Advertisement

அத்தியாயம் 22

ஷ்யாமின் குடும்பம் கன்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியிருக்க, அப்போதும் அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லாதவர் போல் சோஃபாவில் அமர்ந்து இருந்தார் வேதா. ஸ்ரீதர் அடிக்கடி தன் தாயின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே இருக்க, அவனை கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர்.

கன்யா அவர் கிளம்புவதாக இல்லை என்பதை புரிந்து கொண்டவள் அன்னத்திடம் உணவை எடுத்து வைக்க சொல்லிவிட்டு, அவரை சாப்பிட அழைத்தாள். அவள் கூப்பிட்ட நிமிடம் அவர் ஸ்ரீதரை பார்த்துவிட்டு அவளை அர்த்தமாக பார்க்க, அவர் பார்வையை உணர்ந்தவளாக அவளும் சென்று ஸ்ரீதரை சாப்பிட அழைக்க, அவன் முதலில் மறுக்க நினைத்தவன் தன் அன்னையை பார்த்ததும் எதுவுமே பேசவில்லை.

அமைதியாக கையை கழுவி விட்டு வந்து அமர்ந்துவிட, கன்யாவே இருவருக்கும் பரிமாறினாள். ஸ்ரீதர் எதுவும் பேசவில்லை என்றாலும், அவள் தட்டில் வைத்த எதையும் மறுக்கவும் இல்லை. அந்த உணவு நேரம் அமைதியில் கழிய, வேதா உண்டு முடித்தவர் மீண்டும் சென்று சோஃபாவில் அமர்ந்துவிட, அக்கா உணவு பரிமாற தம்பி உண்டு கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து அவன் எழவும் கன்யாவும் உண்டு முடித்தவள் ஹாலுக்கு வர, ஸ்ரீதர் இப்போது தன் அன்னைக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான். கன்யா வந்து வேதாவின் அருகில் அமர்ந்துகொள்ள, வேதா ஸ்ரீதரிடம் “அப்பா திரும்பி வர வரைக்கும் நான் ஸ்ரீயோட இருக்கேன். நீ வீட்டுக்கு கிளம்பு” என்றுவிட, அவரை ஏக்கமாக பார்த்தான் மகன்.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. உன் அப்பாவை தானே தடுக்க நினைத்தாய் ?? என்னை என்ன செய்ய முடியும் உன்னால் ? என்பதுபோல் இருந்தது அவர் செயல். உண்மையில்,இந்த நிமிடம் வேதா அங்கு கன்யாவுடன் தங்கி கொள்வதில் ஸ்ரீதருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவன் அன்னை அவனை கிளம்ப சொன்னதை தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இவரை இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி செல்ல? என்று யோசித்தவன் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க, வேதா அவனின் அமைதியை பார்த்தவர் “கிளம்பு ஸ்ரீதர். உன் தாத்தா அங்க தனியா இருப்பாங்க. நான் அங்கே வரவரைக்கும் அவரை பார்த்துக்கோ.” என்றுவிட்டார் முடிவாக.

அவன் அவரிடம் ஏதும் பேச நினைத்தாலும் கன்யாவை வைத்துக் கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை அவனுக்கு. முன்போல அவளை வெறுக்கவில்லை என்றாலும் அன்னை நினைப்பதுபோல் ஒரே நாளில் அவளுடன் ஒட்டி உறவாடவும் முடியவில்லை அவனால். ஏதோ ஒரு தடுமாற்றம் இருந்தது இன்னமும்.

அந்த தடுமாற்றம் அவன் செயலினால் வந்ததாக கூட இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று அவனை அவளிடம் இயல்பாக விடவில்லை. இப்போதும் அப்படியே அன்னையின் முகத்தை பார்த்தவன் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான். ஆனால் கன்யாவிற்குத்தான் அவன் அப்படி செல்வது வருத்தமாக இருக்க, வேதாவிடம் அதைப்பற்றி அவள் கூறினாலும், கண்டுகொள்ளவே இல்லை அவர்.

அவளுக்கு தன் நிதான பார்வையையே பதிலாக கொடுத்தவர், எழுந்து சென்று கீழே இருந்த அறையில் படுத்துக்க கொண்டார். கன்யா “வேதாம்மா இங்கே ஏன் படுக்கறீங்க, என்கூட வாங்க.. என் ரூம்ல படுத்துக்கலாம்.” என்று அழைத்தபோதும்

“நான் அழையா விருந்தாளி ஸ்ரீமா… இங்கேயே இருந்துக்கறேன்… நீ போய் படு..” என்று கூறிவிட்டவர், அவளையும் அந்த அறையில் படுக்க அனுமதிக்கவே இல்லை.

அவரிடம் வெகுநேரம் கெஞ்சியவள், அவர் அசையாமல் போகவும், வெளியில் வந்து சோபாவில் அமர்ந்துவிட, வேதா அதற்கும் திட்டியவர் “நான் இங்கே இருக்கவா? இல்லை, ஸ்ரீதரை வரச்சொல்லி கிளம்பவா?” என்று மிரட்ட அமைதியாக படிகளில் ஏறிவிட்டாள்.

அவள் அப்படி செல்வது வருத்தமாக இருந்தாலும், “இவளை வழிக்கு கொண்டு வர இது ஒன்று தான் வழி வேதா” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவர் அவரும் சென்று படுத்துக் கொண்டார். கன்யா தன் அறைக்கு வந்துவிட்டவள் அமைதியாக கட்டிலில் விழுந்துவிட, மனம் வேதாவின் கோபத்தில் வந்து நின்றது. அவர் கோபம் நியாயமானது தான் என்றாலும் கூட, கன்யாவால் தாங்கி கொள்ள முடியவில்லை.

தான் இத்தனை நாள் நடந்து கொண்ட விதம் அவர்களை எப்படி பதித்திருக்கும் என்று இன்று ஒரே நாளில் வேதவதி அவளுக்கு புரியவைத்து விட, ஆதி நாராயணனின் முகம் தான் கண்முன் தோன்றியது பெண்ணுக்கு. “அப்பா ” என்று மனம் புலம்ப தொடங்க, இதுவரை அறியாத வகையில் ஒரு உணர்வு பொங்கி எழுந்தது உள்ளுக்குள்.

அவரை தண்டிக்க நான் யார் ? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் அன்னையின் புகைப்படத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டே இருக்க, ஷ்யாம் அழைத்துவிட்டான் அவளை.

மொபைலில் அவன் எண்ணை பார்த்ததும் லேசான புன்னகை தான் கன்யாவிடம். கண்களை துடைத்துக் கொண்டவள் “ஹலோ ” என்று கூறவும், அந்த ஒருவார்த்தையிலேயே அவள் குரலை கண்டுகொண்டவனாக ” ஹே கன்யா.. என்னாச்சு, ஏன் வாய்ஸ் ஒருமாதிரி இருக்கு.” என்று கேட்க

முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டவள் “ஒண்ணுமில்லை..” என்றுவிட

“அப்போ நிச்சயம் ஏதோ இருக்கு கன்யா. சொல்லு ஏன் அழுதுட்டு இருக்க..” என்றான் அவன்.

“நான் ஒண்ணுமே இல்லன்னு சொல்றேன், நான் அழறேன்னு சொல்விங்களா நீங்க..”

“சரி ஓகே. நீ போனை வை. நான் நேர்ல வந்து பார்க்கிறேன், நீ அழறியா? இல்லையா ன்னு?” என்று அவன் முடிக்க பார்க்க

“ஐயோ… அப்படி எதுவும் பண்ணி வச்சிடாதீங்க..” என்று பதறியவளாக கன்யா அலற, அவள் பதற்றத்தை ரசித்து “கன்யா, எனக்கு சீக்கிரம் வாடா ன்னு கேக்குதே..” என்று ஷ்யாம் சிரித்துக் கொண்டே கூறவும், உண்மையில் பயந்தே போனாள் அவள்.

அதே பதற்றத்துடன் “ஷ்யாம்.. வேதாம்மா இங்கேதான் இருக்காங்க..” என்று கூறிவிட்டாள்.

“ஓஹ்.. அதான் சத்தம் குறைவா இருக்கா.. சரி சொல்லு, எதுக்கு அழுத” என்று அவன் காரியத்தில் கண்ணாக இருக்க “நிச்சயமா இப்போ அழவே இல்ல,” என்று அவள் முடிக்க பார்க்க

“இன்னும் எவ்ளோ நேரம் நான் பேசினா நீ உண்மையை சொல்லுவ கன்யா.. இல்ல உன் வேதாம்மா கிட்டயே கேட்டுக்கவா??”

“ஷ்யாம் ப்ளீஸ்… நானே சொல்றேன்… ” என்றவள் நடந்தது அனைத்தையும் அவனிடம் கூறி முடித்தாள். முழுவதுமாக கேட்டுக் கொண்டவன் “நிச்சயமா அவங்க நிலைமையும் கஷ்டம்தான் கன்யா… இந்த விஷயத்துல நான் உனக்கு அறிவுரை எல்லாம் சொல்லவேண்டாம். உனக்கே புரியும், ஆனா ஒரே விஷயம் தான்.

“நீ அவங்க இடத்துல இருந்து யோசி. அவங்களுக்காகவும் யோசி.. என் கன்யா நியாயமா முடிவெடுப்பா, நான் நம்புறேன்..” என்று முடித்துக் கொண்டான் அவன்.

“நான் என்ன செய்யணும்ன்னு சொல்லமாட்டீங்களா நீங்க ??”

“நான் சொன்னா அப்படியே கேட்டுடுவியா நீ ?? உன்னை அப்படியெல்லாம் ஒரு விஷயத்தை செய்ய வைக்கவே முடியாது கன்யா…நீயே முடிவெடு.ஆனா உன் முடிவால யாரும் பாதிக்கப்பட கூடாது. அதையும் மனசுல வச்சிக்கோ. யாரையும் நாம கஷ்டப்படுத்த வேண்டாமேடா”

“அப்போ நான் கஷ்டப்பட்டா பரவால்லையா. என் கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லையா”

“ஹேய் குட்டிப்பொண்ணு… நிமிஷத்துக்கு ஒரு தடவை நீ குட்டிப்பொண்ணுனு நிரூபிச்சிட்டே இருப்பியாடா” என்று அவன் கொஞ்சலாக கேட்க

“என்ன என்ன.. நிரூபிக்கிறேன் நான்..” என்று சிலிர்த்துக் கொண்டாள் அவள்.

“கன்யா… நீ எடுக்கப்போற எந்த முடிவும் நம்ம கல்யாணத்தை பாதிக்காது. நம்ம கல்யாணம் நடக்குதோ இல்லையோ இனி யாரும் உன்னை கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன்.”

“இப்போகூட வேதாம்மா உன்னை கஷ்டப்படுத்துறாங்க, அங்கே இருக்க வேண்டாம் ன்னு தோணினா சொல்லு. நான் நாளைக்கே உன்னை இங்கே கூட்டிட்டு வந்துடறேன்.”

“நீ உனக்கு பிடிக்காத யாரையும் ஏத்துக்கவே வேண்டாம் கன்யா. ஆனா என் கேள்வி பிடிக்குதா? இல்லையான்னு தான். சீக்கிரமா முடிவெடு… ஆனா என்ன முடிவெடுத்தாலும் ஷ்யாம் உன்கூட தான். அதை மட்டும் மனசுல வச்சிக்கோ” என்றவன் மென்மையாக முத்தமிட

சற்றே நெகிழ்ந்த நிலையில் இருந்தாள் அவள். நான் இருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவன் முழுதாக கொடுக்க, எது வந்தாலும் எதிர்கொள்ளும் நிலையில் தான் இருந்தாள் அவளும்.
அவன் கொடுத்த நம்பிக்கையின் சுகத்தில் அவள் மௌனமாகிவிட எதிர்முனைக்கு பொறுமை போனது போலும். “கன்யா…” என்று அவன் அழைத்துவிட

“இருக்கேன் ஷ்யாம்….” என்றவள் “தேங்க்ஸ் ஷ்யாம்…” என்றும் கூற, “தேங்க்ஸ் எதுக்கு கன்யா” என்று மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டவன் “இதுக்கா ” என்று குறும்பாக கேட்க

“உங்களுக்கு தெரியும்.. ” என்று முடித்துக் கொண்டாள் அவள். அப்போதுதான் அவன் குடும்பம் வீட்டிற்கு வந்தது நினைவுவர “ரொம்ப வேகமா வேலை பார்த்து இருக்கீங்க போல??” என்று அவள் நக்கலாக வினவ

“என்ன பண்றது என் பொண்டாட்டி ஸ்லோவா இருக்காளே… யாராவது ஒருத்தர் வேகமா இருந்தாதானே….” என்று அவன் ராகமிழுக்க

“ஷ்யாம்…. ” என்று அவனை அதட்டியவள் ” எப்படி இதெல்லாம்?? ஒரு வாரத்தில என்ன செஞ்சீங்க? எனக்கென்னவோ வேதாம்மா விஷயத்துல கூட உங்கமேல தான் சந்தேகம் வருது…” என்று நிறுத்த

ஷ்யாம் பதறியவனாக “ஹேய் கன்யா.. நிஜமா நான் அவங்களை வர சொல்லல” என்று வேகமாக கூற

“நீங்க நேரடியா சொல்லி இருக்கமாட்டிங்க… ஆனா இப்படி பண்ணலாம் ன்னு ஐடியா கொடுத்து இருப்பிங்க…”

“கன்யா… நிஜமா நான் எதுவுமே செய்யலடா … உன்னை பாதிக்கிற எதையும் நான் செய்ய மாட்டேன்..” என்று அவன் கூறிவிட

“ஹப்பா….. பாதிக்கிற எதையும் செய்யமாட்டிங்க…. அதான் உங்க பாட்டியை அனுப்பி பூ வைக்க சொன்னிங்களா” என்று துடுக்காக கேட்டுவிட்டவள் அவன் என்ன நினைப்பானோ என்று நாக்கை கடிக்க,

அவனோ அலட்டிக் கொள்ளாமல் “ஹேய்.. அது வேற டிபார்ட்மென்ட்… அதுல நான் தலையிட முடியாது, அதுவும் அம்மாவுக்கு முன்னமே உன்னை பிடிக்கும் போல.. அப்பா சொல்லவும் கிளம்பிட்டாங்க. நான் என்ன செய்யட்டும்..” என்று விட்டான்.

“நான் அவங்ககிட்ட வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா..”

“என் குட்டி பொண்ணு அப்படியெல்லாம் என்னை விட்டுட மாட்டா. நானும் நீ வேண்டாம் ன்னு சொன்னாலும் விட்றதா இல்லை.” என்று மென்மையாக கூற, எப்போதும் போல் அவன் காதலில் பிரமிப்புதான் அவளுக்கு.

ஒரு நொடி மௌனமாக இருந்தவள் “விட்டுடாதீங்க எப்பவும்..” என்று கூறிவிட்டு அமைதியாகி விட, அவள் நிலை புரிந்தவனோ “கன்யா… ” என்று அதே மென்மையோடு அழைக்க

“ம்ம்ம்..” என்றவளிடம் “கல்யாணம் பண்ணிப்போமா…” என்று கேட்டுவிட்டான் அவன்.

“பண்ணிக்கோங்க…” என்று இலகுவாக கூறிவிட்டவள் “கூட்டிட்டு போய்டுங்க ஷ்யாம்” என்றுவிட்டாள் அவனிடம்.

ஷ்யாம் நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை, அவள் மனம் அவனுக்கு ஏற்கனவே புரிந்து இருந்தாலும் கூட, அவ்வளவு எளிதாக அவள் ஒப்புக் கொள்வாள் என்று அவன் நினைக்கவே இல்லை. எப்போதும் கன்யாவை வாயடைக்க வைப்பவன் இன்று அவளின் பதிலில் அமைதியாகி விட்டான்.

அவனின் அமைதியில் கன்யா “ஷ்யாம்…” என்று அழைக்க, அடுத்த நிமிடம் அவனின் முத்தங்களின் சத்தம் மட்டுமே விடாது ஒலித்துக் கொண்டிருந்தது அங்கே. கன்யா திணறிப் போனவளாக முகம் சிவந்து அமர்ந்திருக்க, தொடர்ச்சியான முத்தங்களுக்கு பிறகு அவன் “கன்யா… ” என்று அழைக்க இப்போது அவள் மௌனமாகிவிட்டாள்.

“கன்யா.. வீடியோ கால் பண்ணட்டுமா.. உன்னை பார்க்கணும் இப்போவே” என்று அவன் கேட்கவும், அவள் மறுப்பாக தலையசைக்க, புரிந்தவன் போல் “ப்ளீஸ்.. முடியாதுன்னு சொல்லாத.. நான் பார்த்தே ஆகணும் கன்யா..” என்று அவன் கெஞ்சலாக கேட்க, “ம்ம் ” என்றிருந்தாள் அவள்.

அழைப்பை துண்டித்தவன் உடனே வீடியோ காலில் அழைக்க, அவள் ஏற்கவும் அவன் பார்வை முதலில் அவளின் தொளதொள உடையில் தான் பதிந்தது. இதுவரை அவளை அப்படி பார்த்தது இல்லைஅவன். அவன் பார்வையை உணர்ந்தவளுக்கு அப்போது தான் தான் இரவு உடையில் இருப்பது நினைவு வர, என்ன செய்வது என்று முழித்தாள் அவள் .

அவள் பார்வையை புரிந்தவனாக, “டேய் குட்டிப்பொண்ணு…” என்று அழைத்து அவள் கவனத்தை தன்னிடம் திருப்பியவன் அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிடுவது போல் அலைபேசியில் முத்தமிட அவள் முகம் சிவந்து நிற்கவும், “இதுக்குதான் கூப்பிட்டேன்டி.. பொண்டாட்டி” என்று மீண்டுமொரு முறை அழுத்தமாக முத்தமிட்டு “இதுக்குமேல தாங்க முடியாது கன்யா… கட் பண்ணிடு, நான் என் கன்ட்ரோல்ல இல்ல.” என்றுவிட்டு அவனே அழைப்பை துண்டித்துவிட்டான்.

கன்யாவுக்குதான் வெட்கமாக போனது அவனின் இந்த செயல்கள். முகமெல்லாம் சிவந்து, கண்களில் புன்னகை நிறைய கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
தன் அறை கட்டிலில் படுத்திருந்த தீரஜ், தன் முன்னிருந்த தொலைக்காட்சியில் ஷ்யாமின் பேட்டியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஷ்யாமின் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்தவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் ஆத்திரம் முழுவதும் ஷ்யாமின் புன்னகைக்கு காரணமான கன்யாவின் மீது திரும்ப, தன்னை அவள் நிராகரித்ததும் நினைவு வந்தது அந்த நொடியில்.

அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவளின் புறக்கணிப்பை. அவளை விடமுடியாமல் தான் மீண்டும் கூட அவளின் பள்ளிக்கு சென்றது, ஆனால் பேச்சு முற்றி எங்கோ சென்றுவிட, அடுத்தநாள் அவளின் தம்பி வந்து நின்றான் அவன் முன்.

“ஸ்ரீகன்யா விஷயத்தில் இனி தலையிட வேண்டாம்” என்று முதலில் மரியாதையாக கூறியவன், அவன் ஸ்ரீகன்யாவை விடமாட்டேன் என்று கூறவும் “அப்போ உயிரை விட தயாரா இருந்துக்கோ..” என்றவன் “என்னடா நினைச்ச?? தனியா இருக்கா, என்ன வேணாலும் செய்யலாம்ன்னா… எங்க வீட்டு பொண்ணு அவ. என் அப்பாவுக்கு தெரிஞ்சுது, நேத்தே உன்னை தூக்கி இருப்பாரு. சிமெண்ட், மணல் விற்கிறவன் தானே நீ, எங்களுக்கே சொந்தமா மூணு குவாரி இருக்கு தெரியுமா??

“தெரியல ன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல, இனி ஒருமுறை ஸ்ரீ முன்னாடி போய் நில்லு. நானே நேரடியா தூக்கிட்டு போய் காட்றேன் என் குவாரியை…” என்று கண்கள் சிவக்க கூறியவன் “இனி நீ அவ கண்லயே படக்கூடாது” என்று மிரட்டி சென்றிருந்தான் அவனை.
பார்வைக்கு தன்னைவிட சிறியவனாக தோன்றினாலும், அவன் உடல்மொழியும், கண்களின் சிவப்பும், அவனது உக்கிரமும் தீர்ஜ்ஜை லேசாக மிரட்டியது நிஜம். அவன் தந்தையின் அமைச்சர் பதவி வேறு நினைவுக்கு வர, அதன் பொருட்டே சற்று அமைதியாக இருந்தான் அவன். ஆனால் இந்த இடைவெளியில் இவர்களின் இந்த நெருக்கம் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருக்க, பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தான் கிட்டத்தட்ட.
தொடர்ந்து ஷ்யாமிடம் தோற்றுக் கொண்டே இருப்பது ஒருவித அழுத்தத்தை கொடுக்க, எப்படியும் இவர்களை விடுவதில்லை என்று முடிவு செய்து கொண்டான் அவன்.
அதே சமயம் ஆதி நாராயணன் டெல்லியிலிருந்து கிளம்பி இருந்தவர், அடுத்தநாள் காலை சென்னையை வந்தடைய அவர் நேராக வந்து நின்றது ஸ்ரீதரிடம் தான். மனைவி நேற்றே மகள் வீட்டில் இருப்பதாக சொல்லி இருக்கவும், மகன் தனியாக இருப்பது புரிய, சென்னை வந்தவர் நேராக தன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர் கன்யாவின் வீட்டிற்கு தான் செல்வார் என்று நினைத்திருந்த ஸ்ரீதர் தன் அறையில் இருக்க, நாராயணன் வந்தவர் நேராக மகனைத்தேடி வந்துவிட்டார். அவனிடம் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொண்டவர் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தன் அறைக்கு செல்ல, அவரின் பின்னால் சென்றான் மகன்.

“ப்பா… அம்மா… அங்கே.. ஸ்ரீ வீட்ல இருக்காங்க” என்று கூற
“எனக்கு தெரியும் ஸ்ரீ.. ” என்றவர் அதற்குமேல் பேசவில்லை.
“ப்பா… நீங்க போகலையா அங்கே…” என்று பொறுக்கமுடியாமல் அவன் கேட்டுவிட
“என் மகன் இங்கே தனியா இருக்கானே… நான் எப்படி போவேன் ஸ்ரீ ” என்றவர் தன் வாட்சை கழட்டிக் கொண்டிருக்க, அறையின் வாசலில் நின்றிருந்தவன் புயல் போல் தந்தையை நெருங்கி அணைத்துக் கொண்டான். அவன் வாய் “சாரிப்பா… சாரி” என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவனின் கண்ணீர் தந்தையின் தோளை ஈரமாக்கி கொண்டிருந்தது….

Advertisement