Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 23

ஸ்ரீதர் தந்தையின் வார்த்தைகளில் உடைந்து அவர் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர்விட தந்தைக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவன் தோளில் தட்டிக் கொடுத்து, தன் கட்டிலில் அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்துகொள்ள ஸ்ரீதருக்கு தான் அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை.

அவன் பேசிய வார்த்தைகளின் அழுத்தம் இந்த நிமிடம் வரை அவனை குடைந்து கொண்டிருக்க, ஆதி நாராயணன் அத்தனை இலகுவாக இருந்தார். அவன் மீண்டும் அவரிடம் மன்னிப்பு கேட்க

“இன்னும் எத்தனை முறை மன்னிப்பு கேட்கப்போற ஸ்ரீ, நீ பேசினது எதுவுமே தப்பு கிடையாது… நீ பேசின விதம் வேணா கொஞ்சம் கரடுமுரடா இருந்து இருக்கலாம், ஆனா நீ பேசின விஷயங்கள் சரியானது தான். அதுவும் உன் அம்மாவுக்கு நான் செஞ்சது துரோகம்தான்….

எனக்கு அதுல எந்த மாற்று கருத்தும் இருந்தது இல்ல, ஆனா அன்னிக்கு நிலைமைக்கு எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலை கைதி நான். என்னோட நியாயங்கள் யாருக்குமே புரியாது.

ஏன் உன் பெரியம்மாவே புரிஞ்சிக்கல என்ன?? உன் அம்மா என் வாழ்க்கையில வந்த பிறகு கூட நான் ரஞ்சனியை தேடி போயிருக்கேன் ஸ்ரீதர். ஆனா அவ என்ன ஏத்துக்கிட்டதே இல்ல, என்னை ஒட்டுமொத்தமா வெறுத்துட்டா… நாங்க கிட்டத்தட்ட ஒரு வருஷம் காதலிச்சிருக்கோம், நான் அவளுக்கு தாலி கட்டி,நாங்க குடும்பம் நடத்தி இருக்கோம்…

அவளுக்கே என் நிலைமை புரியல, நான் வேற யாருக்கு என்னை புரிய வைக்க முடியும்… எல்லாத்தையும் எனக்குள்ளவே நான் புதைக்க தொடங்கி இருந்தப்போ தான் உன் அம்மா எனக்கு ஆறுதலா வந்தா.. உன் அம்மா எனக்கு மனைவி ன்னு சொல்றத விட எனக்கு கிடைச்ச நல்ல பிரெண்ட்.

நான் இன்னிக்கு வாழற இந்த வாழ்க்கை உன் அம்மாவால ஸ்ரீ. அவ இல்லாம போயிருந்தா ஒருவேளை ரஞ்சனிக்கு முன்னாடியே கூட நான் பொய் சேர்ந்திருப்பேன். ஆனா உன் அம்மா என்னை விடவே இல்லை.

இதுவரைக்கும் என் மனைவிக்கு மறைச்சு எந்த ரகசியமும் என்கிட்ட இல்ல, அவளுக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் இதுவரைக்கும் நான் செஞ்சதும் இல்ல..

உன் அம்மாவோட ஒரு பார்வை போதும் எனக்கு. அவளுக்கு ஒரு விஷயம் பிடிக்குதா, இல்லையான்னு என்னால சொல்லிட முடியும். அப்படி இருக்க ரஞ்சனியோட இறுதி காரியத்துக்கு உன் அம்மாவை கேட்காம நான் முடிவெடுத்து இருப்பேன்னு நினைக்கிறியா நீ. இன்னும் சரியா சொல்லணும்ன்னா எனக்கு அதை செய்ய சொல்லி தைரியம் கொடுத்ததே உன் அம்மாதான். உன் அம்மா சொல்லிதான் அத்தனையும் நடந்தது..

அடுத்ததா ஸ்ரீமா.. அவளுக்கு நான் எந்த நியாயமும் செய்யல ஸ்ரீ…. ஒரு அப்பாவா எங்கேயும் நான் அவ கூட நின்னதில்ல.. அவ வாழ்க்கையில எனக்கான இடம்ன்னு ஒன்னு இல்லவே இல்ல…

அவளுக்கு நம்மோட சொத்து, நம்ம குடும்பபெயர் எதுவுமே தேவையில்லை ஸ்ரீ. இந்த சமூகத்துல அவளுக்குன்னு ஒரு இடம் இருக்கு… ஆனா அதுக்காக அவளை அப்படியே விட்டுட முடியாது என்னால. அவளோட இந்த நிலைக்கு நாந்தான் காரணம்.

ஒரு அப்பாவா அவளுக்கான கடமைகளை இனியாவது நான் சரியா செய்யணும். இது நிச்சயமா அவளுக்காக இல்ல ஸ்ரீ.. எனக்காக.. இது ஒன்னு மட்டும்தான் எனக்கு நிம்மதியை கொடுக்கும்.

ஆனா அது உனக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்யட்டும் ஸ்ரீ… சொல்லு, இனி எல்லாமே உன் முடிவு தான்.. நீ சொல்றத உன் அப்பன் செய்றேன்…” என்று முடித்தவர் அவன் முகம் பார்க்க, கண்ணீரோடு அவர் கைகளை பிடித்துக் கொண்டவன் “அப்பா… நிச்சயமா நீங்க நினைக்கிறது எல்லாமே நடக்கும்ப்பா. நான் உங்ககூடவே இருப்பேன். நீங்க என்ன செய்யணுன்னு சொல்லுங்க. நான் நடத்திக் காட்றேன்.” என்று அவரிடம் உறுதியாக கூறியவன் “நீங்க கிளம்புங்க ப்பா. நாம அங்கே போவோம்..” என்று அழைக்க, ஆதி நாராயணனுக்கு பெருத்த நிம்மதி மகன் புரிந்து கொண்டதில். கலங்கி இருந்த கண்களை துடைத்துக் கொண்டவர் குளித்துவிட்டு கிளம்பிவர, அதுவரையிலும் கூட அவருடன் தான் இருந்தான் மகன்.

ஒருவழியாக இருவரும் கிளம்பி கன்யாவின் வீட்டிற்கு செல்ல அங்கு ஹாலில் இருந்த சோஃபாவில் கன்யா அமர்ந்திருக்க, வேதா பூஜை அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். பூஜையறை வாசலுக்கு நேராக இருந்ததால் வேதவதி உள்ளே நுழையும் இவர்களை கவனித்துவிட, தந்தையும், மகனும் ஒன்றாக வருவதில் அத்தனை ஆனந்தம் அந்த தாய்க்கு.

கன்யா அவர் முகத்தை பார்த்துவிட்டு வாசலை பார்த்தவள் தந்தையை பார்த்துவிட்டு தானாக எழுந்து நிற்க, வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.

ஆதிநாராயணன் உள்ளே நுழைந்தவர் அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட, மகள் நின்றுகொண்டே இருந்தாள். வேதவதி கணவரை பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு அழகாக புன்னகைத்தவர் கன்யாவின் புறம் திரும்ப கன்யா இன்னும் நின்றுகொண்டே தான் இருந்தாள்.

ஆதி நாராயணன் அவளை அமர சொல்லியவர் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஸ்ரீமா.. அதுக்குதான் உனக்கு பிடிக்காது ன்னு தெரிஞ்சும் உன் வீட்டுக்கு வந்துட்டேன், என்னை மன்னிச்சுடுடா” என்று ஆரம்பிக்கும்போதே உடைந்துவிட்டாள் கன்யா. கண்களில் கண்ணீர் தேங்கிவிட நாராயணன் தொடர்ந்தார்.

“கிருஷ்ணா குரூப்ஸ் பாலகிருஷ்ணன் போனவாரம் என்னை சந்திக்க வந்தாரு. அவர் மகனுக்கு உன்னை பெண் கேட்டு என்கிட்டே வந்துட்டாங்க. ஆனா பாவம் அவங்களுக்கு தெரியல… நான் உனக்கு யாருமே இல்லன்னு…

ஷ்யாமும் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு என்கிட்டே பேசி இருந்தாரு.. அதை வச்சு பார்க்கும்போது உனக்கும் விருப்பம் தானோ ன்னு ஒரு எண்ணம் எனக்குள்ள. ஆனா நான் பேசினா உனக்கு பிடிக்காதே. அதான் அவங்களுக்கு நான் பதில் எதுவுமே சொல்லல.

நீ சொல்லுடா இப்போ. நான் என்ன சொல்லட்டும் அவங்ககிட்ட.. உன்கிட்ட நேரடியாவே பேச சொன்னாலும் நான் அப்படியே சொல்லுறேன். இந்த விஷயத்தில இருந்து என்னை முழுசா ஒதுங்கிக்க சொன்னாலும் அதையும் சொல்லிடறேன். எனக்கும் ஸ்ரீகன்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ன்னு சொன்னாலும் கூட” என்றவரின் குரல் அவரையும் மீறி உடைந்துவிட கன்யா அவரை அதிர்ந்து பார்க்கும்போதே “அப்படியே சொல்லிடறேன்” என்று வார்த்தையை முடித்தவர் அவளையே பார்க்க

அசாத்தியமான மௌனம் நிலவியது அங்கே. ஸ்ரீதருக்கு தந்தையின் உணர்வுகள் புரிய, பின்னிருந்து அவர் தோளை தொட்டு அழுத்தினான் அவன். அவன் கைகளின் மேல் கையை வைத்துக் கொண்டவர் கன்யாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் சில நொடி மௌனத்திற்கு பின் வேதாவை திரும்பி பார்த்து “நான் யார் வேதாம்மா உங்களுக்கு..” என்று கேட்டவள்

“நான் உங்களோட பொண்ணுதானே. அப்போ இவருக்கு நான் யாரு??”

“அவரோட மக ன்னு நினைச்சா அவரை பேச சொல்லுங்க… இல்ல நான் வேறன்னு சொல்றதா இருந்தா…..” என்று அவள் முடிக்கும் முன்னே வேதாவும், நாராயணனும் “ஸ்ரீமா” என்று பதறிக் கொண்டு அருகில்வர, புறங்கையால் முகத்தை துடைத்தவள் கட்டுப்படுத்த முடியாமல் உடைய, அன்னை ஒருபுறமும், தந்தை ஒருபுறமும் தாங்கி கொண்டனர் அவளை.

ஆதி நாராயணனின் கண்களிலும் கண்ணீர்தான். ஆனால் இம்முறை அவரின் கண்ணீர் சந்தோஷத்திற்கானது. அவர் மகள் அவருக்கு கொடுத்த அங்கீகாரத்திற்கான சாட்சியம் அந்த கண்ணீர் துளிகள். தன் மகளின் உச்சியில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டவர் கண்கள் கண்ணீரை நிறுத்தவே இல்லை. வேதவதி அருகில் அமர்ந்து அவள் முதுகை தடவிக் கொடுக்க, கண்ணீர் சிறிதாக குறைந்து அவரின் புறம் திரும்பியவள் அவரை அணைத்து கொண்டாள்.

வேதா சிரிப்புடன் அவளை கட்டிக் கொண்டவர் நாராயணனை பார்க்க, அவரும் கண்ணீருடன் புன்னகைத்துக் கொண்டிருந்தார். வேதா அவளின் கண்களை துடைத்து விட்டவர், ஸ்ரீதரையும் அழைத்து அருகில் அமர்த்திக் கொள்ள, அந்த அளவான குடும்பம் பரிபூரணமானது அங்கே.

தந்தையும், தனயனும் அன்று முழுவதும் அங்கேயே இருக்க, கன்யா வேதாவுடன் தான்…. ஆதி நாராயணனிடம் சாதாரணமாக பேசினாலும், வேதா அளவு அவரிடம் நெருக்கம் வரவில்லை. அவர் கேட்கும் கேள்விகளுக்கு அவள் பொறுமையாக பதில் கொடுத்துக் கொண்டிருக்க, வேதாவும் அவள் பேசுவதை வாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

இடையில் அவளின் திருமணம் குறித்த பேச்சு எழவும், வேதா எப்போது ஷ்யாம் வீட்டில் பேசுவது என்று கேட்க, ஆதி நாராயணன் ஷ்யாமின் தந்தையிடம் நாளையே பேசி நிச்சயத்திற்கு ஏற்பாடுகளை தொடங்குவதாக கூறினார். நிச்சயம் பெண்வீட்டினர் செய்வது இவர்கள் வழக்கம் என்பதால் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கன்யா அமைதியாகவே இருந்தாள்.

அவர் நிசாயத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருந்தது ஸ்ரீதரிடம் தான். அவனும் ஆர்வமாகவே சமையல் முதல் அழைப்பு வரை அனைத்தையும் பேசிக் கொண்டிருக்க கன்யாவுக்கு “இவன் எப்போ இவ்ளோ நல்லவனா மாறினான் ??” என்ற எண்ணம்தான். “திருந்திட்டானோ ” என்று அவள் எண்ணமிட, பார்வை ஸ்ரீதரையே தொடர்ந்தது.

ஸ்ரீதர் அவள் பார்வையை உணர்ந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் தந்தையுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு கன்யாவின் பார்வைக்கான காரணம் புரிந்தாலும் அவளுக்கு தன் செயலுக்கு விளக்கம் கொடுக்க அவன் விரும்பவில்லை. இந்த நிமிடம் அவன் அவனுடைய தவறுகளை சரிசெய்யவே விரும்ப செயலில் காண்பிக்க நினைத்தான்.

மதிய உணவை வேதா விசேஷமாக தயாரிக்க சொல்லி இருக்க, அன்னம் விருந்தே படைத்திருந்தார். ஆதிநாராயணன் அமர அவருக்கு இரண்டு புறமும் அவர்மக்கள் அமர்ந்து கொள்ள, வேதா பார்த்து பார்த்து பரிமாறினார் அவர்களுக்கு. அன்றைய நாள் அந்த குடும்பத்திற்கு திருநாளாக அமைந்துவிட, வெகு நாட்களுக்கு பிறகு கன்யாவின் இல்லம் உயிர்ப்புடன் இருக்க, அந்த ஹாலில் இருந்த ரஞ்சனியின் புகைப்படத்தை அவ்வபோது தழுவி மீண்டது கன்யாவின் பார்வை.

ஏனோ நிச்சயம் தன் அன்னை மகிழ்ச்சியாக இருப்பார் என்று அவளுக்கு தோன்ற, அவள் அருகில் வந்து அமர்ந்தார் வேதா. அவளை தங்களுடன் வந்து விடுமாறு அவர் அழைக்க, ஒரேடியாக மறுத்துவிட்டாள் அவள்.

ஆதிநாராயணன் தான் இதில் அதிகமாக அதிர்ந்து நின்றது மகள் தங்களுடன் வந்து விடுவாள் என்று முழுதாக நம்பி இருந்தார் போலும் மனிதர். ஆனால் அவள் மறுக்கவும் தளர்ந்து அமர்ந்து கொண்டார் அங்கிருந்த இருக்கையில். கன்யாவிற்கு அவர் தன் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பது தெரியவே இல்லை.

ஸ்ரீதர் தான் தந்தையின் அருகில் இருந்தவன் அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவர் கையை பிடித்துக் கொண்டான். அங்கு வேதா கன்யாவிடம் காரணம் கேட்க “வேதாம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.. .என்னால அந்த வீட்டுக்கு வரமுடியாது… அது என் அப்பா வீடு ன்னு எனக்கு தோணவே இல்லை, அது எக்ஸ் மினிஸ்டர். திருவேங்கடத்தோட வீடு. அதுவும் அவர் இன்னமும் வாழ்ந்துட்டு இருக்க வீடு. நான் எப்படி அந்த வீட்டுக்கு வர முடியும்??

இந்த நிமிஷம் எனக்கு வாய்ப்பு கிடைச்சாலும் அவரை கொன்னுடுவேன் நான். அவ்ளோ கோபம் இருக்கு அந்த பெரியமனுஷன் மேல. அவரை எதுவும் செய்ய முடியலைன்னாலும் அவர் முகத்திலயாவது முழிக்காம இருக்கனும்ன்னு நினைக்கிறன். தப்பா வேதாம்மா.” என்று மகள் கேட்க, என்ன பதில் சொல்ல முடியும் வேதாவால்.

ஆனால் கணவரின் நிலையும் புரிய, அவர் பாவமாக அவரை திரும்பி பார்க்க, அவர் கண்மூடி சாய்ந்திருந்த கோலம் உறுத்தியது வேதாவை. ஸ்ரீதர் எழுந்து அன்னையின் அருகில் வந்தவன் “அம்மா.. அவளை கம்பெல் பண்ணாதீங்க… இப்போ என்ன, கல்யாணம் முடிஞ்சி வேற வீட்டுக்கு தானே போகப்போறா. அக்கா கல்யாணம் முடியற வரைக்கும் நீங்க இங்கேயே இருந்து பார்த்துகோங்க. அங்கே நான் பார்த்துக்கறேன்.

“அப்பாவுக்கு தான் டைம்க்கு சாப்பிட கொடுக்கணும்.. டேப்லெட்ஸ் எல்லாம் கொடுக்கணும்.. நான் வேலைக்கு யாரையாவது ஏற்பாடு பண்ணி பார்த்துக்கறேன். நீங்க இங்க இருங்க இவளோட..” என்றவன் பேச்சு முடிந்தது என்பது போல் திரும்ப..

கன்யா சரேலென்று நிமிர்ந்தவள் “அப்பா இங்கேயே இருக்கட்டும்… நான் பார்த்துக்கறேன் கொஞ்ச நாள்..” என்று திடமாக உரைக்க ஆதிநாராயணனுக்கு உயிர்வரை ஊடுருவியது அவளின் குரல். அவர் சட்டென்று மகளை திரும்பி பார்க்க, மகளோ ஸ்ரீதரை தான் பார்த்திருந்தாள் அவன் என்ன சொல்வானோ என்பது போல்.

அவள் பார்வையை கண்டவன், தோளை குலுக்கிவிட்டு “உன் அப்பாவாச்சு, நீயாச்சு. நீயே பேசிக்கோ எதுவானாலும்.” என்றவன் “பார்த்துக்கோங்க மா ” என்றுவிட்டு கிளம்பிவிட, ஆதிநாராயணனும், வேதவதியும் இன்னும் திகைப்பிலிருந்து விடுபடவே இல்லை.

ஸ்ரீதர் வேதாவை தானே முன்வந்து அங்கிருக்க சொன்னதே அதிசயம் என்றால், அதைவிட அதியசமாக இருந்தது கன்யாவின் பேச்சு. அவர் அதிலேயே அதிர்ந்தவராக தன் பிள்ளைகளை பார்த்துக் கொண்டு நிற்க, ஸ்ரீதர் அவளிடம் நேரடியாகவே பேசியது, அதுவும் தங்கள் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு சென்றது எல்லாம் நம்ப முடியாததாக இருந்தது அவருக்கு.
வேதாவின் நிலை இப்படி இருக்க ஆதிநாராயணனோ தன் பிள்ளைகளை பற்றிய கவலையை விட்டு நிம்மதியில் கண்மூடிக் கொண்டார்.

Advertisement