அத்தியாயம் 11

மாறவர்மசிம்மனிடம் ஆயுதத்தை எதிர்பார்க்காதவர்கள் ஒரு நொடி அதிர்ந்தாலும் அவனை தாக்கத் தயாரானார்கள். 

மாறவர்மசிம்மனின் பிச்சுவா கத்தி சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஒரே பிடியில் இரு கத்திகளை கொண்டிருக்கும். இரு கத்திக்கும் இடையே இன்னொரு கத்தி நுழையும் அளவிற்கு இடைவெளி இருக்கும்.

வண்டியை விட்டு மாறவர்மசிம்மன் சற்று நகர்ந்ததும், முன் பக்கம் ஒருவனும் பின் பக்கம் ஒருவனும் தாக்க வந்தனர்.

இருவரும் ஒரே நேரத்தில் அவனை நோக்கி கத்தியையும் அரிவாளையும் செலுத்த, பின் பக்கம் வந்த அரிவாளை கட்டாரியால் தடுத்தவன் முன் பக்கம் வந்த கத்தியை பிச்சுவா கத்தியை கொண்டு பிடித்து, அதை கொண்டே அரிவாள் ஏந்தியவனின் கையையும் வயிற்றையும் கீறி இருந்தான். 

அதாவது அவனது பிச்சுவா கத்தியில் இருக்கும் இடைவெளியை கொண்டு அந்த கத்தியை இறுக்கமாக பற்றி, எதிரியின் கத்தியை கொண்டே மற்றவனை தாக்கி இருந்தான். தன்னை தற்காத்துக்கொள்ள மட்டுமே நினைத்தவன் எதிரியின் கை துண்டாக போகும் அளவிற்கு அல்லாமல் சற்று ஆழமாக மட்டுமே வெட்டி இருந்தான். வயிற்றுப் பகுதியையும் அதே போல் தான் தாக்கி இருந்தான்.

வெட்டுபட்டவன் அலறலுடன் அரிவாளை கீழே போட்டபடி பின்னால் நகர, கீழே விழுந்த அரிவாளை தனது வண்டிக்கு அடியில் காலால் தள்ளியபடி கட்டாரியை கொண்டு கத்தி ஏந்தியவனின் புஜத்திலும் நெஞ்சிற்கு மேலேயும் வெட்டினான்.

இவை அனைத்தும் சொற்ப நொடிகளில் நிகழ்ந்திருக்க, என்ன நடந்தது என்றே எதிரிகளுக்குப் புரியவில்லை.

நொடிப் பொழுதில் தங்கள் ஆட்கள் இருவர் சுருண்டு விழவும் மற்ற நால்வரும் ஒன்றாக அவனைத் தாக்க வந்தனர்.

நால்வரும் அவனுக்கு நான்கு பக்கத்தில் இருந்து தாக்க தயாராக நின்றனர். 

நால்வரும் தங்களுக்குள் சமிக்ஞை செய்து, அவனை ஒரே நேரத்தில் தாக்கினர். ஆனால் விநாடி வித்தியாசத்தில் முதலில் தாக்கியவனின் அரிவாளை வேகத்துடன் தனது பிச்சுவா கத்தி கொண்டு பற்றி இழுத்து அவனை தனக்கு கேடையமாக பயன்படுத்தி மற்றவர்களைத் தாக்கி இருந்தான்.

அதே நேரத்தில் புதர் மறைவில் இருந்து அவனுக்கு பின் பக்கமாக இருவர் தாக்க வர, அவர்களுக்கு பின்னால் இருந்தபடி மீனாட்சி அவர்களின் கழுத்து பகுதியில் கராத்தே வெட்டால் இரு கரங்கள் கொண்டு தாக்கி இருந்தாள்.

சத்தம் கேட்டு திரும்பிய மாறவர்மசிம்மன் கண்டது மீனாட்சியின் தாக்குதலைத் தான். அந்த இருவரும் இவனை விட்டுவிட்டு மீனாட்சி பக்கம் திரும்ப, மாறவர்மசிம்மன் சட்டென்று கீழே கிடந்த நீளமான கத்தியை எடுத்து, “தேவி” என்று கத்தியபடி தூக்கி வீசியிருந்தான். அவளும் அதை சரியாக பற்றி இருந்தாள்.

அந்த இருவரில் ஒருவனை மாறவர்மசிம்மன் தாக்க, மற்றவனை மீனாட்சி தாக்கினாள். இருவரும் பின்வாங்கினர்.

மீனாட்சியின் கையை பற்றி இழுத்து தனக்கு பின்னால் நிற்க வைத்தவன், “உன்னை கீழே இறங்காதே என்றேன்” என்று கர்ஜித்தபடி எதிரிகளை தாக்கத் தயாராக இருந்தான்.

அவளும் கவனத்தை எதிரிகளிடம் வைத்தபடி, “நான் சரியான நேரத்திற்கு வரலைனா உங்களை வெட்டி இருப்பான்க” என்றாள். 

“இரண்டு வெட்டுக்களில் எல்லாம் மடிந்து விட மாட்டேன்” என்றபடி தன்னை தாக்க வந்தவனின் தோள்பட்டையில் தாக்கினான்.

“அதே தான் எனக்கும்” என்றபடி அவளும் தன்னை தாக்க வந்தவனின் கையை கீறி இருந்தாள்.

இதற்குள் சுதிரும் தாயளனும் வந்துவிட, அந்த அடியாட்கள் தட்டுத்தடுமாறியபடி சிதறி ஓட ஆரம்பித்தனர். 

சுதிர் அவர்களை பிடிக்கப் போக, மாறவர்மசிம்மன், “சுதிர் விடு” என்றிருந்தான்.

தயாளன், “அவன்களை சும்மா விடச் சொல்றீங்களா?” என்று வினவ,

மீனாட்சி, “யார் வேலை என்று தெரிய வேண்டாமா?” என்றாள்.

“இவர்கள் வெறும் அம்பு தான்” என்று தயாளனிடம் கூறியவன் அவளைப் பார்த்து, “கை புண்ணுக்கு எதற்கு கண்ணாடி?” என்றான்.

அவள் புரியாமல் பார்க்க, அவன், “இது யார் வேலை என்று எனக்குத் தெரியும்” என்றான்.

அவள், “அப்போ போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுங்க” என்று கூற, அவன் அலட்சியமாக உதட்டை வளைத்தான்.

தயாளனும், “மேடம் சொல்றபடி செய்யலாமே சார்” என்றான்.

தயாளனை அவன் அழுத்தமான பார்வை பார்க்க, தயாளன் அமைதியானான்.

மீனாட்சி, “ஏன் கம்ப்ளைண்ட் பண்ண மாட்டிக்கிறீங்க?” என்று தவிப்பும் சிறு கோபமுமாக கேட்க,

“முதலில் இங்கிருந்து கிளம்புவோம்” என்றபடி அவன் வண்டியில் ஏற, மற்றவர்களும் ஏறினர். சுதிர் ஓட்டுனர் இடத்தில் அமர, அவன் அருகே தயாளன் அமர, மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் பின்னால் ஏறியிருந்தனர்.

வண்டி கிளம்பியதும் அவள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அவன், “ஏன் என்றால் அது என் தங்கை வாழப் போகும் வீடு” என்றான்.

அவள் அதிர்வுடன், “என்ன!” என்றாள்.

அவன் அலட்டிக் கொள்ளாமல், “என்ன?” என்று வினவ,

அவள், “உங்க எதிரி வீட்டில் உங்க தங்கையை கல்யாணம் செய்து கொடுக்கப் போறீங்களா?” என்று கேட்டாள்.

அவன் விரக்த்தியும் அலட்சியமுகாக உதட்டை வளைத்தான்.

அவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவன், “இந்த அடியாட்களை அனுப்பியது மகாராணியின் அண்ணன்” என்றான்.

இப்பொழுது புரிந்துக் கொண்டவளுக்கு அவனது நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. அதை புரிந்தார்ப் போல் அவன் ‘இதெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை’ என்ற பாவனை காட்டி, அவளை தேற்றும் வகையில் அவளது கையை ஆறுதலாகப் பற்றினான்.

தயாளன், “ஒருமுறை நீங்க யோசிக்கலாமே ராஜா” என்று பணிவுடன் கூற,

அவன், “அமர் வரும் வரை தான் பராந்தகனின் ஆட்டம்” என்றான்.

அதன் பின் தயாளன் அமைதியாகி விட, அவள், “அமர் யார்?” என்று கேட்டாள்.

“அமர்.. அமரகேசரி என் நண்பன்.. என் தங்கையின் வருங்கால கணவன்.. பராந்தககேசரியின் மகன்” என்றான்.

“அவர் மட்டும் எப்படி உங்கள் பக்கம்?”

“அவன் அவனது அன்னையைப் போல் நியாயத்தின் பக்கம் நிற்பவன்”

“ஆச்சரியம் தான்”

அவளைப் பார்த்து மென்னகைத்தவன் பின் தயாளனிடம், “நீங்கள் வந்த வண்டி என்னவாயிற்று? அவனுக்கு பணம் கொடுத்தீர்களா?” என்று கேட்டான்.

நடந்ததை கூறிய தயாளன், “பணம் கொடுக்கவில்லை சார்.. அந்த நேரத்தில் அது தோணவே இல்லை” என்றான்.

“அவன் எண்ணும் பெயரும் இருக்கிறது தானே! அவனிடம் ஜிபே இருந்தால் அதில் பணத்தை அனுப்பிவிடு.. இல்லை என்றால் அவனை அழைத்து கோட்டை தலைவாயில் காவலாளியிடம் பெற்றுக் கொள்ளச் சொல்” 

“ஓகே சார்” என்றபடி கைபேசியை நோண்டியவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த வாடகை வண்டியின் ஓட்டுனரை அழைத்து, “ஆசிரமத்தில் இருந்து வந்த கஸ்டமர் பேசுறேன்.. இப்போ தான் உங்க ஜிபே-யில் அமௌன்ட் அனுப்பினேன்.. செக் பண்ணிக்கோங்க” என்றவன் அவனது பதிலைப் பெற்றுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.

பின் மாறவர்மசிம்மனிடம், “பணம் கிடைத்தது என்று சரி பார்த்து சொல்லிட்டான் சார்” என்றான்.

வண்டி அரண்மனையினுள் சென்று நின்றதும், மாறவர்மசிம்மன் மீனாட்சியிடம், “உணவை முடித்துக் கொண்டு ரோஜாவனம் வா” என்று கூறினான்.

முதல் முறையாக மற்றவர்கள் முன் அவன் விடுத்த அழைப்பில் அவள் சங்கோஜத்துடன் ‘சரி’ என்று தலை ஆட்டிச் சென்றாள்.

நடந்து முடிந்த சம்பவத்தைப் பற்றி அறிந்த தீரன் தயாளனையும் சுதிரையும் கடிந்துக் கொண்டான். இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ராஜாவே கூறினாலும் எக்காரணம் கொண்டும் அவரைத் தனியே பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினான்.

விஷயம் அறிந்த சந்ரா மாறவர்மசிம்மனை கலக்கத்துடன் பார்க்க, அவரது கையை பற்றியவன் மென்னகையுடன், “ஒன்றும் இல்லை சந்ராமா” என்றான்.

“இனி எங்கேயும் தனியே போகாதீங்க ராஜா” என்று கெஞ்சும் குரலில் கூற,

அவன், “சரி” என்றான்.

ராஜமாதாவின் அறையில், “உன் தாய்மாமனுக்கு போன் போடு” என்று கடும் கோபத்துடன் இளவரசனிடம் கூறிய ராஜமாதா, “ஸ்பீக்கர் போடு” என்றும் சேர்த்துக் கூறினார்.

தனது உளவாளிகள் மூலம் நடந்த தாக்குதலைப் பற்றி ராஜமாதா அறிந்ததின் விளைவே இந்த கோபம்.

இந்த தாக்குதல் தனது தமையன் மகனான பராந்தககேசரியின் செயல் தான் என்பதை சரியாக கணித்த ராஜமாதா, விஷயம் அறிந்ததும் பராந்தககேசரியை கைபேசியில் அழைத்தார். ஆனால் அவர் வேண்டுமென்றே அழைப்பை எடுக்கவில்லை. 

இளவரசன், “மாமா எடுக்கவில்லை ராஜமாதா” என்றான்.

அவர் அதிகரித்த கோபத்துடன், “எடுக்கும் வரை அழை” என்றார்.

இளவரசனும் அவ்வாறே செய்ய, ஒரு கட்டத்தில் அழைப்பை எடுத்த பராந்தககேசரி எதுவும் அறியாதவர் போல், “சொல்லு மருமகனே.. என்ன இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கிற?” என்றார்.

இளவரசன் பேசும் முன் ராஜமாதா கோபக் குரலில், “பொறுமை என்பதே உனக்கு கிடையாதா பராந்தகா?” என்றார்.

“இல்லை.. அத்தை.. அது..” என்று பராந்தககேசரி திணறினார். 

பராந்தககேசரியும் ராஜபரம்பரை தான் என்ற போதிலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் குடும்பத்திற்கு ‘ராஜபரம்பரை’ என்ற பெயர் மட்டுமே இருக்கிறதே தவிர இவர்களைப் போல் செல்வாக்கும் அதிகாரமும் கிடையாது. மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் இவர்கள் அளவிற்கு கிடையாது. அதனால் எப்பொழுதுமே அவர் தனது அத்தையிடம்(ராஜமாதா) அடங்கித் தான் போவார்.

ராஜமாதா, “என்ன இல்லை? அவனை எதுவும் செய்யாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேனா இல்லையா?” என்றார்.

பராந்தககேசரி தயக்கத்துடன் என்றாலும், “நீங்க எதையும் செய்யக் காணுமே! அதான் என் தங்கை பிள்ளைகளுக்காக நான் செய்தேன்” என்று கூறி இருந்தார்.

“அதையாவது உருப்படியாக செய்தாயா?”

“அது.. அடுத்த முறை..” என்றவரின் பேச்சை இடையிட்ட ராஜமாதா, “கிழித்தாய்” என்றார் கடும் கோபத்துடன்.

பின் ராஜமாதா, “ஒருவேளை காரியம் முடிந்து இருந்தால், போலீஸிடம் இருந்து தப்ப என்ன திட்டம் வைத்து இருந்தாய்?” என்று கேட்டார்.

பராந்தககேசரி பதில் கூற முடியாமல் திணற, 

ராஜமாதா, “இதனால் தான் உன்னை அமைதியாக இருக்கக் கூறினேன்.. உனக்கு வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் கிடையாது..” என்றார்.

“ஆனால் நீங்கள் ஆமை வேகத்தில் செல்கிறீர்களே” என்ற இளவரசன் தாய்மாமனிடம், “அவனை செயல்பட முடியாத அளவிற்கு முடம் ஆக்கினால் போதுமானது.. உயிருக்கு ஆபத்து விளைவிக்காதீர்கள்” என்றான்.

ராஜமாதா, “என்ன புதிதாக பாசம் உதிக்கிறது? தமையன் என்ற என்னமா இல்லை அவனுடன் இருக்கும் உனது மனம் கவர்ந்தவளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்ற கரிசனமா?” என்றார் இகழ்ச்சியாக.

அவன், “எப்போதுமே எனக்கு அவனை பிடிக்காது தான் ஆனால் அவன் உயிரை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததே கிடையாது.. அது உங்களுக்கும் தெரியும்” என்றான் காரமாக.

இகழ்ச்சியாக உதட்டை வளைத்த ராஜமாதா, “அந்த பெண் மீது ஆசையை வளர்க்காதே.. அவனை கொன்றுவிட்டு சிறைக்கு சென்று விடுவாள்” என்றதும் அவன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

அவனது அதிர்ச்சியை சிறிதும் கண்டு கொள்ளாதவர், “பராந்தகா இந்த அழைப்பைத் துண்டித்து உடனே எனது எண்ணிற்கு அழைக்கிறாய்” என்று கட்டளையிட்டார்.

பராந்தககேசரி அழைப்பை துண்டித்ததும், ராஜமாதா, “விக்கிரமா உன் வேலையை பார்க்கச் செல்” என்றார்.

அவன் அதிர்ச்சியுடனே அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் வெளியேறினான்.

அவன் வெளியே செல்லவும் பராந்தககேசரியிடம் இருந்து ராஜமாதாவிற்கு அழைப்பு வந்தது.

ராஜமாதா அழைப்பை எடுத்ததும், அவர், “அந்த பெண் என்றால் மங்கையை பார்த்துக்கொள்ள வந்திருக்கும் பெண்ணா?” என்று கேட்டார்.

“ஆம்”

“அவனை கொல்வதற்கு என்றே வந்து இருக்கிறாளா?”

“ஆம்.. ஆனால் இந்த விஷயம் அவளுக்குத் தெரியாது.. அவளைப் பொறுத்த வரை அவளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலை, அவனை காதல் என்ற பெயரில் மதி மயங்க செய்ய வேண்டும்.. அவளுக்கே தெரியாமல் காரியத்தை முடித்து பழியை அவள் மேல் போட்டு நாம தப்பிக்க போகிறோம்” என்றவர், 

“இதைப் பற்றி விக்கிரமாவிடம் பேசிவிடாதே.. அவனுக்கு அந்த பெண் மீது சிறு நாட்டம் இருக்கிறது.. அதனால் தான் அவள் முழு விவரமும் தெரிந்தே வந்திருப்பது போல் அவனிடம் காட்டிக் கொண்டேன்” என்றார்.  

‘செய்றதை எல்லாம் தனியா செய்துட்டு தப்பிக்கற விஷயத்தை சொல்றப்ப மட்டும் நேக்கா நம்மையும் கோர்த்து விடுது பார்!’ என்று மனதினுள் நினைத்த பராந்தககேசரி வெளியே ராஜமாதாவிடம், “ஒருவேளை அந்த பெண்ணிற்கு உண்மையான காதலோ, பதவி ஆசையோ வந்துவிட்டால்?” என்று கேட்டார்.

“அவள் அரண்மனையினுள் நுழைந்த உண்மை காரணத்தை அவன் காதுக்கு எட்ட செய்தால் போதும்.. அவனே பார்த்துக் கொள்வான்”

“அவளே உங்களைப் பற்றி அவனிடம் போட்டு கொடுத்தால் என்ன செய்வது? அதாவது தான் உண்மையாக காதலிப்பதாகவும் ஆனால் வந்த காரியம் வேறு என்று உங்களை காட்டிக் கொடுத்துவிட்டால்?”

“அவனையே முடிக்க திட்டம் போட்ட எனக்கு அவளையா முடிக்கத் தெரியாது?” 

“அவனை மீறி செய்ய முடியுமா?”

“அவன் இருபத்தி நாலு மணி நேரமும் அவள் கூடவே இருக்க போறது இல்லை”

“அந்த தீரனும் லேசுபட்டவன் இல்லையே!”

“மங்கை அறையில் நடப்பது அவனுக்கு தெரியப் போறது இல்லை.. முடிந்த பின் தெரிந்து பிரயோஜனம் இல்லை..” என்றவர், “இது ஒரு வழி மட்டுமே.. எவ்வளவோ யோசிக்கலாம்” என்றார்.

“ஆனால் அவன் சுதாரித்து விடுவானே!”

“சுதாரித்து ஒரு பலனும் இருக்காது.. அவள் அவனிடம் உண்மையைச் சொன்னால் ஒன்று அவள் மீதே சந்தேகம் கொள்வான், இல்லை அவள் மீதான காதல் கூடும்.. அவளை நாம் முடித்துவிட்டால் ஒன்று அவளது இழப்பில் குழம்புவான் இல்லை பலவீனமாவான்.. இரண்டாவது நடப்பதற்கு தான் அதிக வாய்ப்புகள், அப்படியே முதலாவது நடந்தாலும் பிரச்சனை இல்லை.. எது நடந்தாலும், அந்த நேரத்தில் அவன் கதையை முடிப்பது நமக்கு சுலபம் தான்” என்றார்.

‘அம்மாடி! சகுனி தோத்திருவான் இது கிட்ட.. நாமும் ஜாக்கிரதையா தான் இருக்கணும்’ என்று நினைத்த பராந்தககேசரி அமைதியாக இருக்க,

ராஜமாதா, “என்ன பராந்தகா! நாமும் ஜாக்கிரதையா தான் இருக்கணும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டுச் சிரித்தார்.

அவர் போலியான பதற்றத்துடன், “அப்படி எல்லாம் இல்லை அத்தை” என்றார்.

அதை கண்டு கொள்ளாத ராஜமாதா, “இப்பொழுது மட்டும் அவனுக்கு நம்மை பற்றியோ, இன்று நடந்த தாக்குதலுக்கு நீ தான் காரணமென்றோ தெரியாது என்றா நினைக்கிறாய்? அமருக்காகத் தான் உன்னை விட்டு வைத்திருக்கிறான்.. தந்தையின் அன்னை என்று என்னை என்றுமே ஒன்றும் செய்ய மாட்டான்” என்றார்.

மீனாட்சி ரோஜாவனத்தினுள் சென்றதும், அவளை தனக்கு எதிரே இருந்த சோபாவில் அமரச் சொன்ன மாறவர்மசிம்மன் கேட்ட முதல் கேள்வி, “யார் நீ?” என்றது தான்.