Advertisement

குழல் 20

கூட்டம் முடிந்ததும் மதிய உணவை முடித்துக் கொண்டு பூங்குழலி, இளவரசன் மற்றும் தீரன் மாறவர்மசிம்மனின் அறைக்குச் சென்றனர்.
உள்ளே சென்றதும் தீரன், “வணக்கம் ராஜா” என்று கூற,
சிறு தலை அசைப்புடன் மாறவர்மசிம்மன், “வணக்கம் தீரா” என்றான்.
இளவரசன், “அந்த போலி பத்திரிக்கைகாரனை அனுப்பியது யார்? ராஜமாதாவா?” என்று சிறு கோபத்துடன் வினவினான்.
மறுப்பாக தலை அசைத்த மாறவர்மசிம்மன், “நம் குலப்பெயர் கெடுவது போல், ராஜமாதா என்றும் செயல் பட மாட்டார்கள்.. இது உன் தாய் மாமனின் வேலை” என்றான்.
“இதனால் அவருக்கு என்ன ஆதாயம்?” 
“நம் ஒற்றுமையை குலைப்பது.. எங்கள் திருமணத்தில் குளறுபடி செய்வது.. ஆனால் குழலி துணை ஆணையர் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்.. இனி சற்று அடங்கித் தான் போவார்” என்றவன், “இதை விடு.. வேறு ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசத் தான் உன்னை அழைத்தேன்” என்றான்.
“என்ன?” 
தீரன் பக்கம் திரும்பிய மாறவர்மசிம்மன், “தந்தை இறக்கும் முன் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.. ரணசிம்ம ராஜாவின் பொக்கிஷம் பற்றி கேள்வி பட்டு இருப்பாய் என்று நினைக்கிறேன்” என்று நிறுத்தினான்.
தீரன், “ஆம் ராஜா.. கேள்விபட்டு இருக்கிறேன்” என்றான்.
“அது வெறும் கட்டுக்கதை அல்ல.. பொக்கிஷம் இருப்பது நிஜம்.. அதை கண்டு பிடித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என் தந்தையின் விருப்பம்.. அந்த பொக்கிஷத்தை பற்றி சிறு துப்பு கிடைத்து இருக்கிறது.. அதைத் தேடி நாங்கள் செல்லும் போது அரண்மனையை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்.. நாங்கள் எங்கே சென்றிருக்கிறோம்! எதற்கு சென்றிருக்கிறோம்! என்று யாருக்கும் தெரியக் கூடாது..” 
“சரி ராஜா ஆனால் உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்” 
“அதான் என்னுடன் துணை ஆணையர் வருகிறாரே!” என்று பூங்குழலியை பார்த்தபடி உதட்டோர புன்னகையுடன் அவன் கூற, அவள் அவனை முறைத்தாள்.
மாறவர்மசிம்மன்¸ “நான் சரியாகத் தானே கூறினேன்! ஏன் முறைக்கிறாய் தேவி?” என்று அறியாதவன் போல் வினவ,
அவள் அவனை முறைத்தபடி, “தாங்கள் எந்த அர்த்தத்திதில் கூறினீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் ராஜா” என்றாள்.
அவன் சிரிக்கவும், அவள் நன்றாகவே முறைத்தாள்.
இளவரசன், “நான் உங்களுடன் வரவில்லை.. எனக்கு அதில் விருப்பம் இல்லை” என்று இறுக்கமான குரலில் கூறினான்.
சட்டென்று இயல்பிற்கு திரும்பிய மாறவர்மசிம்மன், “அந்த சம்பவத்தை நீ மறக்க வேண்டும் என்று தான் உன்னை நான் அழைப்பதே” என்றான்.
இளவரசனோ, “இல்லை.. என்னால் முடியாது.. நீ வரும் வரை நான் அலுவலக வேலைகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்கிறேன்” என்று திட்டவட்டமாக கூறிவிட,
மாறவர்மசிம்மன், “சரி உன் விருப்பம்” என்றான்.
தீரன், “ராஜா உங்களுடன் தயாவையும் சுதிரையும் அழைத்துச செல்லுங்களேன்” என்று பணிவுடன் கேட்டான்.
சிறிது யோசித்த மாறவர்மசிம்மன், “சரி.. சற்று நேரத்தில் அலுவலகம் செல்லும் போது அவர்களிடம் பேசிக் கொள்கிறேன்” என்றான்.
“ஆகட்டும் ராஜா.. நான் செல்லவா?” 
“சரி” என்றதும் தீரன் வெளியேறினான்.
இளவரசன், “பொக்கிஷம் பற்றி தீரனுக்கு முன்பே தெரியாதா?” என்று கேட்டான்.
மாறவர்மசிம்மன்¸ “தெரியாது.. மறைகாணி பதிவை பார்த்து அன்று தோட்டத்தில் நீ தந்தையுடன் ஏதோ விவாதித்தாய் என்று மட்டும் தான் அவனுக்குத் தெரியும்.. உனது உதட்டசைவை வைத்து என்ன விவாதித்தாய் என்று நான் கண்டு கொண்டேன்..” என்றான்.
“ஓ” என்ற இளவரசன், “பொக்கிஷம் தேடி செல்லும் போது இருவரும் மிக கவனமாக இருங்கள்” என்றான்.
“கண்டிப்பாக” என்று மற்ற இருவரும் கூறினார்கள்.
பூங்குழலி, “மகாராணி இனி நான் அவர்களை கவனிக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறர்கள்.. ராணி செய்யும் வேலை இல்லை என்று கூறுகினார்கள்” என்றாள்.
மாறவர்மசிம்மன், “சரியாகத் தானே கூறி இருக்கிறார்கள்.. வேறு ஆள் ஏற்பாடு செய்ய தீரனிடம் சொல்லி இருக்கிறேன்..” என்றான்.
“வேறு ஆள் வரும் வரை நான் பார்த்துக் கொள்கிறேனே” 
“இனி அது சரி வராது தேவி.. என்ன செய்ய வேண்டும் என்று பணிப்பெண்ணிடம் கூறிவிட்டு நீ மேற்பார்வை மட்டும் பார்” 
“சரி..” 
“சங்கரநாராயணன் மாமாவிடம் பேசிவிட்டேன்.. இரண்டு வாரங்கள் கழித்து தான் துணை ஆணையர் தர்மன் இங்கிருந்து கிளம்புகிறார்.. அதன் பிறகே நீ அதிகாரப்பூர்வமாக வேலையில் இணைந்தால் போதும் என்றார்” 
“ஹ்ம்ம்.. நானும் பேசினேன்.. என்னிடமும் அப்படித் தான் சொன்னாங்க” 
இளவரசன், “சரி நான் கிளம்புறேன்” என்று கூற,
பூங்குழலி சிறு மென்னகையுடன், “ராஜமாதா அறைக்கா?” என்றாள்.
இளவரசன், “ஆம்.. உணவை முடித்துக் கொண்ட உடனே வரச் சொல்லி உத்தரவு போட்டு இருந்தார்கள்” என்றான்.
“ஹ்ம்ம்.. பத்து நிமிடங்கள் கழித்து நானும் வருகிறேன்” என்றவள் மாறவர்மசிம்மனின் பார்வையில் மென்னகையுடன், “சின்ன அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறேன்.. வேறு ஒன்றும் இல்லை” என்றாள். 
இளவரசன் மென்னகையுடன், “சரி பார்க்கலாம்” என்று கூறி கிளம்பினான்.
 
 
ராஜமாதா அறையினுள் இளவரசன் சென்றதும், ராஜமாதாவும் இளவரசியும் அவனை முறைக்க,
அவனோ அலட்சியத்துடன், “என்னை எதற்கு அழைத்தீர்கள்?” என்று கேட்டான்.
அவனது அலட்சிய பாவத்தில் ராஜமாதா இன்னும் அதிகமாக முறைக்க, அவனோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
ராஜமாதா, “உன் போக்கே சரி இல்லை விக்கிரமா” என்று கண்டன குரலில் கூற,
“இப்போது தான் நான் சரியான வழியில் செல்கிறேன்” என்று அழுத்தமான குரலில் கூறினான்.
இளவரசி கோபத்துடன், “ராஜமாதாவையே எதிர்க்கிறாயா! அதுவும் நமக்காக பார்த்துப் பார்த்து செய்யும் ராஜமாதாவை எதிர்க்கிறாயா!” என்றாள்.
அவன், “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கேள்வி பட்டது இல்லையா! இறைவனுக்கே அந்த நிலை எனும்போது!” என்று கூறி நிறுத்தினான்.
இளவரசி, “அவனுடன் சேர்ந்து வார்த்தை ஜாலத்தை கற்றுக் கொண்டாய் போல!  என்ன இருந்தாலும் ராஜமாதா இல்லை என்றால் நாம் இல்லை என்பதை மறக்காதே” என்றாள்.
இளவரசன், “சரியாகச் சொன்னாய்.. ராஜமாதா இல்லையேல் நாம் இல்லை தான்” என்று ஒருமாதிரி குரலில் கூறினான்.
அவனது குரலின் பேதத்தை புரிந்துக் கொண்ட ராஜமாதா யோசனையுடன் அவனைப் பார்க்க,
இளவரசி, “புரிந்தால் சரி” என்றாள்.
அவன், “உனக்கு தான் புரியவில்லை” என்றான்.
“என்ன புரியவில்லை?” 
“மகாராணி எப்படி இந்த அரண்மனையினுள் வந்தார்கள் என்று” 
ராஜமாதா, “விக்கிரமா!” என்று சிறு அதிர்வு கலந்த கோபத்துடன் அழைக்க,
அவனோ இகழ்ச்சி புன்னகையுடன், “கூறுங்கள் ராஜமாதா, மகாராணி எப்படி இந்த அரண்மனையினுள் வந்தார்?” என்று அவரிடமே கேட்டான்.
அவரோ, “நமக்குள் பிரச்சனையை உண்டுபண்ண அவன் பொய் கூறி இருக்கிறான்” என்றார்.
“எது பொய்? சிம்மனின் தாயை விஷம் வைத்து நீங்கள் கொல்லவில்லை? அதனால் தானே அவன் உணவில் இவ்வளவு கவனமாக இருக்கிறான்!” என்று கோபத்துடன் கூறியவன், “இந்த விஷயத்தை கூறியது சிம்மன் இல்லை” என்றான்.
இளவரசி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க,
ராஜமாதா கோபத்துடன், “வேறு யார் சொன்னது?” என்று வினவினார்.
“நான் தான்” என்று கூறியபடி பூங்குழலி உள்ளே வந்தாள்.
அவர் கடும் கோபத்துடன், “உன்னை யார் உள்ளே விட்டது?” என்று கர்ஜிக்க,
அவளோ அதை சிறிதும் பொருட் படுத்தாமல், “ராணியை யார் தடுப்பது?” என்றாள்.
இளவரசி வெறுப்பும் கோபமுமாக அவளைப் பார்க்க,
ராஜமாதா கோபமும் இகழ்ச்சியுமாக, “நீ ராணியா! கனவு காணாதே! நான் நினைத்தால் நீ இல்லாமல் போய்விடுவாய்” என்றார்.
அவளோ உதட்டோர அலட்சிய புன்னகையுடன், “நீங்கள் எந்த எல்லைக்கும் போவீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.. உங்களுக்குத் தான் இந்த பூங்குழலியைப் பற்றி தெரியவில்லை.. நான் ராஜா இல்லை, உங்கள் ஆட்டத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதற்கு” என்றவள் தனது கைபேசியில் அவர் பேசிய ஒலிதத்தை ஓடவிட்டாள்.
பின், “இதை வைத்து எனக்கோ ராஜாவிற்கோ எந்த ஒரு ஆபத்து நிகழ்ந்தாலும் நீங்கள் தான் காரணம் என்று ஆணையரிடம் புகார் கொடுத்துவிட்டேன்.. இனி தற்செயலாக எங்களுக்கு விபத்து நடந்தால் கூட நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும்.. ஆணையர் உங்களை லேசில் தப்பிக்க விட மாட்டார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்” என்றாள்.
ராஜமாதா முகத்தில் முதல் முறையாக சிறு அதிர்ச்சி தெரியவும்,
அவள், “இதை சொல்லத் தான் வந்தேன்.. பார்த்து கவனமா இருந்துக்கோங்க” என்று நக்கலாக கூறிவிட்டு சென்றாள்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் அமர்ந்து இருந்த தங்கையை பாவமாக பார்த்த இளவரசன், “காஞ்சனா” என்று அழைத்தான்.
திடுக்கிட்டு அவனைப் பார்த்தவளை, “வா” என்று அழைத்தவன், அவள் எழுந்ததும் தனது கையணைப்பில் அழைத்துச் சென்றான்.
மாறவர்மசிம்மனை இளவரசிக்கு பிடிக்காது தான் ஆனால் அவளுமே அவன் மரணிக்க வேண்டும் என்று நினைத்தது இல்லை.
நிலைமை தனது கை மீறிச் செல்வதை உணர்ந்த ராஜமாதா ஒன்றும் செய்ய இயலாதவராக கோபமும் எரிச்சலுமாக இருந்தார். தன்னை ஏமாற்றிய பூங்குழலி மீது தான் அவரது மொத்த கோபமும் திரும்பியது. ஆனால் தன் மேல் புகார் கொடுத்து இருக்கும் துணை ஆணையரான அவளை தான் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்து, தனது இயலாமையில் இன்னும் அதிகம் கோபம் கொண்டார்.

Advertisement