Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 21

 

                                            கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே இறங்க அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் வேதவதி.

 

                                     அவரை கண்டதும் முதலில் அவளுக்கு ஷியாம் தான் நினைவுக்கு வந்தான். கடவுளே இவர் செஞ்சு வச்ச வேலையால, நான் என்ன சொல்வேன் இவங்ககிட்ட?” என்று புலம்பிக் கொண்டே அவள் கீழே இறங்க அவருக்கு சற்று தள்ளி முன்பக்கம் இருந்த சோஃபாவில் ஸ்ரீதர் அமர்ந்திருந்தான்.

 

                             “நாங்க வந்து போற அளவுக்கு உன்வீடோ, நீங்களோ தகுதி இல்லாதவங்கஎன்று அவளை குத்திக் கிழித்தவன். இன்று தகுதி வந்துவிட்டதா எனக்கு என்றுதான் தோன்றியது அவளுக்கு. முகம் லேசாக இறுக தொடங்க அதற்குள் வேதவதிஸ்ரீமா.. ” என்று அழைத்திருக்க, அவரிடம் தலையசைத்தவள் வேகமாக இறங்கி அவரிடம் சென்று அமர்ந்தாள்.

 

                           அன்னையின் குரலில் ஸ்ரீதர் அவளை நிமிர்ந்து பார்த்திருக்க, அவனை பார்க்கவே இல்லை அவள். அவன் ஒருவன் அங்கிருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. வேதா அருகில் அமர்ந்திருந்தவளை அசையாமல் பார்க்க, தப்பு செய்த பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள் அவள்.

 

                           அவர் பார்வையை சந்திக்க முடியாமல் தலை தானாக குனிந்துவிட, “சாரி வேதாம்மா.. நான்.. நான்என்று அவள் திணற, வேதாகஷ்டப்படாத ஸ்ரீமாநீ எதுக்கு என்கிட்டே சாரி சொல்லணும்எனக்கு என்ன உரிமை இருக்கு.” என்று அவர் வருத்தமாக கூறிவிட

 

                         “வேதாம்மா.. ப்ளீஸ்.. சாரி..சாரிஎன்றவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது. தான் இந்த கண்ணீரில் இளகினால் இவளை அசைக்க முடியாது என்று முடிவு செய்துவிட்டார் போல, வேதா அசையவே இல்லை.

 

                     அவள் மீண்டும் அவரிடம் பேச முயற்சிக்கநீ எனக்கு சாரி சொல்லாத ஸ்ரீமாஎனக்கு அந்த உரிமையில்ல, என் ரெண்டு பிள்ளைகளும் என்னை எங்க வச்சிருக்காங்க ன்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன் இந்த கொஞ்ச நாள்ல.

                     “நீ ஏன் என்கிட்டே சொல்லிட்டு போகணும், எங்க யாரையுமே வேண்டாம்ன்னு நினைச்சு தானே போயிருக்க, அப்புறம் எப்படி என்கிட்டே சொல்லிட்டு போவான்னு நான் எதிர்பார்க்க. என் தப்புதானடா.

                   “இதோ இவனை பெத்து நல்லது கேட்டது சொல்லி கொடுத்து வளர்த்திருக்கேன்னு ரொம்ப பெருமை எனக்கு. ஆனா பாரு.. இல்ல அது தப்புன்னு என் மண்டையில அடிச்சு புரிய வச்சிருக்கான் உன் தம்பி..

                    “நான் இவனை நிச்சயமா என் புருஷனை மாதிரி தான் வளர்த்தனும் ன்னு நினைச்சேன் ஸ்ரீமா. எனக்கு அத்தனை பிடிக்கும் உன் அப்பாவை. இதுவரைக்கும் எங்கேயுமே என்னை விட்டு கொடுத்தது இல்ல அவர். நான் வாழ்ந்த வாழ்க்கை என்னன்னு என்னை தவிர யாரால சொல்ல முடியும்.

                   “அப்படியிருக்க, அந்த மனுஷனை தண்டிக்க நீங்க யாரு? என்ன குறை வச்சிட்டாரு உங்க ரெண்டு பேருக்கும். அவர் தவறின ஒரே இடம் ரஞ்சனி அக்காதான், ஆனா அதுவும் கூட மனசார செய்யல. என்னை கேட்டா நடந்த விஷயத்துல அவர் பங்கு எதுவுமே இல்ல.

                 “அவர் ஒதுங்கி என் கழுத்தில தாலி கட்டாம போயிருந்தா நிச்சயம் உன் அம்மாவை கொன்னு போட்டிருப்பார் என் மாமா. ஏன் கன்யா நீ சொல்லு, ஒருவேளை உன் அம்மாவை கொல்லட்டும்ன்னு விட்டுட்டு அவர் வேடிக்கை பார்த்திருந்தா அவரை நல்லவர் ன்னு சொல்லி இருப்பியா நீ.”

                       “சரி நீ சொல்ல வேண்டாம். ஆனா உன் அம்மாவை யோசிச்சு பாரு, அவங்ககிட்ட அவரை கொன்னுடுவேன்னு யாரும் மிரட்டியிருந்தா அவங்க என்ன பண்ணி இருப்பாங்க. என்ன செஞ்சும் அவரை காப்பாத்தணும்ன்னு தானே நினைப்பாங்க.

                     “அப்போ அவர் செஞ்சது மட்டும் எப்படி தப்புன்னு சொல்ற நீ. உன் அம்மா இதுவரைக்கும் ஒருவார்த்தை கூட அவரை பத்தி குறையா பேசினதே கிடையாது. எனக்கு தெரியும் ரஞ்சனி அக்காவை. அவங்களே ஏத்துக்கிட்ட ஒரு விஷயத்தை நீ மறுப்பியா??

                   “இதோ உன் தம்பி இவரும்கூட கிட்டத்தட்ட உன்னைமாதிரி தான். அம்மாவுக்கு நடந்த அநியாயத்துக்கு நீதி கேட்கிறாராம் அப்பாகிட்ட. நான் சொன்னேனா உன்கிட்ட, என் புருஷன் என்னை சரியா கவனிக்கல ன்னு.

                   “நீங்க ரெண்டு பேரும் நிறைய விஷயத்துல ஒரே மாதிரி இருப்பிங்க. நீங்க நடந்துகிற விதம், உங்க பேச்சு, உங்க செயல் ன்னு எல்லாமே பொருந்தி போகும். அப்போல்லாம் அவ்ளோ ஆசையா இருக்கும் எனக்கு. ஆனா இப்போ வருத்தப்படறேன் அதே விஷயத்தை நினைச்சு.

                   “அந்த மனுஷனை வாட்டி எடுக்கிறதிலேயும் ஒரே மாதிரி இருக்கீங்க நீங்க. அவரை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். ரெண்டு பேருமே வளர்ந்த பிள்ளைங்க, அவங்கவங்க தொழில்ல நல்ல நிலையில இருக்கீங்க. உலகம் புரியாத வயசும் கூட இல்லையே.

                 “அப்போ அவர்கிட்ட மட்டும் ஏன் இப்படி நடந்துக்கணும். இவன் அவர்கிட்ட சொன்னானாம், நான் மட்டும் இருந்தா தனியா போய் நிம்மதியா இருப்பேன்னு. “

                   “எப்படி நிம்மதியா இருப்ப, உன் கையில இருக்க அளவுக்கதிகமான பணம், படிப்பு, உனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாமே அவர் கொடுத்தது. உனக்கு அது எல்லாம் வேணும், அவர் கெட்டவர்ன்னு நீயே சொல்லிக்கிட்டாலும் கூட இதெல்லாம் உனக்கு வேணும். அப்புறம் உனக்கு என்ன தகுதி இருக்கு ஸ்ரீதர் அவரை குறை சொல்ல.”

                 “அவர் மகளை அவர் பார்க்கறதுக்கு உன்கிட்ட அவர் அனுமதி கேட்கணுமாநீ யாரு அவருக்கு அனுமதி கொடுக்க, ஒருவேளை உனக்கு கொடுக்க வேண்டிய சொத்து, மரியாதை அத்தனையும் உன்கிட்ட கொடுத்துட்டு அவர் அவரோட மக கூட போறேன்னு சொன்னா என்ன சொல்வ நீ.

                 “என்ன செய்ய முடியும் உன்னால, நீ உன் அம்மாவை பார்த்துக்கோ, என் மகளுக்கு யாரும் இல்ல நான் போறேன்னு அவர் சொல்ல எவ்ளோ நேரம் ஆகும். அன்னிக்காவது அவரை தடுக்க உன் தாத்தா இருந்தாரு. இன்னிக்கு நிலைமைக்கு ஆலமரம் அவரு. யாரும் அவரை நெருங்க கூட முடியாது.

                      அவரை நீ கேள்வி கேட்பியா ஸ்ரீதர்நீ அவர்கிட்ட பேசுன ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் உன்னை சரியாய் வளர்க்க ன்னு மட்டும்தான் அர்த்தம்என்று அவனை வாட்டியவர் இப்போது கன்யாவிடம் திரும்பினார்.

                      “அதென்ன ஸ்ரீமா.. எப்போ பார்த்தாலும் நீங்க எனக்கு வேண்டாம், உங்க அடையாளம் வேண்டாம். நீங்க யாரு எனக்குன்னு கேட்கிற அவரை.”

                     “ஏன் உனக்கு தெரியாதா அவர் யாருன்னு, நீ சொல்ற மாதிரி அவருக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு வச்சுப்போம். உன் அப்பா யாரு?? உன் அம்மா யாரை கைகாட்டினாங்க உனக்கு.?

                    “அவர் கூட வாழ முடியாது ன்னு சொன்னது உன் அம்மாவோட முடிவு. அதுக்குதான் அவர் மரியாதை கொடுத்தாரு. உன் அம்மாவோட முடிவு அவங்களோட உரிமை. ஆனா உன் முடிவு உன்னோட உரிமை கிடையாது.

                    “நீ என்ன சொல்லிக்கிட்டாலும் நீ எங்க மக இல்லைன்னு ஆகிடாது. உனக்கு ரெண்டு வயசு இருக்கும்போது என்னை வேதாம்மான்னு கூப்பிட ஆரம்பிச்ச நீ. அன்னிக்கு வந்த உறவு இது. சொல்லப்போனா என்னை அம்மான்னு முதல் முதல்ல கூப்பிட்டவளும் கூட நீதான்.

 

                 “உன்னை என் மகளா நான் நினைச்சதுல என்ன தப்பு. எனக்கு உரிமை இல்லன்னு சொல்வியா நீ. அவர் வேண்டாம் ன்னா அப்போ நான் மட்டும் எப்படி உனக்கு உரிமையாவேன்.”

                 “அவர் வேண்டாம் ன்னு சொல்ற நீ, ஏன் அன்னிக்கு அப்படி துடிச்சிட்டு ஓடிவந்த. சாகட்டும் ன்னு விட வேண்டியது தானேஎன்று அவள் கையை பிடித்து அவர் உலுக்க, “வேதாம்மா..” என்று அவரை கட்டிக் கொண்டவள் விக்கி விக்கி அழுதாள். மொத்த கண்ணீரும் அன்றே வடிந்து விடும் போல் ஒரு அழுகை அவளுக்கு.

              ஸ்ரீதர் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. கன்யாவின் ஒதுக்கம் எதனால் வந்தது என்று தெரிந்தவன் என்பதைவிட காரணகர்த்தாவே அவன் அல்லவா. அந்த குற்ற உணர்வு கொன்று கொண்டிருந்தது அவனை. தன் அன்னை இதனை தெளிவாக இருக்க, தான் அனைத்தையும் சொதப்பி வைத்திருப்பதை உணர்ந்தவனுக்கும் கண்களில் கண்ணீர் பெருக தலையை குனிந்து கொண்டவன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.

                    வேதவதிக்குமே கண்ணீர் தான். பிள்ளைகளின் அழுகை வதைத்தாலும், கணவரின் நிலை அவரை பேச வைத்துவிட்டது. அந்த மனிதர் ஒடுங்கி போனால், மூவருமே ஒன்றுமில்லாமல் போவோம் என்று பிள்ளைகளுக்கு உணர்த்துவது முக்கியமாக பட்டது அவருக்கு. இப்போது கண்ணீர் விட்டாலும் இனியாவது இவர்கள் அவரை வார்த்தைகளால் கிழிக்காமல் இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு அமைதியாகவே அமர்ந்து இருந்தார்.

                                                  வெகுநேரமாகியும் கன்யாவின் கண்ணீர் நிற்காமல் போகவே அவளை அதட்டி தன்னிடமிருந்து பிரித்து அமரத்தியவர்எல்லாத்துலேயும் பிடிவாதம் தான்.நான் சொல்ற எதையுமே கேட்கறதில்லை ன்னு முடிவு பண்ணி இருக்கியா கன்யாஎன்று அதட்ட, பாவமாக அவரை பார்த்தாள் அவர்.

 

                          சோஃபாவில் இருந்து எழுந்து கொண்டவர் அவளை கைபிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு, ஸ்ரீதரிடம்உனக்கு தனியா சொல்லனுமா ஸ்ரீ. எழுந்து முகத்தை கழுவு.” என்றுவிட்டு அவள் அறைக்கு சென்றார்அவள் அறை கட்டிலில் அமர்ந்து கொண்டவர்முகமே சரியில்ல, குளிச்சிட்டு இந்த ட்ரெஸ்ஸ மாத்துஎன்றுவிட்டார்.

 

                       கன்யா எதையும் யோசிக்கும் நிலையில் இல்லாததால், அவர் சொன்னபடி குளித்து முடித்தவள் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு வந்து நிற்க, “புடவை கட்டு கன்யா. நாம கோவிலுக்கு போறோம்என்று திருப்பி அனுப்பினார் அவளை.

 

                     அவள் ஒரு இளஞ்சிவப்பு வண்ண சேலையில் அழகாக வந்து நிற்க, கண்ணில் இன்னும் கண்ணீர் தடங்கள் மிச்சம் இருந்தது. அவள் முகத்தை சரி செய்து விட்டவர் அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தார். ஆனால் அவர் சொல்லாமலே கன்யா அவரிடம் ஒட்டிக் கொண்டாள்.

 

                      அவர் மடியில் அமைதியாக படுத்துக் கொண்டாள் அவள். இம்முறை யாரை பற்றியும் கவலைப்படுவதாக இல்லை அவள். அவன் ஒருவனுக்காக நான் இவர்களை ஏன் வருத்த வேண்டும் என்று தோன்றிவிட, தானாகவே அவரின் அரவணைப்பில் ஒடுங்கிக்கொண்டாள் அவள்.

 

                       இதற்குள் ஸ்ரீதரும் முகம் கழுவி வந்து அமர, அன்னம் இவர்கள் மூவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுக்க, மூவரும் குடித்து முடிக்கவும், ஷ்யாமின் குடும்பம் அந்த வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது

 

                       வேதவதி அவர்களை வரவேற்று அமர வைத்தவர் கன்யாவை முறைக்க, அப்போதுதான் அவர்களை வாங்க என்று அழைத்தாள் அவள். அவளுக்கு புரியவே இல்லை அவர்களின் இந்த திடீர் வருகைக்கான காரணம். அவள் மனமும் முழுதாக குழம்பி இருக்க,அமைதியாகவே அமர்ந்திருந்தாள் அவள்.

 

                     ஷ்யாமின் வீட்டுப்பெண்களும், அவனின் தங்கை அனுபமாவும் வந்திருக்க, ஆண்கள் யாரும் வரவில்லை. தேவகி கன்யாவை அழைத்து அவர் அருகில் அமர்த்திக் கொண்டவர்என்னம்மா மருமகளேஎப்படி இருக்க, இந்த பாட்டிய நியாபகம் இருக்காஎன்று சிரித்துக் கொண்டே கேட்க, முழித்தாள் அவள்.

 

                     வேதவதிதான் சமாளித்துஉங்களை எப்படி மறப்பாம்மா. ட்ராவல் ஒத்துக்கல போல. ஆள் டல்லா இருக்கா..” என்றவர் மகளை அர்த்தமாக பார்க்க, அவர் பார்வையை புரிந்து கொண்டவள் முயன்று அவர்கள் பேச்சில் கவனம் வைத்தாள்.

                                    சிறிது நேரம் பேச்சில் கழிய, தேவகி வேதவதியிடம் பேசிக் கொண்டிருக்க, இப்போது பத்மினி கன்யாவின் கையை பிடித்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்துவிட்டார். வலக்கையால் அவள் தாடையை பிடித்து கொண்டுஉன்னை முதல்முறை கோவில்ல பார்த்தப்போவே ஏதோ ஒரு எண்ணம் மனசெல்லாம். அடுத்து நடந்த விஷயங்கள்ல உங்கிட்ட பேசக்கூட முடியல. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோன்னு மனசை தேத்திக்கிட்டேன். ஆனா கடவுள் உன்னை எனக்கே மருமகளா கொடுத்திட்டாரு.” என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட, அவரை அதிசயமாக பார்த்தாள் கன்யா.

 

                     அதற்குள் வசுமதிகன்யா.. ஐஸ் பிடிக்குமா உனக்குஎன்று கேட்க

 

          அவளை முறைத்த பத்மினிஎன்ன ஐஸ் வைக்கிறாங்க?” என்று கேட்கவும், “ம்ம்.. நடத்துங்க அத்தை, நியாபகம் வச்சிக்கோங்க கன்யாவை உங்ககிட்ட காட்டியதே நாந்தான். எனக்கு நீங்க தேங்க்ஸ் சொல்லணும்.. இப்படி முறைக்கிறீங்கஎன்று விளையாட்டாக கேட்க, பத்மினி அவள் காதை திருகியவர்உனக்கு வாய் அதிகமா போச்சுவீட்டுக்கு வாஎன்று முறைப்பாக சொன்னாலும் அந்த குரலில் துளிகூட கோபமில்லை.

 

                       வேதவதிக்கு இந்த மாமியார் மருமகளை கண்டதும், தன் மகள் வாழ்வை பற்றிய கவலை குறைந்தது போல் இருந்தது. அவர்கள் யாரிடமும் எந்த ஒரு அலட்சியமோ, பிடித்தஇன்மையோ வெளிப்பட வில்லை என்பதை கண்டுகொண்டவர் அதன் பின்புதான் சற்று நிம்மதியானார்.

 

                       இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே தேவகிஏன் பத்துபுடவைய நீ கட்டிக்கவா எடுத்த..” என்று நக்கலாக கேட்க, தலையில் அடித்துக் கொண்ட பத்மினிமறந்துட்டேன் அத்தைஎன்று சிரித்துக் கொண்டே, பக்கத்திலிருந்த ஒரு பெரிய கடையின் கவரை அவளிடம் நீட்டினார்.

 

                     அவள் வேதவதியை பார்க்க, அவர் தலையசைக்கவும் வாங்கிக் கொண்டாள். பத்மினி அந்த கவரில் இருந்த பூவை எடுத்து அவளுக்கு வைத்துவிட, வேதவதி பூஜையறையிலிருந்து குங்குமம் எடுத்து வந்து கொடுக்கவும் அதையும் அவளுக்கு வைத்து விட்டவர் அவள் நெற்றியில் முத்தமிட சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர் பெண்கள்.

 

                     வேதவதி கண்களை துடைத்துக் கொண்டு நிமிர, தேவகிதான்நல்ல விஷயம் நடக்கும்போது ஏன் கலங்குற வேதா. எல்லாம் நல்லதாவே நடக்கும், நிம்மதியா இருஎன்று அசரீரியாக உரைக்க, வேதவதி புன்னகையுடன் தலையசைத்தார்.

                                         அவர்கள் உள்ளே நுழையும்போதுவாங்கஎன்று அழைத்தவன் தான் ஸ்ரீதர். அதன்பின் சிறிது நேரம் நின்றவன் போன் ஒலிக்கவும் எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டான். போன் பேசி முடித்தும் கூட, அந்த அறையிலிருந்து வெளியே வரவில்லை.

 

                அனுவின் முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் தைரியம் அவனுக்கு இல்லாமல் போக, அதன் காரணமாகவே ஒளிந்து கொண்டான். ஆனால் இவன் தவிப்புக்கு காரணமானவளோ இவனை பார்த்த நொடி முகத்தில் அதிர்ச்சியை காட்டியது தான். அதன்பின் தெளிந்து கொண்டாள்.

 

                   அவன் யாரென்றே தெரியாதது போல் ஒரு பார்வையுடன் அவனை கடந்துவிட்டவள் தன் அண்ணியுடன் ஒட்டிக் கொண்டாள். கன்யாவிடம் கேட்க அவளுக்கு நிறைய விஷயங்கள் இருக்க அவளும், வசுவும் நன்றாக ஒட்டிக் கொண்டனர் கன்யாவுடன்.

 

                   ஸ்ரீதருக்கு தான் தன் நிலையை எண்ணி சுவற்றில் முட்டிக் கொள்ளும் நிலை. தன் அவசரபுத்தியால் அனைத்தையும் தொலைத்து விட்டோமோ என்று அச்சமாக இருந்தது அவனுக்கு. அவனின் அனு சிரித்து பேசி சந்தோஷமாக காட்டிக் கொண்டாலும், அவள் சிரிப்பு கண்களை எட்டவே இல்லை என்று எட்டி நின்று பார்த்தாலும் கூட புரிந்து கொள்ள முடிந்தது அவனால்.

 

                   கண்களின் கீழ் புதிதாக தென்பட்ட கருவளையங்கள் அவள் நிலையை தெளிவாக கூறிவிட, தலை வேதனையாக போனது அவனுக்கு. அவளை பார்க்காத போது குறைந்திருந்த நெஞ்சின் பாரம் இப்போது அவளை மீண்டும் காணவும் நெஞ்சில் ஏறிக் கொண்டது.

 

                 அவர்கள் பேசி முடித்து கிளம்பும்வரையும் கூட அவர்கள் எதிரே வரவே இல்லை அவன். அவள் தாங்க மாட்டாள் என்பது வாராய் அவன் அறிவுக்கு புரிய, முடிந்தவரை அவள் கண்ணில் படாமல் ஒதுங்கியே இருந்தான். கிளம்பும்போது வெளியில் வந்தவன் அவர்களை வழியனுப்ப மட்டுமே அவள் கண்ணில் பட்டான்.

                                                    அத்தனை பேரின் மனதும் நிறைந்து இருக்க, ஆதி நாராயணன் கட்சி விஷயமாக  டெல்லிக்கு சென்று இருக்கவும், பெண்களாக  முடித்துக் கொண்டனர். அவர் வந்து சேர்ந்தவுடன் மற்றதை பேசிக் கொள்வது என ஏற்கனவே ஷ்யாம் அவர்களிடம் திட்டம் போட்டுக் கொடுத்திருக்க, அவன் திட்டபடியே நடந்து கொண்டிருந்தது அனைத்தும்.

 

                       அவள் அமெரிக்காவில் இருக்கும்போதே ஆதிநாராயணனிடமும், அவன் தந்தையிடமும் பேசி முடித்திருந்தவன் இருவரையும் சந்திக்கவும் வைத்திருக்க, இருவருக்குமே திருப்திதான். நாராயணனின் பயணம் கட்சி சம்பந்தப்பட்டது என்பதால் தவிர்க்க முடியாமல் கிளம்பி இருந்தார் அவர்.

 

                    அவர் வருகைக்காக தான் இப்போது அத்தனை பேரின் காத்திருப்பும்…….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement