Advertisement

அடுத்த நாள் கலையில் சரியாக 6.30 மணிக்கு பூங்குழலி அரண்மைனை கோட்டையினுள் இருந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வர, அவளுக்காக மாறவர்மசிம்மன் காத்துக் கொண்டிருந்தான்.
“இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்” என்று புத்துணர்ச்சியுடன் அவள் கூற,
புடவையில் அழகு தேவதையாக வந்திருந்தவளை ரசித்தபடி, “இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் மிக இனிமையான நாள் தான் தேவி.. உனக்கும் அவ்வாறே அமையட்டும்” என்றான். 
கண்களை உருட்டி அவனை மிரட்டியவள், “சாமி தரிசனத்திற்கு வந்திருக்கிறோம்” என்றாள்.
“ஹ்ம்ம்.. சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தேவி தரிசனத்தை வைத்துக் கொள்கிறேன்” என்றான்.
இருவரும் ஒன்றாக கோவிலுனுள் சென்றனர். அந்த துர்க்கை அம்மன் கோவில் சிறியதாக இருந்தாலும் மிக நேர்த்தியாக இருந்தது. புன்னகை ததும்பிய துர்க்கை அம்மனின் அழகு முகத்தை காண கண்கள் இரண்டு போதாது. துர்க்கையை தரிசனம் செய்ததும் மனதில் தானே அமைதி தோன்றும்.
இருவரும் துர்க்கை அம்மன் முன் நின்று மனதார வேண்டினர். இருவரும் மற்றவரின் நலனையே வேண்டினர்.
பூசாரி தீபாராதனை செய்து இருவரின் முன்பும் நீட்டினார். இருவரும் தொட்டு கும்பிட்டதும், குங்குமம் கொடுத்தவர் பூங்குழலி கையில் அம்மன் கழுத்தில் இருந்து எடுத்த மல்லி சரத்தைக் கொடுத்தார்.
பூசாரி பிரசாத பாத்திரத்தை எடுக்க சென்ற இடைவேளையில் “தேவி” என்று அழைத்த மாறவர்மசிம்மன், அவள் திரும்பியதும் அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.
அதை எதிர்பார்க்காதவள் உடல் சிலிர்க்க நிற்க, அவனுக்குமே அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்த நொடியில் உடல் சிலிர்த்தது.
பூசாரி வந்து சக்கரை பொங்கல் பிரசாதத்தை கொடுக்கவும், இருவரும் அமைதியாக வாங்கினர்.
பின் மாறவர்மசிம்மன் பூசாரியிடம், “மகளை கல்லூரிக்கு முதல் நாள் அழைத்து செல்ல வேண்டும் என்று சொன்னீர்களே! நீங்கள் கிளம்புங்கள்.. நாங்கள் மெதுவாகத் தான் கிளம்புவோம்.. கோவில் நடையை சாற்றி சாவியை தீரனிடம் கொடுத்து விடுகிறேன்.. நீங்கள் தீரனிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
“மிக்க நன்றி ராஜா” என்று கூறியவர் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.
அவன் பூசாரியுடன் பேசிய போது தலையில் மல்லி சரத்தை சூடி இருந்தவள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைதியாக அவனது கரத்தை பற்றிக் கொண்டாள்.
அவன், “முதல் முறை வந்திருக்கிறாய்.. கோவில் எப்படி இருக்கிறது தேவி?” என்று கேட்டான்.
“ரொம்ப அருமையா இருக்குது..” என்றவள் அம்மனை பார்த்தபடி, “துர்க்கை அம்மனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்குது.. மனதிற்கு அப்படி ஒரு அமைதி கிடைக்குது” என்றாள்.
அவனும் அம்மனை பார்த்தபடி, “எனக்கும் அப்படித் தான் தோன்றும்.. என் அன்னை தினமும் காலையில் துர்க்கையை தரிசித்தப் பிறகு தான் காலை உணவையே எடுத்துக் கொள்வாராம்” என்றான்.
“இனி நாமும் அதையே செய்யலாம்” 
“சரி” என்றவன், “உன் ஆராய்ச்சியை தொடங்கு தேவி.. நீ முதல் முறையாக வந்திருப்பதால் சற்று தாமதம் ஆவதை யாரும் பெரிதாக கருத மாட்டார்கள் ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் வீண் சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது..” என்றான். 
“சரி” என்றவள் மீண்டும் ஒருமுறை துர்க்கையை சேவித்துவிட்டு தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தாள். அவனும் மீண்டும் ஒரு முறை ஆராயத் தொடங்கினான்.
அரை மணி நேரம் ஆராய்ந்தவள் உதட்டை பிதுக்கியபடி, “நீங்கள் கூறியது போல் இங்கே எதுவும் இருப்பதாக தெரியவில்லை” என்றாள்.
இருவரின் மனதினுள் ‘என்ன டா இது!’ என்று தோன்ற, இருவருமே கிளம்பும் முன் ‘தாயே இதற்கு ஒரு வழி காட்டு’ என்று வேண்டிவிட்டு கிளம்பிச் சென்றனர்.

 

அன்று மாலை விரைவாக அரண்மனைக்கு திரும்பிய மாறவர்மசிம்மன் பூங்குழலியை கைபேசியில் அழைத்து ரோஜாவனம் வரக் கூறினான்.
அவள் வந்ததும் மாறவர்மசிம்மன், “உள் அர்த்தம் எதுவும் இருக்குமோ என்று யோசித்த போது ஒன்று தோன்றியது தேவி.. ஆனால் அது சரியா என்று தெரியவில்லை” என்றான்.
“எனக்குமே ஒரு சந்தேகம் இருக்கிறது” என்றாள்.
“நீயே முதலில் சொல் தேவி” 
“காலையில் கோவில் தூணில் சிற்பங்கள் செதுக்கி இருப்பதைப் பார்த்தேன்.. அது போல் காளி கோவிலில் ஏதேனும் தூணில் துர்க்கை அம்மன் இருக்கிறதா?” 
கண்கள் ஒளிர, “அருமை தேவி.. ஆம்.. ஒரு தூணில் துர்க்கை அம்மனின் சிற்பம் இருக்கிறது.. இதை எப்படி மறந்தேன்!” என்றபடி சற்று யோசித்தவன் உற்சாகத்துடன், “அருமை தேவி.. காளி கோவிலில் இருக்கும் துர்க்கை கிழக்கு திசையில் தான் இருக்கிறது” என்றான். 
“துர்க்கை அம்மன் வடக்கு திசையில் தான் இருக்க வேண்டும் என்று கூறினீர்களே!” 
“சன்னதியில் இருக்கும் துர்க்கை தான் கண்டிப்பாக வடக்கு திசையில் இருக்க வேண்டும்.. தூணில் இருக்கும் புடைப்பு சிற்பத்திற்கு திசை கணக்கு கிடையாது” 
“ஓ! நீங்களும் ஏதோ யோசித்ததாக கூறினீர்களே!”  
“ஆம்.. இப்பொழுது யோசிக்கும் போது அதுவும் சரியாகத் தான் வருகிறது.. நேற்று நீ சொன்னதும் சரி தான்” என்றான்.
“நான் சொன்னதா?” 
“ஆம் தேவி.. இரு சொல்கிறேன்.. வெய்யோன் என்பதற்கு நிறைய பொருள் உண்டு.. அவற்றுள் விருப்பமுள்ளவன் ஒன்று.. சக என்றால் உடன் என்று பொருள்.. ரணசிம்ம ராஜா அதிகமாக இருக்கும் இடம், அவர் உடன் இருக்கும் தேவி இருக்கும் இடம் ரோஜாவனம்..
ஆக ‘வெய்யோன் திசை சக’ என்பது ரோஜாவனத்தை குறிக்கிறது.. தாத்திரி என்றால் நீ சொன்னது போல் பூமித்தாய் என்று எடுத்துக் கொள்வோம்..
ரோஜாவனத்தில் பூமித்தாய் வழி கட்டுவாள்.. அதாவது சுரங்கப்பாதை.. ரோஜாவனத்தில் இருக்கும் சுரங்கபாதை காளி கோவிலுக்குத் தான் செல்கிறது” 
“செம!” என்று உற்சாகத்துடன் கூறியவள், “சுரங்கப்பாதை வழியாகவே நாம் சென்றால் யாருக்கும் தெரியாது” என்றாள்.
“சுரங்கப்பாதை இப்போது பயனில் இல்லை தேவி.. நான் சொன்னது நாம் யோசித்தது சரி என்பது தான்.
அதாவது ‘வெய்யோன் திசை சகதாத்திரி வழி காட்டுவாள்’ என்பதன் அர்த்தம் ‘கிழக்கு திசையில் இருக்கும் துர்க்கை வழி காட்டுவாள்’. துர்க்கையை நாம் கண்டுபிடிக்க கொடுத்து இருக்கும் மற்றொரு துப்பு தான் அதன் உள் அர்த்தம் ‘ரோஜாவனத்தில் பூமித்தாய் வழி காட்டுவாள்’ என்பது”  
“இப்பொழுதே காளி கோவில் செல்லலாமா?” 
“சரி” என்றவன் அவளை காளி கோவிலுக்கு அழைத்துச் சென்றான். சுதிர் வண்டியை ஓட்ட, அவர்களுடன் பாதுகாப்பிற்காக தயாளனும் சென்றான்.
சுதிர் பாதுகாப்பிற்காக வெளியே இருக்க, மற்ற மூவரும் கோவில் உள்ளே சென்றனர்.
சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மாறவர்மசிம்மனும் பூங்குழலியும் கிழக்கு திசையில் இருந்த துர்க்கை புடைப்பு சிற்பத்தை ஆராய்ந்துக் கொண்டிருக்க, தயாளன் சுற்றுபுறத்தை கண்காணித்துக் கொண்டு இருந்தான்.
கோவிலில் இவர்களை தவிர இருவர் மட்டுமே இருக்க, எந்தவித இடையூறும் இல்லாமல் அத்தூணை ஆராய்ந்தனர்.
மாறவர்மசிம்மன் மெல்லிய குரலில், “துர்க்கை வழி காட்டுவாள் என்று தானே இருந்தது.. துர்க்கையின் கையில் இருக்கும் அம்பு காட்டும் திசையில் போய் பார்ப்போம் தேவி” என்றான்.
அவள் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்ட, இருவரும் அந்த திசையில் சென்றனர். இருவரும் அம்பு நோக்கிய இடத்தில் இருந்த கோவிலின் உள் பிரகாரத்தை ஆராய்ந்தனர்.
சிறிது நேரத்தில் பூங்குழலி ஒரு இடத்தை சுட்டிக் காட்டியபடி, “மாறா அங்க மேலே இருக்கும் கல் சற்று வித்யாசமா எனக்கு தெரியுது” என்றாள்.
“எனக்கு பெரிதாக வித்யாசம் தெரியவில்லை தேவி” 
“இல்லை.. அதன் அமைப்பு கொஞ்சம் வித்யாசமா இருக்குது.. என்னை தூக்குங்க.. நான் பார்க்கிறேன்” 
“விளையாடுகிறாயா தேவி!” 
அவள் இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தாள்.
“கோவிலில் வைத்து..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“ரொமன்ஸ் பண்ண தூக்க சொல்லலை.. கல்லை ஆராயத் தான் தூக்க சொல்கிறேன்.. இங்கே யாரும் இல்லை.. இரண்டே நிமிடங்கள் தான்” என்றாள்.
“ரொமன்ஸ் என்றால் காதற் செய்கை என்று சொல்ல வேண்டும்” 
“ரொம்ப முக்கியம்.. தூக்குங்க” என்று அவள் கட்டளையிட, அவன் அமைதியாக அவளை தூக்கினான்.
“இன்னும் கொஞ்சம் தூக்குங்க” என்றதும் அவன் சற்று உயரமாக தூக்கினான்.
அவள் கூறியது சரியே, அந்த கல் சற்று வித்யாசமாக தான் இருந்தது. அவள் அந்த கல்லின் மீது கை வைத்து சற்று அழுத்தம் கொடுத்ததும் அந்த கல் உருள, அதன் உட்புறம் சற்று நீளமான சிறு பெட்டி இருந்தது.
பெட்டியை எடுத்துக் கொண்டு கல்லை உருட்டி பழைய நிலைக்கு கொண்டு வந்தவள், “கீழே இறக்குங்க” என்றாள்.
அவன் இறக்கியதும் மகிழ்ச்சியுடன் அந்த பெட்டியை ஆட்டி காட்டினாள்.
அவன் புன்னகையுடன், “நீ ஒரு சிறந்த தொல்பொருள் ஆய்வாளர் என்பதை ஒத்துக் கொள்கிறேன்” என்றான்.
புன்னகையுடன், “நன்றி” என்றவள் அந்தப் பெட்டியை திறந்தாள்.
பெட்டியின் உள்ளே ஓலைச்சுவடி இருக்க, அதை பார்த்தவள், “எனக்கு இதை வாசிக்க முடியலை” என்றாள்.
“பழந்தமிழ் எழுத்துக்களை உபயோகித்து இருப்பார்கள்.. இரு நான் வாசிக்கிறேன்” என்றவன் அதை வாசித்தான்.
“மாயோன் முடிவின் வழி
அட்டாணி கிட்டும்..
மச்சபுள்ளி ராஜவந்தம் சீரியங்கும்
கருவூலம் தோன்றும்.” என்று இருந்தது.  

பொக்கிஷ தேடல் போட்டி

முதல் நிலையில் கிடைத்த ஓலைச்சுவடி கூறிய பொருள்:

கிழக்கு திசையில் இருக்கும் துர்க்கை வழி கட்டுவாள்.

மற்றும் உள் அர்த்தம்

ரோஜாவனத்தில் பூமித்தாய் வழி காட்டுவாள்.

 இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை கூறி இருந்தாலே போதுமானது, உங்கள் விடை சரி என்றே எடுத்துக்கொள்ளப் படும். 
2வது நிலை பற்றி அறிய ‘பொக்கிஷ தேடல் போட்டி – 2வது நிலை’ என்ற திரிக்கு செல்லுங்கள்.. இந்த பதிவிற்கான உங்கள் கருத்துக்களை கூற மறந்துவிடாதீர்கள்..

குழலின் இசை தொடரும்…

Advertisement