Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 16

 

ஷ்யாமை சந்தித்து ஒருவாரம் கடந்திருந்த நிலையில் அன்று காலை பரபரப்பாக தன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. ஷ்யாமும் அன்று இரவு அழைத்து பேசியதோடு சரி அதன்பின் அவளை அவன் அழைக்கவே இல்லை. தினமும் அழைப்பானோ என்று முதலில் யோசித்திருந்தவள் அவன் அழைக்காமல் போகவும் அந்த விஷயத்தை அதோடு விட்டிருந்தாள்.

 

மேலும் வேதவதி ஷ்யாமை பற்றி எதுவும் கேட்பார் என்று அவள் நினைத்திருக்க அதுவும் பொய்த்து போனது இந்த ஒரு வாரத்தில். அவர் இதுவரை ஒருமுறை கூட அழைத்திருக்கவில்லை கன்யாவிற்கு. அதுவும் ஒருவகையில் ஏமாற்றமே அவளுக்கு. அவரின் அழைப்பை பெரிதும் எதிர்பார்த்திருந்தாள் அவள்.

 

அனால் என்ன செய்வது அவருக்குதான் அங்கே ஸ்ரீதரை சமாளிக்கவே நேரம் போதாமல் இருக்கிறதே. இவளை சந்தித்த மறுநாள் கையில் வழிந்த ரத்தத்தோடு வந்து நின்றவன் தான். எது கேட்டபோதும் அவனிடம் பதில் இல்லை. அவராகவே அவன் கையை பரிசோதித்து மருந்திட்டவர் அவனை உடனிருந்து கவனித்து கொள்ள, அவர் மடியில் படுத்துக் கொண்டான் அவன்.

 

ஸ்ரீதர் மிகவும் குழம்பிய நிலையில் இருந்தான். நடந்த விஷயத்தை தாயிடமும் சொல்ல முடியாமல் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தனக்குள் போராடிக் கொண்டிருந்தான் அவன். அன்னையின் மடியில் படுத்தவன் அப்படியே உறங்கிப்போக காலையில் தான் கண்விழித்தான்.

 

அன்னை தன் அருகில் தன் முகத்தையே பார்த்து கொண்டு அமர்ந்திருக்கவும் தான் செய்த தவறு புரிய, அவரிடம் ஏதோதோ சமாதானம் கூறி அனுப்பி வைத்தான். அன்று முதல் இயல்பாக இருப்பதாக அன்னையின் முன் அவன் காட்டிக் கொண்டாலும் ஏனோ வேதாவிற்கு அவன் இயல்பில் இல்லை என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

 

என்ன செய்து வைத்திருக்கிறானோ? என்று பதறியவர் கணவரிடம் கூட விசாரித்துவிட்டார். அவருக்கும் ஒன்றும் தெரியாத போதும் மனைவியின் முகவாட்டம் பொறுக்காத ஆதிநாராயணன் தான் என்னவென்று விசாரிப்பதாக மனைவிக்கு வாக்கு கொடுத்திருந்தார்.

 

அதன் பொருட்டு அவன் கூடவே இருக்கும் சிலரிடம் அவன் நடவடிக்கைகளை பற்றி அவர் கேட்டறிய அவர் கவலைப்படும்படி எதுவுமே அவர் கண்ணில் சிக்கவில்லை. என்னவாக இருக்கும் என்று அவரும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க அதற்கு காரணமானவனோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் அனுவை சந்திக்க செல்வது பெரும்பாலும் ரகசியமாகத் தான். அவள் படிப்பை முடிக்கும்வரை தங்கள் விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவன் நினைத்திருக்க, மந்திரி மகனின் காதலி என்று அவள் எங்கும் கிசுகிசுக்கப்படுவதை அவன் விரும்பவே இல்லை. அதன் பொருட்டே அவளை சந்திக்க செல்லும் நேரங்களில் அனைவரையும் தவிர்த்து விடுவான்.

 

இப்போது அது அவனுக்கு சாதகமாக முடிந்துவிட, ஆதி நாராயணன் என்ன முயன்றும் மகனை பற்றி அறிய முடியவில்லை.  அவன் முகவாட்டத்தையும் அவரால்  சகிக்க முடியாமல் போக மகனை அழைத்து கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார் அவர்.

 

அன்று மாலை வீடு திரும்பியவர் மனைவியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வேலையிருப்பதாக கூறி, அலுவலக அறையில் சென்று அமர்ந்துவிட்டார். மகன் வந்த உடன் அவனிடம் பேசிவிட வேண்டும் என்ற நினைவில் அவர் அமர்ந்திருக்க, அவர் இரவு உணவையும் முடித்து வெகுநேரம் சென்றே மகன் வீடு திரும்பினான்.

 

அந்த நேரத்தில் தந்தையின் அலுவலக அறையில் விளக்கெரிய அன்னை சோஃபாவில் அமர்ந்திருப்பதையும் கண்டவன் அமைதியாகவே அன்னையின் அருகில் அமர்ந்தான். வேதா எதுவுமே பேசாமல் அமைதியாக எழுந்தவர் சென்று அவனுக்கான உணவை எடுத்து வைக்க,  அறைக்கு சென்றவன் குளித்து முடித்து கீழே இறங்கி வந்தான். அவன் வந்து அமரவும் அவனுக்கான உணவை பரிமாறியவர்  அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் ஏதோ பேச வந்தபோதும் “அப்பா உனக்காக ஈவினிங்ல இருந்து வெயிட் பன்றாங்க ஸ்ரீ. சாப்பிட்டுட்டு அவரை போய்ப்பாரு. என்கிட்டே எந்த விளக்கமும் நீ கொடுக்க வேண்டாம்” என்று அவர் கத்தரித்தது போல் கூறிவிட, அமைதியாகவே உண்டு முடித்தான் அவன்.

உணவை முடித்ததும் தந்தையின் அறைக்கு செல்ல, கையில் இருந்த பைலை மூடி வைத்தவர் அவனை பார்த்து “வா ஸ்ரீ”  என்று அழைக்க தலையசைத்தவன் அவருக்கு எதிரில் சென்று அமர்ந்தான்.

 

நாராயணன் சிறிது நேரம் யோசித்தவர் “என்ன விஷயம் ஸ்ரீ. கொஞ்ச நாளாவே நீ சரி இல்லையே” என்று கேட்டுவிட

 

“என்ன சரியில்ல. என்ன நடந்துடுச்சுபா இப்போ” என்று எதிர் கேள்வி கேட்டான் மகன். மேலும் “பிசினஸ்ல எந்த பிரச்சனையும் இல்லையே. கட்சி விஷயத்துலயும் எல்லாமே சரியா நீங்க சொன்னபடிதான் போயிட்டு இருக்கு. என்ன சரியில்லாம போச்சு” என்று அவன் படபடக்க

 

“உன் கேள்வியிலேயே  இருக்கு ஸ்ரீ. பிசினஸ், கட்சி எல்லாமே சரியா தான் இருக்கு. என் மகன் சரியா இல்லையே.எதையோ தொலைச்சவன் போல சுத்திட்டு இருக்கானே.” என்று கேட்க

 

எரிச்சலாக உணர்ந்தவன் “நான் இப்படி இருக்கிறதுனால என்ன மாறிப் போச்சு. இங்க. இல்லை மாறிடத்தான் போகுதா.” என்று அவன் இடைக்காக கேட்க

 

“என்ன மாறனும் ஸ்ரீ. எல்லாமே உன் விருப்பப்படி தானே இங்க, நீ சொல்றதுதானே நடக்குது. இன்னும் என்ன மாறனும்.” என்று மகனை புரியாதவராக தந்தை வினவ

 

அப்போதும் ” சரிதான்ப்பா, அதான் சொல்லிட்டீங்களே. விட்டுடுங்க” என்று பேச்சை அவன் கத்தரிக்க

 

நாராயணனோ விடாமல் ” இன்னும் நீ விஷயம் என்னன்னே சொல்லல ஸ்ரீ.  முடிக்கத்தான் பார்க்கிற ” என்று குற்றம்சாட்ட

 

“என்ன சொல்ல சொல்றிங்க இப்போ. என்ன சொல்லணும் டாடி, எனக்கு என்ன பிரச்சனை? அதான தெரிஞ்சிக்கணும் நீங்க.சொல்லிட்டா சரி பண்ணிடுவீங்களா?” என்று கத்தியவன் தந்தையின் அதிர்ந்த முகபாவத்தை கண்டுகொள்ளாமல்

 

“எனக்கு நீங்கதான் பிரச்சனை. இந்த வயசுல மக ன்னு ஒருத்திய கொண்டு வந்து நிறுத்தி ஊருக்கு காட்டி இருக்கீங்க ல அதான் என் பிரச்சனை. மாத்த முடியுமா உங்களால?? முடியாது இல்ல. விட்டுடுங்க ”

 

“உங்க ஏமாளி பொண்டாட்டி மாதிரி என்னால அமைதியா இருக்க முடியல. என்னை உறுத்திட்டே இருக்கு. ஆதிநாராயணனுக்கு நான் மட்டும் மகன் இல்ல இன்னொருத்தியும் இருக்கா ன்னு என்னால ஏத்துக்க முடியாது.”

 

“இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமா?” என்று அவன் கர்ஜிக்க

 

ஆதிநாராயணன் கூனிக் குறுகி நின்றார் மகனின் முன்னால். அப்படியும் ” ஸ்ரீ… அவ உன் அக்காடா. நீ நினைக்கிற மாதிரி நான் உன் அம்மாவை ஏமாத்தல ஸ்ரீ. வேதாக்கு நடந்த எல்லாமே தெரியும்.” என்று அவர் முடிப்பதற்குள்

 

“என்ன நினைக்கிறீங்கப்பா நீங்க அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிட்டா, நீங்க செய்யிற தப்பு இல்லன்னு ஆகிடுமா. அப்படி அந்த லேடிய உங்களுக்கு அவ்ளோ  பிடிக்கும்ன்னா அவங்களோடவே இருந்து தொலைக்க வேண்டியதுதானே. எதுக்கு என் அம்மாவை வேற கல்யாணம் பண்ணீங்க.”

 

“இல்லை அதுக்குப் பிறகாவது என் அம்மாவை நினைச்சீங்களா நீங்க. இத்தனை வருஷம் கழிச்சு அவங்கள உங்க மனைவி ன்னு சொன்னா அப்போ என் அம்மா யாரு உங்களுக்கு. அவ உங்க மக, அவங்க உங்க பொண்டாட்டி…. அப்போ நானும் என் அம்மாவும் யாரு? என்ன பேசுவாங்க ஊருக்குள்ள.”

 

“என் அம்மா இவ்ளோ வருஷம்  உங்ககூட வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தம் இருக்கு. அவங்க எதுவுமே பேசாம இருக்கிறதால நீங்க செய்றது எல்லாமே சரின்னு ஆகிடாது. நீங்க என் அம்மாவுக்கு  செஞ்சிட்டு இருக்கறதுக்கு பேரு துரோகம்.”

 

“இந்த வீட்டை விட்டு வெளியே போய் நிம்மதியா என்னால வாழ முடியும். ஆனா என் அம்மாவுக்காக உங்களை பொறுத்துட்டு இருக்கேன். நீங்க என்ன முயற்சி பண்ணாலும் உங்க மகளை இந்த குடும்பத்தோட வாரிசா உங்களால உருவாக்க முடியாது. இந்த ஸ்ரீதர் உயிரோட இருக்கவரைக்கும் நீங்க நினைக்கிறது நடக்காது.”

 

” அவளை வச்சு என் அம்மாவை நீங்க வளைக்கலாம். உங்களால வேற எதுவும் செய்ய முடியாது. நான் விடவும் மாட்டேன். என்னை மீறி யார் என்ன செய்றீங்க ன்னு பார்த்திடறேன்” என்று கத்தியவன் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.

அவன் அந்த அறைக்குள் நுழைந்த போதே அறைக்கதவை சாற்றிவிட்டு வந்திருக்க, உள்ளே நடந்த பேச்சுவார்த்தை எதுவுமே வேதவதிக்கு தெரியவே இல்லை. அவர் ஹாலில் அமர்ந்து இருந்தவர் கணவர் பேசிவிட்டு வந்து என்ன சொல்வாரோ ? என்று பயத்தில் அமர்ந்து இருக்க வெளியில் வந்தது அவரின் மகன்தான்.

 

அதுவும் அவன் கோபமாக படிகளில் ஏறிவிட, அவன் முகமே சரியில்லாமல் இருக்க கண்டவர் எழுந்து தன் கணவரின் அலுவலக அறைக்குள் நுழைய, அங்கு அவர் கண்டது நெஞ்சை பிடித்துக் கொண்டு மேசையை கையால் பிடிக்க முயன்று முடியாமல் கீழே விழுந்து கொண்டிருக்கும் தன் கணவரை தான்.

 

அதிர்ந்து போனவராக ” என்னங்க..” என்று கத்தியவர் அவரை தாங்கி கொள்ள அவர் கைகளிலேயே மயங்கி சரிந்தார் ஆதி நாராயணன். வேதா ஒன்றும் புரியாமல் கலங்கி நின்றவர் “ஸ்ரீ” என்று கத்தி அழைக்க, தாயின் அழுகுரலில் ஓடி வந்தான் தனயன். அவர்கள் வீட்டு டிரைவரும் என்னவோ என்று உள்ளே ஓடிவர, அவர்கள் கண்டது தந்தையை மடியில் தாங்கி கொண்டு அழுது கொண்டிருக்கும் வேதவதியைத் தான்.

 

ஸ்ரீதர் ஒருநொடி தன்னால்தானோ என்று கலங்கியவனுக்கு அன்னையின் முகம் வேதனையை தர, அடுத்த நிமிடம் விரைவாக செயல்பட்டவன் காரை எடுக்குமாறு ஓட்டுனரிடம் பணித்துவிட்டு தந்தையை கைகளில் தூக்கிக் கொண்டான்.

 

வேதவதி அழுகையுடன் அவனை தொடர்ந்தவர் காரில் தானும் ஏறிக்கொள்ள,அடுத்த அரைமணி நேரத்தில் சென்னையின் முக்கிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அமைச்சர். மகன் கொடுத்த அதிர்ச்சியில் அவர் இதயம் தன் வேலையை நிறுத்தி இருக்க, அதை சரி செய்ய போராடிக் கொண்டிருந்தது மருத்துவக்குழு.

 

மாநிலத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பதால் ஆதிநாராயனின் விஷயம் அன்றைய செய்திகளில் முதல் இடத்தை பிடித்திருக்க, மருத்துவமனை வாயிலை கட்சி தொண்டர்கள், பத்திரிக்கைக்காரர்கள் என்று கூட்டம் கூடி இருந்தது.

 

இது எதுவுமே புரியாமல் அருகில் இருந்த மகனை கூட திரும்பி பார்க்காமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்திருந்தார் வேதவதி. ஆதிநாராயணன் பேச்சு மூச்சில்லாமல் கைகளில் சரிந்ததே கண்முன் தோன்றி கொண்டிருந்தது அவருக்கு.

 

அந்த புள்ளியிலேயே அவரின் வாழ்வு நின்றிருந்தது. ஆதிநாராயணன் என்ற ஒரு மனிதருக்காகத் தான் அவரின் இந்த வாழ்வு. காதலா என்று கேட்டால் இன்றும் பதில் தெரியாது வேதவதிக்கு. ஆனால் அவரின் உலகம் ஆதிநாராயணனை சுற்றிதான். இத்தனைக்கும் படிக்காதவரோ, உலகம் தெரியாதவரோ கிடையாது.

 

ஆனால் ஆதிநாராயணன் என்று ஒருவர் இல்லையென்றால் வேதவதி இருக்கமாட்டார் நிச்சயம். அவரின் அத்தனை குறைகளையும் பொறுத்து அந்த குறைகளோடே அவரை ஏற்றுக் கொண்டு இன்றுவரை அந்த மனிதரை தாங்கிக் கொண்டவர் அவர்.அவருக்காக தன் பிறந்த வீட்டையே தள்ளி நிறுத்தியவர்.

 

மாமனார், மாமியார் என்று யார் பேச்சையும் காதில் போட்டு கொள்ளாமல், ஆதிநாராயணனுக்காக துடித்த ஒரே உயிர் வேதவதி. அப்படிப்பட்ட வாழ்வு அவர்களது. ஆதிநாராயணனும் கூட எந்த இடத்திலும் இதுவரை வேதவதி விட்டுக்கொடுத்தது கிடையாது.

 

ஊருக்கு ஆதிநாராயணன் செய்வது போல இருந்தாலும்,உண்மையில் வேதவதிக்கு தெரியாமல் அவரின் விரல் கூட அசையாது. வேதவதியை எந்த வகையிலும் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் அத்தனை தெளிவாக அவர் இருந்திருக்க, வேதா நினைத்து இருந்தால் இன்று கன்யாவும் கிடையாது. ஸ்ரீரஞ்சனியும் கிடையாது.

 

வேதா மறுத்திருந்தால் அன்றைய நிலையில் நிச்சயம் கேட்டிருப்பார் ஆதிநாராயணன். அவரால் வேதவதியின் கண்ணீரை சகிக்கவே முடியாது. அப்படிப்பட்ட தாம்பத்யம் தான் அவர்களுடையது. அதை இன்று மகன் கைநீட்டி கேள்வி கேட்டிருக்க, அப்படித்தானோ என்று நொந்துவிட்டார் போல மனிதர்.போதும் என்று முடிவுக்கு வந்துவிட்டது அவரின் இதயமும்.

 

ஒருநொடி வேதாவை நினைத்திருந்தாலும், அவன் பேசியது ஒன்றுமில்லாமல் போயிருக்கும். ஆனால் அவன் பேச்சிலேயே மனதை விட்டுவிட்டவர் தன் உயிரை துடிக்கவிட்டு விட்டு அமைதியாக படுத்து விட்டிருந்தார்.

தன் வீட்டில் இருந்த கன்யாவிற்கு விஷயமே தெரிந்திருக்கவில்லை இன்னும். தன் தினப்படி வேலைகளை முடித்து விட்டவள் உறங்க தயாராக, எப்போதும் உள்ள வழக்கமாக மொபைலை கையில் எடுத்திருந்தாள். தன் சமூக வலைத்தள பக்கத்தை திறக்க அப்போதுதான் தெரிந்தது ஆதிநாராயணனின் உடல்நிலை.

 

சமூக வலைத்தளங்களில் அவரவர் மருத்துவராகி அவரின் உடல்நிலையை அலசி ஆராய்ந்து கருத்து தெரிவித்துக் கொண்டிருக்க உறைந்து போயிருந்தாள் மகள். அதிநாராயணனை வேண்டாம் என்று கூறிகொண்டாலும் அவரை பிடிக்காதவள் இல்லையே. எத்தனை நடந்த போதிலும் இதுவரை அவரை கைகாட்டியதே இல்லை தன்னைத்தான் தூர நிறுத்திக் கொண்டாள் இதுவரை.

 

அவர் நலமாக இருக்கிறார், வேதா உடன் இருக்கிறார் என்ற நினைப்பில் அவள் இதுவரை இருந்திருக்க, இன்று அவளை அடித்து போட்டிருந்தது இந்த செய்தி. கலங்கியவளாக உடையை மாற்றிக் கொண்டவள் மாரியை எழுப்ப வேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள். தன் மொபைலை கூட எடுத்திருக்க வில்லை அவள்.

 

மருத்துவமனையின் முன்னால் கூடி இருந்த கூட்டம் திகைப்பை தர, கார் ஹாரனை விடாமல் அழுத்தியவள் வாயிலை நோக்கி முன்னேற அங்கிருந்த காவல்துறையினர் அவளை கண்டு அவளுக்கு உதவ, அடுத்த இரண்டு நிமிடங்களில் மருத்துவமனையின் வாயிலில் இருந்தாள் அவள்.

 

காரை நிறுத்தி இறங்கியவள் யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் மருத்துவமனையின் உள்ளே ஓட, அவளுடன் வந்த காவல் அதிகாரி ஒருவர் அவளை வேதா இருக்குமிடம் அழைத்து சென்றார். அங்கே ஒரேநாளில் தன் மொத்த சக்தியும் வடிந்து விட்டவராக வேதா அமர்ந்திருக்க, பெண்ணுக்கு உள்ளம் விம்மியது அழுகையில்.

 

அங்கு ஓரமாக நின்றிருந்த ஸ்ரீதர் அவள் கண்களில் படவே இல்லை. அவள் கவனம் மொத்தமும் வேதாவிடம் மட்டுமே இருந்தது. அழுகையுடன் அவர் அருகில் சென்றவள் வேதாவின் தோளைத் தொட, அவளை கண்டவர் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஸ்ரீமா” என்றவர் வார்த்தை வராமல் அவள் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு கதறி அழ, கன்யாவுக்கும் அழுகை பொங்கியது. அவரை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் அவர் தலையில் தன் தாடையை வைத்து அழுத்திக் கொண்டு அவரை பிடித்துக் கொண்டாள்.

 

அவர் அழுகையை நிறுத்தாமல் போகவும், அவர் அருகில் அமர்ந்து கொண்டவள் அவர் கையை பிடித்துக் கொண்டு “வேதாம்மா… இங்கே பாருங்க. என்னை பாருங்க…” என்று தன்னை பார்க்க செய்தவள் “அவருக்கு ஒன்னும் இருக்காது வேதாம்மா. அவரால உங்களை பிரிஞ்சு இருக்கவே முடியாது, கண்டிப்பா உங்ககிட்ட வந்துடுவார். நீங்க இப்படி அழுது உங்க உடம்பை கெடுத்துக்காதிங்க.” என்று அவருக்கு ஆறுதல் கூற

 

“கண்டிப்பா சரியாகிடும் இல்ல ஸ்ரீமா. அப்பா வந்திடுவார் இல்ல” என்று கேட்டவர் சிறுகுழந்தையாக தேம்பி அழ, அவரை தன் தோளில் சாய்த்துக் கொண்டவள் “நிச்சயமா வந்திடுவார் வேதாம்மா. ரெண்டு நாள் அவருக்கு ரெஸ்ட் ன்னு நினைச்சுக்கோங்க. ரெண்டு நாள்ல உங்ககிட்ட திரும்பி வந்திடுவார் பாருங்க ” என்று தனக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டவள் அவரை அதன்பிறகு தனியாக விடவே இல்லை.

 

மருத்துவமனை ஊழியர்களிடம் பேசி தந்தையின் நிலையை அறிந்து கொண்டவள் வேதாவிடம் எதையோ சொல்லி சமாளித்திருந்தாள். நடு இரவுக்கு மேல் அங்கு தனக்கென ஒரு அறையை ஏற்பாடு செய்து கொண்டவள் வேதாவை அழைத்துக் கொண்டு அந்த   அறைக்கு சென்று விட்டாள். நிச்சயம் அவர் உறங்கமாட்டார் என்பதால் அவருக்கு தூக்கத்திற்கான மருந்து கொடுக்கபட, அவரின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் மகள். இதுநாள் வரை தந்தையை தாங்கி கொண்டவரை இன்று தாயாக மகள் தாங்கி கொண்டாள்.

 

அங்கு தூரமாக நின்று வெகுநேரமாக இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். கன்யா வந்தது முதல் தன் தாயை அத்தனை அழகாக சமாளித்து அவரை இயல்பாக்கி இப்போது அவரை அழைத்து சென்றது வரை அமைதியாகவே பார்த்து நின்றான் அவன்.

 

இத்தனைக்கும் அவள் வந்தது முதல் இவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஸ்ரீதர் என்ற ஒருவன் அங்கிருப்பதாகவே நினைக்காதவள் அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டாள். இவள் தன்னை இந்தளவுக்கு கூட மதிக்காமல் இருக்க தான் இவளை பெரிதாக எடுத்து அனைத்தையும் சிக்கலாக்கி கொண்டிருக்கிறோமோ என்று முதல் முறையாக யோசித்தான் அவன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement