“அப்படி சொல்லாதீங்கமா.. எங்களுக்கு ராணினா அது எங்க ராஜாவோட ராணி மட்டும் தான்”
‘ஸ்ப்பா.. முடியலடா’ என்று மனதினுள் நினைத்தவள் அமைதியாக இருக்க,
அதை கண்டு கொள்ளாதவன், “அதோ தெரியுது பாருங்க.. அதில் இருந்து தான் அரண்மனை இடம் ஆரம்பிக்குது” என்று அவன் காட்டிய திசையில் பார்த்தவள் ஆச்சரியம் கொண்டாள்.
அவள், “இது காம்பௌண்டு-வாலா கோட்டைச்சுவரா?” என்று வினவ,
அவன் புன்னகையுடன், “கோட்டை சுவர் மாதிரி தான்.. அந்த காலத்து ராஜாக்கள் இருந்தப்ப இருந்த கோட்டை சுவர் அழிஞ்சு போச்சு.. அத்தோட ஒரு பகுதி மட்டும் ஊரோட கிழக்கு பகுதி மலை காட்டுல இருக்குது.. அரண்மனையை சுத்தி இருந்த அகழியை மூடி, இந்த சுவரை கட்டினது பெரிய ராஜா அதாவது மகாராஜாவோட அப்பா.. ஆனா அவர் கருங்கல் வச்சு மதில் சுவர் மாதிரி தான் கட்டி இருந்தார்.. ராஜா தழைத்ததும் இதை கோட்டை சுவர் மாதிரி ஆக்கிட்டார்.. மெயின் என்ட்ரன்ஸ் சைட் என்ட்ரன்ஸ் போக கோட்டை சுவரோட நாலு மூலையிலும் காவலர்கள் இருக்காங்க.. போதாதுக்கு மறைவில் நிறைய கேமரா இருக்குதுன்னு கேள்வி பட்டிருக்கிறேன்.. கோட்டை சுவர் பாதுகாப்பதில் மட்டுமே முப்பது பேர் வேலை பார்க்கிறாங்க..”
அவளது அமைதியை பார்த்தவன், “இதுக்கே அசந்தா எப்படி! உள்ளே போய் பார்த்தா என்ன ஆவீங்களோ!” என்றான்.
சட்டென்று தனது முகபாவனையை மாற்றியவள், “நீங்க உள்ளே போய் இருக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“பங்குனி உத்திரத்தில் ராஜா தரிசனத்துக்கு மக்களை உள்ளே அனுமதிப்பாங்க.. அது போக சில விழாக்களுக்கும் அனுமதி தருவாங்க.. அப்போ பார்த்ததை வச்சு தான் சொல்றேன்”
“சரி நான் உள்ளே போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்”
“உள்ளே போனா எங்க வெளியே வருவீங்க! வேலையை விட்டுப் போகும் போது வந்தா தான் உண்டு”
“அங்க வேலை பார்க்கிறவங்க வீட்டுக்கு போகவே மாட்டாங்களா?”
அவளைப் பார்த்து சிரித்தவன், “அரண்மனையில் வேலை பார்க்கிறவங்களுக்கு உள்ளயே வீடு இருக்குது.. அரண்மனையில் வேலை பார்க்கிறது கவர்மென்ட் வேலை மாதிரி தான்.. சொல்லப் போனா அதை விட மேல்னு தான் சொல்லுவேன்.. அரண்மனையில் வேலை பார்க்கிறவங்க பிள்ளைங்களுக்கு ஸ்கூல் காலேஜ்னு எல்லாம் இலவசம்..”
“அவங்கலாம் வெளிய போவாங்க தானே!”
“போவாங்க தான்.. அவங்க வெளியே போக சைட் என்ட்ரன்ஸ் தான் பயன்படுத்தணும்..”
“அப்போ நான்?”
“நீங்களும் தான்”
“அப்போ ஏன் இப்போ மெயின் என்ட்ரன்ஸ் போறோம்?”
“ஏன்னா முதல்முறையா வரதால உங்க கிட்ட அடையாள அட்டை இல்லை.. வேலை செய்றவங்களுக்கும் அவங்க குடும்பத்தினர், குழந்தைகள் முதற்கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனி தனியா அடையாள அட்டை இருக்கும்.. அதை ஸ்கேன் பண்ணி செக் பண்ணி தான் வெளியவும் உள்ளேயும் விடுவாங்க” என்று கூற அவளுக்கு ராஜா காலத்திற்கே சென்ற உணர்வில் தலையே சுத்துவது போல் இருந்தது.
சில நொடிகளில் சுதாரித்தவள், “இவ்ளோ சலுகைகள் இருக்கிறப்ப நீங்க அரண்மனையில் வேலைக்கு போகலையா?”
“கவர்மென்ட் வேலை கிடைப்பதை விட இது கஷ்டம்.. வேலையும் கஷ்டமா இருக்கும்.. தோட்ட வேலை, சமையல் வேலை தெரியாது.. காவலர் வேலை போறதுக்கு நம்ம உடம்பு செட் ஆகாது.. அதான் போகலை”
“டிரைவிங் தெரியுதே!”
“அது மட்டும் போதாது.. அரண்மனை டிரைவர்ஸ் எல்லோரும் மெய்காப்பாளர்கள் போல தான்.. காவலர் வேலைக்கே என் உடம்பு செட் ஆகாது, இது எங்கே!”
“ஓ!”
“எல்லா நாளும் ஆட்டோ ஓட்ட மாட்டேன்மா.. ராஜா புண்ணியத்தில் எங்க ஊரில் யாரும் தினக்கூலி ஆட்கள் கிடையாது.. எனக்கு சொந்தமா ஆறு ஆட்டோ ஓடுது.. இந்த ஆட்டோ ஓட்டுறவன் உடம்பு முடியலைனு ரெண்டு நாள் வரலை.. அதான் நான் எடுத்துட்டு வந்தேன்”
இந்த முறை மனதினுள், ‘ஓ’ என்று கூறிக் கொண்டாள்.
கோட்டைச்சுவரின் தலைவாயிலில் ஆட்டோ நின்றதும் அவள், “எவ்ளோ தரனும்?” என்று கேட்க,
ஆச்சரியத்துடன் அவள் பார்க்க, அதை பொருட் படுத்தாமல் அவன், “எதுக்கும் நான் இங்கயே நிற்கிறேன்.. நீங்க போய் கேட்டுட்டு வாங்க” என்றான்.
அவள் முறைக்கவும், அவன், “முதல்ல போய் காவலாளி கிட்ட கேளுங்கமா.. உங்களை உள்ளே விட்டா நான் கிளம்பிட்டு போறேன்” என்றான்.
அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு தோளில் மாட்டியிருந்த பையுடன் வாயிலை நோக்கிச் சென்றாள்.
ஆட்டோவில் வந்து இறங்கியவளை பயில்வான் தோற்றத்தில் இருந்த காவலாளி மேலும் கீழும் பார்க்க, அவள், “மகாராணியை பார்த்துக்க வந்திருக்கிற கேர்-டேகர்” என்றாள்.
அவன் புருவ முடிச்சுடன், “இன்னைக்கு அப்படி யாரும் வரதா எங்களுக்கு தகவல் வரலையே” என்றான்.
அவள், “ரெண்டு நாள் கழிச்சு தான் வர சொல்லி இருந்தாங்க.. நான் தான் முன்னாடியே வந்துட்டேன்” என்றாள்.
“முன் அனுமதி இல்லாமல் வர யாரையும் உள்ளே விட எங்களுக்கு அனுமதி இல்லை.. நீங்க கிளம்புங்க” என்று அவன் கறாராக கூற, அவள் சற்று அவமானமாக உணர்ந்தாள். இப்படி முன்னதாக கிளம்பி வந்த தன்னைத் தானே மனதினுள் திட்டிக் கொண்டாள்.
காவலாளி, “கிளம்புமா” என்று விரட்ட,
அவள் அவசரமாக தோள் பையில் இருந்து நியமன கடிதத்தை எடுத்து காட்டியபடி, “இது என்னோட அப்பாயின்மென்ட் லெட்டர்” என்றாள்.
அதை வாங்கி தமிழில் இருந்த பக்கங்களை படித்தவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் கூண்டில் இருந்த மற்றொரு காவலாளியிடம் விஷயத்தை கூறினான்.
அவன் இண்டர்காம் மூலம் கோட்டை காவலர்கள் தலைவனை அழைத்தான்.
அழைப்பு எடுக்கப் பட்டதும் இவன் விஷயத்தை கூற, தலைவன், “அப்பாயின்மென்ட் லெட்டரை கேமராவில் காமி.. இங்கிலீஷ் தமிழ்னு எல்லா பக்கத்தையும் காமி.. நான் பார்க்கிறேன்” என்றான்.
இவன் அவ்வாறே செய்ய, அதை பார்த்த தலைவன், “ராஜமுத்திரை இருக்குது.. இருந்தாலும் தீரன் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
பிறகு தலைவன் இண்டர்காம் மூலம் அரண்மனை பொது நிர்வாகியான தீரனை அழைத்து விஷயத்தைக் கூறினான்.
தீரன், “நியமன கடிதத்தை ஸ்கேன் பண்ணி எனக்கு வாட்ஸ்-அப் பண்ணு” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
தலைவன் அவ்வாறே செய்ததும், தீரன் மாறவர்மசிம்மனின் செயலாளர் தயாளனிற்கு அந்த நியமன கடிதத்தை அனுப்பிவிட்டு கைபேசியில் அழைத்தான்.
வண்டியில் சென்றுக் கொண்டிருந்த தயாளன் அழைப்பை எடுத்ததும், “எதுக்கு கேர்-டேகர் அப்பாயின்மென்ட் லெட்டரை அனுப்பி இருக்க?” என்று தான் கேட்டான்.
தீரன் விஷயத்தை கூறியதும், தயாளன், “கூப்பிடுறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
அவன் அழைப்பைத் துண்டித்ததும் பின்னால் அமர்ந்தபடி மடிக்கணினியில் கவனமாக இருந்த மாறவர்மசிம்மன் நிமிர்ந்து பார்க்காமலேயே, “மீனாட்சி கோட்டை வாசலில் நிற்கிறாங்களா?” என்று கேட்டான்.
மாறவர்மசிம்மனின் புத்தி கூர்மைக்கு பழக்கப் பட்டிருந்த தயாளன், “எஸ் சார்” என்றான். மாறவர்மசிம்மன் அலுவலக வேலையாட்கள் அரண்மனை வெளியே தன்னை ராஜா என்று அழைப்பதை விரும்பமாட்டான், அதனாலேயே ‘சார்’ என்று அழைத்தான்.
மாறவர்மசிம்மன் கையை நீட்ட, தயாளன் தனது கைபேசியில் அந்த நியமன கடிதத்தை எடுத்து கொடுத்தான்.
அனைத்து பக்கங்களையும் உன்னிப்பாக பார்த்த மாறவர்மசிம்மன் முத்திரையும் தனது கையொப்பமும் அசல் என்பதை உறுதி செய்த பின் கைபேசியை நீட்டியபடி, “உள்ளே அனுமதிக்கச் சொல்” என்றுவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.
அடுத்த மூன்று நிமிடங்களில் பரிசோதனைகளுக்கு பிறகு அனுமதி பெற்றுக் கொண்டு கோட்டை வாசலை தாண்டி உள்ளே சென்ற மீனாட்சி பிரம்மிப்பில் அசைவற்று நின்றுவிட்டாள்.
அந்த நொடியில் ஆடோக்காரன் எதையும் மிகைபடுத்திக் கூறவில்லை என்பதை உணர்ந்தாள். ஒரே ஒரு பெரிய அரண்மனையை எதிர்பார்த்து வந்தவளுக்கு கோட்டைச்சுவரே ஆச்சரியம் என்றால், உள்ளே ஆறு தனி தனி மாளிகைகளுடன் இருந்த பல சிறு வீடுகளை கண்டு பிரம்மித்துப் போனாள்.
ஆம்! கோட்டைசுவர் உள்ளே சிறு கிராமமே இருப்பது போல் காட்சி அளித்தது.
அரச குடும்பத்தினருக்காக ஆறு மாளிகைகளும், அங்கே வேலை செய்பவர்களுக்காக சிறிய வீடுகளும் சற்று தள்ளி இருந்தன. சிறிய வீடுகள் என்றால் குடிசை வீடுகள் இல்லை. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிமெண்ட் வீடுகள் தான், ஆனால் மாளிகை அருகே அவை சிறியதாக தெரிந்தது.
மாளிகை ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் தனிப் பெயர்களுடன் அமைக்கப் பட்டிருந்தது.
‘வேந்தபுரம்’ என்ற மாளிகை அரசரின் மாளிகையாக திகழ்ந்தது, தற்போது மாறவர்மசிம்மனும் ராஜமாதாவும் வசிக்கிறார்கள்.
‘தேவிபுரம்’ என்ற மாளிகை பட்டத்தரசியின் மாளிகையாக திகழ்ந்தது, தற்போது மகாராணி, இளவரசன் மற்றும் இளவரசி வசிக்கிறார்கள்.
‘ரோஜாவனம்’ என்ற மாளிகை அக்கால மகாராஜாவின் காதல் ராணியின் (இரண்டாவதாக மணந்த ராணி) மாளிகையாக திகழ்ந்தது, தற்போது யாரும் வசிக்கவில்லை என்றாலும் மாறவர்மசிம்மனின் கட்டளையில் சுத்தமாக பராமரிக்கப்பட்டு மாளிகையைச் சுற்றி பலவண்ண ரோஜாக்கள் நிறைந்த சோலையாக இருக்கிறது. மாறவர்மசிம்மன் அமைதியைத் தேடி செல்லும் இடம் இந்த ரோஜாவனம் தான்.
‘கன்னிமாடம்’ என்ற மாளிகை அந்தபுரமாக திகழ்ந்தது, தற்போது ராஜா காலத்தில் பயன்படுத்திய பண்டைய பொருட்களின் அரும்பொருளகமாக இருக்கிறது.
‘கொலுவிருக்கை’ என்ற மாளிகை அரசரின் தர்பார் மற்றும் அலுவல் மாளிகையாக திகழ்ந்தது, தற்போது மாறவர்மசிம்மனின் அலுவலக இடமாகவும், விழாக்கள் நடக்கும் இடமாகவும் இருக்கிறது.
‘அதிதி மாளிகை’ என்ற மாளிகை விருந்தினர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டது, தற்போதும் அதே நோக்கத்துடன் தான் பயன்படுத்தப் படுகிறது.
மகாராஜாவின் மாளிகையின் வலதுபுறம் அந்தபுரமும் அதை அடுத்து பட்டத்துராணியின் மாளிகையும் இருக்க, இடதுபுறம் கொலுவிருக்கையும்(தர்பார் மற்றும் அலுவல்) அதை அடுத்து விருந்தினர் மாளிகையும் இருக்கிறது. மகாராஜாவின் மாளிகைக்கு பின் புறம் ‘ரோஜாவனம்’ மாளிகை தோட்டத்தின் நடுவே இருக்கிறது.
ரோஜாவனம் இடதுபுறம் தோட்டத்தில் இருக்கும் குளத்திற்கு ரோஜாவனத்தில் இருந்தும் அந்தபுரத்தில் இருந்தும் மட்டுமே செல்ல வழிகள் இருக்கிறது.
மகாராஜா மாளிகையில் இருந்து மட்டுமே அனைத்து மாளிகைகளுக்கும் செல்ல வழி உண்டு. பட்டத்துராணியின் மாளிகையும், ரோஜாவனமும் அந்தபுரத்திற்கு தொடர்பில் இருந்தது. கொலுவிருக்கை மற்றும் விருத்தினர் மாளிகைகள் மகாராஜா மாளிகைக்கு மட்டுமே தொடர்பில் இருக்கிறது.
எழில்புரம் என்ற ஊரைப் பற்றியும் மாறவர்மசிம்மன் பற்றியும் மீனாட்சி கேள்விபட்டிருந்தாலும் இவை அனைத்தும் அவளுக்கு புதியவையே!
முழுவதுமாக இரண்டு நிமிடங்கள் கழித்தே சுயம் பெற்ற மீனாட்சி, ‘நாம ஆர்கியாலாஜி படிச்சதை வெளியே சொன்னா வெக்ககேடு போல! நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரண்மனை இருக்கிறதே தெரியலையே!’ என்று மனதினுள் வியப்புடன் நினைத்தபடி வேந்தபுரத்தை நோக்கி நடந்தாள்.
பாண்டிய சாம்ராஜ்யத்தை பற்றி குறிப்பு:
‘பொன்னியின் செல்வன்’ கதையின் தீவிர ரசிகை நான். சோழர்களைப் பற்றியே பல சரித்திர கதைகள் நாம் படித்திருக்கிறோம். அதனாலேயே சற்று வித்தியாசமாக இந்த கதையின் நாயகனை பாண்டிய வம்சத்தை சேர்ந்தவனாக ஜோடித்து இருக்கிறேன். இந்த கதையும் கதையில் வரும் அனைத்து கதாபதிரங்களும் இடங்களும் காட்சிகளும் எனது கற்பனையே. நிஜத்தில் தேடாதீர்கள்.
பாண்டிய மன்னர்கள்:-
பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர் ஆவர். இரண்டு மீன்களை உடைய கொடியை கொண்ட பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்திற்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.
தமிழ்சங்கத்தை போற்றி வளர்த்த பெருமை பாண்டியர்களையே சாரும். இவர்கள் பல தலை சிறந்த கோவில்களை நிறுவியுள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
பழங்கதை காலப் பாண்டியர்களுக்கு பிறகு,
சங்க காலப் பாண்டியர்கள் கி.மு 6ஆம் நூற்றாண்டு – கி.பி 3ஆம் நூற்றாண்டு. முற்காலப் பாண்டியர்கள் கி.பி 6-10 நூற்றாண்டுகள்.
10-13 நூற்றாண்டுகளில் சோழ ராஜ்யத்தின் கீழ் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
பிற்காலப் பாண்டியர்கள் 13–14ஆம் நூற்றாண்டு.
தென்காசிப் பாண்டியர்கள் கி.பி 15–17 நூற்றாண்டுகள்.
15ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், இதற்கு இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே மிக முக்கிய காரணம் ஆகும். இதன் காரணமாக பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக் கொண்டனர்.