Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 15

தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும் கன்யாவை சந்தித்துவிட்டு வந்தது பாலகிருஷ்ணனுக்கு தெரிந்து விட்டிருக்க அதன் பொருட்டே இந்த வட்டமேசை மாநாடு.

பாலகிருஷ்ணன் வலைவிரித்த குற்றவாளிகளில் ஒருவன் காலையே ஓடிவிட்டிருக்க தேவகி மாட்டிக் கொண்டிருந்தார். அவர் சாப்பிட அமரும் நேரம் அதுவரை அலுவலக அறையில் இருந்த பாலக்ருஷ்ணனும் வந்து அவர் அருகில் அமர தேவகிக்கு புரிந்துபோனது.

அவரும் பார்த்துக்கொள்ளலாம் என்பது போலவே திருப்தியாக உண்டு முடிக்க, “நைட் எங்கேம்மா போயிருந்திங்க” என்று நிதானமாக கேட்டார் பாலா.

தேவகி ஒன்றும் தெரியாதவர் போல் ” நான் எங்கே போனேன் பாலா, இந்த ஷ்யாம் தான் கூட்டிட்டு போனான். மார்கழி உட்சவத்துக்கு. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல சங்கீதம் கேட்டேன்ப்பா நேத்து.” என்று அவர் சிலாகிக்க,பிபி ஏறியது பாலாவுக்கு.

பல்லை கடித்துக்கொண்டு ” கச்சேரி பண்ணது யாருமா? யாரை பார்க்க போனீங்க” என்று கேட்க

” ஸ்ரீகன்யா டா. நல்லா பாடினா, சமீபமா சினிமால கூட பாடிருக்காளாம். என்ன ஒரு சங்கீத ஞானம் தெரியுமா அந்த குழந்தைக்கு.” என்று அவள் பெருமைகளை கூற

“அம்ம்மா…..” என்று கத்திய பாலா “நீங்க என்ன செய்ஞ்சிட்டு இருக்கீங்க புரியுதா உங்களுக்கு.” என்று கேட்க

“நான் என்னடா செஞ்சேன்? ஒரு பாட்டு கேட்டது குத்தமா ” என்று அப்பாவியாக கேட்க

“நான் என்ன கேட்கிறேன்ன்னு உங்களுக்கு தெரியும் ம்மா. சும்மா நடிக்காம பதிலை சொல்லுங்க” என்று நேரடியாகவே அவரை குற்றம் சாட்ட

“இங்க பாரு பாலா..நீ என்ன கேட்கிறேன்னு எனக்கு புரியல.உடைச்சு பேசு எதுவா இருந்தாலும்” என்று அதட்ட

“உங்க செல்லப்பேரன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறது உங்களுக்கு தெரியும் இல்ல. அவளை பார்க்க தான நேத்து ரெண்டுபேரும் கிளம்பி போனீங்க ” என்று கேட்க

“நம்ம ஷ்யாம் அவளை லவ் பண்றானா பாலா. பாரேன் இவன் என்கிட்டே சொல்லவே இல்ல” என்று அவர் ஒரே அடியாக அடித்துவிட

“உங்க பேரன் உங்ககிட்ட சொல்லாம இருக்கான். உங்களுக்கு இப்போ நான் சொல்லிதான் தெரியும்ல. இதை என்னை நம்ப சொல்றிங்களா மா.” என்று பாலா நக்கலாக கேட்டவர் தொடர்ந்து

“ஒரு விஷயம் புரிஞ்சிக்கோங்க. அந்த பொண்ணு நல்லவளாவே கூட இருக்கலாம். ஆனா நமக்கு இது ஒத்துவராது. தேவையில்லாம அவனை தூண்டி விட்டுட்டு இருக்காதிங்க. நீங்க சப்போர்ட் பண்ணா அவன் இன்னும் அதிகமா குதிக்க ஆரம்பிச்சிடுவான்.”

“அவனுக்கு சொல்லி புரிய வைங்க.. இது வேண்டாம் ன்னு. அதை விட்டுட்டு வழக்கம் போல உங்க பேரனுக்கு பின்பாட்டு பாடிட்டு இருக்காதிங்க.” என்று கோபத்துடன் கூறியவர் எழுந்து சென்றுவிட, அவர் சாப்பிடாமலே செல்வதால் அவர் பின்னால் ஓடினார் பத்மினி.

ஆனால் தேவகியோ அவர்களை கண்டுகொள்ளாமல் அருகில் நின்றிருந்த வசுவிடம் “ஏம்மா மருமகளே, ஒரு வயசானவ இவ்வளவு நேரமா பேசி களைச்சு போய்ட்டா, அவளுக்கு ஒரு காஃபி கொடுப்போம் ன்னு தோணுதா உனக்கு. எல்லாம் நாமளே சொல்லணும், போய் ஒரு காஃபி கொண்டு வா” என்று அவளை விரட்டினார்.

அவள் காஃபி கொடுக்கவும், அமைதியாக எதுவுமே நடவாதது போல் அவர் காஃபியை ருசித்து கொண்டிருக்க, வசுவிற்கு தான் “ஷப்பாஆஆ” என்று வந்தது. அவள் ஆவென தேவகியை வேடிக்கை பார்த்து நிற்க தேவகிக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த கோகுல் சிரித்துக் கொண்டிருந்தான். பாட்டியின் செயல்களில்.

பத்மினி பாலாவை அனுப்பிவைத்து விட்டு வீட்டினுள் வந்தவர் தேவகியிடம் “என்ன அத்தை பண்றிங்க நீங்க. அவர் சாப்பிடாம கூட கெளம்பிட்டாரு. உங்க பேரனுக்கு கொஞ்சம் சொல்லக்கூடாதா?? ஏன் அவரை இப்படி டென்ஷன் பண்ணிட்டு இருக்கான்” என்று அவர் பங்கிற்கு பேச

“அதுசரி…. அதென்னடி என்னவோ உன் பேரன் உன் பேரன் ன்னு சொல்றிங்க புருஷனும், பொண்டாட்டியும். ஏன் அவனுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையா.” என்று கேட்க

“அவனை பெத்தது மட்டும்தான் சம்பந்தம், மாமா மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லியே அவனை இப்படி பிடிவாதக்காரனா வளர்த்தது நீங்க தான். அவனும் உங்களை மாதிரியே வளர்ந்து நிற்கிறான். இதுல நான் என்ன செய்ய ” என்று அவர் நொடித்துக் கொள்ள

“அதுதான் தெரியுது இல்ல அவன் பிடிவாதக்காரன்ன்னு. அவன் பேச்சை கேட்டுட்டு போங்க” என்று தேவகி இலகுவாக சொல்லிவிட

பத்மினி அதிர்ந்து போனார். “என்ன அத்தை சொல்றிங்க, உங்க மகன் கேட்டு இருக்கணும் இதை’ என்று பதற

“இங்கே பாரு பத்மி… எப்பவும் புருஷனுக்கு பயந்த பொண்டாட்டியா மட்டுமே இருக்கணும்ன்னு நினைக்காத.அப்பப்போ உன் பிள்ளைக்கு அம்மாவாவும் இரு. இதுவரைக்கும் இதுதான் வேணும்ன்னு எப்போ பிடிவாதம் பண்ணி இருக்கான் அவன்.”

“குடும்பத்துக்கு அடங்கின பிள்ளை, அவன் அப்படியே இருக்கணுமா இல்லை அவன் வழியை பார்த்துக்கணுமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும். ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ என்ன நடந்தாலும் உன் மகன் அந்த பொண்ணை விடமாட்டான்.

“ஒழுங்கா உன் பிள்ளை மனசை பாரு. உன் புருஷன் மாதிரி அவ குடும்பத்தை கட்டிட்டு சுமக்காத. என்ன அவ குடும்பம், இப்போதைக்கு அந்த பொண்ணு தனியாத்தான் இருக்கா. அவளை கட்டிக்கிட்டு வந்துட்டா இதுதான் அவ குடும்பம். வெளியே இன்னாரு பொண்ணு ன்னு சொல்லமாட்டாங்க.

“கிருஷ்ணன் வீட்டு மருமக. ஷியாம் பொண்டாட்டி ன்னு தான் பேசுவாங்க. இதுல எங்கேயிருந்து அவ அம்மா பேரு வரும். அப்படியே வந்தாலும் என்ன பண்ணிட்டா அவளும். ஒருத்தனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது தப்பா. நீயும் ஒரு பொண்ணா இருந்து யோசி.

“வீணா உன் புருஷனோட சுமையை நீ சுமந்து உன் பிள்ளையை இழந்துடாத. அவ்ளோதான் நான் சொல்லுவேன் பார்த்துக்கோ” என்றவர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட, பத்மினி தலையில் கைவைத்துக் கொண்டு அந்த உணவு மேசையில் அமர்ந்துவிட்டார்.

கிட்டத்தட்ட மத்தளத்தின் நிலைதான் அவருக்கு. மகனுக்கும் பார்க்கமுடியாமல் கணவனையும் மீற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அவர். ஏற்கனவே போராடிக் கொண்டிருந்தவரை இப்போது தேவகியின் வார்த்தைகள் முழுவதுமாக பதம் பார்த்திருந்து.

மகனை பற்றி நன்கு தெரிந்தவர் என்பதால் தேவகியின் வார்த்தைகள் நூறு சதவீதம் பலிப்பதற்கான சாத்திய கூறுகள் உண்டு என்பதை உணர்ந்தே இருந்தார் அவர். அதனால்தான் அவங்க ஏதும் சொல்வதற்குள் நாமாக பெண் பார்த்து விடுவோம் என்று ஆரம்பித்தது.ஆனால் ஆரம்பிக்கும் முன்பே மகன் மூடுவிழா நடத்தி இருந்தான்.

கணவரிடம் அவரால் வாயையே திறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு இருந்தன  பாலகிருஷ்னனின் புலம்பல்கள். இப்போது மாமியார் சொல்வதை வைத்து பார்த்தால் அத்தனை பெரிய விஷயமாக தோன்றவில்லையே என்று யோசித்தவர் கணவரிடம் இதுகுறித்து பேசுவது என்று முடிவெடுத்துக் கொண்டார்.

மேலும் மகன் தனியனாக நின்று விடுவானோ என்ற கவலையும் அவரை அரித்துக் கொண்டிருக்க, ஆங்காங்கே என்னென்னவோ நடக்கிறது, என் மகன் என்னிடம் அனுமதி கேட்டு தானே நிற்கிறான். அவனை எப்படி நான் அப்படியே விட முடியும் என்று தோன்ற நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்  அவர்.

அங்கு உணவுமேசையில் அமர்ந்திருந்த கோகுலும் அன்னையின் முகவாட்டத்தை கண்டவன் “ம்மா… நான் பேசுறேன் அப்பாகிட்ட. நீங்க இந்த விஷயத்தை பத்தி கவலைப்படாதீங்க. ஷ்யாம் கிட்டேயும் நான் பேசி முடிக்கிறேன். நீங்க விடுங்க டென்ஷன் ஆகாதிங்க” என்று கூறி அவரை அணைத்து விடுவித்தவன் அங்கு நின்றிருந்த தன் மனைவியிடம் அன்னையை பார்த்துக் கொள்ளுமாறு கண்ணை காட்டிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் அவன்.

இவர்கள் வீட்டின் நிலை இப்படி இருக்க, அதே நாள் மாலை அனுவின் கல்லூரி வாசலில் அவளுக்காக காத்திருந்தான் ஸ்ரீதர். அனு  கல்லூரியை விட்டு வெளியில் வந்தவள் இவன் காரை கவனித்துவிட்டு அருகில்வர, எதுவுமே பேசவில்லை அவன்.

ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அவன் வரச்சொல்லவும், கடைசி வகுப்பை புறக்கணித்துவிட்டு அவள் கிளம்பி வந்திருக்க, அவனோ எதுவுமே பேசாமல் சாலையில் கவனமாக இருக்கவும், அவன் முகத்தை பார்த்தவள் அவனே பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தாள்.

அவர்கள் வழக்கமாக கோவளம் கடற்கரையை அடைந்திருந்தவன் காரை விட்டு இறங்கவே இல்லை. வண்டியை நிறுத்தி அதிலேயே அமர்ந்து கொண்டு அவள் முகத்தை பார்த்தான் அவன். அனுவுக்கோ புரியவே இல்லை அவன் செயல்கள். ஆனாலும் அந்த அமைதி பிடிக்காமல் “என்னாச்சு ப்பா. ஏன் இப்படி டல்லா இருக்கீங்க” என்று கேட்க

ஒருநிமிடம் அவளையே பார்த்தவன் “உன் அண்ணனுக்கும் ஸ்ரீகன்யாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று மொட்டையாக கேட்க

“புரியல ஸ்ரீ. என்ன கேட்கறீங்க நீங்க. ஷ்யாம் அண்ணாவை கேட்கறீங்களா ” என்று கேட்க

“கண்டிப்பா அனு. உன் ஷ்யாம் அண்ணாவை பத்திதான் பேசிட்டு இருக்கேன். அவனுக்கும் ஸ்ரீகன்யாவுக்கும் என்ன சம்பந்தம்.” என்று அவன் அழுத்தமாக கேட்க

“எனக்கெப்படி தெரியும் ஸ்ரீ. அன்னிக்கு நான் கேட்டப்போ அண்ணா அவார்ட் பங்க்ஷன் ல பார்த்ததா சொன்னாங்க. அவங்களுக்கு தெரிஞ்சவங்க போல ஸ்ரீ” என்று கூற

“அனு… உனக்கு புரியுதா.. ஐ திங்க் அவங்க லவ் பன்றாங்க” என்று கோபமாக கூற

அவள் சந்தோஷமே கொண்டாள்.” ஸ்ரீ என்ன சொல்றிங்க சூப்பர்ல. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். என்னா வாய்ஸ் தெரியுமா அவங்களுக்கு. இப்போ அவங்களே எனக்கு அண்ணியா… செம ல்ல” என்று அவள் குதூகலிக்க

“ஸ்டாப் இட் அனு.” என்று அவளிடம் கத்தியவன் அவள் புரியாமல் முழிக்கவும் தன்னையே நொந்து கொண்டு “அனு… நான் சொல்றேன்… பொறுமையா கேளு ப்ளீஸ்.” என்று கூறி ” நான் சொல்லி இருக்கேன்ல… என் அப்பாவோட பொண்ணு.. அவரோட அந்த பேமிலி பத்தி” என்று நிறுத்தி அவள் முகம் பார்க்க அவள் தலையசைக்கவும் மேலே தொடர்ந்தான்.

“அந்த பொண்ணு ஸ்ரீகன்யாதான்… அதோட நேத்து உன் அண்ணனோட அவளை பார்த்தேன். அவங்க கண்ல நல்லாவே தெரியுது ரெண்டு பேரும் லவ் பன்றாங்க.” என்று அவன் கூறி முடிக்க

“இதுல நீங்க இவ்ளோ கோபப்படற அளவுக்கு என்ன நடந்தது.? அவங்க லவ் பண்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டுவிட

” ஹ்ம்ம்…. உனக்கு புரியாது அனு. என்னோட வலி….” என்று அவன் கூறவும் அனு ஏதோ கூற வர அவளை தடுத்தவன் ” எனக்கு…. அவளோட உறவே வேண்டாம் ன்னு நினைக்கிறவன் நான். இன்னிக்கு வரைக்கும் அவளை எங்க குடும்பமா நான் ஏத்துக்கிட்டதே இல்ல.

“ஆனா இப்போ அவ உங்க குடும்பத்துல வந்துட்டா, வாழ்நாள் முழுமைக்கும் நமக்கு உறவாகிடுவா. ஏற்கனவே என் அம்மா அவளை விடவே மாட்டாங்க, இன்னும் இந்த விஷயமெல்லாம் தெரிய வந்தா அவளை மொத்தமா எங்க வீட்டுல கூட்டிட்டு வந்து உட்கார வச்சிடுவாங்க. எனக்கு அதையெல்லாம் பார்க்க வேண்டாம்.”

“எனக்கு எப்பவும் ஆதிநாராயணனோட வாரிசா நாந்தான் இருக்கணும். அவரோட மனைவின்னா அது என் அம்மா மட்டும்தான்.           என் குடும்பத்துல நாங்க மூணு பேர் மட்டும்தான். இது சுயநலமா கூட இருக்கலாம். ஆனா நான் இப்படித்தான்.

“இப்போ உன் அண்ணனால அது மாறும்ன்னா என்னால கண்டிப்பா ஏத்துக்க முடியாது. உன் அண்ணன் கண்டிப்பா இதோட நிறுத்தமாட்டான். அவளை ஆதிநாராயணனோட மகளா தான் எங்கேயும் முன்னிறுத்துவான். எனக்கு இதெல்லாம் வேண்டாம் அனு.”

“அவ எங்கேயோ யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போகட்டும். ஆனா அவ வாழ்க்கை எந்த வகையிலையும் என்னோட சம்பந்தப்பட்ட வேண்டாம். நமக்கு நடுவுல அவ வர வேண்டாம் அனு” என்று முடிக்க

கூர்மையான பார்வையுடன் ” இப்போவும் எனக்கு புரியல. நீங்க என்ன சொல்ல வரீங்க ன்னு. நீங்களே வழியையும் சொல்லிடுங்க” என்று அவள் அமைதியாக கூற

கடலை வெறித்த பார்வையுடன் ” சொல்றதுக்கு எதுவுமே இல்ல அனு. ஒன்னு நம்ம கல்யாணம் நடக்கும் இல்ல உன் அண்ணன் கல்யாணம் நடக்கும். ஆனா கண்டிப்பா ஒண்ணுதான் நடக்கும். உனக்கு நம்ம கல்யாணம் நடக்கணும் ன்னா உன் அண்ணன் கிட்ட பேசு. அவ வேண்டாம் ன்னு சொல்லிப்பாரு. உன் அண்ணன் தான் உனக்காக எதுவும் செய்வானே” என்று கூறி முடிக்க

“நிச்சயமா ஸ்ரீ. எதுவும் செய்வாங்க, ஏன் நான் கேட்டா இந்த காதலே வேண்டாம் ன்னு கூட சொல்லிடுவாங்க. எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல.” என்று நிதானமாக அவள் கூறவும் அவள் முகத்தை திரும்பி பார்த்தான் ஸ்ரீதர்.

அவன் எண்ணம் சரி என்பது போல அவனை பார்த்து நக்கலாக சிரித்தவள் ” ஆனா நான் ஏன் சொல்லணும். எனக்கு என் அண்ணனோட வாழ்க்கை ரொம்ப முக்கியம், எனக்காக அவன் வாழ்க்கையை அவன் விட்டு கொடுக்கணுமா. உங்களுக்கு எத்தனை தைரியம் ஸ்ரீ. இதை என்கிட்டேயே சொல்றிங்க”

“இப்போ சொல்றேன். என் அண்ணா கன்யாவை காதலிக்கிறானா ன்னு எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது. ஆனா அப்படி காதலிச்சா நானே அவங்க கல்யாணத்தை நடத்தி வைப்பேன்.”

“ஓஹ். அப்போ உனக்கு நம்ம காதலை பத்தி ஒன்னுமே இல்ல.அப்படித்தானே அனு.” என்று அவன் நக்கலாக கேட்க

“காதலா… அது எங்கே இங்கே இருக்கு. நீங்க பிசினஸ் பேசிட்டு இருக்கீங்க ஸ்ரீ, என்கிட்டே டீல் பேசிட்டு இருக்கீங்க. உன் காதலா ? உன் அண்ணன் காதலா ன்னு. சோ காதல் பத்தியெல்லாம் நீங்க பேசாதீங்க.” என்றவள்

“தேங்க் காட். நமக்கு கல்யாணம் நடக்கல. ஒருவேளை கல்யாணம் முடிஞ்சிருந்தா என்னை வச்சு என் அண்ணனை கார்னர் பண்ணி இருப்பிங்க நீங்க.” என்றவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் குளம் கட்ட, தன் காதல் பொய்த்து போனதில் வலி அவள் முகத்தில் தெரிந்தது. அவனுக்கு காட்ட விருப்பமில்லாமல் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.

அவனுக்கு அவளின் நிலை புரிந்தாலும் எதுவும் செய்வதாக இல்லை அவன். இந்த விஷயத்தில் அவனால் எதுவுமே செய்ய முடியாது என்பதில் அவன் உறுதியாக இருக்க அதற்கு தன் காதலையும் பலியிட துணிந்துவிட்டான்.

தன்னை சமன்படுத்திக் கொண்டவள் “போதும் ஸ்ரீ. உங்களை என்ன ஒரு வருஷமா தெரியுமா எனக்கு, அதுதான் நமக்கான காலம் போல. நிச்சயமா நீங்க சொன்னமாதிரி என்னால என் அண்ணா கிட்ட பேச முடியாது. நீங்க சொன்னதுதான் ஒரு கல்யாணம் நடக்கட்டும்.

” ஆனா அது நிச்சயமா நமக்கு இல்ல. என் காதல் என் மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கு ஸ்ரீ. அதுபோதும்…. உங்களோட வாழ்ந்து தான் அதை நிரூபிக்கணும் ன்னு இல்ல எனக்கு எந்த அவசியமும் இல்ல.”

“கன்யாவோட எந்த விதத்துலையும் சம்பந்தப்படாத ஒரு பொண்ண நீங்க பார்த்துக்கோங்க.” என்றவளுக்கு என்ன முயன்றும் கண்ணீர் வந்துவிட அவன் கைகள் ஸ்டியரிங் வீலில் அழுத்தமாக படிந்தது. கண்களை துடைத்துக் கொண்டவள் “தாங்க் யூ ஸ்ரீதர். தாங்க் யூ சோ மச்… எல்லாத்துக்கும். இனி என் முன்னாடி வராதீங்க ப்ளீஸ் ” என்றுவிட்டு காரிலிருந்து இறங்கிவிட்டாள்.

புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டு கால்கள் புதைய புதைய அவள் நடந்து செல்வதை கண்டவனுக்கு தன் மீதே கோபமாக வர, கண்கள் நீரினால் பளபளத்தது அவனுக்கு. இப்படியே இறங்கி அவள் பின்னால் சென்றுவிடுவோமா என்று மனம் துடிக்க, அதற்கு தயாராக இல்லை அவன்

அவள் பிம்பத்தை காட்டும் ரிவர் வ்யூ கண்ணாடியில் அவன் ஓங்கி குத்திவிட, அந்த கண்ணாடி துகள்கள் அவன் கையை பதம் பார்த்தது தான் மிச்சம்.       ஆனால் அடுத்த நொடியே மனம் மீண்டும் அவளை பார்க்க சொல்ல காரிலிருந்து வெளியே வந்தவன் தன் காரில் சாய்ந்து நின்று செல்லும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சாரி அனுமா… நான் உனக்கு தகுதியே இல்லாதவன்.” என்று சொல்லிக் கொண்டவனுக்கு கடவுள் மீது அத்தனை கோபம் வந்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும். என்ன பாவம் செய்தேன் நான்?? இவள் மீது காதல் வைத்தது தான் நான் செய்த குற்றமா??

நான் விரும்புவது எதுவுமே தனக்கு நிலைக்காதா? என்று அவன் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருக்க, கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. கையிலும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்க வலிக்கவே இல்லை அவனுக்கு.

நெஞ்சின் காயங்கள் மிகுந்து இருந்ததால் அந்த சிறு காயத்தின் வலி அவனுக்கு உரைக்கவில்லை போலும்

Advertisement