Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 12

                         தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும் பேசும் முன்பாகவே மதியம் வருவதாக கூறி போனை வைத்திருந்தார்.

                  அத்தனை கோபம் வந்தது அவரின் செயலில், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர் என்று புழுங்கியவன் அவன் கோபத்தை உணவில் காட்டி இருந்தான். காலை அவன் அறைக்கு வந்த சமையல் செய்பவர் அவன் வார்த்தைகளை கடித்து துப்பியதில் பயந்து ஓடியது தான். அதன்பிறகு அவன் அறைபக்கம் கூட தலைவைக்கவில்லை அவர்.

                        வெகுநேரம் படுக்கையிலேயே இருந்தவன் இப்போது சற்று முன்னர்தான் எழுந்து குளித்து விட்டு பால்கனியில் அமர்ந்து இருந்தான். அந்த நேரம் வேதவதியின் கார் உள்ளே நுழைய, புன்னகை முகமாக அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தார் அவர்

                               அவரைக் கண்டவனுக்கு மீண்டும் கோபம் வரப்பார்க்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் எழுந்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்து விட்டான். அடுத்த ஐந்து நிமிடத்தில் உடையை மாற்றி அலுவலகத்திற்கு செல்ல தயாராக அவன் வெளியில் வர, உணவுடன் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தார் வேதா.

                        அவரை கண்டுகொள்ளாமல் தன் லேப்டாப், இன்னபிற பொருட்களை எடுத்து கொண்டவன் தன் மொபைலை காணாமல் தெடிக் கொண்டிருந்தான். கடைசியாக வேதவதியிடம் பேசிவிட்டு தூக்கி எறிந்திருக்க, எங்கோ ஒரு மூலையில் சென்று விழுந்திருந்தது அது.

                  அவன் செயல்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த வேதவதிக்கு பள்ளிக்கு கிளம்பும்போது அழுதுகொண்டே தாயுடன் சண்டையிடும் ஒரு சிறுவனின் முகம் தான் தெரிந்தது. அப்படிதான் இருந்தது அவன் செயல்கள். பொறுமையாக இருந்தால் அவனே யோசித்து அந்த மொபைலை எங்கே போட்டிருந்தானோ அங்கிருந்து எடுத்திருப்பான்.

                    அப்படி ஒன்றும் மறந்து விடுபவன் இல்லை. ஆனால் இப்போது அவன் கோபத்தை அன்னைக்கு காட்ட வேண்டும் அதற்காகவே இந்த செயல்கள் என்று வேதாவுக்கு புரிய, அங்கிருந்த டீப்பாயில் உணவை வைத்துவிட்டு கட்டிலில் அமர, அவர் அமர்ந்த இடத்திற்கு கீழே அவர் காலில் தட்டுப்பட்டது அவன் மொபைல்.

                    குனிந்து அதை எடுத்தவர் அவன் கீழே போட்டு வைத்திருந்த போர்வையையும் எடுத்து கட்டிலில் போட, கோபமாக மொபைலை எடுத்துக் கொண்டு அவன் வெளியேற, கையில் அன்னைக்கான மாத்திரையுடன்  உள்ளே நுழைந்தார் வேலையாள். திரும்பி அன்னையை அவன் முறைக்க, இப்போது அவர் கண்டுகொள்ளவில்லை.

                      அவர் அமைதியாகவே வேடிக்கை பார்க்க, தன் லேப்டாப் பையை அங்கிருந்த சோஃபாவில் வீசிவிட்டு, வேலையாளிடமிருந்த அவரின் மாத்திரையையும் தண்ணீரையும் கையில் வாங்கி கொண்டவன் அவரை அனுப்பிவிட்டு வேதவதியிடம் மாத்திரையை நீட்ட, நிமிர்ந்து அவனை பார்த்தவர் டீப்பாயில் இருந்த உணவை பார்க்க ‘சாப்பிட்டு தொலைக்கிறேன் பிடிங்க” என்று கத்தினான் அவன்.

 

                  அப்போதும் அவர் மாத்திரையை வாங்காமல் போக, கையிருந்ததை டீபாயில் வைத்தவன் கட்டிலில் அமர்ந்து சாப்பிட தொடங்கினான். வேதவதி “அப்படி வா வழிக்கு” என்பதை போல் அவனைப் பார்த்தவர் அவன் உண்டு முடிக்கவும் மாத்திரையை தானே எடுத்து போட்டுக் கொண்டார்.

                       அவர் மாத்திரை போட்டுக் கொண்டவுடன் “போய் படுங்க கொஞ்ச நேரம். மறுபடியும் யாரையும் பார்க்க போறேன்னு கிளம்பிடாதீங்க ” என்று அவரை முறைத்து கொண்டே நக்கலாக கூறியவன் கிளம்பிவிட்டான். அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்த வேதா “இவனோட” என்று செல்லமாக சளித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

————————————————————–                       

                                வேதவதி கிளம்பியதும் தனித்து விடப்பட்ட கன்யாவின் மனதில் மீண்டும் ஷ்யாம் பற்றிய எண்ணங்களே வலம் வர, இது உனக்கு ஒத்து வராதது என்று அப்போதும் அவள் மனம் அடித்துக் கூறியது. இந்த எண்ணங்களே வேண்டாம் என்று அவன் பற்றிய சிந்தனைகளை ஒதுக்கி வைத்தவள் நேரத்தை பார்க்க, மணி ஐந்து ஆகி இருந்தது.

                வீட்டிலேயே அடைந்து கிடப்பது ஏதோ போல் இருக்கவும், எழுந்து உடையை மாற்றிக் கொண்டவள் அடுத்த சில நிமிடங்களில் அழகாக தயாராகிவிட்டாள். ஒரு இளநீல வண்ண சுடிதார் அணிந்து தலையை மொத்தமாக சேர்த்து ஒரு பாண்டில் அடக்கி இருந்தவள் கையில் ஒரு தங்க நிற வாட்ச். வலது கையில் எப்போதும் இருக்கும் ஒரு அழகான வளையல். கழுத்தில் மெல்லிய செயின், காதில் முத்து போல இருப்பதே தெரியாமல் ஒரு சிறிய தோடு என்று அவள் மிகவும் சாதாரணமாகவே கிளம்பி இருக்க, அதுவே எதிரில் நிற்பவரை அசத்துவதாக இருந்தது.

                        கீழே இறங்கியவள் மாரியுடன் வண்டியில் புறப்பட, அவர் எங்கே என்று கேட்க “கோவிலுக்கு போங்கண்ணா” என்று கூறி விட்டாள். அவளுக்கு பெரிதாக எங்கும் சுற்றும் எண்ணம் இல்லை என்பதும் கூடவே உடல்நிலையும் அவளை கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுக்க வைத்தது.

           மாரி அவள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு வண்டியை செலுத்த, அன்று பிரதோஷ தினமாக இருக்கவும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது கோவிலில். கூட்டத்தை பார்த்தவள் யோசனையுடன் காரிலேயே அமர்ந்துவிட, மாரி தான் உடன் வருவதாக சொல்லி அவளை அழைத்து சென்றார்.

            அவளை கண்டவுடன் நெருங்கி வந்தவர்களை அவர் ஒரு கையால் தடுத்துக் கொண்டே அவளை உள்ளே அழைத்து சென்றுவிட, அங்கு கோவில் நிர்வாகத்தினருக்கு அவளை தெரியவும், அதன்பின்பு அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். கடவுளின் முன்பு கண்மூடி நின்றவள் ” என் குழப்பங்களுக்கு எல்லாம் ஒரு முடிவினை கொடுத்துவிடு இறைவா, எனக்கு இதன் மீதும் ஆசை வந்துவிடக்கூடாது” என்றே வேண்டிக் கொண்டாள்.

                மனதில் ஏதோ ஜபித்துக் கொண்டு அவள் கண்மூடி நின்றுவிட,சில நிமிடங்களுக்கு பிறகே கண்களை திறந்தவள் இறைவனை மீண்டும் ஒருமுறை தரிசித்துவிட்டு திரும்ப அங்கு அவளுக்கு எதிர்புறம் நின்றிருந்தனர் வசுமதியும், பத்மினியும்.

                    அன்று பிரதோஷ வழிபாட்டிற்காக பத்மினி கிளம்பி இருக்க, கூடவே வசுமதியும் அடம்பிடித்து வந்திருந்தாள். ஏற்கனவே மதியம் சாப்பிடாமல் அவரிடம் திட்டு வாங்கி இருக்க, இப்போது மீண்டும் திட்டு வாங்கி கொண்டுதான் அவருடன் வந்திருந்தாள்.

 

                       ஸ்ரீகன்யாவிற்கு வசுமதியை நன்கு நினைவிருக்க அவளை பார்த்தவுடன் ஒரு விரிந்த புன்னகை தான் அவளிடம். தானாக யாரிடமும் சென்று பேசாதவள் வசுமதியிடம் தானே சென்று பேச, அவளும் சாதாரணமாகவே பேசினாள் கன்யாவிடம். ஆனால் பத்மினியின் உடல்மொழி சாதாரணமாக இல்லையோ என்று தோன்றியது கன்யாவிற்கு. அன்று அத்தனை இனிமையாக பேசியவர் இன்று அப்பட்டமாக முகத்தில் ஏதோ ஒரு அசௌகரியத்தை காட்டிக்கொண்டு நின்றிருந்தார். கன்யாவிடம் பேச அவர் விரும்பவில்லை என்பதை அவர் உடல்மொழி உணர்த்திவிட, அதை முதலில் கவனித்து விட்டதும் கன்யா தான்.

                        வசுவிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தவள் அவரை உணர்ந்து கொண்ட நொடி, அவசர வேலையிருப்பதாக கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். எப்போதுமே தனது தேவை தேவைப்படாத இடத்தில் அவளால் பொருந்த முடியாது. இப்போதும் அதுபோலவே அவர் லேசாக தயங்கியதற்கே அந்த இடத்திலிருந்து விலகிவிட்டாள். ஆனால் மனதில் ஏன் இப்படி  நடந்து கொண்டார் என்று ஓடிக் கொண்டிருக்க, அதே யோசனையுடன் வெளியேறிக் கொண்டிருந்தாள் அவள்.

                  அந்த நேரம் சரியாக கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் ஷியாம் கிருஷ்ணா, அவன் அருகில் கோகுல் நடந்துவர இவளுக்கு அவனை தெரியவில்லை. இவளுக்கு தெரிந்தது எல்லாம் புன்னகையோடு வந்து கொண்டிருந்த ஷ்யாம் தான். ஏனோ பத்மினியின் செயலுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது போல் தோன்றியது அவளுக்கு.

                 ஏளனமாக ஒரு புன்னகை அந்த நொடி உருவாக “பாவம் அவரும் மனிதர்தானே” என்று எண்ணிக் கொண்டவள் அவனை கண்டுகொள்ளாமல் நடந்துவிட, இதற்குள் மாரியும் எங்கிருந்தோ வது அவளுக்கு பாதுகாப்பாக உடன் இருந்தார். அவள் வேகமாக நடந்துவிட, உடன் வந்திருந்த அண்ணனிடம் என்ன சொல்லிவிட்டு அவள் பின் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

                      ஆனால் அந்த நேரத்தை கூட அவனுக்கு தர விரும்பாதவள் காரில் ஏறிய மறுநொடி “காரை எடுங்க மாரிண்ணா” என்று கூறிவிட,வேகமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டது அந்த கார். ஷ்யாம் கோகுலிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியில் வந்து பார்க்க, அவள் கிளம்பியிருந்தாள்.

                    ஏமாற்றமாகவும், கூடவே ஏனென்று அறியாமல் கோபமாகவும் வந்தது அவனுக்கு. இரண்டு நிமிஷம் நிற்க மாட்டாளா என்று தோன்றிவிட, ஏனோ மனது வருத்தமாக உணர்ந்தது. வீடு திரும்பும் வரையிலும் கூட அவன் முகம் சற்று வாட்டமாகவே இருந்தது. கோகுலுக்கு அவனின் இந்த மாற்றம் கண்ணில்பட்டாலும் ஏன் என்று புரியவில்லை. அன்னை உடன் இருப்பதால் அவனும் எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை.

                              வீட்டை அடைந்ததும் ஷ்யாம் அவன் அறைக்கு சென்றுவிட, கோகுல் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான். பத்மினி ஏதோ வேலையாக சமயலறைக்குள் நுழைய அவர் பின்னால் நடந்தாள் வசுமதி. அவர் ” ஏதாவது வேணுமா வசு பசிக்குதா” என்று கேட்கவும்

                அவரை கூர்மையாக பார்த்தவள் “ஏன் அத்தை கன்யாகிட்ட அப்படி நடந்துக்கிட்டிங்க.” என்று கேட்க

             “எப்படி நடந்துக்கிட்டேன் ” என்று ஒன்றும் தெரியாதவரை போல் அவர் கேட்க

 “அவகிட்ட பேச விருப்பம் இல்லைன்னு சொல்ற மாதிரி முகத்தை  திருப்பிட்டு நின்னுட்டு இருந்திங்களே, அதை கேட்கறேன் அத்தை. அவ முகமே மாறிடுச்சு தெரியுமா” என்று வருத்தமாக கூற

                 “இதுல வருத்தப்பட என்ன இருக்கு வசு. ஏதோ ஒருமுறை எங்கேயோ பார்த்தோம் பேசினோம். அவ்வளவுதானே, அதைத்தவிர அவளுக்கும் நமக்கும் என்ன இருக்கு. எனக்கு அவகிட்ட பேச எதுவும் இல்ல. நீயும்கூட அவகிட்ட அதிகம் பேச்சு வச்சுக்காத.” என்று அவர் சாதாரணமாக கூறவும்

                  “உங்களுக்கு பொய் சொல்ல வராது அத்தை. அதான் சொதப்புறிங்க, நிச்சயம் ஏதோ இருக்கு. இல்லேன்னா இப்படி அவளை கஷ்டப்படுத்தி இருக்கமாட்டீங்க. அவ நடந்து போனாலே பேன்ஸ் ன்னு சொல்லி அவ பின்னாடி அத்தனை பேர் போவாங்க அத்தை. அப்படி ஒரு ஆள் அவ, ஆனா அந்த ஈகோ கொஞ்சம் கூட இல்லாம அவளா நம்மை தேடி பேசவந்தா, அவளை கஷ்டப்படுத்திங்களே.” என்று அவள் பேசிவிட

                    “அவ பின்னாடி எத்தனை பேர் வேணாலும் போகட்டும் வசு, எனக்கு அதை பத்தி கவலையில்லை. ஆனா, என் குடும்பத்துல இருந்து யாரும் அந்த பொண்ணு பின்னாடி போக வேண்டாம். அவ நல்ல பொண்ணுதான், இருக்கட்டும். ஆனா நமக்கு அவளோட சகவாசம் வேண்டாங்கிறது என்னோட எண்ணம். அவ்ளோதான்.”

                    “அதோட அந்த பொண்ண எல்லாம் தூர நின்னு ரசிக்கறதோட நிறுத்திக்கணும். பக்கத்துல போக வேண்டாம். அதுதான் எல்லாருக்கும் நல்லது. நீயும் அவளோட பேச்சை குறைச்சிக்க” என்று அவர் முடிவாக கூற

                 “என்ன நடந்துச்சு அத்தை ” என்று அவள் மீண்டும் கேட்க

 

           ” எதுவுமே நடந்திட கூடாதுன்னு தான் வசு கவலைப்படறேன். உன் மாமா என்னென்னவோ சொல்றாங்க. எனக்கு என் குடும்பம் நிம்மதியா இருந்தா போதும்.” என்று கூறியவர் ” நீ ஹால்ல இரு, அத்தைக்கு டிஃபன் கொடுத்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டார் பத்மினி.

                        ஷ்யாம் அவன் அறையில் கட்டிலில் படுத்திருந்தவனுக்கு மனம் முழுவதும் ஸ்ரீகன்யாவின் செய்கை தான் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்து விடுவேன் இவளை? என்னிடம் நின்று ஒருவார்த்தை பேச இவளால் முடியாதா ? அப்படி என்ன ஓடி ஒளிய வேண்டும். என்று வரிசையாக ஸ்ரீகன்யாவை வசைபாடிக் கொண்டிருந்தான்.

                     வெகுநேரம் தன் யோசனையில் மூழ்கி இருந்தவனுக்கு உறக்கம் வராமல் போக, ஏதோ ஒரு எண்ணம் ஸ்ரீகன்யாவிடம் பேச வேண்டும் என்பது போல். ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்று கேட்கவேண்டும் என்று தோன்றி கொண்டே இருக்க, நேரத்தை கூட பார்க்காமல் அவளுக்கு அழைத்துவிட்டான்.

                       ஒருமுறை முழுதாக அடித்து நின்றுவிட்டது அலைபேசி, அழைப்பு ஏற்கப்படவே இல்லை. மனம் சோர்ந்தவனாக அப்போதுதான் நேரத்தை பார்க்க அது பதினொன்றை காட்டவும், இத்தனை மணிக்கு அழைத்தால் எப்படி எடுப்பாள்? என்று மனசாட்சி கேள்வி கேட்க, ” ஏன் நான்தானே பண்றேன், என்கூட பேசினா என்ன ஆகிடும்” என்று அதை அதட்டியவன் இன்று அவளை விடுவதில்லை என்று முடிவு செய்தவனாக மீண்டும் அழைக்க எதிர்முனையில் அழைப்பை ஏற்கவேண்டியவளோ அப்போது தான் பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தாள். போன் இசைக்கும் சத்தம் கேட்கவும், அருகில் சென்று எடுத்து பார்க்க ஷ்யாமின் எண். இன்னும் பதிந்து கொள்ளவில்லை என்றாலும் ஏனோ மறக்கவே இல்லை அவனின் எண். பார்த்தவுடன் புரிந்து விட எடுப்பதா வேண்டாமா என்ற யோசனைதான் அவளிடம்.

                 அதுவும் கோவிலில் பத்மினி நடந்து கொண்டது நினைவு வர, எடுக்க மனமில்லை அவளுக்கு. வெறுமனே நின்று வேடிக்கை பார்த்தவள் எடுக்காமல் விட, முழுவதும் அடித்து நின்றது கைப்பேசி. அப்போதுதான்  அவன் ஏற்கனவே ஒருமுறை அழைத்திருப்பது தெரிய ” ஏன் இப்படி இருக்கிறான்?? எடுக்கவில்லை என்றால் புரிந்துகொள்ள மாட்டானா ” என்று அவள் மனம் அவனை சாட

                 அடுத்த சில நொடிகளில் மீண்டும் அழைப்பு. ஏனோ எரிச்சலாக வர அதை மொத்தமாக அவனிடம் காட்டிவிடும் வேகத்தில் தான் அவள் அலைபேசியை எடுத்தது. ஆனால் அலைபேசியை காதில் வைத்த நொடி மென்மையாக காதுகளில் மோதியது “கன்யா ” என்ற அவனின் குரல்.

               ஏனோ எப்போதும்போலவே அவனிடம் கோபப்பட முடியாமல் அவள் தடுமாறி நிற்க, எதிர்முனையில் இருந்தவன் மீண்டும் கன்யா என்று அழைத்திருந்தான். அவனுக்கு பதிலாக “ம்ம்” என்று தன் இருப்பை உணர்த்தியவள் வேறு பேசவில்லை. நிச்சயம் சத்தம் போடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவளோ மௌனத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.

                      அவள் மௌனம் அவனுக்கு பிடிக்காமல் போக “ஏதாவது பேசு கன்யா. இப்படி அமைதியா இருக்காத.” என்று அவன் கூறவும் அடுத்தநொடி “எதுக்கு கால் பண்ணீங்க. அதுவும் இந்த நேரத்துல” என்று கேட்க

 

                     “உனக்கு வேற எதுவுமே தெரியாது இல்ல. ஏன் கால் பண்ணீங்க? எதுக்கு இங்க வந்திங்க ன்னு கேள்வியா கேளு. ஆனா நீ எத்தனை கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன்.”

                   “என்ன கேட்ட? எதுக்கு கால் பண்ணேனா. எனக்கு உன்கிட்ட பேசணும். ரெண்டே விஷயம் கேட்கணும் நான்.” என்றவன் “அது என்ன கன்யா கோவில்ல பார்த்தவுடனே அப்படி வேகமா போற, அப்படி நீ பார்க்கக்கூட பிடிக்காம அவொய்ட் பண்ற அளவுக்கு உன்னை என்ன பண்ணிட்டேன் நான். உன்னை எனக்கு பிடிச்சிருக்கு னு உன்கிட்ட நேரடியா வந்து சொன்னது அத்தனை பெரிய தப்பா ? அதுக்காக என் முகத்தை கூட பார்க்காம என்ன அவொய்ட்  பண்ணுவியா நீ.” என்று காய்ந்தவன்

                  “அடுத்து என்ன கேட்ட இந்த நேரத்துல ஏன் கால் பண்ணேன்னு தான. உன்கிட்ட பேச என்னால நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது. இது தப்புன்னா உன்னோட வச்சிக்கோ என்கிட்டே சொல்லாத. சத்தியமா நான் மதிக்கமாட்டேன். யார் என்ன சொல்வாங்க? எப்படி பார்ப்பாங்க ன்னு எல்லாம் எனக்கு கவலையே இல்லை கன்யா. ஏன்னா நான் வாழனும் ன்னு நினைக்கிறது உன்னோட. நீ என்ன நினைக்கிற ன்னு யோசிச்சா மட்டும் போதும்.” என்று மூச்சுவாங்க அவன் பேசி முடிக்க

                     ” நீங்க இப்படி பண்றது எனக்கு பிடிக்கும் ன்னு தோணுதா உங்களுக்கு” என்று அவள் வேகமாக கேட்க , அடக்கமுடியாமல் சத்தமாக சிரித்துவிட்டான் அவன்.” டேய், குட்டிமா எவ்ளோ பேசி இருக்கேன். அதையெல்லாம் விட்டுட்டு இங்கேதான் உனக்கு டவுட் வருதாடா?” என்று சிரித்தவன் மேலும்

                      “உனக்கு பிடிக்குதா ன்னு என்னால இப்போ சொல்ல முடியாது. ஏன்னா அதை என் குட்டிப்பொண்ணு தான் சொல்லணும். ஆனா நிச்சயமா உனக்கு பிடிக்காம இல்ல. உனக்கு என்னை பிடிக்கவே இல்லை என்னை பார்த்தாலே வெறுப்பா வருது அந்த பீலிங் எல்லாம் நிச்சயமா இல்ல. என்னால 100% சொல்ல முடியும் குட்டிப்பொண்ணு” என்று அவன் அழுத்தமாக கூற

                      “என் பேர் கன்யா.” என்று அதே அழுத்தத்துடன் அவள் உரைக்க

     “அப்படியா. எனக்கு என்னவோ குட்டிப்பொண்ணு மாதிரி தான் தெரியுற, சோ இப்படியே கூப்பிடுறேன்.” என்று இலகுவாக கூறியவன் “டேய், கன்யா இப்போவும் நான் என்ன பேசினேன் ன்னு முழுசா யோசிச்சு பாரு. உனக்கு அதுக்கெல்லாம் கோபமே வரல. நான் குட்டிப்பொண்ணு ன்னு கூப்பிட்டதுதான் கோபம் வருது. கொஞ்சம் யோசிச்சு பாருடா. கல்யாணமே வேண்டாம் ன்னு யோசிக்காம ஷ்யாம் வேணுமா வேண்டாமா ன்னு யோசிக்கலாம்ல.” என்று அவன் நிறுத்த அத்தனை கொஞ்சியது அவன் குரல்.

 

                       ஆனால் அவன் சொல்லியதை யோசித்தவளுக்கு “அவன் சொல்வது உண்மைதானே. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்?” என்று தோன்றிவிட கண்களில் நீர் நிறைந்தது. அவனுக்கு பதிலே சொல்லாமல் அமைதியாகி விட்டாள் அவள்.

 

              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement