Advertisement

வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்த சல்மா கொதித்துக்கொண்டிருக்க, கரீமா அமைதியாக செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா! அங்க பார்த்தியா? எதுவுமே நடக்காத மாதிரி அவ ஆர்யனோட சந்தோசமா பொழுது போக்கிட்டு இருக்கா. இவானுக்கும் பயம் தெளிஞ்சி போச்சி. இந்த திட்டமும் வீண் தான்”

“ஏன் இப்படி குதிக்கிறே, சல்மா? இன்னும் ஒரே மூவ் தான். எல்லாம் தலைகீழா மாறிடும் பார். இதெல்லாம் சின்ன விஷயம். நான் வேற கவலைல இருக்கேன். ஆர்யன் இன்னும் உனக்கு பொறுப்பு ஒப்படைக்கலயே, எப்போ உன்னை ஆபீஸ் கூப்பிடுவான்னு தெரியலயே”

“அதான் நாளைக்கு என்னை வர சொல்லி இருக்கானே”

“முட்டாள்! முட்டாள்! இதை இத்தனை லேட்டாவா சொல்வே?”

“ஏன் அக்கா?”

“நாளைக்கு ஆர்யன் ஆபீஸ்ல இருக்கும்போது நான் ஒரு வேலை செய்யணும்”

போனை எடுத்த கரீமா அவள் கையாளுக்கு அழைப்பு விடுத்தாள்.

“அலோ! நான் சொல்றதை கவனமா கேளு. நாளைக்கு சமூகசேவை அமைப்புக்கு போன் செஞ்சி ஏற்கனவே நான் சொல்லி கொடுத்ததை சொல்லு. நீ தான்னு அடையாளம் காட்டிக்காதே. இந்த பிளான்ல எதாவது தடங்கல் வந்துச்சினா உன்னை தொலைச்சிடுவேன்”

சல்மா பிரமிப்புடன் பார்த்திருக்க “நாளைல இருந்து வீட்லயும், ஆபீஸ்லயும் நம்ம ஆட்சி தான்” என கரீமா கெக்கலித்தாள்

———-

ருஹானா கொடுத்த பழச்சாறை இவானும், ஆர்யனும் அருந்த “சித்தப்பா! நாளைக்கும் எனக்கு அம்பு விட சொல்லி தருவீங்களா?” இவான் கேட்க, “நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. அடுத்த நாள் நாம வில் பயிற்சி செய்யலாம்” என ஆர்யன் சொன்னான்.

இவான் கழிவறை பயன்படுத்த வீட்டினுள் செல்ல, “இவான் இப்போ கொஞ்சம் தேறிட்டான்” என ஆர்யன் ருஹானாவிடம் சொன்னான். “நீங்க வந்த பின்ன தான் அவன் முகத்துல சிரிப்பு வந்தது” என அவள் சொல்ல அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை பார்க்க, ருஹானாவின் கைத்தொலைபேசியில் மிஷால் அழைத்து ஆர்யன் மகிழ்ச்சியை கெடுத்தான்.

“சொல்லு மிஷால்!” ருஹானாவின் உதடு உச்சரித்த அந்த ஒரு பெயர் அவனுக்கு எரிச்சலை தர கடுமையாக அவளை பார்த்திருந்தான். ஆர்யன் முன்னே அவளும் தயங்கி தயங்கி பேசினாள்.

“நல்லா இருக்கேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. இவானை கவனிக்க வேண்டியிருந்தது. சரி, அப்புறம் பார்க்கலாம்” என அவள் பேசிமுடிக்கும் வரை ஆர்யன் முகத்தை திருப்பிக்கொண்டு முறைப்போடு இருந்தான்.

கொண்டுவந்த பொருட்களை கூடையில் சேகரித்த ருஹானா எட்டி தட்டை எடுக்க முயன்றபோது கால்வலியால் முகம் சுளித்தாள். “இவானை நீ ஒழுங்கா கவனிக்கனும்னா உன்னை சீக்கிரம் நீ சரிபடுத்திக்கணும். தவறாம மாத்திரை சாப்பிடு”

“இல்ல.. அந்த மாத்திரை எனக்கு வேணாம். அதிகமா தூக்கம் வருது. அதுனால தான் நேத்து இவானை என்னால கவனிக்க முடியல. வலி குறைவா தான் இருக்கு. நான் சமாளிச்சிக்குவேன்”

ருஹானா ஆர்யனை மறுத்து பேச, அப்போது இவான் மெதுவாக அங்கே வந்தான். சிரித்த முகமாக உள்ளே சென்ற இவானை சல்மா அவன் அம்மாவின் குரலை கேட்க வைத்து பயமுறுத்தி இருந்தாள்.

“ஏன் அன்பே கவலையா இருக்கே?”

“சித்தி! நாம உள்ளே போகலாம்”

“ஏன் செல்லம் இங்க நல்லா தானே இருந்தே? இன்னும் கொஞ்ச நேரம் தோட்டத்தில இருக்கலாமே” என ருஹானா வினவ, ஆர்யனும் இவான் முகத்தை கூர்ந்து நோக்கினான்.

“இல்ல, என் ரூம்க்கு போகணும்” என தன் சுருள்முடி ஆட மறுத்தவன் பேசாமல் நின்றான். சிரமப்பட்டு எழுந்த ருஹானா அவன் கை பிடித்து உள்ளே கூட்டி செல்ல, இருவரையும் பார்த்தவாறு ஆர்யன் அங்கேயே அமர்ந்திருந்தான்.

——–

“பூக்கார பெண் அவள் நண்பர்களோட காட்டுக்கு விளையாட போக, அங்க நரி, கரடி, குரங்கு எல்லாம் அவளுக்காக காத்திருந்ததாம்” கதையை நிறுத்திய ருஹானா, அம்மாவின் படத்தை பார்த்தபடி படுத்திருந்த இவானின் தலையை தடவினாள்.

“இவான்! இன்னும் உனக்கு தூக்கம் வரலயா?”

“இல்ல”

“உனக்கு இந்த கதை பிடிக்கலயா? வேற கதை படிக்கவா?”

“நீங்க புக் வாசிக்கலனாலும் பரவால்ல”

ருஹானா என்ன செய்வது என புரியாது யோசிக்க, கதவை திறந்து ஆர்யன் எட்டி பார்த்தான். “இவான் தூங்கிட்டானா?”

ருஹானா இல்லையென தலையசைக்க, அப்போதும் பார்வையை அன்னை முகத்திலிருந்து இவான் எடுக்கவில்லை

“பாரு இவான்! உன் சித்தப்பா வந்திருக்கார்” ருஹானா சொல்ல, சித்தப்பாவை பார்த்து எப்போதும் மகிழ்பவன் ஒரு விநாடி மட்டும் ஆர்யனை பார்த்துவிட்டு மீண்டும் தாயின் புறம் பார்வையை திருப்பினான்.

உள்ளே வந்த ஆர்யன் “அக்னி சிறகே! என்னாச்சு உனக்கு? உடம்பு சரியில்லயா?” என கேட்க “நல்லாயிருக்கேன்” என ஒற்றை வார்த்தை பதில் வரவும் ஆர்யன் கவலையானான்.

“ஒருவேளை இந்த கதை அவனுக்கு பிடிக்கல போல” என ருஹானா சத்தமாக சொல்ல அதற்கும் இவான் பதில் சொன்னானில்லை.

இவானை நெருங்கி வந்த ஆர்யன் “இவான்!” என்று கூப்பிட அப்போதும் அவன் அசையவில்லை. “நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என ஆர்யன் கேட்டதும் ருஹானா வியப்படைந்து விழி விரித்து பார்த்தாள். லேசாக திரும்பினான், இவான்.

“உனக்கு கதை வேணுமா?” என ஆர்யன் திரும்பவும் கேட்க, நிமிர்ந்து படுத்த இவான் ஆமென தலையாட்டினான். கட்டிலில் அந்த புறம் ருஹானா அமர்ந்திருக்க, ஓரமாக இவான் படுத்திருக்க, ஆர்யன் நகரும் நாற்காலியை இவான் அருகே இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

இவன் எப்படி கதை சொல்லப் போகிறான் என ருஹானா ஆர்யனையே பார்க்க, ருஹானாவின் பார்வையிலும், அவளின் அருகாமையிலும் எப்படி கதை சொல்வது என ஆர்யன் யோசித்தவாறே கண்களை மூடி மூடி திறந்தான்.

“முன்னாடி ஒரு காலத்துல ஒரு காட்டுல மிகப்பெரிய அசுரன் ஒருத்தன் இருந்தான். ஒரு சின்ன பையனும் அவனும் நட்பா இருந்தாங்க. அந்த குட்டிப்பையன் மேலே அசுரன் உயிரா இருந்தான். குட்டியை கண்ணும் கருத்துமா கவனிப்பான்”

ருஹானா ஆர்யனை இரக்கமாக பார்க்க, இவான் “நீங்களும் அப்படித்தான் இருக்கீங்க, சித்தப்பா. பெருசா… வலிமையா….” என்று சொல்ல, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை.

“ஒருநாள் அந்த குட்டி பையன் திடீர்னு காணாம போய்ட்டான். அசுரன் தவிச்சி போய்ட்டான். காடு முழுதும் பையனை தேடி அலைஞ்சான்”

ஆர்யன் உருக்கமாக கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே இவான் தூங்கிவிட ஆர்யன் ஓசையில்லாமல் எழுந்து வெளியே சென்றான்.

———–

திரும்ப ஆர்யன் வந்து பார்க்கும்போது இவான் தூங்கிக்கொண்டிருக்க அவன் பக்கத்தில் அவன் புறம் திரும்பி ஒருக்களித்து ருஹானாவும் தூங்கிக்கொண்டிருந்தாள்.

இவானுடைய போர்வை விலகி இருப்பதை பார்த்த ஆர்யன் அதை சரிசெய்ய உள்ளே வந்தான். புருவம் சுளித்தபடி கண்மூடியிருந்த இவானை சில விநாடிகள் பார்த்த ஆர்யனின் பார்வை தானாக ருஹானாவிடம் சென்றது.

ஒருகையை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு நிர்மலமான முகத்துடன் ருஹானா தூங்க, அவள் நெற்றி காயத்தில் ஆர்யன் பார்வை நிலைத்தது. பின் இவானுக்கு போர்வையை இழுத்துவிட, “அம்மா!” என இவான் முனகும் சத்தத்தில் அப்படியே நின்றான்.

அவன் தலையை தடவிட கண்விழித்த இவான் “சித்தப்பா! அந்த பையனோட அம்மா எங்கே?” என கேட்க திகைத்த ஆர்யன், அவன் அருகே அமர்ந்து முகத்தை வருடியபடி “தூங்கு, சிங்கப்பையா” என்றான்.

“நான் தூங்குற வரைக்கும் இங்க இருக்கீங்களா?” என இவான் கேட்க, ஆர்யன் தூங்கும் ருஹானாவை ஏறிட்டான். “சரி, ஐந்து நிமிடம் தான்” என சம்மதிக்க “என் பக்கத்துல படுக்கறீங்களா?” இவான் மேலும் கோரிக்கை வைக்க, திரும்பவும் ஆழ்ந்து உறங்கும் ருஹானாவை பார்த்தவன் இவானின் மனதை புண்படுத்த விரும்பாமல் மிகவும் தயங்கியபடி அவன் அருகே படுத்தான்.

அந்த சிறிய கட்டிலில் ஒரு தலையணையில் மறுபக்கம் ருஹானா படுத்திருக்க நடுவில் இவான் இருக்க, ஆர்யன் தலையணையில் தலைவைக்காமல் நிமிர்ந்து ஒரு கையை மடக்கி தலைக்கு முட்டு கொடுத்து மறுகையால் இவானை தட்டிக்கொடுத்தான்.

இவான் அவனை பார்த்து மகிழ்வுடன் சிரிக்க “கண்ணை மூடி தூங்கு, இவான்!” என ஆர்யன் சொல்லவும் சிரிப்புடனே கண்களை மூடிக்கொண்டான். அவனை தட்டிக்கொண்டே இருந்த ஆர்யன் தன்னிச்சையாக ருஹானாவை பார்த்தான். இமைதட்டாமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். பார்த்துக்கொண்டே இருந்தவன் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

——-

சிரிப்புடன் போன் பேசி முடித்த கரீமாவிடம் சல்மா கேட்டாள்.

“அக்கா! என்ன நடந்தது?”

“எல்லாம் நாம ஆசைப்பட்டது போல தான்”

“உண்மையாவா, அக்கா?”

“சமூகசேவை நிறுவனம் நாம கொடுத்த புகார் மேலே நடவடிக்கை எடுக்கறாங்க. நாளைக்கு பையனை கூட்டிட்டு போக ஆணை வந்துடுச்சி”

“அப்போ நாளைக்கு இவான் வெளியே போய்டுவான், அப்படிதானே அக்கா?”

“ஆமா! அதுக்கு அப்புறம் ருஹானாக்கு இங்க என்ன வேலை? அவளும் கிளம்ப வேண்டியதுதான்”

“அதோட அவளுக்கும் ஆர்யனுக்கும் எந்த தொடர்பும் இருக்காது”

“ஆமா, சல்மா. நாளை முதல் நமக்கு நல்வாழ்வு”

———-

அங்கே சகோதரி சகுனிகள் இவர்களை பிரிக்க கொடுந்திட்டம் தீட்ட, இங்கே இவர்கள் அழகிய சிறுகுடும்பமாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

இடையே கண்விழித்த இவான் இருபுறமும் தூங்கிக்கொண்டிருக்கும் தன் அன்புக்குரியவர்களை பார்த்தான். திரும்பி திரும்பி இருவர் முகத்தையும் பார்த்தவன் இருவர் மேலும் தன் இருகைகளையும் வைத்துக்கொண்டு உவகையுடன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

(தொடரும்)

Advertisement