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தோழிகளிடம் சொல்லிவிட்டு புறப்பட தயாரானாள். எப்போதும் போல் தன் முகத்தை முழுவதுமாக மூடி கண்கள் மட்டும் வெளியே தெரியுமாறு துப்பட்டாவால் கட்டி கொண்டவள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

ஸ்ரீதரை பிரிந்த இரண்டாம் நாளே தந்தையிடம் பேசி, தனக்கென ஒரு வண்டியை வாங்கி கொண்டவள் கல்லூரி பேருந்தில் செல்லுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டாள். அதிலும் காலை வீட்டிலிருந்து கிளம்பும் போதும் இந்த முகமூடியுடன் தான் கிளம்புவது, மாலையும் இதே முகமூடியுடன் தான் திரும்புவது. அவள் தாய் கேட்டதற்கு கூட, வெயிலை காரணமாக காட்டி விட்டவள் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

கண்கள் மட்டும் வெளியில் தெரிந்தாலும் கூட அதையும் அவளின் கூலர்ஸ் முழுதாக மறைத்துவிட, அருகில் வந்து அவள் முகத்தை காட்டினாலே ஒழிய யாராலும் அவளை கண்டுகொள்ளவே முடியாது. ஏன் இந்த திரை என்று அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டாலும் பதில் தான் இல்லை.

ஆனால் வண்டியில் சென்றாலும் கூட, அவ்வபோது சாலையில் கண்களை மேயவிடஅவள் எதிர்பார்த்த காட்சியோ,கண்ணில்பட வேண்டியவனோ இதுவரை ஒரு நாள் கூட அவள் கண்ணில் சிக்கவே இல்லை. அதுவும் அன்று கன்யாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்த பிறகு அவளின் தேடல்கள் அதிகமாகி இருக்க, பலன்தான் இதுவரை பூஜ்யமாகவே இருந்தது.

இவனுக்கு மொத்தமாகவே தான் வேண்டாதவளாகி போனோமா?? என்ற எண்ணமே சொல்ல முடியாத வலியை கொடுக்க, இது நேரமில்லை என்று தன்னை அடக்கி கொண்டவள் வீட்டை நோக்கி விரைந்தாள்.

இவள் வீட்டுக்குள் நுழையும் நேரம் வீட்டின் வரவேற்பறையில் தந்தை ராகவனுடன் யாரோ ஒரு புதியவர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. கூடவே அவரின் மனைவி போல் ஒரு பெண்மணியும் அமர்ந்திருக்க, அவள் அன்னை கையில் காஃபியோடு சமையலறையிலிருந்து வெளிப்பட்டார்.

இப்போதிருக்கும் மனநிலையில் யாரிடமும் பேசும் எண்ணம் இல்லாததால், அமைதியாக அவள் அங்கிருந்தவர்களை கடக்க முற்பட அவள் தந்தை அவளை அழைத்தவர் “இது ராஜவேலு சார் அனும்மா.. இவங்க கம்பெனி ஆடிட்டிங் அப்பாதான் பார்க்கிறேன்.”என்றவர் அவர்களிடம் “இது என் மகள் அனுபமா ” என்று முறையாக அறிமுகப்படுத்தி வைக்க

அனுவோ ஒரு செயற்கையான புன்னகையுடன் “ஹலோ அங்கிள், ஹலோ ஆண்ட்டி ” என்றவள் “வந்துடறேன்பா” என்று தந்தையிடம் கூறிவிட்டு மாடியேறினாள். தன் அறைக்கு வந்து முகத்தை கூட கழுவாமல் கட்டிலில் விழுந்து விட்டவளுக்கு முழுவதும் ஸ்ரீதரின் நியாபங்கள் தான். இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் இறங்க, அமைதியாகி சில நிமிடங்கள் கழிய

அதன் பின்பே கீழே அமர்ந்திருந்தவர்கள் நினைவுவர வேறு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள் அவள். அதே சமயம் கீழே ராஜன் ராகவனிடம் “நல்ல பொண்ணு.. இத்தனை சாந்தமா இருக்காளே” என்று சிலாகித்துக் கொண்டவர் இப்போது தான் தோன்றியதுபோல தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார்.

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன ராகவன்… எனக்கு இருக்கிறது ஒரே பையன், அவனையும் உங்களுக்கு நல்லாவே தெரியுமே… அவனுக்கும் பொண்ணு பார்த்திட்டுதான் இருக்கேன், பணமெல்லாம் பொண்ணு கொண்டு வந்துதான் சேர்க்கணும்ன்னு இல்ல, உங்க பொண்ணை பார்த்ததும் ஏனோ மனசுல ஒரு எண்ணம்… நீங்க கலந்து பேசி சொல்லுங்களேன்..” என்று இயல்பாக கேட்பதுபோல் அவர் கேட்டு விட

ராகவனுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் பெண்ணிடம் கேட்காமல் என்னவென்று பதில் சொல்வது என்று யோசித்தவர், பெண்ணிடமும் பேசிவிட்டு பிறகு சொல்வதாக கூறிவிட ராஜன் வந்த வேலை முடிந்ததாக எண்ணி புன்னகையுடன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.

அவருக்கு தெரியும் ராகவன் நிச்சயம் இந்த சம்பந்தத்தை ஏற்றுக் கொள்வார் என்று. ஏனென்றால் அவர்களின் செல்வநிலை அப்படி. ஷ்யாமின் சித்தப்பாவாக இருந்தாலும், அது அன்னையின் வழி உறவாக இருக்க, அவர்கள் அளவுக்கு இல்லை. அதே சமயம் கீழானவர்களும் இல்லை.

ராகவன் தனது சொந்த உழைப்பில் சென்னையில் தனது சொந்த வீட்டில் அவரளவுக்கு நிறைவாகவே வாழ்ந்து கொண்டிருந்தார். ராஜன் மட்டுமல்லாது இன்னும் பலருக்கு அவர் ஆடிட்டராக இருக்க, நல்ல வருமானமே. ஆனால் ராஜனோடு ஒப்பிடும்போது சற்றே வசதி குறைவு அவர்கள். அவ்வளவே…

ராகவனுக்கு ராஜன் கேட்டது மகிழ்ச்சிதான் என்றாலும் கூட, மனிதர் அத்தனை லேசில் சுயமரியாதையை விட்டுவிட மாட்டார் என்பது ராஜனுக்கு தெரியாமல் போக, அவரின் பணத்தை பார்த்தே காலில் விழுந்து விடுவார்கள் என்பது ராஜனின் எண்ணம். எனவே ஷ்யாமின் தங்கையை வைத்தே அவனை ஆட்டி வைக்க வேண்டும் என்று மனதில் பல திட்டங்களை தீட்டி விட்டிருந்தார் ராஜன்.

ராகவன் அன்று இரவு உணவு முடிந்ததும் சற்று நேரம் அமர்ந்திருந்தவர், மகள் வந்து அருகில் அமரவும் அவளிடம் ராஜன் கேட்ட விஷயத்தை பற்றி பகிர்ந்து கொள்ள, அனுவின் முகத்தில் அவருக்கு இசைவாக எந்த உணர்வுமே வெளிப்படவில்லை.

அமைதியாக அமர்ந்து இருந்தவள் தன் தந்தையிடம் திரும்பி “வேண்டாம்ன்னு சொல்லிடுங்கப்பா… எனக்கு விருப்பம் இல்ல.” என்று அழுத்தமாக கூறிவிட்டாள். மகளின் அழுத்தத்தில் இது நடக்காது என்று புரிந்து விட்டாலும், மாப்பிளை யார் என்று கூட தெரிந்து கொள்ளாமல் அவள் மறுப்பது தந்தையாக அவருக்கு வருத்தத்தை கொடுக்க, மகளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார் அவர்.

அவரின் பார்வையை சந்தித்தவள் “என்ன கேட்கணும்ப்பா…” என்று கேட்க

“நான் என்ன கேட்கடா… அதான் பிடிக்கல ன்னு சொல்லிட்டியே.. உன் விருப்பம் தான எப்பவும்..” என்றவர் “ஆனா அனும்மா மாப்பிளை யாருன்னு கூட கேட்காம ஏண்டா இப்படி ” என்று ஒன்றும் தெரியாதவர் போல் வினவ

“தெரிய வேண்டாம்பா” என்றாள் மகள்.

நிச்சயம் எதுவோ பெரிய விஷயம் என்பது தந்தைக்கு புரிந்துவிட “யாருடா?? அப்பாகிட்ட சொல்லலாமா” என்றதும் அருகில் நின்றிருந்த அவளின் அன்னை தேவி கணவரை முறைக்க, மகளோ தந்தையின் கேள்வியில் சிரித்தபடியே அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்ககிட்ட சொல்லாம என்னப்பா… ஆனா எனக்கே இன்னும் தெளிவு இல்லப்பா.. நான் படிப்பை முடிச்சிடறேனே.. எனக்கு அதுவரைக்கும் டைம் கொடுங்கப்பா, ஒருவேளை ஒத்து வரலைன்னா நிச்சயம் உங்க பேச்சை கேட்கிறேன்பா…” என்று அவள் தயங்கி தயங்கி ஒருவழியாக சொல்லி முடிக்க

தந்தையாக பெருமைதான், இந்த அளவிற்கு மகள் தெளிவாக இருக்கிறாளே என்று நினைத்து. அதுவும் “உங்க பேச்சை கேட்கிறேன்” என்பது வெறும் வார்த்தைகள் அல்ல என்பது அந்த தந்தைக்கு புரிந்தே இருந்தது. அவரின் நிம்மதிக்காக அவள் கொடுக்கும் நம்பிக்கை அது. நிச்சயம் மகள் காப்பாற்றவும் செய்வாள் என்று தெரியும் ராகவனுக்கு.

மனைவியை கண்டுகொள்ளாமல் மகளிடம் மீண்டும் “பையன் யாருடா? அப்பாகிட்ட சொல்லேன், அப்பாவே பேசி முடிக்கறேன்.” என்று கேட்க, தேவி எழுந்தே சென்றுவிட்டார். “எந்த வீட்டில் நடக்கும் இந்த அநியாயம்” என்று பொறுமியவர் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

அன்னையின் கோபத்தில் சிரித்துக் கொண்ட அனு “நைட் அம்மாகிட்ட நல்லா வாங்க போறீங்கப்பா. போய் படுங்க, கண்டிப்பா நீங்கதான் பேசணும்…. ஆனா இப்போ வேண்டாம்.. நானே சொல்றேன்.” என்றவள் எழுந்து அறைக்கு செல்ல திரும்ப, என்ன தோன்றியதோ மீண்டும் குனிந்து தன் தந்தையை கழுத்தோடு கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டவள் “தேங்க் யூ ப்பா ” என்றுவிட்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள்.

ராகவன் மகளின் இந்த சிறுபிள்ளை போன்ற செயல்களில் புன்னகைத்துக் கொண்டு அறைக்கு சென்றுவிட, தன் அறைக்கு வந்தவளுக்கு கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கி இருந்தது.

முதலில் தன் காதலை நினைத்து, பின் தன்னை விட்டுச் சென்ற அவனை நினைத்து, அவன் விட்டுச்சென்ற பின்பும் கூட வெட்கமே இல்லாமல் அவனை சுற்றி வரும் தன் மனதை நினைத்து, என்று அழுதவளுக்கு தந்தையின் தன் மீதான நம்பிக்கையும் கண்ணீரையே கொடுத்தது.

“உங்க பொண்ணு தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டேன்ப்பா ” என்று வாய்விட்டு கூறியவள் தாங்க முடியாமல் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழ, “பெருசா சொல்லியாச்சு.. உன்னால அவனை தவிர யாரையாவது ஏத்துக்க முடியுமா.. அவன் இல்லாம வாழ முடியுமா உன்னால” என்று அவள் மனமே அவளை கேள்வி கேட்க, தாங்கவே முடியவில்லை அவளால்.

ஸ்ரீதரின் முகமே மீண்டும் மீண்டும் கண்ணில் தோன்ற, அவனை தவிர்க்கவே முடியவில்லை அவளால். அண்டத்தை அளக்கும் காற்றைப் போல அவள் உள்ளும், புறமும் தன் நினைவுகளால் அவளை நிறைத்திருந்தவன் அவளை விடுவதாகவே இல்லை.

“என்னை ஏண்டா இப்படி படுத்தி வைக்கிற.. இதுக்கு என்னை கொன்னே போட்டு இருக்கலாம் நீ” என்று அவன் கண்முன் இருப்பதாக நினைத்து புலம்பிக் கொண்டிருந்தவள் ஒருகட்டத்தில் அழுது கொண்டே உறங்கி இருந்தாள்.

இவளின் கண்ணீர் துளிகள் அவனை தீண்டியதோ என்னவோ தன் வீட்டில் தன் அறையின் கட்டிலில் படுத்திருந்த ஸ்ரீதரும் உறக்கம் தொலைத்த விழிகளில் கண்ணீரைத்தான் சுமந்து கொண்டிருந்தான். அனுவின் நினைவுகள் அவனை விடாமல் துரத்திக் கொண்டுதான் இருந்தது.

இத்தனை நாட்கள் கன்யாவை அவன் தடைக்கல்லாக நடுவில் நிறுத்தி இருக்க, இன்று கன்யாவை தன் குடும்பமாக தன் தமக்கையாக ஏற்றுக் கொண்டவுடன், அனுவின் முகம் எதிரே வந்து இம்சித்தது அவனை. இத்தனை நாள் வேண்டாம் என்று சொல்லிக் கொண்ட மனமும் இன்று அதிகமாக அவளை தேட, அப்பட்டமான சுயநலம் என்று அவன் மனசாட்சியே அவனை குத்திக் கிழித்தது.

ஆனாலும் அவளை விட்டுவிட முடியவில்லை அவனால். எந்த முகத்துடன் அவளை தேடிச் செல்வாய் என்று ஒரு மனம் கேள்வி கேட்க, முதலில் தன் முகத்தில் விழிப்பாளா அவள் என்று தன்னையே கேட்டுக் கொண்டான் அவன்.

அவர்களின் காதலை பொறுத்தவரை ஒன்றுமே அறியாத அப்பாவிதான் அனுபமா. அத்தனை மென்மையானவள். நட்பாக பழகினாலும் கூட அனைவரையும் ஒரு எல்லையில் தான் நிறுத்தி இருந்தாள். அவளின் எல்லைகளை உடைத்தவனும் அவன் தான். வேண்டாம் என்று விலகியவளை விடாமல் நெருங்கி கொள்ளை கொண்டவனும் அவன்தான்.

அவளுக்கு திகட்ட திகட்ட காதலை கற்றுக் கொடுத்தவன், அவளிடம் இருந்தும் நிறைவாகவே திரும்ப பெற்று இருக்கிறான். அவன் காதலை ஏற்றுக் கொள்ளும்வரை தான் அவளின் எல்லைகளாக இருந்தது. அதன்பிறகு அத்தனையும் அவன் முடிவு தான். அவன் எது செய்தாலும் தனக்காகவே என்ற எண்ணத்தை நிறைத்துக் கொண்டவள் அவன் விட்டுவிட மாட்டான் என்ற அசையாத நம்பிக்கையும் வைத்து தான் காத்திருந்தாள்.

அவனை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை அனுவிற்கு. அவனின் நெருக்கத்தை அவள் மறுப்பதாக தோன்றினாலும், அவன் முகம் சற்று வாடினால் அதை தாங்காமல் தானாகவே அவனை நெருங்கும் தன்மை கொண்டவள் அவள். அவன் குரலை வைத்தே அவனை கணித்து விடுவாள் பெரும்பாலும்.

இத்தனைக்கும் பெரிதாக எதுவுமே செய்து விடவில்லை அவன். ஆனால் அவன் வார்த்தைகளுக்காகவே அவனை நம்பிய ஒரு ஜீவன் அவனவள். அவளுக்கு தான் நியாயமே செய்யவில்லை என்பது அவனை அரித்துக் கொண்டிருக்க, அவள் நம்பிக்கைக்கு தகுதியே இல்லாதவன் தான் என்ற நினைவு அவனை கொன்று கொண்டிருந்தது.

என்ன செய்து அவளை மீட்பேன் நான்?? என்று நினைத்தவனுக்கு அன்று கன்யாவின் வீட்டில் பார்த்த அவள் கண்களை எட்டாத அந்த ஒட்ட வைத்த புன்னகை நினைவுவர, உயிர்ப்பே இல்லாத அந்த முகம் கண்முன் தோன்றியது அவனுக்கு. “நிச்சயம் அவளை விடமுடியாது என்னால்.” என்று அவனுக்கு அவனே புலம்பிக் கொண்டவன் முற்றிலுமாக ஓய்ந்து போயிருந்தான்.

எப்படி அவளுக்கு தன்னை புரிய வைப்பேன் என்பதே அவன் சிந்தனையாக இருக்க, உறக்கம் ஓடி இருந்தது அவனை விட்டு.

Advertisement