சந்ராவிடம் பேசிவிட்டு தனது அறைக்குச் சென்ற மீனாட்சி உடை மாற்றும் அறைக்கு சென்று பழைய கைபேசியை எடுத்து அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்று இவள் அனுப்ப,
“ராஜமாதா?” என்ற பதில் வந்தது.
“எஸ்.. இன்னைக்கு என்னை கூப்பிட்டு அவங்க தான் என்னை இங்கே வர வச்சதா சொன்னாங்க”
“நீ தெரிந்த மாதிரி காட்டிக்கலை தானே!”
“அதெல்லாம் ஷாக் ரியாக்சன் சரியா கொடுத்துட்டேன்”
“குட்” என்றவர், “அப்படி என்ன நடந்தது?”
“சாயுங்காலம் தோட்டத்தில் என் கூட பேசினப்ப ராஜா வெப் கேம் ஆஃப் பண்ண சொல்லி இருக்கார்..”
“ஸோ அவங்களை பொறுத்தவரை நீ உன் வேலையை ஆரம்பிச்சிட்ட”
“எஸ்”
“நம்ம வேலை?”
“சில விஷயங்கள் சேகரித்து இருக்கிறேன்.. வேலை முடிந்ததும் சொல்றேன்”
“சரி” என்றவர், “உன் வேலையும் தனியா நடக்குதோ!” என்று அனுப்பினார்.
“என் வேலையா! என்ன அங்கிள்?”
சிரிக்கும் முகவடி குறியீடுடன், “சைட் அடிக்க ஆரம்பிச்சுட்ட போல!” என்று அனுபின்னார்.
“அப்படியெல்லாம் இல்லை அங்கிள்”
“தப்பில்லை”
“என் நிலை எனக்கு தெரியும்” என்று அனுப்பியவள், “குட் நைட்” என்று அனுப்பி கைபேசியை தனித் தனியாகப் பிரித்து எப்பொழுதும் போல் அதன் இடத்தில் வைத்துவிட்டு வந்து படுத்தாள்.
மெத்தையில் படுத்தவளின் நெஞ்சம் முழுவதும் மாறவர்மசிம்மன் தான் நிறைந்து இருந்தான். தனது மனம் அவன் மீது மையல் கொண்டுவிட்டதை புரிந்து கொண்டவள், தனது மனதிற்கு கடிவாளம் இடவே குறுஞ்செய்தியில் ‘தனக்கு எந்த எண்ணமும் இல்லை’ என்பது போல் தன் நெஞ்சறிய பொய் உரைத்தாள்.
ஆனால் காட்டாற்று வெள்ளத்தை போல் அவளது தடைகளை மீறி உணர்வலைகள் தாக்கி அவன் மீது காதல் சுரக்கத் தான் செய்தது.
கண்களை மூடியவளின் மனக்கண்ணில் தோன்றிய மாறவர்மசிம்மன் அவளது இடையை அணைத்தபடி காதல் வழிந்த விழிகளுடன், “மனம் கவர்ந்த பெண்ணை தேவி என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது” என்றான்.
சட்டென்று கண்களை திறந்தபடி எழுந்து அமர்ந்தாள்.
இடையில் இப்பொழுதும் அவனது கரத்தின் சூட்டை உணர்வது போல் தோன்ற, தனது இடையை தடவிக் கொண்டாள்.
பின் தலையை உலுக்கிக் கொண்டு, ‘இல்லை.. வேணாம்.. மனதை அலைபாய விடாதே.. அவன் ராஜவம்சத்தை சேர்ந்தவன்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு படுத்து உறங்க முயற்சித்தாள்.
சற்று நேரத்தில் உறங்கியவளின் கனவில் மாறவர்மசிம்மன் ரணசிம்ம ராஜாவாக தோன்ற, அங்கே அவனை அணைத்துக் கொண்டு நின்ற நறுமுகை தேவி அவளே.
அடுத்த நாள் மாலையில் அவளை சந்தித்த மாறவர்மசிம்மனை கண்டு அவளை மீறி அவளது முகம் மலர, அவனோ, “நேற்று இரவு ராஜமாதா எதற்கு உன்னை அழைத்தார்கள்?” என்று கேட்டான்.
“அது” என்று தயங்கியபடி அவள் பார்வையை தாழ்த்தி பதிலை யோசித்தாள்.
“ஹ்ம்ம்.. சொல்லு”
“அது.. நேத்து இந்த இடத்தில் இருக்கிற வெப் கேம் கொஞ்ச நேரம் ஆஃப் ஆகி இருந்ததாம்” என்றாள்.
சட்டென்று உல்லாச மனநிலைக்கு மாறியவன் ரசகிய புன்னகையுடன், “அதைப் பற்றி காவல் தலைவனிடம் தானே விசாரிக்க வேண்டும்.. உன்னிடம் ஏன் கேட்டார்கள்?” என்றான்.
அவள் அவனை முறைக்க, அவன் அதை ரசித்து சிரித்தான்.
“இப்போ கூட தான் அணைத்து வைக்கப் பட்டிருக்கிறது” என்றபடி அந்த நீண்ட கல் இருக்கையில் அவன் அமர, அவள் நகர்ந்து அமர்ந்தாள்.
“எதற்கு பயம்? இப்படி செய்துவிடுவேன் என்றா?” என்று கேட்டபடி அவளது இடையை வளைத்து தன்னை நெருங்கியபடி அமர செய்தான்.
இதை சற்றும் எதிர்பாராதவள் சிறு நடுக்கமும் அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்தாள்.
ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்தபடி, “நீ என்ன பதில் சொன்ன?” என்று கேட்டான்.
தனது மனதை அடக்கி அவனை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று அவள் முடிவெடுக்க, அவனோ காதலில் வேகத்தை கூட்டினான்.
அவனது இந்த அதிரடி நெருக்கத்தில் அவளது இதயத்துடிப்பு வெளியே கேட்டுவிடும் அளவிற்கு வேகமாக அடித்துக்கொள்ள, அவள் விலக முயற்சித்தாள். ஆனால் அவளால் இம்மி கூட நகர முடியவில்லை.
“இப்போது உன்னுடைய பயம் என்ன தேவி?” என்று கேட்டபடி தனது முகத்தை அவள் முகம் அருகே கொண்டு வர,
எங்கே முத்தமிட்டுவிடுவானோ என்ற பயத்தில் அவசரமாக, “பயம் இல்லையே.. பயம் இல்லை” என்றாள்.
அவன் வாய்விட்டு சிரித்தான். அவள் மெய்மறந்து, கண்ணிமைக்க மறந்து அப்படியே அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவன் இதழ் குவித்து அவளது முகத்தில் லேசாக ஊதினான்.
அவளை அள்ளி அணைத்து இதழில் கவி பாட துடித்த மனத்தை பெரும்பாடுபட்டு அடக்கியவன், ‘என்னை வசியம் செய்து அப்படியே உன் பக்கம் இழுத்து, உன் மீது பித்துப்பிடிக்க வைக்கிறாய் பெண்ணே!’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.
பின் சுதாரித்துக் கொண்டு, “ராஜாமாதாவிடம் நீ என்ன சொன்ன?” என்று மீண்டும் வினவினான்.
அவள் அமைதியாக இருக்க, அவன், “தேவி” என்று அழைத்தான்.
அவள் தவிப்புடன் அவனை பார்க்க, அவன், “எதற்கு இந்த கலக்கம்?” என்று கேட்டான்.
“நான் தள்ளி உட்கார்ந்துக்கிறேனே ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் விழிகள் கலங்குவது போல் இருக்கவும் அவன் தனது கையை எடுத்துக் கொண்டான்.
அதற்கும் மனம் கலங்கினாள். அவளது மனமே அவளுக்கு எதிராக இருக்க, அவனது காதலை ஏற்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் கலங்கித் தவித்தாள்.
அவன் கையை எடுத்த பிறகும் அவள் அப்படியே அமர்ந்து இருக்கவும், அவன் எழுந்துக் கொண்டான்.
அவள் இன்னமும் கலங்கிப் போய் அவனை பார்த்தாள்.
“ஐந்து நிமிடங்கள் கழித்து ரோஜாவனம் வா.. காவலாளி உன்னை தடுக்க மாட்டான்” என்று கூறிவிட்டு ரோஜாவனம் நோக்கி சென்றான்.
தன்னை நிலைபடுத்திக் கொள்ள சில நிமிடங்களை எடுத்துக் கொண்டவள் அவன் சொன்னது போல் ரோஜாவனம் சென்றாள்.
முதல் முறையாக ரோஜாவனம் அரண்மனையினுள் நுழைந்தவளின் உடம்பு முழுவதும் சிலிர்த்தது. முன்பு வந்திருந்தால் எப்படியோ, நெஞ்சம் முழுவதும் மாறவர்மசிம்மன் மீது காதலை சுமந்திருப்பதோடு, முன்தினம் அறிந்துக் கொண்ட இந்த அரண்மனையின் வரலாறும் சேர்ந்து கொள்ள, மொத்தத்தில் அவள் அவளாக இல்லை.
அரண்மனையே அமைதியாக இருக்க, மாறவர்மசிம்மனை அவளது கண்கள் தேடியது.
அப்பொழுது, “மேலே வா தேவி” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.
கைகளை கட்டி கொண்டு அவளைப் பார்த்தபடி மாடிப் படியின் கைபிடியில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
அவனை பார்த்தபடியே ஏறியவளின் மனம் அவனை நெருங்க நெருங்க உணர்ச்சிபிம்பமாக மாறிக் கொண்டிருந்தது.
அவள் கடைசி படி வந்ததும், “என்னுடன் வா” என்று கூறி ஒரு அறையினுள் சென்றான்.
அந்த அறையின் உள்ளே சென்றவளின் கண்கள் அதன் அமைப்பை கண்டு விரிந்தது. அறையின் இடதுபுறம் படுக்கை அறை இருக்க, வலதுபுறம் குளியல் அறையும் உடைமாற்றும் அறையும் இருந்தது. வரவேற்பு அறையின் முடிவில் கண்ணாடி சுவர் இருக்க, அதை தாண்டி ஒரு சிறு அறையின் பரப்பளவில் பெரிய உப்பரிகை இருந்தது. உப்பரிகை முழுவதும் வண்ண மலர்களை கொண்ட செடி கொடிகள் படர்ந்து இருக்க, நடுவில் மரஊஞ்சல் இருந்தது. கண்ணாடி சுவர் அருகே மூன்று திவான்கள் கொண்ட மெத்தை போன்ற சோபா இருந்தது. அறையின் உள் இருந்தே தோட்டத்தின் அழகை ரசிக்கவே அந்த ஒற்றைச் சுவர் மட்டும் கண்ணாடியால் அமைக்கப் பட்டிருந்தது. தோட்டம் சிறு வனம் போல் காட்சியளிக்க, மயில்களும், முயல்களும் புள்ளி மான்களும் ஓடிக் கொண்டிருந்தன.
மாறவர்மசிம்மன் எதிர்பார்த்தது போலவே அவள் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உப்பரிகைக்குத் தான் சென்றாள்.
அவள் கண்களில் தெரிந்த ரசனையை அவன் ரசித்தான்.
மேலே வரும் பொழுது இருந்த மனநிலை மாறியிருக்க, அவள் தோட்டத்தை பார்வையிட்டபடி ரசனையான புன்னகையுடன், “ரொம்ப ரொம்ப அழகா இருக்குது.. உங்க ஐடியாவா?” என்று கேட்டாள்.
“என்னோடது மட்டுமில்லை.. மகாராஜா, அன்னை என்று மூவரின் யோசனையும் சேர்ந்து இருக்கிறது.. ரோஜாவனதிற்கான இந்த பிரெத்யேக தோட்டம் மகாராஜாவின் யோசனை.. இந்த உப்பரிகையில் இருக்கும் குட்டித் தோட்டம் அம்மாவின் யோசனை.. தந்தையிடம் அம்மா ஆசைப்பட்டு கூறியதாக கூறினார்.. இரண்டு யோசனையையும் முழுதாக செயல் படுத்தியது மட்டுமே நான்.. இந்த கண்ணாடி சுவரும் இந்த அரண்மனையின் பாதுகாப்பும் என் யோசனை.. இந்த கண்ணாடி சுவர் வழியே தோட்டத்தை பார்க்க முடியும் ஆனால் தோட்டத்தில் இருந்து உள்ளே இருப்பதை பார்க்க முடியாது.. நாம் தனியே சுதந்திரமா இருப்பதற்காக இந்த பக்கம் சற்று தள்ளி தான் காவலர்கள் இருப்பார்கள்.. தோட்டத்தில் அந்நியர்கள் கால் பதித்தால் அலாரம் அடித்துவிடும்.. மறைகாணி இருக்கிறது தான் ஆனாலும் இந்த அறையில் கண்ணாடி சுவர் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு”
“முயல் மான் எல்லாம் ஓடுதே!”
“ஹ்ம்ம்.. அவற்றின் கால்களை பதிவு செய்து வைத்து இருப்பதால் அலாரம் அடிக்காது..”
“பறவைகள்?”
“குறிப்பிட்ட எடைக்கு மேல் தரையில் பதிந்தால் தான் அலாரம் அடிக்கும்”
“அருமை”
“உட்கார்” என்றபடி அந்த மர ஊஞ்சலில் அமர்ந்தான்.
அவள் இன்னமும் தோட்டத்தை பார்த்தபடியே ஊஞ்சலில் அமர, அவன் மென்னகையுடன் அவளைப் பார்த்தான்.
அவன், “இன்று காலையில் அழைப்பாய் என்று எதிர்பார்த்தேன்” என்றான்.
துள்ளி ஓடிக் கொண்டிருந்த மானிடம் இருந்த கவனத்தை கலைத்து அவனை பார்த்தவள், “என்ன?” என்றாள்.
“காலையில் தீரன் என்னுடைய எண்ணை கொடுத்தும் நீ என்னை அழைப்பாய் என்று நினைத்தேன்”
“அது..”
“ஹ்ம்ம்”
“நீங்களே கொடுத்து இருக்கலாமே!”
மென்னகையுடன், “உன்னைப் பார்த்தால் தான் நான் மற்றவற்றை மறந்துவிடுகிறேனே!” என்றவன், “அதனால் தான் அழைக்கவில்லையா?” என்று கேட்டான்.
“இல்லை.. அப்படி இல்லை”
“பிறகு?”
“அது.. பேச காரணம் எதுவும் இல்லையே!”
“காரணம் இருந்தால் தான் என்னுடன் பேசுவாயா?”
“அப்படி இல்லை”
“சரி சொல்.. உன் மனதை எது குடைகிறது? எதற்காக கலங்கி தவிக்கிறாய்?” என்று கேட்டான்.
மீண்டும் சிறு கலக்கத்துடன் அவனை நோக்கியவள் மெல்லிய குரலில், “நீங்க என்னை தேவினு கூப்பிடுறீங்க” என்றாள்.
“அப்படி கூப்பிடுவது பிடிக்கவில்லையா?”
அவள் அவசரமாக, “அப்படி இல்லை” என்றாள்.
அவன் சற்று விரிந்த மென்னகையுடன், “பிறகு என்ன?” என்றான்.
“ரணசிம்ம ராஜா நறுமுகை ராணியை அப்படி தான் கூப்பிட்டாராம்”
உல்லாசமாக சிரித்தவன், “நேற்று இரவு சந்ராமாவிடம் இந்த கதையைத் தான் கேட்டியா?” என்றவன், “அது தானே அவங்க பெயர்!” என்றான்.
“ஆமா.. ஆனா அவர் கூப்பிட்ட காரணம் வேறு”
அவன் ரகசிய புன்னகையுடன், “என்ன காரணமோ?” என்றான்.
“உங்களுக்கே தெரியும்” என்று அவள் சிணுங்கினாள்.
அவளது சிணுங்கலில் அவனது பார்வை சற்றே மாற, அவளுள் படபடப்பு வந்தது. அவளது முகத்தில் இருந்து அதை படித்தவன் சட்டென்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
அவன் இயல்பான குரலில், “தெரியும் தான்.. நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய் என்று தெரிந்தால் தானே நான் விளக்கம் சொல்ல முடியும்” என்றான்.
அவள் மெல்லிய குரலில் அவன் முகம் பார்க்காமல், “நீங்க நேத்து சொன்ன அர்த்தத்தில் தான் அப்படி அழைத்தாராம்”
“நான் என்ன சொன்னேன்?”
“ப்ளீஸ்”
“முதல் நாள் என்னிடம் தைரியமாக பேசிய பெண் எங்கே போனாள்?” என்று அவன் நகைப்புடன் கூற,
அவள் முறைப்புடன், “ஹ்ம்ம்.. காக்கா தூக்கிட்டு போயிருச்சு” என்றாள்.