Advertisement

குழல் 21

காளி கோவிலில் இருந்து அரண்மனைக்கு மகிழுந்தில் சென்றுக் கொண்டிருந்த போது பூங்குழலி, “முழு அர்த்தமும் கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.
மாறவர்மசிம்மன், “நீ என்ன கண்டு பிடித்தாய்?” என்று கேட்டான்.
“நானெல்லாம் தமிழ் அகராதியில் தேடிப் பிடித்து தான் கண்டறிய வேண்டும்.. எதற்கு வீண் சிரமம் என்று தான் தமிழ் அகராதியான உங்களிடம் கேட்கிறேன்” 
“அப்படி இல்லை.. நேற்று போல் நீ வேறு அர்த்தம் கண்டறியலாமே!” 
“முதலில் நீங்கள் சொல்லுங்கள்.. அதை வைத்து கண்டறிய முடியவில்லை என்றால் நான் யோசிக்கிறேன்” 
“சோம்பேறி” 
செல்ல முறைப்புடன், “காலவிரயம் வேண்டாமே என்று நினைத்தேன்..” என்றவள், “இப்போ சொல்ல முடியுமா முடியாதா?” என்று சிறு மிரட்டலுடன் முடித்தாள். 
அவன் மென்னகையுடன், “சரி கூறுகிறேன்” என்று கூறி இரண்டாவது புதிரின் அர்த்தத்தை கூற ஆரம்பித்தான்.
“மாயோன் என்றால் திருமால், விஷ்ணு என்று பொருள்..அட்டாணி என்றால் கோட்டை மதில்மேல் இருக்கும் மண்டபம்
ஆக ‘மாயோன் முடிவின் வழி
அட்டாணி கிட்டும்’ என்றால் ‘திருமால் உருவத்தின் பாதம் காட்டும் திசையில் சென்றால் மண்டபம் வரும்’ என்று அர்த்தம். 
அடுத்து மச்சபுள்ளி.. மச்சம் என்றால் உடம்பில் உள்ள புள்ளி அல்லது மீனை குறிக்கலாம்
ராஜவந்தம் என்பது அணிவகை. இங்கே ராஜ முத்திரை கொண்ட மோதிரம் அல்லது ராஜ முத்திரை இருக்கும் பதக்கத்தை கொண்ட கழுத்து சங்கலியாக இருக்கலாம்..
சீரியங்கு என்பது சீராக இயங்குதல்
கருவூலம் என்பது அரசரின் செல்வம் இருக்கும் இடம்.. இங்கே பொக்கிஷ அறை அல்லது பொக்கிஷம் என்று எடுத்துக் கொள்ளலாம்.  
ஆக ‘மச்சபுள்ளி ராஜவந்தம் சீரியங்கும்
கருவூலம் தோன்றும்’ என்றால் இரண்டு அர்த்தம் எடுத்து கொள்ளலாம்..
ஒன்று சிறப்பு மச்சம் கொண்ட ஆணோ பெண்ணோ ராஜ முத்திரை உடைய அணிவகையை குறிப்பிட்ட புள்ளியில் வைத்து சரியாக இயக்கினால் பொக்கிஷமோ, பொக்கிஷ அறையோ தோன்றும்.
இன்னொன்று மீனில் இருக்கும் புள்ளி அதாவது திருகையில் ராஜ முத்திரை உடைய அணிவகையை வைத்து சரியாக இயக்கினால் பொக்கிஷமோ, பொக்கிஷ அறையோ தோன்றும்” 
“அது என்ன சிறப்பு மச்சம்?” 
“பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சம் வட்டமாகவோ நீள்வட்டமாகவோ(Oval) தான் இருக்கும்.. வெகு அபூர்வமாக வேறு வடிவத்தில் இருக்கும்..
ரணசிம்ம ராஜாவின் நெஞ்சில் சிகப்பு நிறத்தில் நட்சத்திர வடிவில் மச்சம் உண்டு என்றும் அதனால் தான் அவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்”  
“நட்சத்திர மச்சம் இருக்கும் ஆளுக்கு நாம எங்கே போக!” என்றவள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவனை பார்த்தாள்.
அவளது பார்வையை புரிந்தார் போல் அவன் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்து, “எனக்கும் நெஞ்சில் சிகப்பு நிற நட்சத்திர மச்சம் இருக்கிறது” என்றான்.
சில நொடிகள் உறைந்த நிலையில் இருந்தவள் அவனது தொடுகையில், “ஒருவேளை ரணசிம்ம ராஜாவோட மறுபிறப்போ நீங்கள்!” என்றாள் பிரம்மிப்பு நீங்காத நிலையில்.
அவன் மென்னகையுடன், “அதிகமாக யோசிக்காதே தேவி”  என்றான்.
“இல்லை.. நான் நிஜமாகத் தான் சொல்கிறேன்.. ரணசிம்ம ராஜாவை போல் உங்கள் திறமைகள் அபாரமானது.. இத்தனை ஆண்டுகள் எத்தனையோ அரசர்கள் கண்டறியாத பொக்கிஷத்தை நீங்கள் தானே சரியாக தேடுகிறீர்கள்!” 
“இது தேவை இல்லாத ஆராய்ச்சி தேவி.. பொக்கிஷத்தை பற்றி ஆராய்வோம்” 
“இது தேவை இல்லாத ஆராய்ச்சியா?” 
“ஆம்” 
“ஒருவேளை நான் நறுமுகை தேவியின் அம்சம் என்று யாரவது சொன்னால் அதை கண்டுகொள்ள மாட்டீர்களா?” 
“நிச்சயம் ஆராய மாட்டேன்.. உன்னை பூங்குழலியாக மட்டும் தான் பார்ப்பேன்.. என் தேவியை நான் ஏன் வேறு ஒருவருடன் ஒப்பிட வேண்டும்? நறுமுகை தேவி மிக மிக சிறப்பு வாய்ந்தவராகவே இருக்கட்டுமே! என் தேவி தனித்துவம் கொண்டவள், அவளை யாருடனும் நான் ஒப்பிட மாட்டேன்” 
அவனை பிரம்மிப்புடன் பார்த்தவள், மகிழுந்தில் அமர்ந்துக் கொண்டு அவனை அணைக்க முடியாத காரணத்தால் அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு காதலுடன் நோக்கினாள்.
சுதிரை ஓரப்பார்வை பார்த்தவன் அவளை பார்த்து உதட்டசைவில் சத்தமின்றி முத்தம் கொடுக்க, அவள் நாணத்துடன் அவனது கையை பற்றியபடி அவன் தோளில் சாய்ந்தாள்.
அப்பொழுது அவர்களின் வண்டி அரண்மனை உள்ளே நுழையவும் சற்று விலகி நிமிர்ந்து அமர்ந்தாள்.

 

ரோஜாவனம் சென்று கலந்துரையாடலை தொடர்ந்தனர்.
“அடுத்து என்ன செய்றது?” என்று அவள் வினவ,
அவன், “முதல் வரியே இடிக்கிறது.. திருமால் உருவத்திற்கு நாம் எங்கே செல்ல? எந்த இடத்தில் இருக்கும் திருமால் உருவத்தை குறிக்கிறது என்று தெரியவில்லையே!” என்றான்.
“காளி கோவிலில் திருமால் உருவம் சிற்பமாகவோ ஓவியமாகவோ இல்லையா?” 
“இல்லை” 
“நம் அரண்மனையில்?” 
“இல்லை” 
“சரி அட்டாணி என்றால் கோட்டை மதில்மேல் மண்டபம் என்று சொன்னீர்களே.. அங்கே சென்று பார்ப்போம்” 
“இங்கே குறிப்பிட்டு இருக்கும் கோட்டை நான் உருவாக்கிய அரண்மனை கோட்டை அல்ல.. ரணசிம்ம ராஜா உருவாக்கிய எழில்புர கோட்டை” 
“ஓ!” 
“அதுவும் கோட்டை மதில் மேல் பல மண்டபங்கள் இருக்கும்.. அதில் எதைப் போய் தேடுவது? இப்போது தேடுவது கூட சாத்தியம் இல்லை ஏனெனில் எழில்புர அக்கால கோட்டை சிதைந்துவிட்டது.. அதில் ஒரு பகுதி மட்டுமே எஞ்சி இருக்கிறது.. அழிந்த கோட்டையில் அதன் மேல் இருந்த மண்டபங்களும் அடக்கம்.. ஆக திசை அறிந்தால் மட்டுமே நாம் பொக்கிஷம் இருக்கும் இடத்தை ஓரளவிற்கு கணிக்க முடியும்” 
“கோட்டை அழிந்ததில் யாரேனும் பொக்கிஷத்தை எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?” 
“அதற்கு வாய்ப்பு இல்லை.. பொக்கிஷத்தை எடுத்து இருந்தால் அதைப் பற்றி சிறு குறிப்பு கூட இல்லாமல் இருக்காது” 
“ஒருவேளை ராஜவம்சத்தை சேராத யாரேனும் எடுத்து இருந்து, விஷயம் தெரியாமலேயே போய் இருந்தால்?” 
“அவ்வளவு சுலபமாக எடுக்கும் அளவிற்கு வைத்திருக்க வாய்ப்பு இல்லை.. சாமானியன் ராஜவந்ததிற்கு என்ன செய்து இருப்பான்?” 
“அதுவும் சரி தான்.. நேர்மறையாகவே யோசிப்போம்.. இப்போ என்ன செய்ய?” 
“அதைத் தான் யோசிக்கிறேன்” 
“ஹ்ம்ம்” என்றபடி சிறிது யோசித்தவள், “கன்னிமாடத்தில் ராமாயணம், மகாபாரதம் கதைகளை வரைந்து இருந்தாங்க தானே! ராமர், கிருஷ்ணர் இருவரும் விஷ்ணு அவதாரம் தானே!” என்றாள்.
கண்கள் ஒளிர, “அருமை தேவி.. மாயோன் என்றதை நாம் விஷ்ணுவின் அவதாரமாக எடுத்துக் கொள்ளனும்.. அதில் பாண்டியர்களின் சின்னமான மச்ச அவதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“இங்கே நம் ரோஜாவனத்தில் உட்கூரையில் மீன் ஓவியம் ஒன்று இருக்கிறதே!” என்றபடி எழ,
அவனும் புன்னகையுடன் எழுந்தபடி, “நானும் அதைத் தான் சொல்ல வந்தேன்” என்றான்.
இருவரும் சற்று வித்யாசமான அந்த மீன் ஓவியத்தை சென்று பார்த்தனர்.

அந்த ஓவியத்தை சில நொடிகள் பார்த்தவன், “இந்த மீனின் வால் கிழக்கு திசையை நோக்கி இருக்கிறது” என்றான்.
உடனே அவள், “மீதம் இருக்கும் கோட்டை கிழக்கு திசையில் தானே இருக்கிறது! நான் முதல் நாள் இங்கே வந்த போது தானியின்(auto) ஓட்டுனர் கூறினார்” என்றாள். 
அவன், “ஆம் தேவி.. கிழக்கு திசையில் தான் எஞ்சி இருக்கும் கோட்டை இருக்கிறது” என்றான்.
“நாளையே கிளம்புவோமா?” 
“உடனே முடியாது தேவி.. சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.. அலுவல் வேலைகள் சம்பந்தமாக, பிறகு நம் பயணத்திற்கு தேவையானதையும் தான்” 
“நம் பயணத்திற்கு தேவையானதா?” 
“ஹ்ம்ம்.. நாம் செல்லப் போகும் இடம் மலை காடு.. அங்கே எதிர்பாராத விதத்தில் ஏதேனும் சர்ப்பம் நம்மை தீண்டினாலோ, விஷப்பூச்சிகள் கடித்தாலோ உடனடியாக கொடுக்கும் முறிமருந்து(antidote) தேவை.. அனைத்து வித சூழ்நிலைகளையும் சமாளிக்க நாம் தயார் ஆனதும் கிளம்பலாம்.. அதிகபட்சம் ஒரு வாரம்” 
“கோட்டையை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?” 
“மலைகாட்டு அடிவாரத்திற்கு வண்டியில் சென்று விடலாம்.. அதன் பிறகு நடக்கத் தான் வேண்டும்.. உன்னால் முடியுமா?” 
“முடியும்.. NCC மற்றும் IPS பயிற்சி இருக்கிறதே!” 
“அப்படியானால் மலைகாட்டு அடிவாரத்தில் இருந்து அதிகபட்சம் ஒருமணி நேர நடையில் நாம் அட்டாணியை அடைந்து விடலாம்” 
“அப்போ அதிகாலையில் கிளம்பினால் மதியத்திற்குள் திரும்பி விடலாம்” 
“ஹ்ம்ம்.. எந்தவித இடையூறும் நேரவில்லை என்றால் மதியத்திற்குள் திரும்பி விடலாம்” 
“சரி ஏற்பாடுகளை செய்ததும் சொல்லுங்க”  
 
 
 
இரண்டு நாட்கள் கழித்து காலையில் அலுவலகதிற்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்த பொழுது மாறவர்மசிம்மன், “சுதிர் உனக்கு தெரிந்த நம்பிக்கையான ஓட்டுனர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டான்.
அவன், “இருகிறார்கள் ராஜா.. எந்த மாதிரி வேலை என்று தெரிந்தால் அதற்கு ஏற்ப ஆளை சொல்ல முடியும் ராஜா” என்றான்.
“பொக்கிஷ தேடல் சம்பந்தமாக தான்.. நாம் பழைய கோட்டை இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.. மற்றவர்கள் அறியாமல் செல்ல வேண்டும் என்றால் நாம் நேரிடையாக செல்ல முடியாது..
ஆகையால் இந்த வண்டியில் சென்னை செல்வதாக போக்கு காட்டி வேறு வண்டியில் பழைய கோட்டை நோக்கி செல்ல வேண்டும்.. மற்றவர்களிடம் சென்னையில் ராணியை வளர்த்த ஐயாவை பார்க்கப் போறதாக சொல்ல வேண்டும்.. ஆனால் உன் ஆள் மதுரை வரை சென்றால் போதுமானது.. திடீரென்று ஐயா முக்கிய வேலையாக வெளியூர் சென்று விட்டதால் நமது பயணத்தை ரத்து செய்து திரும்பிவிடுவதாக காட்ட வேண்டும்.. அதிகாலை நான்கு மணிக்கு நம் பயணத்தை தொடங்க வேண்டும்..
நமது பயண நாளிற்கு முன்தினமே தயா அலுவல் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட வேண்டும்.. அடுத்த நாள் நாம் மூவரும் அதாவது நான், ராணி மற்றும் நீ இந்த வண்டியில் சென்னை நோக்கி கிளம்ப வேண்டும்.. காளி கோவில் அருகே தயாவும் உனது ஆளும் இரண்டு இருசக்கர வண்டியில் காத்திருக்கணும்..
நாம் அங்கே சென்றதும் உனது ஆள் இந்த வண்டியை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கி செல்ல, நாம் நால்வரும் இரண்டு இருசக்கர வண்டியில் பழைய கோட்டையை நோக்கி பயணத்தை தொடங்க வேண்டும்.. உன் ஆள் திரும்பி வரும் போது சிவகிரி வந்ததும் ஆள் அரவமற்ற இடத்திலோ, ஊருக்குள் சென்றோ உனது அழைப்பிற்காக காத்திருக்க வேண்டும்.. நாம் மலை இறங்கியதும் நீ அவனை கைபேசியில் அழைத்து, நமது அடுத்தக்கட்ட திட்டத்திற்கு ஏற்ப அவனை செயல்பட கூற வேண்டும்..
இன்னொரு முக்கியமான விஷயம்.. நாம் நால்வருமே சட்டென்று கண்டறிய முடியாதபடி மாறுவேடத்தில் தான் இருக்க வேண்டும்..” 
“எனது சிறிய தந்தையின் மகன் இதற்கு சரியாக இருப்பான். அவன் பார்க்கவும் என்னைப் போல் தான் இருப்பான்.. வண்டியின் கண்ணாடியை இறக்காமல் சென்றாலும் சுங்கச் சாவடியில் கண்ணாடியை இறக்க நேரிடலாம்.. அவன் பார்க்க என்னை போல் இருப்பதால் யாரேனும் பார்த்தாலும் சந்தேகம் வராது.. அவனுக்கு உங்கள் மேல் தனி பக்தியே உண்டு.. அதனால் உங்களுக்காக இந்த வேலையை மகிழ்ச்சியோடு செய்வதோடு விஷயத்தை வெளியே கிஞ்சிதமும் கசிய விடமாட்டான்” 
“நல்லது.. அவனையே ஏற்பாடு செய்துவிடு.. மூன்று நாட்கள் கழித்து கிளம்பலாம்.. நம் பயணத்திற்கு தோதுவான இரண்டு இருசக்கர வண்டியையும் ஏற்பாடு செய்துவிடு” என்றவன் தயாளனை பார்த்து,
“உன் வீட்டில் நீ அலுவல் வேலையாக வெளியூர் செல்வதாகவே இருக்கட்டும்” என்றான்.
“சரி சார்” என்ற தயாளன், “ஆசிரம ஐயாவிடம் விஷயத்தை சொல்ல வேண்டுமே!” என்றான்.
“அவரிடம் நான் பேசிவிட்டேன்.. பொக்கிஷம் பற்றிய விவரத்தை கூறாமல் உதவியாக கேட்டேன்.. ராணிக்காக அவரும் சரி என்று கூறிவிட்டார்.. பொக்கிஷ தேடலை முடித்த பிறகு நிஜமாகவே சென்னை சென்று வரும்படி இருக்கும்.. ஐயா அழைத்து இருக்கிறார்” 
“சரி சார்.. வந்ததும் ஏற்பாடு செய்து விடலாம்”
 
 
 
மூன்று நாட்கள் கழித்து அதிகாலை நான்கு மணியில் பொக்கிஷ தேடல் பயணத்தை தொடங்கினர். மாறவர்மசிம்மனின் திட்டபடியே செயல் பட்டனர். பூங்குழலி சட்டை மற்றும் காற்சட்டை அணிந்து அதற்கு மேல் புடவையை கட்டி இருந்தாள். மகிழுந்து கிளம்பியதும் காதணி, வளையல், கழுத்து சங்கலி அனைத்தையும் கழட்டியவள், நெற்றி பொட்டையும் எடுத்துவிட்டு, தலை முடியை கொண்டையிட்டு ஆண் போல் காட்சி அளிக்கும் விதத்தில் தலையில் பொய் முடியை சூடினாள்.
மாறவர்மசிம்மனும் சட்டென்று அடையாளம் காண முடியாத வகையில் சற்று நீளமான பொய் முடியையும், ஒட்டு தாடியையும் வைத்துக் கொண்டு மலை ஏறுவதற்கான புதைமிதியை(Boots) அணிந்தான்.
காளி கோவில் அருகே ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்திய சுதிர் தனது தலையில் இருந்த பொய்முடியையும் கிடா மீசையையும் எடுத்தான். பின் அவனும் புதைமிதியை அணிந்து கொண்டான்.
மாறவர்மசிம்மன் சிறு அதிர்ச்சியுடன், “சுதிர்!” என்று அழைக்க,
அவனோ மென்னகையுடன், “மொட்டையில் அதுவும் கிடா மீசை இல்லாமல் என்னை பார்க்க எனக்கே சட்டென்று அடையாளம் தெரியலை.. முடி தானே! வளர்ந்து விடும் ராஜா” என்றான்.
இவர்களுக்காக தயாளனும் சுதிரின் தம்பியும் காத்திருந்தனர். தயாளன் பழுப்பு நிறத்தில் பொய் முடியையும் மீசையையும் அணிந்து இருந்தான்.
சுதிர் கூறியது போல் அவனது தம்பி பார்க்க அவனைப் போல் தான் இருந்தான். அவன் ஆர்வத்துடன் மாறவர்மசிம்மனை நோக்க, மாறவர்மசிம்மன் மென்னகையுடன் அவனுடன் கை குலுக்கி புஜத்தில் தட்டியபடி, “கவனம்” என்றான்.
பரவச நிலைக்கு சென்றவன் சுதிரை பார்த்து, “அண்ணா! ராஜா எனக்கு கை கொடுத்து என்னிடம் பேசினார்” என்றான்.
மற்ற மூவரும் அவனைப் பார்த்து புன்னகைத்தனர்.
ஆண்கள் மகிழுந்தில் இருந்து இறங்கியதும் கட்டி இருந்த புடவையை கழட்டி, தனது புதைமிதியை அணிந்து கொண்டு பூங்குழலி கீழே இறங்கினாள்.
அவளை பார்த்த சுதிரின் தம்பி அவனின் காதில், “யாருனா இது? சேட்டு பையன் மாதிரி இருக்குது” என்றான்.
‘ராணியை வர்ணிப்பதா!’ என்ற எண்ணத்தில் சுதிர் அவனை முறைக்க, மாறவர்மசிம்மன், “சுதிர்” என்று அழைத்தான்.
சட்டென்று தனது தவறை புரிந்துக் கொண்ட சுதிர் இயல்பிற்கு திரும்பி, “கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லித் தானே உன்னை வரச் சொன்னேன்!” என்றான்.
அவனுக்கும், “ஆமா.. ஆமா.. நான் வாயே திறக்கலை.. மன்னிச்சுருங்க ராஜா” என்றான்.
மாறவர்மசிம்மன் தலை அசைக்கவும் சுதிரும் தயாளனும் மலையேற்றத்திற்கு தோதுவான நான்கு பைகளை மகிழுந்தில் இருந்து இருசக்கர வண்டிகளில் கட்டினர். சுதிரை தவிர மற்ற மூவரும் தலையில் தொப்பி அணிந்து கொண்டனர்.
அதன் பின் சுதிரின் தம்பி மகிழுந்தை சென்னை நோக்கி கிளப்ப, இவர்கள்  நால்வரும் இருசக்கர வண்டியில் கிளம்பினர். ஒரு வண்டியை சுதிர் ஓட்ட, மற்றொரு வண்டியை மாறவர்மசிம்மன் ஓட்டினான். 
புதையல் வேட்டை தொடங்கியது..

Advertisement