Advertisement

அத்தியாயம் 01

நேரு உள்விளையாட்டு அரங்கம்

ஒரு நகரத்தையே வளைத்து பந்தல் போட்டது போல அந்த அரங்கம் முழுவதும் வளைத்து சுற்றி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, எங்கெங்கு நோக்கினும் மனித தலைகள் மட்டுமே தெரியும்படி அந்த அரங்கம் ஜனத்திரளில் மூழ்கி இருந்தது.

விழா மேடை விண்மீன்களின் கூட்டம் மொத்தமும் வந்து குவிந்துவிட்டதோ என்று என்னும் வகையில் அலங்கார மின் விளக்குகளால் ஒளி ஏற்றப்பட்டிருக்க, அந்த விளக்குகளின் ஒளி அந்த இடத்தை சொர்க்கமாகவே மாற்றி காட்டும்படி அமைந்திருக்க, அப்படி எதற்காக இந்த ஏற்பாடுகள்.

அது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தான். அதுவும் அந்த ஆண்டு முழுவதும் சினிமா, இசை,நாட்டியம், விளையாட்டு, தொழில், சமூக சேவை என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களை தேர்ந்தெடுத்து பெண்சக்தி என்ற அமைப்பு விருது வழங்கி கொண்டிருக்க, இடையிடையே திரைப்பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகள் வேறு நடந்து கொண்டிருக்க சொல்லவும் வேண்டுமா.

அந்த அமைப்பு பெண்களுக்கான பல சேவைகளை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருப்பதால் பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்டிருக்க, பெண்களுக்கான வார மற்றும் மாத இதழ்கள் சிலவும் பெண்சக்தி என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது.

அந்த நிறுவனத்தின் விருதுகளும் பெரும்பாலும் நேர்மையாகவே இருக்க தகுதியானவர்கள் மட்டுமே பெறுவதால் சக்தி விருதுகள் மக்களிடடையே நன்மதிப்பை பெற்றிருந்தது.அந்த நிறுவனத்தின் மீது இருந்த நம்பிக்கையிலும் மரியாதையிலும் தொழித்துறை,திரைத்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த ஜாம்பவான்கள் பலர் அங்கு கூடி இருக்க அரங்கம் களை கட்டிக் கொண்டிருந்தது.

அங்கு அமர்ந்திருந்தவர்களில் பலர் அனைவராலும் அறியப்பட்டிருக்க அவர்களை காணவும் கூட்டம் குவிந்திருந்தது அங்கே.

திடீரென அந்த அரங்கின் வாயிலில் ஏதோ சலசலப்பு ஏற்படவும் அனைவரின் கண்களும் அங்கு திரும்ப அதற்குள் பின்னணியில் புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தின் மிரட்டலான BGM ஒன்று ஒலிக்க தொடங்கி இருந்தது.

அங்கு அமர்ந்திருந்தவர் யாரோ திரைப்பிரபலமோ என்று தங்களுக்குள் பேசி திரும்பி பார்க்க உள்ளே நுழைந்து கொண்டிருந்தவனோ ஆறடிக்கு குறையாத உயரத்தில் இருந்தான். அந்த கருப்புநிற முழுக்கை சட்டையில்  லேசாக சாம்பல் நிற கோடுகள் மினுக்க அதற்கு மேலே ஒரு சாம்பல் வண்ண கோட்டை அணிந்து, வெள்ளைநிற பேண்ட்  உடுத்தியிருக்க அந்த உடை அவனுக்காகவே தைத்ததை போல் அத்தனை கச்சிதமாக இருந்தது அவனுக்கு.

அங்கு அமர்ந்திருந்த திரையுலக அழகிகளும், மற்ற துறைகளை சேர்ந்த இளம்பெண்களும் அவனை பார்வையால் மொய்க்க தொடங்க அவனோ யாரையும் திரும்பி கூட பார்த்தானில்லை. அப்படி ஒரு திமிர் தெறித்தது அவனது ஒவ்வொரு அசைவிலும்.

லேசாக தலைமுடியை கோதிவிட்டவன் விழா அமைப்பாளர் கொடுத்த பூங்கொத்தை கையில் வாங்கி உடனிருப்பவரிடம் கொடுத்துவிட்டு அவருடன் நடக்க அவரோ அவனை முதல் வரிசையில் அமர வைத்து அவனுக்கு குளிர்பானமும் கொண்டுவர நாசுக்காக அதை மறுத்தவன் அதன்பிறகு அவரை கண்டுகொள்ளவில்லை.

மேடையை நோக்கி திரும்பிவிட அவரும் அங்கிருந்து விலகினார். அந்த இடத்தையே அந்த சில நொடிகளில் தன்னை பார்க்க செய்திருந்தவன் அதை பற்றிய எண்ணமே இல்லாது அமைதியாக அமர்ந்திருக்க, அங்கிருந்த பலர் அவன் யாரென்று குழம்பி இருந்தனர்.

அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது போல அந்த வர்ணனையாளர் மேடையில் ஏறியவரோ அவனை நோக்கி ஒரு வணக்கத்தை வைத்தவர் கூட்டத்திடம் திரும்பி ” இன்னிக்கு நம்மோட முக்கிய விருந்தினரா இங்க வந்திருக்க இவரை பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.உங்கள்ள பலருக்கு இவரை தெரிஞ்சி இருக்கும் சென்னையோட ஏன் நம்ம தமிழ் நாட்டோட மிக முக்கியமான தொழில்துறை பிரபலம், இந்தியால பல நிறுவனங்கள் இவரோட நேரத்திற்காக காத்திட்டு இருக்காங்க. கட்டுமான துறையில ஒரு மிகப்பெரிய மைல்கல் இவரோட கிருஷ்ணா குரூப் ஆப் கம்பெனிஸ். கட்டுமானம் மட்டுமில்லாமல் படத்தயாரிப்பு, மருத்துவமனைகள், மால்கள் ன்னு இவங்களோட கால்தடம் பதியாத இடங்களே கிடையாதுன்னு சொல்லலாம் . அப்படிப்பட்ட நிலைத்த பெயருக்கும்,நீடித்த புகழுக்கும் சொந்தக்காரரான மிஸ்டர்.ஷ்யாம் கிருஷ்ணா அவர்களை வரவேற்பதில் சக்தி விருதுகள் பெருமை கொள்கிறது.” என்று முடித்திருக்க

அரங்கம் கரகோஷத்தில் நிறைந்தது.அந்த வர்ணனைகள் அவன் சாதனைகளோடு ஒப்பிடுகையில் படத்தில் ஒரு பங்குக்கு கூட நிறையாது. வெறும் கட்டுமான நிறுவனமாக இருந்த அவன் குடும்ப தொழிலை இன்று இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு கொண்டு வந்திருந்தான் அவன்.

அதோடு மக்கள் பணிகளிலும் ஈடுபட்டிருக்க அவனை பார்த்தே இராதவர்களுக்கு கூட அவன் பெயர் பரீட்சையமாகி இருந்தது.  அவன் நிறுவனத்தின் கீழ் இயங்கி கொண்டிருந்த டிரஸ்ட் பல்வேறு ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கும், ஆதரவற்றோரின் உணவு, இருப்பிடத்திற்கும் உதவிக்கு கொண்டிருக்க,அதை கொண்டே எளிய மக்களாலும் அறியப்பட்டிருந்தான் அவன்.

அத்தனை புகழுக்கும் சொந்தக்காரனோ அதை தலைக்கு கொண்டு செல்லாமல் அமைதியாக அதே சமயம் யாரும் அவனை கணிக்க முடியாதபடிக்கு அழுத்தமாக அமர்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான். பலர் விருது வாங்கி கொண்டிருக்க நிகழ்ச்சி ஆரம்பித்து சற்று நேரம் கடந்திருந்தது. கலை நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாகவும் ரசிக்கும் படியாகவும் அமைந்திருக்க சிறப்பாக நடந்து கொண்டிருந்தது அந்த விழா.

அந்த நேரத்தில் வாசலில் மீண்டும் சிறிய சலசலப்பு தோன்ற அனைவரும் மீண்டும் அங்கே திரும்ப, அங்கே அழகே உருவாக கருப்புநிற பட்டு சேலையில் தங்க ஊசிகள் சரசரக்க, முந்தானையை உடலை சுற்றி இடக்கையில் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் ஒருத்தி. விரித்து விட்டிருந்த அவள்  நீண்ட கூந்தலை அவள் முன்னே எடுத்து விட்டிருக்க அவளின் இடப்பாகத்தை முழுவதுமாக மறைத்திருந்தது அவள் கூந்தல்.

முகத்தில் அத்தனை அழகான புன்னகை. வெறும் பெயருக்கு என்று இல்லாமல் மனம் நிறைந்த நிறைந்த புன்னகை அவளை பேரழகியாய் காட்ட, விளக்கி வைத்த வீட்டின் குத்து விளக்கு போல் அப்படி ஒரு பாந்தமான அழகு மிளிர்ந்தது அவளிடம்.

அந்த கூட்டத்திற்கு அவள் பிரபல கர்நாடக இசைப்பாடகியாகவும், வளர்ந்து வரும் பின்னணி பாடகியாகவும் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்க, அதோடு அவள் தாயின் பெயரும் அவளை அங்கே அறிமுகபடுத்தி இருந்தது.

தன்னை நோக்கி கை அசைத்தும், கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்களிடம், கை அசைத்து தன் அன்பை வெளிப்படுத்தியவள் அங்கிருந்தவர்களில் தெரிந்தவர்களிடம் புன்னகைத்துவிட்டு தனக்கான இடத்தில அமர்ந்துவிட்டாள்.

இத்தனைக்கும் ஷியாம் கிருஷ்ணா அவள் உள்ளே நுழையும்போது ஒரு பார்வை பார்த்ததோடு சரி. அவள் அழகு லேசாக ஈர்த்தாலும் தன்னை போல் அவன் அலட்சிய குணம் தலை தூக்க மேடையை நோக்கி அமர்ந்துவிட்டான்.

நிகழ்ச்சி பாதி நிறைவடைந்திருக்க முக்கிய பிரிவுகளுக்கு விருது வழங்க ஷியாம் மேடையேற்றப்பட்டு இருந்தான். அதற்குமுன் விருது வாங்கிய சிலர் அவனை ஏக்கமாக பார்க்க எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு ஒட்டவைத்த புன்னகையுடன் மேடையேறி நின்றிருந்தான் அவன்.

அடுத்ததாக மூன்று பேருக்கு அவன் விருது வழங்க நான்காவதாக இசைத்துறைக்கான சக்தி விருது அறிவிக்கப்பட, அதை வாங்க போகும் நபரை பற்றி அறிவித்துக் கொண்டிருந்தார் வர்ணனையாளர்.

” இந்த ஆண்டு இசைத்துறைக்கான சக்தி விருது, இவருக்கு கிடைப்பதால் இந்த விருது பெருமை கொள்ளும். அப்படி ஒரு அழகான இளம்பெண் அவங்க. தன் தேன்குரலால் இந்த அரங்கையே கட்டி வைக்கும் வல்லமை படைத்த கர்நாடக இசைப்பாடகி மற்றும் சமீபமா திரைத்துரையிலும் கால் பதித்திருக்கும் இவர் இன்றைய இளம் ரசிகர்களின் யூத் ஐகான். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் கைஸ். தி ஒன் அண்ட் ஒன்லி ஸ்ரீகன்யா. வெல்கம் ஆன் தி ஸ்டேஜ்.” என்று முடிக்க

அதுவரை அமர்ந்து கொண்டிருந்த அந்த இளம்பெண் அதே மாறா புன்னகையுடன் மேடையில் ஏற கரகோஷங்கள் ஓயவே இல்லை. அவள் மேடையில் ஏறி நிற்க அவளுக்கான விருதை ஒரு பெண் ஷ்யாம் கிருஷ்ணாவிடம் கொடுக்க அதை வாங்கியவன் புன்னகையுடன் அவள் புறம் திரும்பி வழங்க பதிலுக்கு புன்னகைத்தவள் மகிழ்ச்சியோடு அதை கைகளில் ஏந்திக் கொண்டாள்.

இடுப்பில் சேலையை இழுத்து சொருகி இருந்த ஒரு பெண்ணின் உருவம் அந்த விருதின் மேல்பகுதியாக இருக்க அவள் இடுப்புக்கு கீழே லேசாக குறுகி முடிந்திருந்தது அவள் உருவம். அதன் கீழே வட்டவடிவ தங்க தகட்டில் சக்தி என்ற வார்த்தைகள் மின்ன அத்தனை ரசிக்கும்படி இருந்தது அந்த விருது.

விருதை வாங்கி கொண்டவள் புன்னகையோடு கூட்டத்தை வணங்கி கீழே இறங்க முற்பட அந்த பெண் வர்ணனையாளர் அவளை நிறுத்தியவர் அவளிடம் ஒரு மைக்கை கொடுத்து சில வார்த்தைகள் பேச சொல்ல, தடுமாறியது அவளுக்கு.

கைகள் லேசாக நடுங்க மைக்கை இறுக்கியவள் ” மைக்கை பிடிச்சா பாடித்தான் பழக்கம்.நீங்க பேச சொல்றிங்க. என்ன பேசறது.” என்று அவளை கேட்க, அந்த வெள்ளந்தியான பேச்சில் மீண்டும் அரங்கில் ஓஹ் என்ற சத்தம் காதை பிளக்க

” ஜஸ்ட் ஒருசில வார்த்தைகள் பேசுங்க மேம். உங்க ரசிகர்களுக்காக ” என்று கோர்த்துவிட

நிதானித்தவள் பெருமூச்சை வெளியிட்டு ” இவங்க எல்லாரும் என்னை கொண்டாட முதல் காரணம் எனக்கு சங்கீதம் பாடித்தந்த என்னோட குரு. என்னோட அம்மா ஸ்ரீரஞ்சனி. இப்போ என்னோட இல்லாம போனாலும் என்கூடவே இருந்து என்னை வழிநடத்திட்டு இருக்காங்க ன்னு நான் நம்புறேன்.அவங்களுக்கு என்னோட முதல் வணக்கங்கள்.அடுத்ததா என்னை பாடகின்னு ஒத்துக்கிட்டு எனக்கான அங்கீகாரம் கொடுத்த ரசிர்களான உங்களுக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் ” என்று முடித்துக் கொண்டவள் மைக்கை அந்த பெண்ணிடம் நீட்ட அவளோ மீண்டும்

“மேம், எங்களுக்காக , உங்க ரசிகர்களுக்காக சில வரிகள் மேம். ஏதாவது ஒரு பாடல் ரெண்டு வரி பாருங்க மேம் ப்ளீஸ்.” என்று கெஞ்ச அவளை சிரிப்போடு பார்த்தவள்

” என்ன பாடினாலும் ஓகே வா ” என்று கேட்க

” நீங்க பாடினாலே ஓகே தான் மேம்.” என்று அவள் வாங்கிய பணத்திற்கு வேலை செய்து கொண்டிருக்க,ஷ்யாம் புன்னகை மாறாமல் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் தன்னை கண்டுகொள்ளாத ஸ்ரீகன்யா வின் செயல் அவனுக்கு பிடித்தம் இல்லை. ஆனால் அதை முகத்தில் காட்டினால் அவன் ஷியாம் கிருஷ்ணா அல்லவே.

அவன் யோசனையில் மூழ்கி இருந்த நேரம், அந்த குரல் அவன் செவிகளை தீண்டி செல்ல,

அமுத மூறுசொ லாகிய தோகையர்

பொருளு ளாரையெ னாணையு னாணையெ

னருகு வீடிது தானதில் வாருமெ …… னுரைகூறும்

அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்

தெருவின் மீதுகு லாவியு லாவிகள்

அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி …… னருள்தாராய்

என்று ஆரம்பித்தவள், தொடர்ந்து

குமரி காளிவ ராகிம கேசுரி

கவுரி மோடிசு ராரிநி ராபரி

கொடிய சூலிசு டாரணி யாமளி …… மகமாயி

குறளு ரூபமு ராரிச கோதரி

யுலக தாரிஉதாரிப ராபரி

குருப ராரிவி காரிந மோகரி …… அபிராமி

சமர நீலிபு ராரித னாயகி

மலைகு மாரிக பாலிந னாரணி

சலில மாரிசி வாயம னோகரி …… பரையோகி

சவுரி வீரிமு நீர்விட போஜனி

திகிரி மேவுகை யாளிசெ யாளொரு

சகல வேதமு மாயின தாயுமை …… யருள்பாலா

திமித மாடுசு ராரிநி சாசரர்

முடிக டோறுக டாவியி டேயொரு

சிலப சாசுகு ணாலிநி ணாமுண …… விடும்வேலா

திருவு லாவுசொ ணேசர ணாமலை

முகிலு லாவுவி மானந வோநிலை

சிகர மீதுகு லாவியு லாவிய …… பெருமாளே!!

என்று முழுப்பாடலையும் பாடி முடிக்க, அந்த அரங்கம் கொள்ளாத கைத்தட்டல்களும்,கோஷங்களும் எழுந்த அதே நேரம் ஒருவன் மௌனத்தில் மயங்கி நின்றிருந்தான் அவள் அருகே. அவளோ அதை கவனிக்காமல் கூட்டத்தை நோக்கி மீண்டும் கைகுவித்து விட்டால் போதும் என்று மேடையை விட்டு இறங்கி தன்னிடத்தில் அமர்ந்துவிட்டாள்.

Advertisement