அடுத்த நாள் காலை உணவிற்காக அரச குடும்பத்தினர் அவர்களுக்கான உணவறையில் கூடி இருந்தனர். மகாராணி மட்டும் தலைவலி இருப்பதால் தனது அறையில் உணவை எடுத்துக் கொள்வதாக செய்தி அனுப்பி இருந்தார்.
பணிப்பெண் ஒருத்தி ராஜமாதா தட்டில் உணவை பரிமாறிவிட்டு மாறவர்மசிம்மன் தட்டில் பரிமாறினாள்.
தனது தட்டில் பரிமாறிய இடியாப்பத்தை பார்த்தவன், “சந்ராமா” என்று கத்தியிருந்தான்.
இளவரசனுக்கு பரிமாறப் போன பணிப்பெண் இடியாப்ப பாத்திரத்தை பயத்தில் கீழே போட்டு, அவசரமாக எடுத்தபடி, “மன்னிச்சிருங்க இளவரசே!” என்று நடுங்கியபடி கூறினாள்.
இளவரசனின் முறைப்பில் அவள் மேலும் நடுங்க, இளவரசன் ஏதோ சொல்லும் முன்,
அங்கே வந்த சந்ரா மாறவர்மசிம்மனின் கோபத்தையும் அவனது தட்டையும் பார்த்து, “மன்னிச்சிருங்க ராஜா.. மகாராணிக்காக மீனாம்மா செய்தது.. மீனாம்மா அதை இங்கே கொண்டு வந்து வைத்ததை நான் கவனிக்கலை.. விஷயம் தெரியாமல் இவள் உங்களுக்கு பரிமாறிட்டா” என்றார் கலங்கிய குரலில்.
கோபத்துடன் உணவு தட்டை தூக்கி எரியப் போனவன், அது உணவை அவமரியாதை செய்வது போல் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தட்டை மேஜை மேல் போட்டுவிட்டு வேக நடையுடன் வெளியேறிவிட்டான்.
சந்ரா கவலையுடன் செல்லும் மாறவர்மசிம்மனை பார்த்தபடி நிற்க, ராஜமாதா, “பரிமாறு” என்று பணிப்பெண்ணைப் பார்த்து உறுமினார்.
அந்த பணிப்பெண் பயத்துடனே பரிமாறிவிட்டு நகர்ந்து கொள்ள, மூவரும் உண்ண ஆரம்பித்தனர்.
ஒரு சாம்ராஜ்யத்தையே ஆளுபவன் உண்ணாமல் சென்றதை நினைத்து கவலைப்படும் சொந்தம் யாரும் அங்கே இல்லை. சந்ரா மட்டுமே அவனை நினைத்து கவலை கொண்டார்.
ரோஜாவனதிற்கு சென்ற மாறவர்மசிம்மன் அங்கே இருந்த தனது அன்னை மலர்விழியின் அறையினுள் சென்று புல்லாங்குழலின் இசையை ஒலிக்க விட்டு கண்களை மூடியபடி அமர்ந்து கொண்டான்.
மகாராணிக்கு உணவை கொடுத்துவிட்டு வந்த மீனாட்சி விஷயம் அறிந்து சந்ராவிடம் விசாரித்தாள்.
சந்ரா, “ராஜா நான் செய்ற சாப்பாட்டை மட்டும் தான் சாப்பிடுவார்” என்றார்.
மீனாட்சி, “அதுக்கா இவ்வளவு கோபம்! விட்டா அந்த பொண்ணுக்கு பயத்தில் காய்ச்சலே வந்திரும் போல!” என்றாள்.
அவரோ, “இது அரண்மனை.. எவ்வளவுக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறதோ அதே மாதிரி சூழ்ச்சியும் துரோகமும் கூட இருக்கும்” என்று பூடகமாக பேசினார்.
அவள் புரியாமல் பார்க்க, அவர் வேலையை தொடரப் போனார்.
அவள் பின்னாலேயே சென்று, “அது எப்படி சாப்பிடுறதுக்கு முன்னாடியே நீங்க செய்யலைன்னு கண்டு பிடிச்சார்?” என்று கேட்டாள்.
“நான் இடியாப்பம் செய்ய மாட்டேன்”
“ஏன்? உங்களுக்கு செய்யத் தெரியாதா?”
“நீ போய் சாப்பிடு தாயி”
“ப்ளீஸ் சொல்லுங்க.. எனக்கு விஷயம் தெரியாம மண்டையே வெடிச்சிடும்”
“என் மண்டையே வெடிச்சாலும் சில விஷயங்கள் என்னிடமிருந்து வெளியே வராது”
“என்ன சந்ராமா இப்படி சொல்லிட்டீங்க!” என்று அவள் குறைப்பட,
அவரோ, “சாப்டுட்டு போய் வேலையைப் பாரு தாயி” என்றார்.
“இப்போ ராஜா எங்க?”
விடை தெரிந்திருந்தாலும் அவர் பதில் கூறாமல் தனது வேலையை ஆரம்பிக்க, அவள் தீரனைப் போய் பார்த்தாள்.
அவன் என்ன என்பது போல் பார்க்க, அவள், “ராஜாவை பார்க்கணும்” என்றாள்.
அவன் பதில் கூறாமல் ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவள், “ப்ளீஸ்.. அவர் சாப்பிடலை.. அதுவும் என்னால்.. அதான் கேட்கிறேன்” என்றாள்.
“தெரியும்”
“என்ன தெரியும்?”
“நீங்க செய்த காரியமும் அதன் விளைவும் தெரியும்”
“ராஜாவை பார்க்கணும் ப்ளீஸ்.. நான் வேணும்னு செய்யலை”
“தெரியும்”
“ப்ச்”
“இப்போ ராஜாவை பார்க்க முடியாது.. நீங்க உங்க வேலையை பாருங்க”
“ஏன்?”
அவன் அவளை முறைக்க, அவள், “ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
அவன், “ராஜா ரோஜாவனத்தில் இருக்கிறார்..” என்றான்.
“நான் சாப்பாடு கொண்டு போகட்டுமா?” என்று அவள் கேட்க, அவன் அவளை மீண்டும் முறைத்தான்.
“இல்லை.. என்னால் தான் அவர் சாப்பிடலை.. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது.. சின்ன வயதில் சரியான சாப்பாடு இல்லாம நான் ஆசிரமத்தில் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.. அதனால் யாரும் சாப்பாடு இல்லாம கஷ்டபட்டா எனக்கு மனசு தாங்காது.. அதுவும் இன்னைக்கு என்னால தான் ராஜா சாப்பிடலை என்றபோது” என்று அவள் சற்று கரகரத்த குரலில் நிறுத்த,
அவன், “யாரும் அவரை இப்போ பார்க்க முடியாது” என்றான்.
அவள் சிறு தவிப்புடன் பார்க்க, அவனோ, “நீங்க போனா காவலாளிக்கு தான் தண்டனை கிடைக்கும்” என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.
அவள் முறைப்புடன், “ராஜா சாப்பிடலைனு உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா?” என்று கேட்டாள்.
“படி அளக்கும் ராஜா சாப்பிடலைனா வருத்தமா இருக்காதா!” என்றவன் அவள் பேசும் முன், “ஆனா நம்மால் எதுவும் செய்ய முடியாது.. நாம் நமது எல்லையை கடக்கக் கூடாது.. போய் வேலையைப் பாருங்க.. என்னையும் வேலை செய்ய விடுங்க” என்று கூறி நகர்ந்துவிட்டான்.
அவள் மனது கேட்காமல் மாறவர்மசிம்மனின் வண்டி நின்ற இடத்திற்கு சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்.
அவளை விநோதமாக பார்த்த தாயாளன் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் ராஜாவின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். ராஜா வந்ததும் வண்டியை எடுக்கவென்று ஓட்டுனர் வண்டியின் அருகே நின்று கொண்டிருந்தான்.
அப்பொழுது வேக நடையுடன் வந்த மாறவர்மசிம்மன் வண்டியில் ஏறப் போக, அவசரமாக அவன் அருகே வந்தவள், “ராஜா” என்று அழைத்தாள்.
அவன் திரும்பி பார்க்கவும், அவள் தவிப்புடன், “ப்ளீஸ் என்னால் சாப்பிடாம கிளம்பாதீங்க.. என்னால தாங்கிக்கவே முடியாது” என்றாள்.
தயாளனும், வண்டியில் ஏறியிருந்த ஓட்டுனரும் அவளை அதிசயமாக பார்த்தார்கள். இதுவரை யாரும் இப்படி மாறவர்மசிம்மனிடம் பேசியது இல்லை. வேலையாட்களுக்கு அவனிடத்து பாசம் அதிகமாக இருந்தாலும் அவனது முடிவை மீறி யாரும் பேசியது கிடையாது.
இதுவரை அறிந்திராத தாய்ப் பாசத்தை அவளிடத்தில் உணர்ந்த மாறவர்மசிம்மன் நொடி பொழுதில் சுதாரித்துக் கொண்டு, “இதில் உன் தவறு எதுவும் இல்லை” என்றபடி வண்டியில் ஏற, தயாளன் முன் பக்கம் ஏறிக் கொண்டான்.
வண்டியை எடுக்க போன ஓட்டுனரிடம் கையை காட்டி தடுத்தவன் அவளிடம், “நான் வெளியே சாப்பிடுவது இல்லை” என்றான்.
மதியம் அவன் எங்கிருந்தாலும், இருக்கும் இடத்திற்கு, சந்ரா சமைத்த உணவை அவனது ஓட்டுனர் அரண்மனைக்கு வந்து எடுத்து சென்று விடுவான். அரண்மனையில் மாறவர்மசிம்மன் நம்பும் ஆட்கள் நான்கே நபர்கள் தான். அவர்கள் சந்ரா, தீரன், தயாளன் மற்றும் அவனது ஓட்டுனர்.
அவள், “வெளியூர் போனா என்ன செய்வீங்க?” என்று கேட்க,
அவன், “நான் வெளியூர் செல்வது கிடையாது.. இன்றைய அறிவியல் வளர்ச்சியை வைத்து இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே உலகையே ஆளலாம்.. நீ போய் சாப்பிடு” என்றுவிட்டு ஓட்டுனரை பார்க்க, வண்டி கிளம்பிச் சென்றது.
மாறவர்மசிம்மனின் பொறுமையான உரையாடலை கண்டு தயாளனும் ஓட்டுனரும் ஆச்சரியம் கொண்டாலும் அதை சிறிதும் வெளிபடுத்திக் கொள்ளவில்லை. மீனாட்சி முகத்திலும் குரலிலும் தெரிந்த உண்மையான தவிப்பிற்கு மதிப்பு கொடுத்தே அவன் பொறுமையாக பேசியது.
மீனாட்சி காலை உணவை எடுத்துக் கொள்ளாமலேயே மகாராணி அறைக்கு சென்றுவிட்டாள்.
மதியம் அவள் மகாராணிக்கு உணவை எடுத்து சென்று கொண்டிருந்த போது, “ஹாய் பியூட்டி” என்றபடி இளவரசன் வந்தான்.
“மீனாட்சி”
“தெரியும்”
“அப்போ அப்படியே கூப்பிடலாமே!”
“இளவரசனுக்கே கட்டளை போடுறியா?”
அவனது முகத்தை கவனித்தவள் அதில் கோபம் இல்லை என்பதை அறிந்து, “என்னுடைய பெயரை வைத்தே அழைக்கலாமே என்று கேட்பது எப்படி கட்டளை ஆகும்?” என்று கேட்டாள்.
“கேள்வி கேட்பதே தப்பாச்சே!”
“என்னுடைய பெயர் எனது உரிமை இல்லையா!”
“அரண்மனையில் அரச குடும்பத்தினரை கேள்வி கேட்பது தவறு தான்.. நாங்க எப்படி கூப்பிட்டாலும் ஏத்துக்கணும்”
“எந்த அரச குடும்பத்தினரும் வேலை செய்பவர்களை அடிமையாகவோ, கீழ்தனமாகவோ நடத்தியதா நான் கேள்விபட்டது இல்லை”
“பியூட்டி பாராட்டு தானே!”
“அது என் பெயர் இல்லையே!”
“அழகா பேசும் அழகி” என்றான் சிரிப்புடன்.
அவனை தீர்க்கமாக பார்த்தவள், “உங்க வயசை தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.
“25.. ஏன் கேட்கிற?”
“எனக்கு 26”
அவன் விரிந்த சிரிப்புடன், “பேசுறதுக்கு வயசு தேவை இல்லை.. பெரியவளா இருந்தா என்ன சின்னவளா இருந்தா என்ன!” என்றான்.
“தோழியா நினைத்து பேசுறதுக்கு தேவை இல்லை தான்”
அவன் சிறு ஆச்சரியத்துடன், “உனக்கு தில் ஜாஸ்தி” என்றான்.
“உண்மையை பேசுறதுக்கு எதுக்கு பயப்படனும்?”
“இங்கே பயப்படனும்”
“உங்களை பார்த்து மரியாதை வருவதை விட பயம் வருவதை தான் விரும்புறீங்க போல”
அப்பொழுது அங்கே வந்த ராஜமாதா அவளை முறைத்துவிட்டு இளவரசனிடம், “இந்த நேரத்தில் உனக்கு இங்கே என்ன வேலை விக்கிரமா?” என்று கேட்டார்.
“மகராணியை பார்க்க வந்தேன்”
“பார்த்தா அப்படி தெரியலையே!”
“மகாராணி உடல் நிலையை பற்றி விசாரிச்சிட்டு இருந்தேன்”
அவர் முறைப்புடன் உள்ளே செல்ல, அவன் இவளை பார்த்து புன்னகையுடன் கண்ணடித்தபடி உள்ளே செல்ல, இவள் மனதினுள், ‘ஆண்டவா!’ என்று கூறியபடி மூச்சை நன்றாக இழுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவள் இளவரசன் பக்கம் திரும்பாமல் ராஜாமாதவையும் நிமிர்ந்து பார்க்காமல் மகாராணியின் படுக்கை அறைக்கு சென்று அவரை அமர வைத்து உணவை பரிமாறிவிட்டு ஒதுங்கி நின்றாள்.
அதன் பிறகு மகாராணியிடம் பேசிவிட்டு ராஜமாதாவும் இளவரசனும் சென்றனர்.
மாலையில் இவள் ராஜமாதாவிடம் அன்றைய வேலைகளை பற்றி கூறச் சென்ற போது அவர் இவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தார்.
இவள் பேசி முடித்ததும் அவர், “வந்த வேலையை மட்டும் பார்” என்றார்.
“சரி ராஜமாதா” என்று கூறிவிட்டு வெளியேறியவள் தீரனிடம் வேலையை பற்றி கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றாள்.
இன்று கவனமாக ரோஜாவனம் பக்கம் செல்லவில்லை அவள்.
சிறிது நேரம் கழித்து, ரோஜாவனம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த மாறவர்மசிம்மன் இவளை பார்த்ததும் இவள் இருந்த இடத்திற்கு வந்தான்.
“காலையில் சாப்பிட சொன்னேனே!” என்றான்.
திடீரென கேட்ட குரலில் சிறு அதிர்வுடன் திரும்பியவள், “மனசு வரலை” என்றாள்.
“ஒருவேளை இளவரசர் சொல்லி இருந்தால் கேட்டிருப்பியோ?”
அவனை தீர்க்கமாக பார்த்தவள், “நீங்க சொல்லியே கேட்கலை” என்றாள்.
அவள் ‘ராஜா’ என்ற அர்த்தத்தில் தான் கூறுகிறாள் என்பது தெரிந்தாலும் அந்த பதில் அவனுக்கு பிடித்து இருந்தது.
“ஏன் படிப்பில் இரண்டு வருட இடைவெளி?”
“நான் ஆசிரமத்தில் வளர்ந்தது உங்களுக்கே தெரியும்.. டென்த் முடிச்சதும் மேலே படிக்க ஸ்பான்சர் இல்லை.. ஒரு வருஷம் கழிச்சு ஸ்பான்சர் கிடைச்சதும் டிப்ளோமா படிச்சேன்.. படிப்பை முடிச்சு வேலை கிடைச்சதும் ஆசிரமத்தை விட்டு வெளியே போய்டணும்.. நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை.. ஒரு வருஷம் கழிச்சு திரும்ப ஸ்பான்சர் கிடைச்சதும் பி.ஏ படிச்சேன்.. அப்புறமும் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கலை.. ஆனா ஆசிரமத்தில் பாரமா இருக்க விரும்பாம கிடைச்ச வேலையில் சேர்ந்தேன்.. அதனால தான் இப்போ இங்கே இருக்கிறேன்”
“பி.ஏ ஏன் ஆர்கியாலாஜி படிச்ச?”
“முதல்லேயே என்னோட இன்ட்ரெஸ்ட் அது தான்.. ஆனா டிப்ளோமா பிசியோதெரபி கோர்ஸ் தான் கிடைச்சுது.. படிக்க ஆரம்பிச்சதும் அதில் ஆர்வம் வந்துருச்சு.. ஆனா மேல படிக்கிறப்ப அந்த கோர்ஸ் அதிக பீஸ்ஸில் தான் கிடைச்சுது.. அதனால பி.ஏ ஏன்ஷியன்ட் இந்தியன் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலாஜி படிச்சேன்”
“உன் படிப்பிற்கு யாரு நிதி உதவி செய்தது?”
சட்டென்று சுதாரித்தவள், “அது எனக்கு தெரியாது” என்றாள்.
“ஆசிரம நிர்வாகத்தில் நீ கேட்கலையா?”
“கேட்டேன்.. என்னோட ஸ்பான்சர் பெயரை வெளிபடுத்திக்க விரும்பலைனு சொல்லிட்டாங்க”
அவனது பார்வையே ‘நான் உன்னை நம்பவில்லை’ என்று கூற, உள்ளுக்குள் சிறு உதறல் எடுத்தாலும் அவள் அமைதியாகத் தான் நின்றாள்.
அவனது கூர்விழிகளை சந்திக்க முடியாமல், “மகாராணியை பார்க்க போகணும்” என்றாள்.
அவன் தலை அசைக்கவும், அவள் தேவிபுரம் நோக்கிச் சென்றாள்.
ரோஜாவனதிற்கு செல்லாமல் கொலுவிருக்கைக்கு சென்ற மாறவர்மசிம்மன் தீரனை அழைத்தான்.
தீரன் வந்ததும், அவன், “மீனாட்சி பின்புலத்தை சரி பார்த்தியா?” என்று கேட்டான்.
“சரி பார்த்துட்டேன் ராஜா.. நாலு வயசில் ஆசிரமத்தில் சேர்க்க பட்டிருக்காங்க.. ஒரு விபத்தில் அம்மா அப்பா இறந்ததும் ஆசிரமத்தில் சேர்த்து இருக்கிறாங்க.. நிதி உதவி இல்லாம ஒரு வருடம் தாமதமாகி டிப்ளோமா படிச்சு இருக்கிறாங்க.. அப்புறம் வேலை கிடைக்காம ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நிதி உதவி கிடைக்கவும் மீண்டும் படிச்சு இருக்கிறாங்க.. அப்புறம் கிடைச்ச வேலையில் சேர்ந்து ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து இருக்கிறாங்க.. கடந்த இரண்டேமுக்கால் வருடமா அன்னை முகமையில் தான் வேலை பார்த்துட்டு இருக்கிறாங்க..”