Advertisement

ருஹானா அவள் அறைக்கு வரவும், பின்னாடியே வந்த கரீமா “ருஹானா டியர்! இவானுக்கு உணவு கொடுத்துட்டு சல்மா அவன் கூட விளையாடிட்டு இருக்கா. நீ ஓய்வெடு” என சொன்னாள்.

“இல்ல.. எனக்கு ஓய்வு போதும். சில நாட்களா நான் இவானை சரியா கவனிக்கல. இனி நான் அவனை பார்த்துக்கணும்”

“நீ வலிக்கு மருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுத்திரு”

“உங்க அக்கறைக்கு நன்றி. ஆனா எனக்கு இந்த மாத்திரை வேணாம். இதோட பக்க விளைவு தான் என்னை எழுந்துக்க விடாம செய்துடுச்சி. எனக்கு என்னை விட இவான் தான் முக்கியம். நான் வலியை தாங்கிப்பேன்” என சொன்ன ருஹானா மாத்திரைகளை பையோடு தூக்கி குப்பை கூடைக்குள் போட்டாள். திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் கரீமா எதும் சொல்லமுடியாமல் முழித்து நின்றாள்.

ருஹானா கீழே இறங்கிவர வரவேற்பறையில் இவான் காரை வைத்துக்கொண்டு தனியாக விளையாடிக்கொண்டிருக்க, சல்மா கைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்திருந்தவள், ருஹானாவை பார்த்ததும் போனை சடாரென கீழே வைத்தாள்.

“நான் இவானை பார்த்துக்கறேன். நீங்க வேற எதாவது செய்யணும்னா பாருங்க” என்று ருஹானா சல்மாவிடம் சொல்ல, இவான் சிரிப்புடன் ருஹானாவிடம் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டான்.

“நான் இவானுக்காக தான் பாட்டு தேடிட்டு இருந்தேன்” என சல்மா சொல்ல, “செல்லம்! உனக்கு பாட்டு கேட்கணுமா? இல்ல.. வேற ஏதும் செய்யணுமா?” என ருஹானா இவானிடம் கேட்டாள்.

“உங்களுக்கு உடம்பு நல்லாய்டுச்சா, சித்தி? இனி நீங்க தூங்க மாட்டீங்களா?” என ஆர்வமுடன் இவான் கேட்க “எல்லாம் சரியாகிடுச்சி. சித்தி இனிமேல் தூங்கவே மாட்டேன். உன்கூட தான் நாள்பூரா இருப்பேன்” என ருஹானா சொல்லவும் சல்மாவின் முகம் கடுகடுவென்றானது.

“சித்தி! அந்த ரூம்க்கு போலாமா? அங்க அம்மா வராங்களான்னு பார்க்கலாம்” என இவான் சொல்ல, ருஹானா கவலையுடன் பார்க்க, சல்மாவுக்கு குதூகலமானது. சிரிப்பை மறைத்துக்கொண்டவள் “சரி, நீங்க இன்பமா பொழுதை போக்குங்க. நான் அப்புறம் வரேன், இவான்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

இவான் மனதை மாற்ற என்ன செய்ய என யோசித்த ருஹானா “அன்பே! நாம ஒன்னு செய்யலாமா? அது உனக்கு ரொம்ப பிடிக்கும்” என அவன் ஆவலை தூண்ட, இவானும் “என்ன சித்தி?” என கண்கள் பளபளக்க கேட்க “சர்ப்ரைஸ்!” என்று மந்தகாசமாக சிரித்தாள்.

———

இவான் அறையில் இல்லாததை கவனித்த ஆர்யன் அவன் ருஹானா அறையில் இருப்பான் என நினைத்து அங்கே செல்லாமல் தயங்கி நின்றவன் படிக்கட்டுக்கு அருகே வர, எதிரே வந்த அம்ஜத் “ஆர்யன்! இவான் தோட்டத்துல இருக்கான். சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கான். அவன் சித்தி கூட பேசிட்டு இருக்கான். நீ போய் பாரேன்” என மகிழ்வுடன் சொல்ல ஆர்யனுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

“இந்த சான்விட்ச் சாப்பிடு. தக்காளி, சீஸ் போட்டுருக்கேன். இதுல ஜாம் போட்டுருக்கேன். எது வேணுமோ சாப்பிடு. அப்புறம் நாம விளையாடலாம்” என ருஹானா இவானிடம் நீட்ட அவன் சிரிப்புடன் வாங்கிக்கொண்டான். இருவரும் தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தின் நிழலில் துணி விரித்து அமர்ந்திருந்தனர்.  அவர்கள் அருகே தின்பண்டங்கள் அடங்கிய கூடை இருந்தது.

வீட்டிலிருந்து வெளியே வந்த ஆர்யனை பார்த்துவிட்ட இவான் “சித்தப்பா! இங்க பாருங்க. நாங்க பிக்னிக் வந்திருக்கோம்” என சத்தமாக சிரிப்புடன் சொன்னான். “நீங்களும் வாங்களேன்!” என அவன் அழைக்கவும், “அன்பே! அவருக்கு வேலை இருக்கும். தொந்தரவு செய்யாதே!” என்று ருஹானா தடுத்தாள்.

இவான் முகம் சோகமாக மாற, ஆர்யன் அவனை பார்த்துக்கொண்டே ருஹானா சொன்ன அன்பு தத்துவத்தை அசை போட்டான். இவானின் மனம் மாறவும், மகிழவும் ருஹானா செய்யும் முயற்சியை புரிந்துகொண்டவன், அவர்களை நெருங்கினான்.

ஆர்யன் அருகே வரவும் உவகை கொண்ட இவான் “சித்தப்பா” என அன்புடன் அழைத்தான். ஆர்யன் உட்கார வரவும், ருஹானா அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் அமர ஒரு தலையணையை நீட்டினாள். அதை வாங்கிக்கொண்ட ஆர்யன் இவான் அருகே அமர்ந்தான்.

“சித்தப்பா! இது பிக்னிக் சான்விட்ச். சித்தி செஞ்சது. அதிக சுவையா இருக்கும்” என ஆர்யனுக்கு எடுத்துக்கொடுத்த இவான் “அப்படித்தானே சித்தி?” என அவளிடமும் உறுதிபடுத்திக்கொள்ள, ருஹானா வராத சிரிப்பை வரவழைத்து தலையை ஆட்டினாள்.

அவளை பார்த்துக்கொண்டே சான்ட்விச்சை எடுத்த ஆர்யன் அதை சுவைத்துவிட்டு “நன்றி சிங்கப்பையா” என்று இவானிடம் சொல்ல, அவன் “இனிய உணவு, சித்தப்பா” என்றான்.

“சல்மா அக்கா வாங்கி கொடுத்த வில் எங்க வச்சிருக்கே, இவான்? போய் அதை எடுத்துட்டு வா. அம்பு விடலாம்” என ஆர்யன் சொல்ல, இவான் ஆனந்தமாக துள்ளிக்குதித்து வீட்டிற்குள் ஓடினான்.

“இவானை இங்க நீ கூட்டிட்டு வந்தது நல்ல செயல். வெளிகாத்து அவனுக்கு புத்துணர்வு கொடுக்கும்” என ஆர்யன் சொல்ல, ருஹானா ஒன்றும் பேசாமல் தலையசைக்க, அவனும் சாப்பிட்டபடி அவளை ஓரக்கண்ணால் பார்க்க, அவன் பார்க்காதபோது அவளும் அதையே செய்தாள். வில்லோடு இவான் வரும்வரை இந்த விளையாட்டு நடந்தது.

ஆர்யன் இவானின் கையை பிடித்து சொல்லித் தர, ருஹானா பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உன்னோட கவனம் ஒரு நொடி கூட விலக கூடாது, சிங்கப்பையா!”

“வில்லை பிடிக்கும்போது அழுத்தியும் பிடிக்கக்கூடாது. லேசாவும் பிடிக்கக்கூடாது”

“உன் முன்னாடி ஒருத்தன் உன்னை தாக்க வர்றான்னு கற்பனை செய்துக்கோ”

“நீ அவனை அடிக்கலனா அவன் உன்னை வீழ்த்திடுவான்”

“தவறு செய்ய உனக்கு வாய்ப்பே கிடையாது”

“இப்போ நீ சரியா அம்பு எய்யலனா கூட நான் சொன்னது உனக்கு எப்பவும் நினைவில் இருக்கணும், அக்னி சிறகே!”

“சரி சித்தப்பா” என இவான் சொல்ல, ருஹானா ஆர்யன் சொல்வதை கவனித்துக்கொண்டே இருந்தாள். ஆர்யன் அம்பை வில்லில் மாட்டி இவானின் கையை பிடித்து குறி பார்த்தான்.

“அம்பை விடறதுக்கு முன்னாடி மூச்சை இழுத்து பிடிச்சிக்கோ”

“வேற எதை பத்தியும் நினைக்க கூடாது”

“உன்னால அடிக்க முடியாதுன்னு ஒரு நொடி கூட நினைக்க கூடாது”

“அப்படி நினைச்சா உன்னால ஜெயிக்க முடியாது”

“சரி சித்தப்பா!” என்று சொன்ன இவான் ஒரு கண்ணை சுருக்கி அழகாக குறிபார்த்தான். சித்தப்பா “விடு அம்பை!” என சொன்னதும் வில்லை இழுத்து அம்பை எய்தினான்.

“குறி தப்பிடுச்சி” என இவான் ஏமாற்றமாக சொல்ல “திரும்ப திரும்ப முயற்சி செய்தா உன்னால முடியும், அக்னி சிறகே! என் வார்த்தைகளை மறக்காதே” என்று ஆர்யன் அவனை ஊக்குவித்தான்.

“என் சித்தி ஒருமுறை எய்யட்டுமா?” இவான் கேட்க, ஆர்யன் பதில் சொல்வதற்குள் ருஹானா “என்னால முடியாது, அன்பே!” என்றாள். “ஒரே ஒரு தடவை, சித்தி!” என இவான் கெஞ்ச “சரி” என்று தடுமாறி எழுந்த ருஹானா காலை தேய்த்து நடந்து வந்தாள்.

ஆர்யன் விலகி நிற்க, ருஹானா அம்பை எடுத்து வில்லில் பூட்டியவுடன், முன்பு இவானை வேண்டி அவள் அம்பு பலகை முன் வந்து நின்றதும், ஆர்யன் குறி பார்த்ததும், அவள் மயங்கி விழுந்ததும், அவன் இரக்கமின்றி நடந்துக்கொண்டதும் நினைவுக்கு வர கோபத்துடன் அம்பை இழுத்து விட்டாள்.

“பாரு, செல்லம். சரியா போகல. என்னால முடியாதுன்னு சொன்னேன் தானே?” என்று அவள் சொல்ல, இவான் “சித்தப்பா! சித்திக்கும் சொல்லி கொடுப்பீங்களா?” என கேட்டான். ஆர்யன் ருஹானாவை பார்க்க, அவள் இவானை பார்த்து “அதுக்கு அவசியமில்ல. நானே இன்னொரு முறை முயற்சி செய்றேன்” என்று வேகமாக தொடுத்தவள் அம்பு அவள் காலடியிலேயே விழுந்தது.

“சித்தி! மறுபடியும் தோல்வி” என சொன்ன இவான் “இப்போ சித்தப்பா கத்து தருவார்” என சொல்ல, ஆர்யன் தயங்கினாலும் கீழே கிடந்த அம்பை கொண்டு வந்து அவளிடம் தர, அவள் அதை வில்லில் பொருத்தினாள்.

ருஹானாவின் மணிக்கட்டை பிடித்து அவள் கையை நேராக்கிய ஆர்யன், “வேற எந்த நினைப்பும் உன்னை திசை திருப்பக்கூடாது” என்று சொல்லி அவள் பின்னால் ஒட்டியபடி நின்று அவளுடன் சேர்ந்து வில்லை உயர்த்தி பிடித்தான். அவனின் நெருக்கத்தில் அவள் தர்மசங்கடமான நிலையில் இருக்க, அவளை சுற்றி வந்தவன் “இலக்கு நமக்கு நேரா இருக்கணும்” என்று சொல்லி அவள் தோள் பற்றி அவளையும் திருப்பி விட்டான்.

“ஒரு நொடி கூட உன் கவனம் சிதறக் கூடாது” என்று இவானுக்கு சொல்லி தந்ததையே இவளுக்கும் சொல்ல, அவள் கவனம் இலக்கில் பதிய, ஆர்யன் கவனம் அவள் அழகிய முகத்தில் பதிந்தது. அவள் நறுமணம் அவனை நோக்கி பரவியது. அவளின் மென்மை அவன் ஸ்பரிசத்தில் ஒட்டிக்கொண்டது.

“எதிர்ல நிக்கறவங்க என்னை தாக்க வந்தவங்கன்னு நான் நினைச்சிக்கலாமா?” என ருஹானா வினவ, இவள் என்ன சொல்கிறாள் என ஒரு கணம் அவள் முகம் பார்த்து யோசித்த ஆர்யன் “நினைச்சிக்கலாம்” என்றான், எதுவும் புரியாமல்.

“அப்போ அவங்க என் எதிரி தானே?” என ருஹானா கேட்கவும் தான் முன்பு அம்புபலகை முன் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவளின் அண்மை படைத்த மாய உலகிலிருந்து நிகழ்வுலகத்திற்கு வந்த ஆர்யன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“நீ அப்படி நினைச்சா அப்படியே வச்சிக்கோ” என்றவன் “உன் எதிரியை வீழ்த்தணும்னு நீ நினைச்சினா உன் உணர்ச்சிகள் மேலோங்க விடாதே. பயப்படாதே. பாவப்படாதே. இரக்க உணர்ச்சி உன்னை பலவீனமாக்கும். கவனத்தை திருப்பும்” என்று அவன் சொல்ல ருஹானா அம்பு விட அது குறிக்கு அருகே பாய்ந்தது.

“சித்தி! நல்லா விட்டீங்க” என இவான் மகிழ, அவளால் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுக்க முடியவில்லை. ஆர்யன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “வா அன்பே! இப்போ உன்னோட முறை” என்று வில்லை இவானிடம் கொடுத்தாள்.

———-

Advertisement