Advertisement

“என்ன சொன்னாங்க? அவன் எப்போ வீட்டுக்கு வருவான்?” கரீமா கேட்க “அட்வகேட்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரம் வந்துடுவான்” என ஆர்யன் நம்பிக்கையாய் சொல்ல “இன்ஷா அல்லாஹ்!” என்று கரீமா சொல்ல “நானும் அதே ஆசைப்படுறேன், ஆர்யன்” என்று சல்மா சொன்னாள்.

“அண்ணன் எங்கே? அவருக்கு தெரியுமா?” என ஆர்யன் கவலையோடு கேட்க, கரீமா “என்னை மன்னிச்சிடு ஆர்யன் டியர்! அவர் உடைஞ்சி போய்ட்டார். உனக்காக காத்துட்டு இருக்கார்” என்றாள். ஆர்யன் உள்ளே செல்ல, ருஹானாவும் தொடர, கை தேர்ந்த நடிகையர் இருவரும் தாங்க முடியாத சந்தோசத்தை முகத்தில் படர விட்டனர்.

வரவேற்பு அறையில் கவலையுடன் அமர்ந்திருந்த அம்ஜத், ஆர்யனை பார்த்ததும் ஓடி வந்தான். “ஆர்யன்! இவான் எங்க? இவான் எங்க? அவனை நீ ஏன் கூட்டிட்டு வரல? அங்கயே விட்டுட்டியா?… இல்ல.. இல்ல.. அப்படி கூடாது.. இவானால அங்கே  இருக்க முடியாது” என்று அரற்ற, ஆர்யன் தலைகுனிந்து கொண்டான்.

ருஹானாவிடம் திரும்பிய அம்ஜத் “ருஹானா! இவான் எங்கே?” என்று கேட்டும் அவளிடமிருந்தும் பதில் வராததால் மீண்டும் ஆர்யனிடம் வந்தவன் “ஆர்யன்! நாம இருந்த மாதிரி அந்த விடுதியில அவனால இருக்க முடியுமா? முடியாது தானே?” என்று கேட்க, ருஹானாவுக்கு தூக்கி வாரி போட்டது. அவள் மூச்சை பிடித்துக்கொண்டு ஆர்யனை பார்க்க, பழைய நினைவுகளில் அவனுக்கு தொண்டையில் அடைத்தது.

“முடியாது. இவானால முடியாது. பசியோட அங்க இருக்க முடியாது. அவங்க அடிப்பாங்க. இவான் அங்க இருக்க முடியாது. கண்டிப்பா முடியாது. அது நல்லது இல்ல” என அம்ஜத் நடுங்க, ஆர்யன் அவனை நிறுத்த முடியாமல் தவிக்க, ருஹானாவின் கண்கள் கலங்கின. இரு சகோதரரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“இவானை அங்கே இருந்து கூட்டிட்டு வந்துடு. அவன் தனியா இருக்கான். அவனை யார் காப்பாத்துறது? அவனுக்கு துணைக்கு ஆர்யன் இல்ல. கூட பிறந்தவங்க அங்க யாரும் இல்ல.. இல்ல, ஆர்யன். அவனால முடியாது. போய் கூட்டிட்டு வா” என்று விடாமல் புலம்பியபடி ஆர்யனை இழுக்க “அண்ணா! போதும்!” என ஆர்யன் சத்தமாக சொல்ல, அம்ஜத் ஆர்யனின் சட்டையை பற்றி “ஆர்யன்! இவானை கொண்டு வா!” என்று அதையே அரற்றியபடி அழுதான்.

ஆர்யன் சிலையென நிற்க, அம்ஜத்தின் தோளை பற்றிய ருஹானா “அம்ஜத் அண்ணா!” என்று அழைத்து அவனை தன் பக்கம் திருப்ப, ஆர்யன் விலகி மேலே செல்ல, “இப்போ விடுதிலாம் முன்னே மாதிரி கிடையாது, அம்ஜத் அண்ணா! கருணை உள்ளவங்க தான் இப்போ குழந்தைகளை கவனிச்சிக்கிறாங்க” என்று ருஹானா பேச தொடங்கவும் படிக்கட்டுகளுக்கு அருகே ஆர்யன் நின்று கேட்டான்.

“அதுவும் இல்லாம இவான் அதிக நாள் அங்க இருக்க தேவையில்ல. சீக்கிரமாவே இங்க திரும்பி வந்துடுவான். நாங்க அவனை விடவே மாட்டோம்” என்று ருஹானா சிறுகுழந்தைக்கு சொல்வது போல சொல்ல, அம்ஜத்தும் நிதானத்துக்கு வந்து அவள் சொன்னதை கேட்டுக்கொண்டான். அமைதியாக சோபாவில் சென்று அமர்ந்தான்.

ருஹானா ஆர்யனை திரும்பி பார்க்க இத்தனை நேரம் அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஆர்யன், தங்கள் இளம்பிராய துயரங்கள் ருஹானாவுக்கு தெரிய வருவதில் சங்கடமடைந்து தலையை தொங்கவிட்டபடி மேலே ஏறிச்சென்றான்.

———    

உணவு மேசையில் ருஹானாவின் கருப்பும், வெள்ளையுமான ஸ்கார்ப்பை கையில் வைத்துக்கொண்டு இவான் சாப்பிடாமல் அமர்ந்திருக்க, ஹஸல் “நீ இப்போ சாப்பிடலனா உனக்கு நைட் பசிக்கும்” என்றாள். “நீயே சாப்பிட்டு உனக்கு பழக்கம் இல்லயா?” என்று மெஹ்மத் கேட்க, “இவன் பணக்கார வீட்டு பையன். இவனுக்கு வேலைக்காரங்க தான் ஊட்டி விட்டுருப்பாங்க” என்று புராக் சிரிக்க, இவான் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.

எழுந்து சென்று திரைச்சீலையை விலக்கியவன், கண்ணாடி வழியே வெளியே பார்க்க, புராக் இவான் தட்டிலிருந்த உணவை எடுத்துக்கொண்டான். அங்கே வந்த லைலா “வா! உனக்கு நான் வேற உணவு தரேன்!” என்று அழைக்க, இவானுக்கு சித்தி சொன்னது நினைவுக்கு வந்தது. அவர்கள் சொன்ன பேச்சை தட்டாமல் கேட்டால், விரைவில் வீடு திரும்பலாம் என்று நினைத்து சரியென தலையசைத்தான்.

——    

இவானின் அறைக்கு வந்த ருஹானா காலியான படுக்கையையும், இவானின் புகைப்படங்களையும் பார்த்து மனமுடைந்து போனாள். அங்கே நிற்க முடியாமல் மெல்ல கீழே இறங்க, எங்கும் இவானின் குரலே அவள் காதில் ஒலித்தது. 

சமையலறைக்கு வர, அங்கே இவான் விரும்பி சாப்பிடும் குக்கீஸ் இருப்பதை பார்த்ததும் அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ருஹானாவை பார்த்ததும் தன் கண்ணீரை துடைத்துக்கொண்ட சாரா “இந்த குக்கீஸ் உன் கையால செஞ்சா லிட்டில்சாருக்கு அதிகமா பிடிக்கும். இன்ஷா அல்லாஹ்! சீக்கிரமே நீங்க ஒன்னு சேர்ந்துடுவீங்க” என்று தேற்ற, “இன்ஷா அல்லாஹ்!” என்று ருஹானாவும் கூறினாள். சாரா கண்ணீருடன் திரும்பிக் கொள்ள, ருஹானா தண்ணீர் குடித்து அழுகையை அடக்கினாள்.

——–

“அரசாங்கத்துக்கு பெட்டிஷன் போட்டாச்சி. இவானோட உரிமையை வாங்க வேலை நடக்குது. ஆனா இன்னைக்கு நைட் இவானை கூட்டிட்டு வர முடியாது” என ரஷீத் மெல்ல சொல்ல, இவானின் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. “டாமிட்!” என அவன் கத்திய கத்தலில் ஓரமாக நின்ற சல்மா நடுங்கிவிட்டாள்.

அவள் பக்கத்தில் நின்ற கரீமா முன்னே வந்து “இப்போ என்ன ஆகும், ஆர்யன்? எத்தனை நாள் அங்கே இவான் இருக்கணும்?” என குத்தி விட “எனக்கு தெரியல! எனக்கு தெரியல!!” என கத்திவிட்டு அவன் செல்ல, ரஷீத்தும் வெளியே சென்றான்.

“நீ இவானுக்காக எதிர்பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான், ஆர்யன் அர்ஸ்லான். கத்து.. நல்லா கத்து.. சும்மாவே கத்து” என கரீமா ஏளனமாக நகைத்தாள்.

மேலே படபடவென ஆர்யன் வர, எதிரே ஓடிவந்த ருஹானா “எதும் நல்ல தகவல் இருக்கா?” என கேட்க, அவளை கோபமாக பார்த்த ஆர்யன், அவளின் பயந்த பார்வையில் மெல்ல சாந்தமாகி இல்லை என தலையை ஆட்டினான்.

——–

கட்டிலில் அமர்ந்து வெளியே பார்த்திருந்த இவானை பார்த்து “புதுப் பையா! உன் கண்ணு தான் வலிக்கும். அவங்க வர மாட்டாங்க” என்று மெஹ்மத் சொல்ல, கூட விளையாடிக்கொண்டிருந்த புராக் சிரித்தான். அப்போது அங்கே வந்த லைலா “போதும் விளையாடினது. புராக் நீ உன் ரூம்க்கு போ. மெஹ்மத் நீ படு” என்றவர் இவானிடம் “இது தூங்குற நேரம், இவான் டியர்! நான் இன்னைக்கு உனக்கு பைஜாமா மாத்த உதவி செய்யவா? அப்புறம் உன் பொருட்களைலாம் இந்த அலமாரில அடுக்கிடலாம்” என்று கனிவாக சொன்னார்.

“ஆனா என் சித்தப்பா இப்போ வருவாரே! அலமாரில இருந்து எடுத்து திரும்ப என் பையில அடுக்க நேரமாகுமே! என் சித்தப்பா அதுவரை காத்திருக்கணுமே!” என்று இவான் அதிக எதிர்பார்ப்புடன் சொல்ல, லைலா மிகுந்த இரக்கத்துடன் அவனை பார்த்து “சரி, உன் உடையை மாத்தலாம்” என்று அவன் சட்டையை கழட்டினார்.

———

காகித கப்பல் செய்துக்கொண்டிருந்த ருஹானா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருக்க, ஜாஃபர் கதவு தட்டிவிட்டு திறந்து உள்ளே எட்டி பார்த்தான். “இன்னும் விளக்கு எரியுதே, நீங்க தூங்கலயான்னு பார்க்க வந்தேன், ருஹானா மேம். எல்லாம் சரி தானே!” என கேட்டான்.

ருஹானா ஆமென தலையாட்டியதும் கதவை மூடி திரும்பப்போன ஜாஃபரை கூப்பிட்ட ருஹானா, அவளுக்கு ஒரு வாடகை கார் ஏற்பாடு செய்ய வேண்டினாள். கார் வந்ததும் இவான் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டாள்.

விடுதியை பார்க்கும்வண்ணம் சற்று உயரமான இடத்தில் வந்து இறங்கிய ருஹானா, திரைச்சீலை மூடிய அந்த விடுதியின் அறையை பார்த்தபடியே நின்றாள். அவள் கண்கள் நெருப்பாய் சிவந்திருந்தது. நடுவே கண்ணீர் எனும் நீர் நிறைந்திருந்தது. 

விடுதி அறையின் விளக்கு வெளிச்சத்தில் ஆள் நடமாடுவது தெரிய, பரபரப்புடன் திரைச்சீலைக்குள் கூர்ந்து பார்த்தவள் உதடுகள் “இவான்!’ என உச்சரித்தன. அந்த அசைவுகளையே ஆவலோடு கவனித்தவள், இரவின் தனிமையில் கார் வரும் சத்தம் கேட்டு திரும்ப, அது ஆர்யன் கார் என அறிந்து ‘நீங்களும் வந்திட்டீங்களா?’ என்பது போல பார்த்து ஆசுவாசமானாள்.

ஆர்யனும் அவளை பார்த்து ‘எனக்கு முன்னமே நீ வந்திட்டியா?’ என ஆச்சரியமாக பார்த்தான். விழிவழி பரிமாற்றம் நடக்க அங்கே வாய்மொழிக்கு வேலையில்லை.

அவன் கண்களின் ஓரம் இரத்தமென சிவந்திருக்க காரிலிருந்து இறங்கி, விடுதியை பார்த்து சில நிமிடங்கள் அசையாமல் இருந்தவன், பின் அவள் அருகே வந்து நின்றான். கண்ணீர் ததும்பும் அவள் கண்களை பார்த்து அவன் மனம் கலங்க, இறுகிய அவன் முகம் பார்த்து அவள் வேதனைப்பட்டாள்.

மௌனமாக வலிகளை எப்படி இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்? அன்பால் நெருங்கி விட்டதாலா? ஆனால் அதை அவர்கள் அறிந்துக் கொள்ளவில்லையே!

இருவரும் வெளிச்சமாக இருக்கும் அந்த அறையை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே நிற்க, லைலா இவானுக்கு குட்நைட் சொல்லி விளக்கை அணைத்து வெளியே செல்ல, “சித்தப்பா, சித்தி!!” என முனகிய இவான் பயத்தால் நடுங்கியபடி ஸ்கார்ப்பை இறுக்கிக்கொண்டு தலைவரை போர்வையை மூடிக் கொண்டான்.

“தூங்கு அன்பே!” ருஹானா முணுமுணுக்க ஆர்யன் கண்களும் கலங்கின.

“நாங்க இங்க தான் இருக்கோம். எதுக்கும் பயப்படாதே!” என சொன்ன ருஹானாவின் கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது.

“இவான் இளகிய மனம் கொண்ட குழந்தை. இன்னைக்கு இரவு அவனுக்கு அதிக துன்பமா இருக்கும்” என ருஹானா ஆர்யனை பார்த்து அழ, “முதல் தனிமை தாங்குவதற்கு மிக கடினம்” என்று அவன் உடைந்த குரலில் உணர்ந்து சொல்ல, அவனின் துயர நாட்களை எண்ணியும் ருஹானா அவனுக்காகவும் பரிதாபப்பட்டாள்.          

ஏங்கி அழும் ருஹானாவை காண பொறுக்காமல் “இவான் வீட்டுக்கு வருவான்” என ஆர்யன் அழுத்தமாக சொல்ல, ருஹானா கண்ணீருடன் தலையசைக்க “எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம்” என்றான், உறுதியாக.

“அவன் வருவான்” என மீண்டும் சொல்லி அவனுக்கு அவனே நம்பிக்கை கொடுக்க, அதை குலைக்க போன் அடித்தது. 

“சொல்லு, ரஷீத்!”

“ஆர்யன்! ஒரு கெட்ட செய்தி”

“என்ன! சொல்லு?” முக தசைகள் இறுக ஆர்யன் கேட்டான்.

“நாம நினைச்சத விட இது சரிசெய்ய கடினமாகும் போல”

“என்ன சொல்றே?”

“இப்போ நடக்கப் போற விசாரணைகள்ல தீர்ப்பு நமக்கு சாதகமா அமையலனா,  நாம இவானை திரும்ப பெறவே முடியாது”

இவானின் நாடி நரம்புகள் தெறித்தன. “ஏன் அது பாதகமா போகும்? என்ன சிக்கல்? தெளிவா சொல்லு, ரஷீத்” 

‘பாதகம், சிக்கல்’ என்ற வார்த்தையில் திடுக்கிட்ட ருஹானா ஆர்யனையே பயத்துடன் பார்த்தாள்.

“வழக்கமான நடைமுறைகள்ல அவங்க இவானை கூட்டிட்டு போகல. ஒரு புகாரின் அடிப்படைல தான் கூட்டிட்டு போயிருக்காங்க. யாரோ ‘அர்ஸ்லான் மாளிகை இவானுக்கு சரியான வாழ்விடம் இல்ல’ன்னு புகார் கொடுத்துருக்காங்க” 

சிவந்த விழிகளுடன் ருஹானா ஆர்யனை பார்க்க, கோபத்தால் ஆர்யனின் முகமே சிவந்தது.

(தொடரும்)

Advertisement