Advertisement

இவான் தனியாக தோட்டத்தில் அழுதபடி அமர்ந்திருக்க, சமூகசேவை நிறுவனத்தின் கார் உள்ளே நுழைந்தது அதிலிருந்து ஆணும், பெண்ணுமாய் இறங்கிய இருவர் இவான் வெளியில் வெய்யிலில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்தனர். அவன் குனிந்த தலை நிமிரவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை.

அப்போது ருஹானா வெளியே வர அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். “சரி, என்ன விஷயம்?” என ருஹானா புரியாமல் கேட்க “அனாதை குழந்தைகள் பராமரிப்பு பற்றி கண்காணிக்கறது எங்க வேலைகளோட சேர்ந்தது” என்று அந்த ஆண்மகன் சொல்ல, “எனக்கு இப்பவும் புரியல. இங்க ஏன் வந்திருக்கீங்க?” என்று ருஹானா கேட்க அவர் திரும்பி இவானை பார்த்தார். அவனை பற்றி தான் அவர் பேசுகிறார் என இப்போது லேசாக புரிந்துகொண்ட ருஹானா திகைப்பாக பார்த்தாள்.

அப்போது இவான் எழுந்து நகர “இவான்!” என்று ருஹானா அவன் பின்னால் செல்ல முயற்சிக்க, அவளை தடுத்த அந்த ஊழியர் “எங்கள் சங்க உறுப்பினர் பையனுடன் பேச அனுமதியுங்கள். நாங்க எங்க வேலையை செய்ய வந்திருக்கோம். எங்களை தடுக்காதீங்க” என்று அவர் சொல்ல, கூட வந்த பெண்மணி இவானிடம் சென்றார்.

“நான் இவானோட சித்தி. நீங்க இதெல்லாம் ஏன் செய்றீங்கன்னு எனக்கு புரியல” என ருஹானா கேட்க “இதுவரைக்கும் இவானோட நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படல. அதனால தான் நாங்க இங்க வந்தோம். நாங்க வந்தபோது பையன் தனியாக உக்காந்து இருந்தான்” என அவர் சொல்ல அதிர்ச்சியான ருஹானா இவானை திரும்பி பார்த்தாள்.

பெண் அதிகாரி இவானை பேசவைக்க முயற்சிக்க இவான் தலையை கவிழ்த்துக்கொள்ள அவனுடைய சுருள்முடியை தான் அவரால் பார்க்க முடிந்தது.

“இவான் என்னோட கண்ணின் மணி போன்றவன்” என ருஹானா அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க, உள்ளே கரீமா சல்மாவுக்கு போன் செய்து அங்கே நடப்பதை தெரிவித்து ஆர்யனை மாளிகைக்கு வருவதை தடுக்கவும், ருஹானாவின் போனை தவிர்க்கவும் அவளால் முடிந்ததை செய்யும்படி அறிவுறுத்தினாள்.

அதிகாரி கொடுத்த புகாரை வாங்கி படித்த ருஹானா “இல்ல.. இங்க இப்படிலாம் நடக்கவே இல்ல. எல்லாமே தப்பு” என்று கண்கலங்கி சொல்லும் சமயம் கரீமா “என்ன நடக்கிறது இங்கே?” என கேட்டபடி வெளியே வந்தாள்.

“கரீமா மேம்! இவங்க இவானை கூட்டிட்டு போறதா சொல்றாங்க. எனக்கு ஒன்னுமே புரியல” என்று சொல்ல “அது எப்படி அப்படி செய்ய முடியும்? எங்கயோ தப்பு நடந்திருக்கு” என்று கரீமா நடிக்க “எங்களுக்கு வந்த புகார் பேர்ல நாங்க நடவடிக்கை எடுக்க தான் செய்வோம்” என அதிகாரி திட்டவட்டமாக சொன்னார்.

“முடியாது. நீங்க அப்படி செய்ய முடியாது. இவான் என்னோட உயிர். அவன் இல்லாம என்னால இருக்க முடியாது” என ருஹானா அழ துவங்கியவளுக்கு ஆர்யன் நினைவு வர “நான் இவானோட சித்தப்பாக்கு போன் செய்றேன். அவர் வரவரை நீங்க இவானை கூட்டிட்டு போக முடியாது” என போனை எடுக்க கரீமா திகைத்தாள்.

“அது உங்களோட உரிமை. எனக்கு இவானோட ஆவணங்கள்லாம் காட்டுங்க” என அவர் சொல்ல, ருஹானா ஆர்யனுக்கு அழைப்பு விடுத்தாள். அவள் கெட்ட நேரம் அதை பார்த்தது சல்மா தான். ஆர்யனின் கைபேசி அதிர்வு முறையில் இருக்க, அது மணியடிக்காமல் ‘இவான் சித்தி’ என்று மட்டும் காட்டியது.

ஆர்யன் ரஷித்துடன் கவனமாக பத்திரங்களை பார்த்துக்கொண்டிருக்க, சல்மா போனை அமைதியாக்கி அதை ஃபைலின் அடியில் தள்ளி விட்டாள். சரிபார்த்த ஆவணங்களை ரஷீத் சல்மாவிடம் நீட்ட “என் மேல் வைக்கும் நம்பிக்கைக்கு நன்றி, ஆர்யன்” என்று சொல்லி அவள் கையெழுத்திட்டாள். ஆர்யன் பதில் சொல்லாமல் லேசாக தலையசைத்தான்.

“அவர் போனை எடுக்கல” என்று பரிதவிப்புடன் ருஹானா கலங்க, “இவானுக்கு தேவைப்படும் பொருட்கள்லாம் கொடுங்க” என்று அதிகாரி கேட்க “தயவுசெய்து கொஞ்ச நேரம் இருங்க. என் அழைப்பை பார்த்துட்டு உடனே அவர் கூப்பிடுவார்” என்று ருஹானா கெஞ்சினாள்.

கரீமா சுவாரஸ்யமாக பார்த்திருக்க “இவானோட சித்தப்பா வந்தாலும் எதுவும் நடக்காது. இவானுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுங்க. தேவையில்லாம பிரச்னை செய்யாதீங்க” என அதிகாரி கடுமையாக சொல்ல, ருஹானா செய்வதறியாது நிற்க இவான் ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டான்.

“சித்தி! அவங்களோட என்னை அனுப்பிடாதீங்க” என்று அவன் அழ, ருஹானாவும் “என்னுயிரே!” என்று தேம்பினாள். அவனை தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தவள் அவனை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“நான் போக மாட்டேன், சித்தி. உங்க கூட தான் இருப்பேன்”

“அன்பே! உன் சித்தப்பாக்கு மறுபடியும் கால் செய்றேன். அவர் உடனே வந்துடுவார். அந்த கதையில போல உனக்கு துன்பம் நேர விடமாட்டார்” என சொல்ல, இவான் நம்பிக்கையுடன் தலையாட்டி சோபாவில் சென்று அமர்ந்தான்.

மறுபடியும் ஆர்யனுக்கு போன் செய்த ருஹானா “ப்ளீஸ் போனை எடுங்களேன்!” என அழுதபடியே அவன் அழைப்பை ஏற்க காத்திருந்தாள். இந்த முறையும் சல்மா அவன் கவனத்தை திசை திருப்ப பார்க்க, ஆர்யன் தாள்களை நகர்த்தி போனை எடுத்தான்.

இவானின் சித்தி அழைப்பது என்று பார்த்ததும், உடனே எடுத்து “எஸ்” என்றான். “சமூகசேவை நிறுவனத்திலிருந்து வந்துருக்காங்க. இவானை கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க“ என அழுகையுடன் இரத்தின சுருக்கமாக தகவலை சொல்ல “என்ன!!!!” என நாற்காலியை விட்டு சடாரென எழுந்துவிட்டான்.

“நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன். அவங்க கேட்க மாட்றாங்க. சட்டப்படி செய்றேன்னு சொல்றாங்க” என அழ, “இவானை கொடுத்துடாதே! நான் வந்துட்டே இருக்கேன். அவங்க என்ன செய்தாலும் இவானை தந்திடாதே!” என சொல்லிக்கொண்டே வேகமாக வெளியே செல்ல, ரஷீத் குழப்பமாகவும், சல்மா ‘அடடா! கிளம்பிட்டானே!’ என பார்த்திருந்தனர்.

“உன் சித்தப்பா சீக்கிரம் வந்துடுவார். பயப்படாதே, அன்பே!” என்று சொல்லி அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள். இவானும் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் முகம் புதைத்தான்.

இவான் தயாராக நேரம் கொடுத்து இரு அதிகாரிகளும் வெளியே காத்திருக்க, கரீமாவும் அவர்களோடு நின்றிருந்தாள். ‘ருஹானா தகவல் சொல்லிட்டா. ஆர்யன் புறப்பட்டுட்டான்’ எனும் குறுஞ்செய்தி சல்மாவிடமிருந்து வர சுதாரித்த கரீமா “நீங்க ஏன் வெளியே நிற்கிறீங்க? உள்ளே வாங்க. இவான் அழுவானாயிருக்கும். அவன் சித்தி நிலமையை மோசமாக்குறா” என்று எடுத்துக் கொடுத்தாள்.

“நான் இவானிடம் பேசி பார்க்கவா?” என பெண் அதிகாரி கேட்க “தாராளமா! உங்களுக்கு தெரியாதா, இவானுக்கு எது நல்லதுன்னு? வாங்க.. உள்ளே” என நைச்சியமாக பேசி உள்ளே அழைத்துப் போனாள்.

“சித்தி! சித்தப்பா வரலனா என்ன ஆகும்?” என இவான் பயந்து கேட்க “அப்படிலாம் எதும் ஆகாது. உன் சித்தப்பா வந்துட்டே இருப்பார்” என ருஹானா சொல்லும்போது காலடி சத்தம் கேட்க இவான் நடுங்கிப்போய் சித்தியை இறுக்கிக்கொண்டான்.

மறுபடியும் ஆர்யனை அழைத்த ருஹானா “ஹலோ! அவங்க இவான் ரூம்க்கே வராங்க. நான் எப்படி அவங்கள தடுக்க?” என படபடப்புடன் கேட்டாள். வேகமாக காரை ஓட்டிக்கொண்டே ஆர்யன் “ரூம் கதவை சாத்தி தாழ் போட்டுக்கோ” என்று சொல்லிக் கொடுத்தான் 

“இவான் பயப்படுவான். நான் அப்படி செய்ய முடியாது”

“நான் கதவை மூட சொன்னேன். நான் சொல்றதை கேட்க மாட்டியா? போ.. கதவை மூடு. நான் வரவரை யாரையும் உள்ளே விடாதே. சரியா?”

ஆர்யன் கோபமாக சொல்ல சரியென்ற ருஹானா ஓடிச்சென்று கதவை சாவி கொண்டு பூட்டினாள். அவர்கள் கதவை தட்டவும் இவான் நடுங்கி போய் ருஹானாவை பிடித்துக்கொண்டான்.

“ருஹானா மேம்! கதவை திறங்க. எங்க வேலைக்கு இடைஞ்சல் செய்யாதீங்க”

“நீங்க ஒத்துழைக்க மறுத்தா நாங்க போலீசை கூப்பிட வேண்டி இருக்கும்”

போலீஸ் என்ற சொல்லில் இவான் அதிர்ந்து போனான். ருஹானாவின் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அதிகாரி கரீமாவை பார்க்க, அவள் “ருஹானா டியர்! எனக்கும் இவானை அனுப்புறதுல விருப்பம் இல்ல. ஆனா வேற வழி இல்ல. கதவை திற” என்றாள்.

“சித்தி! எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என அழ, ருஹானாவிற்கு அவன் கண்ணீரை தாள முடியவில்லை.

“ருஹானா மேம்! எங்களை வலுக்கட்டாயமாக நடக்க வைக்காதீங்க. கதவை திறங்க” என வெளியே இருந்து கோபமான குரல் வர, ருஹானா “கண்ணே! பயப்படாதே! சித்தி எப்பவும் உன்கூட இருப்பேன். தைரியமா இரு” என்று அவனை வயிற்றோடு அணைத்துக்கொண்டாள்.

அதிகாரி ஒருவர் காவல் நிலையத்துக்கு அழைக்க, கரீமா “ருஹானா டியர்! போலீஸ் வந்தா நாம சட்டப்படி இவானை திரும்ப வாங்க முடியாது. புரிஞ்சிக்கோ. கதவை திற” என்று சொல்ல, இன்னொரு அதிகாரி “ருஹானா மேம்! நீங்க செய்றது இவானுக்கு தீமைல தான் போய் முடியும். இப்போ போலீஸ் வந்து கதவை உடைத்து திறப்பாங்க. அதுக்கு அப்புறம் இவான் கஸ்டடடி கேஸ்ல உங்களுக்கு வெற்றி கிடைக்கறது சிரமம். அந்த நிலமைக்கு போக வேண்டாம்னா நீங்க இப்போ கதவை திறங்க” என்று கடைசி எச்சரிக்கையை விடுத்தார்.

“சித்தி! கதவை திறக்காதீங்க” என்று பெரிதாக அழ, ருஹானாவிற்கும் கண்ணீரை அடக்க முடியவில்லை. இவானை கீழே நிற்க வைத்தவள் அவன் எதிரே மண்டியிட்டு “இவான்! இப்போ வந்துருக்கற அண்ணாவும், அக்காவும் நல்லவங்க. குழந்தைங்க மேலே பாசமா இருப்பாங்க” என்று அவனை தயார் செய்ய முனைந்தாள்.

“சித்தி! ஆனா நான் உங்கள விட்டு போக மாட்டேன்”

“உயிரே! இது சில நாட்களுக்கு தான். விடுமுறைக்கு வெளியே போற மாதிரி தான்”

“ஆனா எனக்கு லீவுக்கு வெளிய போக வேண்டாம்”

“இங்க பாரு செல்லம்! அங்கே உன்னை போல நிறைய சின்ன பசங்க இருப்பாங்க. விளையாடற இடம் இருக்கும். நீ உன் சித்தியை நம்பு” என்று சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தாள்.

தேவையான பொருட்கள் அடங்கிய தோள் பையை அவன் முதுகில் மாட்டி ருஹானா அவனை கீழே அழைத்து வர “சித்தி! நான் போக மாட்டேன்” என்று அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தான். பின்னால் நின்ற சாரா, நஸ்ரியா கண்களிலும் கண்ணீர். கரீமா இரக்கமின்றி ஆர்யன் வரும்முன் சீக்கிரம் போனால் போதும்’ என்று பார்த்திருந்தாள்.

இவான் முன் மண்டியிட்ட ருஹானா “அன்பே! நீ இப்போ இவங்க கூட போ! சித்தப்பா வந்ததும் நானும் சித்தப்பாவும் பின்னாலேயே வந்து உன்னை கூட்டிட்டு வந்துடுவோம். பயப்படாதே! என்னை நம்பு” என்று சொல்ல, பெண் அதிகாரி கண்ணீர் வடிக்கும் இவானை கைபிடித்து அழைத்து செல்ல, மறுகையில் ருஹானாவை பிடித்திருந்த இவான் அவள் கையை  விடவேயில்லை.

மிகுந்த மனப்பாரத்துடன் மெல்ல தன் கையை விடுவித்த ருஹானா அப்படியே மண்டியிட்டவாறே குலுங்கி குலுங்கி அழுதாள். காரின் பின்கண்ணாடி பார்த்து திரும்பி முட்டி போட்டு அமர்ந்திருந்த இவான் சித்தியை பார்த்தபடியே மெளனமாக கண்ணீர் வடிக்க கார் வெளியே சென்றது.

கரீமாவின் உதடுகள் வெற்றி புன்னகையில் விரிய, காரோடும் பாதையின் நடுவில் மடங்கி உட்கார்ந்திருந்த ருஹானாவின் கண்ணீர் கரை புரண்டோட, ஆர்யனின் கார் உள்ளே சீறி வந்தது. கரீமா முகபாவனையை மாற்றிக்கொள்ள, காரிலிருந்து வேகமாக இறங்கிய ஆர்யன் அழும் ருஹானாவை பார்த்து திகைத்து நின்றான். 

கூட்டில் பொத்தி வைத்த சிட்டு

சகுனியின் சித்து வேலையில் சிக்கி

சமூகசேவையரின் கைப்பிடியில்… 

தவிக்கும் பெறாமல் பெற்ற உள்ளங்கள்..

தத்தளிப்பின் உச்சம் தளிரின் கலக்கம்..!

(தொடரும்)

Advertisement