Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 18

 

                          ஆதி நாராயணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு உடல் நலம் பெற்றிருந்தார் அவர். அப்போதும் கூட அவர் உடல்நிலை குறித்து பல அறிவுறுத்தல்களை மருத்துவர்கள் வழங்கி இருக்க, அதன் பொருட்டே இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருக்கிறார்.

                          வேதா உடனிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள, அவர் உடல்நிலை மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருந்தது. திருவேங்கடத்திடம் விஷயம் சொல்லி இருக்க, வருத்தம்தான் அவருக்கும். அமைதியாக கண்ணீர் விட்டவர் பார்த்துக் கொள்ளுமாறு பேரனிடம் கூற அவரின் இந்த நிலைக்கே நாந்தான் காரணம்  என்று இன்னமும் மருகிப் போனான் அவன்.

                           வேதநாயகி அவனிடம் பேசி நான்கு நாட்கள் ஆகி இருந்தது. மருத்துவமனையில் இருந்தவர் கணவரின் உடல்நிலை குறித்து தெரிந்து கொண்டதும் சற்று தேறி கொண்டார். அவர் கொஞ்சம் தெளிவானதும் ஸ்ரீதரிடம் தன் விசாரணையை தொடங்கிவிட, அவர் கேட்ட முதல் கேள்விஅப்பாகிட்ட என்ன பேசின ஸ்ரீஎன்பதுதான்.

                          அவனும் ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்தவன் இப்போது தாய் கேட்கவும், நடந்த அத்தனை விஷயங்களையும் அவரிடம் கூறி விட்டான் ஸ்ரீதர். அவன் கூறியது அனைத்தையும் கேட்டவர் வாழ்வில் முதல்முறையாக அவனை கைநீட்டி அறைந்திருந்தார். அவன் அதிர்ந்து நிற்கும் போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டவர் அதன் பிறகு அவனிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.

 

                              அவனாக பேச முற்பட்டபோதும் ஒரு வெற்றுப் பார்வையுடன் கடந்து விடுகிறார் வேதவதி. அவரின் புறக்கணிப்பில் தான் முழுவதுமாக உடைந்தான் ஸ்ரீதர். மேலும் மருத்துவமனையில் இருந்தவரை உடனிருந்து அவரை கவனித்துக் கொண்டது மொத்தமும் கன்யா தான்.

                             அவரின் உணவு முதல் மருந்து மாத்திரைகள், உறக்கம் என்று அத்தனையும் கவனித்துக் கொண்டவள்  ஆதி நாராயணனிடம் நெருங்க முயற்சிக்கவில்லை. எப்போதாவது அவர் உறங்கி கொண்டிருந்தால் அவர் அருகில் அவர் கையை பிடித்தபடி அமர்ந்திருப்பாள். அவர் விழித்திருக்கும் நேரங்களில் அவரின் அருகில் கூட செல்ல மாட்டாள்.

                          அந்த அறையில் அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பதோடு சரி. வேதாவுக்கு அவளின் ஒதுக்கம் கவலையை கொடுத்தாலும், தந்தைக்கு மகள் அருகில் இருப்பதே போதுமானதாக இருந்தது. அவள் தன் பார்வையில் இருக்கிறாள் தனக்கு ஒன்று என்றதும் தன் மகள் தன்னை விட்டுவிட வில்லை என்ற எண்ணமே போதுமானதாக இருந்தது அந்த தந்தைக்கு.

                          ஸ்ரீதரின் கண்களிலும் அவ்வபோது கன்யா தந்தையுடன் அமர்ந்திருப்பது பட்டாலும், ஏனோ இப்போது அது பெரியதாக தோன்றவில்லை அவனுக்கு. மருத்துவமனையில் இருக்கும்வரை அங்கிருந்து நகராமல் இருந்தவள் வீட்டிற்கு கிளம்பும்போது எத்தனை முறை வேதவதி அழைத்தும் உடன்வர வில்லை.

                         திடமாக மறுத்துவிட்டவள் மருத்துவமனையோடே கிளம்பி இருந்தாள். ஆனால் தினமும் வேதாவுக்கு அழைத்து அவர்களின் நலம் குறித்து தவறாமல் கேட்டுக் கொள்வாள். அவள் உடன் வராதது ஸ்ரீதருக்கு ஆச்சரியம் தான். இம்முறை நிச்சயம் அவள் தங்களுடன் வருவாள் என்று அவன் நினைத்திருக்க, அவன் நினைப்பை பொய்யாக்கி சென்று இருந்தாள் அவள்.

 

                      அவள் மீது இருந்த கோபங்கள் எல்லாம் இப்போது சற்றே குறைந்திருக்க, முற்றிலும் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன். தான் மாறாவிட்டால் தன் அன்னையே தன்னை வெறுத்து விடுவார் என்பது வரை அவனுக்கு புரிந்திருக்க, தந்தையின் உடல்நிலையும், அவள் மீதான அவரின் அன்பும் அவனை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டிருந்தது.

                        அவளை பற்றிய அவன் தாத்தாவின் போதனைகளை சில நாட்களாக ஒதுக்கிவைத்து விட்டவன் இப்போதெல்லாம் தன் கண்களால் அவளை காண தொடங்கி இருந்தான். அதன் விளைவாக அவளின் குணம் ஓரளவு பிடிபட்டிருக்க, தன் எண்ணங்கள் எத்தனை தவறானவை என்று புரிய ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

                         இவர்களை இப்படி தன்னையே சிந்திக்க வைத்தவளோ, எந்த யோசனையும் இல்லாமல் வானத்தை வெறித்துக் கொண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் அமர்ந்திருந்தாள். மாலைநேர இளவெயில் இதமாக தீண்ட, அவள் சிந்தை மொத்தமும் ஷியாம் கிருஷ்ணா தான்.

                            இரண்டு நாட்களாக ஓயாமல் அழைத்துக் கொண்டிருக்கிறான் அவளுக்கு. அவனின் அழைப்பை ஏற்காதவள் முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டிருக்கிறாள் அவனை. அன்று மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது முட்டிக் கொண்டது இருவருக்கும்.

                             அவள் தந்தையிடம் பேசிவிட்டு வெளியில் வந்தும் கூட, அவன் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னிலே உழன்று கொண்டிருந்தவள் அவன் கவனித்து என்னவென்று கேட்கவும் அவனிடம் அத்தனை ஆத்திரத்தையும் கொட்டிவிட்டாள்.

                                  அன்று நாராயணனிடம் பேசி முடித்து விட்டு வந்த கன்யாவுக்கு ஷ்யாமுடன் தனிமை கிடைக்காமல் போக, அவன் வீட்டிற்கு கிளம்பும் சமயத்தில்தான் அவளையும் உடன்  அழைத்தான். அவளுக்கும் வீட்டிற்கு சென்று வர வேண்டி இருந்ததால் வேதாவிடம் கூறிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

 

                   ஆனால் முகத்தில் தான் தெளிவே இல்லை. ஏதோ யோசனையிலேயே அவள் இருக்க, ஷ்யாம் அவளிடம்என்ன கன்யா?? என்ன ஆச்சு..இப்போ ? அப்பா நல்லா இருக்காங்களே..” என்று ஆரம்பிக்க

                  “ம்ம்என்று தலையசைத்தவள் அமைதியாகவே இருக்கஎன்ன யோசிக்கிறஎன்று கேட்டுவிட்டான் அவன்.

                   “தெரியல.. ஆனா ஏதோ சரி இல்ல என்கிட்டே.. இதுவரைக்கும் எனக்கான முடிவுகளை நானே எடுத்து தான் பழக்கம் ஷ்யாம் எனக்கு…” என்று மொட்டையாக  அவள் கூறினாலும், அருகில் இருந்தவனுக்கு புரிந்தது இது எதற்காக என்று.

                 புன்னகைத்துக் கொண்டவன்எப்பவும் உன்னோட முடிவுகளை நீதான் எடுக்கணும் கன்யா. அது மாறப்போறதில்ல. உன் அப்பாகிட்ட பேசுனது உன்ன ஹர்ட் பண்ணிடுச்சுன்னு நினைக்கிறேன். அது ஒரு நோயாளிக்கான ஆறுதல் வார்த்தை அவ்வளவுதான். நீ இவ்ளோ யோசிக்க வேண்டாம்என்று சிரிப்போடு கூற

 

              அவனது அந்த சிரிப்பு அவளுக்கு ரசிக்கவில்லை போலும். அவனை திரும்பி பார்த்தவள்ஆனா..இதெல்லாம் தேவையே இல்லாதது ஷ்யாம். நான் அவரோட பொண்ணு கிடையாது, அவர் என்னை நினைச்சு ஆறுதலடையவும் ஒண்ணுமில்ல.” என்று தெளிவாக கூற

 

                     “நீ அவர் பொண்ணு கிடையாது ஓகேஅப்போ ஏன் அமைச்சரை பார்க்க பதறி அடிச்சு ஓடிவந்த கன்யா..”

                 “என்ன பண்றது ஷ்யாம். எனக்கும் மனசிருக்கே, ஏதோ ஒரு மூலையில் துடிக்குதே. அதனால தான் வந்தேன். ஆனா நான் வந்ததாலேயே எதுவும் மாறிடாது எப்பவும்.

                “நான் ஸ்ரீரஞ்சனியோட பொண்ணு மட்டும்தான். அவரோட எந்த அடையாளமும் எனக்கு தேவையில்ல. எப்பவுமே நான் அவரோட மகளா என்னை வெளிப்படுத்திக்க விரும்பினது இல்ல. இனியும் அது நடக்காது.”

              “உங்களுக்கு ஒருவேளை அவரோட மகள்தான் வேணும்ன்னு நினைச்சீங்க ன்னா…” என்று அவள் நிறுத்த, காரை நிறுத்தியவன் அவளை பார்த்தவாறு திரும்பி அமர்ந்தான்.

               “ஏன் நிறுத்திட்ட. முழுசா சொல்லி முடி.”என்று நிதானமாக கேட்க, அந்த அமைதியான குரல் அவன் கோபத்தை உணர்த்தியது. அவள் வாயை திறக்காமல் போகவார்த்தையை முடி கன்யா..” என்று மீண்டும் அழுத்தமாக அவன் கேட்க, இதுவரை கேட்டிராத அவனின் இந்த குரலில் திகைத்து அவனை பார்த்தாள் அவள்.

 

                “உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது. உன்னை வச்சு உன் அப்பாவோட சொத்துக்கோ,இல்ல அவரோட செல்வாக்குக்கோ அடி போடறவன் மாதிரி தெரியுதா. உன்னோட இந்த கேள்விக்கு ஏற்கனவே ஒருமுறை பதில் சொல்லிட்டேன் கன்யா. திரும்பவும் கேட்கணும் ன்னு நீ ஆசைப்பட்டாலும் என்னால சொல்ல முடியாது.

 

                 “ஒவ்வொரு முறையும் நான் இப்படித்தான் ன்னு உனக்கு சொல்லிட்டே இருக்க முடியுமா என்னால.கண்டிப்பா முடியாது. முதல் நாள் நீ என்னை இந்த கேள்வி கேட்ட, அது ஓகே. என்னைப்பத்தி அப்போ உனக்கு எதுவுமே தெரியாது. ஆனா இன்னிக்கும் அதையே பேசுற.. இதுக்கு என்ன அர்த்தம் கன்யா.. இன்னும் அந்த எண்ணம் உன் மனசை விட்டு போகவே இல்ல ரைட்.” என்றவன் அவளை கூர்மையாக பார்க்க

 

                அவள் கண்கள் அவன் கண்களை சந்திக்கவே இல்லை. பார்வை அவனையும் தாண்டி தொலைவில் திக்கற்று வெறிக்க அவளின் அந்த பார்வையில் இன்னும் ஏதோ இருக்கிறதோ என்று தோன்றியது அவனுக்கு. தன் கோபத்தை கைவிட்டவன்கன்யாஎன்று அழைத்து அவள் கையை பிடித்து அழுத்தம் கொடுத்து தன் மீது அவள் கவனத்தை திருப்ப, கண்களில் பொட்டாக கண்ணீர் நின்றது அவளுக்கு.

 

               “கன்யா நிச்சயமா நீ பேச நினைச்சது இது இல்ல. எதையோ உனக்குள்ள வச்சு கஷ்டப்படுத்திக்கற. என்ன விஷயம் கன்யா, என்கிட்டே சொல்லு..” என்று ஆதுரமாக கேட்க

 

               தனது மற்றொரு கையால் தன் கையை பிடித்திருந்த அவன் கையை பற்றிக் கொண்டாள். தலையை குனிந்து கொண்டுஎனக்கு அவங்களோட அடையாளம் வேண்டாம் ஷ்யாம். நான் யாருக்கும் வேண்டாத பொருளா இருக்க வேண்டாம், இவங்களுக்கெல்லாம் ஒரு எண்ணம் நான் தப்பானவ மாதிரி, என் பிறப்பையே கேள்வி கேட்பாங்க.

              எனக்கு இவங்க யாரும் வேண்டாம் ஷ்யாம்…” என்றவள்என்னால முடியாது, நான் அமைச்சரோட பொண்ணு இல்லஎன்று மீண்டும் கூறி அழ, அவள் தோளை பற்றி அவன் நிமிர்த்தவும், அவனிடம் இருந்தும் விலகி அமர்ந்து கொண்டாள் அவள்.

 

                அவள் கையை பிடித்து தன் புறம் இழுத்தவன், அவள் திரும்பி பார்க்கவும்யார் என்ன சொன்னாங்க?? யார் பேசுனது உன்ன?” என்று அதட்ட, இப்போது அழுத்தமாக அமர்ந்துக் கொண்டாள் அவள்.வாயே திறக்கவில்லை அவனிடம்.

 

                சொன்னவன் அவள் சகோதரன்அவன் மறுத்தாலும் அவள் ஏற்றுக் கொண்ட அவளின் உறவு. உடன் பிறந்தோனே உன் பிறப்பு தவறானது என்று அவளை சொற்களால் சுட்டிருக்க, என்னவென்று கூறுவாள் அவள். எதிரில் இருப்பவனிடம் கூறினால் நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். ஆனால் தன்னவனிடம் கூட தம்பியை விட்டுக் கொடுக்க அவள் விரும்பவில்லை.

                   அதன் பொருட்டே இந்த அமைதி. கூடவே ஷ்யாமின் அன்னையின் செயலும் நேரம் கெட்ட நேரத்தில் நினைவு வர, தனக்குள் இறுகிக் கொண்டாள் அவள். ஷ்யாம் எத்தனையோ போராடியும் அவளிடம் ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை அவளிடம்.

                      மீண்டும் தன் கூட்டுக்குள் அவள் ஒளிந்து கொண்டது போல தோன்றியது ஷ்யாமுக்கு. அவன் எண்ணம் உண்மை என்பதை அடுத்து வந்த இந்த நான்கு நாட்களில் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் கன்யா. அன்று அவன் வீட்டில் விட்டு கிளம்பும்போது அவளிடம் பேசியது தான் ஷ்யாம்.

               அதன் பின்னர் அவன் அத்தனை முறை அழைத்தும் கூட அழைப்பை ஏற்காதவள், மருத்துவமனைக்கும்  வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தாள். இப்போது இரண்டு நாட்களாக ஓய்வாக இருந்தபோதும் கூட, அவன் அழைப்பை ஏற்கும் மனமில்லை அவளுக்கு.

                      மதுரை தமிழ் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஒரு சங்கீத உற்சவத்திற்கு ஏற்பாடாகி இருக்க, அதற்காக அவளிடம் பேசி இருந்தனர். மனதை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த துயரங்களில் இருந்து விடுபட விரும்பியவள் ஒத்துக் கொண்டிருந்தாள்.

 

                 நாளை இரவு அவளுக்கு விமானம். ஏற்கனவே பலமுறை வெளிநாடுகளுக்குபயணம் மேற்கொண்டிருப்பதால் விசா பற்றிய கவலை இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த பயமும் கூட இல்லை அவளுக்கு. இது முதல் முறையும் அல்ல, அவள் இப்படி வெளிநாட்டுக்கு கச்சேரிக்காக செல்வது. ஆனால் ஏதோ ஒரு இனம்புரியாத துயரம் நெஞ்சை அழுத்திக் கொண்டே இருந்தது அவளுக்கு.

 

                     ஷ்யாமின் எண் அலைபேசியில் அதிரும் போதெல்லாம் மனம் அதிர்ந்தாலும், முயன்று அவன் அன்னையை நினைவில் கொண்டு வருபவள் திரும்பவே மாட்டாள். ஆனால் இதெல்லாம் அவனை நேரில் பார்க்கும்வரை தான் என்பதும் அவளுக்கு புரிந்திருக்க, அவனை விட்டு சில நாட்கள் விலகி இருக்கும் எண்ணம்தான் அவளிடம்.

 

             அவனாக சலித்து போயோ, இல்லை கோபம் கொண்டு சிலிர்த்தோ தன்னை விட்டு விலகி விட மாட்டானா என்பதே அவள் எண்ணமாக இருந்தது. அதுவரை அவன் கண்களில் படுவதில்லை என்று முடிவு செய்திருந்தவள் இரண்டு நாட்களாக வீட்டில் தான் அடைந்து கிடந்தாள்.

 

                 அவள் பள்ளிக்கு தேவையான விஷயங்களை செய்துவிட்டவள் தான் இல்லையென்றாலும், சரியாக நடக்கும்படி ஏற்பாடுகளை கச்சிதமாக போனிலேயே முடித்திருந்தாள். இன்னும் அவள் கிளம்பும் விஷயம் வேதாவுக்கு கூட தெரியாது. ஏன் அவள் வீட்டில் இருக்கும் அவள் விசுவாசிகளிடம் கூட சொல்லி இருக்கவில்லை அவள்.

 

                   ஏனோ யாரும் வேண்டாம் என்ற எண்ணம் எப்போதும்விட இப்போது இன்னும் திண்ணமாகி இருக்க, அவள் பறக்க முடிவெடுத்து விட்டாள். நாளை கிளம்பும்போது இவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவள் கீழே வந்து தன் உடைகள் மற்ற பொருட்களை பெட்டியில் அடுக்கி எடுத்து வைத்துவிட்டு அன்றைய பொழுதை கடத்தினாள்.

                                   ஏனோ இப்போதெல்லாம் தந்தையின் உடல்நிலையை வைத்து வேதவதி ஏதும் நெருக்குவாரோ ? உடன் அழைப்பாரோ ? என்ற எண்ணம் வேறு ஒரு புறமிருக்க, அதற்கும் தயாராக இல்லை அவள். இப்படியாக ஏதேதோ எண்ணங்களுடன் அவளின் நாள் முடிய, அங்கே ஒருவன் தன் வீட்டு மொட்டைமாடி இருட்டில் இருப்பதே தெரியாமல் இருட்டில் படுத்துக்க கொண்டு நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

            அவளின் இந்த ஒதுக்கம் உடைத்து போட்டது அவனை. இந்த நான்கு நாட்களாக அவனை அவள் அலையவிட, அவள் மீது கோபம் வந்தாலும் கடைசியாக கண்ட அவளின் கண்ணீர் முகம் வலியையே கொடுத்தது.

 

               “ஏன் இப்படி செய்கிறாள்என்று கேட்டுவிடும் முடிவுடன் அவள் பள்ளிக்கும் சென்றிருக்க, பார்க்கவே முடியவில்லை அவளை. அவள் வீடு வரை சென்றுவிட்டவன் அவள் வீட்டிற்குள் செல்ல முற்படவில்லை. ஏனோ தனக்கு இன்னும் உரிமை வரவில்லை என்று ஒரு எண்ணம் அவனுக்கு.

              அதோடு எத்தனை நாள் இப்படி ஒளிந்து கொள்வாள் என்று நினைத்தவன் அவள் வெளி வரும் நாளுக்காக காத்திருக்க தொடங்கி இருந்தான். 

               அவனும் என்ன நடந்தாலும் அவளை விடுவதாகவே இல்லை. “எதுவரை செல்கிறாயோ சென்று வாஎன்பது போல் அமைதியாக காட்டிக் கொண்டான். அவன் முகம் அத்தனை அமைதியாக இருக்க, அவன் கோபமோ, வருத்தமோ யாருக்கும் தெரியவிட வில்லை அவன்.

                  அந்த அவனின் நீண்ட இரவு அந்த மொட்டை மாடியிலேயே கழிய, அடுத்த நாள் எப்போதும் போல் கிளம்பியவன் சைட்டுக்கு சென்று விட்டான். அவன் வேலைகளில் முயன்று கவனம் செலுத்தி, கன்யாவின் நினைவை ஒதுக்கிவைத்து வெற்றி பெற்றான்.

                  அன்று நாள் முழுவதும் அப்படியே கழிய, அந்த நாளின் மாலை வேளையில் அவன் எதிர்பார்க்காத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு. அழைத்தது மாரி. 

                    இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தவர் தானே. எதையோ கணித்திருந்தார் அவர். அதன்பொருட்டே அவரின் ஸ்ரீமா இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று சொல்லி பெட்டிகளை எடுத்து வைத்திருக்க, ஷ்யாமுக்கு அழைத்து விட்டார்.

                   அவனிடம் என்ன கேட்பது என்று தயங்கியவர் ஒருவழியாக அவள் அமெரிக்கா கிளம்புவதை தெரிவித்து உங்களுக்கு தெரியுமா ? என்று கேட்டிருக்க,அவரின் நம்பிக்கையில் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. அவரிடம்நீங்களே கேட்க வேண்டியது தானே உங்க பாப்பாவைஎன்று கேட்க

               “அவங்க சொன்னா உங்களை ஏன் கேட்கப்போறேன். எதுக்கு போறாங்கஎன்று அவனை மீண்டும் கேட்க

                 “எனக்கு தெரியாது மாரிண்ணா. அவ போகட்டும் விடுங்கஎன்று கூறி அழைப்பை துண்டித்துவிட, மாரி தான் குழம்பி நின்றார். அதற்குள் கன்யா வந்துவிட அவளை அழைத்து சென்று அவர் விமான நிலையத்தில் விட்டவர்ஏன் பாப்பா இப்படி செய்யறீங்க.. எப்போ வருவீங்க. எனக்கு பதில் சொல்லுங்கஎன்று முறுக்கி கொண்டு நிற்க, அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவள் வேதாவுக்கு அழைத்தாள்.

             அவரிடமும் சுருக்கமாக தான் கிளம்புவதை தெரிவித்து அவள் அழைப்பை துண்டித்துவிட, அவள் நெருங்கி வருவதாக மகிழ்ந்து போயிருந்த வேதா தளர்ந்து போனார். ஆனால் அவளோ அத்தனை போரையும் தண்டித்து தனக்கும் வலி கொடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

Advertisement