Advertisement

அத்தியாயம் 2

 

                  சென்னை நுங்கம்பாக்கம்  ஏரியாவில் அமைந்திருந்தது அந்த தனி வீடு. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் என்றாலும், அந்த வீடு அமைந்த பகுதி அத்தனை அமைதியாக இருக்க அங்கு இருந்த  அத்தனையும் தனித்தனி வீடுகள்.

                     அந்த பெரிய வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த தன் அன்னையின் படத்திற்கு முன்பாக நின்றிருந்தாள் ஸ்ரீகன்யா. அவள் வாங்கியிருந்த விருதுகள் அந்த படத்திற்கு கீழே வரிசை கட்டி இருக்க, முழுதாக இரு நிமிடங்கள் கண்மூடி நின்றுவிட்டு அதன்பிறகே அங்கிருந்து நகர்ந்தாள்.

                        அவளுக்கான உணவை அதற்குள் அவள் அன்னையை போன்றவரான அன்னம்மா எடுத்து வைத்திருக்க,  அவரை பார்த்து புன்னகைத்துவிட்டு அவள் அமர, அவளுக்கு பரிமாறினார் அவர். உணவை முடித்து தன் பள்ளிக்கு கிளம்பினாள் அவள்.

                    பள்ளி என்றால் இசைக்கான பள்ளி, ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயா. அவள் அன்னை அவளுக்காக தொடங்கிய கனவுகூடம் அது.அவர் அவரின் சொந்த வாழ்வின் கசப்புகளை கடந்து வர உற்ற துணையாக இருந்த இடம் இந்த சங்கீத வித்யாலயா.

                  இப்போது அதன் பொறுப்பு ஸ்ரீகன்யாவிடம் இருக்க, அவளிற்கு கீழ் ஏழு ஆசிரியர்களுடன் இயங்கி கொண்டிருந்தது அந்த பள்ளி. சுமார் எண்பது மாணவர்கள் அந்த பள்ளியில் இசை பயில அவர்களுக்கென்று ஒரு பெயர் இருந்தது. அந்த பள்ளியை சிறப்பாக கொண்டு வருவது மட்டுமே தன் கனவாக கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.

 

                    அவள் தாயும், இசையும் தவிர அந்த பள்ளி ஒன்று மட்டுமே அவள் அடையாளம். ஸ்ரீரஞ்சனியின் மகள் என்று பெருமையாக சொல்பவள் இதுவரை எங்கும் அவள் தந்தையின் பெயரை சொன்னதே இல்லை. இத்தனைக்கும் தந்தையின் பெயர் தெரியாதவளும் அல்ல.

           அவள் தாய்க்கு இருந்த அதே வைராக்கியம் மட்டுமே அவளுக்கு துணையாக நிற்க, யாரையும் நெருங்க விட்டதில்லை அவள். இன்றும் அவளை அணைத்து கொள்ள அவள் தந்தையும், உறவுகளும் தயாராக இருந்தாலும், தன் அன்னை மறுத்த உறவுகள் தனக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக நின்றாள் அவள்.

                   அவள் தாய் ஸ்ரீரஞ்சனி அந்த காலத்தில் சங்கீதத்தில் சிறந்து விளங்க அவர் அழகின் மேல் மையல் கொண்டு அவரை சுற்றிவந்தவர் ஆதிநாராயணன். அரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட குடும்பத்தின் ஒரே வாரிசு அவர்.

              ரஞ்சனியின் அழகின் மீதும், அவர் குரலின் மீதும் இருந்த ஈர்ப்பால் ரஞ்சனியை விரும்பியவர், ஒரு கட்டத்தில் ரஞ்சனியையும் தன் காதலால் வென்றிருந்தார். இருவரும் காதலில் திளைத்து கொண்டிருக்க விஷயம் அவர் தந்தையின் காதுக்கு செல்லவும் நேரடியாகவே அழைத்து மிரட்டபட்டார் ரஞ்சனி.

                  நாராயணன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அத்தனையும் தாங்கி கொண்டு அவர் நிற்க, ஆதி நாராயணனும் அவரை விட்டுவிடவில்லை. இருவரும் கேரளாவில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து குடும்பம் நடத்த, அவர்கள் இல்லறம் வெறும் பதினைந்து நாட்கள் மட்டுமே.

 

              ஆதி நாராயணனின் தந்தை திருவேங்கடம் இவர்களை நெருங்கி இருக்க, ஜாதிக்கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த அவருக்கு இவர்களின் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகவும், ரஞ்சனியை கொண்டே நாராயணனை மிரட்டியவர் இருவரையும் சென்னைக்கு இழுத்து வந்தார் கிட்டத்தட்ட.

                  ரஞ்சனியை கடத்தி வைத்து மிரட்டியவர் நாராயணனை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தார். அந்த காலத்தில் இப்போது இருக்கும் அளவுக்கு தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி பெற்று இருக்காததால், இவர்கள் திருமணமும், அதை தொடர்ந்த பிரிவும் யாருக்கும் தெரியாமலே போனது.

                 திருவேங்கடம் அவர் பிரிவில் ஒரு பெரிய மனிதரின் பெண்ணான வேதவதியை நாராயணனுக்கு திருமணம் செய்து வைத்து உலகறிய அறிவித்த பின்னரே ரஞ்சனியை விடுவித்தார். ரஞ்சனியின் உயிருக்காக திருமணம் செய்வதாக தன்னை தேற்றிக் கொண்ட நாராயணன் வேதவதியை மணந்து இருக்க, ரஞ்சனியின் வயிற்றில் கருவாக கன்யா தோன்றி இருந்தாள்.

                 திருவேங்கடத்திற்கு அவர் ஜாதி மட்டுமே முக்கியமாகப்பட, வேறு எதையும் சிந்திக்கவில்லை அவர். ஆனால் அதற்கு பிறகு அவர் ரஞ்சனியை தொந்தரவு செய்யவும் இல்லை. அவருக்கு வேண்டியது மகன் தன் ஜாதிப்பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே. திருமணம் இப்போது நடந்துவிடவும், இவர் மகனுடன் ரஞ்சனி சேர்ந்து வாழ்ந்தால் கூட ஒன்றுமில்லை.

                ரஞ்சனியிடமும் இதையே சொல்லி இருந்தார் அவர். ஆனால் மிகவும் மோசமான வார்த்தைகளில். நாராயணன் பொய்த்து போனதே அவருக்கு அதிர்ச்சி என்றால் திருவேங்கடத்தின் வார்த்தைகள் அருவருப்பை கொடுக்க அத்தனை கோபமும் நாராயணனிடம் திரும்பியது.

                 அவரிடம் நியாயம் கேட்க, உன் உயிருக்காக என்றவரிடம் ரஞ்சனி கேட்ட ஒரே கேள்விஇதற்கு இருவரும் சேர்ந்தே செத்திருக்கலாமேஎன்பது தான். நாராயணன் எவ்வளவோ எடுத்து கூறியும் கூட ரஞ்சனியால் அவர் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் போக, அதன்பிறகு அவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை அவர்.

                  இது எல்லாம் நடந்து முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகே தான் கருவுற்ற விஷயம் ரஞ்சனிக்கு தெரியவர, தன் பிள்ளைக்காக மட்டுமே தன் வாழ்வு என்று முடிவெடுத்துக் கொண்டவர் அவளை சுற்றியே தன் வட்டத்தை போட்டுக் கொண்டார்.

                  இவர் கருவுற்ற செய்தி கேட்டு தேடி வந்த நாராயணனின் முகத்தை கூட ஏறிட்டு பார்க்காமல் அவரை திருப்பி அனுப்பியவர் தனிமையை மட்டுமே துணையாக கொண்டு கதறி தீர்ப்பார் எப்போதும்.

                அப்போது அவர் வீட்டில் வேலைக்காக இருந்த அன்னம் அவருக்கு உற்ற துணையாக மாறிப்போக கடவுளின் துணை மட்டுமே கொண்டு மகளை பெற்றெடுத்தவர் கையில் இருந்த பணத்தின் மூலம் அந்த பள்ளியை தொடங்கி அதை வைத்தே தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டார்.

                   நாராயணன் எத்தனையோ முறை முயன்றும் கூட, ஸ்ரீரஞ்சனி அவரோடான உறவை நீட்டிக்க விரும்பவே இல்லை. அவர் தந்தையின் வார்த்தைகள் சூட்டுகோலாக இறங்கி இருக்க, அப்படி ஒரு வாழ்வு வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார் அவர். மேலும் நாராயணன் வேதவதியின் வாழ்வாவது நன்றாக இருக்கட்டும் என்பது அவர் மனதின் எண்ணமாக இருந்தது.

               திருவேங்கடத்தின் செயலால் துவண்டு இருந்தவர் நினைத்திருந்தால் நாராயணனை வைத்தே அவர் மனைவி என்று உலகுக்கு தெரியப்படுத்தி இருக்க முடியும். நாராயணனும் ரஞ்சனியின் கண்பார்வைக்காகவே செய்ய கூடியவர் தான், ஆனால் என்ன பயன் இதனால் என்று தோன்றிவிட்டது ரஞ்சனிக்கு.

       எனவே நாராயணன் வேதவதியின் வாழ்வை கருத்தில் கொண்டவர் தான் முழுவதுமாகவே விலகி நின்றுவிட்டார்  என்றுதான் சொல்ல வேண்டும்.ஆரம்ப காலங்களில் திருவேங்கடத்தின் மீதான பயம் வேறு இருக்க தன் மகளின் பாதுகாப்புக்காகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.            

                  இதில் ஸ்ரீ ரஞ்சனியின் கையை மீறி நடந்த ஒரு செயல், கன்யாவின் தந்தையாக ஆதிநாராயணனின் பெயரை அவர் பதிந்து கொண்டது. ஆம், ரஞ்சனி விரட்டியபோதும் மனைவி, மகளின் மீது இருந்த பாசத்தால் அவர்களை தன் பார்வையிலேயே வைத்திருந்தவர் ரஞ்சனி மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த பத்து நிமிடத்தில் தானும் அங்கு இருந்தார்.

               அனைத்தையும் அவரே பார்த்திருக்க, தன் மகளையும் அவரே வாங்கி கொண்டிருந்தார். இது அனைத்தும் ரஞ்சனி விழிப்பதற்குள் நடந்து முடிந்திருக்க, அவரால் ஏதும் செய்ய முடியாமல் போனது.

               ரஞ்சனியின் விஷயத்தில் ஏமாந்திருந்த நாராயணன் மகள் விஷயத்தில் விழித்துக் கொள்ள தன் மகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தன்னை உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டி வைத்திருக்க திருவேங்கடத்தால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாமல் போனது.

 

              ஒரு கட்டத்தில் ரஞ்சனி தன்னை ஏற்கவேமாட்டாள் என்பது புரிந்துபோன நாராயணன் வேதவதியுடனான தன் வாழ்வை தொடங்கி இருக்க, அவருக்கு உண்மையாகவே இருந்தார் நாராயணன். ரஞ்சனியை பற்றிய அனைத்து விஷயங்களையும் அவரிடம் கூறி இருக்க மனம் வலித்தாலும், தன் கணவரின் நிலையிலிருந்து யோசித்து அதை ஜீரணிக்க பழகிக் கொண்டார் வேதவதி.

            இவர்கள் திருமண வாழ்வு வேதவதியால் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டது. அவர் சற்று பிசகி இருந்தாலும் இன்று நாராயணன் சமூகத்தில் ஒன்றுமில்லாமல் போயிருப்பார். வேதவதி கணவரை தாங்கி கொள்ள அவரின் விருப்பு வெறுப்புகள் அனைத்தும் அவருடையதாக மாறிப்போனது. ரஞ்சனியின் நிலையால் குற்றவுணர்ச்சியில் துடித்த நாராயணனை மெல்ல மெல்ல வெளிக்கொணர்ந்தார் வேதவதி.

                    இதில் காரணமில்லாமல் தண்டிக்கப்பட்டது ரஞ்சனி மட்டுமே. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்திருக்க, இப்போது காதல் வாழ்வும் தொடங்கிய வேகத்தில் முடிந்திருக்க, மனிதர்களின் மீதான நம்பிக்கையையே இழந்திருந்தார் அவர்.

             மகளுக்கு ஒரு குறையும் வராமல் அவரை வளர்த்தவர் எப்போதும் அவள் தந்தையை பற்றி அவளிடம் குறையாக பேசியதே இல்லை. ஆனால் ஒவ்வொருமுறை நாராயணன் வந்து செல்லும்போதும், தன் அன்னை கோபப்படுவதையும், அவர் சென்ற பிறகு கண்ணீரில் கரைவதையும் கண்டவள் தானாகவே அவரிடம் இருந்து விலகி இருந்தாள்.

 

          ரஞ்சனியும் கன்யா தந்தையிடம் இருந்து விலகி இருப்பதையே விரும்பியவர், அவளிடம் அவள் தந்தையை பற்றி பெரிதாக ஏதும் பேசிக்கொண்டதில்லை. திருவேங்கடத்தின் நிழல் கூட தன் மகளின் மீது படவேண்டாம் என்றே நினைத்தார் ரஞ்சனி. தன் மகளின் வாழ்வில் எந்தவொரு இடத்திலும் அவள் திருவேங்கடத்தின் குடும்ப  வாரிசாக அடையாளம் காணப்படுவதையோ, தன்னை நாராயணனின் மனைவி என்று தெரியப்படுத்திக் கொள்வதையோ அவர் விரும்பவே இல்லை.           

               அவர் இறக்கும்வரை அவர் நாராயணனை நெருங்கவே இல்லை. அவர் இறந்தபின்பே நாராயணன் அவரை தன் மனைவியாக முழுமையாக இந்த உலகுக்கு அறிமுகம் செய்து கொண்டார். அதுவரை இவர்களின் உறவை பற்றி அரசால் புரசலாக ஏதும் பேச்சு இருந்தாலும், அவர் இறப்பில் அவருக்கான இறுதி காரியங்களை கணவனாக அவரே செய்து முடித்தார்.

                  கன்யாவின் பொறுப்பையும் அவரே எடுத்துக் கொள்ள முயற்சிக்க, அவள் அதற்கு தயாராகவே இல்லை. அவள் தாயின் இறுதி காரியங்களுக்கு பிறகு அவர்களை விலக்கிவிட்டவள் அவர்களோடு எந்த தொடர்பும் வைத்துக் கொண்டதே இல்லை.

          இத்தனைக்கும் வேதவதி அவளிடம் உண்மையாகவே அன்பு செலுத்த அவரை கூட ஏற்றுக்கொள்ளவில்லை அவள். தன் இசையால் தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டவள் மந்திரியின் மகளாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை இதுவரை.

              ஆம், தந்தையை தொடர்ந்து இப்போது ஆதிநாராயணன் தொழில்துறை அமைச்சர். தன் சொந்த வாழ்வின் சிக்கல்களை மறக்க அவர் பொதுவாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள, விளைவு அவருக்கு கிடைத்த நற்பெயரால் இன்று அமைச்சர் ஆதி நாராயணன் ஆகி இருந்தார்

                “அரசியல் வேண்டாம்என்றவர் ஒருகட்டத்தில் தன் தந்தையை அடக்கி வைக்கவே அரசியலை கையில் எடுத்துக் கொண்டார். அரசியலை தந்தையிடம் கற்றுக்கொண்டு ஒருகட்டத்தில் அவரையே செல்லாக்காசாக்கி வீட்டில் முடக்கியவர் தந்தையின் செயல்களுக்கு பதில் கொடுக்க தொடங்கி இருந்தார்.      

                      அதன் ஆரம்பம் தான் ரஞ்சனிக்கு அவர் செய்த இறுதி காரியங்கள். ஸ்ரீரஞ்சனியின் இறப்பில் தன்னை முன்னிறுத்தி கொண்டவர், ஸ்ரீகன்யா வையும் மகளாக அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்க திருவேங்கடத்திற்கு அவரது செயல்கள் பிடித்தமில்லாமல் போனாலும் எதுவும் செய்ய முடியாத நிலைதான்.

           ஆனால், ஸ்ரீகன்யாவிடம் இது எதுவுமே எடுபடாமல் போக, இன்றும் அவள் முன்னால் பாசத்திற்கு ஏங்கி நிற்கும் குழந்தை மட்டுமே அவர். முழுவதும் தன் மனைவியை கொண்டே பிறந்திருந்த மகளின் மீது மனிதர் உயிரையே வைத்திருக்க, அவளோ தாயின் வழியாகவே இவர்கள் கதையை கேட்டிருந்தவள் தாயை வேண்டாம் என்று சொன்ன இவர்கள் உறவே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

                    இன்றுவரை நாராயணனிடம் நின்றுகூட பேசியது இல்லை அவள். அவளின் இசைநிகழ்ச்சிகளை அவ்வபோது அமைச்சர் என்ற போர்வையில் ஒளிந்து முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பது மட்டுமே அவரின் ஒரே ஆறுதல். ஆனால் ஸ்ரீகன்யாவின் மனதில் தன் அன்னை பட்ட துன்பங்கள் அப்படியே இருக்க, எதற்கும் தயாராக இல்லை அவள்.

                        

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                       

Advertisement