Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 41

ருஹானா அழுவதை பார்த்தபின்னும் நடந்து முடிந்திருக்கும் அக்கிரமத்தை நம்ப முடியாமல் ஆர்யன் அவளை பார்த்து “இவான்…. இவான் எங்கே?” என கேட்டான். அவள் பதில் சொல்ல முடியாமல் அவனை பார்த்து இன்னும் கண்ணீர் விட “இவான் எங்கேன்னு கேட்கறேன்” என இரைந்தான்.

அந்த இரைச்சலில் தள்ளி நின்ற கரீமா அவன் பக்கம் வந்து “ஆர்யன்! சமூகசேவை அமைப்பிலிருந்து வந்தவங்க இவானை கூட்டிட்டு போய்ட்டாங்க. நீ வர்றதுக்கு ஒரு நிமிடம் முன்னே தான் அவங்க போனாங்க” என்று சொல்ல, ஆர்யனிடமிருந்து அனல் மூச்சு கிளம்பியது.

தரையில் அமர்ந்து அழும் ருஹானாவை தலையை சாய்த்து சாய்த்து பார்த்த ஆர்யன் அவள் கண்ணீரை சகிக்க முடியாமல், அவளுக்கு ஆறுதல் அளிக்க இயலாமல், முஷ்டியை இறுக்கியவன் அதை கோபமாக வெளிப்படுத்தினான்.

“ஏன் நீ கதவை திறந்தே? நான் தான் வந்திடுறேன்னு சொன்னேன்ல” என அவன் இரைய, அழுகையை அடக்கிய ருஹானா “அவங்க தூக்கிட்டு போய்ட்டாங்க” என சொல்ல, தலையை வேகமாக ஆட்டிய ஆர்யன் “எப்படி இவானை திருப்பி வாங்குறதுன்னு எனக்கு தெரியும்” என சொல்லி கார் கதவை திறந்து ஒரு காலை வைத்தான்.

‘கெட்டது காரியம்’ என பயந்த கரீமா “ஆர்யன்! நிதானத்துக்கு வா. உன் கோபத்தால தப்பு செஞ்சிடாதே. அப்புறம் எல்லாம் கெட்டு போய்டும். இவானை திரும்ப வாங்க முடியாது” என பதற, ‘இவான் திரும்ப’ என்ற சொல்லிலேயே எல்லா புலன்களையும் முடுக்கிவிட்ட ருஹானா, ஆர்யன் மறுகாலை வைத்து உள்ளே ஏறுவதற்குள் மின்னலென சுற்றி வந்து காரில் ஏறி அமர்ந்தாள்.

அவளை ஆர்யன் முறைப்பாக பார்ப்பதை கண்டுகொள்ளாமல் சீட்பெல்ட்டை போடுவதில் முனைந்தாள். முறைத்தாலும் அவளை ‘இறங்கு!’ என்ற ஒற்றை வார்த்தை கூட சொல்லாமல் பின்னால் பார்த்தபடி வண்டியை பின்னே செலுத்தி திருப்பியவன் காரை பறக்க விட்டான். கரீமா ஏமாற்றமாய் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“என் அண்ணன் மகனை எப்படி என் வீட்ல இருந்து கூட்டிட்டு போக முடியும்? எந்த சட்டப்படி? எப்படி?” திருப்புசக்கரத்தில் கையை ஓங்கி குத்தியபடி ஆர்யன் கத்த “நிதானமா இருங்க. அங்க போய் இப்படி நீங்க ஆவேசப்பட்டா எல்லாம் கெட்டுப் போகும். இவானை திருப்பி வாங்குறது சிக்கலாகும்” என ருஹானா அவனை தணிக்க முயற்சி செய்ய, அவன் காரின் வேகத்தை இன்னும் கூட்டினான்.

“இவானை நினைச்சி பாருங்க. எவ்வளவு பயந்திட்டு இருப்பான், இந்நேரம்? உங்களை இப்படி பார்த்தா அவன் என்னாவான்? உங்களை கெஞ்சி கேட்கறேன். இவான் உங்க மேலே வச்சிருக்கிற நம்பிக்கையை குலைச்சிடாதீங்க. ப்ளீஸ்” என அவள் எடுத்து சொல்ல, காரின் வேகம் குறையாவிட்டாலும், ஆர்யனின் கொந்தளிப்பு குறைந்தது.

——–    

சமூகசேவை நிறுவனத்தின் அதிகாரியால் காரில் இருந்து மெதுவாக இறக்கிவிடப்பட்ட இவான், அவர் கையை பிடித்துக்கொண்டே உள்ளே நுழையும் சமயம், ஆர்யனின் கார் வந்து நிற்க, கண்ணை மறைக்கும் நீரை இவான் இமைகளை தட்டி தள்ளிவிட்டு பார்த்தான்.

காரிலிருந்து இறங்கிய சித்தி, சித்தப்பாவை பார்த்து “சித்தப்பா!” என்று ஓடிவந்த இவான் ஆர்யனின் கால்களை கட்டிக்கொண்டான். ஆர்யன் “இவான்!” என்று அவனை பிடிக்க “சித்தப்பா! என்னை இங்க விட்டுடாதீங்க!” என்று சொல்லி நிமிர்ந்து ஆர்யன் முகம் பார்த்தான்.

ருஹானா கண்ணீர் சிந்த, ஆர்யன் என்ன சொல்ல என திகைக்க, “நான் அழவே கூடாதுன்னு கஷ்டப்பட்டு அடக்கினேன், சித்தப்பா! நீங்க என் மேல கோபப்படாதீங்க. அழுகை ரொம்ப வந்துடுச்சி. என்னால அடக்க முடியல. ஆனா இப்போ கண்ணீர் நின்னுடும். இனிமேல் நான் அழ மாட்டேன்” என்று பாவமாய் சொல்ல, ஆர்யன் சட்டென மண்டியிட்டு இவானை அணைத்துக்கொண்டான்.

இத்தனை நேரம் இரக்கமாய் பார்த்திருந்த அதிகாரி “மிஸ்டர் ஆர்யன்!” என அருகே வர,  இவான் “சித்தப்பா!” என ஆர்யன் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டான். அவனை ஒரு கையால் தழுவிக்கொண்ட ஆர்யன் மறுகையால் ‘நில்லுங்க!’ என ஆணையிடுவது போல கையை காட்ட அந்த அதிகாரி அப்படியே நின்றார்.

சில நிமிடங்கள் பொறுத்திருந்த அந்த பெண்மணி “ஆர்யன் சார்! நீங்க நடைமுறையை சிரமமாக்குறீங்க!” என சொல்ல அதற்கு அசையாத ஆர்யன் “ப்ளீஸ்! இவானுக்காக…” என்று ருஹானா சொல்ல சரியென தலையாட்டினான்.

இவானை தூக்கி நிறுத்திய ஆர்யன் “அக்னி சிறகே! பயப்படாதே! தைரியமா இரு. உன்னை நான் எப்பவும் விட மாட்டேன். சீக்கிரம் வந்து உன்னை கூட்டிட்டு போவேன். இது சத்தியம்” என வாக்கு கொடுத்தான்.

ஆர்யனிடமிருந்து ருஹானாவிடம் தாவிய இவான் கண்ணீர் உகுக்க, ருஹானா தன் கண்ணீரை துடைத்தவள், மனதை கல்லாக்கிக்கொண்டு “அன்பே! உன்னை அதிக நாள் இங்க நாங்க விடமாட்டோம். ஆனா இப்போ நீ இவங்களோட போகணும். நீ அவங்க சொன்ன பேச்சை கேட்டா சீக்கிரம் வீட்டுக்கு வந்திடலாம். சரியா?” என கேட்க, இவான் சோகமாக தலையாட்ட “எனக்கு சத்தியம் செய்” என சித்தி கேட்க “சத்தியம்” என்றான்.

இவானை கட்டிக்கொண்ட ருஹானா “என்னுயிரே! நான் உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன்” என்று அவன் தலையில் முத்தமிட “நானும் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்” என்று அவன் சொல்ல “பயப்படக்கூடாது செல்லம். நாங்க உன் கூட தான் இருக்கோம். உன் மேலே நிறைய அன்பு வச்சிருக்கோம்” என ஆர்யனை பார்த்துக்கொண்டே அவனையும் தன்னோடு சேர்த்து சொன்னவள் “எப்பவும் இதை மறக்காதே, சரியா?” என கேட்டாள்.

சித்தி சொன்னதை ஏற்றுக்கொண்டு தலையசைத்த இவானின் கையை அதிகாரி பிடிக்க, அவரோடு வாசல் வரை சென்றவன் திரும்ப ஓடி வந்து ருஹானாவை கட்டிக்கொண்டான். அவளை முத்தமிட்டவன் அவள் கழுத்தில் கட்டியிருந்த ஸ்கார்ப்பை உருவி எடுத்துக்கொண்டு தன் கைகளுக்குள் மடக்கி அவர்களை திரும்பி பார்த்தபடியே அதிகாரியுடன் உள்ளே சென்றான்.

வஞ்சத்தால் பிரிக்கப்பட்ட இளஞ்சிட்டு 

நம்பிக்கை தந்த இரு உள்ளங்களுக்கு

உறுதியளித்து தன் தைரியம் உரைக்கிறது

சிந்தும் கண்ணீர் இனியில்லையென….!

சிறு மலர் வாடிடாமல் தன்னை காத்திட

அவளில் உணர்ந்த அன்பின் ஈரத்தை 

அவள் சிற்றாடையில் பொதிந்து 

கைப்பிடிக்குள் கொண்டே சென்றது..!  

அடக்கி வைத்திருந்த கண்ணின் நீரை ருஹானா பொலபொலவென வெளிவிட, அவளை பார்த்த ஆர்யன் அவள் கண்ணீரை நிறுத்தும் வழியை யோசித்தான். போனை எடுத்து ரஷீத்தை அழைத்து அரைமணிநேரத்தில் வழக்கறிஞர்களை அலுவலகத்தில் கூட்ட சொன்னான்.

ஆதரவற்றோர் விடுதியின் உள்ளே இவானை அழைத்து சென்ற அதிகாரி அங்கே இருந்த பொறுப்பாளரிடம் அவனை அறிமுகப்படுத்தினார்.

“இவான்! இவங்க லைலா! இவங்க தான் இங்க உன்னை பார்த்துக்க போறாங்க”

இவானின் கை பிடித்த அந்த கருணையான முகம் கொண்ட லைலா “வா இவான் குட்டி!” என்று அவனை அன்பாக அறைக்குள் அழைத்துச்சென்றார்.

“உன்னை நாங்க நல்லா கவனிச்சிக்குவோம். இங்க பயப்படறத்துக்கு எதுவும் இல்ல. நீ பத்திரமா இருக்கலாம். உனக்கு தேவையானது எல்லாம் கிடைக்கும். உனக்கு என்ன வேணும்னாலும்  நீ என்கிட்டே கேட்கலாம். என்கிட்டே எல்லாம் பேசலாம். சரியா?” என லைலா கேட்க, இவான் தலையை கூட ஆட்டவில்லை.

“உன் புது நண்பர்களை சந்திக்கிறியா?” என அவர் கூப்பிட, இவான் ருஹானாவின் ஸ்கார்ப்பை அழுத்தி பிடித்துக்கொண்டான். அவன் நகராததால் “இரு! அவங்கள இங்கயே கூப்பிடுறேன்” என்று சொல்லி லைலா செல்ல, இவான் ஸ்கார்ப்பை கழுத்தடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களும், விளையாட்டு பொருட்களும் நிறைந்த அந்த அறையை சுற்றி பார்வையை ஓட்டினான்.

லைலா மூன்று சிறுவர்களுடன் திரும்பி வந்தவர் “இவான்! இந்த அறிவுப் பொண்ணு பேர் ஹஸல். ஆடிட்டே நிக்கிறான் பார் இவன் புராக். அமைதியா  இருப்பான் மெஹ்மத்” என்று சொல்லி, இவானையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு “உன் பையை கொடு. நான் அலமாரில வைக்கிறேன்” என்று வாங்கிக்கொண்டு நகர்ந்தார்.

புராக் அருகே வந்து “நீ ஏன் இங்க வந்துருக்கே?” என கேட்க, இவான் பதில் சொல்லாமல் ஜன்னல் பக்கம் வந்து வெளியே பார்த்தான். அவன் பின்னாலேயே வந்த புராக் “நீ வீணா காத்திருக்காதே. யாரும் வர மாட்டாங்க. எங்களை போல உன்னையும் வேண்டாம்னு விட்டுட்டாங்க” என்றான்.

உடனே திரும்பிய இவான் “என் சித்தப்பா என்னை கூட்டிட்டு போக வருவார்” என அழுத்தமாக சொல்ல, மெஹ்மத்தும் பக்கம் வந்தவன் “எங்க அம்மா கூட என்னை இங்க விட்டுட்டு வரேன்னு சொல்லி போனாங்க. ஆனா வரல” என்று சொன்னான்.

புராக் பார்த்தியா? அதான் சொல்றேன். ஜன்னல்ல போய் எட்டிப் பார்க்காதே. அவங்க நம்மள இங்க விட்டுட்டு மறந்து போய்டுவாங்க. திரும்பி வர மாட்டாங்க” என பயமுறுத்தவும், முன்னே வந்த ஹஸல் “நீங்க ஏன் அவனை அழ வைக்கிறீங்க? லைலா மேம் கிட்டே சொல்லவா?” என கேட்டாள்.

அவர்கள் இருவரும் சென்று அமரவும், ஹஸல் “நீ வருத்தப்படாதே! ஒருவேளை உன்னை கூட்டிட்டு போக வரலாம்” என்று இவான் தோளில் கைவைத்து ஆறுதல் படுத்தினாள். 

——-   

மேல் மாடியில் நின்று அர்ஸ்லான் மாளிகையின் அழகை ரசித்துக்கொண்டிருந்த கரீமாவிடம் வந்த சல்மா “அக்கா! இவானை கூட்டிட்டு போயிட்டாங்களா? ரஷீத் வக்கீல்ட்ட பேசும்போது நான் கேட்டேன். ஆர்யன் ஒன்னும் செய்யலயா?” என ஆர்வமாக கேட்டாள்.

“அவன் என்ன செய்யமுடியும்? பைத்தியம் மாதிரி கத்துவான். அவனோட சக்தியும் செல்லுபடியாகாத சில இடங்களும் இருக்கு. இவான் முடிந்து போன வரலாறு”

“அப்போ அவன் திரும்ப வர முடியாதா, அக்கா?”

“முடியவே முடியாது. இனி இவங்க இவானை கனவுல தான் பார்க்கணும். நீ இப்படி சிரிக்காதே. மகிழ்ச்சியை மறைச்சிட்டு கவலையா இருக்குற மாதிரி நடிக்கணும்”

“இவான்!” என்று அம்ஜத் அழைக்கும் குரல் கேட்க “எனக்கும் சேர்த்து காபி மேலே கொண்டு வர சொல்லு. நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி கரீமா உள்ளே சென்றாள்.

—— 

ருஹானா பின்தொடர வேகமாக அவனது அலுவலக அறைக்குள் வந்த ஆர்யன் அவனை பார்த்து எழுந்து நின்ற வழக்கறிஞர்களிடம் “இவானை கூட்டிட்டு வர என்னென்ன செய்யணுமோ, அதையெல்லாம் செய்ங்க. இன்னும் ஒரு இரவு கூட அவன் அங்க இருக்கக்கூடாது” என்று உறுத்து விழித்து சொன்னான்.

“ஆட்சேப மனு கொடுத்து வேலையை ஆரம்பிக்கலாம். ஆனா..“ என்று வக்கீல் இழுக்க “ஆனா, ஆகாதது எதும் கிடையாது” என்று கத்திய ஆர்யன், பேசிய வக்கீலின் சட்டையை பிடித்து அவரை சுவரோரம் தள்ளி “ஒரு விநாடி கூட வீணாக கூடாது. செய்யலாம் இல்ல.. செய்யணும்.. முடிக்கணும்” என்று சொல்லி அவரை பற்றி உலுக்கினான்.

பின்னால் நின்ற ரஷீத்தும், ருஹானாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ரஷீத் துணிந்து “ஆர்யன்!” என அழைக்க, அவனை சட்டை செய்யாத ஆர்யன் “எல்லாம் உங்களால தான். இவான் அம்மா இறந்த உடனே கஸ்டடிக்கு அப்ளை செய்துருக்கணும்ல. ஏன் அதை செய்யல?” என அவர் கழுத்தை இரு கைகளாலும் நெருக்கி “இந்த கையால தான் என் அண்ணன் மகனை அவங்க கிட்டே தூக்கி கொடுத்தேன். இப்போ அதே கையால…“ என்று அழுத்தினான்.

ரஷீத் ‘ஆர்யனை கட்டுப்படுத்து ப்ளீஸ்’ என்பது போல ருஹானாவை பார்க்க, அவள் ஆர்யனிட்ம் நெருங்கி “தயவு செய்து அவரை விடுங்க. அவர் சொல்றது என்னன்னு கேட்கலாம். நீங்க செய்றது இவானுக்கு எந்த விதத்துலயும் பயன் தராது” என்று சொல்லவும், ஆர்யன் வக்கீலை முறைத்துக்கொண்டே விடுவித்து கோபம் குறையாமல் விலகி நின்றான்.

‘போன உயிர் திரும்பி வந்தது’ என்று பெரிய பெரிய மூச்சுக்களை வாய் மூலம் விட்டு கழுத்தை அசைத்து பார்த்துக்கொண்ட வக்கீலின் அருகே வந்த ருஹானா “நீங்க சொன்ன பெட்டிசன் கொடுத்தா இவானை பெற முடியுமா?” என கேட்க, “அதற்கான முயற்சியின் ஆரம்பம் தான் அது” என்றார்.

———         

ஆர்யனும், ருஹானாவும் மாளிகைக்கு திரும்ப, வாசலுக்கு ஓடிவந்த கரீமா “இவான்.. இவான் எங்கே?” என்று நடிக்க, ருஹானா “அவன் சில நாட்கள் சிறுவர் விடுதில இருக்க வேண்டியிருக்கு” என்று சொன்னதும் “ஐயோ! அவன் அங்க தனியா என்ன செய்வான்?” என்று கரீமா புலம்ப பின்னால் நின்ற சல்மாவிற்கு அக்காவின் திறமையை கண்டு மனதில் வியக்காமல் இருக்க முடியவில்லை.

Advertisement