Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 40

இவான் நிம்மதியாக நடுவில் உறங்க, சற்றே பெரிய அந்த ஒரே தலையணையில் ஆர்யனும் ருஹானாவும் ஒருக்களித்து கையை தலைக்கு கொடுத்து இவானை பார்த்தபடி அசௌகரியமாக படுத்திருந்தனர். தூக்கத்தில் லேசாக புரண்ட ருஹானா கையை தூக்கி ஆர்யன் மேல் போட்டாள்.

அந்த தொடுதலில் கண்விழித்த ஆர்யன் முதலில் எங்கே இருக்கிறோம் என விழித்தான். பின் தலையை தூக்கி ஆர்யனை பார்த்துவிட்டு தன் புஜத்தின் மேலிருந்த ருஹானாவின் கரத்தை கண்டு இனிமையாக திகைத்தான். அவள் முகத்தை திரும்பி பார்க்க அவள் அசந்து தூங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது. தன் கை மேல் இருந்த அவள் கையை பார்த்தபடியே இருந்தவன் ருஹானாவிடம் அசைவு தெரியவும் தலையை சட்டென்று தலையணையில் புதைத்து கண்களை மூடிக்கொண்டான்.

கண்விழித்த ருஹானா இவான் அருகில் படுத்திருந்த ஆர்யனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் என்றால் தன் கை அவனை தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தாள். வேகமாக கையை இழுத்துக்கொண்டவள் சங்கடமடைந்து எழுந்து நின்று இவானை பார்த்துவிட்டு விரைந்து வெளியேறிவிட்டாள். 

ருஹானா வெளியே சென்ற அரவம் கேட்டு கண்திறந்த ஆர்யன் இனம் புரியாத இனிய உணர்வுடன் ‘அது என்ன உணர்வு?’ என யோசித்தவாறே தூங்கும் இவானுக்கு போர்வையை இழுத்து போர்த்திவிட்டு அவனும் வெளியேறினான்.

——– 

குளித்து தயாராகி ஆர்யன் வெளியே வர ருஹானாவும் அதே சமயம் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். கருப்பு நிற ஸ்கர்ட், வெள்ளை நிற சட்டை. கழுத்தில் கருப்பும், வெள்ளையும் கலந்த ஸ்கார்ப் என வந்த அவளின் அழகு கண்ணை கவர்வதாய் இருந்தது.

ஆர்யன் அவளை பார்த்து நிற்க, அவனை நேருக்கு நேர் பார்க்க சங்கடமடைந்தாலும் அவனை நோக்கி வந்த ருஹானா “நீங்க நேற்று செய்ததற்கு நன்றி” என்றாள். அவன் புருவம் சுருக்கி கேள்வியாய் பார்க்க “அதாவது…  கதைக்கு” என்றாள், வேகமாக.

“கதையா?” என்று திரும்ப ஆர்யன் கேட்க “நீங்க இவானுக்கு சொன்ன கதை” என்றவள் “இவான் அதிக சந்தோஷமாகிட்டான்” என்று சேர்த்து சொன்னாள். “அது வெறும் கதை தான்” என்று ஆர்யன் சொல்ல “ஓ! அப்படியா! கதை தானா?” என்று சொன்ன ருஹானா ‘நான் அதை நம்பவில்லை’ என்பதுபோல் ஆர்யனை பார்த்தாள்.

“இவான் முழிச்சிருப்பான். நான் அவனை போய் பார்க்கறேன்” என அவள் நகர்ந்து போக, செல்லும் அவளையே எப்போதும் பார்த்திருக்கும் ஆர்யன் இப்போது அவள் கைபட்ட தன் இடது கை புஜத்தை மென்மையாக தடவி நின்றான். 

அவளை பற்றிய இனம் புரியாத உணர்வுகள் அவனை தாக்கும்போது அவனுடைய இமைகள் தாமாகவே படபடவென அடித்துக்கொள்கின்றன. கண்களும் அங்கும் இங்கும் அலைபாய்கின்றன. அந்த உணர்வின் எழுச்சியை அவன் கடுமை எனும் ஆயுதம் கொண்டு பெருமுயற்சி செய்து அடக்குகிறான்.

————

சல்மா ஸ்கர்ட், சட்டை அணிந்து மேலே வெள்ளை நிற ஜாக்கெட்டுடன் அழகாக தயாராகி கொண்டிருக்க, கரீமா விலைமதிப்புள்ள கைக்கடிகாரத்துடன் வாழ்த்துக்களையும் அளித்தாள்.

“அலுவலகத்தின் முதல் நாளுக்கு வாழ்த்துக்கள், சல்மா. ஆர்யனுடன் உன் பயணம் வெற்றிகரமாக நடக்க அல்லாஹ் துணை செய்ய நான் வேண்டுகிறேன்”

“நன்றி அக்கா! வாட்ச் அற்புதமா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு”

“அங்கே நீ ஆர்யன் கூட வேலை செஞ்சிட்டு இருக்கும்போது இங்க சோசியல் சர்வீஸ் ஆளுங்க வந்து இவானை கூட்டிட்டு போய்டுவாங்க. அதோட ருஹானா கதை முடிஞ்சது”

“சரியா நடக்குமா. அக்கா? காலைல உணவு மேசையில இவான் எவ்வளவு சந்தோசமா இருந்தான். அவங்க வரதுக்குள்ள எப்படி நீ அவனை சோகமா காட்டுவே?”

“அதை பத்தி நீ கவலைப்படாதே. இங்க நடக்கறதை நான் பார்த்துக்கறேன்”

“அப்படினா ஒரு கல்லுல ரெண்டு பறவையை அடிக்க போறே, அக்கா”

சல்மா பாராட்ட, கரீமா வாயை கோணி பெருமித சிரிப்பு சிரித்தாள்.

——— 

சையத் திறந்தவெளி உணவகம்…

கமிஷனர் வாசிம் தன் வீட்டில் அடைக்கலமாகி இருக்கும் வாகிதாவை அழைத்துக்கொண்டு சாப்பிட வந்திருந்தான். சையத்துக்கு வாசிம் சலாம் சொல்ல “வா மகனே! உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சி, உன்னை தேடிட்டே இருந்தேன்” என்று சையத் மகிழ்வுடன் சொன்னார். “ஆமா, சையத் பாபா, வர முடியல. எனக்கும் வேலை அதிகம் இருந்தது” என்று சொன்னவன் வாகிதாவை அவருக்கு அறிமுகப்படுத்தினான்.

எட்டாவது அத்தியாயத்தில் நாம் சந்தித்த வாகிதாவின் உண்மை நிலைமையை வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லா ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் வாசிமுக்கு எடுத்து சொல்லியிருந்தார். தனக்கு பிடிக்காத திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய அண்ணனை தாக்கிவிட்டு அவள் தப்பி வந்தபோதும் அவள் குற்றவாளி அல்ல என ஹெமதுல்லா எடுத்து சொல்ல, அதை ஏற்றுக்கொண்ட வாசிம், வேறு எங்கும் வாகிதாவை அனுப்பாமல் ஹெமதுல்லாவிற்கு உதவியாக இருக்கட்டும் என விட்டுருக்க, இருவரிடையே அழகான உறவு துளிர்க்க ஆரம்பித்திருந்தது. 

“இது வாகிதா, பெரியப்பாவோட பழைய மாணவி. எங்க கூட தங்கி இருக்கா” என வாசிம் சொல்ல “நல்வரவு, பெண்ணே!” என சையத் புன்னகைக்க, வாகிதா அவரை வணங்கினாள்.

“சையத் பாபா! எனக்கு தாங்க முடியாத பசி. உங்க மீட் லூஃப் கண்டிப்பா வேணும்” என்று வாசிம் கேட்க, சிரித்த சையத் அவர்களை அமர சொன்னார். மர தண்டுகளில் இருவரும் சென்று அமர “இன்னும் ஒரு செட் சேர்த்து செய்ங்க, சையத் பாபா” என வாசிம் கேட்க “இத்தனை எதுக்கு? எப்படி சாப்பிட முடியும்?” என வாகிதா ஆட்சேபித்தாள். “நீ சாப்பிடுவ பாரு” என வாசிம் சொல்ல சையத் இவர்களை பார்த்துக்கொண்டே இறைச்சித் துண்டை திருப்பிப் போட்டார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, உணவு கொண்டு வந்து கொடுத்த சையத், தானும் அவர்களோடு அமர்ந்துக்கொண்டார். “அப்புறம், ஹெமதுல்லா எப்படி இருக்கார்? உடம்பு நல்லா இருக்குல?” என அவன் பெரியப்பாவின் நலம் விசாரித்தார்.

“நல்லா இருக்கார். ஒன்னும் தொந்தரவு இல்ல” என வாசிம் சொல்ல “அவருக்கு இப்போலாம் அடிக்கடி மூச்சு விட சிரமம் இருக்கு” என கவலையாய் வாகிதா சொல்ல அவளை சையத் கூர்ந்து கவனித்தார். வாசிமை விட ஹெமதுல்லாவின் உடல்நிலையில் வகிதா வைத்திருந்த கவனம் சையத்தை யோசிக்க வைத்தது.

“இந்த மட்டன் லூஃப் சுவையில ஏதோ வித்தியாசம் இருக்கே? என்ன என்ன சேர்க்கிறீங்க, சையத் பாபா?” என வாகிதா அவர் பார்வையிலிருந்து தப்பிக்க நினைக்க, வாசிம் சிரிப்புடன் பார்த்திருந்தான். சையத் “அது நான் சொல்ல மாட்டேனே! அப்புறம் நீ வீட்லயே செஞ்சி கொடுத்திட்டினா, வாசிம் எப்படி உன்னை இங்க கூட்டிட்டு வருவான்?” என கேட்க மூவரும் சிரித்தனர்.

———

“ஏன் சித்தப்பா இந்த பெரிய பறவை சின்ன பறவை பக்கத்துலயே இருக்கு?”

“சின்ன பறவை தன்னோட குட்டி சிறகுகளால நல்லா பறக்க முடியறவரை பெரிய பறவை அதுக்கு பாதுகாப்பா இருக்கும்”

“நிலா ரொம்ப உயரத்துல இருக்கே. அதுவரைக்கும் அது எப்படி பறக்கும், சித்தப்பா? கீழே விழுந்தா என்ன ஆகும்?”

“குட்டி பறவைக்காக பெரிய பறவை பலமான கூடு கட்டி இருக்கே. பறக்க முயற்சி செய்து கீழே விழுந்தாலும் அதுக்கு அடிபடாது”

“பெரிய பறவை எப்பவும் சின்ன பறவையை காப்பாத்தும். இல்லையா, சித்தப்பா?”

“ஆமா அக்னி சிறகே! நானும் உன்னை எப்பவும் பாதுகாப்பேன். யாரும் உன்னை புண்படுத்த நான் விடவே மாட்டேன்”

மகிழ்ச்சியடைந்த இவான் “கதையில வந்த பையனை போல தானே?” என கேட்டான்.

“ஆமா!” என ஆர்யன் சொல்ல, கீழே பறவைகளுக்கு வண்ணம் தீட்ட புத்தகத்தை விரித்து வைத்து உட்கார்ந்திருந்த இவான் ஓடிவந்து அவன் கால்களை கட்டிக் கொண்டான்.

இவானின் அன்பில் நெகிழ்ச்சியடைந்த ஆர்யனின் கை மெல்ல உயர்ந்து அவனின் தலையை பாசமாக வருடியது.

கலர் பென்சில்களை எடுத்து வந்த ருஹானா இவர்களின் அன்பு பிணைப்பு கண்டு அப்படியே முறுவலுடன் நின்றாள். அவளை திரும்பி பார்த்த ஆர்யன் அவள் கண்களின் காந்த விசையில் ஈர்க்கப்பட்டு அசையாது நிற்க, ருஹானாவும் சிரித்த முகம் மாறாமல் அவனையே பார்த்திருந்தாள்.

ஆட்கள் நடந்து வரும் ஒலி கேட்டு ருஹானா கண்சிமிட்டி தலை தாழ்த்த, ஆர்யனும் ஈர்ப்பு சக்தியிலிருந்து விடுபட்டான். “நான் ரெடி, ஆர்யன்” என சல்மா புன்னகையுடன் சொல்ல, பக்கத்திலேயே ஆனந்தத்துடன் கரீமா நிற்க இருவரையும் பார்க்காமல் ஆர்யன் இருவருக்குமிடையே நடந்து வெளியே சென்றான்.  

இப்போதும் சல்மாவின் அழகு சிரிப்பு வீணாக, அவள் கரீமாவை பார்த்து ‘பார்த்தியா இவனை!’ என்பது போல ஜாடை செய்ய, ‘பொறுத்துப்போ’ என்பதுபோல கரீமாவும் பதில் ஜாடை காட்ட, சல்மா ஆர்யன் பின்னாலேயே சென்றாள்.

———- .

சையத் ஹெமதுல்லாக்கு போன் செய்து அவர் உடல்நலம் விசாரித்தார். 

“இப்போ பரவால்லே, சையத். திடீர் திடீர்ன்னு தான் சிரமப்படுத்திடுது, உடம்பு”

“கவனமா இருங்க, ஹெமதுல்லா. உங்க மாணவி வாகிதா நல்ல பெண்ணா தெரியுறா. உங்கள நல்லா பார்த்துக்கறானு வாசிம் சொன்னான்”

“ஆமா, கள்ளம் கபடம் இல்லாதவ. எல்லாருக்கும் நன்மை செய்ய நினைக்கிற பொண்ணு. வாசிமுக்கு துணையா இருப்பா”

“நானும் கவனிச்சேன், ஹெமதுல்லா. அவங்களுக்குள்ள அன்பு ரேகை ஓடுது”

“ஆமா, ஆனா இன்னும் எந்த முடிவும் எடுக்காம இருக்காங்க. இன்னும் அவங்க நேசம் பலப்படணும், சையத்”

“ம்ம்.. நல்லது தான். ஆழமான வேர் தான் அகலமான மரத்தை தாங்கி பிடிக்கும்”

“வாசிமுக்கு தாய் அன்பு கிடைக்கல. இப்போ வாகிதாவோட பராமரிப்பு அவனுக்கு ஆதரவா இருக்குன்னு எனக்கு தோணுது, சையத். அவளுக்கும் சொந்தபந்தம் யாரும் இல்ல”

“நல்லது தான். அவனோட பெற்றோர்களை பற்றிய விவரங்களை நாமும் யார்கிட்டயும் சொல்ல தேவை வராது. காலம் நினைத்தா நம்ம ரெண்டுபேருக்கும் மட்டும் தெரிந்த விவரங்கள் அப்படியே மறைந்திடும்”

“அதுவும் சரிதான், சையத். யாருக்கும் உபயோகம் இல்லாதது யாருக்கும் தெரிய வேண்டாம்” 

“சரி, நீங்க வீணா எதையும் யோசிக்காதீங்க. நல்லா ஓய்வெடுங்க. உடம்பை பார்த்துக்கங்க” என்று சொல்லி சையத் ஹெமதுல்லாவிற்கு விடை கொடுத்து போனை அடைத்தார்.

———-

பெரியதாய் ஒரு உருவமும் அதன் பக்கத்தில் சிறிய பையனையும் இவான் வரைந்துக் கொண்டிருக்க, பழசாறு கொண்டுவந்த ருஹானா “தேனே! என்ன அருமையா வரையுற!” என வியக்க, “சித்தப்பா சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடிச்சது” என இவான் சொன்னான்.

“ஓ! உனக்கு அவ்வளவு பிடிச்சதா, தேனே?”

“ஆமா! சித்தப்பா அழகா அந்த கதையை சொன்னாங்க, இல்ல சித்தி?” இவான் கேட்க, ருஹானா தலையை ஆட்ட “சித்தப்பா முதல்முதல்ல எனக்கு கதை சொல்லியிருக்காங்க” என்றான்

“ஆமா அன்பே!”

“சித்தப்பாக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன்”

“என்ன சர்ப்ரைஸ் செல்லம்?”

“நான் அம்பு விட நல்லா கத்துக்க போறேன். அப்போ சித்தப்பா சந்தோசப்படுவார் தானே, சித்தி?”

“நல்ல ஐடியா இவான் செல்லம். உன் சித்தப்பா கண்டிப்பா சந்தோசமாகிடுவார்”

இவான் மகிழ, “நான் போய் வில் அம்பை எடுத்துட்டு வரேன்” என்று ருஹானா செல்ல, மறைந்து நின்று பார்த்திருந்த கரீமா அங்கே வந்தாள். ருஹானா சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டவள் “இவான் டியர்! சித்தி கூட அம்பு விட்டு பழக போறீயா?” என்று கேட்க இவானும் தலையாட்டினான்.

“சித்தியை அதிகமாக களைப்படைய செய்யாதே. சரியா?” என அவள் சொல்ல இவான் யோசனையாக பார்க்க அவள் சொல்லிக்கொண்டே போனாள்.

“உன் சித்தி சோர்வானாள்னா உடம்பு சரியில்லாம போயிடும். அப்புறம் உன் அம்மா மாதிரியே உன்னை விட்டு போய்டுவா. உன்கூட விளையாட யாருமே இருக்க மாட்டாங்க. நீ தனியா தான் இருக்கணும். உன் சித்தியை உன்னால அணைக்க முடியாது”

இவான் முகம் சோகமாக மாற, கரீமா “இதை நீ உன் சித்திட்ட சொன்னா அவ ரொம்ப கவலைப்படுவா. அதனால நீ அவ கிட்டே சொல்லாதே” என தனக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டவள் “போ! உன் சித்தி முன்பக்க தோட்டத்துல இருக்கா. உன்னை வர சொன்னா” என்று அவனை காயப்படுத்தி அனுப்பி வைத்தாள். 

இவான் சோர்வாக வெளியே நடப்பதை பார்த்துக்கொண்டே கரீமா ருஹானாவை தேடி சென்றாள். வில்அம்பை எடுத்துக்கொண்டு எதிரே வந்த ருஹானாவிடம் இவானின் பழைய உடையை எளியவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து கொடுக்குமாறு கேட்டாள். இவான் அவளுக்காக காத்திருப்பான் என ருஹானா சொன்னபோதும் தான் அவனை பார்த்துக் கொள்வதாகவும், ஆடைகளை பெற்றுகொள்பவர்கள் வந்துவிட்டதாகவும் நாடகம் ஆடி அவளை உள்ளே அனுப்பினாள்.

Advertisement