தீரன், “அவங்களோட கைப்பேசி பற்றிய அனைத்து தகவல்களையும் ரஞ்சித் அனுப்பிட்டார்.. IMEI எண் வைத்து சோதித்ததில் அவங்க ஸ்மார்ட் போனில் இது வரை ஒரே ஒரு சிம் மட்டும் தான் போட்டு இருக்கிறாங்க.. அது நம்மிடம் இருக்கும் எண் தான்.. இந்த எண்ணில் இருந்து சதேகப்படும் படி யாருக்கும் பேசவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை.. அவங்களை இங்கே அனுப்பிய முகமைக்கு வந்து அன்று பேசினது தான்.. அப்புறம் நடுவில் இருமுறை அவங்க வளர்ந்த ஆசிரம உரிமையாளரிடம் பேசி இருக்கிறாங்க.. நாள் மற்றும் நேரத்தை வைத்து ஒலிவாங்கி பதிவில் சரி பார்த்துவிட்டோம்.. சந்தேகப்படும் அளவில் பேச்சு இல்லை.. சாதாரண பேச்சு தான்”
“ஆசிரம உரிமையாளரை அவள் எப்படி அழைத்தாள்?”
“ஐயா என்று அழைத்தார்கள்” என்றதும், அவன் மனதினுள், ‘அப்போ அன்று கூறிய அங்கிள் வேறு.. நிதி உதவி செய்தவராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று குறித்துக் கொண்டான்.
“சரி.. வேறு என்ன தெரிந்தது?” என்று கேட்டான்.
“வேறு எதுவும் கிடைக்கவில்லை ராஜா.. ஒலிவாங்கி பதிவுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்”
“ஹ்ம்ம்.. இவ்வளவு யோசித்தவள் நிச்சயம் மற்றொரு கைப்பேசியில் இருந்து பேசி இருக்க மாட்டாள்.. குறுஞ்செய்தி தான் அனுப்பி இருப்பாள்.. இருந்தாலும் ஒலிவாங்கி பதிவுகளை பார்த்து முடித்து விடுங்கள்”
“சரி ராஜா”
“ஆக.. அந்த மற்றொரு கைப்பேசியின் IMEI எண் அல்லது மற்றொரு சிம் எண் தெரிந்தால் மட்டுமே அவளது குழுவினரை கண்டு பிடிக்க முடியும்”
“ஆம் ராஜா” என்று தீரன் கூற, “ராணி உங்களுக்கு இணையாக யோசிக்கிறாங்க ராஜா” என்று தயாளன் கூறினான்.
“உன்னை எப்படி ராணி என்று அழைக்க விட்டான்?” என்று இளநகையுடன் மாறவர்மசிம்மன் வினவ,
“ராஜா.. நான்..” என்ற தீரனின் விளக்கத்தைத் தடுத்தவன் அதே இளநகையுடன், “உன்னை தவறாக எதுவும் சொல்லவில்லை தீரா.. அதில் என் மீது நீ கொண்டுள்ள அக்கறை தான் எனக்கு தெரிகிறது” என்றான்.
நிம்மதியடைந்த தீரன், “நன்றி ராஜா” என்றான்.
அவன், “மீதம் இருக்கும் ஒலிவாங்கி பதிவுகளை பாதியாக பிரித்து தயாக்கு அனுப்பிவிடு.. நேரம் மிச்சமாகும்” என்றான்.
“அப்படி தான் செய்து தனி தனியே ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் ராஜா” என்று தீரன் கூற,
“நன்று” என்றவன், “எப்போது இந்த வேலை முடியும்?” என்று கேட்டான்.
இருவருமே ஒன்றாக, “நாளை முடிந்துவிடும்” என்றனர்.
“நாளையும் துப்பு கிடைப்பது சந்தேகம் தான்..” என்ற மாறவர்மசிம்மன், “அந்த மற்றொரு கைப்பேசியில் அமைப்பை நன்றாக பார்த்தாய் தானே! அதற்கான மின்கலத்தை வெளியே வாங்க முயற்சி செய்” என்றான்.
தீரன், “அது பழைய மாடல் ராஜா.. பேட்டரி உடனே கிடைப்பது சற்று சிரமம்” என்றான்.
“முயற்சி செய்.. கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.. இல்லை தேவைப் பட்டால் அதிரடியாக செயல் பட வேண்டியது தான்..” என்றான்.
இருவரும், ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்க,
அவன், “யாரும் அறியாமல் தேவி அறையினுள் சென்று குளியல் அறை தவிர மற்ற இடங்களில் மறைகாணிகளை வைக்க வேண்டும்..” என்று பேசிக் கொண்டிருந்தவன் இருவர் முகத்திலும் தெரிந்த அதிர்ச்சியில், “என்ன?” என்றான்.
தீரன் தயங்க, தயாளன், “ஆடை மாற்றும் அறையிலுமா?” என்று கேட்டான்.
அவன், “அங்கே தான் முக்கியமாக வைக்க வேண்டும்.. அங்கிருந்து குறுஞ்செய்தி அனுப்ப தான் அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றவன் தீரனை பார்த்து, “கைப்பேசி பாகங்களை அந்த அறையில் இருந்து தானே எடுத்து இருப்பாய்!” என்றான்.
தயாளன் தீரனைப் பார்க்க, அவன் சிறு அதிர்வுடன், “ஆம் ராஜா.. அனைத்து பாகங்களும் அந்த அறையில் தான் இருந்தது” என்றான்.
“ஆக.. அறையினுள் மறைக்காணி வைத்து இருந்தாலும் உடை மாற்றும் அறையில் வைத்து இருக்க மாட்டோம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தான் குறுச்செய்திகளை அனுப்புகிறாள்” என்றவன், “அந்த அறை மட்டுமில்லை தேவி அறையில் வைக்கப்படும் அனைத்து மறைக்காணியின் பதிவுகளும் எனது கைப்பேசியில் மட்டுமே இணைக்கப் பட வேண்டும்.. அவள் குறுஞ்செய்தி அனுப்பும் நேரம் அதிரடியாக அறையின் உள்ளே நுழைந்து கைப்பேசியை கைப்பற்ற வேண்டும்..” என்றான்.
இருவரும் அதிர்ச்சியை தங்களுக்குள் மறைத்தபடி ‘சரி’ என்று தலையை ஆட்டினர்.
“இரண்டு நாட்கள் போகட்டும்.. தேவைப் பட்டால் சொல்கிறேன்.. நீயும் வெளியே மின்கலம் வாங்க முயற்சி செய்” என்றவன், “சரி.. தயா நீ கிளம்பு.. நான் போய் அலுவல் வேலைகளைப் பார்க்கிறேன்” என்று கூறி வந்த வழியே தனது அறைக்குச் சென்றான்.
இரவு உணவை முடித்த பிறகு தனது அறையில் படுத்தபடி மீனாட்சி மாறவர்மசிம்மனை அழைத்தாள்.
அழைப்பை எடுத்து, “சொல்லு தேவி.. என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? இரவு உணவை எடுத்துக் கொண்டாயா?” என்று கேட்டவன் தீரனுக்கு குறுச்செய்தி அனுப்ப மறக்கவில்லை.
“சாப்டுட்டேன்.. நீங்க?”
“நானும் உண்டு விட்டேன்”
“என்ன செஞ்சுட்டு இருக்கிறீங்க?”
“இன்று பார்க்காமல் விட்ட அலுவல் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. தேவி அழைத்ததின் காரணம் என்னவோ?”
“ஏன் நான் சும்மா கூப்பிடக் கூடாதா?”
“தாராளமாக அழைக்கலாம்.. ஆனால் இதுவரை நீ அப்படி அழைத்தது இல்லை.. நான் தான் காரணம் இன்றி உன்னுடன் பேச வேண்டும் என்று அழைத்து இருக்கிறேன்”
அவள் அமைதியாக இருக்க, அவன் மென்னகையுடன், “சரி சொல் தேவி.. என்ன விஷயம்?” என்றான்.
“நான் அழைக்க தேவையே இல்லாமல் நீங்களே என்னை அழைத்துவிடுவீர்கள்” என்று அவள் சுருதி இறங்கிய குரலில் கூற,
அவன், “நான் உன்னை தவறாக எதுவும் கூறவே இல்லை தேவி.. எதையும் என் தேவி வாய் திறந்து கேட்கும் முன்பே நிறைவேற்றி விடுவது தானே இந்த மாறனுக்கு அழகு” என்றான்.
“தேங்க்ஸ்”
“அதை நன்றி என்றும் சொல்லலாம்”
அவள் மென்னகையுடன், “மிக்க நன்றி தமிழ் பித்தா” என்றாள்.
அவனும் மென்னகையுடன், “சரி சொல்” என்றான்.
“பெருசா எதுவும் இல்லை.. இன்னைக்கு சோதனை நடந்ததை பற்றி கேள்விப் பட்டேன்.. அதான் உங்க முதன்மை மந்திரி என்ன கண்டு பிடித்தார் என்று கேட்க நினைச்சேன்.. கூடவே இனி நான் இருக்கும் போதே சோதனையை நடத்தலாம்னும் சொல்ல நினைச்சேன்”
சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் மென்னகையுடன், “அடுத்த முறை நீ இருக்கும் போதே சோதனையிடச் சொல்கிறேன்” என்றவன், “நீ வைத்திருக்கும் ரகசிய கைப்பேசியை கண்டு பிடிக்க நான் தான் அவனை சோதனையிடச் சொன்னேன்..” என்றான்.
அவனது புத்தி கூர்மையில் ஆச்சரியம் கொண்டவள் அதை தன்னுள் மறைத்தபடி, “ஓ! கிடைத்ததா?” என்று கேட்டாள்.
“என்ன நினைக்கிறாய்?”
“பாதி கிடைத்து இருக்கலாம்”
“சரியே..”
“நான் கூறும் வரை காத்திருக்கிறேன்னு தானே சொன்னீங்க?”
“நான் எப்போது அப்படி கூறினேன்?”
“வார்த்தையால் இல்லை.. செய்கையால் சொன்னீங்க”
“அது கூட உன்னிடம் கேட்க மாட்டேன் என்று தான் செய்கையால் தெரிவித்தேன்.. நீ உன் வேலையை பார்.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. எனது அரண்மனையில் நடப்பதை கண்டு பிடிக்கவில்லை என்றால் நான் என்ன ராஜா?”
“உங்கள் ராணிக்கு என்று தனி சலுகை கிடையாதா?”
“மிக்க மகிழ்ச்சி தேவி.. முதல் முறையாக உனது வாயில் இருந்து ராணி என்று கூறி இருக்கிறாய்” என்றபடி அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
அவன் நேரில் கொடுத்தது போல் அவள் உடல் சிலிர்க்க அமைதியானாள்.
அதை உணர்ந்தார் போல் அவன் சிரிப்புடன், “இன்று வசூலிப்பதாக கூறியதை நாளை வட்டியுடன் வசூலித்துக் கொள்கிறேன்” என்றான்.
“நீங்க ராஜாவா வசூல் ராஜா வா?”
“என் தேவியை பொறுத்தவரையில் மட்டும் வசூல் ராஜா தான்.. அதுவும் கந்து வட்டி வசூல் ராஜா” என்று கூறி சிரித்தான்.
“சரி பேச்சை மாத்தாதீங்க”
“பேச்சை மாற்றவில்லை தேவி.. நிச்சயமாக ராணிக்கு தனி சலுகைகள் உண்டு.. கூடவே ராணியின் பாதுகாப்பை கருதி என் கவனிப்பும் இருக்கும்”
இரண்டு நொடிகள் அமைதியாக இருந்தவள், “நாளைக்கு சாயுங்காலம் ரோஜாவனத்தில் உண்மையை சொல்கிறேன்” என்றாள்.
“தேவை இல்லை தேவி.. நீ உன் வேலை முடிந்த பிறகே கூறு.. நீ சொல்லும் முன் நானே கண்டு பிடிக்கிறேன்.. எனக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றான்.
அவள் மென்னகையுடன், “சரி” என்றாள்.
அதன் பிறகு சிறிது நேரம் ஏதேதோ கதைகள் பேசிய பிறகே அழைப்பைத் துண்டித்தனர்.
அவள் இனிய கனவுகளுடன் உறங்க முயற்சி செய்ய, அவன் மீண்டும் தீரனுக்கு குறுச்செய்தி அனுப்பிவிட்டு அலுவல் வேலைகளைத் தொடர்ந்தான்.