Advertisement

அத்தியாயம் 11

 

                         காலையில் கண்விழித்த ஸ்ரீகன்யாவிற்கு உடல் அத்தனை களைப்பாக இருக்க, ஒரே நாளில் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தாள் அவள். மிகவும் சிரமப்பட்ட கண்களை திறக்க, அருகில் இருந்த வேதவதி அவள் கண்களில் பட்டார். அவரை கண்டவுடன் அவள் பதறிப் போனவளாக எழுந்து கொள்ள பார்க்க, அவள் தோளை பிடித்து அழுத்தியவர் அவளை மீண்டும் படுக்க வைத்தார்.

 

                   அப்போதும் அவள் மறுப்பாக அவரை பார்க்க, அவள் பார்வையை உணர்ந்தவர் “மதியம் கிளம்பிடுவேன். உனக்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில உன்னை தனியா விடமுடியாது.அதனால தான் உன்னை கேட்காம உன் வீட்டுக்கு வந்திட்டேன். போதுமா ??” என்று கூறிவிட

 

             அவள் கண்களில் நீர் நிறைந்தது. அவள் கண்ணீரை கண்டவர் “ஏற்கனவே காய்ச்சலை இழுத்து வச்சிருக்க. அழுதழுது அதிகமாக்கிக்காத. அமைதியா ஓய்வெடு, நீ சரியாகி என்கிட்டே சண்டை போட்டு துரத்துற வரைக்கும் இங்கே இருக்கேன்.” என்று அவர் கூற

 

              அவரை முறைத்தவள் “எல்லாமே நான் சொல்லிதான் செய்விங்க நீங்க. இல்லையா??” என்று கேட்க

       “இல்லையே.. என் மகளுக்கு எது நல்லதுன்னு எனக்கு தோணுதோ அதை நானே செய்வேன் ” என்றவர் அவள் அருகில் அமர்ந்து கொண்டார்.

 

                   அவள் அவரையே அசையாமல் பார்க்க, “நீ ரொம்ப யோசிக்கிற ஸ்ரீம்மா. வாழ்க்கையோட ஓட்டத்துல ஒட பழகிக்கோ, ஸ்ரீதரோட அம்மாவை நீ பறிச்சிக்க வேண்டாம். ஆனா அதே சமயம் என்கிட்டே இருந்து என் மகளை பிரிச்சிடாத.” என்று அவள் கண்களை பார்த்து கூற கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கன்னத்தில் வழிந்த விட்டது.

 

                  அவள் கண்களை அழுத்தமாக துடைத்துவிட்டவர் “அழாம படுத்து தூங்கு. உடம்பு குணமாகிட்டா எழுந்து ஓடிஏ ஆரம்பிச்சிடுவ. ரெண்டு நாள் ரெஸ்ட் ன்னு நெனச்சிக்கோ.” என்று கூற, லேசாக நகர்ந்து வந்தவள் அவரின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

 

                        வேதவதி இதை எதிர்பார்க்கவில்லை போலும். அவர் இவளிடம் இப்படி பேசுவது இது முதல் முறை கிடையாது. அவள் அன்னை இறந்த நாளாக அவ்வபோது அவளிடம் வழிய வந்து பேசுவது தான். ஆனால் பல சமயங்களில் காதில் வாங்கியது போல கூட காட்டிக் கொள்ள மாட்டாள். அவர் பேசும்வரை பல்லை கடித்துக்கொண்டு நிற்பவள் அவர் பேசி முடித்த அடுத்தநொடி விலகி சென்று விடுவாள்.

 

                                இப்போதும் அவர் அதைப்போலவே பேசி வைத்திருக்க, என்னவோ பெண் அன்னையிடம் ஒட்டிக் கொண்டாள். அவர்  வாஞ்சையாக அவளின் தலையை தடவிவிட, மேலும் மேலும் அவரிடம் ஒண்டிக் கொண்டாள். அன்னம் அந்த நேரம் வந்தவர் இவர்களை பார்த்துவிட்டு வாயில் கை வைக்க, வேதவதி அவரை ஒற்றை விரல் நீட்டி மிரட்டவும் புன்னகையுடன் நகர்ந்து சென்று விட்டார்.

 

                          மீண்டும் அவள் உறங்கும்வரை வேதவதி அப்படியே இருக்க அவரின் மடியிலேயே படுத்து உறங்கிவிட்டவள் வெகுநேரம் கழித்தே எழுந்தாள். அப்போதுதான் அவர் மடியில் உறங்கிவிட்டதை உணர்ந்தவளுக்கு அவர் உடல்நிலையை நினைத்து கவலையாக இருக்க, “அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன். பயப்படாம இன்னும் கூட கொஞ்ச நேரம் தூங்கலாம் ” என்று அவர் இலகுவாக கூறவும்,புன்னகையுடன் அவரை கட்டிக் கொண்டவள் “தேங்க்ஸ் வேதாம்மா. தேங்க்ஸ்” என்று கூற வேதாவுக்கும் புன்னகையே.

 

                     அவளின் இந்த “வேதாம்மா” மிக அரிதான ஒன்று. சிறுவயதில் விவரம் தெரியாத பொது ஆதிநாராயணன் சொல்லி கொடுத்தது. பெரியவளானதும் மறைந்து இருந்தது, அவள் அன்னையின் இறப்புக்கு பிறகு இல்லவே இல்லை என்றாகி விட, இன்று அவளாக “வேதாம்மா” என்று அழைத்ததில் யாவருமே உணர்ச்சி வசப்பட்டு தான் போனார்.

 

                 அவர் கண்களும் கலங்கிய இருக்க, எப்படி இந்த பெண் மேல் இத்தனை பாசம் வந்தது என்று வேதவதியே கேட்டுக்கொண்டாலும் அவரிடம் பதில் இருக்காது. அப்படி ஒரு பிணைப்பு இருவருக்கு இடையேயும். இத்தனைக்கும் பெரிதாக பேச்சுகள் கூட இருந்தது இல்லை.

 

                 சொல்லப்போனால் அவளுக்கும் ஆதி நாராயணனை விட வேதவதியின் மீது தான் அதிக கோபம் வர வேண்டும் தன் அன்னையின் வாழ்வை பறித்துக் கொண்டார் என்று. ஸ்ரீதரின் வாதம் கூட அதுதானே. ஆனால் அவளோ இதுவரை எங்கும் வேதவதியை ஒரு வார்த்தை சொன்னது கிடையாது.

 

                     ஆயிரம் கோபங்கள், வாதங்கள் இருந்தாலும் அது தந்தையிடம் மட்டுமே. தேடிவரும் இந்த அன்பை அவள் இதுவரை உதாசீனப்படுத்தியதில்லை. ஆனால் இன்றுபோல ஈஷிக் கொண்டதும் இல்லை என்பதால் தான் வேதவதி உணர்ச்சி வசப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் தெளிந்து விட்டவர் மகளை தன்னிடமிருந்து பிரித்து “என்னாச்சு ஸ்ரீம்மா. ஏதோ சரி இல்லையே” என்று கேட்க

 

                       “என்ன சரியில்ல, உங்களை கட்டி பிடிச்சதா.”என்று அவள் கேட்கவும், அவள் காதை திருகியவர் “நேத்து சுய நினைவே இல்லாத அளவுக்கு காய்ச்சல், மதியம் வரை நல்லா இருந்தவளுக்கு நைட் அப்படி ஒரு காய்ச்சல் எப்படி வரும்? அதோட இப்போ காய்ச்சல் விடவும் கன்னுகுட்டி போல உரசிட்டு இருக்கியே. அதான் என் சண்டக்கோழி எப்போ கன்னுகுட்டி ஆச்சுன்னு சந்தேகமா இருக்கு” என்று அவர் கூற

 

                              அவரை செல்லமாக முறைத்தவள் “நான் சண்டைக்கோழியா.? நீங்க வேற வேதாம்மா. ரெண்டு மூணு நாளாவே வேலை கொஞ்சம் அதிகம்.அதோட அன்னிக்கு பார்ட்டில ஐஸ்க்ரீம் கொஞ்சம் ஓவர் டோஸா போய்டுச்சு. அதான் எல்லாம் சேர்ந்து என்னை செஞ்சிடுச்சு. வேற ஒன்னும் இல்ல” என்று கூற

 

                      அவளை சந்தேகமாக பார்த்தாலும், வேறு எதுவும் தோன்றவில்லை அவருக்கு. ” ஏதாவது பிரச்சனை ன்னா  யார்கிட்ட யாவது சொல்லணும் ஸ்ரீம்மா. உனக்குள்ள போராடிகிட்டே இருக்க கூடாது. எதையாவது யோசிச்சு உடம்பை கெடுத்து வைக்காத ” என்று அவர் கனிவாக கூறவும்

 

                      அவர் கூற்றை ஒப்புக்கொண்டவள் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். அன்று காலை உணவை அன்னம் அறைக்கே கொண்டுவர அன்னையும், மகளும் ஒன்றாகவே உண்டனர். உண்வு முடிந்தும் கூட கிளம்பும் எண்ணம் இல்லை வேதவதிக்கு. மதியம் வரை அவளுடனே இருந்தவர் மீண்டும் வருவதாக சொல்லி மதிய  உணவுக்கு பிறகு அவர் வீட்டிற்கு கிளம்பினார்.

      —————————————

 

தங்கள் வேலை நடந்து கொண்டிருக்கும் ஒரு சைட்டில் நின்றிருந்தான் ஷ்யாம். அந்த சைட்டில் காலையில் ஒரு பிரச்சனையின் காரணமாக வேலை சிறிது தாமதம் ஆகி இருக்க, ஏகக்கடுப்பில் நின்றிருந்தான் அவன். அந்த சைட் வேலைகள் முக்கால்வாசி முடிந்திருக்க இன்னும் ஒரு மாதத்தில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நிலையில் அங்கு ஏதும் பிரச்சனை ஏற்படுவதை விரும்பாதவன் தானே நேரடியாக வந்திருந்தான்.

 

            அங்கு நின்றிருந்த தங்கள் இன்ஜினியர்கள் தொழிலாளர்கள் என்று யாரையும் விட்டு வைக்காமல் அவன் காய்ச்சி எடுத்திருக்க அங்கு சற்று பரபரப்பாகவே வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த சைட்டில் கட்டுமான வேலைகள் முழுவதும் முடிந்திருக்க, இறுதிக்கட்ட  வேலைகள் மட்டுமே மீதம் இருந்தது.

 

                    அங்கு மீதமாகி இருந்த சிமெண்ட், மணல் போன்றவற்றை இன்னொரு சைட்டுக்கு எடுத்து செல்வதற்காக வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்க, அங்கு அவர்களுடன் தான் நின்றிருந்தான் அவன். அந்த மதிய வேளையில் உச்சி வெயிலில் நின்றுக் கொண்டு அவர்களை வாட்டிக் கொண்டிருந்தான்.

 

                     அந்த நேரம் அவர்களின் கார் அங்கு வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினான் கோகுல். தூரத்தில் வரும்போதே ஷ்யாமை பார்த்துவிட்டவன் அவன் அருகில் வர, அண்ணனை கண்டதும் அவனை முறைக்க ஆரம்பித்தான் அவன்.

 

                      நேற்று தான் அவன் வெளிநாட்டிலிருந்து திரும்பி இருக்க, வீட்டில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு இவன் கிளம்பி வந்திருந்தான். அவன் வந்து இரண்டு மணிநேரத்தில் அவனும் பின்னால் வந்து நிற்க அவனை முரைத்துக் கொண்டிருந்தான் ஷ்யாம். கோகுல் அவன் முறைப்பை கண்டுகொள்ளாமல் இவன் அருகில் வந்து நின்றவன் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு அவர்களிடம் தலையசைக்க இவன் பின்னால் நின்றவர்கள் அப்பாடா என்ற உணர்வுடன் தப்பி சென்றனர்.

 

                 அவர்கள் செல்லவும் “ஏண்டா நீ வேகுறது இல்லாம அவங்களையும் ஏண்டா போட்டு தாளிச்சுட்டு இருக்க. என்ன உன் பிரச்சனை” என்று கோகுல் ஷ்யாமிடம் கேட்க

 

                     “நீ வீட்ல இல்லாம இங்க என்னடா பண்ணிட்டு இருக்க. அண்ணி கூட கொஞ்ச நேரமாச்சும்  இருக்கியா நீ. நேத்து வரைக்கும் பாரின் ட்ரிப், இன்னிக்கு ஆபிஸ். அவங்க உன்ன எதுவும் கேட்கறது இல்ல, அதான் மகனே நீ இப்படி சுத்திட்டு இருக்க” என்று அவனிடம் கத்த

 

                  “அடேய், ஏன்டா நீ வேற!! அவ முன்னாடி இப்படி ஏதும் சொல்லி தொலைக்காதா. வச்சி செய்வா என்னை.” என்று அவன் அலற

 

                      “இன்னிக்கே செய்றேன் இரு, இன்னிக்கு உனக்கு இருக்குடி’ என்று ஷ்யாம் சிரிக்க, கோகுல் தானும் சிரித்துக் கொண்டவன் “ஹ்ஹா போடா என் பொண்டாட்டியை எனக்கு சமாளிக்க தெரியாதா. அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்” என்று வாய் விட

 

                  “அப்டியா.. பார்ப்போம் ” என்றவன் ஒருவிதமாக சிரிக்க,”டேய் என்னடா பண்ணி வச்ச” கோகுல் அலறினான்.

 

             ஷ்யாமோ “நீதான் தைரியமானவனாச்சே… பாரு…” என்று வடிவேலு பாணியில் அவனை கலாய்க்க

 

             கோகுல் “டேய் ஷ்யாம் மரியாதையா சொல்லிடு. என்ன பிளான் பண்ணிருக்க, நான் வேற அப்பா பேச்சை கேட்டு உன்னை தேடி வந்திட்டேன் ” என்று புலம்ப

 

                       “இதுதான் நல்லா இருக்கு. இப்படி புலம்பிட்டே இரு” என்றுவிட்டு ஷ்யாம் நடக்க தொடங்க, கோகுல் அவனை முறைத்துக் கொண்டிருந்தான். கார் அருகில் சென்றவன் தன் அண்ணனை திரும்பி பார்க்க அவன் அதே இடத்தில் நிற்கவும் “வாடா” என்று புன்னகையுடன் ஷ்யாம் அழைக்க, கோகுல் உள்ளே சென்றவன் அங்கு நின்றிருந்த இன்ஜினியரிடம் பேசிவிட்டு வெளியில் வர ஷ்யாம் காரில் அமர்ந்து இருந்தான்.

            கோகுல் வந்து காரில் ஏறவும் அவன் காரை எடுத்தவன் நேராக அவர்கள் வழக்கமாக செல்லும் ஹோட்டலுக்கு காரை விட, அண்ணனும் தம்பியும் வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் திருப்தியாக உண்டு முடிக்கவும் இருவரும் அங்கிருந்து கிளம்பினர். 

                    வீட்டிற்கு வரும் வழியில் கோகுல் “ராஜனோட என்ன இஷ்யூ. தீரஜ் எனக்கு கால் பண்ணி இருந்தான், என்ன விஷயம் ஷ்யாம் ” என்று கேட்க  

                       “அவன் ஏன் உனக்கு கால் பண்றான்.” என்று ஷ்யாம் அண்ணனிடம் பாய “அவன் ஏன் கால் பண்றான் ன்னு தான் நானும் உன்கிட்ட கேட்கிறேன். இல்லன்னா அவனுக்கே கூப்பிட்டு பேசிடவா ” என்று கோகுல் கேட்க

                   அண்ணன் அவனிடம் பேசவில்லை என்பதில் அமைதியானவன் உர்ரென்ற முகத்தோடு நடந்த அனைத்தையும் கூறி முடிக்க பொறுமையாக கேட்டுக் கொண்டவன் தம்பியிடம் “அவன் விஷயத்துல கொஞ்சம் கவனமா இரு. அவன் அப்பன் சரியான பிராடு, அப்பா முகத்துக்காக இவ்ளோ நாள் பொறுத்து போக வேண்டியதா இருந்துச்சு. பட் இதுவும் நல்லதுதான். முடிஞ்சதே.” என்று அவன் தம்பியின் செயலை ஆதரிக்க, அவன் அப்படிதான் சொல்வான் என்று ஏற்கனவே தெரிந்தாலும் அவன் வாய் வழியாக கேட்கும்போது ஷ்யாமுக்கு நிம்மதியாக இருந்தது.

                          அலுவலகத்திற்கு செல்லாமல் ஷ்யாம் வீட்டிற்கு செல்ல கோகுல் ஏன் என்பது போல பார்க்கவும், “டையர்டா இருக்குடா. குளிக்கணும்” என்றவன் வீட்டிற்குள் நுழைய அங்கு சோபாவில் அமர்ந்திருந்தாள் வசுமதி. வழக்கமாக இந்த நேரத்தில் உறங்குபவள் இன்று அமர்ந்திருக்க அவள் காத்திருப்பு கோகுலுக்கானது என்று பார்த்தவுடன் புரிந்தது ஷ்யாமுக்கு.

                    அவன் அண்ணனை கண்டிப்பாக பார்க்க அவனோ மனைவியை பார்த்தபிறகு தம்பியிடம் பார்வையை திருப்பவே இல்லை. “வசும்மா… தூங்காம இங்கே என்னடா பண்ற. ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே ” என்று அவன் உருக ஆரம்பிக்க, அந்த நேரம் சமயலறையில் இருந்து வந்த பத்மினி அவள் முன்னால் ஜூஸ் கோப்பையை நங்கென்று வைக்க அண்ணன் தம்பி இருவரும் அதிசயமாக அன்னையை பார்க்க

               “மரியாதையா இதை குடிச்சுட்டு அடுத்த வேலைய பாரு. அவனுக்குத்தான் அக்கறை இல்லைன்னா உனக்கும் உன் பிள்ளை மேல அக்கறை இல்லாம போச்சு. நேத்து வரைக்கும் வெளிநாட்டுக்கு ஓடிட்டான், இன்னிக்கு விடிஞ்சதும் ஆபிஸ்க்கு போயாச்சு. நீ அவனுக்காக உக்காந்திட்டு இருக்க” என்று அவர் ஏகத்திற்கும் வசுமதியை திட்டிவிட, அவரிடம் இப்படி வசவு மொழிகளை கேட்டதே இல்லை என்பதால் கண்கள் கலங்கி முகம் சிவந்துவிட்டது வசுமதிக்கு.

           நடந்தது இதுதான். கோகுல் காலையில் அலுவலகம் கிளம்பி சென்றதும் உண்டு முடித்து அன்றைய வேலைகளை பார்த்தவள் மதியம் பத்மினி சாப்பிட அழைக்கவும், கோகுல் வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு காத்திருக்க அவன் வரவே இல்லை. பத்மினி இரண்டுமுறை அழைத்தும் அவள் பிடிவாதம் பிடித்திருக்க அந்த கோபமெல்லாம் இப்போது தாமதமாக வந்த பிள்ளையின் மீது திரும்பியது அவருக்கு.

                     கர்ப்பிணிப்பெண் சாப்பிடாமல் இவ்வளவு நேரம் காத்திருப்பது அவருக்கு அத்தனை அழுத்தம் கொடுக்க, அவளுக்காக ஜூஸ் போடத்தான் உள்ளே சென்றிருந்தார். வெளியில் வரும் நேரம் கோகுல் கண்ணில்படவும் கத்தி தீர்த்துவிட்டு தன்னறைக்கு சென்று அமர்ந்துவிட்டார் அவர்.

                              இங்கு அன்னை கத்திவிட்டு செல்லவும் கோகுலுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்க மனைவியை அவன் பார்க்கவும் அழுது கொண்டிருந்தாள் அவள். அவளை கையை பிடித்து எழுப்பியவன் உணவு மேசையில் அமர வைக்க, உணவை பரிமாற வந்த வேலையாளை அனுப்பி விட்டவன் சாதம் வைத்து அவளுக்கு ஊட்டிவிட, மறுத்தவள் அவன் குறைக்கவும் “அத்த இன்னும் சாப்பிடல.” என்று உதட்டை பிதுக்கி அவள் கூறவும், மனைவியின் அழகில் அவளை கொஞ்சிக் கொள்ளத்தான் தோன்றியது அவனுக்கு.

                ஆனால் வெளியில் முறைத்தவன்   “டைம் என்ன ஆச்சு.  இதுவரைக்கும் நீயும் சாப்பிடாம, அம்மாவையும் டென்ஷன் பண்ணி எதுக்கு இதெல்லாம்? ஒரு போன் பண்ணி இருந்தா அரைமணி நேரத்துல வந்திருப்பேன்.” என்று நிதானமாக கூற

                      “நீங்க வருவீங்க ன்னு நெனச்சேன். என்னை பார்க்க, சாப்பிட வைக்க” என்று சொல்லும்போதே அவள் கண்கள் கலங்க துவங்க, ” சும்மா அழக்கூடாது வசு. யோசிக்கணும்… மேனேஜ்மென்ட் ஸ்டூடன்ட் தானே நீ, நேத்துதான் பாரின்ல இருந்து வந்திருக்கேன். மீட்டிங் பாயிண்ட்ஸ் அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ண வேண்டி இருந்தது. இத்தனைக்கும் உன்கிட்ட சொல்லிட்டு போனேன் நான் ” என்று அவன் கண்டிப்பாக கூற

                   அவளுக்கும் அனைத்தும் புரிந்து தான் இருந்தது ஆனால் ஏனோ கணவன் வருவான் என்று தோன்ற அவன் இல்லாமல் உண்ணவும் மனம் வரவில்லை. அதனால் தான் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள். இப்போது அவன் எடுத்துக் கூறவும் தன் தவறு புரிய அமைதியாக அமர்ந்து இருந்தாள் அவள்.

                            அவள் அமைதியாக இருக்கவும் “போய் அம்மாவை கூட்டிட்டு வா.” என்று அவளிடம் கூற

              வேகமாக மறுத்தவள்  “வரமாட்டாங்க, என்னை திட்டிட்டாங்க ….” என்று மீண்டும் மறுப்பாக தலையசைக்க, அவள் மண்டையை பிடித்து ஆட்டியவன் அவளை இழுத்துக் கொண்டு அன்னையின் அறைக்குள் நுழைந்தான்.

                         அங்கு ஷ்யாம் அவரை சமாதானப்படுத்தி இருக்க, இப்போது கோகுல் வரவும் அவனை முறைத்தவரிடம் “உங்க மருமக நீங்க இல்லாம சாப்பிட மாட்டாளாம். நீங்களே கேட்டுக்கோங்க….” என்றுவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட, அவர் மீண்டும் வசுவை பார்க்க, முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள் அவள்.

                    “இன்னும் என்ன? அதான் உன் புருஷன் வந்துட்டான்ல. போய் சாப்பிட வேண்டியது தானே.” என்று அதட்டலாக கேட்க, அவள் அமைதியாகவே இருக்கவும் “இப்போ நீ வாயை திறக்கல. உன் புருஷன நல்லா நாலு சாத்து சாத்திடுவேன். மரியாதையா பதில் சொல்லு” என்று மிரட்ட

                         ஷ்யாம் சிரித்துவிட, கோகுல் “ம்மா. போதும் விடுங்கம்மா… ஏற்கனவே அழுதிட்டா அவ, என்மேல தானே தப்பு. இனிமே நேரத்துக்கு வரேன், இப்போ போய் சாப்பிடுங்க” என்று கூற அவனை முறைத்தாலும் வசுமதியை கவனத்தில் கொண்டவர் அவளுடன் சென்று சாப்பிட அமர்ந்தார்.

                       ஷ்யாம் கோகுலை பார்த்து சிரிக்க, அவனும் சிரித்தாலும் தன் மனைவியையும், அன்னையையும் சற்று பெருமிதமாகவே பார்த்திருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement